Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், tamilnovelwriters@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதலினும் காதல் கேள் - 21 (2)

Pavithra Narayanan

Tamil Novel Writer
The Writers Crew
காதலினும் காதல் கேள் ❤

“ஹே..! வண்டியை நிறுத்து…நிறுத்துன்னு சொல்றேன்ல…” என்று ஆர்கலி கத்த காதிலேயே வாங்கவில்லை நெப்போலியன்.

சீறிப் பாய்ந்தது கார் காஞ்சிபுரம் நோக்கி.

“கத்தாம வாடி..” என்று கத்தியவனிடம்

“உன் மிரட்டலுக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன்..மரியாதையா….காரை நிறுத்தி..இல்ல டோல் கேட் வரப்ப கத்துவேன்..” என்றாள் ஆர்கலி.

சாலையில் பார்வை இருந்தாலும்,

“இங்க பார்…. நீ கூப்பிட்டேன்னு உனக்காகத் தான் நான் வந்தேன்…ஒழுங்கா பேசாம உட்கார்…..அப்படி கத்துவேன்னு முடிவு பண்ணா…கத்து….டோல்ல எல்லாம் நான் பார்த்துக்கிறேன்..” என்றான் திமிராக.

ஆர்கலிக்கு இவனிடம் பேசுவது வீண் என்று தோன்ற,அமைதியானாள்.

ஒரு இனிய ஸ்வரம் இடையில் உடைந்த உணர்வில் உள்ளம் வருந்தியது.

இத்தனை நாள் சஞ்சலம் எல்லாம் நீங்கி சஞ்சீவனமாக அவன் இருப்பான் என்று எண்ணியிருக்க,அவனுடன் சண்டை இடுவோம் என நினைக்கவே இல்லை.

முதல் சந்திப்பே சண்டை என்றபோதிலும் கூட இன்றையை சண்டை வேறுதானே..?!

முன்பானால் முன் பின் அறியாதவன்…இன்றோ முரண்பட்டாலும் முழுதாக மனதினுள் நிறைந்தவன் ஆயிற்றே…

யாரென்று அறியா நிலையில் வந்த கோபம் பெரிதான தாக்கமெல்லாம் தரவில்லை.கடந்தும் மறந்தும் போக முடிந்தது.

ஆனால் இன்றோ யாவும் காதலாக,யாதும் அவனாக எண்ணியிருக்க கடக்கவும் முடியவில்லை…காயமும் ஆறவில்லை.

அவ்வளவு தூக்கம் இருந்த போதிலும் ஒரு சொட்டு கண்ணீர் வரவில்லை.அவன் முன் அழக் கூடாதென அடக்கிக் கொண்டு அழுத்தமாக இருந்தாள் ஆர்கலி.

ஒரு வழியாக காஞ்சிபுரம் வர,

“இங்க பார்…இப்ப ஒழுங்கா வண்டியை நிறுத்து.. நானே வீட்டுக்குப் போயிடுறேன்..” என்றவளின் குரல் அழுகையை அடக்கி இருக்க,அது வலிக்க மிகவும் அமைதியாக ஒலிக்க,அது நெப்போலியனைக் கொஞ்சம் அசைத்து பார்க்க,வண்டியை நிறுத்தினான்.

‘போகிறேன்’ என்று சொல்லாமல் அவள் செல்ல,அது இன்னும் நெப்போலியனை சீண்டி விட்டது.

வீட்டிற்குள் வந்த ஆர்கலிக்கு மனது தாங்கவே இல்லை.பாத்ரூமிற்குள் புகுந்து கொண்டவள் அங்கேயே தண்ணீரைத் திறந்து விட்டு கொண்டு தேம்பி தேம்பி அழுதாள்.

இத்தனை நாள் இருந்த வேதனையை விடு இன்று பலமடங்கு அதிக வலியாக இருந்தது. நெப்போலியன் மறுத்திருந்தாலும் கூட மறந்து விட்டு கடந்து போயிருப்பாள்.

ஆனால் அவனுக்கு இவளைப் பிடித்திருந்தும்,இவளுக்கும் பிடிக்குமென தெரிந்திருந்தும் அதை சொல்லாமல் இருந்ததும்,இவள் சொல்லாம விட்டதற்கு சொன்ன காரணமும் ரொம்பவே காயப்படுத்தி இருக்க,எல்லாம் அடக்கமுடியாமல் அழுகையாக வர,அழுது தீர்த்தாள்.

