Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கரை சேர்ந்த ஓடங்கள் - 8

Advertisement

Vathani

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம் – 08
258








“திக்கெல்லாம் புகழுறும் திருநெல்வேலி” என சம்பந்தரும்,


“தண்பொருநைப் புனல்நாடு” எனச் சேக்கிழாரும்,


“பொன்திணிந்த புனல்பெருகும் பொருநைத்திருநதி” என்று கம்பரும் பாடிய புண்ணியபூமி ‘திருநெல்வேலி’…


ஆதிசேடன் இங்கு தவமியற்றி திருமாலுக்கு அணையாக இருக்கும் பேறுபெற்றதால் நாகணை ஏரி எனவும், மரங்கள் நிறைந்த வனமும் மலையும் சூழ்ந்த இடமாதலின் வானமாமலை எனவும், இங்குள்ள திருக்குளத்தை நான்கு எரிகளாக வெட்டியதால் நான்கு + ஏரி = நன்குநேரி எனவும், அந்த நான்கு ஏரிகளின் கூர்மையான முனைகள் சந்திக்கும் மையப்பகுதியில் அமைந்ததால் நான் + கூர் + நேரி என்பது காலப்போக்கில் நாங்குநேரி எனபேச்சு வழக்கான கிராமமும் அல்லாத நகரமும் அல்லாத அழகிய ஊர்தான் சாருவின் ஊர்…


நிலஅளவைப் பிரிவில் உயர் அதிகாரியாக பணியில் இருந்தார் சாருவின் அப்பா முரளி… கிராம நிர்வாக அலுவலக பணியில் இருந்தார் மனோகரி சாருவின் அம்மா… இருவருமே அரசு பணியில் இருக்க, சாரு அவளின் தாத்தா பாட்டியின் வளர்ப்பில் இருந்தாள்…


முரளியின் அம்மா ஒரு இசைப்பிரியை. அவரது குரலில் அந்த வீட்டில் எப்போதும் பாடல் ஒலித்துக் கொண்டே இருக்கும்… முரளியும் மனோகரியும் நாகர்கோவிலில் பணியில் இருக்க, குழந்தையோடு அவர்களது நேரம் குறைவே, ஆனால் வார இறுதி நாட்காளில் வீடே கலகலப்பாக இருக்கும்… மாமியார் மருமகள் என்ற பாகுபாடே வந்ததில்லை இருவருக்கும்…


ஆண்களுக்கும் அதுதானே தேவையாய் இருந்தது… வீட்டில் மகிழ்ச்சியும் நிம்மதி மட்டுமே எப்போதும் ஆட்சி செய்தது… மனோகரிக்கு ஒரே ஒரு அண்ணன் மட்டுமே, அவரும் தங்கையின் குடும்பத்தில் மிகவும் பாசமாக தான் இருந்தார்… சாருவின் மூன்றாம் வயதில் மொட்டையிட்டுக் காது குத்தி என மிகவும் விசேஷமாய் கொண்டாடியிருந்தனர். அந்த நேரம் தான் மனோகரிக்கு திருச்சிக்கு வேலைமாறுதல்வந்தது…


என்ன செய்ய என்ற புரியாத நிலை, ‘கணவர், குழந்தை வயதான மாமனார் மாமியார் இவர்களை விட்டு எப்படிச் செல்வது’ என்று குழப்பமான நிலையில் இருந்தார் மனோகரி…



“என்னப்பா செய்ய, எனக்கு குழப்பமா இருக்கு, வேலைதான் வேணும்னு முடிவு செய்தா, நான்ஒருசுயநலவாதியாஆயிடுவேன். அதோட உங்களை எல்லாம் விட்டுட்டு என்னால கண்டிப்பா தனியா இருக்க முடியாது… என்னதான் நாம தினமும் நாகர்கோவில் வரை போயிட்டு வந்தாலும், சாயங்காலம் வீட்டுக்கு வந்து, அத்தைக் கையால ஒரு காபி, மாமா சொல்ற நாட்டு நடப்பு, நம்ம குட்டிப் பொண்ணு சொல்ற சொப்பு சாமான் கதை இதெல்லாம் நம்ம அலுப்பை அப்படியே தூக்கி சாப்பிட்ரும். அங்கப் போயிட்டா, இதுக்காகவும், உங்க எல்லாருக்காவும் நான் ரொம்ப ஏங்கிப் போயிடுவேன்…” அன்றைய இரவில் முரளியின் தோளில் சாய்ந்தபடியே கூறிய மனைவியை அனைத்துக் கொண்டவர்…


