Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலாகி காதல் செய்வோமே 23

Advertisement

lekha_1

Active member
Member
ஹாய் ஃப்ரெண்ட்ஸ்...

இதோ, கதையின் அடுத்த பதிவு...


காதல் 23

1326


முதல் முறை இந்தியாவிற்குள் கால் பதிக்கிறாள் அனிலா. அந்த மகிழ்வை முற்றும் முழுதாக அனுபவித்துக்கொண்டிருந்தாள். மும்பை வந்து, அங்கிருந்து கோவைக்கு விமானத்தில் வந்து சேர்ந்தவளுக்கு வழியில் இருக்கும் எல்லாவற்றையும் ஏதோ சிறு குழந்தை காண்பதைப் போல் கண்டு குதுகலித்துக்கொண்டிருந்தாள்.

வானளாவிய கட்டிடங்கள் அவள் அறிந்தவை தான். ஆனால், இங்கே இருக்கும் பலவற்றை அவள் அங்கே பார்த்ததில்லை. பழையதும் புதியதுமான கட்டிடங்கள், பஸ்ஸிற்காக காத்திருக்கும் சமயத்தில் போவோர் வருவோரை கலாய்க்கும் கல்லூரி மாணவர்கள், அவர்களை திட்டவும் முடியாமல், ரசிக்கவும் முடியாமல் கலவையான உணர்வுடன் இருந்த மற்றவர்கள், ‘வந்து நின்னு ஒரு மணி நேரமாகுது, இன்னும் பஸ்ஸ காணோம்’ என்று அங்கலாய்க்கும் சக பயணிகள் ஒரு புறமென்றால், ‘ஐந்து நிமிஷம்னு சொல்லிட்டு அங்க பாரு, கூடி நின்னு பேசிட்டு இருக்குறத!’ என கடுப்பாக பேருந்தில் அமர்ந்திருக்கும் பயணிகள் மறுபுறம், அவர்களை பற்றிய கவலை சிறிதும் இல்லாமல் சக நடத்துனர், ஓட்டுனர்களுடன் தங்கள் பஸ்களின் கூட்டத்தைப் பற்றியும் நாட்டு நடப்பையும் அலசுபவர்கள் என பத்து நொடிகளில் கடக்கும் அந்த பேருந்து நிலையத்திலேயே இத்தனை கண்டவளுக்கு அனைத்தும் அதிசயமாகவே தெரிந்தது.

அதன்பின் அந்த ரோட்டில் செல்ல செல்ல ஜன்னலோரத்தை விட்டு அவள் நகரவே இல்லை. ஜன சந்தடி முடிந்து பொள்ளாச்சி ரோட்டில் பயணிக்க, யாரும் அவ்வளவாக இல்லையெனினும், அவ்வப்போது தோன்றும் ஊர்களையும், சாலையோரம் இருக்கும் மரங்களையுமே பார்த்திருந்தாள். ஒரு வழியாக பொள்ளாச்சியினுள் நுழைய, அவளை வரவேற்று தழுவிக்கொண்டது காற்று. இதுவரை கட்டடங்களையே ரசித்தவள் இயற்கையை ரசிக்காமலா இருப்பாள்?

“சூப்பர் முகி… எல்லாம் எவ்வளவு அழகா இருக்கு? இங்க நகந்து போகலாமா?” என்று அவள் கேட்க, “நாளைக்கு கூட்டிட்டு போறேன். இப்போ சாயங்காலம் ஆகிருச்சு” என்றவன் மறுக்க, அதில் சிறிது கோபம் கொண்டாலும், ‘இருட்டினதும் ஒன்னும் தெரியாது’ என அவள் மனம் எடுத்துரைத்ததால் அதனை கேட்டு அமைதிகாத்தாள்.

