Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

#கரிசல் #காட்டு #காவியம்

Advertisement

இரட்டை #நகரம்

விழா நாளுக்கு முன்தினம் . வீட்டுக்கு வந்திருந்தார் ராசா மாமா.

" செல்லம்மா விவசாய வேலைகள் , அக்காவின் திருமண வேலைகள் என்று நிறைய வேலைகள் உள்ளன .
உனக்கு வெளியிடங்கள் தெரியும்தானே . அக்காவை துணைக்கு அழைத்துக் கொண்டு நீ சென்று வருகிறாயா ? " என்றார் மாமா.

செல்லம்மாளுக்குத் துள்ளாட்டம் போட்டது மனது . ஆனால் வெளியே காட்டிக் கொள்ளவில்லை .

" சரி மாமா . எங்கள் நிறுவனத்திலிருந்து முதல்வர் , ஆசிரியர்கள் வருவார்கள் . நானும் அக்காவும் சென்று வருகிறோம் " என்றாள் செல்லம்மாள் .

" சரி அப்போ காலையிலே ஏழு மணிக்கு கிளம்பி இருங்க . இருளாண்டி கிட்ட வண்டி கட்டச் சொல்லி இருக்கேன் .
தெய்வச்செயல்புரம் கொண்டுபோய் விடுவான் . அங்கிருந்து பேருந்தில் திருநெல்வேலி சென்று விடுங்கள் " என்றார் மாமா .

" கவலைப்படாதீங்க மாமா நாங்க தைரியமா போயிட்டு வந்துருவோம் " என்றாள் செல்லம்மா .

அரசு விழா என்பதால் பொருட்காட்சித் திடலில் மேடை அமைக்கப்பட்டிருந்தது . சிற்றுண்டி கடைகள் சில முளைத்திருந்தன . நெல்லைப் பொருட்காட்சித் திடல் களமாய் அமைந்தது . வேலையாட்கள் பிரம்மாண்டமாகப் பந்தல் போட்டுக் கொண்டிருந்தார்கள் . ஒலி பெருக்கி
அங்கங்கே அமைக்கப்பட்டிருந்தன .

செல்லம்மா மாவட்ட ஆட்சியர் கையில் சான்றிதழ் பெறும் அதேநாளில் பொன்னையா வீட்டிலிருந்து வள்ளியை பெண் பார்த்துவிட்டு , முகூர்த்த நாள் குறிக்க வருவதாகச் சொல்லியிருந்தார்கள்.

மாலை நேரம் . செல்லம்மாள் இராமையாவைச் சந்தித்து நிகழ்ச்சி நிரலைத் தயாரிக்க வேண்டுமே !

தண்ணீர் எடுக்கப் போகும் வழியில் , தென்றல் தாலாட்டும் ஆலமர நிழலில் தங்கள் மாட்டு வண்டிப் பிரயாணத்தைப் பற்றித் தெரிவித்தாள் செல்லம்மா .

" உங்களுக்கு முன்னே நானும் சுப்பிரமணியும் மிதிவண்டியில் சென்று அங்கு காத்திருப்போம் "
என்றான் இராமையா .

வள்ளி இதுவரை அந்த கிராமத்தை விட்டு அடுத்த கிராமத்திற்குக் கூட சென்றதில்லை .

" செல்லம்மா நான் அக்கா தான் . ஆனாலும் நான் எங்கேயும் சென்றதில்லை . உனக்கு பாதை தெரியும் தானே ! " அப்பாவியாய் தங்கையிடம் கேட்டாள் வள்ளி .

" நீ கவலைப் படாம வாக்கா. நான் நாளைய விழாவில் முக்கியமானவள் .
எல்லா வசதியும் நமக்கு அங்கு கிடைக்கும் . நீ இந்த கிராமமே உலகம் என்று வாழ்ந்தவள். அதனால்தான் உனக்கு எதுவும் தெரியவில்லை .
நான் உன்னை வெளி உலகத்திற்கு அழைத்துச் செல்கிறேன் பயப்படாதே " என்றாள் செல்லம்மா .

ஆச்சி , " செல்லம்மா ஆச்சி சொல்ல மறந்துட்டேனே . நாளைக்கு பொன்னையா மாமா வீட்டிலிருந்து அக்காவப் பொண்ணு பாக்க வராங்க.
முகூர்த்தநேரம் குறிக்கணும்ன்னு சொல்லியிருக்காங்க . என்ன செய்யறதுன்னு தெரியலையே " என்றாள்.

