Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கரைந்து போனேன் உனது காதலில்-1

Advertisement

அத்தியாயம் ஒன்று:



"ஏலே வெள்ளைச்சாமி அந்தப் பசுமாடு கண்ணுகுட்டி போட்டுடுச்சா என்னன்னு பார்த்தியா என்ன?"



"இல்லைங்க ஐயா மாடு நல்லா செனையா இருக்கதனால இன்னும் ரெண்டு மூணு நாள் கூட பிடிக்கும்.. இப்பதான் நம்ம ஊரு டாக்டர் வந்து சொல்லிட்டு போனாருங்க.."



"சரில அப்ப அந்த மாட்டை கொண்டு போய் தொழுவத்துல கட்டிடு தொழுவத்தில இருக்க மத்த மாடு எல்லாத்தையும் கொண்டு போயி கம்மா பக்கத்துல இருக்க வய குடிசையில் கட்டிடு.."என்றவர் குரலில் கட்டுப்பட்ட வெள்ளைச்சாமி இடுப்பில் கட்டிய துண்டுடன் மேலே சட்டை எதுவும் இல்லாமல் மார்புக்கு கீழே இரு கைகளையும் கட்டியபடி தலை குனிந்தவாறு "ஆகட்டுங்க ஐயா நீங்க சொல்றது மாதிரியே செஞ்சிடுறேன்.. அப்ப நான் உத்தரவு வாங்கிக்கிறேன்ங்க.."என்றவனுக்கு சரியென தலையசைத்தார் வீரராகவன்.



"ஐயா உங்களை அம்மா அவசரமா வீட்டுக்கு வர சொன்னாங்க.. ஏதோ உங்ககிட்ட முக்கியமான விஷயம் பேசணுமாம்.."என்று தோட்டத்தில் வேலை செய்யும் முனியய்யா வர, வயலில் நடவு செய்து கொண்டிருப்பவர்களை மேற்பார்வை பார்த்துக் கொண்டிருந்த வீரராகவன் முனியய்யா சொன்னதும் மற்றவற்றையெல்லாம் விட்டுவிட்டு அவசரமாக வீட்டுக்கு விரைந்தார்.



அங்கு உள்ளே குட்டி போட்ட பூனை போல் அவரது மனைவி பாண்டியம்மா நடந்து கொண்டிருக்க, மனைவியை கண்டதும் மையலோடு நெருங்கினார் வீரராகவன்.



கூடத்தில் நடந்து கொண்டிருந்த மனைவியை கண்டதும் சத்தம் செய்யாது பூனை போல் நடந்து வந்த வீரராகவன் ஒருவித பரபரப்பில் நடந்து கொண்டிருந்த மனைவியின் பின்னே சென்றவர் அப்படியே பின்னிருந்து கட்டிக் கொள்ள,ஒரு வித டென்ஷனோடு நடந்து கொண்டிருந்த பாண்டியம்மா திடீரென்று தன்னை பின்னால் இருந்து ஒருவர் அணைக்கவும்,"யாருடா அது? எந்த எடுபட்ட பாவி என்னை கட்டி பிடிக்கிறது இந்த விஷயம் மட்டும் என்ற புருஷனுக்கு தெரிஞ்சா அம்புட்டு தான் வெட்டி போட்டுடுவார்.."என்று கோபமாக கத்த,அவர் சத்தத்தில் அங்கு யாராவது வந்து விடுவார்களோ என்று பயந்துபோன வீரராகவன் அவசரமாக மனைவியின் வாயை பொத்த அந்தோ பரிதாபம் அவர் எதிர்பார்த்தபடியே ஒட்டுமொத்த குடும்பமும் அங்கு ஒன்றாக கூடி விட்டது.



"என்னாச்சு பாட்டி எதுக்காக இப்படி கத்துறீங்க?"என்று அந்த வீட்டின் அவரது மூத்த பேரன் செல்வராகவன் வர, அதற்குள் வீரராகவன் மனைவியை விட்டு பத்தடி தள்ளி சென்றிருந்தார்.



