Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலாகி காதல் செய்வோமே 19

Advertisement

lekha_1

Active member
Member
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...

இதோ, கதையின் அடுத்த பதிவு. Thank you for your valuable support....



காதல் 19

1300

கடவுள் யாரால் தான் அளிப்பதை தாங்கிக்கொள்ள முடியும் என்று பார்த்துதான் கஷ்டங்களை அளிப்பாராம். ஏனென்றால் அவர்கள் மேல் அளவுகடந்த அன்பு வைத்திருப்பாரம் அவர். அந்த அன்பு ராவல்-நுஸ்ரத்தின் மீது சிறிது அதிகப்படியாகவே விழுந்தது போலும்.

ராவல் வந்துவிட்டதை அறிந்து அவனைத் தேடி வந்த நுஸ்ரத்திற்கு அவன் தன் பெற்றோர் இறந்துவிட்டதை கூறக்கேட்டதும் அதிர்ந்து ஐயோ! என வீறிட்டவாறே மயக்கமடைந்திருந்தாள்.

அவள் மயக்கமடைந்ததும் அனைத்தையும் மறந்து ஓடிச் சென்று அவளை தன் மடியில் தாங்கினான் ராவல். “ஷோனா… என்னை பாருடா…” என்று அவள் கன்னம் தட்டி எழுப்ப முயன்றான் அவன். ராவல் எப்போதாவது தான் ஷோனா என்றழைப்பான் அவளை. அதனை கேட்கவே அவள் அவன் பின்னால் சுற்றுவாள். அது தனக்கு பிடித்ததனாலேயே அவளை சுற்றலில் விட்டு தனக்குள் சிரித்துக்கொள்வான். இன்று அவன் அழைப்பை உணராமல் இருந்தாள் அவன் பூங்கொடி.

அப்போது அவன் தங்கை தண்ணீர் கொண்டுவந்து தர, அதனை வாங்கியவன், அவள் முகத்தில் தெளித்தான். அதில் சிறிது நேரத்தில் கண்விழித்தவள், தன் முன்னே கலக்கத்துடன் அமர்ந்திருந்த ராவலின் கழுத்தை கட்டிக்கொண்டு “ராவி… எல்லாரும் என்ன விட்டுட்டு போயிட்டாங்க ராவி…” என்றவள் தன் தலையில் அடித்தவாறு, “நான் தான் அவங்க எல்லாரையும் விட்டுட்டு வந்துட்டேன்… அதான் நான் வேண்டாம்னு விட்டுட்டு போய்ட்டாங்க” என்று கேவினாள்.

அவளை சமன்படுத்தி தூங்க வைத்தவன் அதன்பின் தான் தன் பெற்றோரை பார்த்தான். இருவருக்கும் ராவல் மற்றும் நுஸ்ரத்தின் நெருக்கமே விடயத்தை கூறியிருக்க, அவனிடம் இருந்து விளக்கத்தை எதிர்பார்த்து காத்திருந்தனர்.

இனியும் மறைக்க முடியாது என்பதை உணர்ந்தவன், அவர்களை நிமிர்ந்து பார்த்து, “நானும் நுஸ்ரத்தும் ஒருத்தரை ஒருத்தர் விரும்பறோம்” என்று அவன் முடிக்கும் முன்னே அவனை நெருங்கிய அவன் தந்தை, ஒரு அறை விடுத்து, “உன்ன நம்பி அவங்க வீட்டில் விட்டவங்களுக்கு துரோகம் பண்ணிட்டியேடா” என்க,

அவர் கூற்றில் ஒரு நொடி இறுகியவன், மறுநொடியே சுதாரித்து, “நான் அங்க படிக்க போனதே அவளுக்காகத்தான். என் பல வருட தவம் அவ” என்றான். அதிலேயே மகன் நுஸ்ரத் மேல் கொண்டுள்ள காதல் விருட்சமாக வளர்ந்துவிட்டது புரிய, தொய்ந்து அமர்ந்தார் அவன் தந்தை.

