Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் நீதானே காவலனே..! - 1

Advertisement

Uma saravanan

Tamil Novel Writer
The Writers Crew
காவல் 1:

மழைகாலம்...அன்றும் மிதமான மழை பெய்து கொண்டிருந்தது.தொடர்ந்து விழுந்து கொண்டிருந்த மழைச்சாரல், மரம் செடிகளுக்கு புத்துணர்வையும், வேலைக்கு செல்லும் மக்களுக்கு சலிப்பையும் உண்டு பண்ணிக் கொண்டிருந்தது. மழைகாலங்களில் சூரியனின் உதவியையும், வெயில் காலங்களில் மழைமகளின் உதவியையும் நாடுவது மனித இயல்புதானே.நிகழ்கால சூழ்நிலையை ரசிக்கும் மனநிலைக்கு மக்கள் மாறவில்லை என்பதே உண்மை. விதிவிலக்காய் சில மழைக் காதலிகளும், மழைக் காதலர்களும் உண்டு.நாமும் அவர்களுடன் சேர்ந்து பயணிப்போம்.

கொடைக்கானல்...மலைகளின் இளவரசி.பல அதிசயங்களையும், பல ஆச்சர்யங்களையும், பல அற்புதங்களையும் தன்னுள்ளே அடக்கிய இளவரசி அவள்.இந்த இளவரசியைப் பற்றி தெரிந்து கொள்ள, மக்கள் பலரும் இவளைச் சுற்றிப் பார்க்க வந்த வண்ணமே இருப்பர் எப்படிப் பார்த்தாலும் சலிக்காத அழகு, எப்பொழுது பார்த்தாலும் மாறாத குளுமை,நம் ரணங்களையும் மறக்கச் செய்யும் பசுமை,வியப்பு மிகு விந்தை என இவளை நாம் சொல்லிக் கொண்டே போகலாம். அழகும் ஆபத்தும் ஒரு சேர இருக்கும் என்பதை தெளிவாக உணர்த்தும் பல பகுதிகள்.மேற்கு தொடர்ச்சி மலையில் இருந்து 7000 அடி உயரே இருக்கும் மலை.

கொடைக்கானல் செல்லும் பாதி வழியில் அமைந்திருந்தது அந்த அழகிய பாலம். இதுநாள் வரை அது அழகிய பாலம் மட்டுமே. ஆனால் இனி.
பெய்து கொண்டிருந்த மழைச்சாரலையும் பொருட்படுத்தாது...அங்கே சில காக்கி உடைகள்.அவர்களுடன் சில மனித தலைகளும் தென்பட்டனர்.வரிசயாக நின்றிருந்த ஜீப்களும், இருசக்கர வாகனங்களும் அங்கு ஏதோ அசம்பாவிதம் நடந்திருப்பதை உறுதி செய்தன.

“என்ன சார்..? டியூட்டி முடிச்சு இன்னைக்கு கொஞ்சம் சீக்கிரம் வீட்டுக்கு போகலாம்ன்னு பார்த்தா..இப்ப இப்படி ஒரு கேஸ்..!” என்றார் ஒரு காவலர்.

“நாம நினைச்சது என்னைக்கு நடந்திருக்கு..? தலைவலியே இப்பதான் ஆரம்பிக்குது.காலையில சாப்பிட்டது.மதியமும் சாப்பிடலை.இன்னும் கொஞ்ச நேரம் போன...இருக்குற கடையையும் அடச்சிடுவான்..!” என்று சொன்ன மற்றொரு காவலர்...பசியின் தாக்கத்தால் அருகில் இருந்த கல்லில் அமர்ந்தார்.

வாக்கி டாக்கியில் விஷயம் தீயாய் பரவிக் கொண்டிருக்க, அடுத்தடுத்து உயர் அதிகாரிகளும் வந்த வண்ணம் இருந்தனர்.

