Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலாகி காதல் செய்வோமே 18

Advertisement

lekha_1

Active member
Member
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...

இதோ கதையின் அடுத்த பகுதி. Thank you for your valuable support...


காதல் 18

1289

வான்வெளியில் கண்சிமிட்டி சிரித்துக்கொண்டிருந்த நட்சத்திரங்களோடு தானும் சிமிட்ட முடியாவிட்டாலும், வற்றாத ஒளியை அளித்த நிலவை ரசித்தவாறு நின்றிருந்தான் ராவல். முழுநிலவு மட்டுமா அழகு? பிறை நிலவும் கூட அழகு. நிலவில்லாத அமாவாசை வானம் கூட ஒரு விதமான அழகு. தன் காதலிக்காக தேய்ந்த இரவின் வேந்தன் அவளை கண்டதில் மகிழ்ந்து வளர்ந்து கொண்டிருக்க, தன் உயிரானவளை நினைத்து தன்னறையின் உப்பரிகையில் சாய்ந்திருந்தான் அவன்.

“அண்ணா…” என்றழைத்தவாறு வந்த அவன் தங்கை, அவன் மனம் இப்புவியில் இல்லாது இருப்பதைக் கண்டு அவன் தோள் தொட்டு, “என்ன? நுஸ்ரத் நியாபகமா?” என்று கேட்டாள்.

அண்ணனின் மனமும் அவள் அறிவாள், அவன் மனம் கொண்ட மங்கையின் மனமும் அறிவாள் அவள். அதனால் அவ்வாறு அவனிடம் கேட்க, அதனை மறுத்துக்கூறாதவன் ஆமென ஒத்துக்கொண்டான்.

“இப்படியே நீ வானத்த பாத்துட்டு இரு… சீக்கிரமா அப்பாவிடம் போய் உன் விருப்பத்தைக் கூறு அண்ணா… அவர் உனக்கு எந்த தடையும் விதிக்க மாட்டார். அதுவும் நுஸ்ரத்தை அவருக்கும் சரி, அம்மாவுக்கும் சரி, ரொம்ப பிடிக்கும் இல்ல?” என்று கேட்டவளின் குரலில் கிஞ்சித்தும் பொறாமை இல்லை. நுஸ்ரத் என்றால் அவர்கள் பெற்றோர்கள் இருவருக்குமே பிடித்தம்.

“பேசறேன்ம்மா…” என்றவன் வெளியே எட்டிப்பார்க்க, அவன் தந்தை வீட்டினுள் நுழைவது தெரிந்தது.

இனி அவன் தாய் இரவு உணவு உண்ண அழைத்துவிடுவார். அவர்கள் வீட்டில் இரவுக்கு மட்டும் அனைவரும் சேர்ந்து தான் உண்ண வேண்டும் என்று கட்டாயம். அதற்கு விதிவிலக்கென்பது, அவன் தந்தை வெளியூர் பிரயாணம் செல்லும் சமயங்களில் மட்டும் தான்.

சிறிது நேரம் கழித்து இருவரும் கீழே செல்ல, தாயிடம் எதைப் பற்றியோ தீவிரமாக கூறிக்கொண்டிருந்தார் அவன் தந்தை.

“முடிந்த அளவுக்கு அனைத்தையும் இப்போவே தயார் நிலையில் வைத்துக்கொள்! நம்மை நம்பி வருபவர்களுக்கு நாம் தான் உதவி செய்ய வேண்டும்” என்று அவர் கூறிக்கொண்டிருக்க,

“என்ன விடயம் அப்பா?” என்று கேட்டவாறே வந்தமர்ந்தாள் ஷப்னம், ராவலின் தங்கை.

“நம் நாட்டில் சமீபகாலமாக நடப்பது என்னவென்று உனக்கும் தெரியும் தானே?” என்று கேட்டார் அவள் தந்தை. அதற்கு மகள் ஆமென்று தலையசைக்கவும், மேலும் தொடர்ந்தார் அவர்.

“ஒருங்கிணைந்த இந்தியாவாக இருந்த போது அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்த வன்முறை சம்பவங்கள் தற்போது அனைத்து இடங்களிலும் கட்டவிழ்ந்து விடப்பட்டது போல் நடக்கின்றன குட்டிம்மா… அதுவும், இப்போ எல்லைகளையும் பிரித்துவிட்ட செய்தி தெரிந்து அது மொத்தமும் கட்டுப்படுத்த முடியா நிலையில் இருக்கின்றன. பாகிஸ்தானில் இருந்து இந்துக்களும் சீக்கியர்களும் துரத்தியடிக்கப்படுகின்றனர். இந்தியாவில் இருந்து முஸ்லீம்கள். அதில் சிலர் தங்கள் நாட்டிற்குள்ளேயே தஞ்சமடைந்திருக்கிறார்கள். அவ்வாறு நம் ஊருக்கும் புதியவர்கள் வந்துகொண்டிருக்கிறார்கள்” என்று அவர் கூற,

“நம்மையும் துரத்தப்போகிறார்களா அப்பா?” என்று கலக்கத்தோடு கேட்டாள் மகள். அதே கலக்கம் தாய்க்கும் இருந்ததால், கணவன் என்ன சொல்லப்போகிறார் என்பதையே பார்த்திருந்தார் அவர். அவர்கள் மகனோ, என்ன செய்வதென்று யோசித்துக்கொண்டிருந்தான்.

