Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலாகி காதல் செய்வோமே 26

Advertisement

lekha_1

Active member
Member
காதல் 26

1329

“என்னை எங்கடா கடத்திக்கொண்டு போற?” என்று கேட்டு கத்திக்கொண்டிருந்தாள் அனிலா. ஆனால், அவளை அவன் கண்டுகொண்டால் தானே!

இறுக்கமாக முகத்தை வைத்திருந்தவன், அவளிடம் ஒன்றுமே கூறவில்லை. ‘அப்படி நாம இவன் முகத்துல முள்ள கட்டிட்டு சுத்தற அளவுக்கு என்ன செஞ்சோம்?’ என நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம் விஜய் சேதுபதி போல் யோசித்து யோசித்து பார்த்தாள். ஆனால், எங்கே அவனை அவள் கடுப்பேற்றினாள் என அவளுக்கு புரியவே இல்லை.

மீண்டும் ஒரு முறை அவள் தன் நினைவலைகளை மீட்ட, வாங்க… நம்மளும் போவோம்…


*****

காலையில் அனிலா வழக்கம்போல் சுப்ரபாதம் கேட்டு தூங்கி பத்து மணி போல் எழுந்து வந்தாள். சிறிது நேரத்தில் அவளிடம் இருந்து “முகில்… என்னை காப்பாத்து…” என்னும் குரல் கேட்க, அதில் தான் செய்துகொண்டிருந்த வேலையை அப்படியே விட்டவன், அவளை நோக்கி பாய்ந்து ஓடிவந்தான்.

‘பயபுள்ள இப்போ எதுக்கு கத்துறான்னு தெரியலியே!’ – அவன் மைண்ட்வாய்ஸ்.

அவளைத் தேடி அவன் சத்தம் வந்த திசை நோக்கி செல்ல, பின்வாசல் படிக்கட்டில் அவன் தாயார் அமர்ந்திருக்க, அவர் முன் தலைகுனிந்து அமர்ந்திருந்தாள் அனிலா. அருகில் அவன் தங்கை கையில் ஏதோ கிண்ணம்.

‘என்ன?’ என்று அவன் தங்கையிடம் சைகையில் கேட்க, அமைதியாக இருந்து கவனிக்குமாறு கூறினாள் அவள்.

“என்ன இப்படி தலைய வெச்சுருக்க? வயசுப்பொண்ணு, நல்லா எண்ணை எல்லாம் தேய்ச்சு குளிச்சு வாரி பூ வெச்சா தான பாக்க நல்லா இருக்கும்? அத விட்டுப்போட்டு எப்பவும் அது என்னது…” என்று அனிலாவின் தலையில் எண்ணெய்யை தேய்த்தவர், அயினியை நோக்க,

“ஹேர் ஸ்ப்ரேம்மா…” என்று எடுத்துகொடுத்தாள் மகள்.

“ஆங்… ஹேர் ஸ்ப்ரே… அதை அடிச்சுக்கிட்டா போதுமா? முடிக்கு என்ன வேண்டுமோ அது எல்லாமே நம்ம எண்ணைலயே இருக்கே!” என்றவர் அவளுக்கு அவற்றைப் பற்றி பாடம் நடத்தியவாறே தலையை நன்றாக இழுத்து வைத்து தேய்த்துவிட்டார்.

‘இதுக்கு தான் இப்படி கத்துறாளா?’ என்று அவன் நினைக்க, பல நாட்களாக எண்ணெய் படாத அவன் தலையை அப்போதுதான் பார்த்த அவன் தாயார், அவனை நோக்கி, “இங்க எனக்கு பொறந்ததே அப்படித்தான் இருக்கு…” என்றவர், “இவளுக்கு முடிச்சுட்டு நீ ஒழுங்கா வந்து ஒக்காறற” என மிரட்டினார்.