ஷாலினி வந்து கதவைத் தட்டவும் தான்,சுய நினைவுக்கு வந்தவள்,

“ஷாலு…அக்காவுக்கு நைட்டியும்…டவலும் கொடுடா..” என்று கேட்டு வாங்கியவள் தலைக்கு ஊற்றிக் கொண்டு வர,

“என்ன டா…இந்த நேரத்துல தலைக்கு குளிச்சிருக்க….நல்லா காய வை..” என்று மாணிக்கம் சொல்ல,

அப்பாவின் அருகில் வந்தவள் கீழே உட்கார்ந்து,அவர் மடியில் சாய்ந்து கொள்ள,

“என்னாச்சு ஆருக்குட்டி..?அப்பாவைத் தேடுறா..?” என்று பாசமாக கேட்க

“ஒன்னுமில்லப்பா…நான் இப்படியே இருக்கேன்..எதுவும் கேட்காத…” என்றாள்.

“ஆபிஸ்ல…எதாவது ப்ராப்ளமா..?” என்று கேட்டதற்கும்

“ப்பா…அமைதியா இரு…ப்ளீஸ்..” என்று சொன்னவள் அமைதியாக அவர் மடியில் இருந்தாள்.

மகளுக்கு என்ன பிரச்சனை என்று மாணிக்கவாசகத்திற்கு தெரியவில்லை.ஆனாலும் அவளுக்கு ஆறுதலாக அமைதியாக தட்டிக் கொடுத்தார்.

இங்கு நெப்போலியனோ மொட்டை மாடியில் தரையில் படுத்துக் கொண்டு ஷ்யாமிடம் பேசினான்.

“என்ன டா…சொல்ற…நிஜமா ஆர்கலி லவ் யூன்னு சொன்னாங்களா..?” என்று ஆச்சரியமும் மகிழ்ச்சியுமாக ஷ்யாம் கேட்க

“லவ் யூன்னு சொல்லல….கல்யாணம் பண்ற அளவுக்குப் பிடிச்சிருக்குன்னு சொன்னா..” என்று நெப்போலியன் சொல்ல

“அட…..மச்சான்…நான் தான் அப்பவே சொன்னேன்ல…அவங்க உன்னைப் பார்க்கிறாங்கனு…செம…..” என்று சந்தோஷத்தில் ஆர்ப்பரிக்க

“லூசே…அப்போ எல்லாம் அவ என்னை பார்க்கல…எப்போ பார்க்க ஆரம்பிச்சான்னு எனக்குத் தெரியும்..” என்றான்.

ஆம்..நிஜமாகவே தெரியும்.சின்ன வயதில் மொழி தெரியாமல் இருந்த போது மனிதர்களின் உடல் மொழியும் விழி மொழியும் மட்டுமே கண்டு வாழ பழகியவனுக்குப் பெரிதான பின்னும் அதே பழக்கமே.

அதுவும் ஆர்கலியின் முதல் பார்வையில் இருந்து மீள முடியாமல் இருந்தவன்..என்றாவது அவள் தன்னை கீழாக இல்லாமல்…கொஞ்சம் மரியாதையாகப் பார்ப்பாளா என்று பார்த்திருந்தவன்..அதனால் மற்றவர்களை விட மங்கை விழியை அதிகமாக பார்க்க,அதில் மையல் கொண்டிருக்க,நெப்போலியனுக்கு அவ்வளவு மகிழ்ச்சி.

கற்பகம் ஆண்டாள் எல்லாம் அவனுக்கு தாயும் தங்கையும் போல…ஆனால் ஆர்கலி..அவள் வேறாகத்தான் தெரிந்தாள்.

ஆர்கலியின் பேச்சா..?செயலா..?குணமா..?கோபமா..? எதுவென்று பகுத்தறியா வண்ணம் அவளை அவனுக்குப் பிடித்திருக்க,
அவள் விழியினிலும் அவனை விரும்பிடும் பிரதிபலிப்புத் தெரிய,அதை அவள் மொழியாக கேட்டிடவே இத்தனை நாள் தவமிருந்தான்.

