Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வண்ணங்கள் 10

Advertisement

TNWContestWriter098

Well-known member
Member
அத்தியாயம் - 10


யார் கண்ணிலும் சிக்காமல் தப்பிவிட்டோம் என்ற குதூகலத்தோடு கனவில் ஆழ்திருந்த கண்மணியை இரு விழிகள் கவனித்துக் கொண்டிருக்க ... அவள் ஒருபுறம் திரும்பி படுக்கவும் அவளுக்கு நேர் எதிரே தெரிந்த அந்த விழிகளை பார்த்ததும் அவளை சுற்றி இருந்த மாயவலை அறுந்து விழுந்து மனம் திடுக்கிட்டது.

சட்டென்று கனவு கலைந்தது போல் இருந்தது கண்மணிக்கு.
சோபிதாதான் விழித்து இவளை பார்த்துக் கொண்டிருந்தாள்.
"என்னக்கா ..எங்க போன ?" மெல்லிய குரலில் விசாரித்தாள் இவள் அருகே படுத்திருந்த சோபிதா.

" ஷ் ! " என்று இதழ்களின் மேல் ஒரு விரல் பதித்து அவளை மௌனமாக்கியவள்...மெல்ல அவளது செவியருகில் வந்து "சீக்ரெட் " என்றாள்.

"எனக்கும் சொல்லுக்கா ..நான் யார்கிட்டேயும் சொல்ல மாட்டேன்" அதே கிசு கிசு குரலில் சொன்ன சோபிதாவிற்கு தன்பிரியத்துக்குரிய அக்காவுடன் ரகசியத்தை பகிர்ந்து கொள்ள ஆவல்!

காதல் கொண்ட மனமும் அத்தகையதுதானே!

"அது..தாமரை அத்தை இருக்காங்களே அவங்க வீட்டுக்கு ஒரு மாமா வந்திருக்காங்க.. அவங்களை தான் பாத்துட்டு வரேன். நீ யார்கிட்டேயும் சொல்ல கூடாது."

தன்னை நம்பி ரகசியம் பகிர்ந்த அக்காவின் நம்பிக்கைக்கு பாத்திரமாக "நான் யார்கிட்டேயும் சொல்ல மாட்டேன் .அக்கா அவர் தான் நம்ம மாமாவா ?"
நம்ம மாமாவா என்ற கேள்வியிலேயே மங்கையவளின் முகம் நாணம் பூச .."அக்கா ..சிவா கிட்ட மட்டும் சொல்லவா ?" எனவும் தூக்கி வாரி போட்டது கண்மணிக்கு.

"யாரடி அது சிவா ?"

"என் நாய்க்குட்டிக்கா" என்றதும் போன உயிர் திரும்ப வந்தது கண்மணிக்கு.
அதற்குள் யாரோ உள்ளிருந்து வெளியே வரும் அரவம் கேட்க.. தன் அன்பு தங்கையை அணைத்தபடி கண்களை இருக்க மூடி தூங்குபவள் போல் படுத்துக் கொண்டாள்.
அச்சிறுமியும் அந்த நாடகத்தில் பங்கு கொள்ள ..
வந்தது சாவித்ரி ..!

"ஏய் எல்லாரும் எந்திரிங்க ..பொம்பள பிள்ளைங்க இப்படியா விளக்கு வைக்கிற வேளையில தூங்குவீங்க? எந்திரிங்கடி" என்று பாய ..மெல்ல கொட்டாவி விட்டபடி ஒவ்வொருவராக எழுந்தனர்.
"அம்மா எப்பவுமா தூங்குறோம் ? லீவுக்கு வந்ததால பிள்ளைங்க தூங்குது. விடுங்களேன் " என்று சலித்தபடி எழுந்தாள் சங்கீதா. அவளும் இவர்களை போல் சில வருடங்களுக்கு முன் துள்ளித் திரிந்தவள் தானே !
கல்லூரி முடிக்கும் முன்னாலே திருமணம் ..டிஸ்கன்டின்யூ செய்துவிட்டாள்..பிறகு உடனுக்குடன் இரு பிள்ளைகள் ! தடைபட்ட படிப்பு தடைப்பட்டது தான். இப்போது அவள் கணவன் அனுமதித்தாலும் மாமியார் விட மாட்டார். பிள்ளைகளை பார் போதும் என்று விடுவார்.கணவன் பிள்ளைகளை தாண்டி வேறு உலகமே பெண்களுக்கு இருக்காது..இருக்கவும் கூடாது என்று நினைப்பவர்!
காலம் வெகுவாக மாறிவிட்டாலும் இப்போதும் பலர் அப்படித்தானே!