“இல்லம்மா… கிராமங்களில் வன்முறை அதிகமாக நடக்கவில்லை. ஆனால், லாகூர், அமிர்தசரஸ், பம்பாய், தில்லி போன்ற பெருநகரங்களில் மிகவும் மோசமாக இருக்கிறதென்று கூறுகிறார்கள்” என்றார். அதில் திகைத்து எழுந்தேவிட்டான் ராவல்.

“என்ன ஆயிற்று ராவல்?” என்று அவர் கேட்க, “அமிர்தசரஸில் தானே அப்பா முகமது (நுஸ்ரத்தின் அப்பா) மாமா இருக்கிறார்? அவருக்கும் குடும்பத்திற்கும் ஏதாவது?” என்று அவன் கேட்க, “இப்போது வரை அவர்கள் நன்றாகவே இருக்கிறார்கள். உடனே கிளம்பி வருமாறு கேட்டுவிட்டேன். ஆனால், அவன் ரொம்ப யோசிக்கிறான்” என்று கூறினார் அவன் தந்தை.

மாலையில் விடயம் கேள்விப்பட்டவுடனேயே முகமதை அழைத்துவிட்டார் அவன் தந்தை. ஆனால், அவரோ, தங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது எனக்கூறி அங்கே வர மறுத்துவிட்டார். அன்று இரவு தான் நுஸ்ரத் தன் வீட்டில் இருந்து வெளியேறியிருந்தாள்.

“அப்போ, அவங்க நிம்மதியா இருக்காங்க என்று தானே அர்த்தம்?” என்று கேட்டவனைக் கண்டு தன்னிரு கைகளையும் விரித்தவர், “தற்போது ஆபத்தில்லை என்பதை மட்டும் தான் கூறமுடியும். எப்போதும் இவ்வாறே இருக்க முடியுமென்று எப்படி சொல்ல முடியும்?” என எதிர்கேள்வி கேட்டார் அவர்.

அதிலேயே மனம் சோர்ந்து போயிருக்க, தன்னவளைத் தேடி செல்ல விழைந்தான் அவன். ஆனால், பெற்றோர் ஒப்புக்கொள்வாரா? எனவே, தங்கையிடம் மட்டும் கூறிவிட்டு பெற்றவர்களிடம் நண்பனுக்கு உதவி தேவைப்படுகிறதென்று சென்றுவிட்டான் அன்றிரவே. அவர்களிருவரையும் சமாளித்துவிட்டு வீட்டில் இருந்து வெளியேறியதும் தான் அவனுக்கு நிம்மதியானது.

அமிர்தசரஸ் வரை எவ்வாறு செல்வது என்று அவன் யோசித்துக்கொண்டிருக்க, அவனுக்கு தெரிந்தவர்கள் சிலர் இந்திய எல்லை வரை தேவைப்படுபவர்களை கொண்டு சென்று விட்டு வந்தனர். அவர்களிடம் கூறி தானும் ஏறிக்கொண்டவன், மறுநாள் இரவு அமிர்தசரஸை அடைந்தான்.

(பாகிஸ்தானில் கலவரம் நடந்தபோது அங்கிருந்த ஹிந்துக்களில் சிலர் மீத்திக்கு அடைக்கலமாக வர, அவர்களை அன்போடு அணைத்துக்கொண்டது அந்த ஊர். அங்கே பிரிவினையினால் எந்த பாதிப்பும் பெரிதாக ஏற்படவில்லை. அதனாலேயே அதனை கதைக்கான களமாக தேர்ந்தெடுத்தேன்.)


*****

இதனை ஷப்னமிடம் இருந்து தெரிந்துகொண்டவளுக்கு அவன் என்ன ஆனானோ என்னும் பயம் வந்திருந்தது. ராவலை தேடி செல்ல நினைத்தவளை ஷப்னம் தான் தடுத்திருந்தாள். அவன் தகுந்த முன்னேற்பாடுடன் தான் சென்றிருக்கிறான். எனவே, நல்லபடியாக திரும்பி வந்துவிடுவான் என்று அவள் கூற, நடந்தவை அனைத்தையும் கடந்து வந்தவளுக்கு உடல் நடுங்கினாலும், அரை மனதுடன் அதனை ஏற்றுக்கொண்டவள், அவன் நலத்தையும் தன் குடும்பத்தின் நலத்தையும் வேண்டி பிரார்த்திக்க ஆரம்பித்தாள். வேறு என்ன செய்ய முடியும் அவளால்? வீர் சொன்னதை கண்டிப்பாக செய்துவிடுவான் என்னும் நம்பிக்கை.