அதில் அனிலா ‘அப்பாடி…’ என்று மூச்சுவிட, அவன் விட்டால் போதும் என ஓடிவிட்டான். இருந்தாலும், இரண்டு பெண்களும் அவனை வளைத்துபிடிக்க, அவர்களிடம் சிறிதுநேரம் போக்கி காட்டிவிட்டு வேண்டுமென்றே மாட்டிக்கொண்டான் முகில்.

மாலை நேரம், பெண்கள் இருவரையும் வெளியில் அழைத்துச் செல்ல கேட்க, ஆதினி வர சொல்லியிருந்ததால் அவள் வீட்டிற்கு செல்ல வேண்டுமென்று கழன்றுகொண்டாள் அயினி. அதனால், அவன் அனிலாவை மட்டும் அழைத்துக்கொண்டு செல்லத் தயாராக, அவர்கள் எங்கே செக்கிறார்கள் என அறிந்த வாசுகி, அனிலாவை தானே தயார்படுத்த அழைத்துச் சென்றார்.

“அம்மா… எவ்வளவு நேரம்?” என தன் கைக்கடிகாரத்தை ஒரு முறை பார்த்துவிட்டு மீண்டும் உள்ளே நோக்கி கத்தினான் முகில்.

“இதோ முடிச்சாச்சு…” என்று குரல் கொடுத்த அவன் தாயார், அவன்புறம் வேர்வை சிந்தியவாறு வர, அவரைத் தாண்டி தன் விழிகளை பதித்தவன், “எங்கேம்மா அவ?” என்று கேட்டான்.

“வெளிய வர ஒரு மாதிரி இருக்குன்னு உள்ளேயே நிக்கறா…” என்றவர், அவள் அறையை நோக்கி, “இங்க வா அனிலா…” என்றார்.

அவரைத் தொடர்ந்து தானும் அந்த திசையைப் பார்த்தான் முகில். அவன் கண்களை அவனாலேயே நம்ப முடியவில்லை.

சிகப்பு நிற பாவாடை உடுத்தி, அதற்கு தோதாக மஞ்சள் நிற தாவணி அணிந்து, முடியை தளரப் பின்னி, அதில் இருபக்கமும் வழியுமாறு பூக்களை சூடியிருந்தாள். நெற்றியில் சின்னதாக ஒரு பொட்டு, அதன் கீழே குங்குமம், சிறு கீற்றாய். மைவிழியில் அஞ்சனம் பூசி, அந்த கருவிழிகளில் வெட்கம், தயக்கம் என பலவற்றைக் கொண்டு நின்றிருந்தாள் அவன்முன்.

தாயார் மட்டும் அருகில் இல்லையென்றால் அவளைக் கண்டவுடன் ஒரு சீட்டிகை பறந்திருக்கும் அவனிடம் இருந்து. கடினப்பட்டு அதனை செய்யாமல் விட்டவன், அவள் புறம் திரும்பி, “போலாமா?” எனக் கேட்டுவிட்டு வெளியே நடந்தான்.

அவனது இந்த செய்கையில் அவளுக்குத் தான் புஸ் என்றானது.

அதனை மறைக்காமல் தன் முகத்தில் காட்டியவள், அவனருகில் சென்று அமர, வண்டி ஆனைமலை சாலையில் சீறிப் பாய்ந்தது.


*****

முகில் அனிலாவை அழைத்துக்கொண்டு சென்ற இடம், மாசாணியம்மன் கோவில். காரை அதன் இடத்தில் நிறுத்தியவன், அவளை அழைத்து உள்ளே செல்ல, அம்மனை வழிப்பட்டவள், அவரையே பார்த்துக்கொண்டு நின்றாள். அதற்குள் பின்னால் இருந்தவர்கள் வழிவிடுமாறு கேட்க, அவர்களும் அங்கிருந்து நகர்ந்தனர். அங்கிருந்த மற்ற கடவுள்களையும் வழிபட்டவர்கள், ஒரு இடம் பார்த்து அமர, “முகி… இந்த சாமி பேர் என்ன? ஏன் படுத்திருக்க மாதிரி இருக்கு?” என்று கேட்டாள்.

