Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் நீதானே காவலனே..! - 2

Advertisement

Uma saravanan

Tamil Novel Writer
The Writers Crew
காவல் 2:

“சென்னைல எங்க போகணும்..?” என்றான் வருண்.லேசான தூக்கத்திற்கு சென்று விட்டாள் போலும்.சட்டென்று எழுந்த மாதிரி தோன்றியது அவனுக்கு.

அவள் இடத்தின் பெயரைச் சொல்ல,மனதிற்குள் குறித்துக் கொண்டான் வருண்.சென்னையை நெருங்க நெருங்க, பேய் மழை பெய்து கொண்டிருந்தது.

‘என்ன மழை இப்படி வெளுத்து வாங்குது.எப்ப ரீச் பண்றது..?’’ என்று மனதிற்குள்ளேயே நினைத்துக் கொண்டான் வருண்.
“என்ன சார் இப்படி மழை பெய்யுது..?” என்றாள் சக்தி.

“எஸ்..! இப்போதைக்கு மழை குறையறதுக்கான வாய்ப்பு இல்லை.முன்னாடி ரோடே தெரியலை..அப்படி ஒரு தண்ணீர்..!” என்றான்.

நள்ளிரவு வேலை என்பதால் சாலையில் வாகனங்களின் எண்ணிக்கை குறைவாகத்தான் இருந்தது.வருண் வண்டியை ஒரு ஓரமாக நிறுத்தினான்.

“என்னாச்சு சார்..?” என்றாள் சக்தி.

“வெயிட்..!” என்றவன், தன் போனை எடுத்து, எதிர்புறம் யாருக்கோ முயற்சி செய்ய,லைன் கிடைக்கவில்லை.மீண்டும் மீண்டும் அவன் முயற்சி செய்து கொண்டிருந்தான்.சக்திக்கோ மனதில் கொஞ்சம் பயம் வரத் தொடங்கியது. சாலையோர விளக்குகள், ஒளியிழந்து இருள் சூழ்ந்திருந்தது.

எதிர்புறம் இப்போது லைன் கிடைத்து விட்டது போல.வருண் பேசத் தொடங்கிருந்தான்.

“மாமா..! நான் சென்னைக்கு பக்கத்துல வந்துட்டேன். பட் ஹெவி ரெயின்..” என்றான் வருண்.

“டிரைவர் எங்க வருண்..?” என்றான் முரளி எதிர்புறம்.

“செல்ப் டிரைவிங் தான்..!” என்றான் வருண்.

“இவ்வளவு அலைச்சல் தேவையா வருண். பேசாம டிரைவரை காரை எடுக்க சொல்லியிருந்தா, கொஞ்சம் ரெஸ்ட் எடுத்திருப்ப.ஏன் இப்படி ரொம்ப உடம்பை அலட்டிக்கிற..?” என்றான் முரளி.

“மாம்ஸ் பிளீஸ்..!” என்றான்.

“சரி ஓகே..! இப்ப நான் என்ன பண்ணனும்..?” என்றான் முரளி.

“நீங்க ஒன்னும் பண்ண வேண்டாம். எப்படியும் மார்னிங் செவன்க்குள்ள ரீச் ஆகிடுவேன்.அதுவரைக்கும் அம்மாவை நீங்க தான் சமாளிக்கணும்..!” என்றான் வருண்.

“நல்லா வருவடா..! எப்பப் பார்த்தாலும் கஷ்ட்டமான டாஸ்க்கே குடுத்தா எப்படிடா..? நானும் மனுஷன் தான..? பாரு..யாரோ எப்படியோ போங்கன்னு.. உங்க அக்கா இங்க ஆழ்ந்த உறக்கத்துல இருக்கா.இந்நேரம் சொர்க்கத்துக்கே போயிருப்பா..!” என்றான் முரளி.

“மாம்ஸ்..! இப்ப இது ரொம்ப முக்கியமா..?” என்றான் வருண்.

“சரி பார்த்துவா வருண்..! இடைல நிறைய பாலம் டேமேஜ்.கவனமா வா.இங்க நான் சமாளிச்சுக்கறேன்..!” என்றான் முரளி.
“ஊப்” என்று மூச்சு விட்டவன், நிம்மதியாக சீட்டில் தலை சாய..