அதுவும் அவனுக்குத் தெரிந்த ஆர்கலி மிகவும் தைரியமானவள்.ஆனால் சண்டையிடுவது எளிது..சமாதானம் கடினம்..அது போலவே ஆத்திரத்தை எல்லாம் எளிதாக காட்டிவிடலாம்.அன்பு செய்தலுக்குக் கொஞ்சம் தயக்கம் உண்டே.அதனால் ஆர்கலி சொல்லாமல் தவிக்க,அவள் சொல்லிவிட இவன் தவித்தான்.

“பார்டா….அப்போ சீக்கிரமே என்னை மாமா ஆக்கிடப் போற…..! வாழ்த்துகள் நண்பனே..” என்ற ஷ்யாமின் உற்சாக குரலில் கடுப்பானவன்,

“அது ஒன்னு தான் குறைச்சல்…சரியான ராங்கிடா அவ….இன்னிக்கு என்னை அடிச்சிட்டா..” என்றான் கோபத்துடன்.

“என்னடா…சொல்ற..அடிச்சாங்களா…?” என்ற ஷ்யாமின் கேள்விக்கு,

“ஆமா…எரும…அதை தானே சொல்றேன்…” என்றான் கடுப்பாக.

“அடிவாங்குற அளவுக்கு நீ என்ன பேசின…?”

நெப்போலியன் நண்பனிடம் நடந்ததை சொல்ல,ஷ்யாமோ,

“ஒரு கன்னத்துல அடிவாங்கினியா…இல்ல இரண்டுமா..?” என்றான் நக்கலாக.

“டேய்….ஒன்னுல தான் அடிச்சா….நான் கவனிச்சிருந்தா விழுந்திருக்காது..மறுபடியும் அடிக்க விடுவேனா…நான்..?” என்ற நெப்போலியனிடம்,

“அறிவுக்கெட்டவனே….அவன் அவன் தானா ஒரு பொண்ணு வந்து லவ் சொல்லாதன்னு காத்துட்டு இருக்கான்….நீ என்னடான்னா இப்படி இருக்க…சிங்கிள்ஸ் சாபம் உன்னை சும்மா விடாதுடா..” என்று ஷ்யாம் திட்ட,

“போடாங்க….அவளுக்கு என்ன அவ்வளவு திமிர்….என்னை வேண்டாம்னு சொல்லி கத்துறா..அவ.” என்றான் ஆர்கலியின் செயலை ஏற்க முடியாதவனாக.

“டேய்….நீ இப்படி பேசினா…அப்படி தான் சொல்லுவாங்க…போய் சமாதானம் பண்ணு…டா….காதலிக்கிறேன்னு சொன்ன முத நாளே ப்ரேக் அப் பண்ணி வரலாறுல உன் பெயரை டேமேஜ் பண்ணிக்காத.

“அதெல்லாம் என்னால முடியாதுடா..அவளா தானே வேண்டாம்..சொன்னா…வருவா..எங்க போயிட போறா..” என்றான் அலட்சியத்துடன்.

“ வேண்டாம் மச்சான்…சொன்னா கேளு….உனக்கும் அவங்களைப் பிடிச்சிருக்கும்போது வீணா சீன் போடாத…..உனக்குப் பொண்ணுங்களைத் தெரியாது…”

“பொண்ணுங்களைத் தெரியாது தான்..ஆனா அவளைத் தெரியும்டா…நான் இல்லாம அவளால இருக்க முடியாது…” என்றான் அவள் காதல் உணர்ந்த கர்வத்துடன்.

“இவ்வளவு திமிர் கூடாதுடா….நீ எங்கிட்ட வரதன்ப்பாட்ட பேசற மாதிரி நினைக்காத…பசங்களாம் டக்குனு தொடச்சுப் போய்ட்டு போயிடுவோம்…பொண்ணுங்களாம் சென்ஸிடிவ்….சொல்றதைக் கேளு..போய் ஆர்கலி கிட்ட சாரி கேளு….” என்றான் நல்ல நண்பனாக.

ஷ்யாம் சொல்வது போல் நெப்போலியனுக்கு நுண்ணுர்வும் புரியவில்லை.பெண்ணுணர்வும் புரியவில்லை.அதை மிகவும் அலட்சியமாக கையாண்டான்….அவனது அலட்டிக் கொள்ளாத குணம் காதலையும் அப்படியே கையாள வைத்தது.

