Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலினும் காதல் கேள் - 13

Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
காதலினும் காதல் கேள் ❤

நெப்போலியன் எந்தளவுக்கு இறங்கிப் பேசுகிறானோ இணக்கமாக இருக்கிறானோ அந்த அளவு கோபமும் கொள்பவன்.ஆர்கலியை முதல் சந்திப்பிலேயே பிடிக்காவிட்டாலும் கூட மாணிக்கத்திற்காக மட்டுமே அவளுடன் சகஜமாகப் பேசினான்.

அதுவும் அவள் உடல் நலன் குன்றிய போது கொஞ்சமாக கரிசனம் அவள் மேல் கொள்ள,அதன் பின் அவள் பணத்தை திருப்பித் தந்த அவள் நிமிர்வு பிடித்திருக்க அவளிடம் கனிவாக நடந்து கொண்டான்.

அதற்காக அவள் முதல் பார்வையை…பேச்சை முற்றிலுமாக மறந்தான் என்றில்லை.

இன்று மீண்டும் அதே போல் பார்வையை பாவை பார்த்துவிட,அது அவனைக் கடுப்பாக்க,பதிலேதும் அவன் பேசாமல் நின்றான்.

மனத்தின் குணம் முற்றிலும் வேறானது.அன்பை காட்டவே நாம் அத்தனை யோசிப்போம்.

தெருவிலோ பொதுவிலோ ஒருவரை பார்த்து அரை நொடி புன்னகைக்கை ஆயிரம் முறை யோசிப்போம்.ஆனால் அறியாமல் நம் காலை மிதித்தாலோ…தாண்டி சென்றாலோ ஆத்திரத்தைக் காட்ட அரை நொடி கூட யோசிக்க மாட்டோம்.

அன்பு காட்ட யோசிக்கும் பலர் ஆத்திரத்தைக் காட்ட யோசிப்பதில்லை.

யோசித்தால் அதைக் காட்டும் வேலையும் இல்லையே..!

ஆர்கலியும் அப்படியே…முதன் முதலில் அவனிடம் கோபம் காட்ட கொஞ்சமும் யோசிக்காதவள் அவள்.இப்போதும் அப்படியே..

அவன் பேசாமல் இருந்தால் இவள் பேசா மடந்தையாகிடுவாளா என்ன..?

“அது எப்படி எப்படி…அவன் குடிகாரன்னு நீ சொல்ற….உன்ட்ட காசு இருந்து நீ குடிச்சா மட்டும் ரொம்ப யோக்யமா..?” என்று நக்கலாக கேட்க

“உனக்கு என்ன ப்ரச்சனை…நான் ரௌடி…பொறுக்கி…குடிகாரன்…போதுமா…?” என்றான் பொறுமை இழந்து பொறுமலோடு.

அவன் அப்படி பேச ஆர்கலிக்கு என்னவோ போல் ஆனது.அவள் யாரையும் காயப்படுத்த வேண்டும் என்று பேசியதில்லை.

முதன்முதலில் அவள் கண்ட பார்வையில்…அவன் பரிமாணம் வேறு தான்.

ஆனால் இத்தனை மாதங்களாக அவள் அப்பா சொல்லி அவனைப் பற்றி அறிந்து இருக்கிறாள் தானே..?

அன்று குடித்து இருந்த போதும் கண்ணியமாக அவளிடம் நடந்தவன் தானே..?அதிலும் பாதுகாப்பாய் பின் வந்தவன் வேறு.

இன்று கூட காரில் வரும்போதும் ஒரு நொடியும் இவளிடம் வராத அவன் பார்வை.தங்கைகளிடம் அவன் காட்டிய பரிவு…இத்தனைக்கும் மேலாக மாணிக்கத்திடம் அவன் நடந்து கொள்ளும் பாங்கு.

அதுவும் அவன் காட்டும் அந்த பாசங்கற்ற பாங்கில் இவள் நெகிழ்ந்து தான் போனாள்.மாணிக்கத்திடம் அவன் அதிக உரிமை எடுத்தாலும் உள்ளத்தின் ஆழத்தில் இருந்து அவரை கவனித்துக் கொள்வதும்,அவனுக்கும் அவன் தந்தைக்குமான அந்த ஒட்டுதல் எல்லாம் அவனை அவளுக்குப் பிடிக்க செய்தது.

அப்படியானவன் இப்படி இங்கு ஒருவனிடம் சண்டை போடுவது பிடிக்காமல் தான் அவள் அப்படி கேட்டது.