அவனிடம் எதுவும் பேசவும் முடியாமல், கேட்கவும் முடியாமல் தவிப்புடன் அவன் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள் சக்தி.

“இப்ப எதுக்கு என் முகத்தையே பார்த்துட்டு இருக்க...? அங்க என்ன எழுதி ஒட்டியிருக்கு..?” என்றான் வருண்.

“இல்ல எதுக்கு பொய் சொன்னிங்க..? வர லேட் ஆகும்ன்னு..?” என்றாள் சக்தி.

“நீ என்ன லூசா..? வெளிய பார்த்த தானே..மழை எப்படி பெய்யுதுன்னு. இதுல நீ சொன்ன அட்ரஸ்ல போய் உன்னை விட்டுட்டு, நான் என் வீட்டுக்குப் போக, விடிஞ்சிடும்..!” என்றான் சலிப்பாய்.

“ஐயோ சார்..! அங்க வரைக்கும் ஏன் நீங்க வந்துகிட்டு. உங்களுக்குத் தேவையில்லாத அலைச்சல். என்னை ஒரு பஸ் ஸ்டாப்ல விட்ருங்க. இல்லைன்னா ஓலா புக் பண்ணி நான் போய்க்கிறேன்..!” என்றாள்.

“இந்த மழையில எந்த ஓலாவும் வராது.அப்படியே வந்தாலும் இந்த டைம்ல தனியா போறது அவ்வளவு சேப்டி கிடையாது. இங்க வரைக்கும் கூட்டி வந்துட்டு, இப்படியே விட்டுட்டு போய்,அப்பறம் நீ போய் சேர்ந்தியா..? இல்லையான்னு நான் யோசனை பண்ணிக்கிட்டு இருக்க முடியாது. பெட்டர்,நானே டிராப் பண்றது தான்..!” என்றான்.

“உங்களுக்கு எதுக்கு சிரமம்..!” என்றாள்.

“ஜஸ்ட் ஷட்அப்.கொஞ்ச நேரம் வாயை மூடுறியா..?எனக்கு வேலை வெட்டி இல்லையா..?எதுக்கு சொல்றேன்னு புரிஞ்சுக்க டிரை பண்ணு.இல்லையா, கம்முன்னு உட்காரு.உயிரை வாங்காத..!” என்றான் சலிப்பாய்.வார்த்தைகள் அவனையும் மீறி வந்து கொண்டிருந்தது. உடல் கொஞ்சம் ஓய்வுக்கு ஏங்கியது என்னவோ உண்மை. அவனுக்கு, அந்த ஏக்கம் கோபமாய் வந்து கொண்டிருந்தது.

“சாரி சார்..!” என்று அமைதியாய் சொன்னவள், கண்களை இறுக மூடி, சீட்டில் தலை சாய்ந்தாள்.

“இதுக்கு முன்னாடி சென்னை வந்திருக்கியா..?” என்றான்.

“ஏன் கேக்குறிங்க..?” என்றாள்.

“இல்லை..! சென்னை உனக்கு பரீட்சயம் அப்படின்னா...மழைய பெய்யும் போது இங்க நிலவரம் எப்படி இருக்கும்ன்னு தெரியும். நீ எதுவும் தெரியாத மாதிரியே முகத்தை வச்சிருக்கியே..? அதான் கேட்டேன்..!” என்றான்.

“இப்போ தான் முதன் முறையா போறேன்..!” என்றாள்.

“எந்த தைரியத்தில் இப்படி தனியா கிளம்பி வந்திருக்க..?” என்றான்.

“சென்னை வரதுக்கு தைரியம் வேற தனியா வேணுமா சார்..? ஒரு போலீஸ் ஆபீசர் நீங்களே இப்படிப் பேசலாமா..?” என்றாள்.

“போலீசா இருக்குறதால தான் கேட்குறேன்.உன்னைப் பார்க்கும் போதே தெரியுது ஏதோ பிரச்சனைன்னு.தனியா வேற கிளம்பி வந்திருக்க.அதான் யோசனையா இருக்கு..!” என்றான்.

