Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலாகி காதல் செய்வோமே 21

Advertisement

lekha_1

Active member
Member
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...

இதோ கதையின் அடுத்த பதிவு... சென்ற பகுதிக்கு ஆதரவளித்தவர்கள் அனைவருக்கும் நன்றி...


காதல் 21

1310

“இந்த பையன் தான் என்னை கண்டுபிடித்து, நீ இங்க இருக்கன்னு சொல்லி என்னை கட்டாயப்படுத்தி வரவைத்தது. எங்கள நீங்க ரெண்டு பேரும் ரொம்ப தேடுனீங்கன்னும், இப்போ வரைக்கும் எங்களப்பத்தி ஏதாவது தகவல் கிடைக்காதான்னு பாக்கறீங்கன்னு. சாரி நுஸ்ரத். எங்களால உங்கள காண்டேக்ட் செய்ய முடியல” என்றார் ஷப்னம்.

“எங்க போனீங்க நீங்க? இவ்வளவு நாள் என்ன ஆச்சு?” என்று கேட்டார் நுஸ்ரத்.

“இந்தியாக்கு போக வேண்டிய கட்டாயம் நுஸ்ரத். உங்களுக்கு சொல்ல முடியல. முதலில் ஒரு பாதுகாப்பான இடத்திற்கு போயிட்டு சொல்லலாம்னு நினைச்சோம். ஆனால், அங்க போறதுக்குள்ளே…” என்றவர் அதற்கும்மேல் தாங்க முடியாமல் அழ ஆரம்பிக்க,

நுஸ்ரத்தோ, “ஷப்னம்… எதுவா இருந்தாலும் சிறிது நேரம் கழித்து பேசிக்கலாம். நீ இப்போ டயர்டா இருப்ப. வா… உள்ளே போகலாம்” என்று கூற, அதையே வழிமொழிந்தான் அவ்வளவு நேரம் அமைதியாக இருந்த ஒரு இளைஞன்.

அவனைக் கண்டு, “நீ யாருப்பா…” என நுஸ்ரத் கேட்க, அவன் கூறுவதற்குள் தானே அவனை அறிமுகப்படுத்தினார் ஷப்னம், தன் பேரன் என்று.

இருவரும் அங்கிருந்து எழ, முகிலை பார்த்த நுஸ்ரத், ஒரு நன்றியுரைத்துவிட்டு ஷப்னமை அவரது அறைக்கு அழைத்துச் சென்றார். அவர்களை பின்தொடர்ந்தாள் அனிலா, குளிர்பானங்களுடன். அவளையே பார்த்திருந்த முகிலை கணைத்து நிகழ்காலத்திற்கு அழைத்துவந்தான் அருகில் இருந்தவன்.

அவனைக் கண்டதும், “ரொம்ப தாங்க்ஸ் தம்பி…” என்று அணைத்துக்கொண்டான் முகில். “உங்களுக்கு தான் ப்ரதர் தேங்க்ஸ் சொல்லனும். எங்களுக்கு தோணாதது உங்களுக்கு தோன்றியிருக்கே… அதுக்கே பாராட்டனும்” என்றவன் கூற,

“இதில் என்ன இருக்கு? ஒருத்தருக்கு ஒருத்தர் உதவிதானே!” என்றான் முகில்.

அவனிடம் அனிலா நுஸ்ரத்தைப் பற்றி கூறியபோது அவர்களுக்காக மிகவும் வருத்தப்பட்டான். வளர்ந்த இடத்தை விட்டு, சொந்த பந்தங்களை விட்டு, அவர்கள் எங்கே என்றே தெரியாமல் வாழ்வது கொடுமையல்லவா? அவர்களை கண்டால் எவ்வளவு மகிழ்வார் என்று யோசித்தவன், அவர்களை கண்டுபிடிக்க முடிவெடுத்தான். பெயரை மட்டும் வைத்து என்ன செய்வது? என்று யோசித்தவன், அனிலாவிடம் புகைப்படம் கேட்டான். நல்லவேளையாக அவளிடம் இருந்தது.

