Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலாகி காதல் செய்வோமே 24

Advertisement

lekha_1

Active member
Member
காதல் 24

1327

“காலைல ஹால்ல தூங்கிட்டு இருந்தியே! நைட் சரியா தூங்கலியா?” என்று கேட்க, அதற்கு அவள் கூறிய பதிலைக் கேட்டு அதிர்ச்சியடைந்து அவளை பார்த்தான் முகில்.

அந்த பதிலை நாமும் தெரிந்துகொள்ள வேண்டாம்?

“ஆமாம் முகி… சரியா தூக்கமே வரல. காலைல ஆண்ட்டி ஒரு பாட்டு போட்டாங்களா, நல்லா தூங்கிட்டேன்” என்று அவள் கூற, அப்படி என்ன பாடலா இருக்கும்? என நினைத்தவன் அதையே அவளிடம் கேட்கவும் செய்தான்.

யோசித்து பார்த்தவளுக்கு எதுவும் நினைவிற்கு வரவில்லை, ஒரு வார்த்தையை தவிர. “ஏதோ பேர் வெச்சு ஸ்டார்ட் ஆகும் முகி. அதுக்கு பிறகு எதுவும் புரியல” என்றவள், சிறிது யோசித்து, “ஹான்… கண்டுபிடிச்சுட்டேன்… கௌசல்யான்னு ஆரம்பிக்கும்” என்று குதுகலமாக அவள் கூற, அப்போது தான் புரிந்தது அவள் சுப்ரபாதத்தை கூறுகிறாள் என.

முகிலின் அம்மா காலையில் பூஜை செய்யும்போது சுப்ரபாதம் இசைக்க விடுவது வழக்கம். அதில் கௌசல்யாவைத் தவிர எதுவும் புரியவில்லை. தாலாட்டுவது போல் அவளுக்கு தோன்ற, அப்படியே தூங்கிவிட்டாள்.

அதனை நினைத்தவாறே அவளை பார்த்தவன், ‘அவனவன் சுப்ரபாதம் கேட்டு எந்திரிப்பாங்க. இவ என்ன தூக்கம் நல்லா வருதுன்னு சொல்ற?’ என நினைத்தவாறு அவளை பார்த்திருக்க, அவளோ, தன் கைப்பேசியை அவனிடம் கொடுத்து, “எனக்கு டவுன்லோட் செய்துகொடு முகி. நைட் தூக்கம் வரலைன்னா கேட்டுக்கறேன்” என்றாள்.

அதில் மானசீகமாக தலையில் கைவைத்தவன், “அடியே! அது வெங்கடேஸ்வர சுப்ரபாதம்” என்றான்.

அவன் கூறியது புரியாதவள், “அப்படின்னா?” எனக் கேட்டாள்.

“விஷ்ணுவோட ஒரு ஃபார்ம் வெங்கடாசலபதி. அவரோட கோவில் திருப்பதில இருக்கு. தினமும் அவரை நைட் தூங்க வைப்பாங்க. மறுநாள் காலையில் அவரை எழுப்ப இந்த பாடல் பாடுவாங்க. அதை தான் அம்மா காலையில் பூஜை செய்யறப்போ இசைப்பாங்க” என்க,

“ஓஓஓ…” என்று கேட்டுக்கொண்டவள், “அப்போ, அந்த பாட்டு கேட்டுட்டு தூங்கக்கூடாதா முகி?” என்று கேட்டாள் அவள்.

அவளை என்ன செய்ய என்பதுபோல் அவன் பார்க்க, “நல்லா இருந்துச்சுன்னு கேட்டேன்” என்றவள், மேலும் நடக்கலானாள்.

பேசிக்கொண்டே இருவரும் நெல் வயலுக்கு வந்திருக்க, முகிலைக் கண்டவர்கள் அவனிடம் நலம் விசாரித்தனர். பின், அவன் அருகில் இருந்த அனிலா யாரென அவர்கள் விசாரிக்க, தன் தோழி என்பதோடு நிறுத்திக்கொண்டான் அவன்.