“பிரச்சனை எல்லாம் ஒன்னும் இல்லை சார்..! இங்க பிரண்ட் ஒருத்தி இருக்கா. அவளைப் பார்க்கத்தான் போயிட்டு இருக்கேன்..!” என்றாள்.

“அவங்களுக்கு இன்பார்ம் பண்ணிட்டியா..?” என்றவனின் கேள்வியில் திகைத்தாள்.

‘அவன் கேட்பதும் சரிதானே...! அவள் எந்தவித முன் தகவலும் தரவில்லை.போனிலாவது தொடர்பு கொண்டு பேசியிருக்கலாம். இப்படி எதுவும் செய்யாமல் எந்த தைரியத்தில் கிளம்பி வந்தேன் நான்..’ என்று அவள் மனதிற்குள் மருக,

“நான் கேட்டதுக்கு பதில்..” என்றான் வருண்.

“இன்பார்ம் பண்ணிட்டேன் சார்..!” என்று தன்னெஞ்சறிய பொய்யுரைத்தாள் சக்தி.

“பைன்..!” என்றவன் மொபைலில் எதையோ பார்த்துக் கொண்டிருக்க, இதுவரை பெரிதாக தோன்றாத பிரச்சனைகள் எல்லாம் இப்போது பூதாகரமாகத் தோன்றியது சக்திக்கு. முகம் கொஞ்சம் வெளுத்துப் போக, அவளின் ஒவ்வொரு அசைவுகளையும் உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருந்தான் வருண்.

“எதுக்கு முகம் எல்லாம் ஒரு மாதிரி இருக்கு..?” என்றான்.

“ஒன்னும் இல்லை சார்..!” என்றவள் ஏதோ சொல்ல வந்து, பின் வாயை மூடிக் கொண்டாள். அவளை யோசனையுடன் பார்த்துக் கொண்டிருந்தான் வருண்.அது குற்றவாளியை பார்க்கும் பார்வையாகவே இருந்தது.

மழையின் வேகம் சிறிது மட்டுப் பட்டதைப் போன்று தோண, காரை எடுத்தான் வருண்.இனி எதுவும் கேட்க மாட்டான் என்று சக்தி நினைத்திருக்க,

“எங்க இருந்து வரதா சொன்ன..?” என்றான்.

“திண்டுக்கல்..!” என்றாள்.

“சொந்த ஊர் திண்டுக்கல் தானா...? அப்படின்னா என்னைத் தெரிஞ்சிருக்கணுமே..!” என்றான்.

“சொந்த ஊர் கோயம்புத்தூர் பக்கத்துல சார்.திண்டுக்கல் எனக்கு சொந்த ஊர் எல்லாம் கிடையாது..!” என்றாள் வேகமாய்.
“அப்பறம் எப்படி.?” என்று அவன் சந்தேகமாய் பார்க்க,

“சார்..! நான் கொடைக்கானல்ல, ஒரு கான்வென்ட் ஸ்கூல்ல டீச்சரா இருக்கேன்.இந்த விளக்கம் போதுமா சார்..!” என்றாள்.
“கோயம்புத்தூர் பக்கம் இல்லாத ஸ்கூலா..? இங்க வந்து வொர்க் பண்றிங்க...?” என்றான்.

“சென்னைல இல்லாத போஸ்ட்டிங்கா...ஏன் சார் திண்டுக்கல் எஸ்பியா வந்திங்க..?” என்றாள்.

வருண் அவளை கடுமையாக முறைக்க,

“கோபம் வருதுல்ல சார்..! அப்ப எனக்கும் அப்படித்தான் கோபம் வரும். நான் எங்க வேலை பார்க்கணும், எங்க வேலை பார்க்கக் கூடாதுன்னு எனக்குத் தெரியும் சார். அது எதுக்கு உங்களுக்கு..!” என்று படபடவென பொரிந்து தள்ளினாள் சக்தி.

“ஓகே ..! கூல்..!” என்றான் வருண். அதற்கடுத்து அவன் வாயைத் திறக்கவேயில்லை.