“எஸ்பி வரார்..!” என்ற தகவல் வர, உட்கார்ந்திருந்த காவலர் வேகமாய் எழுந்து நின்றார். பசியும், களைப்பும் பறந்தோடியது.தொப்பியை வேகமாய் தலைக்குப் பொருத்திக் கொண்டவர் விறைப்பாய் நிற்க, மற்றொரு காவலரும் அவர் அடி பின்பற்றி அப்படியே நின்றார்.

ஜீப்பிலிருந்து வேகமாய் இறங்கினான் வருண் கிருஷ்ணா.நம் கதையின் நாயகன்.முப்பது வயது முடிந்து மூன்று மாதங்கள் ஆகியிருந்தது.ஆண்களில் சற்று உயரம்.உடலை இறுக்கமாய் பிடித்திருந்த காக்கி யுனிபார்ம்...என்னைப் போலவே அவனும் இறுக்கம் என்பதை சொல்லாமல் சொல்லியது.ஒட்ட வெட்டப்பட்டிருந்த தலை முடி அவன் இறுக்கத்திற்கு மேலும் வலு சேர்த்திருந்தது.இயற்கையான மாநிறமும்,பதவி கொடுத்த திமிரும் அவனை கொஞ்சம் அழகனாய் காட்டியிருந்தது.

“வணக்கம் சார்..!”

“பாடியை யார் பர்ஸ்ட் பார்த்தது..?” என்றான் தோரணையாய்.கேள்வி அவர்களிடத்தில் இருந்தாலும் பார்வை முழுவதும் அங்கிருந்த பிணத்தின் மீதே இருந்தது.

“இவர் தான் சார் பார்த்துட்டு தகவல் சொன்னவர்.பஸ் கண்டெக்டர் சார்..!” என்றான் இன்ஸ்பெக்டர் கார்த்திக்.

“இங்க ஸ்டாப் எதுவும் இருக்குற மாதிரி தெரியலையே..? நீங்க எப்படி பார்த்திங்க..?” என்றான் வருண் யோசனையாய்.

“சார்..! பஸ் இங்க வரும் போது பிரேக் டவுன் ஆகிடுச்சு.பஸ்ல வந்தவங்களை எல்லாம் இன்னொரு பஸ்ல ஏத்திவிட்டுட்டு...நானும் டிரைவரும் இங்க வெயிட் பண்ணோம்.அப்போதான் ஏதோ கெட்ட வாடை அடிக்கிற மாதிரி இருந்தது. பாலத்துகிட்ட நகர்ந்து எட்டிப் பார்த்தப் தான் தெரிஞ்சது சார், இங்க ஒரு பொணம் கிடக்குன்னு..” என்றார் அந்த கண்டக்டர்.

“அந்த டிரைவர் எங்க..?” என்றான் வருண்.

“அவரும் இங்க தான் சார் இருக்கார். கொஞ்சம் வயசானவர்.இந்த ஸ்மெல் தாங்க முடியாம அங்க உட்கார்ந்திருக்கார் சார்..!” என்றான் இன்ஸ்பெக்டர் கார்த்திக்.

“ஆம்புலன்ஸ்க்கு சொல்லியாச்சா..?” என்றான்.

“சொல்லியாச்சு சார்..! ஆன் தி வே சார்...!” என்றான் கார்த்திக்.

அங்கு கிடந்த உடலை ஊன்றிப் பார்த்தான் வருண். முகம் முற்றிலும் சிதைந்திருந்தது.கைகள் அழுகிய நிலையில் இருந்தது.முப்பத்தைந்து வயது இருக்கலாம் அந்த ஆணிற்கு.கைகளில் இருந்த வாட்சும், காலில் இருந்த ஷூவும் அவன் வசதியை சொல்லியது.வருண் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, ஆம்புலன்ஸ் வந்து விட,

“பாடியை கேர்புல்லா டிஸ்போஸ் பண்ணுங்க. எந்த தடயமும் மிஸ் ஆகக் கூடாது.இது யாரு, பேரு என்ன? ஊரு என்ன? கொலையா? தற்கொலையா..? இப்படி எல்லா கோணத்துலையும் விசாரிக்கணும். இதே வயசுல யாரும் காணாமப் போயிருக்காங்களா..? அப்படி கம்ப்லெயின்ட் ஏதும் வந்திருக்கா..? இப்படி முழு விபரமும் எனக்கு வேணும்..!” என்றான் வருண்.

