Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வண்ணங்கள் - 4

Advertisement

TNWContestWriter098

Well-known member
Member
அத்தியாயம் - 4

கண்மணி நடந்து சென்று தெருமுனையை கடப்பதை திண்ணையில் இருந்தபடி பார்த்த சொக்கலிங்கம் வீட்டினுள் சென்று கதிரின் முன் அமர்ந்தார்.

அவன் முகத்தையே அவர் உற்று நோக்க அவரது பார்வையை எதிர்கொண்டு அவனும் நேர் பார்வை பார்த்தான்.

அவனுக்கும் அதிர்ச்சி தான் .. அவனது அய்யா அவனை இவ்வளவு கடுமையாக இதுவரை பேசியதில்லை!

அவரை அய்யா என்று தான் அழைப்பான்.அப்படி தான் அழைக்க வேண்டும் என்பது அவனது தந்தையின் சொல்..அதுவே அவனுக்கு வேத வாக்கு !

அவன் தந்தைக்கும் ஆசிரியனாய் இருந்தவர்..இவனுக்கும் ஆசிரியராய் இருந்தவர்..ஆதலால் எப்போதும் அய்யா தான்!

அதிலும் இவன் தந்தையின் 'அய்யா'வில் மரியாதை.பணிவு,உள்ளார்ந்த அன்பு, அர்ப்பணிப்பு, கீழ்ப்படிதல் என்று எல்லாமே கலந்திருக்கும்.

'அய்யா' இஸ் நாட் எ வர்ட் ..இட்ஸ் அன் எமோஷன் ...என்று இவன் கூட கேலியாக எண்ணிக் கொள்வான்.
அவர் அய்யாவாக இருந்தாலும் தாமரை என்றுமே சித்தி தான்..தான் பெறாத மகனாக தான் இவனை எண்ணிக் கொள்வார்.

சொக்கலிங்கத்தின் நேர் கொண்ட பார்வையும் அதில் தெரிந்த கண்டனமும்..தான் ஏதோ மிக பெரிய தவறிழைத்த உணர்வை தர ..இப்போது அவனது 'அய்யா' மிகுந்த தயக்கத்துடன் வந்தது.

"அய்யா.."

"கதிர்..நீ ஒன்னும் சின்ன பிள்ளையில்லை.. இதுவரை என்னை எத்தனையோ முறை கேட்டிருக்க ..உங்க வீட்டுக்கு கூட்டி போங்கன்னு. நான் அதுக்கு சம்மதிச்சதில்லை.அது உனக்கே நல்லா தெரியும்.அதை விட உங்கப்பனும் ஒரு நாளும் அனுமதிக்க மாட்டான்னும் தெரியும்.அப்போ அதுக்கு முக்கியமா காரணம் இருக்கும்னு உனக்கு தெரியாதா? அப்பறமும் எதுக்காக இங்க வந்த?"

"என்ன காரணம்னு தான் சொல்லுங்களேன்"

"அது உனக்கு எப்போ தெரியனுமா அப்போ தெரியும்..உங்கப்பாதான் அதை சொல்லணும் . இப்போ எவ்வளவு சீக்கிரம் கிளம்ப முடியுமோ கிளம்பு"

"வந்தவனை வான்னு கூப்பிடலன்னா பரவாயில்லை..இப்படி விரட்டணுமா?" என்று மனத்தாங்கலாய் வினவியவன் தாமரையின் முகம் பார்க்க அவரோ இவனை கெஞ்சுதலாய் நோக்கி நின்றார் 'அவர் சொல்வதை செய்யேன்' என்பது போல் !
அவனுக்கு ஆதங்கமாக இருந்தது. சித்தி கூட இவனை போக சொல்கிறாரே!

"அய்யா சொல்றதை கேளு தங்கம்.. சித்தி வேண்ணா உன் கூட ஊருக்கு வரவா?" என்று அவனை சமாதான படுத்தும் முகமாக வினவ..
"ஆமா இவன் கைக்குழந்தை பாரு ..ஊருக்கு போக வழி கூட தெரியாது" என்று பாய்ந்தவர் கதிரை திரும்பி பார்க்க..அவனோ அழுத்தமாக அமர்ந்திருந்தான்.