“எல்லாருக்காகவுமா..? இல்லை எனக்காக மட்டுமா…? இந்தக் கொஸ்டீனுக்கு ஆன்சர் பண்ணு, நான் நீ முடிவு எடுக்க ஹெல்ப் பன்றேன்…” என கணவனாய் அவளைச் சீண்ட, “ஏய் சும்மா இருங்கப்பா, மறுபடியும் ஆரம்பிக்காதீங்க, நானே பெரும் குழப்பத்துல இருக்கேன், அண்ணா சொல்றான் இந்த வேலைதான் உன்னோட அடையாளம் விடாதேன்னு, ஆனா அவனுக்கு என்ன தெரியும் என் குடும்பம் தான் என்னோட அடையாளம்னு…” மனோகரியின் குரலில் எல்லையில்லா நிறைவு இருந்தது…


மனைவியை மீண்டும் ஒருமுறை இறுக அணைத்தவர், “மனோ… நாம இதைப் பத்தி நிறைய பேசிட்டோம், ஆனாலும் இப்போ சொல்றது என்னோட கடமை, ‘அப்பாவுக்கும் அம்மாவுக்கும் கிட்டதட்ட பதினஞ்சு வயசு வித்தியாசம். அப்பாவை மேரேஜ் செய்யும்போது அம்மாவுக்கு பதினாறு வயசுதான்… அப்பாவுக்கு ஒரு சங்கடமான நிலை, ஆனா அம்மா விரும்பிதான் கல்யாணம் செய்துக்கிட்டாங்க. அதானல அப்பாவும் ஒத்துக்கிட்டு ஒரே ஒரு கண்டிசன் போட்டாங்க, அது யார் என்ன பேசினாலும், அம்மாவோட இருபது வயசுல தான் குழந்தை பெத்துக்கனும்னு, அதுவரைக்கும் படிக்கனும் சொல்லிருக்கார்…”


“அம்மாவும் தயங்காம ஓகே சொல்லிருக்காங்க, மேரேஜ் முடிஞ்சு கொஞ்ச நாள்லயே அம்மாவுக்கு ரொம்ப பிடிச்ச இசையை படிக்க வச்சுருக்கார் அப்பா… அதுவே அம்மாவுக்கு அப்பாமேல அன்பு அதிகமாக காரணமாகிருக்கு, அவர்மேல உயிராவே மாறிட்டாங்க, அவரோட கண்ணசைவில் அம்மா அவரோட வேலையை முடிப்பாங்க…”


“இப்படியே எல்லாம் நல்லாதான் போயிருக்கு, ஊருக்குள்ள பேசுறவங்க, சொந்ததுல பேசுறவங்கன்னு எல்லாரும் பேசிக்கிட்டேதான் இருந்துருக்காங்க, ஆனா, அம்மாவும், அப்பாவும் எதையும் கண்டுக்கவே இல்ல, அதுக்கு புல்சப்போர்டிவ் அப்பாவோட அம்மா என்ஆச்சி… அவங்க கொடுத்த அதே தைரியம்தான் இப்போ உனக்கு அம்மா கொடுக்குறது…