நெப்போலியனைப் பொருத்தவரையில் மிக மிக சுதந்திரமாக வளர்க்கப்பட்டவன்.

தளைகளோ..தடைகளோ..அவனுக்குக் கிடையாது.தம்பிக்கு தங்கைக்கு செய்ய வேண்டும் என்ற பொறுப்புகள் அவனை சூழ்ந்தது இல்லை.வரதன் கண்டித்தாலும் கண்டிக்கும் அளவிற்கு எதுவும் செய்ய மாட்டான்.

எல்லாம் அவன் செயல்..தான்.அதுவே ‘தான்’ என்ற எண்ணத்தை உருவாக்கி இருக்க,அவனால் மாற்றவே முடியவில்லை.

“நீயெல்லாம் ஒரு நண்பனா டா…பரதேசி..உன் ப்ரண்டை அடிச்சிட்டா சொல்றேன்..என்னை போய் சாரி கேளுன்ற….அடிச்சதுக்கு அவ தான் சாரி கேட்கனும்…”

“உன்னையெல்லாம் மாத்த முடியாதுடா மவனே…..ஆர்கலி உன் வாயில போட்டிருக்கனும்…அப்போதான் அடங்கியிருப்ப….நான் சொல்றதை சொல்லிட்டேன்…அப்புறம் உன்னிஷ்டம்..”

“அவளால என்னை விட்டு எல்லாம் இருக்க முடியாது….பாரு..இன்னும் இரண்டு நாள்ல..அவளே வருவா..” என்றான் ஆர்கலியை அவள் குணத்தை….அதன் ஆழத்தை அறியாமல்.

அதற்குள் கீழிறிருந்து வரதராஜன் சாப்பிட அழைக்க,

“டேய்…என்னை சாப்பிட கூப்பிடுறார்…நீ இதை யார் கிட்டையும் சொல்லாத…” என்று சொல்ல

“ஆமா…அப்படியே நீ பெரிய சாதனை பண்ணிட்ட…சொல்லி நான் சந்தோஷப்பட….வைடா போனை..” என்று ஷ்யாம் கத்திவிட்டு போனை வைத்தான்.

இரண்டு நாட்கள் சென்றிருக்க,அன்று மாலை ரவிவர்மன் வீட்டிற்கு வந்திருந்தான்..ஆர்கலியிடம் பேச வேண்டி.மாணிக்கவாசகமும்,

“ரவி கிட்ட பேசிட்டு உன் முடிவை சொல்லுடா…”என்று சொல்ல,தன்ணுர்வுக்காகத் தந்தையின் உணர்வை காயப்படுத்தக் கூடாது என்று முடிவு செய்து ரவியிடம் பேச ஒத்துக் கொண்டாள்.

நெப்போலியனாக வந்து சமாதானம் செய்வான் என மனது எதிர்ப்பார்த்திருக்க,அவன் வரவே இல்லை.அது இன்னும் கோபத்தைக் கொடுத்திருக்க,

‘நானாக போய் காதலை சொன்னதால் என்னை என்ன நினைத்தான் அவன்?’ என்று அவன் மீது தீரா கோபம் தீயாய் பரவ,அது எல்லாம் இன்னும் அவளை நோக செய்தது.

“ஆரு….மாமா உங்கிட்ட சொல்லி இருப்பார் நினைக்கிறேன்….”

“ம்ம்”

“மாமாவும் சரி…அப்பாவும் சரி..இந்த கல்யாணம் நடந்தா ரொம்ப சந்தோஷப்படுவாங்க…”

“ம்ம்”

“உன் முடிவை சொல்லு ஆரு…எதுவும் பேசாம ம்ம் கொட்டினா எப்படி?”

“என்ன சொல்ல சொல்ற ரவி….? நீங்க எல்லாருமே இப்படிதானா….உங்க சந்தோஷம் தான் முக்கியம்…மாமாவுக்கு சந்தோஷம்…அப்பாவுக்கு சந்தோஷம் சொல்றியே….என்னோட சந்தோஷம் யோசிச்சியா…என்னை நல்லா வைச்சிப்பேன்னு ஒரு வார்த்தை வருதா..?” என்றாள் கோபத்தோடு.