‘சக்தி உளறிக் கொட்டாத. வாயைக் கொஞ்சம் அடக்கி வாசி..! எதுக்கு தேவையில்லாம டென்சன் ஆகுற..?’ என்று மனசாட்சி கேள்வி கேட்க, தன்னைத் தானே அடக்கிக் கொண்டாள் சக்தி.

ஆழ்ந்த அமைதி அங்கே குடிகொள்ள,பல்வேறு மனப் போராட்டங்கள் இருவருக்குள்ளும்.நேரம் அதிகாலையை நெருங்கிக் கொண்டிருக்க,

“உன் பிரண்ட்க்கு கால் பண்ணி...எந்த ஸ்ட்ரீட்ன்னு கேளு..!” என்றான்.

சக்தியும் வேகமாய் போனை எடுத்து தன் தோழிக்கு அழைக்க, அங்கே ரிங் போய்க்கொண்டே இருந்தது. யாரும் எடுக்கவில்லை.அவள் மீண்டும் மீண்டும் அழைக்க, எதிர்புறம் எந்த பதிலும் இல்லை.அவள் யோசனையுடன் போனைப் பார்க்க, அவளைப் பார்த்தான் வருண்.
“என்னாச்சு..?” என்றான்.

“எடுக்கலை..!” என்றாள்.

“இன்பார்ம் பண்ணிட்டேன்னு சொன்ன..?” என்றவன் அவள் முகத்தைப் பார்க்க..“தூங்கிட்டு கூட இருக்கலாம். இன்னொரு தடவை டிரை பண்ணு..!” என்றான்.

சக்தி மீண்டும் அழைக்க, இந்த முறை போன் எடுக்கப்பட்டது.ஆனால் அவள் தோழியல்ல.ஒரு ஆணின் குரல் கேட்டது.
“ஷிவானி இல்லையா..?” என்றாள் சக்தி.

“நீங்க யாரு..?” என்று எதிர்புறம் கேட்க,

“நான் ஷிவானி பிரண்ட்..!” என்றாள் தயக்கத்துடன்.

அவள் தயக்கத்துடன் பேசுவதைக் கண்ட வருண், பட்டென்று போனை வாங்கி காதில் வைத்தான்.

“பிரண்டா..எங்க இருந்துமா பேசுற...? உடனே இங்க வாம்மா..!” என்று எதிர்புறம் பேசிக் கொண்டிருக்க, நிமிடத்தில் வருணுக்கு புரிந்தது.
“ஸ்ட்ரீட் நேம் சொல்லுங்க..!” என்றான் வருண்.

“நீ யாரு..?” என்று கேட்டுவிட்டு, வருனுக்கான பதிலையும் சொல்லி இருந்தார் எதிர்புறம் பேசியவர்.

போனை ஆப் செய்து அவளிடம் கொடுத்தவனின் முகம் இறுகியிருந்தது. அவள் மெதுவாக போனை வாங்கியபடி அவனைப் பார்க்க, அவனின் முகத்தைக் கண்டு திகைத்தாள்.

“ச..சார்..!” என்று அவள் இழுக்க,

“எனக்கு பொய் சொல்றது பிடிக்காது..!” என்று கடுமையுடன் சொன்னவன்.. எதுவும் பேசவில்லை.அடுத்த அரைமணி நேரத்தில் ஷிவானியின் வீட்டு முன்பு சென்று காரை நிறுத்தினான் வருண்.சக்தி அவனைத் தயக்காமாய் பார்த்துக் கொண்டே இறங்க, அவனுக்கு அவ்வளவு பொறுமை இல்லை போலும். பட்டென்று இறங்கி, வீட்டினுள் சென்றான்.

“இவனுக்கு ஷிவானியைத் தெரியுமா..?” என்று யோசித்தபடி அவளும் பின்னே செல்ல,அப்போது தான் கவனித்தாள் அங்கு நின்றிருந்த காக்கி உடைகளை.

