Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் கண்ட கணமே -பாகம் 9

Advertisement

பிரேமாமகள்

Well-known member
Member
பாகம் - 9

இடம்: அமுதினி வீடு

நேரம்: விடுமுறைக்காலம்


காதல் கண்ட கணமே- பாகம் 9

‘அவ போனில் ‘புருஷர்’ங்கிற பெயரைப் பார்த்ததும், எனக்கு ஏதோ மாதிரி ஆகிவிட்டது.

அவதான் கல்யாணம் ஆகிடுச்சுன்னு ஏற்கனவே சொன்னாளே! அப்புறம் எதுக்கு பதட்டப்படுற, ரிலாக்ஸ் அர்ஜூனா ரிலாக்ஸ்’. என்றது என் மனசாட்சி.

‘’இந்தா பேசு’’ என்றபடி போனை அவளிடம் தந்தேன்.

‘’இல்ல, நான் அப்புறமா பேசிக்கிறேன்’’ என்றாள். அதற்குள் போன் அழைப்பு நின்றுவிட்டது.

‘என் முன்னாடி பேசறதுக்கு தயங்குகிறாளோ?’’ என நான் யோசிக்கும்போதே, மறுபடியும் போன் அடித்தது. அவளையே பார்த்துக் கொண்டிருந்தேன்.

‘’இல்ல, இப்ப பேசினால் எப்படியும் நான் கோபத்தில் கத்துவேன். என் இழப்பை அவங்களுக்கு புரியவைக்கனும்ன்னா பேசாமல் இருந்தால்தான் தெரியும்’’ என்றாள் தலைகுனிந்தபடி.

‘அவள் எதோ பிரச்சனையில் இருக்கிறாள். அவளே சொல்லட்டும், அதுவரைக்கும் எதுவும் கேட்காமல் இருப்பது இருவருக்குமே ரொம்ப நல்லது’ என்று முடிவு எடுத்தபின், அமுதினியிடம் விடைபெற்றுக்கொண்டு என் பிளாட்டுக்குக் கிளம்பினேன்.

‘இந்தக் குள்ளச்சி என்னை எதோ செய்கிறாள். காலேஜ் படிக்கும் போது சில பேர்க்கு ரூட் விட்டிருக்கேன். ஆனா யாரிடமும் இப்படியொரு ஈர்ப்பு ஏற்பட்டதில்லை. ஏன் இங்க லண்டனில் எத்தனையோ வெள்ளக்காரிகளை அரைகுறையா பார்த்திருக்கிறேன். கருமம் அப்போதெல்லாம் ஒரு பல்பும் எரியலையே?

இவளிடம் ஏதோ ஒன்று என்னை இழுக்கிறது! கல்யாணம் ஆகிவிட்டது என்று தெரிந்ததும் கஷ்டமாகத்தான் இருந்தது. ஆனா அவள் ஒன்றும் என்னை காதலிச்சு கர்ப்பமாக்கி (?!?) கைவிடவில்லையே, அப்புறம் எதுக்கு கவலைப்படனும்?

நான் அழகாக இருப்பதால் (டேய் அர்ஜூனா, ஓவர் சீனு உடம்புக்கு ஆகாது- மனசாட்சி) என்னை சைட் அடித்திருக்கிறாள். வெளிநாட்டில், தமிழ் பேசற என்மேல பாசம் வந்திருக்கு. அவ்வளவுதான்.

இனி அவள் எனக்கொரு நல்ல பிரெண்ட். அது மட்டும்தான். எனக்குன்னு ஒருத்தி, நாமக்கல்லிலோ, கரூரிலோ பிறந்திருப்பாள். அவள் வர வரைக்கும் இப்படியே கம்முன்னு இருப்போம்’ என்று யோசித்தபடியே என் பிளாட்டை அடைந்தேன்.

அன்று ஹாஸ்பிட்டலில் என்னுடன் பணிபுரியும் ஆல்பர்ட் வீட்டில் வருட இறுதி கொண்டாட்டம்/new year party.

பீச் போய்விட்டு வந்ததிலிருந்து, நானும் அமுதினியும் ரொம்ப நெருக்கமாகிவிட்டோம். என்னை காலையில் போன் பண்ணி எழுப்புவதே அவள்தான். கிறிஸ்மஸ் விடுமுறையில், மதியம், இரவு சாப்பாடு ரெண்டும் அவள் வீட்டில்தான். வார்த்தைக்கு வார்த்தை, மூக்குடைப்பதில் அவளை அடிச்சுக்க யாராலும் முடியாது.