மகனின் ஆசையை என்றுமே அவர் தடை செய்ததில்லை தான். ஆனால், இதனை ஏற்றுக்கொள்ள அவர் மனம் யோசித்தது. நுஸ்ரத்தின் தந்தையும் அவர்களை ஏற்றிருந்தால் தானும் சரி என்றிருப்பாரோ என்னவோ? அவர் அறிவாரா, தான் இறக்கும்போது நுஸ்ரத்தை ராவல் கண்டுபிடித்திட வேண்டும் என்று மட்டுமே அவர் வேண்டிக்கொண்டார் என்று? அந்த தந்தைக்கு அவன் தன் மகளை கைவிடமாட்டான் என்பதை அவன் வந்து நின்றபோதே உணர்ந்துகொண்டார். ஆனால், அதனை வார்த்தையாக தொடுக்கும் முன்பே உயிர்விட்டது தான் விதி போலும்.

எந்த முடிவிற்கும் வரமுடியாதவர் தன் அறையினுள் அடைக்கலம் புக, அவரை பின்தொடர்ந்து சென்றுவிட்டார் அவர் மனைவியும்.

மாதம் ஒன்று கடந்திருந்தது. இத்தனை நாட்களில் யாரும் பெரியதாக பேசிக்கொள்ளவில்லை, ராவல்-நுஸ்ரத்தின் காதல் குறித்து. அவர்கள் இருவரும் கூட அதனைப் பற்றி கவலைபடவில்லை. நுஸ்ரத்தின் நிலையறிந்து, உனக்கு நான் இருக்கிறேன் என்னும் விதமாக அவளை தேற்றுவதைத் தவிர அவன் காதல்மொழிகள் பேசிடவில்லை; ஒதுங்கியே இருந்தான். அவளுக்கு துணையாக ஷப்னமே பெரும்பாலான நேரம் உடனிருந்தாள். அவளும் சிறிது தேறியிருந்தாள்.

இரவுணவு முடித்து தங்கள் அறைக்கு செல்ல அனைவரும் எழ, “ஒரு முக்கியமான விஷயம் பேசனும். எல்லாரையும் இருக்கச் சொல்லு” என்று தன் மனைவியை பார்த்து ராவலின் தந்தை கூற, அதற்கு கட்டுப்பட்டவர்கள் தங்கள் இடத்தில் அமர்ந்தனர்.

அனைவரையும் ஒரு பார்வை பார்த்தவர், தொண்டையை கணைத்தவாறு, “இன்னும் இரண்டு நாளில் இவங்க ரெண்டு பேருக்குன் திருமணம் செய்யலாம்னு நினைக்கிறேன். தயாராக இருக்க சொல்லு” என்றுவிட்டு, பேச்சு முடிந்ததென நகர்ந்துவிட்டார்.

அதில் இளைய தலைமுறைக்கு மகிழ்ச்சிதான் என்றாலும், அவர் இந்த முடிவை முழுமனதோடு தான் எடுத்திருக்கிறாரா? என்பது தெரியாமல் குழப்பமாக இருந்தது.

தன் தந்தையின் அறைக்கு சென்றவன், அவர் அனுமதி கேட்டு காத்திருக்க, அது கிடைத்தவுடன் உள்ளே நுழைந்தான். அங்கே அவர் ஒரு சாய்வு நாற்காலியில் அமர்ந்திருக்க, அவரருகில் சென்று மண்டியிட்டு அமர்ந்தவன், “அப்பா…” என்றான் மெல்ல.

அதில் அவர் அவனை கண்டாலும், ஒன்றும் பேசவில்லை. அதனையே சம்மதமாக எடுத்துக்கொண்டவன், “உங்களுக்கு இதில் விருப்பம் இல்லையாப்பா? எனக்காக மட்டுமா சம்மதிச்சிருக்கீங்க? என்னை மன்னிச்சிருங்கப்பா…” என்று அவன் கூற, அவன் தோளை பிடித்தவர்,

“முன்ன உன்மேல கோபம் இருந்தது உண்மை தான். ஆனால், சீக்கிரமே நுஸ்ரத்தை விட ஒரு நல்ல பொண்ண எங்க போய் தேடினாலும் பார்க்க முடியாது என்பது புரிந்தது. அவளோட அப்பா-அம்மா சம்மதம் வாங்க முடியலையே என்பது மட்டும் தான் இப்போ வருத்தம். ஆனாலும், நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா வாழ்வதை பார்த்து அவங்களும் வாழ்த்தத் தான் போறாங்க. அவ நான் பார்த்து வளர்ந்த பொண்ணு. கண்கலங்காம பார்த்துக்கனும். ஏதாவது செஞ்சு அழவெச்ச, அவ சார்புல நான் வந்து கேட்பேன். மகன்னு எல்லாம் பார்க்கவே மாட்டேன்” என்று சாதாரணமாக ஆரம்பித்து போலி மிரட்டலில் அவர் முடிக்க, அதற்கு சரியென்று தலையசைத்தவன் கண்கள் கலங்கியது.