உண்மையில் அவன் வந்தது அவன் சித்தியின் வீட்டிற்கு மட்டும் அல்ல!
அவனது மனதிற்கினியவளை தேடியும் தான் ..
அவளை பின் தொடர்ந்து வந்திருக்கிறான்!

தன்னவளின் மீது மனம் என்று சென்றதோ அன்றே அவளது விவரங்கள் அடங்கிய கோப்பை கல்லூரி அலுவலகத்தில் எடுத்து பார்த்தவனுக்கு சொல்ல முடியாத சந்தோஷம் தான் ..அவள் அவனது சித்தியின் ஊரை சேர்ந்தவள் என்பதில் !

அதிலிருந்து அடிக்கடி அவனது தந்தையிடம் கேட்டிருக்கிறான் ..இங்கு வர..ஆனால் அவரது அனுமதி கிடைக்கவில்லை .இன்று கிடைத்த வாய்ப்பை பயன்படுத்திக் கொண்டுவிட்டான்.

வாய்ப்பு கதவை தட்டும் போது திறக்காமல் இருந்தால் அவன் முட்டாளல்லவா ?

முந்தைய தினம் பின் மதியத்தில் ஊரே கலவரமாயிருக்க ஒரு சில லெக்சரர்கள் சேர்ந்து இரு பேருந்துகளில் வெளியூர் மாணவ மாணவிகளை ஏற்றி கொண்டு ரயில் நிலையத்திலும், கோயம்பேடு பேருந்து நிலையத்திலும் சேர்க்க.. மாணவர்களுக்கான பேருந்தில் தான் இவன் இருந்தான்.

சில மாணவர்களை சென்ட்ரலில் இறக்கி விடும் போது தான் பார்த்தான் இவளும் அவர்களோடு இறங்குவதை !
எப்போதும் தன் காரில் தான் ஊருக்கு செல்வாளென்று தெரியும்..அதுவும் படையோடு!
இவள் உடன் பயிலும் முத்துச்செல்வி.. எப்போதும் உடனிருப்பாள்.அவளில்லாமல் கண்மணியை பார்ப்பது அரிது. அவள் பார்வையே எட்டி நில் என்று சொல்லும் ..

எல்லாரையும் சந்தேகக் கண் கொண்டு பார்க்கும் , முறைக்கும் கண்களோடு ஒரு ட்ரைவர்.. அவன் உருவத்தை பார்க்கையில் அந்த பெரிய சொகுசு காரே சிறிதாக தோன்றும், அதோடு உறவினர் யாரவது ஒருவர் என்று அந்த காலத்து இளவரசிகளை போல பரிவாரங்களோடு தான் செல்வாள்.அதை காணும் போதே தோன்றும் தன் உள்ள கிடக்கை நிறைவேறுவது பெரும் போராட்டமாக இருக்கும் என்று!

எல்லாவற்றுக்கும் முதலில் அவளுக்கு அவனை பிடிக்க வேண்டுமே! எத்தனையோ மாணவிகள் இவனை சைட் அடிப்பதும் இவனிடம் காரணமின்றியோ காரணத்தோடோ பேச முயல்வதும்.. இவனை கண்டதும் அவர்கள் விழிகளில் தோன்றும் மயக்கமும் ..அது அந்த வயதிற்கே உரிய சிறு பைத்தியக்காரத்தனம் என்று அறிவான்.ஆனால் இது எதுவும் இவளிடம் இருக்காது. இவனை எப்போதாவது பார்க்க நேர்ந்தால் கூட ஒரு குட் மார்னிங் சாருடன் இயல்பாக கடந்து விடுவாள். அதுவே அவளை நோக்கி இவனை இழுத்ததோ ..யாரறிவார்? காதலுக்கு கண் மட்டுமா இல்லை காரணங்களும் இல்லை தான்!

அதுவரை இவளை தனியே சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்ததில்லை..இவனும் உருவாக்கி கொண்டதில்லை ..

இப்போது கடவுளாக இந்த வாய்ப்பை அளிப்பது போல் தோன்றியது.இவனது தந்தையும் பணி நிமித்தம் வெளியூர் சென்றிருக்க மாணவர்களை பத்திரமாக ஊர் சென்று சேர்க்க செல்வதாக அவரிடம் சொல்லிவிட்டு இவள் ஏறிய அதே ரயிலில் இவனும் ஏறிவிட்டான்.

