Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலாகி காதல் செய்வோமே 22

Advertisement

lekha_1

Active member
Member
வணக்கம் ஃப்ரெண்ட்ஸ்...

இதோ கதையின் அடுத்த பகுதி. சென்ற பதிவிற்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி...


காதல் 22

1325

“கண்டிப்பா போயே ஆகனுமா?” என்று நூறாவது முறையாக கேட்டுவிட்டாள் அனிலா. விழாவிற்காக வந்தவன், அது முடிந்ததும் செல்வது தானே மரபு? இருந்தாலும், காதல் கொண்ட மனது அவனோடு செல்லுமாறு உந்த, அது முடியாததால் அவனையாவது இங்கேயே தக்க வைக்கச் சொல்லி கேட்டது.

இதுவரை இருவரும் சந்தித்த மொட்டை மாடி சந்திப்புகளும், வீட்டில் யாரும் அறியாமல் கண்களால் பேசும் பேச்சுகளும் இனி கிடைக்காதே!

அவன் சென்றே ஆகவேண்டும் என கூறிவிட, “இன்னும் ரெண்டு நாள் தங்கிட்டு போ முகி!” என்றாள்.

“கஷ்டம்டா… இந்த மேட்ச் முடிந்ததும் அடுத்த மேட்ச்க்கு லீவ் வாங்கனும். சக்தி திருமணம் இருக்கு தானே?” என்றவன், அவள் ஒன்றும் கூறாமல் தலையை குனிந்தவாறே இருக்கவும், அவளருகில் வந்தவன், தலையை நிமிர்த்தி, “என்னடா?” என்று கேட்டான்.

“எதுக்கு வந்தாயோ அந்த வேலை முடியவே இல்லையே முகி” என கண்ணில் நீர் தளும்ப அவள் கேட்க, அவனுக்கும் அது புரிந்துதான் இருந்தது.

“ஒன்னு தெளிவா புரிஞ்சுக்கோ… நாம இப்போ மேரேஜ்ங்கற ஒரு கமிட்மெண்ட்க்குள்ளே போகப்போறது இல்ல. உன் வீட்டில் மற்றவர்கள் சம்மதம் கிடைச்சிருச்சு தானே! எல்லாரையும் எனக்கு பிடிச்சிருக்கு. அவங்களுக்கும் என்னை பிடிச்சிருக்கு. பாட்டிக்கு கொஞ்சம் டைம் குடுக்கலாம். என்னை முதலில் ஏற்றுக்கொள்ளட்டும். அதன்பிறகு மற்றதை சொல்லிக்கலாம்” என்றவனுக்கு அவர் முன்பே அவர்கள் இருவரைப் பற்றியும் தெரிந்துகொண்டார் என்பதனை அறியவில்லை.

முகிலுக்கு தன்னை தன் அடையாளத்தோடு தான் அவர் ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஆசை. அதனால், விடாது கருப்பாக அவருடன் தன் நட்பு முயற்சியை தொடர்ந்துகொண்டே தான் இருந்தான். ஏதோ, நேற்றில் இருந்து தான் ‘வெட்டவா குத்தவா’ பார்வையில் இருந்து சிறிது இறங்கி வந்திருக்கிறார். இப்போதே கிளம்ப வேண்டுமா? என்று தோன்றினாலும், கடமை அழைக்க, செல்லத்தானே வேண்டும்?

தெளிவில்லாது முகத்தை வைத்திருந்த அனிலாவைக் கண்டு, “என்னை இப்படியே அவங்க ஏற்றுக்கொள்வது தான் நல்லது. ஏன்னா, இப்போ நான் இந்த நிலையில் இருக்கேன்னா அதுக்கு காரணம் என் நாடும், நாட்டு மக்களும் தான். அவங்கள எந்த நிலையிலும் என்னால் விட்டுக்கொடுக்க முடியாது. பின்ன ஏன் நீ அவ்வளவு சொன்ன போதும் அமைதியா இருந்தேன்னு கேட்டீன்னா, அதற்கு காரணம், உன் மனசுல இருக்கறது எல்லாம் வெளிவரட்டுமேன்னு ஒரு எண்ணம் தான். துன்பத்த உள்ளேயே வெச்சுட்டு இருந்தா, அது மலை மாதிரி இருக்கும். யாரிடமாவது இறக்கி வெச்ச பிறகு மனசு லேசாகிரும். நீ என்னிடம் இறக்கி வெச்ச. பாட்டியோட மனசுக்கு வருந்து அவங்ககிட்ட வந்தாச்சு. ஷப்னம் பாட்டிய தான் சொல்றேன். ரெண்டு பேரும் பேசட்டும். கண்டிப்பா பாட்டியோட மனசுல மாற்றம் வரும்” என்றவன் கூற்றை அவள் ஏற்றுக்கொண்டாலும், அந்த கேள்வி அவள் வாயில் இருந்து விழுந்ததை தடுக்க முடியவில்லை அவளால்.

