Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கரை சேர்ந்த ஓடங்கள் - 7

Advertisement

Vathani

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம் – 07
246


சென்னையில் அவர்கள் வாழ்க்கை இலகுவாய் சென்றது. சஷ்டியை முழுக்க முழுக்க வசந்தாவே வைத்துக் கொள்ள, சருவிற்க்கு தான் நேரமே போகவில்லை. என்ன செய்யலாம் என்ற யோசனையில் இருக்கும் போது சிவகுருவே ஆரம்பித்தார். அவரும் தான் அவள் அல்லாடுவதை பார்த்துக் கொண்டு தானே இருக்கிறார்… புகழிடம் அவர் இது பற்றி கூற, அவனோ ‘அவளிடம் பேசுகிறேன்’ என்று சொன்னானே தவிற பேசவில்லை…


மகன் என்ன யோசனை செய்கிறான் என்று புரியா விட்டாலும், சாருவை இப்படிப் பார்க்க பொறுக்காமல், மகனை எதிர் பார்க்காமல் அவரே பேசினார்…


அன்று வேலைகளையெல்லாம் முடித்து விட்டு எப்போதும் அமரும் மகிழம்பூ மரத்தடியில் அமர்ந்திருந்தவளை அவரேத் தேடி வந்தார்… “என்ன சாரும்மா… உனக்கு இங்கப் போர் அடிக்குதோ, நான் பார்க்கும் போதெல்லாம் இந்த மரத்தடியிலேயே உட்கார்ந்திருக்க…”


“போர் தான் மாமா, மெசின் மாதிரி ஒர்க் பண்ணிட்டு, இப்போ சும்மா இருக்குறது கஷ்டமா இருக்க..” சஷ்டியும் இப்போ தூங்க மட்டும் தானே என்னைத் தேடுறான். வீட்டு வேலைக்கும் ஆள் இருக்காங்க… சாப்பிட்டு சாப்பிட்டுத் தூங்கத் தான் முடியுது.. இப்படியே போச்சு நான் சரியான வாழைப்பழ சோம்பேறி ஆகிடுவான்… அதான் வாக் போயிட்டு இப்படி உட்கார்ந்திருக்கேன். வேற என்ன செய்ய…”


“ம்ம்.. புகழ் கிட்ட பேசும்மா நம்ம ஹாஸ்பிடலுக்குப் போகலாம் தானே… ஒரு சேஞ்சா இருக்கும்… சஷ்டி பத்தி கவலையே வேண்டாம், வசந்தா பார்த்துக்குவா… உனக்கு ஓகேன்னா, நான் பேசுறேன் புகழ் கிட்ட…”


“ம்ம்… எனக்கு ஓகே தான் மாமா, ஆனா அவர் என்ன நினைக்கிறார்னு தெரியாம, எப்படி போறது. அதோட அத்தைக்கிட்டயும் கேட்கனும், அவங்க ஒபின்யன் முக்கியம் இல்லையா… தம்பியைப் பத்தி எனக்கு இப்போ கவலை இல்லை… அத்தைட்ட நல்லா ஒட்டிக்கிட்டானே… ஆனாலும் கேட்டுக்குறது நல்லது தானே…”


“ம்ம்.. அதுவும் சரி தான்… என்ன தான் நான் சொன்னாலும் அவங்களும் சொல்றது நல்லது தான்… நான் பேசுறேன் ரெண்டு பேர் கிட்டயும்..” என்றவர், “உனக்கு இந்த மரமும் இந்த வாசமும் ரொம்ப பிடிக்குமோ” எனவும்


“ஆமாம் மாமா ரொம்ப பிடிக்கும், எங்க வீட்டல ஒரு மரம் இருந்தது… அது அப்பா பிறந்ததும், அவரோட நியாபகமா இருக்கட்டும்னு சொல்லி தாத்தா வசச மரம் தானாம்… அப்பாவுக்கு அந்த மரம்னா அவ்ளோ விருப்பம், மரத்தைச் சுத்தி திண்ணைப் போட்டு ஒரு குடில் மாதிரி செட் செய்து வச்சிருந்தார்…”