அவன் வீட்டின் முன் கார் வந்து நிற்கவும் தான் அவளுக்கு சுற்றுப்புறமே உரைத்தது. அதுவரை இல்லாத பயம் அவளுக்கு இப்போது வந்தும் சேர்ந்தது. ‘முகி வீட்டுல என்ன சொல்லிருப்பான்? என்னை என்னவென அறிமுகப்படுத்துவான்? அவங்க எப்படி ஏத்துப்பாங்க?’ என்றெல்லாம் யோசித்தவளுக்கு தன்னால் இங்கே ஒத்துப்போக முடியுமா என்ற எண்ணம் மட்டும் வரவே இல்லை. அவள் முகில் தான் அவளருகே இருக்கிறானே! அவன் பார்த்துக்கொள்வான் என்று தோன்ற, அதுவரை அவளோடு ஒட்டிக்கொண்டிருந்த பயம், அவள் தைரியத்தைக் கண்டு அவளோடு டூ போட்டுவிட்டு எட்ட நின்று பார்த்தது. எப்படியும் அவங்கள பார்த்ததும் நீ என்னை கூப்பிடுவ தான? என்ற எண்ணம் தான். ஆனால், அதையும் பொய்யாக்கியது அவள் முகத்தில் முகிலின் வீட்டினரை கண்டதும் தோன்றிய மகிழ்ச்சி.

தன்னை கண்டதும் அவர்கள் என்னவென்று நினைப்பரோ என அவள் எண்ணி கலங்கியிருக்க, அதற்கு அவசியமே இல்லை என்னும் விதமாக ஆரத்தியோடு வரவேற்றனர் அவள் வீட்டினர். அதனை அவள் ஆச்சரியத்தோடு பார்த்திருக்க, அவனோ தன் தாயை பெருமை பொங்க பார்த்திருந்தான்.

முகில் தன் தோழி ஒருவர் வருகிறார் என்று மட்டும் தான் அவர்களிடம் கூறியிருந்தான். இருந்தும், வருவது பெண் என்பதால் அவர்கள் தங்கவருவது குறித்து அவர்கள் எத்தனையோ கேள்விகள் கேட்டனர். அதற்கெல்லாம் அவன் அவள் தங்கள் கலாச்சாரத்தைப் பற்றி அறிந்துகொள்ள வருவதாகவும், சக்தியின் திருமணம் என்பதால், இந்த சமயம் அவளுக்கு மிகவும் உபயோகமாக இருக்கும் என்றும் கூறி ஒருவாறு வீட்டினரை சமாதானப்படுத்தியிருந்தான். இருந்தாலும், அவர்கள் எவ்வாறு ஏற்றுக்கொள்வார்கள் என்பதை சிறிது தயக்கமாகவே பார்த்திருந்தான். ஆனால், அவர்களோ, அவளை வாசலிலேயே வந்து நிற்க, அவனுக்கு விரைவில் அனைவரும் அனிலாவை ஏற்றுக்கொள்வர் என்று நம்பிக்கை வந்தது.

அனிலாவிற்கு அவர்களைக் கண்டதும் தான் இங்கு வேண்டாதவளாக தோன்றமாட்டோம் என்பது புரிந்துபோனது. முகிலின் தாயார் ஆரத்தியோடு நிற்க, அவரருகில் அயினி காரையே எட்டி எட்டி பார்க்க, அவர்களை விட்டு சற்று தள்ளி நின்றிருந்தார் அவன் தந்தை.

இதுவரை போட்டோவில் மட்டுமே பார்த்தவர்களை இன்று நேரில் பார்க்கவும், பாய்ந்து இறங்கப்போனவளை தடுத்தவன், தான் இறங்கி மற்றைய பக்கம் வந்து கதவை திறந்துவிட்டான்.

இறங்கியவள் தன் எதிரிலிருந்தவர்களைக் கண்டு புன்னகைக்க, அவளையே வாயில் கைவைத்தவாறு பார்த்திருந்தார் அவன் தாயார். ஜீன்ஸ் பேண்ட் மற்றும் டீ ஷர்ட் அணிந்து குழந்தைத்தனமான முகத்துடன் நின்றிருந்தவளைக் கண்டவர், அதே திகைப்போடு முகிலின் புறம் திரும்பி, “எந்த பள்ளிக்கோடத்துல படிச்சுட்டிருந்த புள்ள ராசா இது?” எனக் கேட்டார்.

அதில் அவனுக்கு சிரிப்பு பொத்துக்கொண்டு வர, அதே சிரிப்புடன் அவன் அனிலாவின் புறம் திரும்ப, அவள் பள்ளிக்கு முதன்முதலில் செல்லும் குழந்தை போல் திருதிருவென விழித்தவாறு நின்றிருந்தாள். அவன் தன்னைக் கண்டு சிரிப்பதை அவள் முறைக்க, அவனோ, அவளை கணக்கிலேயே எடுத்துக்கொள்ளாது, தாயின் புறம் திரும்பி, “என்னம்மா இது கைல?” என்றான்.