“போலீஸ் எதுக்கு நிக்குறாங்க..?” என்று நினைத்த சக்திக்கு உடல் லேசாக நடுங்கத் தொடங்கியது.மெதுவாய் உள்ளே செல்ல, அங்கே நடு ஹாலில் ஷிவானியின் உடல் கிடத்தப்பட்டு இருந்தது.அதைப் பார்த்து அதிர்ந்த சக்தி, கையில் இருந்த ஹான்ட் பேக்கை கீழேப் போட்டவளாய்...

“ஷிவானிஈஈஈ” என்று கத்தியபடி அவள் அருகே செல்ல, அவளைத் தன் கைவளைவுக்குள் கொண்டு வந்து நிறுத்தினான் வருண்.

“விடுங்க சார்...!எப்படி சார்..! இவளை இப்படி பார்க்கவா..நான் அங்க இருந்து வந்தேன்..!” என்று சக்தி கதற...

“ஷ்..சக்தி..! கொஞ்சம் அழுகையை நிறுத்து...!” என்றான் வருண்.

“எப்படி சார்..! எனக்குன்னு இருந்த ஒரு பிரண்ட்..அவளும் இப்படிப் பொணமா கிடக்குறதைப் பார்த்தும் எப்படி சார் நான் அழுகாம இருக்க முடியும்..!” என்று கதறினாள்.

“நீ கொஞ்சம் அமைதியா இருந்தா தான்...என்ன நடந்ததுன்னு விசாரிக்க முடியும்..!” என்றான்.

“என்னாச்சு..?” என்றான் அங்கிருந்த போலீசிடம்.

“நீங்க..!” என்று அந்த போலீஸ் இழுக்க,

“ஐம் வருண் கிருஷ்ணா ஐபிஎஸ்..” என்றான்.

“சாரி சார்..! குட் மார்னிங் சார்..!” என்றார் அந்த போலீஸ்.

“என்னாச்சு..?” என்றான் மீண்டும்.

“ஹேங்கிங் சார்..! எப்படியும் இறந்து 5 மணி நேரமாவது இருக்கும் சார்..!” என்றார் அவர்.

“கூட யாருமில்லையா..?” என்றான்.

“கல்யாணம் ஆகி ஒரு மாசம் தான் சார் ஆகுது. ஹஸ்பண்ட் ஒரு வாரத்துக்கு முன்னாடி ஒரு ரோட் ஆக்சிடண்ட்ல இறந்துட்டார் சார்.
அந்த துக்கம் தாங்க முடியாம தற்கொலை பண்ணிக்க போறதா, லெட்டர் எழுதி வச்சுட்டு தூக்குல தொங்கி இருக்காங்க சார்..!” என்றார் அவர்.

“ஷிவானி ஹஸ்பண்ட் இறந்துட்டாரா..?” என்று அதிர்ந்தாள் சக்தி. அவளும் ஒரே நாளில் எத்தனை அதிர்ச்சியைத் தான் தாங்குவாள்.
“ரிலேஷன் யாராவது..?” என்றான் வருண்.

“ஷிவானிக்கு யாருமில்லை..” என்றாள் சக்தி.

“அவங்க ஹஸ்பண்ட்க்கு..” என்றான் வருண்.

“ரெண்டு பெரும் லவ் மேரேஜ். அந்த அண்ணா வீட்ல ஏத்துக்கலை. சோ தனியா தான் இருந்தாங்க..!” என்றாள் சக்தி.

“ஓகே..! பார்மாலிடிஸ் படி என்ன பண்ணணுமோ பண்ணுங்க..!” என்றான் வருண். ஆம்புலன்ஸில் பாடியை ஏற்றும் வரை சக்தியின் அழுகை குறைந்தபாடில்லை.

வருணுக்கு எங்கோ எதுவோ நெருடுவதைப் போல் இருந்தது.

“ஷிவானி, தன்னோட ஹஸ்பண்ட் இறந்ததை உனக்கு சொல்லலையா..?” என்றான் கேள்வியாய்.

“இல்ல சார்..!” என்றாள் சக்தி.

“பெஸ்ட் பிரண்ட்ன்னு சொல்ற...? அப்பறம் எப்படி..?” என்று அவன் ஏதோ கேட்க வர...