“ஆரு….லெட்ஸ் டாக்…ஏன் இவ்வளவு கோபம்..?” என்று ரவிவர்மன் சமாதானமாகப் பேச வர,

ஆர்கலிக்கு அவள் மேல் உள்ள கோபமா இல்லை நெப்போலியன் மீது காட்ட முடியாத கோபமா…என்று பகுத்தறிய முடியாமல்,ஆத்திரத்தை எல்லாம் எதிரில் நிற்பவனிடம் காட்டினாள்.

“ஏன் ரவி…..உன் அத்தை மாதிரி நாளைக்கு எனக்கு ஆக்ஸீடெண்ட் ஆகிட்டா நீ என்னை விட மாட்டன்னு என்ன நிச்சயம்…?” என்று கேட்டுவிட,

“ஆரு….என்ன பேசுற நீ…?” என்றான் ரவி கோபமாக.

“ஷ்..! இல்ல….அவங்க ரத்தம் தானே என் உடம்புலையும் ஓடுது….நான் உனக்கு எதாவது ஆகி உன்னை விட்டுட்டா…” என்றாள் தன்னைத் தானே காயப்படுத்திக் கொண்டு.

“ஷட்ட்ட்ட் அப்ப்ப்ப்ப்..இடியட்…” என்று கத்தியவன்

“என்னடி பிரச்சனை உனக்கு… நீ சொல்ற மாதிரியே இருந்தாலும் என் உடம்புல எங்கப்பா இரத்தம் ஓடுதே…மனைவி செத்தும் கூட அந்த சின்ன வயசுல அப்பா இன்னொரு கல்யாணம் செய்ய சொல்லியும் செய்யாம இறந்து போன மனைவியை மனசுல நினைச்சு வாழ்றவரோட பிள்ளை நான்…இப்படி எல்லாம் பேசி என்னைக் காயப்படுத்திறியா…இல்ல உன்னைக் காயப்படுத்திக்கிறியா…?” என்றான் அழுத்தமாக.

அவன் சொல்வதும் உண்மைதானே..?

இந்த காயங்கள் எல்லாம் அவள் காதல் கொடுத்தவை..!காதலன் கொடுத்தவை…!

அதை ரவியிடம் காட்டுவது பிழையே என்று மனம் உணர,கண்களில் நீர் தளும்பி விட,

அப்படியே தரையில் உட்கார்ந்துவிட்டாள் ஆர்கலி.

அவள் முன் மண்டியிட்டவன்,

“ஆரு….! ஆரும்மா…என்னை பார்…” என்று சொல்ல

“சாரி…ரவி….ப்ளீஸ்….இதெல்லாம் வேண்டாமே….இந்த கல்யாணம்….எதுவும் வேண்டாம்…” என்று சொல்ல

“எனக்குத் தெரியும்…” என்றான் அவன் சாந்தமான புன்னகையோடு.

“என்ன தெரியும்…?” என்றவளின் கேள்விக்கு

“உன்னைத் தெரியும்..” என்றான்.

“என்ன…என்னை தெரியும்..” முகம் உயர்த்தி அவள் கேட்க

“நீ ஒத்துக்க மாட்டேன்னு தெரியும்..நீ நோ சொல்வன்னு தெரியும்..” என்றவனை அவள் அதிர்ச்சியோடு பார்க்க

“ஏன்…ஆரு….நீ வேண்டாம் சொல்வன்னு தெரிஞ்சு தான் நான் அப்படி பேசினேன்…..ஏன்னா உனக்கு அத்தை மேல இருக்க கோபத்துக்காகவே என்னை ஏத்துக்க முடியாது…” என்றவனை அவள் தடுக்க நினைக்க,

தலையசைத்து மறுத்தவன்,

“ஐ மீன்….ஏற்கனவே உனக்கு இந்த விஷயம் சின்ன வயசுல இருந்தே ரொம்ப ஸ்டெர்ஸ்ஃபுல்லான விஷயம்…திரும்பவும் நீ இதுக்குள்ள இருந்தா நீ சந்தோஷமாவே இருக்க மாட்ட…எனக்கும் சரி…அப்பாவுக்கும் சரி எங்களால நீ இழந்ததை திரும்பக் கொடுக்க ஆசை….உனக்குப் பிடிச்ச மாதிரி ஒரு மேரேஜ் லைஃப் உனக்கு அமையனும்…புது மனுஷங்க…புது உறவுன்னு போனதான்..உனக்கு இது எல்லாம் மறக்கும்…”