“மழை பெய்யும் போது நான் அப்பா, அம்மா மூனு பேரும் அதுல டான்ஸ் கூட ஆடுவோம், பாட்டியும் தாத்தாவும் எங்களைக் கிண்டல் செய்துட்டே, ரசிச்சுட்டு இருப்பாங்க… இங்கே வந்ததும் இந்த மரம் பார்த்ததும் அவங்க எல்லாரும் என் கூடவே இருக்குற மாதிரி ஒரு பீல், என்னைச் சுத்தி அவங்க பாதுகாப்பா இருக்குற மாதிரி உணர்வு, இங்கே சாஞ்சு உட்கார்ந்தா அப்பா தோள்ல சாஞ்சா ஒரு பாசம், இங்கேப் படுத்து கிட்டா அம்மா மடியில படுத்த ஒரு நிம்மதி… ரொம்ப வருசம் கழிச்சு எனக்கு இப்போ தான் இப்படியெல்லாம் பீல் ஆகுது மாமா… அதான் இங்கயே வந்து உட்கார்ந்திருக்கேன்… தழுதழுப்பான குரலில் அவள் சொல்ல, கடவுளே ஏன் தான் இப்போது இதைக் கேட்டோமோ, என்று தன்னையே நொந்தவர் ஆதுரமாய் அவள் தலையைக் கோதினார்…


சில நொடி மவுனங்கள் இருவரிடமும், முதலில் சுதாரித்தது சாரு தான்… “சாரி மாமா உங்களயும் பீல் பண்ண வச்சுடேன் போல…” என்றாள் உதட்டில் சிறு புன்னைகையுடன்..


“ச்சே… ச்சே… என்ன பேச்சுடாம்மா இதெல்லாம் உன்னை முதல இப்படி பீல் பண்ண விட்டதே எங்கத் தப்புத் தானே… தப்புக்கு மேலத் தப்பா பண்ணிட்டு இருக்கோமோன்னு குற்ற உணர்ச்சியா இருக்குடாம்மா… இனி இப்படி நடக்காமப் பார்த்துக்குறேன்… நீ ஹாஸ்பிடல் போறதுக்கு நான் ஏற்பாடு பண்றேன்… புகழ் கிட்ட கேட்போம், ரொம்ப பேசினா போடான்னு விட்டுட்டு, உனக்கு புதுசா ஒரு ஹாஸ்பிடல் கட்டித் தரேன்… அவனே வச்சிகட்டும், அந்த இத்துப் போன பழைய ஹாஸ்பிடல்ல…” என்றார் சிரிக்காமல்…


மாமனாரின் பேச்சைக் கேட்டவள் பக்கென்று சிரித்து விட, அவருக்கும் சிரிப்பு வந்தது… “நான் உன்னை புகழுக்கும் மேலா தான் பார்க்குறேன் உனக்கு ஒரு குறையும் வராதுடா சரியா…” மனசைக் குழப்பாம உள்ளேப் போ…


எனக்கு இப்போ வருத்தமெல்லாம் இல்ல மாமா, எல்லாம் பழகிடுச்சு, அப்புறம் என் அப்பா தான் என் கூடவே இருக்காறே… சீக்கிரம் எல்லாம் சரியாகும் மாமா, நீங்களும் இதையே நினைச்சுட்டு இருக்காதீங்க…


“ம்ம்… கண்டிப்பாம்மா, நீ எனக்கு மகள் தான் முதல் தடவை உன்னைப் பார்க்கும் போதே, உன்னை என் மகளாத்தான் நினைக்கத் தோனுச்சு.. புகழ் உன்னை என் கிட்ட அறிமுகப் படுத்தவும், என் மகிழ்ச்சிக்கு அளவே இல்லத் தெரியுமா… அவ்ளோ ஹேப்பி… இடைல எவ்வளவோ நடந்து முடிஞ்சிருச்சு போனது போகட்டும் இனி அப்படி நடக்காம பார்துக்கலாம் சரி வா உள்ளே போகலாம்…


அப்புறம் மாமா “புகழ் கிட்ட நானே பேசுறேன் அவங்க ப்ளான் என்னனு கேட்டுட்டு அடுத்ததை முடிவு பண்ணுவோம் என்ன சொல்றீங்க…”


