Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

சிவப்பிரியாவின் கள்வனே கள்வனே - 3

Advertisement

Priya

Well-known member
Member
கள்வன் - 3

பல தரப்பட்ட மக்களை தன்னுள் ஈர்த்துக்கொண்டும், பலரின் துயரை நீக்கி களிப்பு அளித்தும் அதே சமயம் பலருக்கு கிலியை ஏற்படுத்திய அந்த நெடிய கட்டிடத்திற்குள் நுழைந்தனர் இனியாவும், ரமேஷும். ரமேஷ் ஏனாதானோவென மெதுவாய் நடந்து வர, இனியா முன்னேறி அங்கிருந்த வரவேற்பறையில் தனக்கு தேவையான விவரங்களை சேகரித்துக் கொண்டு தந்தையுடன் சேர்ந்து கொண்டாள்.

“அப்பா கூட்டம் குறைவாகத் தான் இருக்கிறதாம். சீக்கிரமே காண்பித்துவிடலாம்.” என்று செய்தி சொல்ல, எதிர் வருபவர்களுக்கு வழி விட்டு ஏ.ஆர் ஹாஸ்பிடல் மாடிப் படிகளில் ஏறினர் இருவரும்.

முதல் தளத்தில் தாங்கள் பார்க்க வேண்டிய மருத்துவர் இருக்கும் அறையை நோக்கி நடைபோட, இனியாவின் கண்கள் அத்தளத்தின் நடுவே ‘அஜய்ரத்னம், எம்.டி. நரம்பியல் நிபுணர் மற்றும் உளவியலாளர்.’ என்ற பெயர்பலகை தாங்கி நின்ற சற்று பெரிய அறையின் புறம் சென்றுவிட்டு மீண்டது.

“என்ன பாப்பா?” அவளின் விழி சென்ற திசையை கவனித்துக் கேட்டார் ரமேஷ்.

“அப்பா… அவர்… அந்த டாக்டர் அஜய்ரத்னம். ஹீ இஸ் எ ஜெம் ஆப் பெர்ஸன். அவர் இங்கு தான் பார்க்கிறார் என்று இப்போது தான் தெரிகிறது.” என்றவள் குரலில் அளவில்லா ஆவல், பிரமிப்பு, பெருமை, பேரின்பம்.

“அப்படி என் பொண்ணு புகழ்ந்து தள்ளும் அளவிற்கு என்ன செய்துவிட்டார் அவர்?”

“எங்கள் டீம் மாதம் ஒருமுறை ஒவ்வொரு ஆசிரமம் போவோமே அப்பா அங்கு தான் இவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆதரவற்றவர்களுக்கு ஆதரவான வார்த்தைகளை மனதில் விதைத்து அவர்கள் தொய்ந்து போகாதபடி சொற்பொழிவாய் இல்லாமல் ஒரு சின்ன கலந்துரையாடல் போல் நடத்துவது தான் இவரின் சிறப்பு. மேலும் தவறான பாதையில் செல்லும் பதின்பருவத்தினர் முதல் முதியவர்கள் வரையும் இவரின் சிகிச்சையை நாடுவர் பலர். இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் வசதி இல்லாதவர்களுக்கு இலவச ஆலோசனையும் வழங்குகிறார். இந்தக் காலத்தில் அது எவ்வளவு பெரிய விஷயம்.”

“ஹோ… நல்ல மனிதர் தான்…” என்றவர் அதற்கு மேல் பெரிதாய் அலட்டிக் கொள்ளவில்லை.

தனக்கு உள்ள ஆவல் தன் தந்தையிடம் இல்லாததை கவனித்து அப்பேச்சை நிறுத்தினாள் இனியா.

சிறிது நேரத்திலேயே அவர்கள் முறை வர, மருத்துவரிடம் தேவையான ஆலோசனை மற்றும் மருந்துச் சீட்டு பெற்று கீழ் தளத்தில் இருக்கும் மருந்தகம் நோக்கி முன்னேற,

“மிஸ். இனியா,” என்ற குரல் தடுத்து நிறுத்தியது.

இருவரும் திரும்ப, சற்று முன் யாரை உயர்த்தி தன் தந்தையிடம் பேசினாளோ அவனே நேரில் நின்றான். நெடுநெடுவென வளர்ந்த ஆறடி உயரம், சுண்டிவிட்டால் செம்மை பூசிக்கொள்ளும் மேனி, உயரத்திற்கு ஏற்ற எடை, பார்த்தவுடன் வசீகரிக்கும் முகம் இது அனைத்தையும் இன்னும் மெருகேற்ற நேர்த்தியான ஆடை என்று அவனின் ஒவ்வொரு அங்கமும் அவனின் மீதான மதிப்பை கூட்டியது.