“இந்த கடவுளை மயான சயனி-ன்னு சொல்வாங்க. அது காலப்போக்கில் மாசாணின்னு ஆகிருச்சு. அதாவது, மயானத்தின் சயனித்திருப்பவள்ன்னு பொருள். இன்னொரு பக்கம், மாசான் என்றால், மயானம்னும், அங்கே இருப்பவள்ங்கறதால மாசாணின்னும் சொல்வாங்க” என்க, அவள் முகத்தில் சிறியதாக பயம் வந்து போனது.

சுற்றும் முற்றும் பார்த்தவள், அவனருகே வந்து, “அப்போ இது மயானமா முகி?” என்று கேட்க, அவள் நடுக்கத்தைப் பார்த்திருந்தவன், “பலங்காலத்துல இருந்துச்சு. இப்போ இல்ல” என்றான்.

அவளது அடுத்த கேள்வி தொடங்கிற்று.

“ஏன் இங்க வெச்சிருக்காங்க?”

“அவங்கள புதைத்த இடத்தில் அவங்கள பிரதிஷ்டை செய்து வழிப்பட்டாங்க”

“ஏன்?”

“மக்கள் நல்லாருக்கனும்னு. அம்மனால அவங்களுக்கு நல்லது நடக்கனும்னு” என்று அவன் கூற, கீறல் விழுந்த டேப்ரெக்கார்டர் போல் திரும்பவும் “ஏன்?” எனக் கேட்டாள் அவன் காதலி.

“அதுக்கு தலவரலாறு சொன்னால் தான் உனக்கு புரியும்” என்றவன், அதையும் கூறினான்.


*****

ஆனைமலையை நன்னன் என்ற ஒரு மன்னன் ஆண்டு வந்தான். ஒரு நாள் ஒரு முனிவர் மிகவும் சக்தி வாய்ந்த சுவையுடைய ஒரு மாங்கனியை கொண்டு வந்து மன்னனிடம் கொடுத்து, “தாங்கள் இக்கனியை உண்ண வேண்டும், இது மிகவும் சக்தியும் சுவையும் வாய்ந்தது. அதை உண்டுவிட்டு அதனுடைய கொட்டையை தாங்கள் ஆற்றில் எறிந்து விட வேண்டும்” என்று கூறினார். மன்னனும் அவ்வாறே செய்வதாக வாக்களித்தார். அவன் அந்த மாங்கனியை உண்டு, அதன் சுவையால் கவரப்பட்டு, ஈர்க்கப்பட்டு, முனிவர் கூறியபடி செய்யாமல், அந்தக் கொட்டையை தன்னுடைய அரண்மனையில் நட்டுவைத்து வளர்க்க ஆரம்பித்தான். அதை மிகவும் கவனமாக போற்றிப் பேணிப் பாதுகாத்து வளர்த்து வந்தான். நாளடைவில் அது வளர்ந்து விருட்சமாகியது.

ஆனால் அதிசயம் என்னவென்றால், அவ்வாறு வளர்ந்து பெரிய மரமாக ஆன அந்த மரத்தில் ஒரு பிஞ்சோ கனியோ ஒன்று கூட விடவில்லை. நாளடைவில் அதிலிருந்து பூக்கள் மட்டும் தோன்றி உதிர்ந்தன. மன்னன் காத்து காத்து ஏமாந்து அதிசயித்து பின் இறுதியாக கனி கொடுத்த அந்த முனிவரை எங்கிருந்தாலும் தேடிக் கண்டுபிடித்து அழைத்து வருமாறு வேண்டுகோள் விடுத்தான். அவரைத் தேடி அழைத்து வந்த உடன் முனிவரும், “மன்னா, நான் தங்களுக்கு கொடுத்த கனி மரத்திலிருந்து பறிக்கப்பட்ட கனியல்ல. பலவருடம் தவம் செய்து என்னுடைய குருநாதர் எனக்கு விரும்பி கொடுத்த கனி. அதை நான் உண்பதைக் காட்டிலும் நாடாளும் மன்னனாகிய நீ சுவைப்பது தான் சாலச்சிறந்தது என்றுதான் நான் உன்னிடம் கொடுத்தேன். நான் கூறியதற்கு மாறாக நீ கொட்டையை ஆற்றில் வீசாமல் நட்டு வைத்ததால் வீண் வம்பை விலைக்கு வாங்கிக் கொண்டாய். மேலும், அந்த கனி ஒரு முறை தான் காய்க்கும். ஒரு பழம்தான் காய்க்கும். மீண்டும் அது காய்க்காது. அதுமட்டுமல்லாது, ஒரு நாட்டில் விளைந்த கனியை மற்றொரு நாட்டில் உள்ளவர்கள் தான் உண்ண வேண்டுமே ஒழிய அந்த நாட்டில் உள்ளவர்கள் அந்தக் கனியை உண்ணக்கூடாது என்றும் இதனுடைய தாத்பரியம் கூறுகிறது” என்றும் கூறினார்.