பொருளாதார தேவை இல்லையெனில் பெண்கள் ஏன் வேலை பார்க்க வேண்டும் என்று தான் யோசிக்கின்றனர். ஆண்களை போலவே பெண்களுக்கும் தங்களுக்கான அடையாளமும் முகவரியும் தேவை என்பது யாருக்கும் புரிவதேயில்லை.
ஒவ்வொருவராக முகம் கழுவி வர காபி பலகாரம் உண்டு மறுபடியும் ஒரு அரட்டை கச்சேரி!
வடிவு தான் எல்லாரையும் அதட்டி கிளப்பினார்.."பிள்ளைகளா கிளம்புங்க ..வீட்டில போய் விளக்கேத்தனும்" என்று அனைவரையும் கிளப்பியவருக்கு இரண்டு நாட்களுக்கு பிறகு பொலிவோடு திகழும் தன் பெண்ணின் முகம் நிம்மதியை தந்தது.அந்த நிம்மதிக்கு ஆயுளோ அற்பமானது என்று அவர் அப்போது அறியவில்லை !


வீட்டிற்கு வந்து விளக்கேற்றியவர்கள் மறுபடி கிளம்பி கடைத்தெருவுக்கு சென்றனர் ..

வடிவும் சங்கரியும் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு கிளம்பினர்.
திருவிழாவுக்கு பிள்ளைகள் பெரியவர்கள் அனைவருக்கும் புதுசு எடுத்துக் கொடுப்பது சிங்காரவேலனின் பழக்கம் .

உள்ளூர் கடை என்பதால் முதலாளியும் தெரிந்தவர் தான் ...மரியாதையும் இவர்களுக்கு தனியாக இருக்கும்.

வடிவும் சங்கரியும் புடவைகள் பிரிவில் நுழைந்து விட பிள்ளைகள் தங்களுக்கு பிடித்த உடைகளை அலசி கடையையே புரட்டிக் கொண்டிருந்தனர்.

அந்நேரம் தான் கடையினுள் நுழைந்தான் கதிர்!

உடை வாங்கி வருவதாக தன் அய்யாவிடம் சொல்லிவிட்டு வந்தான் அல்லவா ..இப்போது வெறும் கையோடு போனால் நிறைய கேள்விகள் வரும். வழியில் ஒரு கடையில் டீ குடித்தவன் அப்படியே கடைத்தெருவில் நடந்து சுற்றி பார்த்துக் கொண்டிருந்தான்.

இது சற்று பெரிய கடையாக தெரிய ..உள்ளே நுழைந்திருந்தான்.

பார்த்ததுமே அவனது நடை உடை பாவனை எல்லாரையும் கவர்ந்திழுக்கும் ..இப்போதும் அப்படியே!
அவ்வளவு பெரிய கல்லூரியிலேயே எல்லோராலும் கவனிக்கப் படுபவன்..இந்த சிறிய ஊரில் தனித்து தெரிந்தான்.