ஆனால் அவன் ‘பொறுக்கி’ என்ற வார்த்தையெல்லாம் பொறுமையிழந்து பயன்படுத்த அவளுக்கு வருத்தமாக இருக்க,

“ஏய்…..லூசா நீ….? உனக்குத் தப்பான பழக்கம் இருக்குன்னு சொன்னேன்…நீ தப்பானவன்னு சொன்னேனா.....நம்ம மேல தப்பு வைச்சிட்டு அடுத்தவனைக் கேள்வி கேட்காதன்னு சொன்னேன்..அதுக்கு எதுக்கு இப்படி டென்ஷன் ஆகுற நீ..?” என்று ஆர்கலி பதிலுக்குக் கோபமாகப் பேச

“இங்க பாரு…உனக்கு உதவி செஞ்சேன்..பணம் வேண்டாம்னு சொன்னேன்னு என்னைக் கர்ணன் நினைச்சியா நீ..?கடன்னு வந்துட்டா…நான் வேற மாதிரி..அந்த பரதேசி….ஆறு மாசமாச்சு பத்தாயிரம் வாங்கிட்டு என்னை டபாய்க்கிறான்….அவங்கிட்ட கடன் வசூல் பண்ண நான் கார் எடுத்துட்டு இத்தனை கிலோமீட்டர் வருவேனா…அதான் இன்னிக்குப் பார்த்தேன் கேட்டேன்..அதுல உனக்கென்ன வந்துச்சு……நான் என் காசுல குடிக்கிறேன்…அதுக்கு அவன் என்னைக் கேள்வி கேட்பானா..? கேட்டுப் பார்க்க சொல்லேன்…” என்று பல்லைக் கடித்துக் கொண்டு பேச

“கேள்வி கேட்கலன்றதால நம்ம தப்பு செய்யலன்னு அர்த்தமில்ல..நெப்போலியன்.”

“எம்மா தாயே….உனக்கு என்ன வேணும் இப்போ…” எரிச்சல் மிகுந்து நிலையில் அவன் கத்த

“இங்க பாரேன்…சும்மா இப்படி கோவப்பட்டு கத்துறதால எல்லாம் என்னை மிரட்டிப் பேசிடலாம்னு நினைக்காத…..நீ குடிக்கிறது மட்டுமில்லாம வயசானவங்களும் ஊத்திக் கொடுத்த அன்னைக்கு…அப்போ இருந்த டென்ஷன்ல நான் பேசல….உன்னைக் கேட்கல…”

“உங்கப்பா அதுக்கு அப்புறம் குடிச்சாரா இல்ல தானே..?என்னைக் கேள்வி கேட்கிற வேலை எல்லாம் வைச்சுக்காத…” என்றான் ஒற்றை விரல் நீட்டி கோபமாக.

“எங்கப்பா குடிக்கல….ஆனா உங்கப்பாவும் நீயும் குடிக்கிறீங்க தானே?”

“இங்க பாரேன்..அவன் குடிச்சான்னா எனக்குக் கடன் கொடுக்கனுமேனு கேட்டேன்..அவனுக்கு குடும்பம் குழந்தை இருக்கு..உங்கப்பாவுக்கு நீங்க இருக்கீங்க…எனக்கும் எங்கப்பனுக்கும் யாருமில்ல….அதனால எங்க இஷ்டப்படி வாழ்றோம்….” என்று திமிராகப் பேசினான்.

அவனுக்கும் அவருக்கும் யாருமில்லை தான்.ஆனாலு அவனுக்காக அவரும்…அவருக்காக அவனும் வேண்டும் தானே..?
அதை மறந்து அவன் மறுத்து பேச,

அவன் இஷ்டம் என்று சொல்பவனிடம் வேறென்ன பேச

‘அட போடா…’ என்று தன் பார்வையை அவனிடம் இருந்து அலட்சியமாகத் திருப்பிக் கொண்டாள்.

அவள் கொஞ்சம் நடந்து தண்ணீர் இருக்கும் பகுதிக்கு வந்து கால்களில் முகம் பதித்து உட்கார்ந்து தூர கடலை ஈர விழியால் ரசித்தாள்.

நெய்தல் காற்று நெஞ்சம் நெகிழ்த்தியது.அகத்தின் நினைவுகள் அலையாய் எழும்ப,தாத்தாவின் ஞாபகம் அதிகமாக இருந்தது.

