Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கரை சேர்ந்த ஓடங்கள் - 6

Advertisement

Vathani

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம் – 06
244

சாருவும் சஷ்டியும் சென்னைக்கு வந்து இன்றோடு மூன்று நாட்கள் ஆகியிருந்தது… இந்த மூன்று நாட்களில் தூங்க மட்டுமே அவன் தாயைத் தேடினான்… மற்ற நேரம் முழுவதும், புகழும் சிவகுருவும் தான் வைத்திருந்தனர்… வசந்தா அனைத்தையும் பார்த்துக்கொண்டு மட்டுமே இருந்தார்… தன் மகனுக்காக அவர் செய்த அனைத்து திட்டங்களும் பொடிப்பொடியாகி ஒரு குழந்தையின் உருவத்தில் வந்து நிற்பதை அவரால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை…


ஆனால் மகனிடம் காட்டிக்கொள்ள மனமில்லை… தன் அறையிலேயே பெரும்பாலும் முடங்கிக் கொண்டார்… சஷ்டியின் அழுகைக் குரல் தொடர்ந்து கேட்டால் மட்டுமே அறையை விட்டு வெளியே எட்டிப் பார்ப்பார்…


சஷ்டி குளிப்பதற்கு பெரும் அடம் செய்வான்… அந்த வேலையை செய்ய இரண்டு பேர் வேண்டும்.. அங்கென்றால் ருக்மா இருப்பாள், அவள் பிடித்துக் கொள்ள, சாரு குளிக்க வைப்பாள்… இங்கோ யாரைக் கூப்பிட, சாருவே அனைத்தும் செய்ய வேண்டி இருக்கும், அதனால் அவனது அழுகைச் சத்தம் வீட்டையே பிளக்கும், ஆண்கள் இருவரும் செய்வதறியாது உட்கார்ந்திருந்தால். வசந்தா வெளியே வந்து புகழைத் திட்டுவார்…


நீ ஏன் சும்மா இருக்க, போய் அவனைப் பிடிச்சா அவ குளிக்க வைப்பா இல்ல, எனக்கென்னனு இருக்குறது என்னப் பழக்கம்… நாளைக்கு நீயே எல்லாம் செய்ற நிலமை வந்தா என்ன செய்வ, போ போய் அவனைப் பிடி என்று விரட்டுவார்… வசந்தாவின் பேச்சைக் கேட்ட இருவரும் அவரையேப் பார்க்க, அவரது பார்வையோ மாடியில் இருக்கும் புகழின் அறை வாசலேயே இருந்தது… தாயின் பார்வையைத் தொடர்ந்து புகழும் பார்க்க, அப்போது தான் சாரு சஷ்டியின் உடம்பில் ஒரு டவலை சுத்தித் தூக்கிக்கொண்டு கீழே வந்தாள். அவள் முகம் மிகவும் சோர்வாய் இருந்தது… “குளிக்க வச்சதுக்கே இவ்வளவு டயர்டாகிட்டாளா….” பையன் ட்ரில் வாங்குறான் போல… இனி அம்மா சொன்னா மாதிரி நாமளும் ஹெல்ப் செய்யனும்… அப்போதான் நம்ம மேல இருக்குற கோபமும் குறையும்” என்று மனதுக்குள் நினைத்துக்கொண்டான்… பார்வை மட்டும் அவள் மேலே…


“சரிம்மா…. சரிம்மா… முடிஞ்சது அவ்வளவுதான்… இங்கே பாரு சஷ்டிமா, நாம இப்போ பட்டர்ப்லை பார்க்க போறோம்… ப்ளவர்ஸ் பார்க்க போறோம்… ஓகே அழக்கூடாது, அழக்கூடாது” என்று குழந்தையை சமாதானப் படுத்திய படியே கீழே வந்தவள், மற்றவர்களைப் பார்க்க, வசந்தா தன் அறைக்குள் நுழைந்திருந்தார்…