“அஜய் சார்… ஹாப்பி டூ சீ யு ஹியர்.” என்று இனியா மகிழ்ச்சியை வெளிப்படுத்த சடுதியில் எதிரில் இருப்பவனை யார் என்று யூகித்துவிட்டார் தந்தை. அவனைக் கண்டதும் அவர் கண்ணில் ஒரு மெச்சுதல் வந்து போனதோ என்னவோ? ஒரு முப்பது முப்பத்தோரு வயதிருக்கும் என்று அவர் மனம் கணித்தது.

“ஹாஹா… ஹாஸ்பிடல்ல பார்த்ததிற்கு ஹாப்பின்னு சொல்றது கொஞ்சம் காண்ட்ராஸ்ட்டா இருக்கு.” என்றவன் பார்வை ரமேஷ் புறம் திரும்ப,

“இவர் என்னுடைய அப்பா, ஆங்கிலப் பேராசிரியர். அப்பா, இவர் தான் மிஸ்டர். அஜய்ரத்னம், இப்பொது சொன்னேனே…” இனியா அறிமுகப் படலம் நிகழ்த்த,

அஜய் தன் அறையை கைகாட்டி, “உள்ளே வாங்க சார்… நீங்கள் கண்டிப்பாக ஜூஸ் குடித்துவிட்டு தான் செல்ல வேண்டும்.” என்று அழைத்தான்.

“பரவாயில்லை சார்… உங்களுக்காக பேஷண்ட்ஸ் காத்திருப்பாங்க… இன்னொரு நாள் பார்க்கலாம்.” என்று ரமேஷ் தன்மையாய் மறுக்க அவன் விடுவதாய் இல்லை.

“இன்று இரவு தான் எனக்கு டியூட்டி. இப்போது ஒய்வு தான். நீங்கள் வாங்க சார்… மிஸ். இனியா என்ன அமைதியா இருக்கீங்க? சார்ட்ட சொல்லுங்க… இவ்வளவு தூரம் என் ஹாஸ்பிடலுக்கு வந்துவிட்டு இப்படி யாரோ போல் போவதா?” என்றவன் குரலில் உரிமை தூக்கலாக இருந்ததோ என்னவோ?

“உங்கள் ஹாஸ்ப்பிடலா?” என்று ஆச்சர்யத்துடன் கேட்டாள் இனியா.

“நாட் எ பிக் டீல். ஏ.ஆர்- Ajay Ratnam.” என்று சாதாரணமாய் தோள்களை குலுக்கிக் கொள்ள, அவனின் பகட்டில்லா எளிமையான செயலில் தந்தை, மகள் இருவருமே கிளீன் போல்ட்.

ரமேஷ் தலை தானாக அவனின் வரவேற்புக்கு ஆட, அவன் பின்னே இருவரும் அவன் அறைக்குள் நுழைந்தார்கள். அறை இருட்டாக இருக்க, ஸ்விட்சை தட்டி ஒளிர்வித்தவன் ஏ.சி யையும் போட்டுவிட்டு இருவரையும் அங்கிருந்த பார்வையாளர் இருக்கையில் அமரச் சொல்லி தானும் தன் சூழல் நாற்காலியில் அமர்ந்துக் கொண்டான்.

“மிஸ். இனியாவை ஆசிரமத்தில் பார்த்து பழக்கம்…” என்று அஜய் பேச்சை ஆரம்பிக்க ரமேஷ் பிடித்துக் கொண்டார்.

“உங்களை பற்றி பாப்பா சொன்னா… ஆதரவற்றவர்களுக்கு ஆதரவான வார்த்தைகள் தான் வாழ்க்கையின் தூண்டுகோள். நான் கூட அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்துக் கொள்வேன். ஆனால் எங்கே… வேலையில் மூழ்கினால் மற்றது மறந்துவிடுகிறது. விடுமுறை வந்தால் அக்கடாவென்று படுத்துக்கொள்ளத் தான் உடம்பு வேண்டுகிறது.” என்று தன் வருத்தத்தை இறக்கி வைத்தார் ரமேஷ்.

“ஆமாம் சார்… ‘குஞ்சிகள் மிதித்த கோழிகள் இங்கே அடைகாக்கப் படுகின்றன’ என்ற வாசகத்தை ஒரு முதியோர் இல்ல வாயிலில் படித்தேன். அதிலிருந்து ஆரம்பித்தது தான் எல்லாம்.