யாரிடமும் அவளை விட்டுக்கொடுக்காத தாத்தா.அவள் அப்பத்தா கூட சில சமயம் மகனை விட்டுச் சென்ற மருமகளின் மேல் இருக்கும் கோபத்தில் எதாவது இவளைப் பேசிவிடுவார்.

ஆனால் தாத்தாவுக்கு எப்போதும் ஆர்கலி என்றால் செல்லம் தான்.
இடங்களும் பொருட்களுக்கும் வேண்டுமானால் உயிரில்லாமல் இருக்கலாம்.ஆனால் அவை உயிரை தனக்குள் வைத்திருப்பவை.

சில உயிரின் உணர்வை தங்களுக்குள் உள்ளடக்குபவை.

ஆர்கலிக்கு அப்படிதான் கடல் என்பது தாத்தாவிற்கும் அவளுக்குமான இடம்.அதுவும் அவள் பெயரின் பொருளானதால் கடல் மீது அவளுக்கு கொஞ்சம் அலாதியான காதலும் கூட.

இப்படி அவள் ரசித்து கரையை…அதைத் தொடும் அலையை பார்த்திருக்க…

“ஷ்யாம் கூப்பிடுறான் வா டைம் ஆச்சு..” என்று சொல்லி ஆர்கலியின் முன்னே சென்று நெப்போலியன் நிற்க,

அவளின் ஈர விழிகள் இவனுக்கு தப்பாமல் தெரிய,
“ஏய்…என்னாச்சு…ஏன் அழற..?” என்று பதற

‘அட போடா..’ என்று அதே பார்வையைத் தந்தவள் எழுந்து கொள்ள,அவள் கண்ணீர் கன்னம் தொடக் கூட இல்லை,ஏன் கண்ணை விட்டு விழ கூட இல்லை.

ஆனால் கண்கள் கலங்கி மட்டும் இருக்க,இவனுக்குக் கழுகு பார்வை தான் என்று நினைத்தவளுக்கு அப்போதுதான் அது தோன்றியது.

“ஆமா….நீ உன் ப்ரண்ட்ஸ் கூட பேசிட்டு தானே இருந்த…அது எப்படி கரெக்டா நான் இங்க இருக்கேன்னு தேடி வந்த…?” என்று கேட்க

“பேசிட்டு இருந்தா…ஆள் போறது கூடவா தெரியாது…?” என்றான் அவன் இயல்பாக.

அவன் தான் எதையும் உன்னிப்பாக கவனிப்பானே.

“ப்ச்…இல்ல… நான் கற்பகம் ஆன்டி கூட தான் நின்னேன்..அவங்க கூட என்னை கவனிக்கல…ஆனா..நீ..?” என்று அவள் இழுக்க

“அவங்க கவனிக்கலன்னு எல்லாம் எனக்குத் தெரியாது…என் பார்வை எப்பவும் சுத்தி என்ன நடக்குதுன்னு கவனிக்கும்..அப்ப தான் நீ இந்த பக்கம் வரவும்..தனியா போய் வழி தெரியாம மாட்டிக்குவியேன்னு பின்னாடியே வந்தேன்..” என்று சொல்ல

“ஓ… நல்ல அப்சர்விங் ஸ்கீல்ஸ் தான் உனக்கு..” என்றாள் பாராட்டாய்.

“உனக்கும் நல்ல நடிக்கிற திறமை…ஏன் அழுதன்னு கேட்டா உடனே ப்ளேட்டை மாத்திட்ட..பெரிய தில்லாலங்கடி நீ.. சரி…ஏன் அழுத அதை சொல்லு..” என்றான் நக்கலாக.

“அது என் இஷ்டம்..” என்றாள் திமிராக.உள்ளதை உள்ளபடி உள்ளத்தில் இருந்து உரைக்கும் அளவுக்கெல்லாம் அவனோடு பழகவில்லையே..யாருடனும் இல்லை என்பது வேறு கதை.

ஆனால் அவனோ குறும்போடு குறுஞ்சிரிப்பும் சேர்ந்து கொள்ள,
“இரு…இரு..நீ அழுதன்ன்னு உங்கப்பா கிட்ட சொல்றேன் “ என்று விளையாட்டாக சொல்ல , ஆர்கலியோ சட்டை செய்யவே இல்லை.