நானும் இப்போதெல்லாம் , அமுதினின்னு நீட்டி முழக்கி அவளை பெயரைச் சொல்வதில்லை. அவ பிரெண்ட்ஸ் மாதிரி ‘அம்மு’ன்னுதான் கூப்பிடறேன். ஆமா அவள் எனக்கு பிரெண்ட் மட்டும்தான!

நிச்சயமாக! உறுதியாக! அடுத்தவன் பொண்டாட்டி, உனக்கு பிரெண்ட் மட்டும்தான் என்றது மனசாட்சி.

இன்றைய பார்ட்டிக்கு அவளையும் அழைத்துச் செல்லலாம் என்ற எண்ணத்தில், அம்மு வீட்டுக் கதவைத் தட்டினேன்.

வீட்டில் தனியாக இருக்கோம் என்ற எண்ணத்தில், முகத்தில் எதையோ பூசிக்கொண்டு, தரையில் உட்கார்ந்து ஐஸ்கிரிம் தின்றுகொண்டு இருந்தாள்.

‘’ப்பா… என்னதிது? குட்டிச்சாத்தான் மாதிரி இருக்க? குளிக்கப்போ. பயமா இருக்கு எனக்கு’’ என்றேன்.

‘’க்கும், உங்களுக்கு நான் அழகா இருக்கேன்னு பொறாமை’’ என்று முறைத்தாள்.

‘’இந்த நினைப்பு வேறயா? போம்மா ராசாத்தி போ, தயவு செய்து இன்னிக்காவது குளி, என் கொலிக் ஆல்பர்ட் வீட்டு பார்ட்டிக்கு போகனும்’’ என்றேன்.

‘’ஐ பார்ட்டியா!, ஜாலி, இதுவரைக்கும் பிரிட்டிஷ் மக்கள் பார்ட்டியை சினிமாலதான் பார்த்திருக்கேன்.’’ என்றபடி குளிக்க ஓடினாள்.

சிறிது நேரத்தில், ‘’ஏங்க, பார்டிக்கு நான் என்ன மாதிரி டிரஸ் போடட்டும்?’’ என்று படுக்கையறையில் இருந்து குரல் கொடுத்தாள்.

‘’அங்க வெயிட் பீப்பிள்தான் வருவாங்க. பொண்ணுங்க டிரஸ் பத்தி எனக்கென்ன தெரியும். உனக்கென்ன தோணுதோ அதைப் போட்டுக்கோ,’’ என்றேன்.

‘வெயிட்! என்ன டிரெஸ் போடுறதுன்னு கேட்கிறாள் என்றால், அப்ப டிரஸ் இல்லாமல் நிற்கிறாளா?, அய்யோ… நான் ஏன் இப்படியெல்லாம் யோசிக்கிறேன். பேட் பாய் அர்ஜினா நீ’’

மனசாட்சியை திட்டி அமைதிப்படுத்திவிட்டு, நிமிர்ந்து பார்த்தால், பர்ப்பிள் நிற, கையில்லா கவுனில் அட்டகாசமாக வந்து நிற்கிறாள். வாசம் கும்முன்னு ஆளைத்தூக்குகிறது.

அய்யோ கொல்றாளே!, ‘பிரெண்டா நினைக்கிற பொண்ணை சைட் அடிக்கிறது தப்பு. அதுவும் அடுத்தவன் பொண்டாட்டியா இருக்கற பொண்ணை சைட் அடிக்கிறது ரொம்ப தப்பு’ன்னு புத்தி சொன்னாலும் மனசு எங்கே கேக்குது?

என் கொலிக் ஆல்பர்டின் மனைவி டாஷாவும் பிஸியோதெரபிஸ்ட் தான். ஒன்றாகப்படிக்கும் போது லவ் பண்ணி கல்யாணம் செய்துகொண்டார்களாம். அவங்களுக்கு ஒரு வயதில் லயா என்னும் குட்டிப் பொண்ணு இருக்கிறாள். ஹாஸ்பிட்டல் கிரச்ல தான் பகல் நேரத்தில் இருப்பாள். ஆல்பர்ட் கூட அடிக்கடி கிரச்க்கு போவதால் என்னைக் கண்டால், சிரித்துக் கொண்டு வருவாள்.