நெடுநெடுவென்ற உயரமும் கம்பீரமான தோற்றமுமாய் இவன் உள்ளே நுழைந்ததும் வடிவுடன் பேசி அவருக்கு துணிமணிகளை காண்பிக்க சொல்லி விற்பனைப்பெண்ணிடம் உத்தரவிட்டு கொண்டிருந்த கடை முதலாளி "இதோ வந்திர்றேனுங்கம்மணி ..நீங்க பாத்துட்டிருங்க " என்றபடி இவனை நோக்கி வந்தார். வாசலுக்கு அருகிலேயே புடவை பிரிவு இருக்க ..சற்று உள்ளே சுடிதார் பகுதியில் நின்றிருந்தனர் இளையவர்கள்!
உள்ளிருக்கும் பெண்களை பார்த்தவன் வடிவை கண்டுகொண்டுவிட்டான் ..முன்தினம் தான் கோவிலில் பார்த்திருந்தானே!
சற்று முன்னேயே வந்துவிட்டு போயிருக்கலாம் ..இவர்கள் கண்ணில் பட்டிருக்க வேண்டாமே என்று ஒரு மனம் நினைக்க ஒரு வேளை தன்னவளும் வந்திருப்பாளோ என்ற எண்ணமும் ஒருங்கே தோன்றியது.

வேறு கடைக்கு போய்விடலாம் என்று நினைக்கையிலேயே முதலாளி இவனை பார்த்து விட்டார்.
வடிவிற்கும் அவனை பார்த்ததும் முன்தினம் தானே இந்த பையனை கோவிலில் பார்த்தோம் ..யாராக இருக்கும் என்று எண்ணிக்கொண்டிருந்ததார் .
சரி வந்தது வந்தாகி விட்டது.இனி திரும்ப முடியாது என்று நினைத்தவன் "ஷர்ட் பாக்கணும் சார் " என்றான் எப்போதும் எல்லாரையும் அழைப்பது போல்!
அவன் தன்னை சார் என்றழைத்ததில் உச்சி குளிர்ந்து போனார் கடை முதலாளி!

"வாங்க தம்பி ..என்ன பாக்கணும் ?" என்றவர் "தம்பி ஊருக்கு புதுசுங்களா ?" என்று தன் புலன் விசாரணையை ஆரம்பிக்க "ஆமாங்க ..சொக்கலிங்கம். வாத்தியாருக்கு சொந்தம் " என்று முடிக்க பார்க்க "எந்த வகையில சொந்தமுங்க ?" கேள்விகள் நீண்டன.

" வாத்தியார் வீட்டம்மாவிற்கு ஒன்னு விட்ட அக்கா மகனாம் " பக்கத்தில் நின்றிருந்த ஒரு வெள்ளை வேட்டி பதில் சொன்னார். அன்று வாத்தியார் வீட்டிற்கு வந்த ஆட்களில் அவரும் ஒருவர் . "அப்படியா .. அந்த பக்கம் சட்டை பான்ட் வேஷ்டி எல்லாம் இருக்குங்க போய் பாருங்க " என்றபடி அனுபவம் மிக்க ஒரு விற்பனையாளனை இவனுடன் அனுப்பினார்.

அவரிடம் தப்பித்தால் போதும் என்றிருந்தது கதிருக்கு ..விடு விடுவென்று உள்ளே நடந்தான்.

ஆண்களின் பகுதியில் பெரிய வீட்டு ஆண்களும் நின்றிருக்க ..இளைஞர்கள் மட்டும் தான் பெரியவர்கள் வரவில்லை ..எல்லோரும் விழா அன்று வேட்டி சட்டை தான் அணிவது என்பதால் வடிவே பார்த்து எடுத்து விடுவார். இளைஞர்கள் மட்டும் ஒவ்வொன்றாக பார்த்துக் கொண்டிருந்தனர்.


அதற்கு எதிர்புறம் பெண்கள் பிரிவு!
தங்களுக்குள் அரட்டையும் கேலியுமாக உடை பார்த்துக் கொண்டிருந்த பெண்கள் யாரும்முதலில் இவனை கவனிக்கவில்லை ..முதலில் பார்த்தது தன்யஸ்ரீ தான் ..குரலை தழைத்துக் கொண்டவள் " ஏய் கண்மணி ..ஸ்வாதி ..சட்டுனு திரும்பிப் பாக்காதீங்க ..நேத்து கோவில்ல பார்த்த ஸ்மார்ட்டி வந்திருக்கான் " எனவும் தூக்கி வாரி போட்டது கண்மணிக்கு.
குப்பென்று உள்ளுக்குள் ஏதோ பொங்கிப் பெறுக முகம் மாறாமல் காப்பது பெரும் பாடாக இருந்தது.