மீண்டும் ஷ்யாம் போனில் அழைக்க,
“வந்துட்டே இருக்கோம்டா….” என்று சொல்லி விட்டு

“வா போலாம்..” என்று ஆர்கலியை அழைக்க,

“ஆமா…எப்படி ஷ்யாம் உனக்கு ப்ரண்டானார்..” என்று ஆர்கலி கேட்க

“அது எப்படி….எப்படி ? என்னை வா போன்னு பேசுற என்னை விட ஷ்யாம் இரண்டு வயசு சின்னவன்…ஷ்யாம் அவர் இவரா..?” என்றான் கடுப்பாக.

“ஹாஹா… நீங்க இரண்டு பேரும் ப்ரண்ட்ஸ்னதும் ஒரே ஏஜ்னு நினைச்சேன்… நீ சொல்லித்தான் ஷ்யாம் சின்னவர்னு தெரியுது..”

“தெரிஞ்சும் கூட அவன் அவர் தான்…நான் அவன் தான் இல்ல…என்ன இருந்தாலும் அவன் டாக்டர் இல்ல…” என்றான் ஒரு மாதிரியான குரலில்.

தாழ்வு மனப்பான்மை என்பதெல்லாம் இல்லை.ஆனாலும் ஏன் இப்படி என தெரிந்து கொள்ள உள்ளம் உந்த,உரைத்துவிட்டு அவள் முகம் பார்க்க,

“அது பழகிடுச்சு..அதான் அவர் இவர்னு வந்துடுச்சு…ஆனால் கண்டிப்பா படிப்பு வைச்செல்லாம் மரியாதை கிடையாது.நான் அப்படி கொடுக்கிற ஆளுமில்ல…நீ எங்கிட்ட அப்படி தானே பேசுற…அதான் எனக்கும் அப்படியே வருது..” என்றாள் உண்மையாக.

“அப்போ நான் மரியாதைக் கொடுத்து பேசனுமா உனக்கு….நீ என்னை விட கண்டிப்பா சின்னப்பொண்ணா இருப்ப…” என்றான்.

“கண்டிப்பா….நீ தான் வயசு பார்த்த மரியாதை தர…நான் அப்படி இல்ல…. நீ என்ன தரியோ…அதான் திரும்பிக் கிடைக்கும்” என்றாள் அழுத்தமாக.

இருவரும் நடந்து படகு இருந்த இடத்திற்கு வந்துவிட,அனைவரும் இவர்களுக்காகக் காத்திருக்க,


“என்னடா அப்பா கிட்ட சொல்லாம போயிட்ட..” என்று மாணிக்கம் கேட்க

“நீங்க பேசிட்டு இருந்தீங்கப்பா…அதான் டிஸ்டர்ப் பண்ண வேண்டாம்னு.. ஸாரிப்பா” என்று அவர் கையைப் பற்றிக் கொண்டாள்.

“சரி…சரி அதான் வந்தாச்சுல….நேரமாகிடும்..போலாம்..வாங்க..” என்று வரதராஜன் அவசரப்படுத்த ,படகில் ஏறி வந்தது போலவே நீரைக் கிழித்து படகில் நீந்தி கரை சேர்ந்தனர்.

கரைக்கு வந்து பின் காரில் கிளம்பி ஊர் நோக்கிப் புறப்பட,முதலில் ஷ்யாமின் கார் செல்ல,பின்னாலேயே நெப்போலியன் கார் சென்றது.

வரதராஜன் களைப்பாக இருக்கிறது என்று சொல்லி பின் சீட்டில் படுத்துக் கொள்ள,மாணிக்கத்தையும் படுக்க சொல்லி விட்டு ஆர்கலி முன்னால் வந்து உட்கார்ந்து கொண்டாள்.

மெல்லிசை மென்மையாக செவித் தீண்ட,ஆர்கலி துப்பட்டாவை முகத்தில் மூடிக் கொண்டு தூங்க துவங்க,

“அது எப்படி வரப்பவும் தூங்குற…இப்பவும் தூங்குற…வெளியே வேடிக்கைப் பார்க்கிற பழக்கமில்லையா..?” என்று நெப்போலியன் கேட்க

“ப்ச்…தூங்கல நான்…அது எனக்கு கார்ல ட்ராவல் பண்ண பிடிக்காது…க்ளோஸ்டா இருக்கு இல்லையா..? அதான் அந்த ஸ்மெல் பிடிக்காம அப்படியே கண்ணை மூடிடுவேன்..முழிச்சிருந்தா எனக்கு என்னவோ மாதிரி இருக்கும்..” என்றாள் ஆர்கலி.

“அப்போ ஏசியை ஆஃப் பண்ணிடுறேன்…நீ ஜன்னலைத் திறந்திடு..” என்றான்.

