Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வண்ணங்கள் - 11

Advertisement

TNWContestWriter098

Well-known member
Member
அதன் பின்னர் உணவுண்டுவிட்டு பொன்னுத்தாயியை பார்க்க போனாள் கண்மணி.

தினமும் உறங்கும் முன் அவரிடம் சில நிமிடங்கள் பேசிவிட்டு தான் உறங்க செல்வாள்.

இங்கே இருந்தால் அது அவளது வழக்கம் ..பொன்னுத்தாயியும் அந்த நிமிடங்களை எதிர்பார்த்தே இருப்பார் .

வயதானவர்களுக்கு தேவையும் அதுதானே ..தங்களை மதித்து நான்கு வார்த்தைகள் பேசும் ஒரு உறவு .

சோர்வும் கவலையும் குடிகொண்டிருந்த ஆத்தாவின் முகத்தை நோக்கிய கண்மணியின் முகமும் குரலும் கவலையை பிரதிபலிக்க ..முயன்று தன்னை நிலைப்படுத்தியவராய் அவளை நோக்கி புன்னகை புரிந்தார் பொன்னுத்தாயி.

ராஜவள்ளி வந்து சில விஷயங்களை பேசி சென்றிருக்க ..அது தன் பேத்தியின் வாழ்வை பாதிக்குமோ ..அவள் மனம் வருந்தும்படி ஆகிவிடுமோ என்ற கவலை அவருள்ளத்தில் குடிகொண்டது.

இருந்தும் புன்னகை முகமாக "வா கண்ணு " என்றவர் பேத்தியின் கரத்தை தன் கரத்தினுள் அடக்கிக் கொண்டார். அவளது கரங்கள் லேசாக நடுங்குவதில் இருந்தே அவளது மனநிலையை கணித்தவராய் அவள் கவனத்தை திசை திருப்ப "இன்னிக்கு எங்க கண்ணு போனீங்க ?" என்றார் .

"இன்னிக்கு எல்லாருமா தோட்ட வீட்டுக்கு போனோம் ஆத்தா. ஒரே ஆட்டம் பாட்டம் தான். சுஜித் அண்ணா , சூர்யா, ஆதி எல்லாரும் கூட வந்தாங்க..அஜித் அண்ணாவும் கஸ்தூரி அண்ணி கூட வந்தாங்க ..அப்புறம் அங்கிருந்து அவங்க ரெண்டு பேர் மட்டும் அப்படியே கிளம்பிட்டாங்க "

அவர் அறிந்த விஷயம் தான்.

மற்ற மூன்று ஆண்மக்களும் இவர்களை வீட்டில் வந்து விட்டுவிட்டு பொன்னுத்தாயியிடமும் பேசிவிட்டே சென்றிருந்தனர். கதிரை பற்றி ஆதித்யனும் சூர்யாவும் பேசியிருந்தனர்.

"ஆமா அந்த அசித்து பய இன்னும் சுடு சுடுன்னு தான் பொறியிறானா? அப்படியே அவங்கப்பன உரிச்செடுத்துட்டு வந்திருக்கான். ரெண்டு பேரும் சரியான ஆகாவளி பயலுக. எம்மவன உசுப்பேத்துறதே அவனுக வேல " என்று நொடித்தார் பொன்னுத்தாயி.

அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது. வெகு காலமாக படுக்கையில் இருந்தாலும் எப்படி ஒவ்வொருவரையும் சரியாக தெரிந்து வைத்திருக்கிறார் என்று.

எப்படி பேச்சை எடுப்பது என்று தயங்கிய கண்மணி "ஆத்தா ..ராஜி அத்தை வந்தாங்கல்ல .."
"ஆமாம் புள்ள..அதுக்கென்ன ?"
"ஏதும் சொன்னார்களா ?"

"எதைப்பத்தி நீ கேக்குற " என்றார் அவள் எதைக்குறித்து கேட்கிறாள் என்று தெரிந்துகொண்டே!

அவள் வாய் வழியாகவே வரட்டும் என்று காத்திருந்தார் .
"விக்ரம் மாமாவை பத்தி " என்று சுத்தி வளைத்து கேட்க ..