இதனை அறை வாசலில் இருந்து பார்த்துக்கொண்டிருந்தவள் சிறு கேவலோடு “மாமாஜி” என்று வந்து கட்டிக்கொண்டாள் தன் பிரியமான மாமனாரை. அதனை பொறாமையோடு பார்த்திருந்தான் ராவல். அவனைக் கண்டு வெட்கம் வர, அதனையும் மீறி அவன் பார்வை அவளுள் இருந்த குறும்புத்தனத்தை தூண்டிவிட, அழகு காட்டிவிட்டு தன் மாமனின் தோளில் மறைந்துகொண்டாள் அவள்.

அதன்பின் காரியம் விரைவாக நடந்தேற, சீக்கிரமே கணவன் மனைவியாகினர் இருவரும். அனைவரது வாழ்வும் தெளிந்த நீரோடை போல இருந்தது. அதில் கலங்கிய கல்லாக வந்தது அந்த தகவல்.

டிசம்பர் 6, 1947 அன்று இரு நாடுகளும் சேர்ந்து ஒரு ஒப்பந்தத்திற்கு வந்திருந்தன. கணக்கிலடங்காத பெண்கள் இருபக்கமிருந்தும் காணாமல் போயிருந்தனர், கடத்தப்பட்டிருந்தனர். அவர்களை மீட்டெடுக்க வேண்டிய அவசியத்தை உணர்ந்த அரசுகள் எடுத்த முடிவது. மார்ச் மாதத்திலிருந்து தற்போதுவரை மதம் மாறி திருமணம் செய்தவர்களை பிரித்து அவர்களுக்கு சொந்தமான தேசத்தில் ஒப்படைக்க வேண்டும். இதில் பெண்களின் அபிப்பிராயம் கேட்கப்படவில்லை. பலர் தங்களை அதே கூண்டுக்குள் அடைந்துகொள்ளவே விரும்பினர். அதற்கு காரணமும் உண்டு.

என்னதான் அரசு அவர்களை மீட்டு அவரவர் குடும்பத்தாரிடம் சேர்த்தாலும், அவர்களை ஏற்றுக்கொள்ள குடும்பத்தில் யாரும் தயாராக இல்லை. பரிசுத்தம் கெட்டுவிட்டது என்று ஒதுக்கிவிட்டார்கள் அந்த ஒழுக்க கணவான்கள். அதன்பின், நடுத்தெருவிலோ காப்பகத்திலோ தான் அவர்களின் எஞ்சிய காலம் செல்லும். ஆனாலும், மீட்டெடுக்கவே வேண்டும் என்று நின்றார்கள். ராமர்களான தாங்கள் சீதைகளை மீட்க வேண்டும் என்றனர், அந்த சீதைகளைத் தீக்குளிக்கச் செய்யாமலேயே அவர்கள் மீது சேற்றை வாரி இறைத்த கயவர்கள்.

இந்த நிலைக்குச் சந்தோஷமோ துக்கமோ, வலுக்கட்டாயமாக கட்டியவனுடனேயே வாழ்ந்துவிடலாம் என்று ஓடி ஒளிந்தனர் பெண்கள். இரண்டாவது காரணம், பெற்ற பிள்ளைகளைக் கணவனுடன் விடவும் மனதில்லை, அவர்களை அழைத்துச் சென்றால், அந்த பிள்ளைகளின் நிலை அவர்களை விடவும் மோசமாக போய்விடும்.