டாஷாவும் அன்னிக்கு பர்ப்பிள் கலரில்தான் டிரஸ் போட்டிருந்தாங்க. தன் அம்மா மாதிரி ஒரே கலர்ல டிரஸ் போட்டிருந்தால் என்னவோ, லயா அம்முவிடம் நல்லா ஒட்டிக்கொண்டாள். தன் அப்பா அழைத்தபோதுகூட, அம்முவைவிட்டுப் போகாமல், அப்படியே தூங்கிட்டாள்.

பார்ட்டி முடிந்து கிளம்பும் போதே, நடுராத்திரியைத் தாண்டியிருந்தது. ஆனால் எனக்கு அம்மு கூடவே இருக்க வேண்டுமெனத் தோன்றியது.

‘’ஹேய். நீ கிறிஸ்மஸ் லைட்டிங் பார்த்திருக்கிறாயா? ‘’ எனக் கேட்டேன்.

‘’இல்ல, ஸ்டார்ட்போர்ட்/stratford ஷாப்பிங் மால்தான் போனேன், இந்த மாசம் கடை நல்லா பிசி, எங்கேயும் போகமுடியல’’ என்றாள்.

‘’அப்ப என் கூடவா’’ என்று காரில் லண்டன் சிட்டிக்கு அழைத்துச் சென்றேன். ஆக்ஸ்போர்ட் , ரீஜன் தெருவில் டிசம்பர் மாதம் முழுக்க வண்ணவிளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு ஊரே திருவிழாக்கோலம் பூண்டிருக்கும். ஜொலிக்கும் அலங்கார விளக்குகளைப் பார்த்து சின்னக் குழந்தை போல அம்மு குதுகலித்தாள். அவள் மகிழ்வதைக் கண்டு நான் மனம் நிறைந்தேன்.

இரெவெல்லாம் ஊர்சுத்திவிட்டு, விடியற்காலைதான் வீடு திரும்பினோம். எனக்கு அது மறக்க முடியாத இரவு!

அடுத்தநாள் புத்தாண்டை வரவேற்க, ஹாஸ்பிட்டல் நண்பர்களுடன் சேர்ந்து பப்புக்கு போக முடிவு செய்தோம். அம்முவின் திட்டம் என்ன என்று தெரிந்துகொள்ள அவளுக்கு போன் செய்தேன்.

‘’ஏய், நியூ இயரை வரவேற்க எங்க போற?

‘’ஏன், நான் வரவேற்காட்டி புதுவருசம் பிறக்காதா?’’ என்றாள்.

‘’ம்ப்ச்… கடிக்காத, என் பிரெண்ட்ஸோட பப்புக்கு போறேன். நீயும் வர்றியா?’’

‘’வருச பிறப்பன்று பப்புல இருந்தேன்னு தெரிஞ்சா அவ்வளவுதான். எங்கப்பா சாமியாடுவார். நான் மீனாக்கா கூட கோயிலுக்கு நைட் 12 மணி பூஜை பார்க்கப் போறேன்.’’ என்று அம்மு சொன்னதும்,

‘’இங்கிலிஷ் நியூ இயர்க்கு! இந்த வயசுல! அதுவும் லண்டன் வந்து! 12 மணிக்கு பூஜை பார்க்கப் போற? ரொம்ப கஷ்டம்ம்மா, ரொம்ப கஷ்டம். பாவம் உன் வீட்டுக்காரன். அவருக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்’’ என்று கிண்டலடித்தேன்.

‘’இங்க பாருங்க, தேவையில்லாமல் என் வாயைக் கிண்டாதீங்க. அப்புறம் நான் எதாச்சும் சொல்லி, நீங்க கோவிச்சுக்குவீங்க’’ என்று கொதித்தெழுந்தாள்.

‘’ அமுதினி அவர்களே! இத்துடன் இன்றைய நிகழ்ச்சிகளை முடித்துக் கொள்வோம். நீங்க நடுராத்திரி பூஜை பார்க்க போங்கம்மா’’ என்று சொன்னாலும், புதுவருடத்தன்று மதியம் எழுந்ததும் அவள் வீட்டிற்குத்தான் சென்றேன்.