அதனைக் கொண்டு ஷப்னம் போலவே ஒரு படத்தை வரைந்து தன் சமூகவலைதளத்தில் பதிவிட்டான். பெரும்பாலும் முகில் அதனை உபயோகிப்பதில்லை. இருந்தாலும், முயற்சிப்போம் என்று நினைத்து பதிவிட, அதில் பலர் அவன் திறமையை பாராட்டினர். ஆனால், அவனுக்கு எது தேவையோ, அது கிட்டவே இல்லை.

அவன் பதிவிட்ட மறுநாள், வழக்கம்போல அந்த பதிவின் கமெண்ட்களை காண, கிட்டியது அது. அதில் இந்த இளைஞன், தன் பாட்டியை காண்பது போலவே இருக்கிறதென்றிருந்தான். அவ்விளைஞனை தொடர்பு கொண்டு பலவாறு உறுதிபடுத்தி பயணச்சீட்டையும் எடுத்து வரவைத்துவிட்டான் முகில். அவனுக்கு தூதரகத்தில் தெரிந்தவர்கள் இருந்ததால் விரைவிலேயே அனைத்தும் முடிந்துவிட்டது.


*****

அறையினுள் ஷப்னமை ஓய்வெடுக்க வைத்து, அருகிலேயே அமர்ந்துகொண்டார் நுஸ்ரத். அவருக்கு இன்னும் நம்பமுடியவில்லை, ஷப்னம் அவருடன் இருப்பதை. சிறு குழந்தைபோல் தன் கைப்பிடிக்குள் அவர் கைகளை நுழைத்துக்கொண்டவர், தடவிக்கொடுத்தார்.

“ராவல்… உன் தங்கையை பார்க்கனும்னு எவ்வளவு ஆசைப்பட்ட? இன்னைக்கு உன் தங்கைதேடி வந்துட்டா. ஆனால், அவளை பார்க்க நீ இல்லையே!” என்று காற்றோடு கலந்த தன் உயிரானவனுடன் பேசிக்கொண்டிருந்தார் சிறிதுநேரம்.

ஷப்னமை கண்டதில் இருந்து பழைய நினைவுகள் அதிகமாக தாக்க, ராவலை சந்தித்த தினத்திலிருந்து அனைத்தையும் அசைபோட்டவர், சாய்ந்தவாக்கிலேயே தூங்கிவிட்டார்.

இருவரும் எழ மதியமானது. அதன்பின் தங்கள் வாழ்க்கைக் கதைகளை பேசத் துவங்கினர். நுஸ்ரத் தாங்கள் இந்தோனேஷியா சேர்ந்ததிலிருந்து நடந்தவற்றை கூற, அவர்கள் சென்றபிறகு மீத்தியில் நிகழ்ந்த சம்பவங்களை கூறினார் ஷப்னம்.


*****

சிந்து மாகாணத்தில் உள்ள நகரங்களில் பெரும்பாலான சொத்துக்களை வைத்திருந்தவர்கள் ஹிந்துக்களே. அதனாலேயே, பிரிவினையின்போது சிலர் மட்டுமே இந்தியாவிற்கு வந்தனர். ஆனால், விரைவிலேயே சூழ்நிலை மாறத்துவங்கியது.

டிசம்பர் 6, 1947 அன்று அஜ்மீருக்கு சிந்தில் இருந்து வந்தவர்களுக்கும், அங்கேயே தங்கியிருந்த மற்ற மதத்தினருக்கும் கைகலப்பு ஏற்பட்டு, சேதங்கள், சொத்துக்கள் அபகரிப்பு முதலியன நிகழ்ந்தன. இதன் காரணமாக, எண்ணற்றவர்கள் ராஜஸ்தான் வழியாக சிந்தினுள் புகுந்தனர்.

இதனால், ஜனவரியில் சிந்தில் உள்ள ஹைதராபாத்தில் கலவரம் துவங்கியது. அது கராச்சிக்கும் பரவி, அங்கேயும் பல இழப்புகள். அதன் தாக்கம் பல இடங்களில் பரவ, பலர் குஜராத் வந்து சேர்ந்தனர். இதனால், குஜராத் கலவரபூமியாக, அங்கிருந்து பலர் சிந்திற்கு இடம்பெயர்ந்தனர்.