இதில், பல காதல் ஜோடிகளும் வந்தனர். சிலர் தங்கள் பெற்றோரை மீறி காதல் மணம் புரிந்திருக்க, இந்த ஒப்பந்தத்தையே சாக்காக வைத்துக்கொண்டு பெண்ணைக் காணவில்லை என்று புகார் அளித்து தம்பதிகளைப் பிரித்துவிட்டனர். சில நாட்களில் வந்துவிடுகிறேன் என பிறந்தக பாசத்தில் சென்ற பெண்களை மிரட்டி, தங்களுக்குப் பிடித்தவனோடு திருமணம் செய்துவைத்த நிகழ்வுகளும் நடந்தன. தன் மனைவியைத் தேடிச் சென்ற கணவன் கண்டது அவளை மாற்றான் மனைவியாகத் தான். என்ன அராஜகம் என்று கொதித்தெழுந்து காவற்துறையின் உதவி நாடியவனை யாரென்றே அறியாது என்று சென்றுவிட்டாள் மனைவி. இதனால் சித்தம் கலங்கி தேவதாஸ்களாக சுற்றிய ஆண்களும் உண்டு.

வீடு வீடாக பெண்களை தேடுகிறார்கள் என்பதை அறிந்தவுடன் பயம் பீடித்துக்கொண்டது ராவலுக்கும் நுஸ்ரத்திற்கும். அவர்களையும் பிரித்துவிடுவார்கள் என்று உறுதியாக கூறமுடியாவிட்டாலும், பிரித்துவிட்டால்?

அதனை இருவரும் ராவலின் தந்தையிடம் கேட்க, அவரும் யோசனையில் ஆழ்ந்தார். இருவரையும் இங்கேயே வைத்திருப்பதும் ஆபத்து, நுஸ்ரத்தின் வீட்டிற்கும் அனுப்ப முடியாது. தன் நாட்டின் பெயரைக் கேட்டாலே இன்றும் அவளுக்கு நடுக்கம் ஏற்பட்டு கண்கள் நிலைகுத்தி நிற்கும். கண்களை மூடினாலேயே கைகளும் கால்களும் தனித்தனியாக கிடப்பதும், எரிந்த உடல்களுமே பல நாட்களுக்கு அவள்முன் வந்தன. அதனால், எத்தனை இரவுகள் தூங்காமல் இருந்திருப்பாள்?

இங்கிருந்தால் ஒரு கட்டம் வரை தடுக்க முடியும் தான். ஆனாலும், அழைத்துச் செல்கிறார்கள் இல்லையே! இழுத்து அல்லவா செல்கிறார்கள்? அதனால், இருவரையுமே நாட்டை விட்டு அனுப்புவது என்று முடிவெடுத்தார். அதற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்துவிட்டு அவர்களிடம் தெரிவித்தார் அந்த பாசமிகு தந்தை.

முதலில் மகிழ்ந்தவர்கள், தாங்கள் இருவர் மட்டுமே செல்ல வேண்டும் என்று கூறப்படவும், ஒரேடியாக மறுத்தனர்.

“அப்பா… எங்களால மட்டும் தனியாக போக முடியாது. நாம எல்லாருமே போயிடலாம்” என்று ராவல் கூற, அதையே ஆமோதித்தாள் நுஸ்ரத்.

இருவரையும் கனிவுடன் பார்த்தவர், “நாங்க உங்களோட வர்றோம். ஆனால், இப்போ இல்ல. இன்னும் கொஞ்ச நாளில் இங்கிருக்கும் சொத்து எல்லாவற்றையும் விற்றுவிட்டு அங்கே வரோம். எங்களுக்கு எந்த அவசரமுமில்லை. ஆனால், உங்களுக்கு இங்கிருந்து வெளியேறுவது அவசரமும் அவசியமும் கூட” என்று பலவாறு சமாதானப்படுத்தியவர் அவர்களை கராச்சிக்கு அழைத்துச் சென்று கப்பலேற்றியும் விட்டார்.

கடைசிவரை ஷப்னமையாவது தங்களுடன் அனுப்பிவைக்குமாறு கேட்டவர்களை மறுத்து, தங்களோடு வரட்டும் என வைத்துக்கொண்டார்.


*****

கப்பலேறி இந்தோனேஷியா சென்றவர்களுக்கு அங்கே எங்கு தேடியும் வேலை கிட்டவில்லை. அவர்களுக்கு இந்நிலை வரும் என்று உணர்ந்தோ என்னவோ, பணமாக தராமல் தங்க நகைகளாகவே அளித்திருந்தார். அதனை வைத்து சில நாட்களை கழித்தவர்கள் அதுவும் தீர்ந்துபோக, பசியால் வாடினர்.