“ஓகே சார்..!” என்றான் கார்த்திக்.

வருண் சுற்றி இருந்த மனிதர்களையும், அங்கிருந்த சூழ்நிலையையும் பார்வையால் கிரகித்துக் கொண்டான்.அவனுடைய கணிப்புப் படி, அந்த இடத்தில் சந்தேகப்படும் படி யாரும் இல்லை.

“நாம இப்ப வீட்டுக்குப் போகலாமா..?” என்றார் அந்த காவலர்.

“எஸ்பி ரொம்ப கோவக்காரர், ஸ்ட்ரெயிட் பார்வேட் அப்படின்னு சொன்னாங்க..! ஆனா மனுஷைப் பார்த்தா அப்படித் தெரியலையே..?” என்றார் மற்றொரு காவலர்.

“அவரைப் பார்த்தா அப்படித் தெரியாது.ஆனா மனுஷன் பயங்கர ஸ்பீட்.கை ரொம்ப சுத்தம்.ஸ்போர்ட்ஸ் கோட்டால வேலை வாங்குனவரு.துப்பாக்கி சுடுறதுல தங்கப்பதக்கம் வாங்குனவரு..!” என்றார் அந்த காவலர்.

“கான்ஸ்டபில் அங்க என்னய்யா வெட்டிப் பேச்சு..!வாங்க முதல்ல..!” என்று இன்ஸ்பெக்டர் கார்த்திக் அழைக்க, அதோடு வருணின் பேச்சிருக்கு முற்றுப் புள்ளி வைத்து விட்டு சென்றனர் அந்த காவலர்கள் இருவரும்.

ஒரு சில மணி நேரத்தில் அந்த இடமே காலியாக, இருள் பரவத் தொடங்கியது.இன்ஸ்பெக்டர் கார்த்திக் எரிச்சலாகக் கூட வந்தது.தூரல் இன்னும் நின்றபாடில்லை. ஆனால் வருணோ அந்த இடத்தை விட்டு அகலவில்லை.

இறுகக் கட்டிய கைகளுடன், தீவிர சிந்தனையில் இருந்தான். புருவங்கள் நெரித்தபடி இருக்க, அந்த கொடைக்கானல் குளிரை அவன் உடல் கொஞ்சமும் பொருட்படுத்தவில்லை.

“சார் கிளம்பலாமா..? ரொம்ப இருட்டாகுது சார். மழைவேற பெய்யுது.கீழ இறங்க கஷ்ட்டம் ஆகிடும் சார்..!” என்றான் கார்த்திக்.
“ம்ம்ம்..” என்றவன், வேகமாய் ஜீப்பில் ஏறி அமர, கார்த்திக் வண்டியை எடுத்தான்.

“டிரைவர் எங்க..?” என்றான் இறுகிய குரலில்.

“நான் தான் அனுப்பினேன் சார்..! ஒன்னும் பிரச்சனையில்லை சார். நான் நல்லா டிரைவ் பண்ணுவேன்..!” என்றபடி கார்த்திக் லாவகமாய் ஜீப்பை ஓட்ட,அதற்கு மேல் அவனிடம் பேச்சுக் கொடுக்காது, பார்வையை வெளியே செலுத்தினான் வருண்.

வருண் கிருஷ்ணா-சத்யமூர்த்தி,நித்யா தம்பதியின் தவப்புதல்வன்.இரண்டு பெண்களுக்குப் பிறகு பிறந்த கடைசிப் பையன்.அம்மா, அக்காக்களுக்கு உயிரானவன்.அவனின் தந்தை சத்யமூர்த்தி காவல்துறையில் டிஎஸ்பியாக இருந்து பணி ஓய்வு பெற்றவர்.அம்மா நித்யா ஒய்வு பெற்ற ஆசிரியை. கௌசல்யா,சாதனா என்ற இரண்டு அக்காக்கள்.இருவருக்கும் திருமணம் முடிந்து விட்டது.குடும்பத்தினர் அனைவரும் சென்னையில் இருக்க, இவன் மட்டும் இங்கே தனித்து. இன்னும் இரண்டு வாரங்களில் சென்னை கிளம்பிவிடுவான்.ட்ரான்ஸ்பர் ஆர்டர் வந்தாகிவிட்டது. அதற்குள் இந்த கேஸ் அவனிடம் வந்து சிக்கிக் கொண்டது.