“அம்மாவோட படிப்பு முடிய, அப்பா சொன்ன அந்த டைமும் வர, ரெண்டு பேரும் ரொம்ப ஆவலா குழந்தையைப் பத்தி யோசிச்சாங்களாம், அவங்க ஆர்வத்திற்கு ஏற்றார்போல முதல்குழந்தை உண்டாகிருக்க, வீடே கொண்டாடிச்சாம், ஆனால் அது நாலுமாசக் கருவாகவே கலைஞ்சிருக்கு. அதைத் தொடர்ந்து இரண்டு முறைக் கரு உண்டாகி அதுவும் கலைஞ்சிட, டாக்டர், இனி குழந்தைப் பிறக்காதுன்னு சொல்லிருக்கார்…


ஒரு பொண்ணோட நிறைவே அவ தாய்மை அடையறதுதான். அப்படின்னு அம்மாவா நினைச்சு, யாரைப்பத்தியும் யோசிக்காம, தன்னால இனி குழந்தைப் பெத்துக்க முடியாது அப்படின்ற விரக்தியில் கிணத்துல குதிச்சு தற்கொலை செய்துக்கப் போயிருக்காங்க… எப்பவும் அம்மாமேல ஒரு கண் வச்சுட்டே இருந்த அப்பா, சரியான நேரத்துல காப்பாற்றிட்டார்….


பாட்டியைத் தவிர யாருக்கும் தெரியவிடல, அம்மாவுக்கு வெளியூர்ல போய், அங்கேயேத் தங்கி வைத்தியம் பார்க்கலாம்னு தாத்தாக்கிட்டப் பேசி சம்மதம் வாங்கி, அப்பாவோட வேலையை பணம் கொடுத்து சண்டிகருக்கு மாத்தி அங்கேயே வீடு பார்த்து ரெண்டு பேரையும் விட்டுட்டு வந்தாங்க… கொஞ்சநாள்ல மறுபடியும் வந்தப்பாட்டி அம்மாகிட்ட பிறந்த குழந்தை ஒன்றை தத்தெடுத்துக்கலாம் யாருக்கும் தெரியாம பண்ணிக்கலாம், இதுகூட பின்னாடி உன்னை யாரும் ஒன்னும் சொல்லிடக்கூடாதுன்னு தான் சொல்றேன்… இல்லைன்னா பகிரங்கமாவே குழந்தையைத் தத்தெடுக்கலாம். முடிவு உன் கையலன்னு சொல்லிருக்காங்க…”


“எந்த ஒரு மாமியாரும் செய்யாத ஒரு செயலை பாட்டி செய்யறேன்னு சொன்னதும் அம்மாவால நம்பவே முடியல, “என் அம்மாகூட எனக்காக இப்படி செய்வாங்களாத் தெரியாது… நீங்க எனக்கு செய்றீங்க. இதுக்கு நான் தகுதியானவள் இல்லை… நான் வேணும்னா அவர் வாழ்க்கையில் இருந்து விலக்கிறேன், நீங்க வேற ஒரு பெண்னைக் கட்டிவைங்க, இந்தக் குடும்பத்துக்கு என்னால, வாரிசு இல்லாம போகக்கூடாது… சொல்லிட்டுஅம்மாஅழவும்..”


“அப்பா ஒரே அறைதான், நான் என்ன செய்யனும்னு நீ சொல்ல வேண்டாம்னு கத்திட்டு, பாட்டியைப் பார்த்து எனக்கு குழந்தையே வேண்டாம். இந்த ஜென்மத்துக்கு இவ மட்டும் போதும்னு சொல்லிட்டு வெளியே போயிட்டாராம்…


அதுக்குப் பிறகு நடந்து தான் ட்விஸ்ட அதுவரை அழகாய் கவிதைப் போல் ரசித்து தன் குடும்பக் காவியத்தைச் சொன்ன முரளி, இடையில் நிறுத்தி விட்டு சிரிக்க, “ஹேய்… வேணாம், நான் மாமாக் கிட்ட சொல்லிடுவேன், நீங்க ஓவரா கலாய்க்கிறீங்க அவரை…” எனக் கணவனை மிரட்டிப் பேசினாலும் அவளுக்கும் சிரிப்புத்தான்.