பிரிவினையின் போது ஆங்காங்கே சிந்திலும் கலவரம் நடந்துகொண்டே தான் இருந்தது. அது பெரியதாக இல்லாததால், மீத்தி வரை வரவில்லை. இதனால், நாட்டை விட்டு செல்ல விரும்பாத சிலர் தங்களுக்கு பாதுகாப்பு தேடி இவ்விடம் வந்து சேர்ந்தனர். அவர்களை தங்களோடு இணைத்துக்கொண்ட அந்த கிராமத்தினரும் அவர்களுக்கு வேண்டிய உதவிகளை செய்துவந்தனர்.

இவ்விஷயம் அனைத்தும் ராவலின் பெற்றோருக்கு தெரிந்தாலும், நுஸ்ரத்தே கலக்கத்தில் இருக்க, அவளை மேலும் துக்கத்தில் ஆழ்த்த விரும்பாதவர்கள், கலவரம் பற்றிய செய்திகள் அவளை எட்டாமல் பார்த்துக்கொண்டனர். அவள் காதுகளுக்கு எட்டினாலும் அது கருத்தில் பதியும் நிலையில் அவளும் இல்லை. அவள் மனதை மாற்ற அவர்கள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் விழலுக்கு இறைத்த நீராகின. இக்கணத்தில் தான் ராவல் அங்கு வந்து சேர்ந்தான்.

அவர்கள் இருவரும் காதலிப்பது தெரிந்ததும், முதலில் தயக்கம் காட்டியவர்கள், நிஸ்ரத்தின் மீதுள்ள அன்பால் அவளை ஏற்றுக்கொண்டனர். அதன்பின், சில காரணங்களால் இருவரையுமே நாட்டை விட்டு அனுப்பும்படி ஆகிற்று.

அப்போது ஷப்னமையும் தங்களோடு அனுப்புமாறு கேட்டுக்கொண்ட ராவலையும் நுஸ்ரத்தையும் மறுத்தவருக்கு, விரைவிலேயே அவர்களோடு அனுப்பியிருக்க வேண்டும் என எண்ணும்படி சம்பவங்கள் நடைபெறும் என்பதை அறியவில்லை.

நாட்கள் சில கடக்க, தொழில் விஷயமாக கராச்சிக்கு செல்ல நேர்ந்தது அவருக்கு. அப்போதுதான் ஹைதிராபாத்தில் வன்முறை துவங்கிய நேரம். மனைவி வேண்டாம் என்று மறுத்தும் முக்கியமான காரியம் என்பதால், தானே செல்லவேண்டும் என்றும், விரைவில் வருவதாகவும் வாக்களித்துவிட்டு சென்றார். ஆனால், அங்கே நடந்த கலவரத்தில் அவரும் அடிப்பட்டு தட்டுத்தடுமாறி வீடு வந்து சேர்ந்தார். அப்போதே அவருக்கு தெரிந்துவிட்டிருந்தது, இனி இங்கு வாழ்வது சாத்தியமில்லை என்று.

தன் மனைவியையும் மகளையும் அழைத்து விரைவிலேயே குஜராத் செல்ல வேண்டும் என்று கூறியவர், தங்களுக்காக வாகனமும் ஏற்பாடு செய்தார். அவர் குணமானதும் செல்லலாம் என்ற இருவரின் பேச்சையும் கேட்கவே இல்லை.

தற்போது வேகமாக பரவிவரும் அந்த கலவரத்தீ தங்களை தாக்குவதற்குள் வேறு இடம் செல்ல வேண்டும் என்பது மட்டுமே அவர் எண்ணத்தில் இருந்தது. அதனால், என்ன சொல்லியும் கேட்காமல், முதலுதவி மட்டும் செய்துகொண்டு அவர்களுடன் வண்டியில் ஏறினார்.

செல்லும் வழியில் அவருக்கு மிகவும் முடியாமல் போக, வழியில் மருத்துவமனையில் நிறுத்தக்கூட அனுமதிக்கவில்லை. அவருக்காக பார்த்து இருவரையும் சிக்கலில் மாட்ட வேண்டுமா? எங்கெங்கும் காணினும் குருதிதானே இருந்தது!

ஒரு வழியாக குஜராத் வந்து சேர்ந்ததும் அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல, காயங்களால் மிகவும் சோர்வுற்றிருந்தார் அவர். சில நாட்கள் சிகிச்சை அவர் உயிரைப் பிடித்து வைத்திருக்க, அதுவும் ஒரு கட்டத்தில் முடியாமல் போனது.