“அதுவும் சரி தான், நீ பேசிட்டு சொல்லு, நான் வசந்தா கிட்ட பேசுறேன்…” இருவரும் வீட்டின் உள்ளே நுழைய வசந்தா சஷ்டியைத் தூக்கிக்கொண்டு வெளியே வந்தார்… சாருவை பார்ததும் “தூக்கத்துக்கு அழறான் பாரு… எப்படித் தான பார்த்துக்கிட்டாலும் தூக்கம் வந்தா நீ தான் வேணும் இந்தப் பொடியனுக்கு..” என்ற படியே பேரனை அவளிடம் கொடுத்தவர் கணவனைப் பார்த்து என்ன என்பது போல் புருவத்தை உயர்த்த, அவரோ ஒன்னுமில்லை என்பது போல் தோளைக் குலுக்கிக் கொண்டு நகர… வசந்தா இருவரையும் வித்தியாசமாய் பாத்துக்கொண்டிருந்தார்…


புகழ் இப்பொழுது ரிசர்ச் வேலையை நிறுத்தி விட்டு ஹாஸ்பிடலில் முழு நேரமாக அமர்ந்து விட்டான்… மற்ற ஹாஸ்பிடலில் இருந்து டாக்டர்ஸ் ரெபர் செய்ய. அவனுக்குத் தான் வேலை அதிகமாகியது… பல நாட்கள் அவன் வீடு வரவே பதினொரு மணிக்கு மேல ஆனது… சோர்ந்துப் போய் வருபவனிடம் என்ன பேச… என்பது போல் சாருவும் அவனிடம் இதைப் பற்றிப் பேசாமலே இருந்தாள்.. அவனைப் பார்ப்பதும் அரிதாகித் தான் போயிருந்தது…


அன்று சஷ்டிக்கு உடல் சூடாக இருக்க, அவன் சினுங்கலும், அழுகையும், பிடிவாதமும் மற்றவர்களை ஒரு வழியாக்கியது… யாரிடமும் செல்லாமல் சாருவையேக் கட்டிக்கொண்டி தன் அழுகையைத் தொடர்ந்து கொண்டிருந்தான்… எதற்கு என்றேத் தெரியாமல் அழுவது வேறு கோபத்தைக் கொடுத்தது… ஆனாலும் குழந்தையிடம் எப்படிக் கோபத்தைக் காட்டுவது என்று அமைதியானாள் சாரு…


இதே அங்கு என்றால் ருக்மாவிடம் கொடுத்து விடுவாள் அவனும் ருக்மாவிடம் எந்தத் தயக்கமும் இன்றி செல்வான், ஆனால் இந்தம் மாதிரி நேரத்தில் அதுவும் சிரமம் தான் சாருவை உண்டு இல்லை என்றாக்கி விடுவான்…


உறங்குகிறான் என்று பெட்டில் விட்டால் மீண்டும் ஒரு அழுகைப் போராட்டம்… வேறு வழியின்றி அவள் மடியிலேயே வைத்துக் கொள்ள, வசந்தாவிற்கு கூட சாருவைப் பார்த்து பரிதாபம் ஏற்பட்டது…


இரண்டு நேரமும் அறைக்கே சாப்பாடு வந்தும் அவளால் உண்ண முடியாது போக, வசந்தா புகழிற்கு செய்து திட்டி விட்டார்…


“ஏண்டா புள்ளையை விட வேலை முக்கியமா உனக்கு, இங்க வந்து பாரு, அவளை ஒரு வழி பன்றான்… யாருக்கிட்டவும் வரவும் மாட்டேங்குறான்… இன்னும் காலையிலிருந்து சாப்பிடக் கூட இல்லை… முதல்ல கிளம்பி வீட்டுக்கு வா…”


வசந்தா பேசிய அடுத்த அரை மணி நேரத்தில் மகனிடம் இருந்தான் புகழ். “யார் தூக்கியும் வரல, இவன் தூக்கினா மட்டும் வந்துடுவானா…? என்னமோ இவனைப் பார்த்ததும் தாவி வர்ர மாதிரி தான் எண்ணம்… ஹாஹா என் பேரன் இப்போ உனக்கு பல்பு கொடுக்கப் போறான் பாரு..” என மகனை சிவகுரு மனதுக்குள் கிண்டல் செய்ய,


புகழோ யாரையும் கண்டு கொள்ளாமல், அவசர அவசரமாக ஒரு குளியலைப் போட்டு விட்டு, வேகமாக வந்து மகனை அள்ளிக் கொண்டான்… எல்லாரும் ‘ஆ’ வென வாய் பிளக்க, சாருவோ அவனை ஒரு பார்வைப் பார்த்து விட்டு கால்களை நீட்டிக் கொண்டாள்…