“அப்படியானால், இந்த மரத்தில் விளையும் கனியை யார் உண்ண வருவார்கள்” என்று துறவியிடம் மன்னர் கேட்டார். அதற்கு துறவி, “வேறு நாட்டிலிருந்து வரும் ஒரு கன்னிப்பெண் தான் இந்த கனியை உண்பாள். அவள் அஷ்டமாசித்திகளை உடையவள். அவள் ஒரு தெய்வப்பிறவி. மேலும், அவள் மானிடப் பிறவியே அல்ல. சகல சக்திகளும் வாய்ந்தவள். ஆதலால், நீ இந்த மரத்தினுடைய கனி தனக்கு கிடைக்கவில்லையே என்று மரத்தை அறுத்து விடாதே, வெட்டி விடாதே! சகல சக்தியும் வாய்ந்த ஒரு அம்மன் கன்னிப் பெண்ணாக வந்து இந்த மரத்தின் கனியை உண்பாள். அதுவரை காத்திரு” என்று கூறி அவர் விடைபெற்றுச் சென்றுவிட்டார்.

இம்முறையும் மன்னன் முனிவரின் பேச்சைக் கேட்க மறுத்து விட்டான். அவர் சென்ற உடன் இந்த கனியை தானே சுவைக்க வேண்டும் என்ற ஆவல் கொண்டான். மேலும், அது விளையப்போகும் ஒரே ஒரு கனி. அதை யாரும் உண்டு விடாமலிருக்க அந்த மரத்திற்கு பயங்கர காவல் வைத்தான். சதாசர்வகாலமும், 24 மணி நேரமும் காவலை நீட்டித்து கொண்டே இருந்தான்.

அதே நேரத்தில், வேறு நாட்டில் கரிமேசுவரன் என்ற ஒருவன் வாழ்ந்து வந்தான். அவருடைய குலத்தொழில் யானை வியாபாரம் தான். அவ்வாறு யானை வியாபாரம் செய்து கொண்டு அவர்கள் நாடு கடந்து வரும்போது தாரகன் என்ற ஒருவன் தன் மகளுடன் வந்தான். அவனும் அவன் மகள் தாரணியும் ஆனைமலை பகுதிக்கு வந்து ஒரு வீட்டில் குடியிருந்தார்கள். தாரணி அக்கம் பக்கத்தில் உள்ள பெண்கள் உடன் சென்று ஒருநாள் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தாள்.

அந்தப் பெண் தாரணி எங்கு குளித்துக் கொண்டிருந்தாளோ அந்த ஆற்றின் அருகில் தான் அந்த மாமரம் இருந்தது. இவள் குளித்துக் கொண்டிருந்த வேளையில் மாமரத்தில் இருந்த கனி தானாக விழுந்து இவளை நோக்கி வந்தது. இவள் பொன்னிறமாக ஈர்க்கப்பட்ட அந்த கனியின் அழகில் மயங்கி அதை எடுத்து சுவைத்து விட்டாள். உடனே செய்தி அரசனுக்கு எட்டியது. அரசன் உடனே தாரணியையும் அவள் தந்தையும் அழைத்துவரச் செய்தான்.