மாடிப்படியில் அவள் இறங்கும் போதே அவர் தன் அறைப் பக்கம் நகர்ந்திருந்தார்… சாரு அதையெல்லாம் கண்டுக்கொள்வதே இல்லை…மற்றவர்களையும் கடந்து தோட்டத்திற்கு நகரப் போக, சஷ்டி “ப்பா… ப்பா’ என்று அவனிடம் தாவப் போக, அதுவரை இருந்த பொறுமை முற்றிலும் பறக்க, குழந்தையை அவன் கையில் திணித்து விட்டு, வெளியே சென்று விட்டாள்.. “யார் அப்பா… நேற்று வந்து நான் தான் உன் அப்பா என்றால் உடனே ஏற்றுக் கொள்ள வேண்டுமா… அப்போ என்னுடைய கோபம், வலி, நான் பட்ட அவமானங்கள் இது எதற்கும் மதிப்பே இல்லையா… கோபம் ஆழியாய் பொங்கியது… அங்கிருந்தால் பெரியவர் முன் ஏதேனும் பேசிவிடுவோமோ என்று பயந்து போய் தான் அவள் தோட்டத்திற்குள் புகுந்தது…


மனம் எதையோ எண்ணி உழள கண்ணீர் பெருகியது. அழக்கூடாது.. ஒரு முறை அழுது அதனால் இழந்தது போதும், இனியும் வேண்டாம்… இவனிடம் மட்டுமே நான் அழுகிறேன் என்றும் எண்ணிக்கொண்டாள்… இப்போது இந்த எண்ணங்கள் ஒன்றும் வேண்டாம்… நடப்பது நடக்கட்டும், வாழ்க்கை அது போகிற போக்கில் போகட்டும், அதனுடே நாமளும் போகலாம் என்ற முடிவை அவள் நைனிடாலில் வைத்தே எடுத்திருந்தாள்… அதனால் கண்டதையும் நினைத்துக் குழம்பாமல் சுற்றுப்புறத்தை நோட்டமிட்ட படியே அமர்ந்திருந்தாள்… இந்த மூன்று நாட்களாக நடந்தவற்றை எண்ணியபடியே உட்கார்ந்திருந்தவளின் தோலைத் தட்டிய ஜோதி, “சின்னம்மா தம்பிக்கு சாப்பிட என்ன கொடுக்கட்டும், புகழ் தம்பி உங்களைக் கேட்க சொன்னார்…” என்றதும் யோசனைகளை எல்லாம் விட்டுவிட்டு, அவளிடம் “நானே வர்றேன் ஜோதிமா நீங்க போங்க…” என்றாள்..


எப்படியும் இது தான் வாழ்க்கைன்னு முடிவாகிப் போச்சு சஷ்டிக்காக சில செயல்களைப் பொருத்து தான் போகனும் என்னோட கோபத்தால, அவனுக்கு அப்பா, தாத்தா பாட்டி இல்லாம போயிடக் கூடாது… எல்லாம் சரியாகும் சீக்கிரம் சரியாகும்… என்ற சிந்தனையிலேயே வீட்டிற்கு வர மூவரும் மிக அமைதியாய் உட்கார்ந்திருந்தனர்… மூவர் என்பது சஷ்டி, புகழ், சிவகுரு.. என்ன அதிசயம் நடக்குது இங்கே என்றபடியே சமயலறைக்குள் நுழைய, வசந்தா சாதத்தில் பருப்பையும் நெய்யையும் போட்டு பிசைந்து கொண்டிருந்தார்… அவரது சத்தம் வெளியே எல்லாருக்கும் கேட்டது…


“நாலு எலும்பு தான் இருக்கும் போல, என்ன உடம்பு இருக்கு… 2 ½ வயசு குழந்தைங்க எப்படி இருக்காங்கன்னு போய் பார்க்க சொல்லு உன் பொண்டாட்டியை, இதுல இவ குழந்தைங்க டாக்டர் வேற, ஏய் ஜோதி நெய் சூடு பண்ணலயா, கட்டியா இருக்கு” என்று அவளையும் விட்டு வைக்காமல் பொரிந்து கொண்டிருந்தார் வசந்தா….