ராவலும் நுஸ்ரத்தும் இருக்கும் இடத்தைப் பற்றி தெரிந்தவர் அவர் மட்டும் தான். தன் மனைவி மகளிடம் கூறி அவர்கள் விளையாட்டாக வெளியில் சொன்னால் கூட ஆபத்து என நினைத்தவர், அவர்களிடம் கூட மூச்சு விடவில்லை. அதனால், இருவரையும் தொடர்பு கொள்வது தாய்க்கும் மகளுக்கும் முடியாமலேயே போனது.

அவர் இறப்பிற்குப் பின் இருவரும் மும்பை வந்து தங்களால் முடிந்த வேலைகளை செய்து வயிற்றைக் கழுவினர். பின், தையல் கலை கற்று ஒரு சிறிய கடையை நடத்தத் துவங்கினாள் ஷப்னம். அதன்பின் ஏறுமுகம் தான். எவரஸ்டைத் தொடும் உயரம் வரவில்லையென்றாலும், குன்றைத் தொட்டு வயிற்றோடு சேர்த்து சேமித்தும் வைக்க அவர்கள் தொழில் உதவியது.

தானாகவே உடைகள் தயாரிப்பிலும் அவள் இறங்க, அப்போது பழக்கமானவர் தான் புவன். அவரிடம் தன் தொழில் வகையில் உதவிகேட்டு ஷப்னம் செல்ல, பார்த்தவுடனேயே பிடித்தது அவருக்கு. ஆனால், ஷப்னமிற்க்கு அவ்வாறு எதுவும் தோன்றவில்லை. சில கால நட்பு பல கால உறவுக்கு வித்திட, இருவரும் தொழிலோடு வாழ்க்கையையும் பங்குபோட்டுக் கொண்டனர்.

ஷப்னமிற்கு இரு ஆண்கள் பிறக்க, ஒருவர் டெல்லியிலும், மற்றவர் மும்பையிலும் இருக்கின்றனர். இவரும் கணவரும் மும்பையில் இளையவருடன். அவரோடு வந்திருப்பது, இளையவரின் மகன்.


*****

அனைத்தையும் கேட்ட நுஸ்ரத், “ஏன் என்னிடம் முன்னவே சொல்லல? எல்லாரும் மறைச்சிட்டீங்களே!” என்று கேட்டார்.

“சொல்லி உன்னை கஷ்டப்படுத்த நாங்க விரும்பல. அதுவும் இல்லாமல், அதனை கேட்கும் நிலையில் நீயும் இல்லை” என்றார் ஷப்னம்.

இருவரும் சிறிது நேரம் அமைதியாக இருந்தனர். பின், ஷப்னம், “அங்க ஹாலில் ஒரு பையன் இருந்தானே! அவன் தான் என்னை தேடி கண்டுபிடித்ததாம். சோட்டு சொன்னான். ரொம்ப நல்லா பழகுறான்” என்று கூற,

அதில் புன்னகைத்த நுஸ்ரத், “ஆமாம்… நல்ல பையன் தான். அவன் பேசுறத கேட்கனுமே! சில சமயம் ராவல் பேசுவது போலவே இருக்கும். அவனும் இடக்கை பழக்கம் உள்ளவன் தான். உனக்கு நியாபகம் இருக்கா? நீங்க முதன்முதலில் எங்க வீட்டிற்கு வந்தபோது ராவல் இடக்கையால் சாப்பிட நான் திட்டினேனே! அதற்கு அவன் என்ன சொன்னான்? அதே மாதிரி தான் இவனும் சொன்னான். அதில் இருந்து அந்த பையன பார்த்தா எனக்கு கோபத்த காட்ட முடியவே இல்லை” என்று கூறிக்கொண்டே சென்றார்.

“அந்த பையன் மேல உனக்கு எதுக்கு கோபம்?” என ஷப்னம் கேட்க, “அவன் இந்தியனாச்சே!” என்று வெறுப்பாக பதில் கூறினார் நுஸ்ரத்.

“அப்போ, நானும் இப்போ இந்தியன் தான். அதற்காக என்னையும் வெறுத்திருவியா?” என கேள்வியெழுப்ப, இதற்கு என்ன பதில் கூறுவது என்று விழித்தார் அவர்.