தன்னை இப்படி தன் வீட்டிலேயே கட்டி பிடித்தவர் யார்? என்பதை திரும்பிப் பார்த்த பாண்டியம்மா அங்கு தன்னையே முறைத்து பார்த்துக் கொண்டிருந்த கணவனை கண்டதும் அவருக்கு வெட்கமாகி போனது.



"உங்ககிட்ட தான் பாட்டி கேக்குறேன் எதுக்காக இப்படி கத்துறீங்க? என்ன விஷயம் ஏதாவது சொல்லுங்க இப்படி அமைதியா இருந்தா என்ன அர்த்தம்?"என்ற பேரனுக்கு என்ன பதில் சொல்வார் என்பதின் தொடக்கத்திலிருந்த பாண்டியம்மா.



பாண்டியம்மா பார்வை அப்படியே ஒட்டுமொத்த குடும்பத்தையும் வலம் வர,
அங்கு வேலைக்கு கிளம்பி கொண்டிருந்தவர்கள் அவர்களுக்காக அவசர அவசரமாக சமைத்துக் கொண்டிருந்தவர்கள் பள்ளிக்கு கல்லூரிக்கு கிளம்பியவர்கள் என அனைவரும் ஒன்றாக கூடியிருக்க, அவர்களிடம் எப்படி நடந்ததை சொல்வார் பாண்டியம்மா!



"அது ஒன்னும் இல்ல அப்பு மேல பல்லி விழுந்துடுச்சு அதான் கோபமாகி சத்தம் போட்டுட்டேன் வேற ஒன்னும் இல்ல.."



"இல்லையே யாரோ உங்களை கட்டிப்பிடிக்கிறதா சொல்லில சத்தம் போட்டீங்க? எனக்கு அப்படித்தான் கேட்டுச்சு.."என்றவன் சந்தேகமாக பாட்டியை பார்க்க, பேரன் முகத்தை பார்க்க முடியாது தலை குனிந்து விட்டார் பாண்டியம்மா.



அத்தனை நேரம் அமைதியாக இருந்த வீரராகவன் தன் மூத்த பேரனே ஆனாலும் அவன் முன்பாக தன் மனைவி தலை குனிவதை விரும்பாத வீரராகவன் மனைவியின் பக்கத்தில் வந்து அவர் தோளோடு கை போட்டு அணைத்துக் கொண்டவர் "நான்தான்டா என் பொண்டாட்டி அழகுல மயங்கி அவளை பின்னாடி இருந்து கட்டிப்புடிச்சேன் அதுல தான் என் பொண்டாட்டி பயந்து சத்தம் போட்டா இப்ப அதுக்கு என்னங்கற?"எனவும் செல்வராகவன் உட்பட அனைவரும் அவரை தீயாய் முறைத்து பார்த்தார்கள்.



அவர்கள் பார்வை அத்தனையையும் அசராமல் தாங்கி நின்றார் வீரராகவன்.



"ஏனுங்க மாமா உங்களுக்கு எப்ப பாத்தாலும் வேற வேலையை இல்லையா எப்ப பாத்தாலும் என்ற மாமியாரை கட்டிப்பிடிக்கிறதே ஒரு வேலையா போச்சு.. அவங்களும் எத்தனை நாள் தான் இப்படி தெரிஞ்சும் தெரியாதது மாதிரி சத்தம் போட்டு எங்களை எல்லாம் இங்க வரவிடாம அமைதியா இருப்பாங்கன்னு தெரியல.. நீங்க பண்ண கூத்துல அடுப்பில் போட்டது போட்டபடி வந்துட்டேன் என்ன தீஞ்சுதோ என்னவோ!"பதறியபடி சமையல் கட்டுக்கு ஓடிவிட்டார் வீட்டின் மூத்த மருமகள் சீதா.