சிவகுருவும், வசந்தாவும் அவனைப் பார்த்தது பார்த்தப்படியே இருக்க, அவனோ மகனைப் பரிசோதிப்பதில் கவனாமாயிருந்தான்… “மெடிசின் கொடுத்தியா…” என்றதும் இல்லை எனும் தலையாட்டல் பதிலாக வர, அப்போது தான் அவன் பெற்றோரைப் பார்த்தான். அவர்களது கேள்வியான பார்வையைக் கண்டதும் சிரிப்பு பொங்க சாரு முன் சிரித்தால் என்னாகுமோ என்று பயந்து, அவனும் அவர்களை கேள்வியாய் நோக்க, வசந்தா தான் வாய் திறந்தார்…


“எப்படிடா… உன் கிட்ட வந்துட்டான். நம்பவே முடியலயே,”


“என் பையன் என் கிட்ட வராம, வேற யார் கிட்ட போவான்… மம்மி மாதிரி பேசுங்க, டம்மி மாதிரி பேசாதீங்க…”


“பேசுடா… பேசு… எல்லாம் நேரம் தான்…” என்று மகனை முறைத்தவர். “ஜோதிக்கிட்ட இங்கேயே கொண்டு வர சொல்றேன். ரெண்டு பேரும் சாப்பிடுங்க… நீ ரொம்ப டயர்டாகிட்டியே, ரசம் சாதம் இல்ல மோர் சாதம் சாப்பிடுறியா…” சாருவைப் பார்த்துக் கூற அவளுக்கு ஒன்னும் விளங்கவில்லை, என்னிடமா… என்னிடமா கேட்டார் என்பதிலே நின்றிருந்தாள்….


அவளது அந்தப் பாவனை அவருக்கு என்ன உணர்த்தியதோ, “ரசம் சாதம் குடுத்து விடுறேன், சாப்பிட்டு கொஞ்சம் தூங்கு, அவன் பார்க்கட்டும்…” என பட்டும் படாமலும் சொல்லி சென்று விட, தந்தையும் மகனும் ஒருவரை ஒருவர் அர்த்தமாய் புன்னகைத்துக் கொண்டனர்…


சிவகுருவும் அவர்களுக்குத் தனிமைக் கொடுக்கும் பொருட்டு, கிளம்பி விட, அவர்கள் மூவர் மட்டுமே, சஷ்டித் தந்தையின் தோளில் இதமாய் உறங்கி விட, இருவருக்கும் பேச எத்தனையோ இருந்தும், எதுவும் பேசாமல் அமைதி காத்தனர்… சாரு எழுந்து ப்ரஷாகி வரவும், ஜோதி உணவுடன் வரவும் சரியாக இருந்தது…


அவனும் சாப்பிட வேண்டுமே என அவசர அவசரமாய் சாப்பிட்டு, சஷ்டியை வாங்கிக் கொள்ளப் போக, அவனோத் தூக்கத்தில் இன்னும் தந்தையுடன் ஒன்ற, என்ன செய்யவவென்றுத் தெரியாமல் திருதிருத்தாள்…


“இல்லை பசிக்கல, நீ படு…”


“மதியம் என்ன சாப்டீங்க..” மணி மூன்று தான் ஆகியிருந்தது. இன்னும் சாப்பிட்டிருக்க மாட்டான் என்று தோன்றியிருந்தது…


“இனிமேல் தான் சாப்பிடனும்னு நினைச்சேன்…. இன்னைக்கு ஒபி பிசி, டைம் கிடைக்கல…” மிகவும் அலுப்பாய் வந்தது அவன் வார்த்தைகள்…


“சாப்பிடாம ஏன் உடம்பைக் கெடுத்துக்குறீங்க, மார்னிங் சாப்பிட்டது, இப்போ வரைக்கும் எப்படித் தாங்கும்…”


“வர பேசன்ட பார்க்கும் போது பசியெல்லாம் தோன்றதே இல்ல… ம்ப்ச்..” ஜூஸ் மட்டும் கூட போதும்… ஜோதியைக் கொண்டு வரச் சொல்லு… சலிப்பாய் விழுந்தன வார்த்தைகள்….