“சார் இப்போ எஸ்பியா இருக்கிங்களா...இல்லை ஆப் ட்யுட்டியா..?” என்றான் கார்த்திக்.

“பார்த்தா எப்படித் தெரியுது..?” என்றான் வருண்.

“எஸ்பியா இல்லாம வருணா இருந்தா எனக்கு சில விஷயங்கள் பேசணும்..!” என்றான் கார்த்திக்.

“துரோகிங்க கிட்ட எல்லாம் நான் பேசுறது இல்லை..!” என்றான் பட்டென்று.

“என்னோட தரப்பு நியாயம் உனக்கு புரியவே புரியாதா கிருஷ்ணா..” என்றான் கார்த்திக்.

“நியாயம் இருந்தா தானே புரியறதுக்கு..?” என்றான் வருண்.

“கடைசி வரைக்கும் எனக்கு பேச வாய்ப்பே இல்லாம போய்டுச்சு. சொன்னாலும் புரிஞ்சிக்கிற மனநிலையில் நீ இல்லை..” என்றான் வெம்போடிய குரலில்.

“லுக் மிஸ்டர். கார்த்திக்..! இந்த கேஸ் விஷயமா ஏதாவது சொல்லனும்ன்னா சொல்லுங்க. இல்லையா வாயை மூடிகிட்டு வண்டியை ஓட்டுங்க.எனக்கு இது வரைக்கும் கோபம் வரலை.அந்த ஒரே காரணத்துனால கோபமே வராதுன்னு நினைக்க வேண்டாம்..!” என்றான் பட்டுக் கத்தரித்தார் போல்.

அவனின் பேச்சில் தன்னையே நொந்து கொண்டான். அந்த இருள் சூழ்ந்த வேளை, கார்த்திக்கின் மனதிலும் இருளை மட்டுமே பரப்பியிருந்தது.
“இந்த பாடியோட போட்டோ போட்டு, அங்க அடையாளங்களைப் போட்டு நோட்டிஸ் அடிச்சு எல்லா ஸ்டேஷனுக்கும் குடுங்க.காணாமப் போனவங்க நேம் லிஸ்ட் செக் பண்ணுங்க.பக்கத்துல இருக்குற பெட்ரோல் பங்க்,டோல்கேட் இப்படி எல்லா இடத்துலையும் சிசிடிவி புட்டேஜ் கலெக்ட் பண்ணி, செக் பண்ணுங்க. ரெண்டு நாள்ல இந்த கேசை முடிக்கணும்..! இந்த கேஸைப் பத்தின எல்லா அப்டேட்டும் உடனுக்குடனே என் பார்வைக்கு வந்தாகணும்.எனி டைம் என்னை காண்டாக்ட் பண்ணுங்க, இந்த கேஸ் சம்பந்தமா மட்டும்..!” என்ற அந்த மட்டும் என்ற வார்த்தையை மீண்டும் அழுத்திய வருண், தாமுவை இறக்கி விட்டு, ஜீப்பை தானே ஓட்டிச் சென்றான்.

அவன் சென்ற பிறகும் கூட, அந்த சாலையையே வெறித்துக் கொண்டிருந்தான் கார்த்திக்.

“நீ பழைய வருணா, வருண் கிருஷணனா என்கிட்டே பேசுவடா. அந்த நாள் ரொம்ப தூரத்தில் இல்லை..!” என்று மனதிற்குள் தனக்குத் தானே உரைத்துக் கொண்டான் கார்த்திக்.
 