"யாரடி அவன் ?" என்றாள் ஸ்வாதி .
"யார்னு எனக்கெப்படிரி தெரியும் ..வேணும்னா போய் விசாரிச்சுட்டு வரவா?"
" வடிவு பெரியம்மா மட்டும் இருந்தா கூட பரவாயில்லை ..சங்கரி அத்தை வேற வந்துருக்கு, உன்னை உறிச்சி தொங்க விட்டுரும் "

"அதென்னவோ கரெக்ட்டுடி ..இந்த ஓல்ட் லேடீஸ்க்கு பயந்து சரியா சைட் கூட அடிக்க முடியல "
எப்போதும் கண்மணியின் வகுப்புத் தோழிகள் கதிரிடம் வழிவது சகஜம் தான்..ஆனால் எப்போதும் இல்லாத உரிமையுணர்வு இப்போது தோன்ற சுறுசுறுவென கோபமும் பொங்கியது உள்ளே!

"சும்மா இருக்க மாட்டிங்களாடி .. யாராவது பார்த்தா என்ன நினைப்பாங்க.? நம்மளை வேற எல்லாருக்கும் தெரியும்" என்றாள் கண்மணி.
"அதானே. யாராவது பாத்தா சங்கு தான் உனக்கு " என்று ஒத்து ஊதினாள் ஸ்வரூபா.

அவள் வந்ததிலிருந்து சுஜித்திடமே பார்வை பதித்திருந்தவள் "யாரைக்கா சொல்ற ?" என்று கேட்க சுவாதியும் கதிரை சுட்டிக் காட்டினாள்.
கதிரை ஆராய்ந்தவள்.. "நான் சொன்னதை வாபஸ் வாங்கிக்கிறேன் கண்மணி. இந்த பிகரை எப்பாடுபட்டு வேணும்னாலும் சைட் அடிக்கலாம்."

"அடிப்பாவி எங்கண்ணன் பாவம்டி. அவனுக்கு நீ துரோகம் செய்யலாமா ?"
"சைட் அடிக்கிறதெல்லாம் அந்த லிஸ்ட்ல வராது கண்மணி ..அங்க பாரு உங்கண்ணன் சுஜித்து அந்த சேல்ஸ் கேர்ள் கிட்ட எப்படி வழிஞ்சிக்கிட்டு இருக்கான்னு" என்று கூற உண்மையில் சுஜித் கொஞ்சம் பெண்களிடம் ஸீன் போடுபவன் தான்...இப்போதும் அதைத்தான் செய்து கொண்டிருந்தான்.

"கொஞ்சம் கூட யோசிக்க மாட்டிங்களாடி? யாரு என்னன்னு தெரியாம சைட் அடிக்க ஆரம்பிச்சிடீங்க?"
"பின்ன சைட் அடிக்கறதுக்கு எல்லாமா ஜாதகம் பாக்க முடியும் ? ஆமா நாங்க சைட் அடிச்சா உனக்கு ஏண்டி பொங்குது?"

"சே சே அதெல்லாம் ஒண்ணுமில்லைடி ..நம்ம ஊருக்கு வந்திருக்காரே..யாராவது தூரத்து சொந்தமா இருக்கும் ..உனக்கு அண்ணன் முறையா கூட இருக்கும் " என்று சுவாதியை பார்த்து கூற ..


"அப்ப எனக்கு மாமா முறைதானே ..நான் பாக்கிறேன் " என்று தன்னு சொல்ல .. 'எந்த பக்கம் போனாலும் கேட் போடறாளே ' என்று நினைத்தவள் "என்னவோ செய்ங்கடி " என்று மறுபுறம் திரும்பி ஒரு தாவணி உடையை எடுத்து தன் மேல் வைத்தபடி கண்ணாடி பார்க்க பின்னால் கதிரின் பிம்பம் !