தன் ஆசைகளைத் விட்டுக்கொடுத்து தன் பிள்ளைகளின் ஆசையை நிறைவேற்றும் பெற்றோரை தவிக்கவிட எப்படி பிள்ளைகளுக்கு மனம் வருகிறது என்று புரியவில்லை. முதியோர்களுக்கு மட்டுமில்லாது அவர்களின் பிள்ளைகளையும் கூப்பிட்டு பேசுவேன். சிலர் நான் கொடுக்கும் குறிப்புகளில் மனம் திருந்தி பெற்றோரை அழைத்துச் சென்று தங்களுடன் வைத்துக் கொள்வார்கள். சிலர் எவ்வளவு சொன்னாலும் கேட்பதில்லை.”

“நீங்கள் சொல்வதும் சரிதான். தவறான பாதைகளில் செல்பவர்களையும் நீங்கள் திருத்துவதாகவும் சொன்னாள் பாப்பா…”

“என்ன செய்வது சார்... இப்போதுள்ள காலகட்டத்தில் நல்லதை விட தீயது தான் எங்கும் கொட்டிக் கிடக்கிறது. எதிர்மறையான தீயவையை நம் மூளை கிரகித்துக் கொள்ள குறைவான ஆற்றலே போதுமானது. இன்னும் எளிமையாக சொல்ல வேண்டுமென்றால் மூளைக்கு,

இனிப்பை நோக்கி செல்லும் எறும்பு போன்றது தான் தீயது.

நல்லது என்பது ஆமை போன்றது. அதை நம்முள் கிரகித்துக் கொள்ள அதிக ஆற்றல் தேவை. அதனால் தான் தீய விஷயங்களோ அல்லது வதந்தியோ நல்லதை முந்திக் கொண்டு அனைவரையும் சென்றடைகிறது.”

“நல்லா பேசுகிறீர்கள் சார்…”

“அது தான் என் தொழில் சார்.” என்று சிரித்துக் கொண்டவன் மேலும் தொடர்ந்தான், “இப்போது என்னிடம் சிகிச்சைக்கு வரும் பாதி பேர் போதைப் பழக்கத்திற்கு அடிமையாகி இருக்கிறார்கள். அதில் முக்கால்வாசி பேர் இளைய வயதினர், பள்ளி மாணவன், கல்லூரி மாணவன் ஏன் மாணவிகள் கூட வருகிறார்கள். பேப்பரில் போதைப் பொருள் புழக்கம் அதிகரித்துள்ளது என்பதை பார்த்து உச்சி கொட்டி இலகுவாய் தாண்டிவிடுவதோடு முடிந்துவிடுகிறது சாமானியரின் பொறுப்பு. ஆனால் அதன்பின் இருக்கும் விபரீதம் பற்றி சிந்திப்பதில்லை.

எதனால் புழக்கம் அதிகரிக்கிறது? தேவை (Demand )

எதனால் தேவை ஏற்படுகிறது? அதிகம் பேர் உபயோகிப்பதால் சப்லை தீர்ந்து டிமாண்ட் ஏற்படுகிறது.

இந்த அதிகம் உபயோகிப்பவர்கள் பதின்பருவத்தினர் மற்றும் இளைஞர்கள் அதாவது நாளைய இளைஞர்கள் மற்றும் இந்தியாவின் தூண்கள் எனப்படும் இருபதுகளில் இருக்கும் இளைஞர்கள். இளரத்தம் பாயும் இவர்களிடம் அபிரிமிதமான ஆற்றல் இருக்கும். தேடல் இருக்கும். அந்தத் தேடலை ஆக்கமாக்காமல், அழிவை நோக்கி செலுத்துகிறார்கள். அப்படி அழிவை நோக்கி செல்ல வைப்பது யார்?

நாம் தான்.”

“என்ன?” ரமேஷ் இடையில் அதிர்ச்சியாய் குறுக்கிட, அஜய் கண்சிமிட்டினான்.

“நாம் தான் சார். தங்கள் ஆற்றலை எப்படி ஆக்கமாக மாற்றுவது என்பது பலருக்கு தெரிவதில்லை, அந்த சந்தர்ப்பத்தை நாம் உருவாக்குவதும் இல்லை. மார்க் எடுத்தால் போதும், நல்ல கல்லூரியில் சீட் கிடைத்தால் போதும், நல்ல வேலை கிடைத்தால் போதும், என்று நினைப்பவர்கள் இதோடு போதும் என்று எதையும் நிறுத்துவதில்லை.

தம் பிள்ளைகளின் மனநலத்தை, அவர்களின் விருப்பத்தை கண்டுகொள்வதே இல்லை. விளைவு அவர்களின் மேல் திணிக்கப்பட்டிருக்கும் அழுத்தத்தை தாங்கமுடியாமல் ஆற்றல் குறைவாக இருக்கும் தீயவற்றை தேனைக் கண்ட தேனியாய் பிடித்துக் கொள்கிறார்கள்.

