Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலாகி காதல் செய்வோமே 20

Advertisement

lekha_1

Active member
Member
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...

இதோ, கதையின் அடுத்த பதிவு...


காதல் 20

1307


நவராத்திரி – ஒன்பது ராத்திரிகள் என்பது பொருள். புரட்டாசி மாதத்தில் வரும் இந்த திருவிழா, துர்கையம்மனுக்கு உகந்ததாகும். மகிஷாசுரனுடன் ஒன்பது நாட்கள் போரிட்டு அவனை வென்ற ஆதிசக்தியை கொண்டாடும் விழா இது. பத்தாவது நாளை விஜயதசமி என்பர். அந்நாளில் தொட்ட காரியம் வெற்றி பெரும் என்பது நம்பிக்கை. ஒவ்வொரு நாளும் அம்மனை ஒவ்வொரு விதமாக அலங்கரித்து வழிப்படுவர். அதன்பின், இரவு நேரத்தில் கர்பா அல்லது தாண்டியா நடனம் ஆடுவர்.

கர்பா என்பது ஒரேபோல் ஆண்களும் பெண்களும் வட்டமாக கூடிநின்று, நடுவில் விளக்கை வைத்து ஆடுவதாகும். நடன அசைவுகள் எளிமையாக இருந்தாலும், அதனை பார்க்கும்போது அத்தனை அழகாக இருக்கும். இது குஜராத் மாநிலத்தில் மிகவும் பிரசித்தி. ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் பொதுவாக கர்பா மற்றும் தண்டியா நிகழ்ச்சிகளை நடத்தும்போது வண்ணமயமான ஆடைகளை அணிவார்கள். பெண்கள் மற்றும் சிறுமிகள் அணிய சானியா சோளி. சோளி என்பது பூ வேலைப்பாடுடன் கூடிய வண்ணமயமான அங்கி. இதனுடன் வழக்கமாக சோளியைத் தழுவியபடி அணியப்படும் துப்பட்டா, கீழே பாவாடை ஆகியவை இணைந்ததே சானியா சோளி ஆகும். குஜராத்தி முறை. சானியா சோளிகள் மணிகள், குண்டுகள், கண்ணாடிகள், நட்சத்திரங்கள் மற்றும் பூ வேலைகள், மேட்டி போன்றவற்றால் அலங்கரிக்கப்பட்டிருக்கும். பாரம்பரியமாக, பெண்கள் தங்களை ஜும்கா எனப்படும் பெரிய காதணிகள், கழுத்தணிகள், பொட்டு, பஜுபந்த், சூடாக்கள் மற்றும் கங்கணங்கள், கமர்பந்த், பாயல் மற்றும் மோஜிரிகளால் அலங்கரித்துக் கொள்கின்றனர். சிறுவர்களும் ஆண்களும் காஃபினி பைஜாமாக்களை- ஒரு கக்ராவுடன் முழங்கால்களுக்கு மேல் வரை ஒரு குறுகிய வட்டமான குர்தா மற்றும் பாகடி துபட்டா, தலையில் பாந்தினி துப்பட்டா, கடா, மற்றும் மோஜிரிகளுடன் அணிந்துகொள்கிறார்கள்.

குஜராத்திய மக்களுக்கும் சிந்து மாகாணத்தில் வசிக்கும் மக்களுக்கும் நிறைய ஒற்றுமைகள் உண்டு. அதில் ஒன்று, நவராத்திரி.

பொதுவாக சிந்திய மக்கள் பெரும்பாலான திருவிழாக்களை ஒன்றாகவே கொண்டாடுவர். பத்தாவது நாள் மட்டும் விமர்சையாக கொண்டாட ஏற்பாடு செய்திருந்தனர் அனிலாவின் வீட்டில்.