உடைகளை ஆராய்வது போல் நின்றிருந்தாலும் விழிகள் என்னவோ கண்ணின் மணியானவளையே தொடர்ந்து கொண்டிருந்தன.

கதிரின் பார்வை வீச்சு விழுந்ததும் பாவைக்குள் சூரியகாந்தியாய் நாணம் பூத்தது.

அவள் ஒன்றன் பின் ஒன்றாக தன்மீது உடைகளை வைத்துப் பார்க்க ..பின்னாலிருந்த கதிரின் முகம் அதிருப்தியை காண்பிக்க.. கடைசியில் ஒரு இள நீல நிறத்தில் அரக்கு நிற பார்டர் வைத்த டிசைனர் பாவாடையும், அதற்கு தோதான அரக்கு நிற டிசைனர் பிளவுசும், இள நீல நிற தாவணியும் கண்டதும் அவன் கண்களில் மின்னல் ஒன்று வந்து போக .. அதன் வேலைப்பாடு மிகையாக இல்லாமல் மனதுக்கு இதமாக இருக்க இவளுக்கும் பிடித்து தான் இருந்தது.


அவள் அந்த உடையையே தேர்ந்தெடுத்துக் கொள்ள ..இவனும் அதற்கு தோதாக அரக்கு நிற சட்டையும், சந்தன நிற பாண்ட்டையும் எடுத்தவன் திரும்பி தன்னவளை பார்க்க அவளும் விழியசைத்து ஒப்புதல் அளிக்க சந்தோஷம் போங்க அதனை எடுத்துக் கொண்டு வேஷ்டி இருந்த புறம் செல்ல ..


இந்த நாடகத்தை இரு ஜோடி விழிகள் விடாது கவனித்துக் கொண்டிருந்தன.

கதிர் தன் உடைகளை எடுத்துக் கொண்டு பில் போடும் இடத்திற்கு செல்ல பின்னாலே ஒரு ஆண் குரல் கேட்க திரும்பிப் பார்த்தான் .
ஆதித்யனும் சூரியாவும் நின்றிருந்தனர் ..சங்கரி அத்தையின் பிள்ளைகள் இவர்கள் இருவரும் ..கண்மணியை விட சற்றே இளையவர்கள். அவர்களுக்கு மூத்த அக்கா வினிதா மணமாகி லண்டனில் இருப்பதால் இப்போது வரவில்லை.

இவர்கள் இருவருக்குமே கண்மணி மேல் மிகுந்த அன்பும் பாசமும் உண்டு!

அந்த அன்பிலும் உரிமையிலும் கதிரை சந்தேகக் கண் கொண்டு பார்த்தனர்.
"ஹல்லோ சார் !"
"ஹாய் ஹலோ " என்று பதில் முகமன் சொன்னான் கதிர்.
"உங்கள எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கே ?"

"இல்ல இதுதான் முதல் முறை இங்க வந்துருக்கேன்."
"இல்ல நான் உங்கள கண்டிப்பா பாத்துருக்கேன்.." என்று யோசித்த சூர்யா அவனை விளையாட்டு உடையில் பார்த்த ஞாபகம் வர "நீங்க பாஸ்கெட் பால் விளையாடுவீங்கல்ல " என்றான்.

"ஆமாம் எங்க காலேஜுல விளையாடியிருக்கேன். அது நீங்க எப்படி பாத்திருக்க முடியும்" அவர்களுடன் தொடர்ந்து பேசுவதா வேண்டாமா என்ற அலைப்புறுதலுடன் கதிர் கூற " எந்த காலேஜ்?" என்று மேலும் தூண்டி துருவினர் இருவரும்.