படித்த படிப்பிற்கு வேலை கிடைக்காததால் கிடைத்த வேலையை செய்யலானான் ராவல். நடுநடுவே வீட்டிற்கும் கடிதம் எழுதுவதை மறக்கவில்லை. அப்போதைய நிலையில் அவனால் அழைப்பெடுக்க முடியாமல் இருந்தது.

சில மாதங்கள் இவர்கள் இருவரும் தத்தளிக்க, கஷ்டம் கொடுத்தது போதும் என்று நினைத்தார் போலும் அந்த இறைவன். ராவலுக்கு ஒரு கம்பெனியில் கணக்கெழுதும் வேலை கிடைக்க, சிறிது முன்னேறியது அவர்கள் வாழ்வு. அவன் தன் பெற்றோருக்கு எழுதிய கடிதங்கள் ஆள் இல்லை என்று திரும்பி வர, அவர்களுக்கு என்னவாகிற்று என்று அறிந்துகொள்ள அழைத்தான் அவன்.

தன் வீட்டில் தொலைப்பேசி இல்லை என்பதால், அவர்கள் வீட்டின் அருகே இருக்கும் பேசிக்கு அழைக்க, அவர்களோ, அவன் வீட்டினர் அங்கே இல்லை என்று கூறி வைத்துவிட்டனர். அவர்களைப் பற்றி அறிந்துகொள்ள விடாமல் அழைத்தவன் ஒரு கட்டத்தில் நுஸ்ரத்திடம் கூறி அவளை பாதுகாப்பான ஒரு இடத்தில் விட்டுவிட்டு தன் வீட்டிற்கு செல்ல, அங்கே அவன் வீட்டில் அவன் குடும்பத்தார் யாருமே இல்லை. வீட்டை முன்பிருந்தவர்கள் விற்றுவிட்டு சென்றதாக கூறினர். சுற்றத்தாரிடம் விசாரித்தும் இந்தியாவிற்கு சென்றுவிட்டனர் என்பதைத் தவிர உருப்படியாக தகவல் ஏதும் கிட்டாததால் சோர்ந்துபோய் நுஸ்ரத்திடம் வந்தான்.


*****

இவை அனைத்தையும் முகிலிடம் கூறிய அனிலா, அவன் இறுகிய தோற்றத்தைக் கண்டுகொள்ளாமல் பேசிக்கொண்டிருந்தாள்.

“கொள்ளுப்பாட்டிக்கு ரொம்ப வருஷமா அந்த நினைவுகள் இருந்துட்டே இருந்துச்சாம். தாத்தா பிறக்கவும் தான் கொஞ்சம் கொஞ்சமா அதில் இருந்து வெளிவர முடிந்தது. ஆனாலும், இப்போகூட அவங்களிடம் அந்த விஷயம் பற்றி கேட்டால், அவங்க கை நடுங்கும், கண்கள் கலங்கும், குரல் உடையும். அங்கேயே இருந்திருந்தால் அவங்களும் மாறியிருப்பாங்களோ என்னவோ? பாட்டியோட இந்தியாவின் கடைசி நினைவு, அவங்க குடும்பத்தின் கொலையும், அவங்க பார்த்த சம்பவமும் தான். அதனால் தான் அந்த பேரை சொன்னாலே அவங்களுக்கு அவ்வளவு வெறுப்பு.

சேதம் இரண்டு பக்கமும் தான் நடந்தது. ஆனால், அவங்க பார்த்தது ஒரு பக்கம் தானே! அதன்பின், நடந்தது எதுவும் அவங்களிடம் யாரும் கூறவே இல்லை போல.