அவனது முகத்தைப் பார்த்து என்ன நினைத்தாளோ, “உணவை அவளே எடுத்துக் கொடுத்தாள், அவன் அவளையும் உணவையும் மாறி மாறிப் பார்க்க, “என்ன… வேற கொண்டு வரச் சொல்லவா… இதுப் பிடிக்காதா…” என்றாள் தன் கையில் இருந்த சாதத்தைக் காட்டி,


மறுப்பாய் தலையசைத்தவன்ம் ஒன்னும் சொல்லாமல் தலையை நீட்டி உணவை தன் வாயால் வாங்கிக் கொண்டான், கொடுப்பது ஒன்றேக் கடமை என்பது போல் அவள் உணவை ஊட்ட, அவனோ முகத்தைத்தவிற வேறு ஒன்றையும் பார்க்கவில்லை, அதனால் இருவரிடமும் பேச்சற்ற மௌனங்கள். அவனுக்கு உணவை ஊட்டியவள் தண்ணீரையும் கொடுத்து, எல்லாவற்றையும் ஒதுக்கி வைத்து விட்டு, முதுகு காட்டிப் படுத்துக் கொண்டாள். அவள் ஏதும் கேட்பாள் என்று எண்ணியவன், ஒன்றும் பேசாமல் படுத்துக் கொள்ளவும் சொத்தென்று ஆனது… ஏன்..? இப்படி இருக்கிறாள், அவளுக்கு இங்கு இருப்பது பிடிக்காமல் இல்லை. நிச்சயம் பிடித்து இருக்கிறது, ஆனால் அவள் மனம் ஒட்டவில்லை… ஏன்..?ஏன்.. என்றுக் கேள்விகள் பல எழுந்தாலும், அதற்கான விடைகளும் அவனுக்குத் தெரியும் என்பதாலும், அதை அவன் தான் அவளுக்கு விளக்க வேண்டும் என்பதும் தெரிய, எப்படி பேச அவளையே பார்த்திருந்தான்…


நைனிடாலில் பார்க்கும் போதெல்லாம், முரட்டு ஜீன்ஸ் ஒரு டாப், அல்லது குர்தி இப்படித் தான் அவள் இருப்பாள் பார்மல் உடைகள் அணிந்துப் பார்த்ததில்லை… அவளது அந்த ஜீன்ஸ் டாப்பையும் பார்மல் போல் அணிந்திருப்பாள் அதுவே அவளுக்கு மரியாதையைக் கொடுத்திருக்கும்… இங்கு வந்த பிறகு அவள் உடை புடவையைத் தாண்டி வேறு இருந்ததில்லை, படுக்கும் நேரம் கூட அது தான். ஏன் என்றுக் கேட்க நினைத்தாலும் அவள் விபரீதமாகத்தான் பதில் கூறுவாள் என்பதும் தெரியும், அதோடு புடவை தான் ஒரு மனைவியை மிக மிக அழகாய் காட்டும் உடை என்பதும் புரிந்தது. அதனால் அவளை எந்தக் கேள்வியும் கேட்க அவனுக்குத் தோன்றவில்லை… எண்ணங்கள் அவளைச் சுற்றியே ஓட, அவள் கேட்ட கேள்வியில் திடுக்கென்று விழுந்தான். ஆனால் அவளது பார்வையில் எந்த மாற்றமும் இல்லை… அதே முதுகைக் காட்டி படுத்தல் தான்.. பதிலின்றி போக மீண்டும் ஒரு முறை படையெடுத்தது அதே கேள்வி…


“நான் கன்சீவா இருக்குறது உங்களுக்கு எப்போத் தெரியும்…”


இந்த நொடி இப்படியொருக் கேள்வியை அவன் எதிர்பார்க்கவில்லை போல, சாரு கணவனை நோக்கித் திரும்பிப் படுத்தாள். வாய் திறக்கவில்லை ஆனால் அதேக் கேள்வி அவள் கண்களில்….


“உனக்கு சிக்ஸ் மந்தஸ் இருக்கும் போது தெரியும்” முணுப்பாய் தான் அவன்…


“ஜெனி அண்ணி தான் சொல்லிருக்கனும், வேற யாரும் சொல்ல வாய்ப்பே இல்லை. கெல்வின் அண்ணா கண்டிப்பா சொல்லிருக்க மாட்டாங்க…” யோசனையாய் அவள்.