“அப்படி என்ன திடீர் பாசம் பாட்டி மேல?” என அவள் உதட்டைச் சுழித்தவாறு கேட்க, சிரிப்பை ஒருவாறு பிரயத்தனப்பட்டு கட்டுப்படுத்தியவன், அவள் பின்னோடு தன் கையை கொண்டுசென்று அணைத்தான். அதில் அவள் அவன் முகம் நோக்க, விளையாட்டாக அவள் நெற்றி முட்டியவன், “அவங்க உன் பாட்டிடி. உன்னோடு சேர்ந்தவங்க எனக்கும் முக்கியம் தானே! பிறகு எப்படி அவங்க மேல பாசம் இல்லாமல் போகும்?” என்று கேட்க, அவன் கண்களில் தெரிந்த காதலில் தத்தளித்து அவன் தோள் சேர்ந்தாள் அந்த பைங்கிளி.

அப்படியே சிறிது நேரம் நின்றிருந்தார்கள். இருவருக்குமே இந்த நிமிடம் உறையாதா என்று தான் இருந்தது. இருந்தாலும், காலமாவது காதலர்களின் பேச்சுக்கு செவி மடுப்பதாவது? முகிலின் அலைப்பேசி அவன் செல்ல வேண்டிய நேரத்தை சரியாக அலாரம் எழுப்பி கூற, அனிலாவின் உச்சந்தலையில் ஒரு முத்தம் வைத்து பிரிந்தான்.

பின் இருவரும் அவன் அறையில் இருந்து வெளிவர, ஹாலில் இருந்த அனைவரையும் அணைத்து விடைபெற்றவன், ஷப்னமிடம் ஆசி வாங்கிவிட்டு நுஸ்ரத்திடம் செல்ல, அவனை ஆசீர்வதிக்கவில்லை என்றாலும், விலக்கி நிறுத்தவில்லை அவர். அதுவே அவர் மாறிவிடுவார் என்னும் நம்பிக்கையை அவனுள் விதைக்க, மகிழ்வுடன் கிளம்பினான். அவர்களையே பார்த்திருந்த அனைவருக்கும் அதுவே தோன்ற, சந்தோஷத்துடனே வழியனுப்பினர் அவனை.


*****

“ஏன் இப்படி முகத்த தூக்கி வெச்சுட்டு இருக்க?” என்று முகில் திரையில் தெரிந்த அவள் முகத்தைக் கண்டு கடுப்பாக கேட்க, அதில் தன் மூக்கை உறிஞ்சியவள், “நான் உனக்கு யாரு?” என கேட்டாள்.

‘லூசா நீ?’ என்னும் மைண்ட் வாய்ஸுடன் அவளை பார்த்தவன், அதனை வாய் திறந்து கூறி அவளிடம் வகை வகையாக வாங்கிக்கட்ட விரும்பாததால், “என் லவ்வர்” என்று மட்டும் சொன்னான்.

“இது இப்போ தான் உனக்கு தெரியுதா?” என்றவள் மீண்டும் மூக்கை உறிஞ்ச, என்ன சொல்வது என்று தெரியாமல் அவளையே பார்த்திருந்தான் அவன். அழைப்பை எடுத்ததில் இருந்து இவ்வாறு எடக்கு மடக்காகவே பேசிக்கொண்டிருந்தால் அவனும் தான் என்ன செய்வான்?