அவரை தோளோடு அணைத்துக்கொண்ட ஷப்னம், “இந்த உலகம் அன்பால் ஆளப்பட்டால் மட்டுமே அனைவரும் சந்தோஷமாக இருக்க முடியும். வாழும் சில காலமும் ஒருத்தரை ஒருத்தர் வெறுத்துட்டு இருக்க முடியாது. அதுவும், ஒவ்வொரு காரணம் சொல்லி எல்லாரையும் ஒதுக்கிட்டே இருந்தோம்னா, கடைசில நம்ம மட்டும் தான் தனியா நிற்போம்” என்றவர், “வா… தோட்டத்திற்கு போகலாம்” என அழைத்துச் சென்றார்.

அங்கே முகில், அனிலா, சதாஃப் மற்றும் இஷான் (ஷப்னமின் பேரன்) தண்ணீரை பீய்ச்சியடித்தவாறு விளையாடிக்கொண்டிருக்க, அதனை ரசித்தபடியே அங்கே போட்டிருந்த நாற்காலிகளில் அமர்ந்துகொண்டனர் இருவரும்.

முதலில் சதாஃபின் மேல் அடித்தவர்கள், அவள் தங்களை துரத்தவும் அந்த தோட்டத்தில் சிதறியடித்து ஓடினர். இவ்வாறு ஒருவர் மாற்றி ஒருவர் அடித்து விளையாட, அதில் தோட்டமே சேறும் சகதியுமாக ஆனது.

சொட்ட சொட்ட நனைந்துகொண்டிருந்தவர்களை பார்த்தவாறு உள்ளிருந்து வந்த சதாஃபின் தாயார், “எல்லாரும் என்ன செய்து வெச்சிருக்கீங்க? இனி நான் தான் அனைத்தையும் சுத்தம் செய்யனும்” என்று அங்கலாய்த்தவர், சதாஃபையும் அனிலாவையும் கண்டு, “சுத்தம் செய்துட்டு உள்ள வாங்க” என்றவர், மீதி இருந்தவர்களை உள்ளே வந்து ஓய்வெடுக்குமாறு பணித்தார்.

‘விளையாடியது நாலு பேரும். இதுல, சுத்தம் செய்யறது நாங்காளா?’ என்று பொறுமிய சதாஃபிற்கு, “அம்மா… ஆரம்பிச்சது அனிலாதான். அவளை வேணா சுத்தம் செய்ய சொல்லுங்க. என்னால முடியாது” என்று அமர்த்தலாக நின்றுகொண்டாள்.

சதாஃபை அனைவர் முன்பும் திட்டவும் முடியாமல் என்ன சொல்வதென்றும் தெரியாமல் நின்றிருந்தவர் முன் வந்து நின்ற முகில், “ஆண்ட்டி, நாங்க நால்வருமே சுத்தம் செய்கிறோம்” என்றவன், “என்ன இஷான்?” என்று குரல் கொடுக்க, “எஸ் பாஸ்…” என எசப்பாட்டு பாடினான் இஷான்.

விருந்தாளியாக வந்தவர்களை வேலை வாங்குவதா என்ற எண்ணத்தோடு அவர் நின்றிருக்க, “நாங்களும் உங்க பிள்ளைகள் தானே ஆண்ட்டி!” என்றவன் அவர் தலையசைக்கவும், மீண்டும் தோட்டத்திற்கு சென்று அனிலாவுடன் சேர்ந்துகொண்டான்.

அவர்கள் இருவர் மட்டும் தனியே இருப்பதைக் கண்ட சதாஃபும் இஷானும் தங்களுக்குள்ளே சிரித்துக்கொண்டு, அனிலாவிற்கும் முகிலுக்கும் கேட்குமாறு, “இங்க ஒரு ரொமாண்ஸ் சீன் ஓடும் போல… நாம வேணா அப்புறம் வந்து சுத்தம் செய்யலாமா?” எனக்கேட்டு இருவரிடம் இருந்தும் அடியை பெற்றுக்கொண்டனர்.

இவர்களை பார்த்திருந்த ஷப்னமின் மனம் மகிழ்ந்ததென்றால், நுஸ்ரத்தோ கண்களை சுருக்கி யோசிக்கலானார்.
 
Top