மற்றவர்கள் சென்றுவிட, சில பெண்கள் மட்டும் அவனோடு பேசிக்கொண்டிருக்க, அவர்கள் பேசுவது பெரும்பாலும் புரியாமல் இருந்தாலும், பேசும் விதம் அவனோடு உரிமை எடுத்து பேசுவதுபோல் தோன்ற, புகைய ஆரம்பித்தது மங்கையின் வயிறு என்னும் அடுப்பு. அவளுக்கு தமிழ் சிறிது தெரியும், தட்டுத்தடுமாறி பேசவும் செய்வாள் தான். ஆனால், வட்டார மொழிகள் புரியாது. அதனால், எதுவும் புரியாமல் பார்த்திருந்தவளுக்கு ஏதோ தான் தனிமைபடுத்தப்பட்டது போல் தோன்றியது. அதை முகிலிடமும் காட்ட முடியாமல் போக, அவனைத் தாண்டி நடந்துசென்றாள்.

அவள் செல்வதைக் கண்டு தன் பேச்சை முடித்துக்கொண்டவன், அவளை பின்தொடர்ந்து, “என்ன ஆச்சு? ஏன் வந்துட்ட?” என்று கேட்டான். அவனை ஒரு பார்வை பார்த்தவள், எதுவும் பேசாமல் மேலும் நடக்கலானாள்.

அவளை கைபிடித்து தடுத்தவன், “என்னன்னு சொன்னா தான தெரியும்?” என்றான்.

அவன் கையை தட்டிவிட்டவள், “அவங்க யாரு?” என தன்னிரு கைகளையும் கட்டியவாறு கேட்டாள் அவள்.

அதில் சிறிது ஜெர்க்கானவன், “அவங்க எல்லாம் என் சொந்தக்காரங்கம்மா” என்றான் தன்மையாக.

“சொந்தக்காரங்கன்னா? உன் தங்கச்சிங்களா?” என்று அவள் கேட்க,

அவர்கள் தன் முறைப்பெண்கள் என்று கூறினால் என்ன செய்வாள் என்று யோசித்தான். ‘சரி, சொல்லிதான் பார்ப்போமே!’ என வடிவேலு வந்து அவன் மனதில் ஒரு குரல் கொடுக்க, அதையே செய்தான்.

“அவங்க எல்லாம் என் மொறப்பொண்ணுங்க” என அவன் சொல்லி முடிக்க, அவளும் ‘முறைப்’பெண்களில் ஒருத்தியாக மாறி அவனை முறைத்துக்கொண்டு நின்றிருந்தாள்.

“அடியே! ஏன் டி இப்படி மொறக்குற?” என்று அவன் பதற, “போடா… போய் அவங்கள கொஞ்சு… அவங்கள பாத்ததும் என்னை மறந்துட்ட தான?” என்றவள் நடந்துகொண்டே இருந்தாள்.

‘என்னது போடாவா?’ என்று யோசித்தவன், அப்படியே நின்று சுற்றும் முற்றும் பார்த்தான். போடா மட்டும் தமிழில் சொன்னவள், மற்றதெல்லாம் ஆங்கிலத்தில் கூறியிருந்தாள்.

நல்லவேளை, யாரும் பார்க்கவில்லை என்பதை உறுதி செய்துகொண்டவன், அவளிடம் சென்று, “உனக்கு யாரு போடா சொல்ல கத்துகொடுத்தா?” எனக் கேட்டான். (ம்மிஸ்டர். முகில்! அவங்க உங்கமேல கோபமா இருக்காங்க. சமாதானப்படுத்தறத விட்டுட்டு…)

“நீ சொல்லலைன்னா எனக்கு சொல்லிக்கொடுக்க யாரும் இல்லையா? என் அண்ணா சொல்லிக் கொடுத்தாங்க” என்றவள், திரும்பி நின்று அவனை பார்த்து இன்னொரு முறை ‘போடா’வென்று சாலையில் ஏறிவிட்டாள்.

இவனோ, ‘நல்லவேளை, திட்டுவதற்கு அவன் போடா மட்டும் சொல்லிக் கொடுத்தான்’ என நினைத்துக்கொண்டவன், அவள் காருக்கு அருகில் வந்திருக்க, தானும் சென்று அவளை ஏற்றிக்கொண்டு வீடு வந்து சேர்ந்தான்.