“என்ன தான் அனிலா பிரச்சனை?” என அவன் பொறுமையை இழுத்துப்பிடித்து கேட்க, அதில் சட்டென்று தன் அழுகையை நிறுத்தியிருந்தாள் அவள். இத்தனை நாட்களில் அவன் தன்னை முழுபெயர் கூறி அழைத்தால் அவனுக்கு கோபம் என்பதை புரிந்துகொண்டதால் தன் அழுகையை அடக்கி அவன் முகம் பார்த்தவளுக்கு கண்கள் கரித்துக்கொண்டு வர, அதனை இமை கொட்டி நிறுத்தினாள்.

அவன் அவளையே கோபமாக பார்த்திருக்க, மூக்கை உறிஞ்சியவாறு, “சக்தி அண்ணா கல்யாணத்துக்கு நீ என்னை கூப்பிடவே இல்ல” என்று புகார் வாசித்தாள்.

அதனை கேட்டதும், ‘அடிங்க… இதுக்க இவ்வளவு அக்கப்போரு?’ என அவன் மனம் அலுத்துக்கொண்டது. அவன் எங்கே அறிவான், அவள் இருக்கும் நிலையை?

மூட் ஸ்விங்க்ஸ் ஆரம்பித்திருக்க, அவளை அது படுத்தி எடுத்தது. இதில் சக்தி வேறு அவளை கூப்பிட்டு திருமணத்திற்கு அழைப்பு விடுத்திருக்க, அவளும் வருகிறேன் என்றாள். அழைத்தவன் தன் நாரதர் வேலையும் சேர்த்தே செய்திருந்தான்.

அனிலாவை திருமணத்திற்கு ஒரு வாரம் முன்பே அழைத்துவருமாறு முகிலிடம் அவன் கூறியிருக்க, அவனோ வரிசையாக நின்றிருந்த வேலைகளில் அதனை அவளிடம் சொல்ல முற்றிலும் மறந்திருந்தான். அதை சக்தி அனிலாவிடம் போட்டுக்கொடுக்க, அவனுக்கு தான் முக்கியமில்லை என்று நினைத்து அழுது கரைந்துகொண்டிருந்தாள் அனிலா. முகில் மேல் எந்த தவறும் இல்லை என்றாலும், அவனையே அப்போது குற்றம் கூறியது அவள் மனது.

சென்ற மாதம் அவள் விருப்பப்பட்டு கேட்டு அவன் வாங்கித்தந்த நகப்பூச்சு அவள் கைகளுக்கு நன்றாக இல்லை என அவனை காய்ச்சியெடுத்தாள். ‘நீ தானே கேட்டாய்?’ என்றவன் கேட்டதற்கு, ‘நான் கேட்டால், நீ சொல்ல வேண்டியது தானே, எனக்கு நன்றாக இருக்காது என?’ என்று சண்டை போட்டாள்.

அதற்கும் முதல் மாதம், அவள் வாங்கிய ஒரு உடை அவளுக்கு நன்றாக இல்லை என அவன் சொல்லிவிட, ‘எனக்கு பிடிச்சத நான் செய்ய கூட உரிமை இல்லையா?’ என இரண்டு முழத்திற்கு முகத்தை தூக்கி வைத்து திரிந்தாள்.

‘ஆத்தா மகமாயி… இவள எப்படி மலையிறக்குறதுன்னே தெரியலையே!’ என்று அவன் விழிபிதுங்க நிற்க, அவனைக் கண்டவள். “நான் அழுகுறேன்… நீ என்னை சமாதானப்படுத்த கூட நினைக்க மாட்டேங்கற…” என்றவள் படபடவென பேசி காலை கட் செய்துவிட்டாள்.

அவனோ அவள் பேசப்பேச வடிவேலு மாடுலேஷனில், “டே… அட இரு… பொறு…” என்று கூறிக்கொண்டிருக்க, அதனைக் கேட்க அவள் காது தயாராகவே இல்லை.

“ஷப்பா… இப்போவே கண்ணைக் கட்டுதே!” என நினைத்தவன், அவளை இப்போதே அழைத்தால் கண்டிப்பாக தன்னை தொலைத்து எடுத்துவிடுவாள் என்பது புரிய, சிறிது நேரம் கழித்து அழைத்து சமாதானப்படுத்தினான்.


*****

“ஹலோ யங் மேன்” என்று முகிலை அணைத்து வரவேற்றார் அவர். அந்த அவர், பல மாதங்கள் முன்பு க்ளப்பில் அவன் கண்டவர்.