“அதுக்காக உன்னை பிடிக்காதோ..இல்ல…ஆசை இல்லையோன்னு கிடையாது….அத்தை பொண்ணுன்ற அந்த ஷ்பெஷல் ஃபீல் உனக்குத் தான்…எப்பவும் நான் உனக்கு இருப்பேன்….ஆனா உன் கூட இருக்கனும்னு ஆசைப்படல….ஸோ ரிலாக்ஸ்….” என்று சொல்ல

அதுவரையில் அவனை எப்படி மறுப்பது..அப்பாவை எப்படி சமாளிப்பது…இந்த நெப்போலியன் வேறு அவளிடம் பேசாமல் இருப்பது…அவளாகப் பேசியிருப்பாள் தான்.ஆனால் அன்றையை அவன் பேச்சு மிகவும் ஆழமாகச் சென்று தாக்கி இருக்க,அது மட்டும் அவளால் முடியாது.இவையெல்லாம் சேர்ந்து அவளை மிகவும் வருத்தி எடுத்திருக்க,அதையெல்லாம் ரவிவர்மன் தீர்த்து வைத்திருக்க,

“தேங்க்ஸ் ரவி…..தேங்க்ஸ் ஸோ மச்…” என்று அவன் கையைப் பிடித்துக் கொண்டாள்.

அவள் கையை அழுத்திக் கொடுத்தவன்,

“ரிலாக்ஸ் ஆரு…கண்ணைத் துடை….” என்று சொல்ல

எழுந்து கண்களைத் துடைத்தவள்,

“சாரி…ரவி….எனக்கே தெரியல….ஏன் அப்படி பேசினேன்…பட் ரொம்ப தப்பான பேச்சு அது…சாரிடா…” என்று மீண்டும் சொல்ல

“இட்ஸ் ஓகே ஆரு….ஆமா…ஏன் கல்யாணம் வேண்டாம்னு அழுத….என்னால பிடிக்கலயா…இல்லை கல்யாணமே வேண்டாமா.?” என்று அவன் கைக்கட்டி இப்போது நேருக்கு நேராக நின்று அவளிடம் கேட்க

“ரவி….எனக்குக் கொஞ்சம் டைம் வேணும் ரவி…இப்போதைக்கு வேண்டாம்னு தான் சொல்றேன்..” என்று அவள் நிலையை சொல்ல,

“சரி..விடு…..பட்….சீக்கிரமே கல்யாணம் பண்ணிக்கோ…உனக்குப் பண்ணிட்டு தான் நான் பண்ணுவேன்…அப்பாவோட ஆர்டரும் அதுதான்..ஸோ சீக்கிரம் பார்த்து பண்ணு டி…அப்புறம் அங்கிள்ஸ் லிஸ்ட்ல ஆட் ஆகிடுவேன்…” என்றான் சிரிப்போடு.

லேசாகப் புன்னகைத்தவளிடம் விடைப்பெற்று மாடியில் இருந்து கீழே வந்தவனிடம் மாணிக்கம்,

“என்ன சொன்னா ரவி..?” என்று ஆவலாக கேட்க

சிரித்தவன்,

“அவளே சொல்லுவா மாமா..” என்று சொல்லிவிட்டு கிளம்பிவிட,வள்ளி அவனிடம் கேட்டும் சொல்லாமல் சென்றுவிட்டான்.

ஆர்கலியை அழைத்தவர்,அறைக்குள் சென்றதும்,
“இன்னிக்கு அப்பா கிட்ட உன் முடிவு சொல்றேன்னு சொன்ன ஆரு…” என்று மாணிக்கவாசகம் நினைவூட்ட

“உங்களுக்கு ரவியைப் பிடிச்சிருக்காப்பா…?” என்றாள்.

“எனக்கு பிடிக்கும் தான் டா…. ஆனா உனக்குப் பிடிச்சிருக்கா…சொல்லு…இனிமேலும் இதை தள்ளி போட முடியாது..இன்னும் இரண்டு வருஷத்துல காயத்ரிக்குப் பார்க்கனும்… அவன் கிட்ட பேசின தானே..? முதல்ல முடிவை சொல்லு…அவன் வேண்டாமா…அப்போ யாரைப் பிடிச்சிருக்கு சொல்லு…” என்றார் விடாப்பிடியாக.