“புள்ள மொத மொதல்ல நம்ம ஊட்டுக்கு வந்திருக்கு. அதா வரவேற்க ஆரத்தி” என்றவர் அவளுக்கு சுற்றிவிட்டு வீட்டிற்குள் அழைக்க, அவர் ஆலம் சுற்றும்வரை அமைதிகாத்த அயினி, அவள் கைகளைப் பிடித்து, “நீங்க ரொம்ப அழகா இருக்கீங்க” என்றவாறே உள்ளே இழுத்துச் சென்றாள்.

உடனே தன்னை திரும்பிப் பார்த்தவளிடம், தான் உடைமைகளை எடுத்து வருவதாக அவன் சைகை செய்ய, அதில் குதுகலமடைந்து அயினியுடன் சென்றாள் அனிலா. முகில்தான், ‘வாழ்க்கை முழுக்க லக்கேஜ் தூக்க இப்போவே நல்லா ப்ராக்டீஸ்’ என்று மனதோடு புலம்பியவாறே அவற்றை தூக்கிச் சென்றான்.

முகில் தங்கள் காதலை வீட்டில் கூறியிருக்கலாம். ஆனால், அப்போது அவர்கள் அனிலாவை தங்கள் மகனின் காதலியாகவே பார்ப்பார்கள். அவளை அவளாகவே ஏற்றுக்கொண்டால் மட்டுமே அவர்கள் காதலை கூறும்போது எந்த உறுத்தலும் இல்லாமல் அவர்களால் அங்கீகரிக்கமுடியும். அதனால், தோழி என்னும் பதத்திலேயே அவளை அறிமுகப்படுத்தினான் அவர்களிடம்.

முகில் உள்ளே வரும்போது அனிலாவிடம் பல கதைகள் பேசி முடித்திருந்தாள் அயினி. அவள் பேசும் வேகத்தில் ஒன்றிரண்டு வார்த்தைகள் மட்டுமே புரிந்தாலும், அயினியை காயப்படுத்த விரும்பாதவள், அவள் கூறுவதற்கெல்லாம் ஆம் போட்டுக்கொண்டிருந்தாள். அனிலாவின் செய்கையை கண்டவனுக்கு மேலும் சிரிப்பு வந்தது. ஆனால், அதனை செய்தால் அடித்தாலும் அடித்துவிடுவாள்.

அப்போது வாசலில் நிழலாட, யாரென்று பார்த்தான் முகில்.

“தங்கச்சி…” என்று பாசமாக சக்தி அழைக்க, அவனை அதே நேரத்தில் “மச்சான்…” என்றழைத்தவாறு அவனை நோக்கி வந்தான் முகில். சக்தி எங்கே அவனை கண்டுகொண்டான்? கொக்குக்கு மீன் ஒன்றே மதி என்பதுபோல் தான் கூறியதற்காக வந்த அனிலாவின் மீது மட்டுமே அவன் கவனம் முழுவதும் இருந்தது. அவள் மீது கொள்ளை கொள்ளையாக அன்பு பொங்கியது அவனுக்கு.

சக்தியை கண்டவுடனேயே “அண்ணே…” என்று அவனை நோக்கி பாய்ந்திருந்தாள் அனிலா. இருவரின் பாசப்பொழிவை முகில் கடுப்போடு பார்த்திருந்தால், ‘என்னடா நடக்குது இங்கே?’ என்னும் விதமாக பார்த்திருந்தனர் மற்றவர்கள்.

அவர்களுக்கு இருவரின் பிணைப்பை கூறியவன், சக்தியை நோக்கி, “ஒன்ற தொங்கச்சி இன்னும் கொஞ்ச நாள் இங்கதா இருப்பா… வந்து உக்காந்து பேசு…” என்றவன் தன்னறைக்கு சென்றுவிட்டான். இவர்கள் இருவரும் இனி என்னவானாலும் அவனை கண்டுகொள்ள மாட்டார்கள் என்னும்போது எதற்காக அவர்களை பார்த்துக்கொண்டிருக்கவேண்டும்?