அங்கு ஜீப்பில் சென்று கொண்டிருந்த வருணின் முகமோ, ஏகத்திற்கும் கோபத்தை குத்தகைக்கு எடுத்திருந்தது.கைகள் அடிக்கடி ஸ்டேரிங்கை குத்த, மனதின் வெறுப்புகள் வெளியே தெரியாவண்ணம் இருக்க பெரும்பாடு பட்டுப் போனான் வருண்.

அந்த நேரம் பார்த்து அவனின் செல் ஒலி எழுப்ப, அதில் ஒளிர்ந்த எண்களைக் கண்டவன் முகமும் ஒளிர்ந்தது.

“அம்மா..”

“எங்க இருக்க வருண்..? கிளம்பிட்டியா..?” என்றார்.

“இங்க தான் இருக்கேன் மாம்.ஒரு முக்கியமான கேஸ்.கடைசி நேரத்துல கிளம்ப முடியாம போய்டுச்சு..!” என்றான்.

“என்ன சொல்ற வருண். நாளைக்கு கண்டிப்பா நீ இங்க இருக்கணும். இரண்டு நாள் லீவ் போடுறதால ஒன்னும் ஆகிடாது..” என்றார் நித்யா மறுமுனையில்.

“அப்படியில்லை மாம்..! எப்படியும் ரெண்டு வாரத்துல அங்கயே வரப் போறேன்.
அப்பறம் எதுக்கு இப்ப ஒரு தடவை அலையணும்..?” என்றான் வருண்.

“அதெல்லாம் எனக்குத் தெரியாது.நாளைக்கு நீ வந்தே ஆகணும்..!” என்று ஆணையிட்டவராய் நித்யா போனை வைத்து விட்டார்.

“இந்த போலீஸ் வேலைக்கு வந்ததும் போதும்...ஆளாளுக்கு நம்மை பந்தாடுறதும் போதும்..!” என்று மனதில் சலிப்பாய் உணர்ந்தவன், என்ன செய்வதென்று யோசித்தான்.

பின் போனை எடுத்து, சில உத்தரவுகளை பிறப்பித்தவன், ஜீப்பை தன் வீட்டில் விட்டுவிட்டு, சொந்த காரில் பயணமானான் சென்னைக்கு.ஆறுமணி நேரப் பயணம். தனிமை மட்டுமே துணை.

வருண் கிளம்பிய நிமிடம் கார்த்திக் தகவல் சென்றது.

“தனியாவா போறான்..?” என்றான் கார்த்திக்.

“ஆமாம் தம்பி. நான் வரேன்னு சொல்லியும் தம்பி கேட்கலை..!” என்றார் வருணின் டிரைவர்.

“நீங்க வொரி பண்ணிக்காதிங்க..! அதெல்லாம் அவனுக்கு என்ன தோணுதோ அதைத் தான் செய்வான்..! விடுங்க பார்த்துக்கலாம்..!” என்றபடி போனை வைத்து விட்டான் கார்த்திக்.இருந்தும் மனதில் ஆயிரம் யோசனைகள்.

“அப்படி என்ன அவசரமா இருக்கும்..?” என்று யோசித்தவன், போனை எடுத்து முக்கியமான நபருக்கு கால் செய்ய, எதிர்புறம் சொன்ன செய்தியில் தான் அவனுக்கு நியாபகமே வந்தது.

“இதை எப்படி மறந்தேன்..” என்று நொந்து கொண்டான் கார்த்திக்.

காரில் சென்று கொண்டிருந்த வருணுக்கும் பழைய நினைவுகள்.மனதின் மூலையில் இருந்து ஒவ்வொன்றாய் படமாய் விரிய, நினைத்தவன் பெருமூச்சு ஒன்றை விட்டான்.

கார் திருச்சியைத் தாண்டி சென்று கொண்டிருக்க,ஒரு மோட்டலின் அருகே கொஞ்சம் கூட்டமாகத் தெரிந்தது.காரின் வேகத்தைக் குறைத்தான் வருண்.காரை நிறுத்தி, இறங்காமலேயே விசாரித்தான்.

“என்ன பிரச்சனை..?” என்றான் ஒருவரிடம்.

