Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வண்ணங்கள் - 5

Advertisement

TNWContestWriter098

Well-known member
Member
அத்தியாயம் - 5
கால் போன போக்கில் நடந்தாலும் தானாகவே வீடு வந்து சேர்ந்தாள் கண்மணி. வடிவும் பரிமளாவும் சமையலில் இருக்க திருவிழாவிற்கு என்று வந்திருந்த உறவுகளால் வீடு ஆரவாரித்தது.

இவளது அக்காமார் இருவர்.. சங்கீதா மற்றும் சந்தியா.
சங்கீதா ராஜதுரை சித்தப்பாவின் மகள். அவளுக்கு முன்னும் பின்னும் இரு ஆண் மக்கள் இருக்க ..வீட்டிற்கு மூத்த பெண் பிள்ளை என்பதால் இவர்கள் செட்டில் முதல் திருமணம் இவளது தான்…இருப்பது ஈரோட்டில் .. அவள் கணவன் மஞ்சள் ஏற்றுமதி தொழிலில் ஓரளவு நல்ல வருமானத்தில் இருந்தான். இரு பிள்ளைகள் அவர்களுக்கு பெண் ஒன்று பையன் ஒன்று!

சந்தியா தனசேகர் சித்தப்பாவின் மகள் .. ஜாகை சங்ககிரியில்.. ஜவுளி கடை சற்று பெரியதாகவே ..அதுவும் குடும்ப கடையாக இல்லாமல் தனியாக அவள் கணவனுக்கு மட்டும் ..எனவே நல்ல செல்வ நிலை தான்.
இப்போது கருவுற்றிருந்தாள்.. இது ஆறாம் மாதம் என்பதால் பிறந்த வீட்டில் தங்க அவளது மாமியார் தடை விதித்து விட இவர்களது இல்லத்தில் தான் தங்குவதற்கு வந்திருக்கிறாள். அவளை கொண்டு அணைத்து பெண் பிள்ளைகளும் இங்கேயே தங்கி விட்டனர்.

இருவரது கணவன் மார்களும் வேலை நிமித்தம் வரவில்லை .

தங்கைகள் , அத்தை மகள்கள் என்று அது வேறு ஒரு கூட்டம்..இவளை கண்டதும் வழக்கம் போல் அனைவரும் ஆர்ப்பரித்தனர் .

அதில் கடைசி சித்தப்பா கந்தவேலின் மகள் தன்யஸ்ரீயும் , இந்துமதி அத்தையின் மகள் ஸ்வாதியும் இவள் வயதை ஒத்தவர்கள்.. மூவரும் வெகு நெருக்கம்.. அவர்கள் பக்கத்துக்கு ஊரில் இருந்த கலை கல்லூரியில் கடைசி வருடம் படித்து வருகின்றனர். இப்போது படிப்பு முடியும் தருவாய்.

"ஏய் கண்மணி ..திருவிழாவுக்கு வரமாட்டேன்னு அன்னிக்கு போன் பேசும்போது சொன்ன ..இப்போ எப்படிடி வந்த ?" சந்தியா கேட்க ..

"இன்னும் ரெண்டு வாரத்தில எக்ஸாம் இருக்குக்கா ..அதுதான் வர வேண்டாம்னு நினச்சேன் ..கடைசீல ஒரு கலவரம் வெடிச்சு என்னை ஊருக்கு தொரத்திவிட்டுருச்சு "

"சாமியே நீ வந்து தான் ஆகணும்னு சொல்லுச்சு பார் "

"இது நல்ல கதையா இருக்கே ..இவ ஊருக்கு வர்றதுக்காக அங்க நூறு பேர் வெட்டிக்கிட்டு சாவாங்களா .." நொடித்தாள் தன்யஸ்ரீ.

"எப்படியோ நம்ம செட் எல்லாம் சேந்தாச்சுல்ல " சங்கீதா சொல்ல ..
"ஹலோ நீங்கல்லாம் எங்க செட் இல்ல .. உங்கள எல்லாம் ஓல்ட் லேடீஸ் காங் ல சேத்து ரொம்ப நாளாச்சு ..ஒழுங்கா கீழ உக்காந்து சமையலை கவனிங்க..நாங்க மாடிக்கு போறோம்" என்று இளையவர்களை அழைத்து கொண்டு கண்மணி மாடிக்கு செல்ல ஆளுக்கு ஒரு திண்பண்டத்தை எடுத்து கொண்டு மாடியேற ..அரட்டை கச்சேரி களை கட்டியது ..
இவளால் தான் ஒன்ற முடியவில்லை!