இன்று பத்தாவது நாள். அதற்காக தெரிந்தவர்கள் அனைவரையும் அழைத்திருந்தார்கள். பூஜை முடிந்ததும் தோட்டத்தில் கூடினர் அனைவரும். பெரும்பாலோனோர் வண்ணமயமான உடைகளையே அணிந்திருந்தனர்.

தன்னறையில் கண்ணாடியின் முன் மீண்டும் ஒரு முறை தன்னை பார்த்துக்கொண்டான் முகில். கருப்புக்கலரில் ஒரு பைஜாமா அணிந்திருந்தான். அதில் நிறைய கண்ணாடிகள் ஒட்டப்பட்டிருந்தன. காற்சாரையோ பட்டியாலா போன்ற தோற்றத்தில் இருந்தது. அவனை இந்த புதுத்தோற்றத்தில் பார்க்க சிறிது சிரிப்பாக இருந்தாலும், அதிலும் அவன் ஒரு வகையில் அழகாகவே தெரிந்தான்.

தன்னையே பார்த்துக்கொண்டிருந்தவனை கலைத்தது அனிலாவின் குரல். ஹாலில் இருந்து கத்திக்கொண்டிருந்தாள். “முகி… சீக்கிரம் வா… எல்லாரும் வந்துட்டாங்க.” அவளிடம் வருவதாக உரைத்தவன் மாடியில் இருந்து இறங்கினான்.

கீழே நின்றுகொண்டிருந்தவள், சிவப்பு நிறத்தில் சோளி அணிந்திருந்தாள். கைநிறைய வளையல்கள், காதில் பெரிய காதணி என, இதுவரை பார்த்ததில் இருந்து முற்றிலும் வேறுபட்டு தெரிந்தாள். அதில் அந்த தையலிடம் மீண்டும் வீழ்ந்தது அவன் மனம்.

“வா முகி…” என அவன் கைபிடித்து இழுத்து தோட்டத்திற்கு சென்றவள், அவனையும் கூட்டத்தில் கலக்க வைத்தாள்.

கிட்டத்தட்ட ஐம்பது பேர் வந்திருந்தனர். அதில் பெரும்பாலும் இந்தியர்கள். அவர்களொடு இருவரும் இணைந்துகொண்டனர். எப்படி ஆடுவது என்றே தெரியவில்லையே என்றவன் விழிக்க, அவன் முகத்தைக் கண்டே என்னவென்று புரிந்துகொண்டவள், சில நடன அசைவுகளை பாடலுக்கு ஏற்றவாறு அவனுக்கு சொல்லிக்கொடுத்தாள்.

சிறிது நேரத்திலேயே நடனம் பிடிபட, சந்தோஷமாக ஆடினான் அவனும். முதலில் சிறிது சங்கோஜமாக இருந்தாலும், அனைவரும் ஆடும்போது அவனுக்கும் அதில் தானாகவே ஈடுபாடு வந்துவிட்டது.

நடுநிசி வரை ஆடிவிட்டு கலைந்து தங்கள் வீடுகளுக்கு கிளம்பினர் அனைவரும். வீட்டினரும் களைப்பாக ஹாலில் வந்து அமர்ந்தனர்.

சில நிமிடங்கள் ஆசுவாசப்படுத்திக்கொண்ட அனிலாவின் மாமா, முகிலைப் பார்த்து, “நல்லாவே ஆடினேப்பா…” என்று அவனை பாராட்ட, “ரொம்ப தேங்க்ஸ் சார். இந்த மாதிரி எல்லாம் நாங்கள் கொண்டாட மாட்டோம். பூஜையோடு சரி. அதுவும் பொதுவாக வீட்டோடுதான். எல்லாரும் கூடி இருந்து கொண்டாடுவதும் நன்றாக இருக்கு” என அவன் உளமாற உரைக்க, அவனை பெருமை பொங்க பார்த்தாள் அனிலா.


*****

விடிந்தும் விடியாத நேரத்தில் அனிலாவில் கைப்பேசி அலறியது.