"அப்பா இதெல்லாம் ஒரு பொழப்பா! எப்ப பார்த்தாலும் ரெண்டு பேரும் சின்ன புள்ள மாதிரி இதே மாதிரி பண்ணுங்க.. வெளியில மட்டும் ஊர் நாட்டாமை வீட்டுக்குள்ள பண்ற அலப்பறை எல்லாம் தெரிஞ்சா எல்லாரும் நம்மள கொஞ்சம் கூட மதிக்காமல் சிரிக்க ஆரம்பிச்சுடுவாங்க.."என்று வெளியில் கெத்தாக சொல்லிவிட்டு உள்ளுக்குள் தாயும் தந்தையும் அடித்த கூத்தை ரசித்து பார்த்தபடி சென்றார் அவர்களது முதல் மகன் ராசையா.



"எப்ப தான் நீங்க மாற போறீங்கன்னு தெரியல போங்கப்பா.."என்றபடி சலித்துக் கொண்டார் அவரது செல்ல புதல்வி தீபா.



மனைவியை தொடர்ந்து அவரது கணவரும் மாமியாரையும் மாமனாரையும் ஒரு நமட்டு சிரிப்புடன் பார்த்தபடி செல்ல, மருமகன் பார்வையில் வெட்கம் தாங்காது கணவனுக்கு பின்பாக ஒளிந்து கொண்டார் பாண்டியம்மா.



"நீங்க பண்ண கூத்துல!"என்று இரு கைகளையும் மேலே தூக்கி "இறைவனே"என்று சத்தம் போட்டபடி அவரது சின்ன மருமகள் காமாட்சி தன் இளைய மகளுக்கு தலையை சீவி விடுவதற்காக சென்றார்.



"என்னமோ போங்க நைனா இந்த வயசுலயும் மஜா பண்றீங்க!"என்று தந்தையை பார்த்து கண்ணடித்து விட்டு சென்றார் அவரது இளைய மகன் பூபதி.



அவர்களிடம் கேள்வி கேட்டுக் கொண்டிருந்த செல்வராகவன் தாத்தாவையும் பாட்டியையும் முறைத்து பார்த்துவிட்டு விட்ட வேலையை அவன் தொடரச் செல்ல அவனை பின் தொடர்ந்து சென்றாள் அவன் மனைவி காயத்ரி.



"எல்லாம் உங்களால தான் எப்ப பார்த்தாலும் இதையே ஒரு வேலையா வெச்சுகிட்டு இருக்கீங்க! பாருங்க அத்தனை பேரும் நம்மள பார்த்து கிண்டலடிச்சிட்டு போறாங்க எனக்கு யார் முகத்தையும் நிமிர்ந்து பார்க்க முடியல ரொம்ப வெக்கமா போச்சு போங்க.."என்று அவரது மனைவி சலித்துக் கொள்ள,"பாத்தா அப்படி தெரியலையே நீ ரொம்ப வெட்கப்பட்டது மாதிரி தானே தெரிஞ்சது அப்படியே நம்ம முத ராத்திரி அன்னைக்கி என்னை பார்த்ததும் எப்படி வெட்கத்துல கோணி நாணி நிப்பியோ அதே மாதிரி நிக்கிறது போல தானே என் கண்ணுக்கு தெரிஞ்சது இல்லை ஒருவேளை என் பார்வையில் ஏதாவது விஷமமாக படுதா!!"என்றவர் பார்வை விஷமமாக மாற, அவரது பார்வையை தாங்கிக் கொள்ள முடியாமல் அவரை எதற்காக வர சொன்னோம் எதற்காக தான் தலையை பிடித்தபடி நடந்து கொண்டிருந்தோம் என்பதையும் மறந்து இருபது வயது பெண் போல் வெட்கம் கொண்டு தன் கணவனை பார்க்க முடியாமல் அறைக்குள் ஓடி மறைந்து கொண்டார் பாண்டியம்மா.



மனைவியின் வெட்கத்தில் வீரராகவன் எப்போதும் போல் தன் நரைத்து போன மீசையை முறுக்கி விட்டுக் கொண்டு வேட்டியை தூக்கி கட்டியபடி மனைவி எதற்காக வர சொன்னார் என்பதை தெரிந்து கொள்வதற்காக அவரைப் பின்தொடர்ந்து சென்றார்.



இதுதான் அவ்வீட்டின் வழக்கம். வயதான தம்பதிகள் இருவரும் இப்படித்தான் ஏதாவது ஒன்றை செய்து அனைவரிடமும் திட்டு வாங்கிக் கொண்டிருப்பார்கள்.