காலை முதல் நிகழ்ந்தவை அவளின் உற்சாகத்தை குறைத்திருந்தன.
இருந்தும் முயன்று அவர்கள் அரட்டையில் ஈடுபட மனதிற்குள் கதிர் வந்து போய் கொண்டிருந்தான்.

அவன் கிளம்பியிருப்பானோ ..மீண்டும் அவனை பார்க்க முடியுமா ? மாமா அவனை ஊருக்கு துரத்தி கொண்டிருந்தாரே!

ஒரு வேளை இப்போது பேருந்து நிலையத்தில் நின்றிருப்பானோ .. இல்லை ஈரோட்டுக்கே சென்றிருப்பானோ..
அவர் அதட்டி பேசியதும் அவன் முகம் அப்படி வாடியதே ..அவனது கசங்கிய முகமே அவள் நினைவில் ஆட ..இவளுக்கு எதுவுமே ரசிக்கவில்லை ...

அவனுக்கு தாயில்லை என்று சொன்னாரே தாமரை அத்தை ..தாயன்புக்கு ஏங்கி தானே அத்தையை காண வந்திருப்பான்.. அவனை விரட்டி அடித்துவிட்டாரே இந்த மாமா ..அவரது முன்னாள் மாணவர்கள் யார் வந்தாலும் கூட அவர் வீட்டில் தயங்காமல் தங்கி செல்வார்கள் என்று கேள்வி பட்டிருக்கிறாள்...

இவனை மட்டும் அவர் வெறுக்க என்ன காரணம் ?
அவள் மூளை முழுக்க விடையறியா கேள்விகள் கபடியாடிக் கொண்டிருக்க தலை வலிக்க ஆரம்பித்தது.
முதலில் இவளை கவனித்தது இவளது சின்ன தங்கை சோபிதா தான் .."ஏன்கா.. உடம்பு சரியில்லையா உனக்கு? ரொம்ப டல்லா இருக்க ?" சோபிதாவுக்கும் இவளை மிக பிடிக்கும் ..கண்மணிக்கும் அவள் வெகு செல்லம்.

சின்ன பெண் கவனிக்கும் அளவுக்கா நமக்குள் மூழ்கியிருக்கிறோம் என்று தனக்கு தானே கேட்டுக் கொண்டவள் "ஒண்ணுமில்லடா ..நேத்து அண்ரிசர்வ் கம்பாட்மென்டில் வந்தோமில்லையா ..தூங்கவேயில்லை . அதான் தலை வலிக்குது "
"ஏன்கா முதல்லயே சொல்ல கூடாதா "என்றவள் சிட்டாக பறந்து சென்று ஒரு காபி கப்போடு வர உள்ளூர அவளது அன்பை நினைத்து மனம் கனிந்தவளாய் காபியை வாங்கி குடித்து விட்டு தன் அறைக்கு சென்று படுத்து கொண்டாள்.

அன்று வெள்ளிக்கிழமையாதலால் அனைவரும் மாலையில் கோவிலுக்கு கிளம்ப ..சொக்கலிங்கம் வீட்டை தாண்டி தான் செல்ல வேண்டும் ..அந்த நூறு மீட்டர் தூரத்தை கடப்பதற்குள் இவள் இதயம் நூறு கிலோமீட்டர் வேகத்தில் ஓட தொடங்கிவிட்டது.

இவர்கள் வீட்டு ஆட்கள் அதுவும் பெண்கள் மட்டுமே தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தனர் .. ஊருக்குள் தான் என்பதால் காரெடுக்கவில்லை!
அனைவரும் பட்டும் நகையுமாக அர்ச்சனைக்கு பூ பழம் என்று கொண்டு செல்ல .. பார்க்கவே அழகாய் ஒரு ஊர்வலம் செல்வது போல் இருந்தது.
அதிக அலங்காரம் செய்யாதது கண்மணி தான்.

அவளுக்கு இன்று கோயிலுக்கு கூட செல்ல மனமில்லை. அவன் ஊருக்கு போயிருப்பானா இல்லையா என்பதறியவே வீட்டை விட்டு கிளம்பியிருந்தாள்.

சோபிதாவின் விரல்களை பற்றியபடி அசிரத்தையாக நடந்து கொண்டிருந்தவள் கால்கள் அந்த வீதிக்குள் நுழையும் போதே பின்னி கொள்ள தொடங்க.. எப்படி அறிவது ?