கொஞ்சம் வருடத்திலேயே அங்கிருந்து ஆஸ்திரேலியா வந்துட்டாங்க. தாத்தா வளர்ந்து, அவருக்கு திருமணமும் ஆகி அப்பாவும் அத்தையும் பொறந்தாங்க. ஒரு நாள் விபத்தில் தாத்தாவும் கொள்ளுத்தாத்தாவும் இறக்க, சில நாட்களிலேயே பாட்டியும் இறந்துட்டாங்க. தாத்தா இறக்கற வரைக்கும் அவங்க குடும்பத்தை தேடிட்டே இருந்தாங்களான். ஆனால், அவங்க கிடைக்கவே இல்லையாம். என்னைக்காவது அவர்களை பார்த்திடனும்னு பாட்டிக்கும் ஆசை. அவங்க பெஸ்ட் ஃப்ரெண்டாச்சே! அப்படி ஒன்னு நடக்குமான்னு தெரியல. இப்போகூட பாட்டியைப் பற்றி உனக்கு சொல்லிருக்க மாட்டேன். ஆனால், பாட்டியைப் பற்றி நீ தப்பா நினைக்கக்கூடாதுன்னு தான் சொன்னேன்” என்று கண்களை துடைத்தவள், முகிலை நோக்கி,

“பெர்லின் சுவரை இடிச்சப்போ இரண்டு பக்கமிருக்கும் மக்களும் ரொம்ப சந்தோஷப்பட்டாங்களாம். இருபத்தி நான்கு வருடங்கள் பிரிந்திருந்தாலும் கிழக்கு மற்றும் மேற்கு ஜெர்மனியில் பாசத்தோடு தான் இருந்தாங்க. ஆனால், அன்று இருந்ததை விட நம் இரண்டு நாடுகளும் இப்போ வெறுப்பு மண்டிப்போய் இருக்கோம்” என்றவள், முகில் ஏதோ கூறவரவும்,

“இல்லைன்னு பொய் சொல்லாதே முகில். நானும் அதனைப் பார்த்திருக்கேன். எனக்குப் பலதரப்பட்ட மக்களோட பழகுவது ரொம்ப பிடிக்கும். அதுவும், இந்திய மக்களோட ரொம்ப. ஆனால், நான் பாகிஸ்தானைச் சேர்ந்தவள்னு ஒரு கட்டத்துல தெரிய வரும்போது அவங்க அப்படியே தள்ளிப்போயிடுவாங்க. இல்லைன்னா, ‘ஏன் அந்த நாட்டை விட்டு வந்துட்டீங்க? உங்களைச் சரியாக நடத்தாமல் துரத்தி விட்டுட்டாங்களா?’ என்று எண்ணற்ற கேள்விகள். அதனாலேயே நான் பாயலைத் தவிர யாரிடமும் சொன்னதே இல்லை, முக்கியமாக இந்தியர்களிடம். நீ கூட கேட்ட தானே, நான் பாகிஸ்தானின்னு சொன்னதும், முஸ்லிமான்னு?” என்று அவள் கேட்டு நிறுத்த, முகிலால் பதில் கூற முடியவில்லை. அவனும் கேட்டான் தானே!

“ஏன் முகி, அனைத்து நாடுகளிலும் எல்லா மதத்தவர்களும் வாழ்ந்துகொண்டு தானே இருக்கிறாங்க? அது ஏன் எங்களை மட்டும் அப்படி பார்க்கறாங்க? உனக்கு தெரியுமா, கராச்சில தமிழ் மக்கள் நிறைய இருக்காங்க. அதில் ஹிந்துக்களும் அடக்கம். எல்லா நாடும் எல்லாரையும் தான் வாழவைக்குது. ஆனால், எங்க நாட்டை மட்டும் ஒரு வில்லன் ரேஞ்சுக்கு தான் பார்க்கறாங்க ஒரு சிலரால்.

நான் ஒத்துக்கறேன், அந்த பிரிவினையைத் தடுக்க முடிந்திருக்கும், அதனால் வரும் பலவற்றையும் தடுத்திருக்கலாம். ஏன், இப்போகூட இரு நாட்டுத் தலைவர்களும் நினைத்தால் பிரச்சினையை முடிவிற்கு கொண்டு வரலாம். ஆனால், அதை செய்ய மாட்டாங்க. மக்கள் மனசில் அடுத்த நாட்டைப் பற்றிய தப்பான எண்ணம் இருக்கும் வரைக்கும் தான் அவங்க பிழைக்க முடியும்.

எங்க நாட்டில் எல்லாருமே கெட்டவங்கன்னு நான் சொல்லவரல. சிலர் அப்படி இருந்தாலும், எத்தனையோ பேர் உங்களோட நல்லதொரு உறவு வைத்துக்கொள்ள தான் நினைக்கிறாங்க.