தாரணியோ உடனே மன்னனிடம் இருகரம் நீட்டி உயிர்ப்பிச்சை வேண்டினாள். “மன்னா, நாங்கள் வேறு நாட்டில் இருந்து வருகிறோம். தாங்கள் முரசு அறிவித்தது, தண்டோரா போட்டது எதையும் நாங்கள் அறியோம். மேலும் ஒரு மாங்கனிக்காக கொலை செய்வார்கள் என்றும் எனக்குத் தோன்றவில்லை. ஆதலால் எங்களுக்கு உயிர் பிச்சை தந்தருள வேண்டும்” என்று கோரிக்கை விடுத்தாள். ஆனால் அவள் கோரிக்கையை செவிமடுக்காத மன்னன் அவளை கொலைக்களத்திற்கு அனுப்பினான். கொலைக்களத்திற்கு கொண்டு சென்று அவளைக் கொலை செய்தனர். அந்த நேரத்தில் அவள், “மன்னா! நான் மரித்தாலும் மீண்டும் வருவேன். மிகுந்த சக்திவாய்ந்த தெய்வமாக விளங்குவேன். ஆனால் என்னைக் கொலை செய்த காரணத்தால் உன்னுடைய நாடும் மக்களும் அழிந்து போவார்கள்” என்று சாபமிட்டு அவள் உயிர் நீத்தாள்.
அந்த பெண்ணின் உடலை அவள் தந்தை பெற்றுக்கொண்டார்.

அந்த பெண்ணிற்கு மண்ணால் அவரும் ஊரில் உள்ளவர்களும் சேர்ந்து ஒரு உருவம் செய்தனர். அது சிறிய மயான அம்மனாக இருந்து நாளடைவில் வளர்ந்து பெரிய கோயில் ஆகி மிகவும் சக்தி வாய்ந்த தெய்வமாக ஆகிவிட்டது .அதே நேரத்தில் நன்னனை எதிரி நாட்டுப் படைகள் சூழ்ந்து அழித்து ஒழித்து அவனது வம்சத்தையே பூண்டோடு அழித்தார்கள்.


*****

இவ்வாறு அவன் கூறி முடிக்க, “கதை சூப்பரா இருக்கு முகி” என்றவள், ஒரு பெண் கல்லில் எதையோ அரைத்து எங்கோ எடுத்துச் செல்வதைக் கண்டு அது என்னவென விளக்கம் கேட்டாள் அவள்.

அதனை நீதிக்கல் என்று கூறுவர். தீராத குடும்பப் பிரச்னை, மனக்குறைகள், நம்பிக்கைத் துரோகம், பொருள்களைக் களவு கொடுத்தல், பகை என்று வருத்தத்தோடு வரும் பக்தர்கள், கோயிலில் மகாமண்டபத்தில் இருக்கும் நீதிக் கல்லில் மிளகாய் அரைத்துப் பூசி வேண்டிக்கொள்கிறார்கள். வேறு எங்கும் இல்லாத வழிபாட்டு முறை இது. மிளகாய் அரைத்துப் பூசினால் அம்மன் உரிய நீதி வழங்குவாள் என்பது நம்பிக்கை.