“எவண்டா அது… நிம்மதியா தூங்கவே விடமாட்டேங்கறாங்க… லூசு…” என திட்டியவள், டிஸ்ப்ளேயை பார்க்க, அது முகில் என்றது.

“அட நம்ம லூசு…” என்றவள், மணியைக் கண்டு, ‘இவன் எதுக்கு இப்போ கூப்பிடறான்?’ என எண்ணியவாறே அழைப்பை எடுத்தாள்.

“சொல்லு முகி…”

“நிலா… ஐந்து மணிக்கு ஏர்போர்ட் போகனும். யாருக்கும் தெரியாம. ரெடியா இரு. முக்கியமான ஒருத்தங்கள கூட்டிட்டு வரனும்” என்று கூறி துண்டித்துவிட்டான்.

“ஹலோ ஹலோ” என்று மறுபுறம் அவள் கத்தியதை கணக்கிலேயே எடுத்துக்கொள்ளவில்லை.

“போடா… நீ கூப்பிட்டா, நான் வரனுமா?” என நினைத்தவள், தன் தூக்கத்தை தொடரலானாள். அவனோ, விடாக்கண்டனாய் நான்கரை மணிக்கு அழைத்து எழுப்பிவிட்டான். அவனை திட்டிக்கொண்டே கீழே வந்தவள், கத்தப்போக, அவள் வாயை மூடி அமைதியாக இருக்கும்படி கூறி வெளியே அழைத்து வந்தவன், “வண்டிய எடு…” என்றான்.

“அப்படியே தூக்கத்துல எங்கையாவது மோதிடுவேன். பரவாயில்லையா?” எனக் கேட்டாள் அவள். தூக்கம் பறிபோன கோபம் அவளுக்கு.

“நானே ஓட்டுறேன். நான் ரெண்டு வருஷம் ஜெயிலுக்கு போனா பரவாயில்லையா?” என அவன் கேட்க,

“அடப்பாவி… ட்ரைவிங் லைசன்ஸ் இல்லையா?” என்று கேட்டாள் அவள்.

“இண்டர்நேஷனல் இல்ல. இப்போ எடுக்கறியா? டைம் ஆகுது. அவங்க வந்து காத்திட்டிருப்பாங்க” என்றான்.

“அப்படி யாரு தான்டா வரப்போறாங்க? இவ்வளவு சீன் போடற?”

அவளை சிறு சிரிப்புடன் பார்த்தவன், பின் அவள் கன்னத்தை மெல்ல தட்டி, “கூடிய சீக்கிரம் தெரிஞ்சுப்ப டார்லிங்” என்றவன், காரை எடுக்கப் பணித்தான்.

“கத்தரிக்காய் முத்தினா சந்தைக்கு வரத்தான செய்யனும்…” என நொடித்தவளோ, அவனை திட்டியவாறே விமான நிலையத்தை நோக்கி ஓட்டினாள்.


*****

“அனிலா… அனிலா…” என்று கூப்பிட்டவாறே ஹாலுக்கு வந்து சேர்ந்தார் நுஸ்ரத்.

“என்ன பாட்டி, இந்த நேரத்துல கூப்பிடறீங்க? நைட் லேட்டா தூங்கினதில் டயர்டில் தூங்கிட்டு இருப்பா” என்றார் அவள் தந்தை.

“அவகிட்ட எனக்கு மாத்திரை வாங்கிட்டு வர சொன்னேன். இன்னைக்கு விடிந்ததும் நியாபகப்படுத்துங்க. வாங்கிட்டு வரேன்னு சொன்னா. அதுக்கு தான் கூப்பிடறேன். சாப்பிடும்முன்னே மாத்திரை போடனுமே” என்றார் அவர்.

“ஏன் பாட்டி, அவகிட்ட சொன்னீங்க? நானே போய் வாங்கிட்டு வந்திருப்பேனே” என்றார் அனிலாவின் தந்தை.