"அவனுக்கென்ன நல்லா ராசா கணக்கா இருக்கானாம் .. வெளிநாட்டுல வேலை இன்னும் தொடரும் போல ..இப்போ லீவுக்கு வந்திருக்கானாம் .அவன் கண்ணாலத்தை சட்டு புட்டுன்னு முடிக்கணும்னு ராஜி பாக்குறா " நான் உன் அப்பனையே பெற்றவள் .என்னிடமேவா? என்று எண்ணிக் கொண்டவர் ..

அவளை ரொம்ப வாட்ட வேண்டாம் என்று நினைத்தாரோ என்னவோ "சரி அதை விடு ..இந்த தாமரை இருக்கால்ல அவ வீட்டுக்கு ஒரு பய வந்திருக்கானு சொன்னியே .நல்லா வாட்ட சாட்டமா ஜல்லிக்கட்டு காளை மாதிரி இருக்கானாமே.. ஆதி பய சொன்னான் " என்று கூற சட்டென்று அவ்வளவு நேரம் இருந்த வாட்டமும் குழப்பமும் மறைந்து மலர்ந்துவிட்டது கண்மணியின் முகம் .

"ஓஹ்.. அப்படி போகுதா கதை " என்று தனக்குள் எண்ணியவராய் கதிரை பற்றி பேச ...கண்மணியும் உற்சாகமாக பதில் கொடுக்க தொடங்கினாள்.

மனம் சற்றே லேசாக அவரிடம் விடைபெற்று தன் படுக்கையில் படுத்தவளுக்கு உறக்கம் அண்டவில்லை.

சோபிதாவும் சுகன்யாவும் சிறுபிள்ளைகளாதலால் அன்றைய அலைச்சலில் சோர்ந்திருந்தவர்கள் படுத்ததும் உறங்கி விட்டனர். தன்னுவும், ஸ்வாதியும் சலசலத்தபடி கொட்டாவி விட்டுக் கொண்டிருக்க ஸ்வரூபா போனில் சுஜித்துடன் கடலை போட்டுக் கொண்டிருந்தாள்.

கண்மணியின் மனமோ ராஜியின் வருகையில் குழம்பி இருந்தது .

மூன்று ஆண்டுகளுக்கு முன் நடந்தவை அவள் மனக்கண்ணில் வந்து போயின.

அப்போதுதான் ப்ளஸ் டூ முடித்திருந்தாள் .

தேர்வு முடிவுகளும் வந்திருந்தன. கண்மணி மிக நல்ல மதிப்பெண் எடுத்திருக்க சென்னையில் நல்ல கல்லூரியில் மெரிட்டிலேயே இடம் கிடைக்கும் போல் இருந்தது.

ஆனால் சிங்காரவேலனுக்கு பெரிதாக ஆர்வமில்லை ..இங்கேயே இருந்து ஏதாவது கலை அறிவியல் கல்லூரியில் படிக்கட்டும் .பின்பு மணம் முடித்து விடலாம் என்று சொல்லியிருந்தார் .

கண்மணிக்கோ எப்படியாவது பொறியியல் பயின்றுவிட வேண்டும் அதுவும் கணிணி பொறியியல் அவளுக்கு மிகவும் பிடித்தமானது. பலர் எவ்வளவோ முயன்றும் கிடைக்காத கல்லூரியில் அவளுக்கு சுலபமாக கிடைக்கும் நிலை.அவளால் தாளவே முடியவில்லை.எப்படியாவது சேர்ந்துவிட வேண்டும் என்று விதவிதமாய் போராட்டம் நடத்தினாள்.

உண்ணாமல் கூட இருந்து பார்த்துவிட்டாள்.. சிங்காரவேலன் அதற்கும் அசையவில்லை. அவரும் அவள் உண்ணும் வரை உண்ண மாட்டேன் என்று பதில் போராட்டம் நடத்த ..கண்மணி தான் இறங்கி வர வேண்டியிருந்தது.

அப்போதுதான் ராஜி அத்தை எதேச்சையாக வந்திருந்தார். பெண்கல்வியின் முக்கியத்துவத்தை அனுபவத்திலேயே அறிந்தவரல்லவா ..

சட்டென சூழ்நிலையை கையில் எடுத்தவர் தன் சகோதரனிடம் சென்று என்ன பேசினாரோ அது கண்மணி அறியாதது.