“நான் ரவியைக் கல்யாணம் பண்ணிக்கிறேன்பா…” என்று மகள் சொல்லவும் மாணிக்கத்திற்கு அவ்வளவு நிம்மதியாக இருந்தது.

சொன்னவள் உடனே,

“ஆனா…அது எனக்கு சந்தோஷம் தராதுப்பா..” என்று சொன்ன மகளை அதிர்ச்சியோடு பார்த்தார் மாணிக்கம்.

“ப்பா….உங்களை மாதிரி தான் எனக்கும் என்னோட கல்யாணம்ன்றது ரொம்ப சந்தோஷமான விஷயம்..கனவு…எல்லாம் தான்..வாழ்க்கை முழுசும் ஒருத்தர் கூட வாழனும்பா….அது எனக்குப் பிடிச்சு நடக்கனும்னு ஆசைப்படுறேன்..ஒரு நாலஞ்சு மாசம் டைம் கொடுங்கப்பா…” என்று கேட்கும் மகளிடம் என்ன சொல்வது என மாணிக்கம் பார்த்திருக்க

“ப்பா….கல்யாணம் ஆகலன்னா எல்லாரும் கேட்பாங்கதான்..ஆனா கேட்கற யாரும்…நான் நாளைக்குக் கஷ்டப்பட்டா கூட வந்து நிற்க மாட்டாங்க…கஷ்டம்னாலும் அது என்னோட இஷ்டமா இருக்கட்டும்ப்பா…ப்ளீஸ்” என்று அவர் கையைப் பிடித்தபடி கேட்க
மகள் பேச்சுக்குக் கட்டுப்படுவதை தவிர அவருக்கு வேறு வழியில்லை.
அவளது மகிழ்ச்சி மட்டும் அவருக்கு எல்லாமே..!

ஒரு வாரம் ஓடி விட்டது.ஆர்கலிக்கும் நெப்போலியனுக்கும் ஒன்றும் சரியாகவில்லை.

உண்மையில் இருவரும் எதையும் சரிப்படுத்திக் கொள்ளவில்லை,அதற்கு முயலவுமில்லை.பிடித்திருந்தாலும் அவ்வளவு பிடிவாதம் பிடித்து ஆட்டியது.

நெப்போலியன் மாஸ்கோவுடன் வெளியே சென்றிருக்க,அவன் சொன்ன செய்தி கேட்டு கொதித்துப் போய் ஆர்கலியின் வீட்டிற்கு வந்தான்.

அப்போதுதான் ஆர்கலி ஈரத்தலையுடன் கையில் செல்பேசியோடு வாசலில் நின்று யாரிடமோ பேசிக் கொண்டிருக்க,

அவனுடன் வந்த கோபம் அவள் ஈரம் கண்டு ஓரம் செல்ல,அவளை அந்த நேரத்தில் அப்படி காணவும் அவர்கள் அளாவிய அந்தி நேரம் நினைவில் வர,வாசலில் நின்றவன் அவளை ரசித்துப் பார்த்திருந்தான்.

மிக மிக உரிமையுடன்…! மீகிய காதலுடன்.!!

இதுவரை அவள் பார்வையை பார்த்தவன் அவன் பார்வையை வெளிக்காட்டியதில்லை.இப்போது இருவர் உள்ளமும் வெளிப்பட்டிருக்க,ரசிகனாய் அவளை சுவரில் சாய்ந்து கால் ஊன்றி நின்று பார்க்க,

அவன் பார்வை உணர்ந்து ஆர்கலி திரும்பியவள்,அந்த காதல் பார்வையில் ரசிக்கும் பாவத்தில் தடுமாறினாள்.

மையலும் அதன் மயக்கமும் சிறு நொடிகளே..!

அது அவள் ஏங்கிய பார்வை தான்.ஏற்றுக்கொள்ளும் பார்வையும் கூட..! ஆனாலும் என்னவோ தடுத்தது.