“காலையில் ஜாகிங் போகும்போது வாங்கறேன்னு சொன்னதால தான் சரின்னு சொன்னேன். அதுக்கு என்ன இப்போ… இரு… மருந்துச் சீட்டு எடுத்துட்டு வரேன். நீயே போய் வாங்குவியாம்” என்றவர் தன்னறைக்குள் செல்ல, அப்போது தான் தன் மூச்சைப் பிடித்து பயத்தோடு நின்றிருந்த சதாஃப் அதனை வெளியேற்றினாள்.

வெளியே கார் வந்து நிற்கும் சத்தம் கேட்க, ‘இந்நேரத்தில் யார் வந்திருக்கிறார்கள்?’ என்று நினைத்து மற்றவர்கள் வாசலுக்கு வர, அதே நேரம் பாட்டியும் ஜன்னலின் அருகே வந்திருந்தார், யாரென்னும் யோசனையுடன்.

காரில் இருந்து மகிழ்வுடன் இறங்கினர் முகிலும் அனிலாவும். அதனை அதிர்ச்சியுடன் பார்த்தார் நுஸ்ரத்.


*****

இருவரும் வீட்டினுள் நுழைய, அங்கே பாட்டி கோபமாக நின்றிருந்தார். அவரை மற்றவர்கள் அதிர்வுடன் நோக்க, அதனை கணக்கில் கொள்ளாமல், தன் மகனிடம் திரும்பியவர், “வேண்டாம் வேண்டாம்னு சொன்னேன் தான, அப்போவே கேட்டிருக்கனும். இங்கேயே வீட்டுல தங்க வைத்ததற்கு என்ன செய்திருக்கான்னு பாருங்க. இந்த நேரத்தில் அப்படி என்ன வேலையாம் வெளியில்?” என தன் கேள்விக்கணைகளை தொடுக்க,

“நுஸ்ரத்…” என்னும் ஒரு குரல் அவரை தடைசெய்தது. அந்த குரலில் வாசல்புறம் திரும்பியவரின் கண்ணில் தென்பட்டார் அந்த முதியவர். கிட்டத்தட்ட நுஸ்ரத்தின் வயதிருக்கும். அவரை சிறிது நேரம் யாரென அடையாளம் தெரியாமல் பார்த்த நுஸ்ரத், வலது நெற்றியில் இருந்த வடுவைக் கண்டு, “ஷப்னம்…” என்றழைத்து அந்த தள்ளாத வயதிலும் ஓடிவந்து கட்டிக்கொண்டார்.


*****

அனிலா முகிலிடம் பேசிய அடுத்த நாள்,

சாற்றியிருந்த கதவையே நெடுநேரம் பார்த்து நின்றிருந்தாள் அனிலா. காலையுணவுக்கு வந்து சென்றவன் தான். அதன்பின் ஆள் வெளியில் வரவே இல்லை.

‘நம்ம பேசறதே இல்லன்னு சொல்வான். இப்போ எல்லாரையும் வேற வேலை கொடுத்து அனுப்பி வெச்சுட்டு இவனோட பேச வந்தா, காலைல வந்து ஒரு அரத பழசான போட்டோவ வாங்கிட்டு உள்ள போனவன் தான்… அதற்கப்புறம் காணவில்லை போர்ட் மாட்டி தேட வேண்டியதா இருக்கு இவன’ என நொடித்தவாறு எப்படி அவனை வெளியே வரவைப்பது என்று சிந்தித்துக்கொண்டிருந்தாள். அவன் தான் கைப்பேசி அழைப்புகளையும் எடுக்கவில்லையே!