எனக்காக வடைப் பாயாசத்தோடு விருந்து சமைத்திருந்தாள். சும்மா சொல்லக்கூடாது, எங்கம்மா சமையலுக்கு அடுத்து என் மனசுக்குப் பிடிச்சது அம்முவின் சமையல்தான். இந்த வயசிலேயே நல்லா சமைக்கிறாள். ஆனா அதை அவளிடன் சொல்லக்கூடாது. அப்புறம் தலையில் கொம்பு முளைச்சிக்கும்.

புதுவருடம் குதுகலமாக ஆரம்பித்தது. ஆல்பர்ட் டாஷா தம்பதிக்கும் அம்முவை ரொம்ப பிடித்துவிட்டது. வார இறுதி நாட்களில் நாங்க இருவரும் அவங்க வீட்டுக்கு சென்றுவிடுவோம்.

எனக்கு வேலையில் தாமதமானாலும், ஆல்பர்ட் வந்து, அவளை தன் வீட்டுக்கு கூட்டிச் செல்வான். அம்மு கூட சேர்ந்து டாஷாவும் கோயிலுக்கு போய் பிரசாதம் சாப்பிடும் அளவுக்கு ரெண்டு பேரும் நெருக்கமாகிட்டாங்க. சேர்ந்து சினிமா போறது, ஷாப்பிங் மால் சுத்தறது, சீட்டு விளையாடறது என்று நாட்கள் ஆனந்தமாய் நகர்ந்தன.

யூரோப்பியன் மக்களிடம் ஒரு நல்ல பழக்கம் இருக்கு. ரெண்டு பேர் ஒன்றாக சுற்றினால், ‘’லவ் பண்றீங்களா?’ எனக் கேட்க மாட்டாங்க. அப்பா என்ன பண்றாரு?, எதுக்கு லண்டன் வந்தீங்க?, ஏன் இன்னும் கல்யாணம் பண்ணல’ இப்படி எந்த கேள்வியும் கேட்டு, நம்ம தனிப்பட்ட வாழ்க்கையில் மூக்கை நுழைக்க மாட்டாங்க. அதனால் எனக்கும் அம்முக்கும் என்ன உறவு என்று அவங்க கேட்டதில்லை.

அன்று…

ஆல்பர்ட்க்கு ஒரு இக்கட்டான சூழ்நிலை. அதிர்ச்சியில் டாஷாவும் மயங்கி விழுந்திட்டாங்க. அவர்களை ஒருவழியாக அனுப்பிவைத்துவிட்டு அவசரத்தில் அம்முக்கு போன் பண்ணினால் அவளும் எடுக்கவில்லை.

வீட்டுக்கு வந்தபிறகு விடாமல், போனில் அவளைக் கூப்பிட்டுக்கொண்டே இருந்தேன். அவள் இல்லாமல் இந்த ராத்திரியைக் கடக்க முடியும் என்று தோணவில்லை. இதுவரைக்கும் ஒருமுறை கூட அம்மு என்வீட்டுக்கு வந்ததில்லை.

ஆனா இன்னிக்கு அவள் எனக்கு வேணும். அவளின் துணையில்லாமல் என்னால் ஒருஅடி நகர முடியாது. ‘’ஐ நீட் யூ’. என்னை தவிக்க விடாதே’’ என்று நான் புலம்பி தவிக்கையில், ஒருவழியாக போனை எடுத்தாள்.

‘’சாரிங்க, கல்யாணத்துக்கு துணி எடுக்க ஒரு குடும்பம் வந்தாங்க. அவங்க கேட்டதெல்லாம் எடுத்து குடுத்து அனுப்பிவைச்சதில் நேரம் போனதே தெரியல’’ என்று அவள் பேச ஆரம்பிக்கும் முன்னே,

‘’அம்மு, இன்னிக்கு நைட் எங்கூட படுக்க வர்றியா?’’ என்றேன்.

காதல் வளரும்.

 
hey peremaa...

super ud premaa...

kandippa ammuvoda hus arjun thaan na mudivu paniten...

aanaa yen avan ipadi oru kelvi kekuraan. romba thappu..
கொஞ்சம் இருங்க பாஸ்…. இன்னிக்கு தெரியும், அர்ஜூன் என்ன அர்த்ததில் சொன்னான் என்று.
 
Top