தமது மனக்குறைகளை அம்மனிடம் மனம் விட்டுச் சொல்கிறார்கள். ஒரு தேங்காய், இரண்டு வாழைப்பழம், நூறு கிராம் மிளகாய் ஆகியவற்றைக் கோயிலில் இருக்கும் ஆட்டுக்கல்லில் ஆட்டுகிறார்கள். பிறகு, கோயிலுக்கு முன் இருக்கும் நீதிக் கல்லில் அரைக்கப்பட்ட மிளகாயைப் பூசி தமக்கான நீதியை வேண்டுகிறார்கள். அதற்குப் பிறகு, அம்மன் தனக்கான நீதியை நிச்சயம் வழங்குவாள் என்று மன நிம்மதியுடன் திரும்புகிறார்கள் பக்தர்கள். வேண்டுதல் நிறைவேறியதும் அடுத்த 90 நாள்கள் கழித்து மாசாணிக்கு எண்ணெய்க் காப்பு செய்து நன்றிக்கடன் செலுத்துகிறார்கள். நீதி மட்டுமல்லாமல் பல்வேறு வேண்டுதல்களுக்காகக் கோயிலுக்கு முன் இருக்கும் மரத்தில் மஞ்சள் பூசி, எலுமிச்சம்பழத்தைத் தொங்கவிட்டும் வழிபடுகிறார்கள் பக்தர்கள். அதன் பிறகு அனைத்தையும் மாசாணியம்மன் பார்த்துக்கொள்வாள் எனும் நம்பிக்கையில் பக்தர்கள் கவலையில்லாமல் செல்கிறார்கள்.

அவன் விளக்கம் கொடுக்கக் கொடுக்க, அதனையே வாயைப் பிளந்து கேட்டுக்கொண்டாள் அனிலா.

பின், அவன் கையை சுரண்டியவள், “நீயும் இந்த மாதிரி அரைச்சிருக்கியா?” என்று கேட்க, அதில் அவன் முகம் சிறிது மாறியது. முயன்று தன்னை கட்டுக்குள் கொண்டுவந்தவன், அங்கிருந்து எழுந்துகொண்டான்.

நெய்தீபம் ஏற்றி வழிபட்டவர்கள் கார் பார்கிங்கை நோக்கி செல்ல, வழியில் ஒரு கடையில் நின்றுவிட்டாள் அனிலா. அவள் ஆர்வமுடன் பார்ப்பதைக் கண்டவன், அவளை அங்கேயே நிற்கச் சொல்லிவிட்டு காரை எடுத்து வரச் சென்றான்.

அனிலாவோ, சிறுபிள்ளை போல் அவர்கள் வைத்திருக்கும் ஒவ்வொன்றையும் என்னவென்று கேட்டுக்கொண்டிருந்தாள். அந்த அம்மாவும் அவளிடம் அனைத்தையும் விளக்கிக்கொண்டிருக்க, அவர்கள் வைத்திருந்த குழலை விரல்களில் ஒன்றாக மாட்டி விளையாண்டுகொண்டிருந்தாள். (நீர்மோர் கூட பாத்ததில்லையாம்மா நீ? பக்கத்துல நல்லா ஒறப்பா மாங்காவும் இருக்கும் பாரு!)

அதனை அவள் சாப்பிட, அவர், “ஏம்மா… எந்த ஊரு புள்ள நீயு?” என்று விசாரித்தார்.

பேசவும் முடியாமல், பறப்பது போல் கையை மட்டும் ஆட்டினாள் அவள்.

“ஓ… சரி சரி… சாப்பிடு… கூட வந்தவரு ஆரு? ஒன்ற பண்ணாடியா?” என்று கேட்க, அவளுக்கு ஒன்றும் புரியவே இல்லை. ஆனாலும் ஏதோ ஒரு பக்கம் தலையாட்டியாக வேண்டுமே! ஏதோ குத்துமதிப்பாக தலையாட்டி வைத்தாள்.

அதனை கேட்டவர், அவள் பின்னால் நின்றிருந்த முகிலைக் கண்டு, “வா ராசா… ஒன்ற ஊட்டுக்காரம்மா மோர் எல்லாம் எதுவும் வேண்டாமுன்னு சொல்லிருச்சு… குழல மட்டும் எடுத்து சாப்பிட்டுட்டே இருக்கு. ஒனக்கு ஏதாவது வேணுமாப்பா?” என்று கேட்க, அவரிடம் மறுத்தவன், அனிலா சாப்பிட்டவைக்கு பணம் கொடுத்துவிட்டு அவளை அழைத்துவந்தான்.