அவனைக் கையெடுத்துக் கும்பிட்ட சக்தி..”எனக்குத் தெரியாது சார்..! உங்க போலீஸ் மூளைய வச்சு என்னை டார்ச்சர் பண்ணாதிங்க.நான் ஏற்கனவே நொந்து போயிருக்கேன்..!” என்றாள்.

“பாடியை போஸ்ட்மார்ட்டம் முடிச்சு தான் தருவாங்க.வாங்குறதுக்கு ஆள் இருக்கா...?” என்றான்.

“இல்லை..” என்பதைப் போல் தலையை ஆட்டினாள்.

“உங்களுக்குத் தகவல் கொடுத்தது யாரு..?” என்றான் வருண்.

“பக்கத்து வீட்டுக்காரங்க சார்..!” என்றார் அவர்.

“இப்படி மழை பெய்யும் போது, அவங்களுக்கு எப்படி தெரிஞ்சது, இவங்க தூக்கு மாட்டினது..!” என்றான் வருண் யோசனையாக.

“சார் ரெண்டு வீட்டுக்கும் இடையில் ஒரு சின்ன கேப் தான் சார். இவங்க மாடி போர்ஷன்ல குடி இருந்து இருக்காங்க.எப்பவும் இவங்க பெட்ரூம் ஜன்னலைத் திறக்க மாட்டாங்களாம் சார்.இன்னைக்குன்னு பார்த்து ஜன்னல் கதவு எல்லாம் திறந்திருக்கு சார்.எதேச்சையா அவங்க வீட்ல இருக்குற பால்கனி டோரை சாத்த வந்தவங்க பார்த்திருக்காங்க சார்..!” என்றார்.

“ஷுரா..”

“ஷ்யூர் சார்..! அவங்க வீட்ல இருந்து பார்த்தா, எல்லாமே கிளியரா தெரியுது சார். செக் பண்ணிட்டோம்..!” என்றார் அவர்.

“வீட்டு ஓனர் யாரு..?” என்றான்.

“அவங்க இங்க இல்லை சார். மேல் போர்ஷன் மட்டும் வாடகைக்கு விட்ருக்காங்க சார்..!” என்றார்.

“ஓகே..! ஏதாவது ஒண்ணுன்னா..இந்த நம்பருக்கு காண்டாக்ட் பண்ணுங்க..!” என்றவன் பல சந்தேகங்களுடன் வெளியே வந்தான்.சக்திக்கு உடம்பில் கொஞ்சம் கூட சக்தி இல்லை. அடுத்தடுத்து நடந்த சம்பவங்களால் துவண்டு போயிருந்தாள்.
தூக்கமின்மை வேறு அவளைப் பாடாய்ப் படுத்தியது.

“தென் மிஸ்.சக்தி..! இப்ப என்ன பண்ணப் போறீங்க..?” என்றான்.

“தெரியலை சார்..!” என்றாள்.

“ஷிவானி..!” என்று அவள் இழுக்க,

“இன்னைக்கு சண்டே. போஸ்ட்மார்ட்டம் பண்ண டைம் ஆகும். போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட் வராம எதுவும் சொல்ல முடியாது.நீ அவங்களுக்கு சாங்கியம் செய்ய நினைச்சா மின் மயானத்துல பண்ணலாம்..” என்றான்.

“நானா..?” என்றாள்.

“அவங்களுக்கு வேற யாருமில்லைன்னு நீ தான சொன்ன..?” என்றான்.

“ஆமா..!”

“அப்போ நீ தான் பண்ணனும். அது கட்டாயமும் இல்லை.எல்லாம் அவங்களே பார்த்துப்பாங்க..!” என்றான்.

“இப்போ நீ எங்க போகப் போற...?” என்றான்.

“தெரியலை சார்..!” என்றாள்.

“பெட்டர் நீ கொடைக்கானல் போறது..!” என்றான்.

“ம்ம்...” என்றாள் வார்த்தையை வெளியே விடாமல்.

“ஓகே..! கம்..!”” என்றபடி அவன் காரை எடுக்க, அதற்குள் நான்கு முறை அழைத்திருந்தார் நித்யா.