சமையலறையின் வாசலில் நின்றிருந்தவள் “ஆவெனப் பார்க்க, சாப்பாட்டுக் கிண்ணத்தையும், தண்ணியையும் எடுத்துக்கொண்டு வெளியே வந்தவர், அவளைப் பார்த்து “தள்ளு… உன்னை மாதிரியே எலும்புக் கூடா புள்ளையை வளர்க்கனும்னு நினைச்சியோ, எம்புள்ள 2 ½ வயசுல கொழுக்கு மொழுக்குனு இருப்பான் தூக்கவே கஷ்டமா இருக்கும்… நீயும் எப்படி பையனை வச்சுருக்க நாலு குச்சி எலும்ப சொருகி விட்ட மாதிரி…. புள்ள வளர்த்தாளாம் புள்ள.. ஊரு உலகத்துல வளர்க்காத புள்ள…” என்று அவளையும் தாளித்து விட்டு, வந்தவர் சஷ்டியைத் தூக்கி தன் இடுப்பில் வைத்தார்…


அவனும் அழாமல், அடம் செய்யாமல் அப்படியே உட்கார்ந்து கொள்ள, டேபிளில் வைத்த சோற்றுக் கிண்ணத்தை எடுத்தவர் சிவகுருவைப் பார்த்து, “சாப்பாடு கொடுத்து முடிச்சதும் நாம் கடைக்கு போகனும், வேலை இருக்குன்னு வெளியே ஓடிடாதீங்க… அந்த கந்தசாமி கடைக்கு போன் பண்ணி நாங்க வரோம்னு சொல்லிடுங்க.. அந்தாளு எங்கையாச்சும் போயிடப் போறார்..” என அவரையும் விட்டு வைக்காமல், பொரிந்து விட்டு சஷ்டியோடு தோட்டத்திற்கு சென்றார்…


மழை அடித்து ஓய்ந்தது போல் இருந்தது அந்த இடம்… மூன்றே நாளில் இப்படியொரு பரிமாணத்தை வசந்தாவிடம் யாரும் எதிர்பார்க்கவில்லை…


அவர் சென்றதும் தந்தையும் மகனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ள, சாரு அவர்களைக் கடந்து அறைக்குள் நுழைந்திருந்தாள்…


“என்ன டாடி, இந்த மம்மி இப்படி ஷாக் கொடுக்குறாங்க, நம்பவே முடியல என்னால…”


“எனக்கும் தான் இது ஷாக், தம்பி இங்கே வரப் போறான்னு சொன்னதுல இருந்தே உங்கம்மா அமைதியாகிட்டா. அந்த அமைதியைப் பார்த்து நான் கூட எதாவது பண்ணிடுவாளோன்னு பயந்தேன். ஆனா யோசிச்சிருக்கா அதான் இப்படி நடந்துக்குறா…


“மம்மி இவ்வளவு சீக்கிரம் மனசு மாறுவாங்கன்னு நான் நினைக்கவே இல்ல. இப்படின்னு தெரிஞ்சிருந்தா முன்னாடியே இவங்களைக் கூப்பிட்டுருக்கலாம்…”


“இல்ல, அங்க தான் நீ தப்பு செய்ற, வசந்தா திருந்திட்டான்னு நான் சொல்லவே இல்லையே.. நீ யோசிச்சுப்பாரு அத்தனை சீக்கிரம் சாருவை ஏத்துக்குற மனசு அவளுக்கு இருக்கா,என்ன..? மனசாட்சியே இல்லாம விரட்டி விட்டாளே, ஒரு சின்னப் பொண்ணை அதை மறந்துட்டியா…? நீ என்று வரும் போது அவளோட யோசனைகள் எல்லாம் நிதானமா இருக்கும்… இப்போவும் முருகேசன் வந்து பிரச்சனை பண்ணிட்டு போகலன்னா உங்கம்மா இந்த முடிவை எடுத்துருக்க மாட்டாள். பார்ப்போம் ஷஷ்டியை ஏத்துகிட்ட மாதிரி உடனே சாருவை ஏத்துகுறது கஷ்டம் அவளால… நாம அவளுக்கு டைம் கொடுக்கனும்.. இதுவே பெரிய ஷாக். தொடர்ந்து வசந்தாவை நாம கட்டாயப்படுத்துக்கூடாது… அவளோட ஹெல்தையும் பார்க்கனும் இல்ல…”