மதியம்வரை அவள் கோபமாகவே சுற்ற, ‘என்ன இது? இதுக்கெல்லாம் கோபப்படறா?’ என்று நினைத்தவன், அவளையே பார்த்திருந்தான். அதனைக் கண்டு, அயினிதான், “என்னண்ணா… கண்ணு அங்கேயே போகுது?” என்று அவன் தோளை இடித்துக் கேட்டாள். அவளை சிரித்து சமாளித்தவன், ஒரு யோசனையுடன் தன் தாயை பார்க்க சென்றான்.


*****

வெயில் விடைபெற்றுச் செல்லும் நேரம், அனிலாவிடம் வந்த முகில், “ஒரு செட் ட்ரெஸ் எடுத்து வெச்சுக்கோ. வெளிய போறோம்” என்று கூற, அவள் அவனை கண்டுகொள்ளவே இல்லை.

அவளைப் பார்த்தவன், அங்கிருந்தே அயினியை அழைத்து, “குட்டிம்மா… ரெடியாகு… ஆழியார் போகலாம்” என்று கூற, அதனைக் கேட்டு குதுகலமடைந்தவள், சந்தோஷமாக கிளம்பினாள்.

அயினியின் மகிழ்வைக் கண்டவளுக்கு அது என்ன இடம் என தெரிந்துகொள்ள ஆர்வம் வந்தது. அவளிடம் ரகசியமாக வந்து அது என்ன இடமென்று கேட்க, அவளும் கூறினாள்.

சிறிது நேரம் கழித்து அயினியும் முகிலும் காருக்கு வர, அவர்களுக்கு முன்னே இருக்கையில் அமர்ந்திருந்தாள் அனிலா. இதில், முகிலைக் கண்டு, “உனக்காக ஒன்னும் இல்ல. அயினி கூப்பிட்டா” என்றவள், “அப்படித்தானே அயினி?” என்று அவளை பார்த்து கேட்க, ஆமாம் போட்டாள் அவள்.

அதில் முகிலைக் கண்டு கெத்தாக சிரித்தவள், முன்னால் திரும்ப, அண்ணனும் தங்கையும் ஒருவரை ஒருவர் பார்த்து சிரித்துக்கொண்டு காரில் ஏறினர்.


*****

“வாவ்…” என்றவள் முகிலிடம் ஏதோ சொல்ல வாயைத் திறக்க, அவனைப் பார்த்தவள் உடனே அதனை மூடிக்கொண்டாள்.

பின், அயினியிடம் திரும்பியவள், “வா அயினி… நாம போகலாம்” என்றவள் அவனை கண்டுகொள்ளாமல் நடக்கத்துவங்கினாள்.

அவர்கள் ஆழியார் ஆற்றிற்கு வந்திருந்தனர். பொள்ளாச்சியின் அழகான மாற்றும் அமைதியான இடங்களில் ஒன்று, இந்த ஆற்றங்கரை. சுற்றியும் செடிகள் வளர்ந்திருக்க, அந்த ஆற்றில் குளிப்பது ஒரு சுகமான அனுபவத்தைக் கொடுக்கும். அதுவும், இப்போது மனம் மயங்கும் மாலை நேரம். சொல்லவும் வேண்டுமா?

அனிலாவின் மனமும் மயங்கித்தான் போனது.

அயினி வரும்போதே சுடிதாரோடு வந்திருக்க, அனிலாவும் அதையே தான் உடுத்தி வந்தாள். இருவரும் முகிலை விட்டுவிட்டு தண்ணீரில் டைவடித்துவிட்டனர். ஆட்கள் அதிகம் இல்லாதது வேறு அவர்களுக்கு வசதியாக இருந்தது.

இருவரையும் பார்த்து விளையாடுமாறு கூறியவன், அவர்களிடம் இருந்து சற்று தொலைவில் அமர்ந்துகொண்டான். அவனும் நீச்சலடிப்பான் தான். ஆனால், பெண்கள் இருவரையும் பாதுகாக்கும் பொறுப்பு இருப்பதால், தன் ஆசையை தள்ளி வைத்துவிட்டான்.