அவனது பார்வையையும் மீறி,அவன் பேசியது நினைவில் வர,அலட்சியமாகப் பார்த்தபடி அவள் உள்ளே போக,அவளோடு சேர்ந்து அவனது ரசிக்கும் பார்வையும் காணாமல் போய்விட,கோபம் மீண்டிருக்க

ஹாலில் உட்கார்ந்து டீவி பார்த்துக் கொண்டிருந்த மாணிக்கத்திடம் நேரே சென்றவன்,டீவி ஸ்விட்சைப் பட்டென ஆஃப் செய்து விட்டு , அவரைப் பார்த்து

“என்ன நினைச்சிட்டு இருக்கீங்க உங்க மனசுல…” என்றான் கோபமாக.


‘தன்னந்தனியாய் திரிஞ்சிருந்தேன்
தறிக்கெட்டவ திசையை மாத்தி அமைக்கிற…!
காட்டுப்பயலா காத்துக்கிடந்தேன்
ஆட்டி வைக்கிற…
மனசை அடிச்சு நொறுக்கிற..!’


this is the song..enjoy listening...!

காதலினும் காதலாகும்!!

To be continued on 'Tuesday'

thankssssssssssssssssss sooooooooooo muchhhhhh friendsss
..:love::love::love::love::love::love::love:

'இது உங்க வீட்டு குட்டீஸ்க்காக...நீங்களே படிச்சும் கூட சொல்லுங்க...இல்ல கீழ உள்ள லிங்க்ல...கதை முடிவுல வாய்ஸ் நோட் இருக்கு...நல்லா இருக்கு...hope it helps...


முன்னாடி part ல உரையாமல் செல்லும் உணர்வுனு ஒரு line இருக்கும்..அது என்னனா பூவில்லாம காய்க்கிற மரம் போல...அப்படி இப்படின்னு மேதைங்களுக்கு சொல்லாமே புரிஞ்சிடும்னு ஒரு பாட்டு உண்டு..அன்னிக்கு சொல்லாம விட்டுட்டேன்..அதான்..

@SriNithi Sorry yaa..! நீங்க முதுமொழிக்காஞ்சி பத்தி சொன்னதை நான் இப்போதான் பார்த்தேன்..thanks S
ri:love:
 
Last edited:

Kavyajaya

Well-known member
Member
ஹப்பாடி.. வந்தாச்சா.. நான் கூட

எங்கே.. நேற்றே வருவேன் காற்றாய் பறந்து அடுத்த ud தருவேன் என்ற நல்லுள்ளம் பவிக்கா எங்கேன்னு கூவ நினைச்சேன்.. 😂😂

டேய் டேய்.. நிறுத்துடா உன் அலம்பலை.. அவரை கேட்குறது இருக்கட்டும் முதல நீ என்னடா நினைச்சிட்டு இருக்குற உன் மனசுல. மாவீரன் நெப்போலியன் கூட இம்புட்டு பில்ட்டப் பண்ணிருக்க மாட்டாரு 🤦‍♀️

Intha ud ku peethi promo la.. 😡 pavi kaaa.. 😳😳😳

Aama apadi enna pannunaru manik.. payal ponguraane..

Aargali.. vitraatha vitraatha unnoda getha vitraatha neeya avana nu oru kai paathuru enna oru etham.. 👿
 
Last edited:

Anu Ram

Well-known member
Member
Thanks pavi dear...
ரவி க்கு எப்படி சம்மதம் சொல்லி விடுவ என்று திட்ட ரெடி ஆ இருந்தேன்... ஆனால் சந்தோஷம் படமாட்டேன் என்று கூறி உன்னுடைய நெப்போலியன் மீதான காதலை நீயே உணர்ந்து கொண்டாய்...
ஷ்யாம் super...Singles சாபம் வாங்காதே கூறியது ...அசத்தல்...
ரவி வர்மன் அதைவிட கலக்கி விட்டான்.... உனக்கு stressful ஆன இடத்தில் உனக்கு சந்தோஷம் கிடைக்காது...
புது இடம் தான் மகிழ்ச்சி தரும் என கூறி நின்றது அருமை....நன்றி பவி... வாழ்க வளமுடன்
 
Last edited:

Chitrasaraswathi64@gmail.

Well-known member
Member
ஹப்பாடி.. வந்தாச்சா.. நான் கூட

எங்கே.. நேற்றே வருவேன் காற்றாய் பறந்து அடுத்த ud தருவேன் என்ற நல்லுள்ளம் பவிக்கா எங்கேன்னு கூவ நினைச்சேன்.. 😂😂
அந்த சிரமத்தை பவி கொடுக்கவில்லைடா குட்டி
 
Top