“ரெண்டு காவாளிப் பசங்க சார். ஒரு பொண்ணுகிட்ட தப்பா நடக்க முயற்சி பண்ணிருக்காங்க.அந்த பொண்ணு சத்தம் போட, பெரிய பிரச்சனை ஆகிடுச்சு சார்..!” என்றார்.

“போலீஸ்க்கு இன்பார்ம் பண்ணிட்டிங்களா..?” என்றான் இறங்கியபடி.
“போலீஸ் எல்லாம் எதுக்கு சார்..! நாங்களே அடிச்சுத் துவச்சுட்டோம்..!” என்றனர்.

அவர்களை எரிச்சலுடன் பார்த்தவன்,

“எல்லாத்தையும் நீங்களே பண்ணிட்டா, போலீஸ் எதுக்கு..?” என்றான் எரிச்சலாய்.

அவனின் மிரட்டல் தொனியையும்,காக்கி பேண்ட்டையும் பார்த்தவர்கள் அதற்கடுத்து பேசத் தயங்க,

“அந்த பொண்ணு எங்க..?” என்றான்.

“இதோ இங்க இருக்கு சார்..!” என்றார் ஒரு பெண்மணி.

அவர்காட்டிய திசையில் பார்த்த வருண், மனதிற்குள் திகைக்க செய்தான்.

முழு நிலவாய் இருந்தாள் அவள்.வெள்ளை நிற சுடிதார் அவளை நிலவாகவே காட்டியது.அலங்காரம் ஏதும் இல்லை. ஆனால் சோகமாய் இருப்பதைப் போல் இருந்தது.ஒரு பெரிய ஹேண்ட் பேக் மட்டுமே வைத்திருந்தாள்.

“எங்கயோ பார்த்த மாதிரி இருக்கே..!” என்று யோசித்தவன்,

அதற்குள் அவள் அருகில் நெருங்கியவன்,

“எங்க இருந்து வரீங்க..?” என்றான்.

“திண்டுக்கல்..!” என்றாள்.

“இங்க எதுக்காக இறங்குனிங்க..?” என்றான்.

“சார்..! பஸ்ஸ இங்க மோட்டல்ல நிறுத்துனாங்க.நான் பாத்ரூம் போயிட்டு வரதுக்குள்ள பஸ் போய்டுச்சு.அப்போ இவங்க ரெண்டும் பேரும் என் பக்கத்தில் வந்து, ஒரு மாதிரி பேச ஆரம்பிச்சாங்க..!” என்று சொல்வதற்குள் அவள் கண்கள் கலங்கிவிட்டது.

“ஒரு பொண்ணு தனியா நின்றிருந்தா போதும்...உடனே வந்துடுவிங்களே.நாய் மாதிரி நாக்கத் தொங்கப் போட்டுகிட்டே அலைய வேண்டியது..!” என்று இருவருக்கும் ஆளுக்கொரு அறை விட்டான் வருண்.

அவனின் ஒரு அடியில் இருவரும் சுருண்டு விழுக, அதைப் பார்த்த அனைவருக்கும் பக்கென்று இருந்தது.

அவளுக்கோ பயத்தில் நாக்கு உலர்ந்து போய்விட்டது.கால்கள் தன் போக்கில் இரண்டு எட்டு பின்னால் செல்ல, அவளைப் பார்த்து முறைத்து வைத்தான் வருண்.

அவன் திரும்பி அவர்களைப் பார்ப்பதற்குள் அவர்கள் விழுந்த அடையாளமே இல்லாமல் ஓடியிருந்தனர்.

“ஷிட்..” என்று கால்களால் தரையை ஓங்கி மிதித்தவன், மீண்டும் அவளைப் பார்த்தான்.

“எங்க போறீங்க..?” என்றான்.

“சென்னை..” என்றாள்.

ஒரு நிமிடம் யோசித்தவன்,

“நானும் சென்னை தான் போறேன். வாங்க டிராப் பண்றேன்..!” என்றான்.

அவன் சொன்ன விதத்தில், அருகில் இருந்தவர்கள் தனக்குள் பேசிக் கொள்ள, அவளோ மருண்ட பார்வை பார்த்தாள்.