பிற சமயமாயிருந்தால் உரிமையாய் தாமரையின் வீட்டிற்குள் நுழைந்து விடுவாள். இப்போது இவர்கள் உறவு கூட்டமே இருக்கையில் ..முடியவில்லை!

தாமரையிடம் இவள் இழைவது இவர்கள் வீட்டில் ஒருவருக்கும் பிடிக்காது.. வடிவு எதுவும் சொல்ல மாட்டார்தான் ..ஆனால் தன் கணவருக்கு பிடிக்காததை செய்யவும் விட மாட்டார். இவளது அத்தைகளும் சித்திகளும் சொல்லவே வேண்டாம் .

எல்லோருக்கும் முதலில் நடந்து கொண்டிருந்தவளின் நடை மெல்ல நிதானிக்க பார்வை அந்த வீட்டையே ஆராய்ந்தது. தாமரை தற்செயலாக வெளி வந்தால் கூட நலம் விசாரிப்பது போல் கேட்டு விடலாம்.. யாரும் இருப்பது போன்ற அரவமே இல்லை !

மாலை நேரம் என்பதால் கதவு திறந்து தான் இருந்தது ..இப்போது தான் தாமரை விளக்கேற்றியிருப்பார். அவரை வெளியே அழைக்க வேண்டுமே? இவர்கள் வருவதை பார்த்தால் அவர் வெளியே வர மாட்டாரே..எதேச்சையாய் வந்தால் தான் உண்டு.

இவ்வாறு யோசித்து கொண்டே வந்தவள்.. எல்லோருக்கும் முதலில் வந்தவள் பின் தங்கி விட.. தாமரையின் வீட்டை கடந்து விட்டிருந்தனர்.

மனம் கேட்காமல் இவள் திரும்பி பார்க்க அப்போது தான் கவனித்தாள்... வாசலில் அவனது ஷூக்கள் இருக்க ..சட்டென்று ஒரு உற்சாக ஊற்று நெஞ்சுக்குள்! அவன் ஊருக்கு போகவில்லை !

கண்மணி கருநீல நிற சில்க் காட்டன் பாவாடையும், அதே நிறத்தில் எம்பிராய்டரி வேலைப்பாடமைந்த டிசைனர் பிளவுஸும் அணிந்து ஒரு ஜரிகை புட்டா போட்ட இளம்சிவப்பு நிற தாவணி அணிந்திருந்தாள்.எப்போதும் அணியும் அதே நகைகள் தான்! கூடுதலாக அவள் அன்னை வற்புறுத்தி அணிவித்த ரூபி அட்டிகை கழுத்தை ஒட்டி! அந்த மிகையில்லாத அலங்காரம் அவளை தேவதை போல காண்பித்தது ..கதிரின் கண்களுக்கு!
ஆம்.. அவன் சன்னலின் பின்னிருந்து அவளைத்தான் பார்த்திருந்தான்.

இவளது பார்வையின் தேடலை அறிந்தவனாய் வீட்டை விட்டு வெளியே வந்தவன் சுவற்றில் சாய்ந்தபடி இவளை குறும்பு பார்வை பார்த்தான். 'பிடிபட்டு விட்டாயா ?' என்பதான அவன் பார்வையை எதிர்கொள்ள முடியாமல் திரும்பி கொண்டாள் கண்மணி.
'ஓஹ் மைகாட்.. பாத்துட்டானே! நாம பாக்குறத எப்பிடி கண்டுபிச்சான்? ஒரு வேளை முதல்ல இருந்தே பாத்துட்டு தான் இருந்திருப்பானோ ?'

அவள் மனசாட்சியே கவுண்டர் கொடுத்தது ..நீ பின்னாலே நடந்து வர்றதால யாரும் கவனிக்கல இல்லன்னா சங்கீதாக்காவோட கைக்கொழந்த கூட கண்டு பிடிச்சிருக்கும் நீ யாரையோ தேடறன்னு.
அது சரி ..எப்படி வாத்தியை சரிக்கட்டியிருப்பான்? அவரு சரியான ஸ்ட்ரிக்ட் ஆப்பீசராசே .. சொன்னா சொன்னதுதான் ..எப்படி ?
எப்படியோ.. அவன் போகவில்லை.. அதுவே அவளுக்கு போதுமானதாக இருந்தது.

காலை முதல் மனதிற்குள் ஏற்பட்ட ஏமாற்றங்களுக்கெல்லாம் மருந்திட்டது போல் ஒரு சுகமான உணர்வு!
அவளது தேடலும் அதற்கு பின் தெரிந்த மாட்டிக்கொண்ட உணர்வும் சட்டென்று மேலோங்கிய நிம்மதியும் பூரிப்பும் அவனது ஏக்கங்களுக்கு விடை கொடுக்க .. தனக்கென பிறந்தவள் இவள் தான் என்று மனம் குதூகலித்தது.