இரவுணவை சக்தி அங்கேயே முடிக்க, அதன்பிறகாவது அவன் வெளியேறுவானா என்று பார்த்தால், அதற்கு அறிகுறியே காணோம். அதில் மேலும் கடுப்பானான் முகில்.

“டேய்… ஊட்டுக்கு போகலியா? அத்த தேடும்” என்று முகில் கூற,

“ஆத்தா எல்லாம் என்னைய தேடாதுடா…” என்று மேலும் அவனை பேசவிடாமல் செய்தவன், அவன் புறம் அடுத்து திரும்பவே இல்லை. இங்கே முகில் தான் வந்ததில் இருந்து தன்னை கண்டுகொள்ளவே இல்லையே என்னும் எண்ணத்தோடு அமர்ந்திருந்தான்.

ஒருவழியாக சக்தி அங்கிருந்து கிளம்ப, வாயெல்லாம் பல்லாக அவனை வழியனுப்பி வைத்தான் முகில்.

“மச்சான்… நாளை மறுநாள் உப்பு மாத்துறதுடா… தங்கச்சிய காலைல மறக்காம கூட்டிட்டு வந்திரு…” என்று ஒரு முறை நியாபகப்படுத்திவிட்டே சென்றான் அவன்.


*****

புது இடம் என்பதால் தூக்கம் வரவில்லை அனிலாவிற்கு. சோர்வையும் மீறி ஒரு மகிழ்வான மனநிலையில் இருந்தாள் அவள்.

அதே போன்றதொரு மனநிலையில் தன் முகிலும் இருந்தான். அவன் விரும்பும் காதலி, அவனுக்கு அருகிலேயே அவன் வீட்டில் இருக்கிறாள். அது தந்த இதத்தில் அவன் விழிகள் உறக்கத்தை தேடவேயில்லை. அவளிடம் ஓரிரு வார்த்தையாவது பேசலாம் என்று யோசித்தவன் அவளுக்கு அழைத்தான்.

தன் அலைபேசி சினுங்கியதும், முகில் என கண்டுகொண்டவள், அதனை இயக்கி, போர்வையினுள் புகுந்துகொண்டாள்.

“என்ன முகி?” என காற்றுக்கும் வலிக்கும் குரலில் கேட்டாள் அனிலா.

“என்னடி இவ்வளவு மெதுவா பேசற?” என்று கேட்டான் முகில்.

“டேய்… உன் தங்கச்சி ரூம்ல இருக்கேன். அவ பக்கத்துல தான் படுத்து தூங்கிட்டு இருக்கா…” என்று அனிலா கூற, அப்போது தான் அவள் தன் தங்கையின் அறையில் இருக்கிறாள் என்பதே அவனுக்கு நினைவிற்கு வந்தது.

“உன்ன பாக்கனும் போல இருக்கு நிலா” என்றான் அவன் ஏக்கத்தோடு.

அதில் மங்கையவள் உருகித்தான் போனாள். ஆனால், அதை எவ்வாறு அவனுக்கு வெளிப்படையாக காட்டுவதாம்? அதனை மறைத்துக்கொண்டு, “டைம் ஆச்சு முகி… நாளைக்கு காலையில் பார்க்கலாம்” என்றவள் கைப்பேசியை அணைத்துவிட்டு தூங்கிவிட்டாள்.


*****

சரியாக தூங்காத காரணத்தால் காலையில் விரைவிலேயே படுக்கையை விட்டு எழுந்துவிட்டாள். என்ன செய்வது என தெரியாமல் வீட்டு முற்றத்தில் நடைபயின்று கொண்டிருந்தவள், வெளியே சத்தம் கேட்க, என்னவென்று பார்ப்பதற்காக அங்கே சென்றாள்.

வெளியே, விடிந்தும் விடியாத அந்த அதிகாலைப் பொழுதில் வீட்டு வாசலில் தண்ணீர் தெளித்து கோலமிட்டுகொண்டிருந்தார் வாசுகி.

அவரைக் கண்டவள், “ஹாய் ஆண்ட்டி… என்ன இவ்வளவு சீக்கிரமா எழுந்துட்டீங்க? இது என்ன?” என்றவாறே வந்தாள் அனிலா.

அவளைக் கண்டவர், புன்னகைத்தவாறே பதிலளித்தார்.