மற்றவர்களும் வெளிப்படையாக திட்டினாலும் உள்ளுக்குள் அவர்கள் செயலை எப்போதும் ரசிப்பார்கள்.



தாங்கள் அவர்கள் செய்வதை ரசிக்கிறோம் என்பது தெரிந்து விட்டால் நிச்சயம் குழந்தைகளை சமாளிப்பதை விட அவர்கள் இருவரையும் சமாளிப்பது பெரிய வேலையாகிவிடும் என்பதாலேயே அவர்கள் ரசிப்பதை வெளியில் தெரியாமல் இதுவரை வைத்திருக்க, தாங்கள் செய்வதை தங்கள் பிள்ளைகளும் ரசித்துப் பார்க்கிறார்கள் என்பது பெற்றோர்களுக்கும் தெரிய அவர்களும் தங்கள் செயலால் பிள்ளைகள் படும் இந்த சந்தோஷத்தை அவர்களுக்கே தெரியாமல் ரசித்துப் பார்த்தார்கள்.




இங்கு இத்தனை கூத்துகள் நடந்து கொண்டிருக்க அது எதுவும் தெரியாமல் தன்னறையில் சுகமாக உறங்கிக் கொண்டிருந்தாள் நிறைமதி.



"அடியே எந்திரி இன்னைக்கு தான் காலேஜுக்கு கடைசி நாள் இன்னைக்காவது ஒழுங்கா காலேஜ் போற வழியை பாரு.. எப்ப பாத்தாலும் என்ற மருமகனை பாடாய்படுத்தி அவனை ஒரு வழி பண்ணாம போக மாட்ட.. இன்னைக்காவது அவனை தொல்லை பண்ணாம எந்திரிச்சு ஒழுங்கா காலேஜ் கிளம்புற வழியை பாரு.."என்று மகளைத் திட்டியபடி ஜன்னலை திறந்து விட்டார் தீபா.



"ஏம்பா பொண்ணு இன்னும் கொஞ்ச நேரம் தூங்கட்டும் எதற்கு தொந்தரவு பண்ற?"என்றபடி பூபாலன் வர, கணவனை முறைத்து பார்த்தார் தீபா.




அவரது முறைப்பான பார்வையில் மனைவியை அவர் பாவமாக பார்த்து வைக்க, வழக்கம்போல் அந்த பார்வையில் விழுந்த தீபா கணவன் மீது கொண்ட கோபத்தை மறந்து விட்டு "என்னங்க மாமா இவளைப் பத்தி தெரிஞ்சும் இப்படியே நீங்க இவளுக்கு சப்போர்ட் பண்ணிக்கிட்டு வரீங்க? இவ என்ன சின்ன புள்ளையா காலையில் எழுப்பி ஸ்கூல் போக சொல்ல? பெரிய பொண்ணு காலேஜ் முடிகிற அளவுக்கு நாம பொண்ணு பெரியவளா வளந்துட்டா.. இனிமேலும் இவள இப்படியே நம்ம கட்டுப்பாடுக்குள்ள வச்சுக்க கூடாது ஒவ்வொரு விஷயத்துக்கும் நம்ம இவ பக்கத்துல வர்றதால தான் எதையும் பெருசா எடுத்துக்காம இப்படி சின்ன புள்ள மாதிரி நடந்துக்குறா.. இப்படியே போனா இதுவே கண்டிப்பா தப்பான பழக்கமா மாறிடும் மாமா.."என்றவர் ஆதங்கமாய் சொல்ல,மனைவி பேச்சிலும் நியாயம் இருப்பதால் அமைதியாகிவிட்ட பூபாலன் தான் பார்த்துக் கொள்வதாக கண்களை மூடி திறக்க அவரது பார்வையில் நேசம் கொண்ட தீபா ஒரு சின்ன புன்னகையுடன் கணவனது நெற்றியில் முத்தமிட,அங்கு நடப்பதை எல்லாம் தூக்கம் கலைந்து ஓரக்கண்ணில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த நிறைமதி தன் தாய் தந்தையின் நெற்றியில் முத்தமிடுவதை கண்டு கோபமாக எழுந்து அமர்ந்தாள்.