*****

‘இவ்வளவு தான நடந்துச்சு? வேற ஏதாவது மிஸ் பண்ணிட்டோமா? மைண்ட்… கைண்ட்லி பார்வேர்ட்!’ என அவள் மீண்டுமொரு முறை கேட்க, அந்த ஆளில்லாத காட்டு வழியில் கார் நின்றதை அவள் கவனிக்கவே இல்லை.

அவள் புறம் திரும்பிய முகில், ஒன்றும் கூறாமல் அவளை தன்னோடு இறுக்கி அணைத்தான். அதில் பேஸ்தடித்தது போலானது அவள் முகம். வார்த்தைகாள் வரவில்லை அவளுக்கு. சில நொடிகளோ, பல நிமிடங்களோ, அந்த நிலையிலேயே இருவரும் இருக்க, முதலில் பிரிந்தது முகில் தான்.


இந்த‌ நிமிட‌ம் இந்த‌ நிமிட‌ம் இப்படியே உறையாதா
இந்த நெருக்கம் இந்த நெருக்கம் இப்படியே தொடராதா
இந்த‌ மெள‌ன‌ம் இந்த‌ மெள‌ன‌ம் இப்ப‌டியே உடையாதா
இந்த‌ ம‌ய‌க்க‌ம் இந்த‌ ம‌ய‌க்க‌ம் இப்ப‌டியே நீளாதா

அந்த பாட்டி அவளிடம் கேட்கும்போதே அவன் வந்துவிட்டான். அவரை தடுக்கப் பார்த்தவன், அவள் என்னவென்று கூறுவாள் என தெரிந்துகொள்ள ஒரு சின்ன ஆசை. அதனால், அமைதியாக அவளையே பார்த்திருந்தவன், அவள் ஆமென்று தலையாட்டவும், வானத்தில் பறக்கின்ற நிலை அவனுக்கு. தன் நிலையை காட்டாமல் அவளை அங்கிருந்து கூட்டி வருவதற்குள் அவன் பட்ட கஷ்டம் அவனுக்குத் தான் தெரியும்.

இதையெல்லாம் நினைத்துப் பார்த்தவன், அவள் வதனம் நோக்கி, “நான் எவ்வளவு சந்தோஷமா இருக்கேன் தெரியுமா?” என்று கேட்க,

தனது ட்ரேட்மார்க் கேள்வியான ‘ஏன்?’ஐ கண்ணில் தாங்கி அவனை நோக்கினாள் அவள்.

“அது எப்படிடி என்னை அவங்ககிட்ட புருஷன்னு சொன்ன?” என்று கேட்க, அப்போதுதான் அந்த பாட்டி கேட்டதற்கு அர்த்தமே புரிந்தது அவளுக்கு.

அதில் அவள் தரை நோக்க, அவளையே சிறிது நேரம் பார்த்திருந்தவன், காரை செலுத்தினான்.

அந்த மௌனம் அவளை ஏதோ செய்து புதுவகையான ஒரு அனுபவத்தைக் கொடுக்க, அதனை மாற்ற எண்ணியவள், “முகி… இப்போ நாம துணிக்கடைக்கு தான போறோம்?” என ஆவலாக கேட்க,

“ஏன்?” என்றான் அவன்.

“அன்னைக்கு மட்டும் புடவை வாங்கி கொடுத்தியே!” என்று சந்தேகமாக சொன்னாள் அவள்.

அதில் வாய் விட்டு சிரித்தவன், “சக்தி திருமணத்திற்காக வாங்கிக்கொடுத்தேன். வேண்டுமென்றால், இன்னைக்கு சொன்ன வாய்க்கு ஏதாவது கிஃப்ட் கொடுக்கட்டா?” என அவள் இதழ்களை நோக்க, “போடா…” என்றவள், சாலையை நோக்கி திரும்பி அமர்ந்துகொண்டாள். முகத்தில் தோன்றும் செம்மையை மறைக்க வேண்டுமே!

அதில் வாய்விட்டு சிரித்தவன் வீட்டை நோக்கி வண்டியை செலுத்தினான்.
 
Top