அவளின் பார்வையிலும், அங்கிருந்தவர்களின் பேச்சிலும் எரிச்சல் அடைந்தவன்,

“என்னைப் பார்த்தா எப்படி இருக்கு. இப்ப ஓடிப் போனானுங்களே.. அந்த பொறுக்கிங்க மாதிரி இருக்கா..?” என்றவன்.

தனது ஐடியை எடுத்து காட்ட, அங்கிருந்தவர்கள் உடனே அவனை மரியாதையாக பார்க்க ஆரம்பித்தனர். அவளோ கண்களை மேலும் உருட்டித் திகைத்தாள்.

“போலீசா..?” என்றவளுக்கு நாக்கு உலர்ந்தது.

“திண்டுக்கல் எஸ்பி..!” என்றான் கொஞ்சம் மிடுக்காய்.
அவள் திகைத்து நிற்க,

“இது வேலைக்கு ஆகாது..!” என்று எண்ணியவன், தன் போக்கில் சென்று காரில் ஏறிக் கொண்டான்.அவன் அருகில் இருந்து நகன்ற உடன் அவளுக்கு சுயம் உரைக்க,சுற்றும் முற்றும் பார்த்தாள்.அங்கு இருப்பதை விட, அவனுடன் செல்வதே மேல் எனத் தோன்றியது அவளுக்கு.

வேகமாய் சென்றவள் அவன் காரின் அருகில் தயங்கி நிற்க, அவள் வருவதைப் பார்த்தவன்,முன் பக்க கதவினைத் திறந்து விட்டான்.

“தேங்க்ஸ் சார்..!” என்றபடி உள்ளே ஏறி அமர்ந்தாள் அவள்.

கொஞ்சம் படபடப்பாக உணர்ந்தாள் அவள்.இதுவரை யாருடனும் இப்படித் தனியாக பயணம் செய்ததில்லை.வருணோ அவளை சட்டை செய்யாமல் கார் ஓட்டுவது மட்டுமே வேலை என்பதை போல் இருந்தான்.அவளும் வெளியே வேடிக்கைப் பார்த்துக் கொண்டு வந்தாள்.

“பேரென்ன..?” என்றான் திடீரென்று.

“ங்கான்..!” என்று விழித்தாள்.

“காது கேட்குது தான..? உன் பேரென்ன..?” என்றான் மீண்டும் அழுத்தமாய்.

“சக்தி பிரியதர்ஷினி ” என்றாள்.

“பேருல இருக்குற சக்தி...மனசுல இல்ல போல..?” என்றான்.

“அப்படி எல்லாம் இல்லை..” என்றாள் வெடுக்கென்று.

“பொண்ணுங்க எந்த விஷயத்துக்கும் கலங்கி நிக்க கூடாது.எந்த நிலைமையிலும் தைரியத்தை கைவிடவே கூடாது. எப்பவும் நாலு பேரு உதவிக்கு வருவாங்கன்னு நினைச்சுட்டே இருக்கக் கூடாது..!” என்றான்.

“நான் எங்க சார் அப்படி நின்னேன்..?” என்றாள்.

“அதான் இப்ப கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி பார்த்தேனே..!” என்றான்.

“அதுக்காக தைரியமே இல்லைன்னு அர்த்தமில்லை. எதிர்பாராத ஒரு நிகழ்வு கொடுத்த பதட்டம் அவ்வளவு தான்.எனக்கு போலீசுன்னா தான் பயம்.ரௌடிகளைப் பார்த்து எல்லாம் பயமில்லை..!” என்றாள்.

‘போலீசை விட ரௌடிங்க பெஸ்ட்...அப்படித்தான..? என்ன ஒரு உயர்ந்த எண்ணம்..?” என்றவன் அதற்கு மேல அவளிடம் பேச்சைத் தொடரவில்லை.

“தேவையில்லாம வாயைக் குடுத்துட்டோமோ..?” என்று எண்ணியவள், அவனை ஓரக்கண்ணால் பார்க்க, அவனோ சாலையில் மட்டுமே பார்வையைப் பதித்திருந்தான்.