"ஏய் மம்மி உன்கிட்ட எத்தனை தடவை சொல்லி இருக்கேன் என் முன்னாடி டாடிக்கு கிஸ் பண்ணாதன்னு.."என்று தந்தையின் தலையை தன் பக்கத்தில் பிடித்து இழுத்தவள் தீபா முத்தமிட்ட நெற்றியில் கை வைத்து அழித்துவிட, அவளை இடுப்பில் இரு கைகளையும் வைத்தபடி முறைத்து பார்த்தார் தீபா.


"ஏண்டி என்ற புருஷனுக்கு நான் முத்தம் கொடுக்கிறேன் உனக்கு என்ன வருது அதுல?"என்று கோபமாக கேட்க, அவரது அச்சு அவரைப்போலவே கோபமாக பார்த்து "என் டாடியை நான் மட்டும் தான் செல்லம் கொஞ்சுவேன் நான் வீட்ல இருக்கப்ப நீ அப்பா பக்கத்துல வரவே கூடாது நீ அப்பா பக்கத்துல வந்தா அவர் என்னை மறந்து உன்னை தான் பார்த்துகிட்டே இருக்கார்.."என்று சிறுபிள்ளை போல் புகார் வாசிக்க, மகளின் பேச்சைக் கேட்டு வெட்கம் கொண்ட தீபா கணவனை ஏறெடுத்தும் பார்க்க முடியாது "சரி சரி நீ சொல்ற மாதிரியே பண்றேன் ஆத்தா இப்ப காலேஜ் கிளம்புற வழியை பாரு.."என்றவர் அதற்கு மேலும் அங்கேயே நின்றால் மகள் தன் வெட்கத்தை கண்டுபிடித்து தன்னை ஒரு வழியாக்கி விடுவாள் என்று ஓடிவிட்டார்.



"ஏம்பா அம்மா திடீர்னு பேசிட்டு இருக்கும்போதே போய்ட்டாங்க!"என்ற மகளின் கேள்விக்கு என்ன பதில் சொல்வார் அந்த தந்தை.



"எனக்கு தெரியலம்மா ஒருவேளை அடுப்படியில் வேலை ஏதாவது இருந்திருக்கும் அதனால போயிருக்கலாம் சரி சரி நேரம் ஆகுது எந்திரிச்சு காலேஜுக்கு ரெடியாக இன்னைக்கு தானே உனக்கு காலேஜ் லாஸ்ட் டே.."



"ஆமா அப்பா ஒரு பக்கம் இனிமே படிக்கிற தொல்லை இல்லைன்னு நினைச்சு சந்தோஷப்படுறதா! இல்லை இனிமேல் என் பிரெண்ட்ஸ் யாரையும் பார்க்க முடியாதுன்னு வருத்தப்படுவதான்னு எனக்கு தெரியல.."என்று மெய்யான வருத்தத்துடன் சொன்ன, தன் செல்ல குழந்தை மகள் தலையை மென்மையாக கலைத்து விட்டார் அந்த தந்தை.



"எல்லாரையும் பத்தி யோசிக்கிற அளவுக்கு என் பொண்ணு பெரிய பொண்ணா வளர்ந்துட்டாளே?"என்று வாய்விட்டு சொல்ல,"போங்கப்பா நான் எவ்வளவு பெரிய பொண்ணா இருந்தாலும் உங்களுக்கு குழந்தை தான் நீங்க எப்பவுமே குழந்தை மாதிரி தான் பாக்கணும் நானே ஒரு குழந்தை தான்.. கொஞ்ச நேரம் உங்க மடியில தல வெச்சு படுத்துக்கிறேன் அப்பா.. இந்த சுகத்துக்கு ஈடு இந்த உலகத்துல வேற எதுவும் இல்லை.."என்றவள் தந்தையின் பதிலுக்காக காத்திருக்காமல் அவர் மடியில் தலை வைத்துக் கொள்ள, மகள் சொன்னதை கேட்டு நெகிழ்ச்சியடைந்து போன பூபாலன் கண்களில் இரு சொட்டு கண்ணீர் வர அதை மகளுக்கு தெரியாமல் மறைத்துக் கொண்டவர் கைகள் வாஞ்சையாக மகளின் தலையை தடவி கொடுத்தது.