"அண்ணா ..உங்களுக்கு இப்போ என்ன வேணும் ? கண்மணி படிக்கிறதில என்ன கஷ்டம் ?" என்று கேட்க ..
"அவள் இங்கேயே படிக்கட்டும் ராஜி. ஒருத்தியை படிக்க அனுப்பி நான் பட்ட கஷ்டம் போதும். அவளால நான் தலையே நிமிர முடியாம போச்சு.இப்போ இவளையும் அப்படி அனுப்ப சொல்றியா ?" என்றார்.

ராஜதுரையும் தனசேகரும் அவருக்கு நன்றாக உருவேற்றி வைத்திருந்தனர் கண்மணியை வெளியூருக்கு அனுப்ப கூடாதென்று.

"அப்படியெல்லாம் எதுவும் நடக்காதுண்ணா.. உனக்கென்ன அவ நல்லபடியா கலியாணம் கட்டணும் அவ்வளவுதானே ..சரி என் மகன் விக்ரமுக்கே அவளை கட்டிக்கிறேன் .உனக்கு சம்மதமா?"
என்று கேட்க சற்றே யோசித்தார் சிங்கார வேலன்.

ராஜியின் குடும்பம் அந்தஸ்திலும் செல்வாக்கிலும் நல்ல நிலை தான். தன் ஒன்று விட்ட சகோதரி ..அதனால் வேறு தொல்லைகள் இல்லை. விக்ரமும் நன்கு படித்து நல்ல வேலையில் இருந்தான். ஒழுக்கமான பிள்ளை .. இதெல்லாம் யோசித்தவருக்கு ஒத்துக் கொள்ள தோன்றியது.

வடிவின் சிந்தனை வேறு வகையில் இருந்தது. தாயல்லவா அவள்? அந்தஸ்து குறித்தெல்லாம் யோசிக்கவில்லை!

விக்ரம் நல்ல பிள்ளை ..அறிவு குணம் அழகு எல்லாவற்றிலும் தன் மகளுக்கு சமதையாக இருப்பான்.
வடிவுக்கும் ராஜியை மிகவும் பிடிக்கும் மற்ற இரு நங்கைகள் போல் பிடிவாதமும் கர்வமும் கிடையாது. தன் மகளுக்கு நல்ல மாமியாராகவே இருப்பார்.

இதெல்லாம் யோசித்து தன் மகளின் ஆசையும் நிறைவேறும் என்பதால் சரி என்றார் .
"சரி அப்போ அடுத்த வாரம் விக்ரம் ஊருக்கு போறான்ல ..அதுக்குள் கல்யாணத்தை வச்சிடுவோம்" என்று அடுத்த குண்டை தூக்கி வீசினார் வேலன் .

வடிவிற்கு தூக்கி வாரி போட்டது. தன் பதினேழே வயதான பெண்ணிற்கு திருமணமா ?
ஒரு தாயாக மட்டுமல்ல இதே நிலையை கடந்து வந்திருந்த பெண்ணாகவும் அவரால் இதை ஒப்புக் கொள்ள முடியவில்லை. ஆனால் அவரால் இதை தன் கணவரிடம் கூறிவிட முடியுமா?
கையை பிசைந்தபடி ராஜியை பார்க்க அவர் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கண்ணசைத்தார்.
"இப்போ கல்யாணத்துக்கெல்லாம் நேரமில்ல ..நாளைக்கே அவன் மும்பை போறான் ..அங்க உள்ள ஆபீசுல வேலையாம். அப்படியே கனடா போயிடுவான் . இதோட திரும்பி வர மூணு வருஷம் ஆயிடும். அதுவரை அவ ஹாஸ்டல்ல இருந்து படிக்கட்டும் .நமக்குள்ள பேசி வச்சாச்சுல்ல ..அவன் வெளிநாடு போய் வந்தப்புறம் பாத்துக்கலாம்." என்று முடித்து விட்டார் .


கண்மணி அழுதுகொண்டு தன் படுக்கையில் படுத்திருக்க ..வடிவும் ராஜியும் உள்ளே நுழைந்தனர்.
"கண்ணு.. அப்பா ஒத்துக்கிட்டார்" என்று வடிவு கூறவும் கண்மணி முகம் மலர்ந்து விகசிக்க எழுந்து அமர்ந்தாள்.
"அப்படியாம்மா? அப்பா ஒத்துக்கிட்டாரா ?" அவள் சந்தோசமாய் கூற .