“ஹலோ சார்” என்றவன் அவர் வரவேற்பை ஏற்று அங்கே அமர, “சிறிது நேரத்தில் அவர்கள் அனைவரும் வந்துவிடுவார்கள்” என்று அவர் கூற, மேற்கொண்டு சில விடயங்கள் பேசினர்.

அரை மணி நேரம் கழித்து அங்கே இன்னும் சிலர் வர, அவர்களும் இவர்களோடு சேர்ந்துகொண்டனர். கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் அவர்கள் அனைவரும் கலந்தாலோசிக்க, பெரும்பாலோனோர் அந்த திட்டத்தை ஒத்துக்கொண்டனர்.

இருந்தாலும், அங்கிருந்த ஒருவர், “இது எந்த அளவுக்கு சரியா வரும்?” என்று கேட்க, அவரை பார்த்த முகில், “கண்டிப்பாக சரியா வரும். எத்தனையோ பேர் இப்படி ஒன்னு நமக்கு கிடைக்காதான்னு ஏங்கி தவிச்சு போயிருக்காங்க” என்றவன் கண்களின் ஓரம் சிறு வலி. அதனை மற்றவர்களுக்கு காட்டாமல் வெற்றிகரமாக மறைத்தவன், மேலும் சிலவற்றை அவர்களோடு பேசிவிட்டே வெளியேறினான்.

அவன் முகத்தில் நிறைவான ஒரு புன்னகை தவழ்ந்தது. தன் லட்சியம் சிறிது சிறிதாக உருபெறப்போகும் நிம்மதி அவனுக்கு.


*****

“என்னால உன்னை அங்கே எல்லாம் அனுப்ப முடியாது அனி…” என்று கூறிக்கொண்டிருந்தார் அவள் தந்தை.

“அப்பா, சக்தி அண்ணாவோட கல்யாணம்ப்பா… அண்ணா நான் ஒரு வாரம் முன்னவே வரனும்னு சொல்லிருக்காரு… நான் போயே தீருவேன்” என அவள் கூற, அவளுக்கு பதில் கூறாமல் தன் மனைவியை முறைத்தார் அவள் தந்தை.

‘அடம் பிடிக்குறது அவ, மொறைக்குறது மட்டும் என்னை. எதுலயாவது நல்ல பேர் எடுத்துட்டா மட்டும் என் பொண்ணும்பாரு…’ என்று தந்தை-மகள் சம்பாஷனையை பார்த்திருந்த அவள் அன்னை மானசீகமாக நொடித்துக்கொண்டார். (ஆல் ஓவர் த வேர்ஸ்ட் மம்மீஸ் டீலிங் வித் த சேம் ப்ராப்ளம்!)

மகள் கேட்பதற்கு மறுக்காத தந்தை தான். இருந்தாலும், அவள் தற்போது கேட்பது முகிலின் ஊருக்கு செல்ல அல்லவா? திருமணத்திற்கு முன்பே அவளை எவ்வாறு அங்கே அனுப்புவது என்பது ஒரு புறம் என்றால், இவள் சொல்வதைப் பார்த்தால் அதுவோ கிராமம் போலும். இவள் அங்கே எவ்வாறு இருப்பாள்? என்று மகள் எவ்வாறு அங்கே பொருந்திப்போவாள் என்னும் கேள்வி ஒரு புறம். அது புரிந்துகொள்ளாமல் மகள் அடம்பிடிக்கிறாளே என்ற கோபம் வேறு வந்தது அவருக்கு.

தனியாக மகளை முகிலுடன் அனுப்ப வேண்டுமா என்றும் தோன்றாமலில்லை. அவ்வாறே அனுப்பி வைத்தாலும், அவன் வீட்டில் இவளை எப்படி வரவேற்பார்கள்? எங்கணம் ஏற்றுக்கொள்வார்கள்? என்றும் அவருக்கு ஐயம்.

தந்தை இவ்வாறு எல்லாம் குழம்பிக்கொண்டிருக்க, தான் முடிவெடுத்தது எடுத்தது தான் என்று மகள் ஒரு பக்கம் போர்க்கொடி தூக்கியிருக்க, யார் புறம் நிற்பது என்று தெரியாமல் தாய் தவிக்க, இவர்கள் மூவர் காதிலும் விழுந்தது, “அவள் அங்க போயிட்டு வரட்டும்” என்னும் ஒரு குரல்.
 
Top