“இல்ல…பரவாயில்ல…அவங்க தூங்குறாங்க…நான் அட்ஜஸ்ட் பண்ணிப்பேன்..” என ஆர்கலி சொல்ல

“சொன்னா செய்….ஜன்னலைத் திறந்துக்கோ..” என்றான் கட்டாயமாக.ஏசியையும் ஆஃப் செய்துவிட

“அப்போ…உனக்கு எதுல போக பிடிக்கும்…ட்ரைன்னா..? இல்லை பைக்கா….அது நல்லா ஓபனா இல்ல இருக்கும்..” என்று அவன் புன்னகையோடு கேட்க

“ஜீப்…” என்றாள் ரசித்த பாவனையில்.

“பார்டா…ஜீப்பா…போயிருக்கியா என்ன..?”

“இல்ல…”

“அது எப்படி போகாமா பிடிக்குது உனக்கு..?”

“கிடைச்சது தான் பிடிக்கனும்னு இல்ல…போகலான்னாலும் கடல் தான் எனக்குப் பிடிக்கும்…ஜீப் தான் எனக்குப் பிடிக்கும்…பிடிக்குதுன்றதுக்காக அதை அனுபவிக்கனும்னு அவசியமில்லை.” என்று அவள் சொல்ல புரிந்தும் புரியாமலும் தலையை ஆட்டி வைத்தான்.

அந்த பயணம் வீடு வரை நீண்டது.எல்லோருக்கும் மறக்கவே முடியாத ஒரு அழகிய பயணமாக அது அமைந்தது.

*************************
மாணிக்கத்தின் குடும்பம் காஞ்சிபுரத்தில் குடியேறி முழுதாக ஒரு வருடம் ஓடி விட்டது.மாணிக்கம் ஒரு புறம் ஆர்கலிக்கு வரன் தேட,வரதராஜன் நெப்போலியனுக்குப் பெண் பார்த்துக் கொண்டிருந்தார்.

ரஞ்சித் முது நிலை இரண்டாம் வருடத்தில் இருக்க,காயத்ரி இள நிலை இரண்டாம் வருடத்திலும், ஷாலினி பன்னிரெண்டாம் வகுப்பிலும் இருந்தாள்.

அன்று கடையில் மாணிக்கம் மிகுந்த சோர்வாகவும் பதட்டத்தோடும் இருக்க,

“என்னாச்சு மாணிக்..ஒரு மாதிரி இருக்கீங்க..உடம்புக்கு முடியலையா..?” என்றான் நெப்போலியன்.

அப்போது கடையில் அவனும் அவரும் மட்டுமே.

“அது ஆர்கலிக்குப் பொருத்தமா ஒரு வரன் வந்திருக்கு….அவளுக்கு வாட்ஸப்ல போட்டோ அனுப்பிட்டேன்…இன்னும் பார்க்கல…ஒரு வருஷத்துல இதான் நல்ல பொருந்தின ஜாதகம்..எனக்கும் பிடிச்சிருக்கு..” என்றார் பதட்டமாக.

அவர் கையிலிருந்த போனில் மாப்பிள்ளையின் படத்தை வாங்கிப் பார்த்துவிட்டு,

“மாப்பிள்ளை நல்லா சூப்பரா இருக்கார்..மாணிக்…கண்டிப்பா உங்க பொண்ணுக்குப் பிடிக்கும்..” என்று நெப்போலியன் நம்பிக்கையாக சொல்ல

“பிடிக்கனும் வீரா….அவளை மாதிரியே ஐடில தான் வேலை பண்றார்…சின்னதுல இருந்து என் பொண்ணுக்குப் பிடிச்சதை என்னால கொடுக்க முடிஞ்சதில்ல….ஆனா இது அவ வாழ்க்கை இல்லையா…அவளுக்குப் பிடிக்கனும்னு மனசு அடிச்சிக்குது..” என்று அவர் அப்பாவாக படபடப்போடு பேச

அவர் தோளில் கைப்போட்டவன்,
“எதுக்கு டென்ஷன் மாணிக்…ஃப்ரீயா விடுங்க…எல்லாம் உங்க ஆருவுக்குப் பிடிக்கும்….” என்று சொல்ல மகளிடம் இருந்து நல்ல செய்தி எதிர்ப்பார்த்துக் காத்திருந்தார் மாணிக்கம்.

சிறிது நேரத்தில் வரதராஜனும் வந்துவிட,மதிய உணவு இடைவேளையில் ஆர்கலியிடம் இருந்து போன்.