மீண்டும் சில நொடிகள் அமைதி. பின் ஒரு முடிவுடன் ஆரம்பித்தான் புகழ்…


உன்னோட பைவ் மந்த் ஸ்கேன் எடுக்கும் போது உன் கூட யாருமே இல்லாம் செக்கப் போயிருக்க, ஜெனிட்ட கூட சொல்லல போல. எல்லாம் முடிச்சுத் தான் சொல்லிருக்க, அப்போ ஜெனிக்கும் கொஞ்சம் ஹெல்த் பிராபளம் இருந்து ட்ரீட்மெண்ட் எடுத்தது உனக்குத் தெரியும் அதான் நீ அவளை கூப்பிடல… ஆனா அவளுக்கு ரொம்ப வருத்தம் நீ இப்படி செஞ்சது, அதுக்குப் பிறகும் நீ எல்லாரையும் விட்டு ஒதுங்கிப் போறது போலவே தான் நடந்திருக்க, அது அவ மனசுல பயத்தைக் கொடுத்திருக்கு.. இப்படியேப் போனா உங்க ரெண்டு பேரோட ப்யூச்சரும் என்னாகுமோன்னு பயந்து எனக்கு கால் பண்ணா, அப்போதான் எனக்கு, என்றவன், சொல்ல வந்த வார்த்தைகளை முழுங்கிவிட்டு, அப்போதான் நான் ஆஸ்திரேலியால இருந்து வந்து ஒன் வீக் ஆகிருந்தது. ஜெனி என்கிட்ட பேசனும் சொல்லவும், நானும் உன் கூட பேசனும் எங்க வரட்டும்னு கேட்டேன்.. நானே ஹாஸ்பிடல் வரேன்னு சொல்லி வந்தா…! ரொம்ப ரொம்ப தயங்கித்தான் என் கிட்ட எல்லாத்தையும் சொன்னா, கெல்வினுக்குத் தெரியக் கூடாது, உனக்கும் தான், தெரிஞ்சா சாரு மறுபடியும் எங்கேயும் போயிடுவான்னு சொன்னா…? அவளைத் தைரியப்படுத்தி இனி எல்லாத்தையும் நான் பார்த்துக்குறேன் நீ அங்கே நடக்குறதை மட்டும் சொல்லுனு சொன்னேன்…”


“எப்படியும் உன்னை ஒரு நாள் நான் தேடி வரனும்னு இருந்தேன். எல்லா பிரச்சனையும் முடிஞ்சு அதை செய்யலாம்னு இருக்கும் போது, ஜெனியே வந்து சொன்னதும் அடுத்த ஒரு செகண்ட் கூட வேஸ்ட் செய்ய விரும்பல உன்னையும், உன்னோட சர்கிள் எல்லாத்தையும் என் கண்பார்வைக்குக் கொண்டு வந்தேன்… அடுத்து உன்னோட ஒவ்வொரு செக்கப் டேட்டுக்கும் நான் அங்க இருந்தேன்… உன்னோட சோகம் நிறைஞ்ச கண்ணும், மெலிந்து போன உடலும் என்னை உயிரோட கொன்னுடுச்சு…”


“என்னை நம்பி என்னை நேசிச்ச ரீசனுக்காக அவளுக்கு நான் கொடுத்த தண்டனை எத்தனைப் பெரிசு, தாங்கவே முடியல, கடவுள் மேல அப்படி ஒரு கோபம். உன்னை என் கண்ல காட்டினதுக்கு, உன் மேல என் காதலை உருவாக்கினதுக்கு…”


“மம்மி இப்படின்னுத் தெரிஞ்சும், உன்னை… உன்னை நான் லவ் பண்ணிருக்கக் கூடாது…”


அவன் பேச, அவளிடம் எந்த அசைவும் இல்லை. ஆனால் பார்வை மட்டும் அவனிடம் தான்… அவன் உடல் இறுக்கியிருந்து, அடுத்துப் பேச சிரமப்படுகிறான் என்பது புரிகிறது அவளுக்கு…


மெதுவாய் அவன் விரல்களிம் மீது தன் கரத்தினை வைத்து மெதுவாய், மிக மெதுவாய் ஒரு அழுத்தத்தை கொடுக்கிறாள். பட்டென்று அவள் முகத்தைப் பார்க்கிறான்… அவள் அழுத்திய கையை எடுத்து தன் நெஞ்சோடு அழுத்திக் கொள்கிறான் கணவன்…


மீண்டும் பேச்சற்ற அதே மௌனம்… சஷ்டி லேசாக அசைய, அவனை தட்டிக் கொடுத்து மீண்டும் உறங்க வைத்தவன், மகனை வருடிய படியே, “சஷ்டி பிறக்கும் போது நான் அங்க தான் இருந்தேன்.. இவனை என் கையில் தான் முதல்ல வாங்கினேன்…” அவன்பேச்சில் படக்கென்று எழுந்தமர்ந்தாள்…