“வீட்டு முன்னே காலை எழுந்ததும் கோலம் போடுவது வழக்கம்மா… அதைத்தான் செய்துட்டு இருக்கேன்” என்றவர், அந்த நேரத்திலும் தலைக்கு குளித்திருந்தார்.

தானும் அவர் அருகில் வந்தமர்ந்தவள், அவர் கைகள் வளைந்து நெளிந்து கோடுகளையும் வளையங்களையும் வரைவதைக் கண்டவள், “ஹை… சூப்பரா வரையறீங்க அண்ட்டி… நீங்க தான் முகி வரைவதற்கு காரணமா?” என்க, அவளை பார்த்தவர், “இருக்கலாம்” என்றதோடு முடித்துக்கொண்டார்.

கோலம் போட்டு முடித்துவிட்டு அவர் பூஜையறையினுள் நுழைய, அவள் ஹாலில் ஒரு சோபாவில் அமர்ந்துகொண்டாள்.

பூஜை முடிந்து வந்தவர் கண்டது, அங்கே தூங்கிக்கொண்டிருந்த அனிலாவைத்தான். அவள் அருகே வந்து முகம் பார்த்தவருக்கு அங்கே அயினிதான் தெரிந்தாள். அவளும் இதே போல் தான், காலையில் அவர் கோலம் போடும்போது அருகில் வந்து நின்று, பெரிய கோலமாக வரைய சொல்வாள். அதன்பின், அவர் சமையலறைக்குள் சென்றுவிட்டால், அவள் மறுபடியும் தூங்கச் சென்றுவிடுவாள். அந்த நினைவுடன் அவளை சிறிது நேரம் பார்த்திருந்தவர், சமையலறைக்குள் புகுந்துகொண்டார்,

அவர் தன்னை பார்த்ததையோ, சென்றதையோ அறியாமல், கர்மசிரத்தையாக கும்பகர்ணனிடம் போட்டி போட்டுக்கொண்டிருந்தாள் அனிலா.


*****

“இந்த பக்கம் இருக்குறது வாழத்தோட்டம். அதோ அங்க தெரியுது பாரு… அதுதான் நெல்லு. அரிசி எல்லாம் இதுல இருந்துதான் எடுப்பாங்க” என்று விளக்கியவாறே வண்டியை நிறுத்தினான் முகில்.

அவன் நிறுத்துவதற்காகவே காத்திருந்தவள், குதித்து இறங்கிவிட்டாள். அதையும் கடிந்துகொண்டான் அவன், ‘உனக்கு பதமா இறங்கவே தெரியாதா?’ என.

அதனை கருத்தில் கொள்ளாமல், எப்படி அங்கே நடப்பது என்று ஆராய்ச்சியில் ஈடுபட்டிருந்தாள் அவள். அது புரிந்தவன், காலனியை கழட்டிவிட்டு தன்னை தொடருமாறு கூறினான். அதன்படியே அவளும் செய்ய, அவள் கை பற்றி ஒன்றிரண்டு அடிகளாக வரப்பில் நடந்துவந்தான்.

அவனைப் பின்பற்றியவளும், அங்கே நடக்க சிறிது பழக்கப்பட்டதும், அவனை பார்த்து கேட்டாள்.

“ஏன் முகி… உங்க ஊர் மூவிஸ்ல எல்லாம் ஒரு பொண்ணும் பையனும் கிராமத்தில் தனியா சுத்த கூடாதுங்கற மாதிரி காமிப்பாங்களே! நீ பாட்டுக்கு என்னை கூட்டிட்டு வந்தியே! யாரும் கேட்க மாட்டாங்களா?”

திரும்பி அவளை பார்த்தவன், “கிராமமோ நகரமோ, எங்க இருந்தாலும் தனியா பேசிட்டு இருந்தா தப்பா நினைக்கிறவங்களும் இருக்காங்க, அதை கடந்து போறவங்களும் இருக்காங்க. நம்ம வீட்டுல தப்பா நினைக்க மாட்டாங்க” என்றவன், ஏதோ நினைவிற்கு வர,

“காலைல ஹால்ல தூங்கிட்டு இருந்தியே! நைட் சரியா தூங்கலியா?” என்று கேட்க, அதற்கு அவள் கூறிய பதிலைக் கேட்டு அதிர்ச்சியடைந்து அவளை பார்த்தான் முகில்.
 
Top