“ப்பா…மாப்பிள்ளை பார்க்க நல்லா தான் இருக்கார்….நீங்க பேசுங்க..” என்று சொன்னதும் தான் அவருக்கு நிம்மதியானது.

“எப்படி..நான் தான் சொன்னேன்ல…சட்டு புட்டுன்னுப் பேசி முடிச்சு எனக்குக் கல்யாண விருந்து போடுங்க மாணிக்.” என்றான் நெப்போலியன் உற்சாகமாக.

“பேசனும் தான் வீரா…ஆனா அவங்க இன்னும் ஆர்கலியை நேரில பார்க்கனும்..பிடிக்கனும்..அப்புறம் சீர் வரிசை அது இதுன்னு எவ்வளவோ இருக்கு..” என்று மாணிக்கம் பேச

“அதெல்லாம் கவலைப்படாதீங்க மாணிக்கம்..நல்லபடியா நடக்கும்…எதாவது பணம் தேவைன்னா கூட நம்ம பார்த்துக்கலாம்…அதைப் பத்தி கவலைப்பட வேண்டாம்….பொண்ணு வாழ்க்கை தான் முக்கியம்..” என்றார் வரதராஜனும்.

பின் மாணிக்கம் மாப்பிள்ளை வீட்டாரிடம் பேச அந்த மாப்பிள்ளையும் ஆர்கலி வேலை செய்யும் நிறுவனத்தின் கேம்பஸில் தான் வேலைப் பார்ப்பதால் நாளை அவளை நேரில் பார்த்து விட்டு பேசுகிறேன் என்று சொல்ல,மாணிக்கமும் மாலையில் வந்த மகளிடம் அதைப் பகிர்ந்தார்.

ஆர்கலிக்கு திருமணம் என்றதும் ஒரு இயல்பை மீறிய பதட்டம் உருவாக,கோவிலுக்கு சென்று வரலாம் என்று அருகில் உள்ள கோவிலுக்குப் போனாள்.

கடவுளிடம் மனமுருகி,
“எனக்கு ரொம்ப ரொம்ப பிடிச்ச மாப்பிள்ளையா கொடு கடவுளே…” என்று வேண்டுதல் வைத்தாள்.

எதற்குமே பெரிதாக ஆசைப்படாதவள் தான்.ஆனால் கல்யாணம் என்பதில் மட்டும் மனதுக்கு மிகவும் பிடித்த மாதிரி கணவன் வர வேண்டும் என்று வேண்டினாள்.

ப்ராகரத்தை சுற்றி விட்டு அங்கிருக்கும் குளக்கரையில் அமர்ந்து அவள் அமைதியாக நீரைப் பார்க்க,வாராவாரம் கோவிலுக்கு வரும் வழக்கம் உள்ளவன் நெப்போலியன்.வரதனோடு சிறு வயதில் இருந்து சாமி கும்பிட்டு அந்த பழக்கம் வந்திருந்தது.
 
Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
அப்போதுதான் குளக்கரையில் ஆர்கலி போல் தெரிய,மாணிக்கமும் வந்திருப்பாரோ என்று நினைத்து அருகில் சென்று பார்க்க,இவன் அரவத்தில் அவள் அமைதிய கலைய,ஆர்கலி நெப்போலியனைப் பார்க்க,

அவள் பார்வையில் ஒரு சஞ்சலம் இருக்க,

“என்ன மார்கழி…கோவில் பக்கம்…மாணிக்கம் வரலயா?” என்று கேட்க

“இல்ல…அப்பா வரல…நான் மட்டும் தான்..”

“ஓ….” என்றவன்

“என்ன ஒரு மாதிரி இருக்க..” என்று கேட்க

அவள் அகத்தில் ஆயிரம் அலைப்புறுதல் இருந்தாலும் அதை அவனிடம் பகிரவில்லை.

“அதெல்லாம் இல்ல..” ஆர்கலி மறுத்தாள்.

“ஓ…நாளைக்கு மாப்பிள்ளையைப் பார்க்க போற…அதான் டென்ஷன்….கண்டிப்பா உனக்குப் பிடிக்கும்…கவலைப்படாத..” என்று அவன் கனிவாக சொல்ல கண்பார்த்து உரைத்த அவன் மொழியில் இவள் விழிகளில் வியப்பு.