ஆச்சி , " நம்ம வீட்டுலயும் முக்கியமான வேலைகள் இருக்கு .
நான் இந்த விழாவுக்கு போய்த்தான் ஆகணும் . அந்த முத்தம்மா அத்தைட்ட நாங்க இராமையாவைத் துணைக்கு அழைத்துச் செல்லக் கேட்கட்டுமா . அவுகளுக்கு எல்லா இடமும் தெரியும் " என்றாள் செல்லம்மா .

வள்ளி , " ஆச்சி முகூர்த்தம் குறிப்பதற்கு நான் எதற்கு ? " என்றாள் சற்று எரிச்சலோடு ! . வெளி உலகமே காணாத தனக்கு இன்று கிடைத்த வாய்ப்பு நழுவிப் போய்விட்டதே என்ற வருத்தம் அவளுக்கு .

" வள்ளி உன்ன சிறுபிள்ளையில அவங்க பார்த்தது . அதனால நீ நாளைக்கு கண்டிப்பா இங்கே இருக்கணும் " என்றாள் ஆச்சி

ஆச்சி சற்று யோசித்து , " சரி . வேறு வழி இல்லை. அக்காவையும் முத்தம்மா அத்தை வீட்டுக்கு கூட்டிட்டுப் போயி ஒரு வார்த்தை கேட்டுட்டு வந்துரு " என்றாள் .

செல்லம்மா வள்ளியை அழைத்துக் கொண்டு வீட்டு வாசலில் நின்று " அத்தே " என்று குரல் கொடுத்தாள் .

நிலைமையைச் சொன்னாள் செல்லம்மா .

" வள்ளிக்கு நல்ல மாப்பிள்ளை தான் கிடைச்சிருக்கு ‌ . நல்ல காரியத்துக்குத் தடை போடக்கூடாது . ஆச்சி கிட்ட சொல்லிருங்க . கவலையே படவேண்டாம் . நான் காலையில் ஏழு மணிக்கு இராமையாவை அனுப்பி வைக்கிறேன் . பத்திரமாக கூட்டி வந்துவிடுவான் " என்றாள் முத்தம்மா .
ஒரு வழியாகப் பச்சைக்கொடி அசைந்தது .

பிள்ளை மனம் அறியாத தாய்மை ஏது ? ஊர் பேசினால் பேசி விட்டுப் போகட்டும் . பாவம் ஆண்கள் இல்லாத குடும்பம் . திருமண வேலைகள் வேறு .
இதில் தனது மகன் உதவுவதில் தவறில்லை என்று முடிவுசெய்தாள் முத்தம்மா .

"அம்மா , ரெண்டு பேரையும் ஒன்னாப் போகச் சொல்றீங்களே ! யாராவது தப்பாப் பேச மாட்டாங்களா ? "என்றான் இராமையா வேண்டுமென்றே .

" பேசினா பேசிட்டுப் போறாங்கப்பா .
உங்க சித்தப்பா ராசா ஏற்கனவே இரண்டு தடவை கேட்டுட்டு போயிட்டாரு . இனி அவரு கேட்க வராமலேயே நமது சம்மதத்தைச் சொல்லிடணும் . ஆச்சி மெனக்கிட்டு கேட்டுவிட்டு இருக்காளே . நாம் உதவி செய்வோம் என்று நினைத்துத் தானே ! .போயிட்டு வாப்பா . ஆபத்துக்குபா பாவம் இல்லை " என்றாள் முத்தம்மா .

" சரிம்மா . அப்படியே அம்மன் கோயில் பக்கமா போயிட்டு வரேன்மா எனக்கு நேரம் போகல " என்றான் இராமையா.

" சரிப்பா . சீக்கிரம் வந்திடு " என்றாள் .

அம்மன் கோயில் பக்கம் தான் சுப்பிரமணியன் வீடு இருக்கிறது .
இராமையாவைக் கண்டதும் சுப்பிரமணியன் வெளியே வந்தான் .

" என்ன அத்தான் ? அதிசயமா இங்கே வந்திருக்கீங்க ? " என்றான் சுப்பிரமணி .

" அட ஒன்னும் இல்ல மாப்பிள்ள.....
பழம் நழுவி பாலில் விழுந்த கதையா
ஆச்சியும் , எங்க அம்மாவும் சேர்ந்து
நாளைக்கு செல்லம்மாளத் திருநெல்வேலிக்கு கூட்டிட்டு போகச்சொல்லி சொல்லிட்டாக...."
என்று இழுத்தான் இராமையா .