“இன்னைக்கு அங்க என்ன வெடி வெடிக்க காத்திருக்கோ...!”என்று எண்ணியவன் வேகமாக செல்ல,அருகில் இருந்தவள் முகத்தில் சோகம் அப்பிக் கிடந்தது.கண்களை மூடி தலை சாய்த்திருந்தவளை, அப்பொழுது தான் நன்றாகப் பார்த்தான்.

அவள் போட்டிருந்த வெள்ளை நிற சுடிதார் சற்று கசங்கி, தலை முடி கலைந்து, அங்கும் இங்கும் பரப்பிக் கிடக்க, மூடியிருந்த விழிகள் அவள் உறங்கவில்லை என்பதைக் காட்டியது.

அவளின் பளிங்கு முகம் அழுததால் சிவந்திருந்தது.வதங்கிய கொடியாய் இருந்தவளைப் பார்த்தவனின் மனம் ஒரு நிமிடம் தடுமாறினாலும், அடுத்த நிமிடமே சுதாரித்துக் கொண்டான்.

“இவ நார்மலா இல்லை வருண். இவளுக்கு ஏதோ பிரச்சனை இருக்கணும். இல்லை ஏதாவது பிரச்சனையில் சிக்கி இருக்கணும்...!” என்று அவனின் போலீஸ் மூளை விடமால் அவனுக்கு அறிவுறுத்தியது.

வண்டியை நேராக அவன் வீட்டிற்கு விட, அதைக் கூட கவனிக்காமல் இருந்தாள் சக்தி.

சில உள்ளுணர்வுகள் நமக்கு உண்மையை மட்டுமே போதிக்கும்.ஆனால் சில சமயங்களில் நாம் அதை அலட்சியப் படுத்தி விடுவோம். பிறகு வருத்தப்படுவோம். அதுவே சக்திக்கும் நடந்திருந்தது.அவள் ஆற்றிலிருந்து தப்பித்து, கடலில் சிக்கியிருந்தாள்.மீள முடியா ஆழத்தில்.

மூடியிருந்த அவள் விழிகளில் இருந்து மீண்டும் கண்ணீர் வழிய, அதைப் பார்த்த வருணுக்கு பாவமாய் இருந்தாலும், ஒரு பக்கம் எரிச்சலாய் இருந்தது.

“இங்க பார்..! இப்ப எதுக்கு இப்படி அழுது வடியிற..?” என்றான்.

அவனைத் திரும்பிப் பார்த்தவள், எதுவும் பேசாமல் முகத்தைத் திருப்பிக் கொண்டாள்.

“என்ன பண்ணிட்டு இருக்க வருண்..? நீ எதுக்கு சென்னை வந்த..? இப்ப என்ன பண்ணிட்டு இருக்க..?இவ யாருன்னே தெரியாது. எதுக்கு இவளைக் கூட வச்சுகிட்டு சுத்திட்டு இருக்க...? இதெல்லாம் தேவையா உனக்கு..? இவளுக்கு டிரைவர் வேலை வேற பார்த்துட்டு இருக்க..!” என்று மனசாட்சி இடிந்துரைக்க,

“இவ யாருமில்லை எனக்கு. ஆனா நான் ஒரு பொறுப்பான போலீஸ் அதிகாரி. அப்படி எல்லாம் விட்டுட்டு போய்ட முடியாது..” என்று அவன் பதில் சொல்ல,

“முடியாதுன்னா, யாரையாவது கூப்பிட்டு பொறுப்பை ஒப்படை.நீ ஏன் பண்ற..?” என்று மனம் கேட்க,

“என்னை நம்பி வந்த பொண்ணு..!” என்றான் மனதிடம்.

“உன்னை நம்பி வந்த பொண்ணு தான் சரி..! அது வழியில் வந்த பொண்ணா..? இல்லை உன் வாழ்க்கையில் வந்த பொண்ணா..?” என்று மனம் கேட்க, திகைத்தான் வருண்.

அவன் சட்டென்று சக்தியைப் பார்க்க, அவளும் அப்போது அவனைத்தான் பார்த்துக் கொண்டிருந்தாள்.

வருணின் பார்வையில் இருந்து விழிகளை எடுக்க முடியாமல் திகைத்தாள் சக்தி.




 
Top