“ம்ம்… எஸ் ப்பா… புரியுது வெயிட் பண்ணுவோம்…” வேற என்ன செய்ய முடியும்…


“ஏன் டல்லா பேசுற, சாருக்கிட்ட சண்டை எதுவும் போட்டியா” அவளையும் நீ புரிஞ்சிக்க ட்ரை பண்ணு புகழ், எடுத்தோம் கவிழ்த்தோம்னு பேசாதே…


“ப்ச்… அப்பா… பொண்ணாப்பா அவ, பேய் ப்பா.. என்றவன், தன் கையை குரல் வலையை நெறித்தப்படியே இப்படித்தான் என் கழுத்தை நெறிச்சுட்டு இருக்காப்பா…” என்றான் கடுப்பாய்…


மகனின் செயலில் வாய்விட்டுச் சிரித்தவர்… எந்த பொருளும் ஈசியா கிடைச்சா அதுக்கு மதிப்பில்லையே மகனே, இன்னும் வாழ்க்கை உனக்கு கொடுக்க நிறைய வச்சுருக்கு… இப்போவே தளர்ந்துட்டா என்ன செய்றது… அவளே உன்னை விட்டு ஒதுங்கினாலும், நீ விடாதே, குழந்தையை மையமா வச்சு பேசிக்கிட்டே இரு… தனியா யோசிக்க விடாதே… வெளியே அழைச்சுட்டுப் போ… நம்ம ஹாஸ்பிடலுக்கு கூட்டிட்டுப் போய் காட்டு…”, என்றவர், “இன்னும் என் பின்னாடியே ஒழிஞ்சுக்க இடம் தேடக் கூடாது… நீ தான் எல்லாத்தையும் பேஸ் பண்ணனும், தப்பு செய்யும் போது இருக்குற தைரியம், அதை சரி செய்யும் போது இரட்டிப்பா இருக்கனும், பொறுமையா பேசு, புரிஞ்சுக்காத ஆள் கிடையாது சாரு…” என குற்றவுணர்வுடன் அமர்ந்திருந்த மகன் தட்டிக் கொடுத்தப்படி, “எல்லாம் சரியாகும் இல்லை சரியாக்குவோம்… உன்னால முடியும். இவ்வளவு தூரம் எங்க யாருக்குமே தெரியாம அவங்க ரெண்டு பேரையும் பார்த்துக்க முடிஞ்ச உன்னால.. இனி எல்லாத்தையும் சரி பண்ணவும் முடியும்…” நம்பிக்கையை விட்டுடாதே போ போய் அவக்கூட பேசு… தள்ளி நிற்காதே…” என்று விட்டு போனை எடுத்துக் கொண்டு மனைவியை நோக்கி போனார் சிவகுரு…


தந்தையின் பேச்சில் இருந்த உண்மை அவனுக்கும் புரியத்தான் செய்தது… ஆனாலும் அவளை நேர் கொண்டுப் பார்க்க தயக்கமாக இருந்தது… தன் பொருட்டு அவள் பட்ட கஷ்டங்களை நினைத்து வருத்தமாக இருந்தாலும் அவனை எப்படி நம்பாமல் போகலாம் என்பதில் கோபம் எரிமலையாய்க் குமிழிட்டது…


அன்று மூச்சிரைப்பு ஏற்பட்டதும், கூட இருந்த மூவரும் பயந்து செய்வதறியாது நின்று விட, ருக்மாதான் சாருவின் அறையக் கதவைத் தட்டி அவளை வெளியே அழைத்தாள்…


வெளியே வந்தவள், அவனைப் பார்த்த நொடி அவள் விழிகளில் தெரிந்த பயமும், பதட்டமும் புகழால் என்றுமே மறக்க முடியாது… இவளை விட்டுவிட்டோமே என்று தான் வருந்தினான்…