" சிவபூசையில் கரடி போல நான் எதுக்குன்னு என்கிட்ட சொல்ல வந்தீர்களாக்கும் ! . நான் என்ன அம்புட்டு இங்கிதம் தெரியாதவனா அத்தான் . சந்தோசமா போயிட்டு வாங்க " என்றான் சுப்பிரமணி.

இரவு கயிற்றுக் கட்டிலை முற்றத்தில் போட்டுப் படுத்திருந்தான் இராமையா.
நாளைய விழாவையும் ஒத்திகை பார்த்து , ஒத்திகை பார்த்து ரசித்துக் கொண்டிருந்தது அவன் மனது .
வானத்து நட்சத்திரங்கள் வாழ்த்துக் கூறுவதாக உணர்ந்தான் .

வானத்து நிலவில் செல்லம்மாள் முகத்தை வைத்துப் பார்த்து ரசித்தான் . வான வீதியில் ஊர்வலம் போனாள் செல்லம்மா மேகக் கூட்டத்தின் இடையே !

அதிகாலையிலேயே செல்லம்மா எழும்பித் தயாராகிவிட்டாள் . விருந்தினர் வருவதால் வள்ளி ஆச்சியோடு சமையல் தயாரிப்பில்
ஈடுபட்டிருந்தாள் . இராமையா நேரே இருளாண்டி வீட்டிற்குப் போய் வண்டிமாடு கட்டிக்கொண்டு இருளாண்டியோடு ஆச்சி வீட்டருகே வந்தான் .

கூடார வண்டியில் செல்லம்மா முன்பகுதியிலும் , இராமையா பின்பகுதியில் , வெளிப் பக்கமாக காலைப் போட்டவாரும் உட்கார்ந்துகொண்டான் . வண்டி கிளம்பியது .

" ஆச்சி , இராமையா படிப்பு குறைவாக இருந்தாலும் மிகவும் பண்பான மனிதராக இருக்கிறார் .
செல்லத்தை அவருக்கே கட்டிக் கொடுத்தால் சோடி பொருத்தமாக தானே இருக்கும் .
அவரு தங்கையைப் பார்க்க திரும்பி உட்காரவில்லை . எவ்வளவு ஒழுக்கமாக காலை வெளியே போட்டு, வெளியே பார்க்க உட்கார்ந்திருக்கிறார் " என்றாள் வள்ளி .

" ஒரு வருடப் படிப்பு முடிஞ்சதுக்கு அப்புறம் , தாயும் சம்மதிச்சா அங்கேயே கட்டிக் கொடுப்போம் வள்ளி . அவ சம்மதம் எப்படி கிடைக்குதோ அப்படித்தான் நடத்தனும் . உன் குணம் வேற . அவ குணம் வேற ‌" என்றாள் ஆச்சி ‌.

ஒருமணி நேரத்தில் பேருந்து நிறுத்தத்தில் கொண்டு விட்டது மட்டுவண்டி . இருவருமே காதலர்கள் என்றாலும்கூட வண்டிக்கார இருளாண்டி உடன் இருப்பதால் ஓரிரு முறை அவர்கள் கண்கள் சந்தித்ததே தவிர கண்ணியமாக நடந்து கொண்டார்கள் .

தூத்துக்குடியிலிருந்து திருநெல்வேலி செல்லும் பேருந்து ஒன்று வந்து நின்றது . பெண்கள் இருக்கையில் செல்லம்மாவும் ஆண்கள் இருக்கையில் இராமையாவும் அமர்ந்து கொண்டார்கள் .

வல்லநாட்டு குன்றுகள் கடக்கும் வரை சாலைப் பகுதி வறட்சியாகவே இருந்தது . வல்லநாடு கடந்ததும் தாமிரபரணி பாய்ந்தோடும் செழிப்பான பகுதிகள் கண்களுக்கு விருந்தாக அமைந்தன .

பச்சைப்பசேல் நெல்வயல்கள் .
பால் பிடிக்காத இளம்பச்சை நிற நாத்து . அதில் தாமிரபரணி நீரை குடித்த காற்றின் தழுவல் அலையலையாகச் சென்றது .
இதுவரை செல்லம்மாள் கண்டு ரசித்திராத ஒரு குளுமைத் தழுவல் .

நதிக்கரை ஓரத்து நகர்வுகள்
செல்லம்மாளை மெய்சிலிர்க்கச் செய்தன மேனி தீண்டி . இரட்டை நகரமாம் பாளையம்கோட்டை, திருநெல்வேலிக்குள் நுழைந்தது பேருந்து ....

( கரிசல் கதை தொடரும் )..........................................
Welcome to the side
 
Top