“மாணிக்கம் சொன்னார்…மாப்பிள்ளையும் நல்லா பார்க்க அழகா இருந்தார்…அதனால டென்ஷன் ஆவாத……டோண்ட் வரி பீ ஹாப்பி…” என்றான் புன்னகை பூசிய முகத்துடன்.

இதுதான் அவளுக்கும் அவனுக்குமான வேற்றுமை.அவன் யாரிடம் பழகினாலும் அகம் தொட்டு அதன் ஆழம் தொட்டு பேசுவான்.அவளைப் போல் தண்ணீரில் தாமரையாக பேசியும் பேசாமல் எல்லாம் அவனுக்குப் பேச வராது.

அவன் பேச்சைக் கேட்டு ஒரு நல்ல மனோ நிலை உருவாக,

“தேங்க்ஸ் “ என்றாள் புன்னகையோடு.

அவன் ,”போயிட்டு வரேன்..” என்று போய் விட,போனவன் பற்றிய சிந்தனை தான் அவளுள்.

முதல் முறை பார்த்தபோது தெருவில் சண்டையிட்டவனா இவன் என்பதுபோல் அவன் பேச்சு இருக்க,பார்வைகள் பரிமாணங்கள் எல்லாம் ஒரு வருடத்தில் எப்படி மாறி போயிருக்கின்றன என வியந்தாள்.

அவனது வழிமுறை வன்முறையாக இருக்கலாம்.ஆனால் அதற்காக அவன் நெறி முறையற்றவன் என்று சொல்வதும் எண்ணுவதும் முறையற்றது என்று புரிந்தது.அவனிடம் இனி சண்டையிடக் கூடாது என்று நினைத்துக் கொண்டாள்.

அடுத்த நாள் மாலையில் மொட்டை மாடியில் துணிகளைக் காயப்போட போனாள் ஆர்கலி.அவர்கள் வீட்டின் மாடியில் இருந்து பார்த்தால் ஷ்யாமின் வீட்டு மாடி தெரியும்.பேசிக் கொள்ளவும் முடியும்.

ஆர்கலி வந்ததைக் கவனிக்காமல் ஆண்டாள் கண்களை கசங்கியபடி நெப்போலியனிடம் ஏதோ சொல்ல,அவன் சிரித்தபடி அவளை சமாதானம் செய்து கொண்டிருந்தான்.

ஆண்டாள் ஆர்கலியைக் கவனிக்கவே இல்லை.கீழே இறங்கி சென்றுவிட, நெப்போலியனின் கழுகுப் பார்வைக்கு ஆர்கலி தப்பவில்லை.

“ஓய்….மார்கழி…என்ன இங்க பார்வை…?” என்றான்.

“அவ கூட பேசினா…அவளை மட்டும் பாரு…அடுத்த வீட்டு மொட்டை மாடியில நிக்கிற என்னை ஏன் பார்க்கிற….” என்று ஆர்கலி பதிலுக்குப் பேச

“முதல்ல இங்க பார்த்தது நீதான்..” என்றவன் அவளிடம் பேச வசதியாக ஆர்கலி வீட்டு மாடியின் பக்கமாக இருக்கும் சுவரின் அருகில் வந்து நின்றான்.

“அது..அவ கிட்ட நீ அவ அழுததைப் பார்த்தேன்னு சொல்லிடாத….அவளை வர வழியில் தினமும் ஏரியா பசங்க நாலு பேர் கிண்டல் பண்றாங்கன்னு அழறா…வீட்ல யார் கிட்டையும் சொல்லல..ஷ்யாம் இருந்தா அவன் கிட்ட சொல்லி இருப்பா..அவன் இல்லனதும் எங்கிட்ட சொன்னா…” என்று சொல்ல

“இப்போ நீதான் அவளைப் பத்தி எங்கிட்ட சொல்ற…நான் எப்பவும் இது மாதிரி எல்லாம் கேட்க மாட்டேன்.” என்று சொல்ல அவன் படிகளில் உட்கார்ந்து கொண்டு,

“ஆனா நான் கேட்பேனே…?” என்று சிரித்தவன்

“மார்கழி மாப்பிள்ளையை பிடிக்கலன்னு சொன்னியாமே..ஏன்…?”

அவள் முறைத்து பார்க்க

“அட…..மாணிக்கம் ரொம்ப ஃபீலாயிட்டாப்புல…அதான் ஒரு குவார்ட்டர்….இல்ல…இல்ல…உனக்குப் பிடிக்காதுன்னு ஒரு ஜூஸ் வாங்கிக் கொடுத்தேன்..அவ்வளவுதான்..” என்று விளையாட்டாக சொல்ல,அவளிடம் பதில் வினையேதும் இல்லை.