“பின்ன எதுக்கு உங்க மாமானாருக்கு இவ்ளோ வீராப்பு…” என்று மீண்டும் சிரிப்பு…


“அப்பா அப்படி பேசிட்டுப் போனதும், அம்மாவுக்குள்ள ஒரு தெளிவு என்னதான் நடந்தாலும் இந்தக் குடும்பவாரிசை நான் இவங்களுக்கு கொடுக்கனும்னு ஒரு வெறியே வந்திட்டு போல, பாட்டிக்கிட்டசொல்லி, அவங்களை சமாளிச்சு அப்பா இல்லாமலே அந்த ஊர்ல விசாரிச்சு, பெரிய ஹாஸ்பிடல்ல போய் மறுபடியும் செக் பண்ணிருக்காங்க, அந்த டாக்டர்ட்ரை பண்ணலாம்னு தான் சொல்லிருக்கார்.”


“ அதுவே அம்மாவுக்கும் போதும் போல இருந்துருக்கு. அதுதான் இந்த தண்ணில மூழ்கிப்போறவனுக்கு, ஒரு மரக்கட்ட கிடைச்சா எவ்வளவு சந்தோசப்படுவானோ அதுமாதிரி பீல் அவங்களுக்கு, ஆனா அப்பாக்கிட்ட சொல்ல பயம், பாட்டியும் ஹெல்ப் பண்ணமாட்டேன்னு சொல்லிடாங்களாம். உயிருக்கு எதுவும் ஆபத்து வந்துடுமோனு, எந்த முட்டாள்தனமும் செய்யக்கூடாதுனு பாட்டி சத்தம் போட்டுட்டு இங்க ஊருக்கு வந்துட்டாங்க…”


“ஆனா அம்மா எதையும் பத்திக் கவலைப்படாம ட்ரீட்மென்ட் எடுத்துட்டு சிக்ஸ் மந்த்ஸ் வரைக்கும் யாருக்கிட்டையும் சொல்லல, சடனா பேடாகவும், அப்பா ஏன் இப்படி உடம்பு போடுற என்னன்னு துருவிக் கேட்கவும் தான் சொல்லிருக்காங்க பயந்துகிட்டே, ஆனால் அப்பாவோ எதுவுமே சொல்லலயாம், உடனே வேலையை விட்டுட்டு இங்க வந்துட்டாராம், அம்மாவையும் கூப்பிட்டு, அவர்மேல இருந்த பாசம்தான் அவங்களை அப்படி செய்யவச்சது… அதுக்கு மரியாதைக் கொடுக்கனும் இல்லையா, அதான் வேலையை தூக்கிப் போட்டுட்டு, தாத்தாவோட தொழிலை பார்த்துக்கலாம் அப்படின்ற முடிவோடு வந்துட்டார்…”


பாட்டிக்கும் தாத்தாவுக்கும் அம்மா மேல மரியாதை அதிகமாகி கண்ணுக்குள்ள வச்சுப் பார்த்துட்டாங்க, குழந்தைப் பிறக்கும் போது அம்மாவை விட அவங்க மூனு பேருதான் அவ்வளவு கஷ்டப்பட்டாங்களாம்... ஆனா என்னக் கஷ்டப்பட்டு, என்ன குழந்தைப் பிறக்கும் போதே இறந்தே பிறந்துச்சாம்… அம்மாவுக்கு மயக்கம் தெளியல, டாக்டர் தாத்தாக்கிட்ட தான் முதல்ல சொல்லிருக்கார், அவரை மத்தயாருக்கிட்டையும் சொல்ல வேண்டாம்னு சொல்லிட்டு, அப்பாவையும் கூப்பிட்டு தனியா சொல்லிருக்கார்…

இடிஞ்சேப் போயிட்டாராம், இனி அம்மாவை எப்படி பார்த்து அவங்களை எப்படி சமாளிக்கன்னு ஏகப்பட்ட பயம் அவருக்கு, ஆனா தாத்தா டாக்டர் கிட்டப் பேசி, குழந்தையை ரெண்டு நாள்