இவர்கள் தெருமுனையை கடப்பது தெரிந்ததும் "கொஞ்சம் வெளிய போய்ட்டு வரேன் சித்தி " என்று தாமரையை நோக்கி குரல் கொடுத்தவன் அவள் வெளியே வந்து பார்க்கும் முன் வேகமாக நடந்துவிட்டான்.

காலையில் நடந்தவற்றைத்தான் யோசித்துக் கொண்டிருந்தார் தாமரை .

வாசலில் ஏழெட்டு பேர் வந்து நிற்க வந்தவர்களை உள்ளே அழைக்காமல் இருக்க முடியாது என்று புரிந்தவராய் "வாங்க" என்றவர் வேகமாக உள்ளே சென்று தன் கணவரிடம் "ஊர் பெரிய ஆளுங்க எல்லாம் வந்துருக்காங்க " என்றார்.
இந்நேரத்திலா இவர்கள் வரவேண்டும் என்று மனதிற்குள் எண்ணியவராய் "வாங்க" என்றழைத்து அவர்களை அமரவைக்க சரியாக அந்நேரம் தன் பையுடன் உள் அறையில் இருந்து கதிர் வெளியே வந்தவன் வெள்ளையும் சொள்ளையுமாக சில பெரிய மனிதர்கள் அமர்ந்திருப்பதை கண்டு சற்றே நிதானித்தான். மேலும் நின்றால் தன் அய்யாவின் கோபத்திற்கு ஆளாக வேண்டியிருக்குமோ என்ற பயம் உந்தி தள்ள பொதுவாக "போய்ட்டு வரேன்" என்று கூறிக்கொண்டு வெளியேற பார்க்க ஒரு வெள்ளை வேட்டி "தம்பி யாரு ?" என்று நேரடியாக கேட்க ..கிராமத்தில் இது சகஜம் தானே ..புதிய முகம் யாராயிருந்தாலும் அக்கு வேறு ஆணி வேறாக விசாரித்து விடுவார்களே!

சொக்கலிங்கம் பதில் சொல்லாமல் அமர்ந்திருக்க மௌனம் சாதித்தால் இதைவிட அதிக கேள்விகள் எழும் என்று அறிந்தவராய் "என் அக்கா மகன் ..சென்னையிலிருந்து வந்திருக்கான் எங்களை பாத்துட்டு போக. இப்போ மதிய பஸ்சுக்கு கிளம்பறான்" தாமரை கண்மணியிடம் படித்த அதே பல்லவியை இங்கேயும் படிக்க ..அனுபவம் மிக்கவர்களல்லவா "உனக்கு தான் கூட பிறந்த பிறப்பே கிடையாதே " என்றார் இன்னொருவர் .

'என் ஒன்னு விட்ட அக்கா தான்..முந்தி ஈரோட்டில் இருந்தாக ..இப்போ சென்னையில இருக்காங்க "

"ஆமாமா உன் கலியாணத்தில கூட ஓடியாடி வேல பாத்துச்செ அந்த செவத்த புள்ள தானே " ஒருவர் கூற "பேரு கூட மல்லிகாவோ என்னவோ தானே! " என்று தனக்குத்தானே சொல்லிக்கொள்ள..
தன் தாயின் பெயரை தவறாக சொல்கிறாரே என்று நினைத்தவனாய் வாய் திறக்க விழைந்த கதிர் தன் கரத்தின் மீது அழுத்தமாக படிந்த தன் சித்தியின் கை சொன்ன செய்தியை படித்தவனாய் அமைதியாய் நிற்க ..
மற்றோருவர் ஆரம்பித்தார் ...அவர் தான் ஊர் கோயிலின் காரியங்களில் முக்கியஸ்தர்!

"அதெல்லாம் கிடக்கட்டும் நேத்தே உங்களுக்கு ஆள் விட்டு அனுப்புனோம் ..நீக்க ஊர்ல இல்லைனு தங்கச்சி சொல்லுச்சு "

"நம்ம ஊர் காரியமா தான் ..இந்த வருஷம் சரியா தண்ணி விடலையே நம்ம கால்வாயில ..அது விஷயமா வக்கீலை பாக்க போனேன் ..மனு ரெடி பண்ணி குடுத்துருக்கார் கொண்டு போய் கலெக்டர் ஆபிசுல குடுத்துட்டு இப்போதான் வீட்டுக்குள்ள வாறன் " என்றவர் "எதுக்கு என்ன தேடுனீங்க "

“ மறந்துட்டீங்களா ? திருவிழா நோம்பி வந்தாச்சே ..காப்பு கட்ட நீங்க வர வேண்டாமா ?"