படியில் இருந்து எழுந்தவன்,மொட்டை மாடியின் கைப்பிடி சுவரில் சாய்ந்த வண்ணம்,இவளை நேருக்கு நேர் பார்த்து,

“உன் கிட்ட கேட்குறது தப்பு தான்…ஆனா மாணிக்கம் நேத்து ரொம்ப ஆசையா இருந்தார்…அதான் என்னாச்சுன்னு..” என்று அவன் சீரியசாகப் பேச

அவனது பேச்சு எதிரில் இருப்பவரை வசீகரிக்கும்.வாஞ்சை கொடுக்கும்.அப்படி அவன் பேச ஆர்கலியும் மரியாதைக்காக,

“பிடிக்கல….அவன் என்னமோ இண்டர்வியூ பண்ற மாதிரி கொஸ்டின்ஸ் கேட்குறான்….எனக்கு செட் ஆக மாட்டான்..” என்று கடுப்பில் சொல்ல

“அப்போ எப்படி இருந்தா உனக்குப் பிடிக்கும்..?” என்ற அவனது கேள்வியில் அவளுக்குள் ஒரு ஆசுவாசம்….ஒரு புதிய உணர்வு.

ஆறுதலாக உணர்ந்தாள்.

இதுவரையில் அவளிடம் எது உனக்குப் பிடிக்குமென யாரும் கேட்டதில்லை.மாணிக்கம் கூட மாப்பிள்ளை பிடிக்கவில்லை என்றதும் வேறு பார்ப்போம் என்றவர் எப்படி இருந்தால் உனக்குப் பிடிக்கும் என்று கேட்கவில்லை.

நெப்போலியன் அப்படி கேட்கவும்,

“எப்படி இருந்தாலும் அவங்களை எனக்குப் பிடிக்கனும்..அப்படி ஒருத்தர் தான் வேணும்…” என்றாள் ஆவலாக.

“எப்படி இருந்தாலும் ஓகேன்ற…அப்புறம் ஏன் அவனை வேண்டாம்னு சொன்ன..?”

அவனுக்கு அவள் பேச்செல்லாம் புரியவே இல்லை.

“அது எப்படி சொல்ல…ஒருத்தரை எனக்குப் பிடிச்சா…அவங்க கிட்ட குறையெல்லாம் இருந்தாலும் எனக்குப் பெருசா தெரியக் கூடாது…..அப்படி பிடிக்கனும் எனக்கு..”

“அரவிந்த்சாமி மாதிரி வேணும்….மாதவன் மாதிரி வேணும்..விஜய் மாதிரி வேணும்னு கேட்டா கூட பரவாயில்ல…இப்ப பொண்ணுங்க இப்படியெல்லாம் கேட்டா பாவம் மாணிக்…” என்றான்.

“ஆமா….இவ்வளவு அக்கறையா கேட்கிற…?ஏன்?”

“பின்ன..மாணிக்கம் உங்க ஊர் சைட்ல கல்யாணத்துல கறி விருந்தாமே…நிறைய ஆடு வெட்டுவீங்களாம்…மாப்பிள்ளை வீட்டு விருந்து பொண்ணு வீட்டு விருந்துன்னு களை கட்டுமாமே…அதுவும் அந்த ஆட்டுக்குடல்ல…பருப்பு போட்டு…செமையா இருக்குமாமே…” என்று அவன் கண்மூடி காதலாக சொல்ல

ஆர்கலி வெகு நாள் கழித்து மனம் விட்டு சிரித்தாள்.

“அட பாவி…ஏதோ எங்கப்பா மேல உள்ள அக்கறயில சொல்றன்னு பார்த்தா…ஆட்டுக்குடல் மேல இருக்க ஆசையில சொல்லி இருக்க நீ…” என்று அவள் இன்னும் சிரிக்க,

நெப்போலியனும் சிரித்தபடி,
“அதனால் சீக்கிரம் கல்யாணம் பண்ணி கறிசோறு போடுற…” என்றான் மிரட்டலாக.

நெப்போலியனின் சிரிப்பெல்லாம் வரதராஜன் நடு இரவில் நெஞ்சைப் பிடித்துக் கொண்டு சாயும் வரை தான் இருந்தது.

காதலினும் காதலாகும்..!!


To be continued on 'Saturday'

Eager to know from you all...thanks for sharing ur views friendsss
:love::love::love::love:
 
Top