இன்குபேட்டர்ல வைக்க சொல்லி கெஞ்சிருக்கார் அதே போல அம்மாவையும் டூடேஸ் மயக்கத்திலேயே வச்சிருக்காங்க, பாட்டியைத் துணைக்குவச்சுட்டு, தாத்தாவும், அப்பாவும் தெரிஞ்ச ஆஸ்ரமம், ஹாஸ்பிடல் எல்லாம் போய் பிறந்த குழந்தை இருக்கானு கேட்டு அலைஞ்சுருக்காங்க…”


“மூணாவது நாள் காலையில குலசைக் கோவில்ல பிறந்து ரெண்டு நாள் ஆன குழந்தை கோவில் வாசல்ல இருக்குன்னு தெரிஞ்சு அங்க போய் அவங்க கிட்ட பேசி அந்தக் குழந்தையை எந்த வில்லங்கமும் இல்லாமல் கொண்டு வந்துருக்காங்க… டாக்டர் அதுக்குப் பிறகுதான் எல்லார்க் கிட்டையும் காட்டியிருக்கார்… பாட்டிக்கிட்டயே அதுக்குப் பிறகுதான் சொல்லிருக்காங்க…”


“அப்பாவுக்கு என்னன்னா அம்மாவுக்கு எந்த கஷ்டமும் வந்துடக்கூடாது அப்படிங்கற எண்ணம் தவிர வேற எதுவுமே அப்போ இல்லை… தாத்தா சொன்னதை அப்படியே செஞ்சுருக்கார் அம்மாவுக்கோ சொந்தகாரங்களுக்கோ யாருக்குமேத் தெரியாம பிறந்த அந்தக் குழந்தைக்கு ஈமச்சடங்கு செய்துருக்காங்க… ஒரு துக்கம் நடந்தது வெளியத் தெரியாம பார்த்துக்கறது எவ்வளவுக் கஷ்டம் தெரியுமா…?”


“அம்மாவுக்காக அதையும் செய்தாங்க… எங்கையோ ஒரு மூலையில் அநாதையா சாப்பிட வழி இல்லாம, திருடனா, பிச்சைக்காரானா இருந்துருக்க வேண்டிய என்னை, இந்தக் குடும்பத்து வாரிசாய், ஒரு மரியாதையான மனிதனாய் என்னை மாத்தின இவங்களுக்காக நான் என்ன செய்யமுடியும்…? அவங்களோட ஒரு சிறுசெயல்ல கூட நான் இந்தக் குடும்ப வாரிசு இல்லைன்னு காட்டியதே இல்லை, எவ்வளவு பெருந்தன்மையான மனிதர்கள்… என்னோட பதினெட்டு வயசுல இந்த உண்மையை என்னோட அப்பா என்கிட்ட சொன்னார்…”


“ஆனா அதுக்கு முன்னமே பாட்டியும் தாத்தாவும் இறந்துட்டாங்க, அவங்க இறக்கும் கடைசி நிமிசத்துல கூட இதை சொல்லவே இல்லை, அவங்க உயிரா தான் என்னை நினைச்சாங்க…”


“நான் காலேஜ் லைப்க்கு போறேன், என்னோட வழி தடம் மாறிடக்கூடாதுன்னு இதெல்லாம் அப்பா சொன்னார். ஆனா இன்னுமே இந்த விசயம் அம்மாவுக்குத் தெரியாது… அவங்க காலம் முடியற வரைக்கும் இந்த உண்மை அவங்களுக்குத் தெரியவேக் கூடாதுன்னு நினைச்சோம் நானும் அப்பாவும்…”


சில நிமிடங்கள் அமைதியாய் போனது, முரளிக்கும் இதையெல்லாம் சொன்னதும் மனம் பழையதிற்கு சென்றுவிட்டது போல.. கண்கள் மூடியிருந்தான் அவனை இயல்புக்கு கொண்டு வரும் பொருட்டு…