இவன் வேலை செய்யும் காலேஜ் பெயரை சொல்ல ..இது கண்மணி படிக்கும் காலேஜ் ஆயிற்றே என்று யோசித்தவர்களுக்கு புரிந்துவிட்டது. இருந்தாலும் எதுவும் காட்டிக் கொள்ளாமல் "ஓஹ்..கண்மணியை கூப்பிட வந்தப்போ பாத்திருப்பேன்னு நினைக்கிறேன்." என்றவன் "அங்கே என்ன பண்றீங்க ?" என்று மேலும் விவரம் சேகரித்தான்.


எல்லாம் அவள் மீதுள்ள அக்கறை தான்.


"ட்யூட்டர் கம் PhD ஸ்காலர் " என்று பதிலளித்தவன் எப்படி இங்கிருந்து எஸ்ஸாவது என்று யோசிக்கும்போதே தாமரையின் அழைப்பு அலைபேசியில் வர "இதோ வரேன் சித்தி "என்றபடி இவர்களிடம் கையாட்டிவிட்டு கிளம்பினான்.


'இவர்கள் என்னை தெரிந்துகொண்டு வந்து பேசினார்களா இல்லை யதார்த்தமாக பேசினார்களா என்று புரியலையே ' மனம் குழம்ப வீடு வந்து சேர்ந்தான் .


கண்மணி குடும்பத்தில் அனைவருக்கும் உடைகள் எடுத்து வீடு வந்து சேர்கையில் மணி எட்டாகியிருந்தது.





களைத்த முகத்தோடு உள்ளே நுழைந்த கண்மணியின் முகம் ஹால் சோபாவில் அமர்ந்திருந்தவரை கண்டதும் மலர்ந்து விகசித்தது.


ராஜவள்ளி அத்தைவந்திருந்தார். இவர்கள் கிளம்பி சிறிது நேரத்திலேயே வந்து விட்டவர் தன் பெரியம்மா பொன்னுத்தாயியை பார்த்து பேசிக்கொண்டிருந்தார் இவ்வளவு நேரம்.


வள்ளி, இந்துமதி, சாவித்ரி மூவரும் சமையலறையில் இருக்க ..சந்தியாவையும் சங்கீதாவையும் நலம் விசாரித்துக் கொண்டிருந்தார் ராஜவள்ளி .


கண்மணியை கண்டதும் முகம் மலர எழுந்து வந்து அணைத்துக் கொண்டவர் முகமும் அதுவரை இருந்த வாட்டத்தை தொலைத்து மகிழ்ச்சியை சுமந்தது.


"எப்போ அத்தை வந்தீங்க ? ஏதாவது குடிச்சீங்களா " என்று விசாரிக்க " நான் நல்லாருக்கேன் கண்ணு "என்றவர் இவள் பின்னே வந்து கொண்டிருந்த வடிவை பார்த்து "வாங்க அண்ணி " என்றார்.


வடிவிற்கும் ராஜவள்ளியை ரொம்ப பிடிக்கும் .சிங்காரவேலனுக்கு உடன் பிறந்தவர் யாரும் இல்லை . சித்தப்பா மக்கள் தான் .அதில் மூத்த தங்கை ராஜவள்ளிதான்.நேர்மையான மனுஷி அவர் .தேவையில்லாத பிடிவாதமா அகந்தையோ கிடையாது. புறணி பேசும் பழக்கமும் கிடையாது.அதனாலேயே அந்த குடும்பத்தில் அவருக்கு வடிவிடம் மட்டுமே ஓட்டுதல்.


தன் தங்கைகளிடமே பெரிதாக போக்குவரத்து இல்லை !அதுவும் சங்கரியிடம் சொல்லவே வேண்டாம்.


இந்துமதியோ இரண்டும்கெட்டான் குணம் கொண்டவர்.


'நாயகன் கமல்' போல .. நல்லவரா கெட்டவரா என்று கேட்டால் தெரியலியேப்பா என்று தான் சொல்ல வேண்டும்.எப்போது என்ன செய்வார் என்று அனுமானிக்கவே முடியாது.