அவளுக்கு எங்கே தெரியும், அவளை பத்திரமாக அனுப்பி வைத்த வீர் வழியில் ஒரு குடும்பத்தைக் காப்பாற்ற உயிர்விட்டதை? இந்த கலவரத்திலும், இடம்பெயர்விலும் காணாமல் போன எண்ணற்றோர்களில் ஒருவனாய் வீரின் பெயரும் புகைப்படமும் பல ஆண்டுகள் சுற்றிக்கொண்டே இருக்கும். ஆனால், அவனால் காப்பாற்றப்பட்டவர்கள் அவனை தங்கள் வாழ்நாள் முழுவதும் தங்கள் தெய்வமாக வழிப்படத்தான் போகிறார்கள்.

இங்கே நுஸ்ரத்தின் வருகை ராவலின் பெற்றோருக்கு மகிழ்ச்சியளித்திருந்தாலும், அவள் மட்டும் தனித்து வந்திருப்பது அவர்களுக்கு ஐயத்தையும் ஒருங்கே அளித்திருந்தது. அதனை அவளிடமும் கேட்க, அவளோ, தான் தோழியின் வீட்டில் இருந்து வந்ததாகவும், தன் குடும்பத்தார் விரைவில் வந்துவிடுவர் என்றும் கூறினாள்.

யாரிடமும் அவள் பெற்றோரை விட்டுக்கொடுக்க அவளால் முடியாது. அது மட்டுமல்லாது, தங்கள் காதலைப் பற்றி தன் பெற்றோரிடம் கூற வேண்டியது ராவல். அதனால், அவன் வரும்வரை பொறுத்திருக்க முடிவு செய்தாள்.

அந்நிகழ்வுகளின் தாக்கத்தில் தனக்குள் பயந்து போயிருந்தவள் ஒரு கூட்டிற்குள் தன்னை சுருட்டிக்கொண்டாள். என்னதான் பழக்கமிருந்தாலும், ஒரு அளவிற்கு மேல் ராவலின் குடும்பத்தாருடன் அவளால் பழகமுடியவில்லை. எதுவாகினும் தனக்குள்ளேயே வைத்துக்கொள்பவளுக்கு அவர்களோடு தன் பயத்தை பகிர எதுவோ தடுத்தது. தன்னவர்களை மனம் தேடியது. பெற்றோரைக் காண வேண்டும், அவர்கள் காலில் விழுந்து அவர்களை மீறி வந்ததற்கு மன்னிப்பு கேட்கவேண்டும், தன் தங்கைகளை கட்டியணைத்து உச்சி முகர வேண்டும், ராவலின் மார்பில் சாய்ந்து அழ வேண்டும் என்று மனம் ஏங்கித் தவிக்க, அவர்களை மீண்டும் காண்போமா என்ற ஏக்கத்திலும் அழுகையிலும், கண்டுவிடுவோம் என்னும் நம்பிக்கையிலும் நாட்களைக் கடத்தினாள். திக்கற்றவர்களுக்கு இறைவனே துணை என அவரையே முழு சரணாகதியடைந்தாள் நுஸ்ரத்.

அவள் வந்து இரு மாதங்கள் கழித்து வீடு வந்து சேர்ந்தான் ராவல். வந்தவன் அளித்த தகவல்கள் அவளை நிலைகுலையச் செய்தன.


*****

ராவல் அமிர்தசரஸை அடைந்தபோது நிலைமை வெகு மோசமாக இருந்தது. வெறிகொண்டு சுற்றிக்கொண்டிருந்த கூட்டத்திடம் இருந்து மறைந்து நுஸ்ரத்தின் வீட்டினுள் புகுந்தவனை யானை கரும்புக்காட்டினுள் புகுந்து சென்ற நிலையுடன் வரவேற்றது அது.

சில மணி நேரங்கள் முன் தான் அங்கே ஒரு களேபரம் நடந்தது என்பதற்கான சாட்சிகள் அங்கே இருக்க, அதில் வாழ்ந்த மனிதர்கள் எங்கே என தேடினான் அவன். ஒவ்வொரு இடமாக தேடியவனுக்கு நுஸ்ரத்தின் தாயும் தங்கைகளும் வெட்டப்பட்டு கிடக்க, அதிர்ந்து அமர்ந்துவிட்டான் அவன்.