கராத்பூர் கோவில் தெரியுமா? பாகிஸ்தானின் பஞ்சாபில் இருக்கு. அங்கே நிறைய பாகிஸ்தானிகள் வருவதே இந்தியர்களைப் பார்க்கதான். அதேபோல் தான் இந்தியர்களும். ஆனால், இவை எல்லாம் வெளியில் தெரியவே தெரியாது. தெரியவைக்கவும் மாட்டாங்க.

நாம எல்லாம் முகநூல் போராளிகள் ஜெனரேஷன் இல்ல முகி? ஒரு உயிர் இறந்தா அதற்கு சில நொடிகளாவது வருந்துவது இயற்கை. அதை கூட பகிரங்கமாக செய்தால் தான் நம்புவாங்க போல. இஸ்லாமாபாத்தில் விமானம் விழுந்து எண்ணற்ற உயிர்கள் இறந்தபோது எத்தனை பேர் ‘உங்களுக்கு இது தேவைதான்’னு கமெண்ட் செய்திருந்தாங்க தெரியுமா? அதே தான் இந்தியாவிற்கு ஏதேனும் நடந்தாலும் நடக்கும். ஒரு கமெண்ட் இப்படி வந்தால், அதற்கடுத்து அதேபோல் சில வந்து, இறுதியில் சிலபேர் ஏதோ நாட்டையே தூக்கி நிறுத்துவது போல் வார்த்தைப் போரில் இறங்கிவிடுவர். இவங்க எல்லாம் இறங்கி வந்து போரிட மாட்டாங்க. நாட்டுப்பற்று எல்லாம் விரல்களில் மட்டும் தான் இருக்கும், வாள் பிடிக்க கை வரைக்கும் கூட வராது. ஒரு பேஸிக் மனிதாபிமானம் கூட இவங்களுக்கு இருக்குமான்னு தெரியல.

ஆனால், சமாதானம் வேண்டும்னு நினைக்கறவங்க இப்படி இருக்க மாட்டாங்க. குல்தீப் நய்யர் தெரியுமா? இந்தியாவின் தலைசிறந்த பத்திரிக்கையாளர்களில் ஒருத்தர். அவர் உயிர்விடும் வரைக்கும் முடிந்தளவு இரு நாட்டு நட்புறவுக்கும் பாடுபட்டார். அபிநந்தனைச் சிறைபிடித்தபோது அவரை விடுவிக்க இந்திய மக்கள் எவ்வளவு சப்போர்ட் கொடுத்தாங்களோ, அதே அளவு அங்கிருந்தும் கேட்டாங்க. அதை மறுக்க முடியுமா?” என்று அவள் கேட்க,

“அப்போ அனைத்து பிரச்சனைக்கும் காரணமான காஷ்மீர் விஷயத்தை அப்படியே விட்டிட சொல்றியா?” என்று கேட்டான் அவன்.

“அதப்பத்தி பேசினா ரொம்ப டீட்டெய்லா சொல்ல வேண்டியது இருக்கும் முகி. சுருக்கமா சொல்லனும்னா, ஒவ்வொருத்தங்களோட சுயநலம் தான் அது. சிலரோட அந்த போக்கினால் இப்போ ஒரு மாநிலமே எங்கள நிம்மதியா விட்டா மட்டும் போதும்னு கதறிட்டு இருக்கு” என வருத்தத்தோடு கூறினாள் அனிலா.

“நம்மால நாடுகளை மாத்த முடியும்னு நினைக்கறியா?” என்று அவன் கேட்க, அவனை பார்த்தவள், “நாட்டை மாத்தி என்ன ஆகப்போகுது முகி? அங்கிருக்கும் மனிதர்கள் மாறினா போதாதா? நம் நாடு நல்லா இருக்கனும்னு நினைக்கிறது தப்பில்லை. ஆனால், நம்ம நாடு மட்டும் தான் நல்லா இருக்கனும்னு நினைக்கிறது தப்பு, அதற்காக மற்ற நாட்டை தூற்றுவதும், அங்கிருப்பவர்களை தூற்றுவதும் தப்பு” என்றவள் அவனிடம் விடைபெற்று கீழிறங்கினாள். அவளையே பார்த்திருந்த முகிலின் முகம் யோசனையை காட்டியது.
 
Top