ராஜவள்ளியின் கணவர் நடராஜன் மெத்த படித்தவர்.கல்லூரி பேராசிரியர். பெரியாரின் வழி பின்பற்றுபவர். ராஜவள்ளி திருமணத்திற்கு முன்பு பத்தாம் வகுப்புதான் முடித்திருந்தார் .நடராஜன் தான் வற்புறுத்தி கல்லூரி முதுகலை வரை பயில வைத்தார். வங்கியில் நல்ல பதவியில் இருந்து வருபவர் ராஜி .


இரு ஆண் பிள்ளைகள் அவர்களுக்கு.


பெரியவன் விக்ரம் சாஃப்ட்வெர் இன்ஜினியர் ..தற்போது ஆன்சைட்டில் இருக்கிறான் கனடாவில்!


இளையவன் பரணீதரன் மருத்துவ கல்லூரியில் இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறான்.


வேகமாக சமையல் அறை உள்ளே சென்ற கண்மணி அவருக்கு பருக பழச்சாறு எடுத்துவர அதை வாங்கி பருகியபடி சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தவர் அனைவரிடமும் விடைபெற்று கிளம்பிவிட்டார்.


அவர் கிளம்பியது தான் தாமதம் .. வள்ளி தான் ஆரம்பித்தார் "ஒரு வழியா உங்க அக்காவுக்கு இந்த வீட்டுக்கு வழி தெரிஞ்சுதே சங்கரி அண்ணி "என்று சொல்ல..


"க்கும் "என்று தோளில் இடித்துக் கொண்டவர் "எங்க அக்கான்னு தான் இவ்வளவு நாளாக சொல்லை ..உண்மையில அவளுக்கு கொஞ்சம் அகம்பாவம் தான். ரொம்ப படிச்சிட்டால்ல ..நாங்கல்லாம் ஸ்கூல் தாண்டலை " என்றார் சங்கரி.


அதுவரை அமைதியாக இருந்த இந்துமதி "நம்ம பிள்ளைகளை, வீட்டை பாத்தோம். இவளுக்கென்ன சமைக்க ஒரு வேலைக்காரி.. வீட்டு வேலைக்கு ஒருத்தி..போகவர காருக்கு ட்ரைவர்னு இருந்தா ..அதனாலே படிக்க முடிஞ்சுது. ஏன் நம்மள ஒருத்தர் படிக்க வச்சிருந்தா படிச்சிருக்க மாட்டோமா ?"


"ஆமாமாம் இவளுக ரெண்டு பெரும் அஞ்சாங்கிளாஸ் கூட தாண்டலை . படிப்பு ஏறலைன்னு வீட்லயே உக்காந்துட்டு என்ன பேச்சு பேசறாளுக பார்க்கா" என்று வடிவின் காதை கடித்தாள் பரிமளா.


" இப்போ எதுக்கண்ணி அந்த பேச்சு? அவங்களுக்கு படிக்கச் கொடுப்பினை இருந்தது.. படிச்சாங்க . விடுங்க .எல்லாருக்கும் சாப்பாடு எடுத்து வைக்கவா ? "என்று வடிவு பேச்சை மாற்ற ..


"நீங்க ஏன் சொல்ல மாட்டிங்க? நீங்க ரெண்டு பெரும் தான் ஒன்னுக்குள்ள ஒன்னு . "என்ற இந்து வினயமாக கண்மணியை பார்த்தவர் "இதோ உங்க மக கூடத்தான் ..எங்களையெல்லாம் கவனிச்சாளா ? ராஜிக்கா வந்ததும் ஜூசு குடுக்க ஓடுறா " என்று நீட்டி முழக்க ..


"நீ என்னடி இந்து இப்படி கேக்குற ?உன்னையும் என்னையும் அவ கவனிப்பாளா? அவ வருங்கால மாமியாரை அவ கவனிக்குறா " என்றதும் எதிர்பாராமல் முகத்தில் அறை வாங்கியது போல் இருந்தது கண்மணிக்கு.


'இதை எப்படி மறந்தேன்' ?




 
என்னங்கடா இது கண்மணிக்கு வந்த சோதனை 😂
சூப்பர் 😀
 
Top