சிறிது நேரத்தில் தன்னை கட்டுப்படுத்திக்கொண்டவன் நுஸ்ரத்தையும் அவள் தந்தையையும் தேடினான். இருவருமாவது உயிரோடு இருக்க வேண்டும் என வேண்டியது அவன் மனம்.

அவனை மிகவும் தேட வைக்காமல் அடுத்த அறையிலேயே இருந்தார் அவள் தந்தை, குற்றுயிரும் குலையுயிருமாய். அவரைக் கண்டதும் “மாமா…” என ஓடி வந்தவன் அவரை தன் மடியில் சாய்த்துக்கொண்டு அழ,

“அழாதேப்பா… நான் அதற்கு தகுதியானவன் இல்லை. ஒரு மகளை அடைத்து வைத்து கொடுமைப்படுத்தினேன். கலவரக்காரர்கள் கையில் சிக்கி சின்னாப்பின்னமாகுவதை விட நானே… என் மற்ற மகள்களையும் மனைவியையும் இதே கையினால் வெட்டிவிட்டேன்… நான் பாவி!” என்று அவர் கூறி முடிப்பதற்குள்ளேயே வெகுவாக சோர்ந்துவிட்டார்.

“என்ன மாமா ஆச்சு? நீங்க வாங்க… உங்கள மருத்துவமனையில் சேர்க்கிறேன்” என்று அவரை தூக்க முற்பட, அவனை தடுத்தவர், “நான் பிழைக்க மாட்டேன்… நுஸ்ரத்…” என்று அவர் இழுத்து மூச்சு விட சிரமப்பட,

அப்போதுதான் நுஸ்ரத்தின் நியாபகம் வந்தவன், “நுஸ்ரத் எங்கே மாமா?” என்று பதட்டமாக வினவினான். அவள் உயிர் துறந்தாளோ இல்லை, அவர்களிடம் மாட்டிக்கொண்டாளோ?

ராவலை நோக்கி கைநீட்டியவர், “உன்… வீட்டிற்கு… சென்று…” என்று கூறி முடிப்பதற்குள் அவர் உயிர்ப்பறவை தன் கூட்டை விட்டு சென்றுவிட்டது.

“மாமா…” என்று அவரை கட்டிக்கொண்டு அழுதான் நெடுநேரம் அவன். அதன்பின், அங்கிருந்த சிலரைக் கொண்டு அவர்கள் அனைவருக்கும் இறுதிச் சடங்கை நடத்தினான். அதற்கு அவன் பட்ட பாடு சொல்லி மாளாது.

இறந்தவர்களுக்கு ஆறடி நிலம் தருவதில் கூட பந்தாடினர். இறுதியில் ஊருக்கு ஒதுக்குப்புறமான ஓடையினருகே அவர்களை எறித்து, அங்கேயே அவர்கள் அஸ்தியையும் கரைத்துவிட்டு வந்தான்.

நுஸ்ரத் உயிரோடு இருக்கிறாளா இல்லையா என்பது பற்றி தெளிவாக எதுவும் தெரியவில்லை. ஆனால், அவளுக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று மட்டும் அவன் உள்ளுணர்வு கூற, அதில் நம்பிக்கை வைத்து அவளை தேடத் துவங்கினான் ராவல்.

அப்போது அவளை வீருடன் கண்டதாக சிலர் கூற, அவர்கள் எவ்வழி சென்றனர் என விசாரித்தவனுக்கு அவர்கள் கூறியதில் இருந்து எதுவும் தெளிவாக முடிவெடுக்க முடியவில்லை. இதற்குள் கலவரக்காரர்களை கட்டுப்படுத்த நேப்பாளத்திலிருந்தும் மதராஸிலிருந்தும் சிப்பாய்களை இறக்க, கலவரமும் கட்டுக்குள் வந்திருந்தது.

முடிந்தவரை அவளை தேடி சலித்தவனுக்கு ஒருவேளை அவள் தன் வீட்டிற்கு சென்றிருந்தால்? என்ற கேள்வி எழும்ப, வீட்டிற்கு அழைத்து பார்த்தவனின் அழைப்பு எடுக்கப்படவில்லை.

உடனே தன் தோழன் ஒருவனுக்கு அழைத்தவன் அவன் மூலமாக செய்தியை அறிந்துகொண்டு வீடு வந்து சேர்ந்திருந்தான்.


*****

ராவல் வந்துவிட்டதை அறிந்து அவனைத் தேடி வந்த நுஸ்ரத்திற்கு அவன் தன் பெற்றோர் இறந்துவிட்டதை கூறக்கேட்டதும் அதிர்ந்து ஐயோ! என வீறிட்டவாறே மயக்கமடைந்திருந்தாள்.
 
Top