“ஆளு செம்மையா தான் இருக்கான். ஆனா பயங்கர டெரரா இருப்பான் போலவே..!” என்று தனக்குள்ளேயே பேசிக் கொண்டு வந்தாள் சக்தி.

அவள் தன்னைப் பார்ப்பது, தன்னைப் பற்றி மனதிற்குள் கணிப்பது இப்படி எல்லாமே அவனுக்குத் தெரிந்திருந்தாலும் தெரியாதைதைப் போலவே கட்டிக் கொண்டான் வருண்.

அவளுக்கு தூக்கம் வந்து கண்களைச் சொருக, தூக்கத்தைக் கட்டுப்படுத்தியபடி அமர்ந்திருந்தாள்.தெரியாதவன் முன்னிலையில் தூங்க, அவளுக்கு ஒப்பவில்லை.

“தூங்கிடாத சக்தி..! நாளைக்கு சேர்த்து வச்சு தூங்கிக்கலாம். இப்ப கொஞ்சம் உஷாரா முழிச்சே இரு..!” என்று மனசாட்சி அறைகூவல் விடுக்க, அதை ஏற்றுக் கொண்டு வேடிக்கைப் பார்க்கத் தொடங்கினாள்.

“ஒரு டீ சாப்டலாமா..?” என்றான்.

“ம்ம்ம்” என்றாள். அவளுக்கும் தேவையாய் இருந்தது.

சாலையின் ஓரத்தில் இருந்த அந்த டீக்கடை முன்பு காரை நிறுத்தினான் வருண்.
“நீ இரு..!” என்றவன், கடையின் முன்பு சென்று டீ சொன்னான்.அவனுடைய மரியாதை பாங்கு மறைந்து, அவளை சாதாரணமாக அழைத்ததைக் கவனித்துக் கொண்டாள் சக்தி.

ஒரு டீயை வாங்கி வந்து அவளிடம் கொடுத்தவன்,சற்று தள்ளி நின்று தன் கையில் இருந்த டீயைக் குடித்துக் கொண்டிருந்தான்.நேரம் நள்ளிரவு ஒரு மணியைத் தாண்டியிருந்தது.

அந்த இரவின் ஏகாந்த காற்று அவன் முகத்தில் மோத,அவனை அவன் ரசித்தானோ இல்லையோ, அவள் நன்றாக ரசித்தாள்.அவளறியாமல் மீண்டும் மீண்டும் பார்வை அவனிடமே சென்றது.

அந்த நள்ளிரவு வேலைக்கு, சூடான அந்த டீ அமிர்தமாய் இறங்கியது அவளுக்கு.வருணும் ஏதோ ஒரு வகையில் அவளை பாதித்தான்.

வாழ்க்கை இனி இவர்களுக்கு வைத்திருப்பது என்ன என்று இருவருக்கும் தெரியாது.ஆனால் விதியின் விளையாட்டில் அனைவரும் கைப்பாவைகளே. அதில் இவர்களும் அடக்கம்.

ஒருத்தித் தன்னை ரசிப்பதை அறியாத வருணின் மனம் முழுதும் யோசனைகள் மட்டுமே.அனைத்திற்கும் தெளிவைத் தேடி ஓடிக் கொண்டிருக்கிறான்.

“கிளம்பலாமா..?” என்றான்.

“கிளம்பலாம்...!” என்றாள்.

இருவரின் பயணமும் அந்த இடத்தில் இருந்து மீண்டும் தொடங்கியது.
 
உங்களுடைய "காதல் நீதானே
காவலனே"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
உமா சரவணன் டியர்
 
Last edited:
வருண் கிருஷ்ணாவும் கார்த்திக்கும் ப்ரெண்ட்ஸ்ஸா?
ஆனால் கார்த்திக்கை வருண் ஏன் துரோகின்னு சொல்லுறான்?
வருண் காப்பாற்றிய சக்தி பிரியதர்ஷினிதான் ஹீரோயினா?
பேர் சூப்பரா இருக்கு
 
Last edited:
Top