ஒரளவு இப்படி இருக்கும் என்று யூகித்திருந்தாள் தான், ஆனாலும் அவன் வாயில் இருந்து கேட்க, அவளது உணர்வுகள் எப்படி என புரிந்து கொள்ள முடியவில்லை அவனையே பார்த்திருந்தாள்…


“உன்னைத் தனியா விடனும்கிறது என் நோக்கம் இல்ல, உன்னோட உணர்வுகளுக்கு மதிப்பு கொடுக்கனும் நினைச்சு ஒதுங்கியிருந்தேன், ஆனால் சஷ்டியைப் பொருத்த வரைக்கும் அவனோட ஒவ்வொரு முக்கியமான தருணத்துலயும் நான் இருக்கனும்னு முடிவு பண்ணிதான் இதையெல்லாம் செய்தேன்…


“எனக்கு நான் செய்தது தப்பு இல்ல, அதைத் தப்புன்னு சொல்ல உன்னாலையும் முடியாது. நமக்கு இடையில் இருக்க பிரச்சனை, அது நமக்குள்ள மட்டும் தான் அதை சஷ்டி வரைக்கும் தெரிய விட முடியாது… இப்போவே எல்லாத்தையும் பேச வேண்டாம்.. தம்பிக்கு ஹெல்த் சரியாகட்டும், அம்மாவும் உன் கிட்ட இன்னும் கொஞ்சம் நல்லபடியாக நடக்கட்டும் உன்னோட கோபமும் குறைஞ்சு நீ என் மேல் நம்பிக்கை வச்சு யோசிக்க ஆரம்பிக்கும் போது நம்மைப் பத்தி பேசுவோம் என அவனே ஆரம்பித்து அவனே முடிக்க, சாரு தான் செய்வதறியாது திகைத்தாள்….


அவன் மேல் நம்பிக்கை வைத்தென்றால், அப்போது நான் அவனை நம்பவில்லையா…? நம்பாமல் தான் என்னை எந்த வித எதிர்ப்பும் இல்லாமல் அவனிடம் கொடுத்தேனா…?


கணவனது பேச்சில் அவளது எண்ணங்கள் எங்கெங்கோ சுத்த, அதைப் பார்த்தவன், “எனக்காக ஒன்னு செய்வியா…” என்றான் மொட்டையாய்,


“என்ன என்பது போல் பார்க்க, “எதையும் யோசிக்காமல் முதல்ல நீ கொஞ்ச ரெஸ்ட் எடு…” அப்புறம் பேசுவோம்… என்றதும்


“என்ன தான் வேனுமாம், அவனா பேசினான், அவனா போதுமென்றான், தலை தான் வெடிக்குது…” மனதுக்குள் புகைந்தவள், அவனைப் பார்க்க, அவனோ கட்டிலில் சாய்ந்திருந்தான் அவன் மடியில் சஷ்டி… கண்மூடியிருந்தான்… புருவம் சுருங்கி சிந்தனையில் இருப்பான் போல தெரிகிறது கணவனின் சோர்ந்த தோற்றம் என்ன செய்ததோ, அவளை அறியாமலே, அவனது புருவ மத்தியை நீவி விட ஆரம்பித்தாள்…. மனைவியின் செய்கையில் கண் திறந்தவன், அவளை அப்படியே இழுத்து தன் தோளில் சாய்த்துக் கொண்டான்…


சிறு நொடிக்குள் நடந்த நிகழ்வில் அவள் மனம் இறகாய் பறக்க, எந்த சங்கடங்களையும் முன் நிறுத்தாமல், அவளும் அவன் மேல் வாகாய் சாய்ந்து கண் மூடிக்கொண்டாள்… நிமிடங்கள் மணித்துளிகளாகிப் போக, ஏன் இன்னும் யாரும் கீழே வரவில்லை என்ற ஐயத்தில் சிவகுருவும் வசந்தாவும் மேலே வந்து பார்க்க, புகழ் கட்டிலில் கால் நீட்டி சாய்ந்திருக்க சாரு ஒரு பக்கம் தோளிலும் சஷ்டி ஒரு பக்கம் மடியிலும் என மூவரும் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தனர்…



தென்றல் திசை மாறும்..
 
Top