"ஆமாண்டி .."என்று தாய் இழுக்கையிலேயே மகளுக்கு புரிந்து விட்டது ஏதோ கொக்கி போடுகிறார் என்று.
"விக்ரமுக்கு உனக்கும் கல்யாணம்னு முடிவு பண்ணிருக்காங்க உங்கப்பா .அதுக்கு நீ ஒத்துக்கிட்டா தான் உன்ன அனுப்புவாங்களாம்" வடிவு சொன்னதும் அப்படி ஒரு கோபம் வந்தது கண்மணிக்கு .

"ஏம்மா படிக்க பர்மிஷன் கேட்டா கல்யாணம்னு சொல்றீங்க ?" என்று எகிறியவளுக்கு ராஜி அத்தையின் மேல் எரிச்சல் ஏற்பட்டாலும் அவளால் வாய் திறந்து சொல்ல முடியவில்லை.' நல்ல நேரம் பாத்துச்சி இந்த அத்தை கல்யாணம் நிச்சயம் பண்ண ' என்று நினைத்துக் கொண்டாள். இவள் மனதில் ஓடுவதை புரிந்து கொண்ட ராஜி "வடிவு நீ கொஞ்சம் வெளிய இரு ..நான் கண்மணிக்கு புரிய வைக்கிறேன் " என்று அவரை வெளியே அனுப்ப ..'என்னத்த புரிய வைக்க போறாங்களோ ' என்று நொடித்துக் கொண்டாள் மனதுக்குள் !

"நீ என்ன நினைக்கிறன்னுஎனக்கு புரியுது கண்மணி. ஆனால் நான் உனக்கு முன்னாடியே இந்த குடும்பத்தில பிறந்து வளந்தவ. உன்னை மாதிரியே படிக்கணும்னு ஆசைப்பட்டவ தான் . உங்கப்பாவாவது கொஞ்சம் மதிப்பு கொடுப்பார் பொம்பளைங்க பேச்சுக்கு. ஆனா மத்த ரெண்டு அண்ணன்களும் அப்படி கிடையாது. எங்கப்பா அதை விட மோசம்..ஏதோ நான் செஞ்ச புண்ணியம் உங்க மாமா முற்போக்குவாதி ..என்னோட ஆசைக்கு மதிப்பு குடுத்து என்னை படிக்க வச்சார்.இன்னிக்கு உனக்குமதே நிலைமை தான்.. நீ நல்லா படிக்கணும்னு தான் உங்கப்பாகிட்ட என் பையனுக்கு கட்டிக்கிறேன்னு உறுதி கொடுத்திருக்கேன். ஆனால் உன்னை எந்த விதத்திலயும் நாங்களோ என் பையனோ டிஸ்டர்ப் பண்ண மாட்டோம் .சொல்லப்போனா அவனுக்கும் இந்த விஷயமெல்லாம் தெரியாது. நீ நல்லா படி கண்மணி. உன் கால்ல நிக்கிற தைரியம் உனக்கு வரணும். நீ இப்படி ஒரு விஷயம் இருக்கறதை மறந்துடு. நிஜமாகவே நாலு வருஷத்துக்கப்புறம் உங்க ரெண்டு பேருக்குமே பிடிச்சிருந்ததுன்னா கல்யாணம் பண்ணி வைக்கிறேன் ..சரியா ?" என்று அவர் கேட்டபோது அவரை இறுக்க கட்டிக்க கொண்டாள் கண்மணி.


"தாங்க்யூ அத்தை தேங்க்ஸ் எ லாட்..சாரி சாரி ..உங்கள தப்பா நினைச்சிட்டேன்" என்று படபடக்க அவளை ஆதரவாக தட்டிக் கொடுத்தவர்.. இன்று வரை சொன்ன சொல்லை காப்பாற்றி வருகிறார். அவரோ விக்ரமோ அவளை வந்து பார்க்கவோ பேசவோ முயன்றதேயில்லை.சொல்ல போனால் அப்படி ஒரு விஷயமே அவள் நினைவுகளில் இல்லை ..இது பெரியவர்களுக்கு மட்டுமே தெரிந்திருந்ததால் ..இளைய தலைமுறையினருக்கும் இது புதிய செய்தியே.
 
அப்போ விக்ரமுக்கு என்று பேசி வைத்ததை மறந்து விட்டாளா ..?
என்ன பண்ண போறாள்
சூப்பர் 😀
 
Top