“யாருக்குமேத் தெரியாத இவ்வளவு பெரிய உண்மையை, முதல் நாள் பார்த்த என்கிட்ட எப்படி சொன்னீங்க? நான் எத்தன தடவைக் கேட்டேன் சொல்லவே இல்லை கணவனின் மீசையைப் பிடித்து இழுத்தப்படியே, சிணுங்கியக் குரலில் மனோ கேட்க,


“ம்ச்… விடுடீ எப்போ பாரு மீசையைப் பிடிச்சு இழுக்குறது கோபம் வந்தாலும் மீசையை பிடிக்குறது, கொஞ்சினாலும் மீசையைப் பிடிக்குறது. உன்கிட்ட என் மீசை படாதபாடு படுது… பர்ஸ்ட் மீசையை எடுக்கனும்…” என்றபடியே அவளது இடையை வளைக்க,


“ஓகோ… நான் கொஞ்சுறது சாருக்கு ரொம்பவும் கஷ்டமா இருக்கு போல, சரிதான்.. உங்க மீசை, நீங்க எடுங்க, என்னவோ பண்ணுங்க… பட் குட்டிமான்னு பக்கத்துல வந்துடக்கூடாது ரைட்…” என்று இடையை வளைத்த கைகளை தட்டிவிட்டு இவள் முறுக்க, அவன் வளைக்க, என சிறுகாதல் போராட்டம், மீண்டும் கணவனின் கைகளில் வாகாய் அவள்…


“ம்ம் சொல்லுங்கப்பா ப்ளீஸ்…”


“என்ன சொல்ல… நீதான் பொண்னுனு உன்னைப் பார்க்க வரவரைக்கும் எனக்குத் தெரியாது, ஆனா அப்பா அம்மா இல்லாத பொண்ணா வசதின்னு எதுவும் இல்லாம இருக்கனும், பணம் நகைனு எந்த சீரும் கொண்டு வரக்கூடாடதுன்னு சொன்னேன் இப்படி இருக்குற எந்தப் பொண்ணா இருந்தாலும், நீங்க சொன்னா போதும் நான் பார்க்காமலே தாலிக் கட்டுவேனு அம்மாக்கிட்ட சொன்னேன்…”


“ஆனா இந்தப் பொண்ணு பிடிக்கல, சரியில்ல இப்படியெல்லாம் சொல்லி, சும்மா சும்மா பொண்னு பார்க்க என்னைக் கூப்பிடக்கூடாது… ஷோகேஸ்ல வைக்குற பொம்மை மாதிரி இல்லாம பாருங்கன்னும் சொன்னேன்….”


“அம்மா வழி சொந்தம்னு தெரியும், ஆனா எங்கேயும் பார்த்ததே இல்ல உன்னை... உன் அண்ணனைப் பார்த்திருக்கேன், அடிக்கடி வள்ளியூர்ல..”


“ம்ம்.. லீவ்ல அங்க இருக்க பசுபதி கேக் ஷாப்ல வேலைக்கு போவான்.. நான் படிக்கணும்னு என்னை எங்கேயும் விட்டதில்ல... அதோட பெத்தவங்க இல்ல... வசதியும் இல்ல.. எந்த சொந்தமும் சேர்த்துக்கல... அதனால நாங்களே ஒதுங்கிட்டோம்.. அவங்க எல்லார் முன்னாடியும் என்னை நல்லாப் பார்த்துக்கணும்னு வெறி அவனுக்கு...


“ம்ம் புரியுது… பணம் தான் ஒருத்தரோட குணங்களை தேர்வு செய்யுது… மக்கள் பணம் பணம்னு அது பின்னாடியே ஓடிட்டு இருக்காங்க, என்ன செய்ய…”


எனக்கு உன்னைப் பார்த்ததுமே பிடிச்சது. அதோட “நீயும் முன்னேறத் துடிக்குற ஒரு பெண், ஒதுக்கப்பட்ட சமூகத்துக்கு முன்னாடி துடிப்போட ஜெயித்துக்காட்ட போராடுற பெண்” இப்படித்தான் உன்னைப் பத்தி என்கிட்ட அம்மா சொன்னாங்க, அவங்க சொன்னதும் உண்டான ஆர்வம் எனக்கு உன்னை பார்த்தே ஆகனும் அப்படிங்கற ஒரு உணர்வைத் தீயா உருவாக்குச்சு…”