மேலும் பல மாணவிகள் உடன் இருந்ததால் இவனால் அருகில் சென்று பேச முடியவில்லை..ஆனால் தூர இருந்தே தன மனதிற்கினியாளை ரசித்தபடி இருந்தான்.
அவளோ சிறு குழந்தைபோல் தனக்கு கிடைத்த முதல் தனிமையை ரசித்து கொண்டிருந்தாள்.

கதிரின் விழிகள் அவளது அசைவுகளை கொஞ்சம் கொஞ்சமாக பருகிக் கொண்டிருக்க.. அவளோ இயற்கையோடு உறவாடி கொண்டிருந்தாள்.
அவளது செய்கைகள் அவளை மேலும் மேலும் ரசிக்க வைக்க..அவள் மிக விரும்பும் இந்த விடுதலையான வாழ்க்கையை அவளுக்கு அளிக்க தன் மனதுக்குள் உறுதி பூண்டான்.

சொக்கலிங்கம் அய்யா சொல்லாமல் வந்ததற்கு திட்டுவார் என்பது அறிந்திருந்தாலும் இந்த அளவு கோபப்படுவார் என்று இவன் நினைக்கவில்லை.

ஆனால் என்ன வரினும் இங்கிருந்து அவள் மனம் அறியாமல் கிளம்ப கூடாது என்று மனதிற்குள் நினைத்தவன் தன் அய்யாவை சமாதானப்படுத்தும் வழிமுறைகளுக்கு தாவினான்.

"நான் உங்க செல்ல பிள்ளை தானே ..ஒரு நாள் கூட உங்க வீட்ல தங்க கூடாதா ?" கெஞ்சலாக வந்த குரல் மனதை கரைத்தாலும் இப்போது தான் விட்டு கொடுத்தால் இவன் தலை மேல் ஏறுவான் என்று புரிந்தவராய் கண்டிப்பான பார்வை பார்த்தார் சொக்கலிங்கம்.
இப்போது அதே பால் வடியும் முகத்தோடு தாமரையை பார்க்க அதில் தாய் மனம் உருகி விட "மாமா "என்று தன் கணவரை கெஞ்சலாய் அழைத்தவர்.. தன் கணவரின் அர்த்தமான பார்வையில் உடனே தெளிந்துவிட்டார். அவருக்கும் தெரியும் கதிர் இங்கு இருப்பது நல்லதல்ல என்று.

அவன் மனம் நோகாத வண்ணம் " நீ இப்போ போய்ட்டு இன்னும் கொஞ்ச நாள் கழிச்சு வாப்பா.. இப்போ ஊர்ல திருவிழா வேற வருது ..சொன்னா கேளுப்பா"

"எல்லாரும் திருவிழாவுக்கு வான்னு கூப்புடுவாங்க ...நீங்க வராதேங்கிறீங்க ..." இப்படி ஒரே பிடியாய் இருவரும் மறுக்கையில் என்ன செய்வது ? தன் மன விருப்பங்கள் எல்லாம் கானல் நீர்தானா என்று வருந்தியவனாய் "சரி நான் கிளம்புறேன்" என்றவன் உள்ளே சென்று தன் தோள்பையை எடுத்து வர சென்றான்.

அவனது மனவருத்தம் கடவுளுக்கே பொறுக்கவில்லை என்று சொல்வதா அல்லது விதி வலியது என்று சொல்வதா?

இவன் உள்ளே சென்றதும் நிம்மதி பெருமூச்சு விட்ட சொக்கலிங்கத்தின் நிம்மதியை குலைக்கவே ஏழெட்டு பேர் வாசலில் நின்று "வாத்தியாரே " என்றழைக்க வாசலுக்கு வந்து பார்த்த தாமரையின் முகம் பதற்றத்தை பூசியது.
 
என்ன பிரச்சினை இவனுக்கு
வரப்போகுதோ
ஏன் இப்படி போ சொல்றாங்க
 
ஏன் கதிரை இங்க இருந்து விரட்டுறாங்க.. இந்த ஊர்ல அவனுக்கு யாரால பிரச்சனை வரும்னு பயப்படுறாங்க..
 
வாத்திக்கும் இவனுக்கும் பிரச்சனை இல்லை ஊருக்கு இவனின் குடும்பத்தாருக்கும் தானா ..?
சூப்பர் 😀
 
Top