"நீங்க வந்துருவீங்கன்னு கடைசி நிமிஷம் வர பார்த்தோம் ..வர வழிய காணோன்னதும் ப்ரசாதத்தோட நாங்களே வந்துட்டோம். வர பாதை தானே " இந்தாங்க பிரசாதம் "என்று மூவருக்கும் கோயில் பிரசாதத்தை தந்தவர் "காப்பு கட்டியாச்சு தம்பி ..இனி ஊரை விட்டு வெளியே யாரும் போக கூடாது " என்றார்.

சட்டென்று உள்ளுக்குள் சந்தோசம் முளைத்தது கதிருக்கு.

"அதெல்லாம் இந்த காலத்தில பாக்க முடியுமா.. அவன் பட்டணத்தில் வேல பாக்கறவன்..அப்பிடியெல்லாம் லீவு போட்டு இருக்க முடியாது கோபால் ..அவன் போய்ட்டு வரட்டும் " என்று சொக்கலிங்கம் சொல்ல "ஆமாங்க ..வெளியூர் காரங்கள கட்டுப்படுத்த முடியுமா அதுவும் இப்போ கால கட்டத்தில் " சிவநேசன் அதை ஆதரிக்க கோயில் தர்மகர்த்தாவான கோபால் அதை ஏற்று கொள்ளவில்லை.

"அய்யா வாத்தியாரே ..நீங்க தான் எப்பவும் புரட்சி அது இதுனு செஞ்சுக்கிட்டிருப்பீங்க ..அதுக்காக கோயில் சாமி விஷயத்தில விளையாடாதீங்க. இத்தனை வருஷ பழக்கம் உங்களுக்கு தெரியாதா காப்பு கட்டின பிறகு யாரும் ஊருக்கு வெளிய போக கூடாது.. பெரிய வீட்டு சொந்தக்காரங்கள்லாம் வெளியூர்ல இருந்தெல்லாம் நேத்தே வந்துட்டாங்க.. நீங்க இந்த தம்பிய முன்னமே வரக்கூடாதுன்னு சொல்லியிருக்கணும் .இப்போ வந்தாச்சு ..இனி திருவிழா முடியும் வரை போக கூடாது." என்றவர் சுற்றிலும் அனைவரையும் பார்த்தவர் " நீங்க பண்ண நிறைய விஷயம் எங்களுக்கு பிடிக்காவிட்டாலும் நீங்க எங்க பிள்ளைங்களுக்கு பாடம் சொல்லி தந்த வாத்தியார் அதனால சும்மா இருந்தோம் ..இப்போ கடவுள் காரியத்தில் கொழப்பாதீங்க ..சாமியோட கோபம் தான் நம்ம ஊரை பிடிச்சு ஆட்டுது..ஏதேதோ காரணம் ..போன அஞ்சு வருசமா திருவிழாவே நடத்த முடியல ..பெரும்பாடு பட்டு இந்த வருஷம் தான் எல்லாம் கூடி வந்திருக்கு ..தயவு செய்து கெடுத்து விட்றாதீங்க ..புண்ணியமா போகும் " என்று கையெடுத்து கும்பிடவும் ஏதும் செய்ய முடியாதவாறு நின்று விட்டார் சொக்கலிங்கம்.

"தம்பி நீ உள்ள போப்பா " என்று கோபால் சொல்ல அதுவே சாக்கென்று மனம் துள்ளி குதிக்க உள்ளே சென்றுவிட்டான் கதிர்.
 
பார்ரா அடிச்சுது லக்கிபிரைஸ் கதிருக்கு
கண்மணியோட கண்ணு தேடறது கண்டுபுடிச்சிட்டான்.
 
இந்த குட்டி வாத்திக்கு யோகம் தான்
பெரிய வாத்தி கோபம் தான்..
:love: ? :mad:
 
கண்மணி இப்படியா தேடி மாட்டிப்ப.. கதிர் அவ மனசை கண்டுபிடிச்சுட்டான்.. வாத்தி பெரிய ரகசியத்தை மறைக்குறாரு போல..
 
கோபால் நீங்க ரொம்ப நல்லவர் கோபால் ரொம்ப நல்லவர் கடவுளே அனுப்பிட்டார் ???????????
 
Top