“நாங்க உன்னைப் பார்க்க வந்த நாள் ஞாபகம் இருக்கா, அன்னைக்கு எதேச்சையா தான் நீயும் உன் அண்ணனும் பேசுறதைக் கேட்க நேர்ந்தது… உன் கோபமானப் பேச்சுத்தான் என்னை நிறுத்தியது… அப்போதான் இரவல் நகையை வாங்கிட்டு வந்த உன் அண்ணனை லெப்ட் ரைட் வாங்கிட்டு இருந்த, அந்த ஒரு நிகழ்வுதான் உன்னை எனக்கானவன்னு முடிவு பண்ண வச்சது.. அதுவரைக்குமே பார்த்துட்டு போகலாம் என்ற முடிவோட தான் வந்தேன். “


“ஆனால் அதற்குப்பிறகு அம்மாக்கிட்டையும், அப்பாக்கிட்டையும், நிச்சயம் பண்ண தேதி குறிச்சிடுங்கன்னு முடிவா சொல்லிட்டேன்…. கண்டிப்பா என்னைப் பத்தின உண்மைகளை சொன்னா நீ வேண்டாம்னு சொல்லமாட்டேன்னு நம்பினேன் இருந்தாலும் உன்கிட்ட சொல்லி முடிச்சுட்டு நீ பதில் சொல்ற டைம் வரைக்கும் உள்ளுக்குள்ள பக்குபக்குனு இருந்தது. எனக்குத்தான் தெரியும் ஒரு போராட்டமே நடந்து முடிஞ்சிடுச்சு…” என்று அந்தநாள் நினைவிற்கு சென்ற முரளியின் கைகள் மனோகரியின் இடையை இறுக்கியிருந்தது…


சில நொடிகளுக்குப் பிறகு மனோகரியே ஆரம்பித்திருந்தாள், நீங்க வரீங்கன்னு சொன்னதும் எனக்கு பெரிசா எந்த பீலிங்கும் வரல, வசதியானவங்க ஏன் ஒன்னும் இல்லாத நம்மளை சூஸ் பண்ணாங்கன்னு தான் எனக்கு யோசனை ஓடிச்சு, அந்த யோசனையில் இருக்கும்போது தான் அண்ணன் நகைகளை வாங்கிட்டு வந்தது, எனக்கு சரியான கோபம். இந்த நகையெல்லாம் என்னோடதுனு வந்தவங்க நம்பிட்டா என்ன பன்றதுனு வேற ஒரு பதட்டம், அதெல்லாம் சேர்ந்துதான் அவனைத் திட்டியது… அதைத்தான் நீங்க கேட்டிருப்பிங்க…”


“கொஞ்ச நேரத்துல அண்ணன் வந்து நீங்க பேச வரீங்கன்னு சொன்னதும் பயத்துல நடுக்கமே வந்துட்டு, யாருமே இப்படியெல்லாம் செய்ததே இல்லையே, புதுசா நடக்குற மாதிரி பீல் நீங்க, எப்படி ரியாக்ட் பன்னனும்னு கூட தெரியல…” என்றவளின் முகத்தைத் தன் மார்பில் சாத்தி அழுத்திக் கொண்டான்.


அது ஒரு இலை துளிர்

காலம் பச்சை நிற உடையில்

காட்சியளிக்கும் மரத்தின் கீழே

நாம் இருவரும் மௌனமாக அமர்ந்திருக்கிறோம்

மரக்கிளையில் ஜோடி கிளிகள்

காதல் மொழியில் பேசிக்கொள்கிறது.
 
அருமையான மாமனார் மாமியார்
முரளியின் அம்மாவுக்கு
சாருவின் அம்மாவுக்கும்
 
Top