"அத்தை மணி ஒன்பதாக இன்னும் பத்து நிமிஷம் மட்டும் தான் இருக்கு.. எங்க இன்னும் அவளை காணும் உங்க கிட்ட படிச்சு படிச்சு சொல்லிட்டு தானே போனேன் எனக்கு டவுன்ல ஒரு முக்கியமான வேலை இருக்கு.. இன்னும் ரெண்டு வாரத்துல எலக்சன் வேற வரப்போகுது அதுக்கு இப்பவே நான் தீவிரமா வேலை பார்க்க ஆரம்பிச்சா தான் எனக்கு எலக்சன்ல ஓட்டு கிடைக்கும்.. எனக்கு வீட்டுக்கு வர்றதுக்கு டைம் கிடையாது அதையும் மீறி நான் வர்ற காரணம்.."என்றவன் சொல்ல வந்ததை சொல்லாமல், வாய்க்குள்ளே முழுங்கிக் கொள்ள அவனை பரிதாபமாக பார்த்தார் தீபா.



"இல்லப்பா இதோ இப்ப வந்துருவா நான் சொல்லிட்டு தான் வந்தேன் கண்டிப்பா வந்துருவா நீ வந்து சாப்பிடு அதுக்குள்ள அவ வந்துடுவா.."என்றவர் பார்வை நொடிக்கு ஒரு முறை அவர் மகள் இருந்த அறையை தொட்டு மீள அவர் வாய் சொல்லாத வார்த்தைகளை அவர் கண்ணசைவில் கண்டுகொண்டான் அவன்.



கட்டியிருந்த வெள்ளை வேட்டியின் நுனியை வலது காலில் பெரு விரலுக்கும் சிறுவிரலுக்கும் இடையே கொண்டு வந்தவன் அதை அப்படியே ஏத்தி கைக்கு கொண்டு வந்தவன் வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு அதே நிறத்தில் அணிந்திருந்த வெள்ளை நிற முழுக்கை சட்டையின் முழு நீள கையை மடக்கி விட்டவன் விறு விறுவென நிறைமதி இருந்த அறைக்குள் சென்றான்.



எல்லாம் கெட்டுப் போச்சு! என்ற ரீதியில் வலது கையை தூக்கி தலை மீது வைத்துக் கொண்டார் தீபா.



"அத்தாச்சி எங்க உங்க மருமகன் குரல் கேட்டுச்சு இப்ப பார்த்தா ஆள காணும் எங்க போயிட்டான் அதுக்குள்ள கிளம்பி போயிட்டானா? இல்லையே அவன் மதிய கொண்டு போய் காலேஜ்ல விடாம எங்கேயும் போக மாட்டானே!! எவ்வளவு பெரிய வேலை வந்தாலும் இவளை கொண்டு போய் காலேஜில் விட்டுட்டு தானே மறு வேலை பார்ப்பான்.. இப்ப எங்க போய்ட்டான்.."என்று இளைய மருமகள் காமாட்சி கேட்க, அவரை பாவமாக பார்த்த தீபா மகள் இருந்த அறையை நோக்கி கை காட்ட, விழிகள் இரண்டும் வெளியில் வந்து விடுமளவிற்கு அதிர்ச்சியில் கண்களை விரித்து விட்டார் காமாட்சி.



"இன்னைக்கு கண்டிப்பா இப்ப ஒரு கச்சேரி நடக்க போகுது.."என்று தீபா கலவரமாக சொல்ல, அவர் சொல்லி வாயை மூடுவதற்குள்ளாகவே "அடேய் வீணா போன மாமா என்னடா பண்ற?"என்று மதியின் அலறல் குரல் அந்த வீட்டையே நிறைத்தது.
 
Last edited:
Top