நீங்கள் நினைக்கலாம் நான் ஏன் இவ்வளவு விளாவாரியாய் சொல்கிறேன் என்று… நீங்கள் ஒரு ஆசிரியர் என்று இனியா சொன்னாங்க… உங்கள் மூலமாய் பலருக்கு இந்த செய்திகள் சென்று சேரும் என்று எதிர்பார்க்கிறேன். ஆசானை விட சிறந்த புத்தகமோ, வழிகாட்டியோ இருக்க முடியாது.” என்று அவன் முடிக்க பிரம்மித்துப் போனார் ரமேஷ்.

எத்தனை தீர்க்கம், ஆற்றல், ஆளுமை, நல்ல சிந்தனை.

“என்ன இனியா அமைதியாக இருக்கீங்க?” மீண்டும் அவனே ஆரம்பித்தான்.

“நான் தான் இருவரையும் அறிமுகப்படுத்தினேன். ஆனால் நீங்கள் இருவரும் என்னை விட்டுவிட்டுபேசிக் கொண்டிருக்கிறீர்கள்.” என்று செல்லமாய் கோபப்பட்டு அவ்விடத்தை இலகுவாக்கினாள் இனியா.

ரமேஷ் சிரித்துக்கொண்டே, “உங்கள் பிள்ளைகள் நாளைய ஐகான் ஆக வருவார்கள்.”

“ஐயோ… சார்… எனக்கு இன்னும் திருமணமே ஆகவில்லை.” என்று முறுவலுடன் மறுத்தான் அவன்.

“சாரி எங் மேன். சீக்கிரமே குடும்பஸ்தன் ஆக வாழ்த்துக்கள்.” என்று அதே முறுவலோடு வாழ்த்தினார்.

“உங்கள் சித்தம் அங்கிள்… கால் மீ அஜய். நான் உங்களை விட மிகச் சிறியவன்.” என்று பணிவாய் வேண்டி உறவொன்றை வளர்த்துவிட, இனியாவோ இவ்விருவர் வாய் பார்த்து உட்கார்ந்திருந்தாள்.

அதற்குள் அவன் சொல்லியிருந்த பழச்சாறு வந்துவிட, ரமேஷ் தயக்கமில்லாமல் எடுத்து அருந்தினார். அஜய் பற்றி முன்னர் இருந்த அலட்சியம், தயக்கம் முற்றிலும் துடைத்து எறியப்பட்டது. அதைக் கண்டு இனியா வாயடைத்துப் போனாள். தான் அவன் பற்றி சொல்லிய போது அலட்சியம் செய்துவிட்டு இப்போது எங் மேன் என்று குழைவதைப் பார் என்று மனதில் அவரின் செயலை குட்டிக் கொண்டிருந்தாள்.

“அடுத்த முறை நீங்கள் கண்டிப்பாக இனியாவுடன் முதியோர் இல்லத்திற்கு வர வேண்டும். நிறைய விளையாட்டுகள் மற்றும் ஏதாவது ஒரு கலை சொல்லிக் கொடுப்போம். நீங்களும் வந்தால் மிக்க மகிழ்ச்சி அங்கிள். இனியா மறக்காமல் கூட்டி வந்துவிடு.” அவள் தந்தை வெளிப்படுத்திய உரிமை உணர்வின் பிரதிபலிப்போ என்னவோ பன்மையில் இருந்த அழைப்பு ஒருமைக்கு மாறியது அவளிடம். அதை கவனிக்கத் தவறி இனியா வேகமாக தலையாட்ட, ரமேஷ் கடைசி சொட்டு ஜூஸை உறிஞ்சிக் கொண்டிருந்தார்.

ஆக மொத்தம் தந்தை, மகள் இருவரிடமும் ஏதோ ஒருவகையில் நெருக்கத்தை ஏற்படுத்தி இருந்தான் அஜய்ரத்னம். தான் உயர்ந்த இடத்தில் வைத்திருக்கும் ஒருவன் எவ்வித அலட்டலும் இல்லாமல் தங்களுடன் பழகியது, தன் தந்தைக்கு அவன் அளித்த மரியாதை இவ்விரண்டும் இனியாவுக்குள் ஒருவித இனிய தாக்குதலை நிகழ்த்தி இருந்தது.

*^*^*

கருத்து தெரிவித்து, லைக்ஸ் போட்ட அனைவருக்கும் நன்றி❤

Next epi will be on weekend.
 
அருமை,,
குஞ்சுகள் மிதித்த கோழிகள் ???????????

நான் எங்கோ படித்த வார்த்தைகள் சிஸ் இது.. மனதை அறுக்கும் வார்த்தைகள்.
 
Top