பதறியடித்து வந்தவள் சுற்றியிருந்த யாரையும் கண்டு கொள்ளாமல் அவனை மேலிருந்து கீழே ஒருமுறை ஆராய்ந்தவள், “பப் எங்க வச்சுருக்கீங்க.. எங்க இருக்கு என்ற படியே புகழது சட்டைப் பாக்கெட் பேன்ட் பாக்கெட் என எல்லாவற்றிலும் துழாவ அங்கு எதுவுமே கிடைக்கவில்லை… அவனை விட்டு தன்னறைக்கு புயலாய் பறந்தவள் திரும்பி வரும் போது அவள் கையில் ஒரு இன்ஹேலர் இருந்தது… வேக வேகமாய் அவன் வாயில் வைத்து அதை இரண்டு மூன்று முறை செலுத்தியவள், கண்கள் இரண்டுமே மேலே செல்வதை உணர்ந்து அவளது வாயை மூக்கில் வைத்து அழுத்தி ஊதினாள்… எதுவும் செய்ய முடியாமல் அவளது செய்கைகளை பார்தத மற்றவர்கள் அமைதியாய் இருக்க, சாருவோ ருக்மாவிடம் ஹாட் வாட்டர் எடுத்து வரச் சொல்லி அவனைப் படுக்க வைத்தாள்… சில நிமிடங்களில் அவன் நார்மலாகி மூச்சும் ஆசுவாசமாக வெளியிட ஆரம்பிக்க, யாரைப் பற்றியும் யோசிக்காமல்,


“உனக்கென்ன பைத்தியமா, என்ன ஹீரோயிசமா காட்ட வந்தியா…? இல்லை என்ன நினைச்சுட்டு இப்படி நடந்துக்கிட்ட, உனக்கு ஹில்ஸ் க்ளைமேட் ஆகாதுன்னு தெரியும் தானே… பின்ன ஏன் நீ ‘பப்’ எடுத்துட்டு வரல…” இப்படியெல்லாம் நடந்தா நான் பரிதாபப்பட்டு உன் கூட வந்துடுவேன்னு செய்றியா…? வேண்டாவே வேண்டாம்னு சொல்லி ஒரு நாயை விடக் கேவலமா துரத்தி விட்டுட்டு, இப்போ வந்து இங்க சீன் போட்டுட்டு இருக்க… நீ என்ன நினைச்சு வந்தாலும், எதுவும் நடக்காது… தயவு செய்து எங்களோட உலகத்துல நீ வராத, வேண்டாம். எனக்கு சொந்தம்னு நான் நினைக்குற யாருமே என் கூட கடைசி வரைக்கும் வந்தது இல்ல… நீயும் அப்படித்தான்… இனியும் என்னால ஒரு பிரிவை யோசிக்கக் கூட முடியாது. பயமாயிருக்கு….


“எனக்கு யாருமில்லை, நான் மட்டும் தான், எனக்கு என் குழந்தை மட்டும் தான்னு என் மனசை பக்குவப்படுதிக்கிட்டு இருக்கேன்.. புதுசா நீ எதையும் ஆரம்பிக்க வச்சுடாதே…” என்றுத் தன் போக்கில் கத்தியவளை வெறுமையான முகத்துடன் பார்த்தான் புகழ்…


“சாரு…. காம் டவுன்… ப்ளீஸ் ஏன் இப்படி வைலன்ட் ஆகுற… கொஞ்சம் பொறுமையா பேசு…” என்ற கெல்வினை முடிந்த மட்டும் முறைத்துப் பார்த்தாள்…


சிவகுருவோ எதுவுமே பேச முடியாத தன் கையாலாகாத தனத்தை எண்ணி நொந்துக் கொண்டார்… தலையை பிடித்துக் கொண்டுஉட்கார்ந்தவளின் கண்களில் புகழின் கால்கள் பட்டன… சர்ஜரியில் மாட்டியிருந்த ஸ்லிப்ரோடு வந்திருப்பது தெரிந்தது… கால்கள் விரைத்திருந்தன… பட்டென்று அவன் முகத்தைப் பார்க்க, குளிருக்கு அவன் நடங்குவதும் புரிந்து… ருக்மாவிடம் சூடான பால் கொண்டு வரச் சொன்னாள் தன்னிடமிருந்த யூகலிப்டஸ் ஆயிலை எடுத்து வந்து அவன் பாதங்கள் இரண்டிலும் சூடு பறக்கத் தேய்த்தாள்….