இருவரும் நெடுநேரம் விளையாட, அவர்களை விருப்பம்போல விட்டவன் இருள் கவிழத் துவங்கவும் அவர்களை கரைக்கு அழைத்தான். ஆனால், தங்களை மறந்திருந்த பெண்கள் இருவருக்கும் அது கேட்கவில்லை.

வேறு வழியில்லாமல் அவர்களை நோக்கிச் சென்று அழைத்தான் அவன்.

ஆற்றின் நடுவே அணை போன்று கட்டியிருப்பர். அதனால், நடப்பது எளிது.

முகில் வந்து அழைத்தபின் முதலில் ஏறினாள் அயினி. அவள் உடனே உடை மாற்றுவதற்காக செல்ல, அணையில் ஏறுவதற்கு முயன்றாள் அனிலா.

அவளால் அதனை செய்ய முடிந்தால் தானே?

நீரின் ஓட்டமும் அணையின் வழவழப்பும் அவளை ஏறவிடவில்லை. அவளுக்கு முகில் கைகொடுக்க, அவனை முறைத்தவள் தானே ஏற முயன்றாள். அந்தோ பரிதாபம்! வழுக்கி மீண்டும் நீரினுள் விழுந்தவளுக்கு தற்போது அவனைத் தவிர வேறு மார்க்கமும் இருக்கவில்லை.

வேண்டாவெறுப்பாக அவனுக்கு கையை கொடுத்தவள், அவன் தூக்கிவிடும் நேரம் அவனையும் தண்ணீரினுள் இழுத்திருந்தாள்.

அவளது செய்கையால் ஒரு தடம் அமிழ்ந்து எழுந்தவன், அவள் முகம் நோக்க, தான் அவனை ஏமாற்றியதில் இன்புற்று கிண்கிணியாய் சிரித்துக்கொண்டிருந்தாள் அவள். அதில் கோபம் கொண்டவன் அவளை பிடிக்க வர, அவனிடம் இருந்து தப்பித்தவள் கரையை நோக்கி நீச்சலடித்தாள், அணை கரையோடு சேருமிடத்தில் ஏறிவிடலாம் என்ற எண்ணத்துடன்.

அவள் மனம் புரிந்தாற்போல் அவளை பின்தொடர்ந்தவன் அவளை மடக்க, அவனிடம் இருந்து விடுபட அவள் செய்த போராட்டங்கள் யாவும் வீணாகின. ஒரு கட்டத்தில் சோர்ந்துபோய் அவளை பார்த்தாள் அனிலா.

அதுவரை அவளை பிடிப்பது ஒன்றே மதியென இருந்தவன் அப்போது தான் அவள் மதிமுகம் கண்டான். நீர் அவள் கூந்தலில் இருந்து வழிய, மாலைக்கதிரவன் அவள் முகத்தில் பட்டு தெறிக்க, மஞ்சள் நிலவென நின்றிருந்தாள் அவள்.

அதில் அவன் சித்தம் முழுதும் பேதையவளே நிலைத்து நிற்க, தன்னையும் அறியாமல் அவள் முகம் நோக்கி குனிந்திருந்தான் அவன். அவளுக்கும் அவன் மோனநிலை கடத்தப்பட, இருவருமே தங்களை மறந்த நிலையில்.

இன்னும் இரண்டொரு நொடிகளில் இதழ்களின் சங்கமம் தவிர்க்க முடியாது என்ற நிலையில் இருக்கும்போது, அவன் நெஞ்சில் கைவைத்து தள்ளியவள், வேகவேகமாக கரையை நோக்கி நீந்தினாள்.

இடையில் நின்று அவனை நோக்கி ஒரு ‘போடா’வை எறியவும் மறக்கவில்லை அவள்.

அவள் சென்ற சில நிமிடங்கள் கடந்தே தான் செய்ய இருந்த காரியம் புரிய, தலையைக் கோதி தன்னை கட்டுப்படுத்திய பின் நிலம் வந்தான் முகில்.

அதற்குள் பெண்கள் இருவரும் உடை மாற்றியிருக்க, மூவரும் வீடு வந்து சேர்ந்தனர்.
 
Top