அப்போது அங்கே வந்த சதாஃப் அனிலா அவன் அறைக்கதவையே பார்த்திருப்பதைக் கண்டு, அவள் தோளில் கைவைத்து, “தேடும் கண் பார்வை தவிக்க… துடிக்க…” என்று பாட, அவளை முறைத்தாள் அனிலா. (பாடுனது ஹிந்தில. நாம கண்வேர்ட் செய்துப்போம்…)

“இங்க யாரும் தேடிட்டு இருக்கல” என்றவள் அதற்கு நேர்மாறாக அந்த பக்கமே பார்வையை கொண்டு செல்ல, “தெரியுது…” என நொடித்தாள் சதா. அவளை செல்லமாக அடித்தவள், “கடைசி நாளுக்கு தான எல்லாரும் வராங்க… வா… எனக்கு சோளி பார்க்கலாம். அது இல்லன்னா வெளிய வாங்கிட்டு வரனும்” என்று கூறி இழுத்திக்கொண்டு சென்றாள்.

மாலை நேரம் போல அனிலாவை அறைக்கு வர சொல்லியிருந்தான் முகில். அங்கே சென்றவளை அறையின் ஓரம் அழைத்துச் செல்ல, அவள் கண்டதை நம்பவே முடியவில்லை.

காலையில் அனிலாவிடமிருந்து ராவலின் குடும்பப் படத்தை வாங்கி சென்றிருந்தான் முகில். அதில் ஷப்னமை மட்டும் எடுத்து, அவள் முகத்தை நவீனப்படுத்தி வரைந்திருந்தான்.

“வாரே வா… உனக்குள்ள இப்படி ஒரு திறமை இருக்கா? தெரியாம போச்சே முகி!” என்று அவள் தோளை தட்டி பாராட்டினாள் அனிலா.

“தாங்க் யூ” என்று அவள் பாராட்டை ஏற்றுக்கொண்டவன், “இது எதுக்குன்னு கேட்கலியே நீ?” எனக் கேட்டான்.

தலையை தட்டிக்கொண்டவள், “ஆமால்ல… காலைல ஃபோட்டோ வாங்கிட்டு வந்த. அத வெச்சு ஏன் ஷப்னம் பாட்டிய மட்டும் வரைந்திருக்க?” என்க,

“உங்க பாட்டி அவங்கள பாக்க ஆசைப்படறாங்கன்னு சொன்ன தான? அதற்கு தான் இது” என்றவன் தன் திட்டத்தையும் கூற, “சாத்தியப்படுமா முகி?” என்று டவுட்டாக கேட்டாள் அனிலா.

“ட்ரை செய்து பார்ப்போமே! ஒரு வேளை கிடைத்துவிட்டால்?” எனக் கேட்டான் அவன்.

“கிடைத்தால் ரொம்ப சந்தோஷம் தான்!” என்றவள் அவனை கீழே அழைத்துச் சென்றாள்.


*****

அதனை இன்று நினைத்துப் பார்த்த அனிலா, பாட்டியின் மகிழ்வை கண்ணீருடன் பார்த்து நின்றிருந்தாள். மற்றவர்களும் தொலைந்த சொந்தம் மீண்டும் சேர்ந்த மகிழ்வுடன் இருந்தனர்.

“எப்படி ஷப்னம் இருக்க? ராவல் உங்களை எங்கெங்கே எல்லாம் தேடினார் தெரியுமா?” என்று குறைபட்டுக்கொண்டார் நுஸ்ரத். கடைசிவரை தன் குடும்பத்தார் கிடைக்கவில்லை என மனவேதனையில் இருந்தாரே ராவல்.

“நீங்க அங்கிருந்து போன கொஞ்ச நாளில் நாங்களும் வெளியேற வேண்டியதாயிற்று. அதனைப் பற்றி உங்களுக்கு சொல்ல முடியவில்லை” என்று ஷப்னமும் கூற,

“இவ்வளவு நாள் எங்கே இருந்த? நீ எவ்வாறு இங்கே?” என்று அவர் கேட்க, முகிலின் புறம் கை காட்டினார் ஷப்னம்.

ஷப்னமின் வரவு எத்தகைய திருப்புமுனையை ஏற்படுத்தும்?
 
Top