அவள் என்ன செய்ய போகிறாள் என்பது போல் எல்லோரும் பார்க்க, புகழின் ஸ்லிப்பரை அவள் கழட்டுவதை உணர்ந்து அவன் பதறினான்… முடிந்த மட்டும் அவனை முறைத்து விட்டு தன் வேலைகளில் கவனமானாள்… ருக்மா கொடுத்த பாலை பருக வைத்தவள்… சிறிது நேரம் படுக்கும்மாறும் கூற, அவனோ எந்த பிகுவும் செய்யாமல் மெதுவாக எழுந்து அவள் அறையில் சஷ்டியோடு சுருண்டு கொண்டான்…


புகழின் செய்கையைப் பார்த்தவள், “அடேய்… அடேய்… நீ ஒரு முடிவோட தாண்டா வந்துருக்க, எரும, இவனை எதுவுமே பண்ண முடியலையே என்னால, முருகா… இவன் கிட்ட இருந்து காப்பாத்த மாட்டியா… தயவுசெய்து இவனை துரத்தி விடு… ஒரு மணி நேரத்துலயே என்ன தலையால தண்ணிக் குடிக்க வைக்குறானே…” என்று மனதுக்குள்ளே புலம்பித் தீர்த்தாள்….


சில நிமிட அமைதிக்குப் பிறகு, நிதானத்திற்கு வந்தாள்… “ப்ளீஸ் அங்கிள், நீங்க தப்பா எடுத்துக்காதீங்க, உங்க முன்னாடி இப்படி பேசிட்டேன், என்னோட நிலையும் உங்களுக்குத் தெரிஞ்சுருக்கும் இல்ல…” எனக் குற்ற உணர்ச்சியுடன் சொல்ல, “உங்களுக்கு நான் கொடுத்த வாய்ப்பை நீங்க ரெண்டு சரியா பயன் படுத்திக்கல, ஒருத்தரை ஒருத்தர் தப்பு சொல்றதை நிறுத்தினா மட்டும் தான் வேற வழியே யோசிக்க முடியும்… விதியோ, மதியோ யார் விளையாடியிருந்தாலும் , இனி அதைப் பத்தி பேசி எதுவும் ஆகப் போறது இல்ல…”


“உங்க லைப் நீங்க என்ன முடிவு வேனுமானாலும் எடுக்கலாம், ஆனா சஷ்டி எங்க குடும்ப வாரிசு, அவனை வச்சு நீங்க எந்த முடிவும் எடுக்க முடியாது… அடிங்க ,பிடிங்க ஏன் சண்டைப் போட்டு மண்டையைக் கூட உடைச்சுக்கோங்க, ஆனா இதுல எது நடக்குறதா இருந்தாலும் அது ரெண்டு பேரும் ஒன்னா இருந்தா மட்டும் தான் சாத்தியம்… அதுக்கு என்ன பண்றதுன்னு யோசிங்க…” அப்புறம் இனியும் உன்னை நானோ இல்லை புகழோ தனியா விடுவோம்னு கனவுல கூட நினைச்சுடக் கூடாது… எந்த ஒரு செயலுக்கும் ரெண்டு பக்கம் இருக்குனு யோசிக்கனும்.. நீங்க சின்னப் பிள்ளை இல்ல, சொல்லித் திருத்துற அளவுக்கு பக்குவம் இல்லாத பசங்க இல்ல… நாளைக்கு நைட் நாம சென்னைல இருப்போம்… என முடிவுல எந்த மாற்றமும் இல்ல… என் மேல உனக்கு நம்பிக்கையும் மரியாதையும் இருந்தா, எந்தத் தப்பான முடிவும் எடுக்காம கிளம்பு.. நீ அவனைக் கேட்க வேண்டிய கேள்விகள் எல்லாத்தையும், அவன் சட்டையைப் பிடிச்சுக் கேளு, பதில் சொல்ற கடமை இருக்கு அவனுக்கு… இது எது நடந்தாலும், அது நம்ம வீட்ல தான்…” என்றவர், “சாப்பிடலாமா, டேப்லட் போடனும் …“ எனவும், தன் பிரச்சனைகளை எல்லாம் ஒதுக்கி வைத்தவள் அவர்களை கவனிக்க தொடங்கினாள்….


திசை மாறும் ....
 
Top