Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வண்ணங்கள் - 6

Advertisement

TNWContestWriter098

Well-known member
Member
அத்தியாயம் - 6


காலை நடந்தவற்றை நினைத்து பார்த்தபடி கொல்லையில் காய்ந்த துணிகளை எடுத்து கொண்டிருந்த தாமரை வாசலுக்கு வந்து பார்ப்பதற்குள் தெருவே காலியாக கிடக்க 'இந்த பையன் எங்க போனான் ?'

காலையில் சொக்கலிங்கம் கடிந்து கொண்டதிலிருந்து முகத்தை தொங்க போட்டு அமர்ந்திருந்தவன்..மதிய உணவு கூட சரியாக உண்ணவில்லை ..தாமரைக்கு மனத்தாங்கல் தான் ..வீட்டிற்கு வந்த பிள்ளையை அதுவும் அவரது செல்லப்பிள்ளையை சீராட்ட முடியாத வருத்தம் அவருக்கு.

இருந்தும் கணவரை எதிர்த்து இதுநாள் வரை எதுவும் செய்தறியாதவர்..அவன் வருந்திய முகத்தை பார்த்து மனம் சுணங்கியிருந்தார்.

வாசலுக்கு மறுபுறம் தெருவை ஒட்டி இருந்த அறையில் சுருண்டு படுத்திருந்தவனிடம் அப்போது தான் காபி கொடுக்க போயிருந்தார்.அவனுக்கு மிக பிடித்த கருப்பட்டி சேர்த்த கடுங்காப்பி! எப்போதுமே காபியை கையில் கொடுத்தவுடன் அதன் நறுமணத்தை நுகர்ந்து சிலிர்ப்பான். இன்று எந்த பாவனையும் இல்லாத வெற்று முகத்துடன் அமர்ந்திருந்தவனை பார்க்கையில் அவரது தாய் மனம் வருந்தியது.இருந்தாலும் மனதை கல்லாக்கிக்கொள்ள வேண்டிய தருணமிது என்று அறிந்திருந்தார்.. இன்னொரு இழப்பு என்பது இந்த வயதில் தாங்க கூடிய சக்தி அவருக்கில்லை.

இப்படி யோசனைகளோடு கொலைப்புறம் நின்றிருந்தவர்.. சில நிமிடங்களில் என்ன மாற்றம் ஏற்பட்டிருக்கும் ..இத்தனை நேரம் இல்லாத துள்ளலோடு இந்த பையன் வெளியில் போகிறானே என்று வியந்தபடி அவன் படுத்திருந்த அறைக்குள் வர.. அங்கு அவர் தந்துவிட்டு போன காபி கூட குடிக்க படாமல் இருக்க ..'அப்படி என்ன வேலை வந்திருக்கும் ?'என்று வியந்தவராய் தனது வேலையை கவனிக்க போனார்.



கோவிலில் இருந்து வந்தவுடன் பொன்னுத்தாயியை காண சென்றாள் கண்மணி.
திருநீற்றை தன் ஆத்தாவின் நெற்றியில் இட்டு விட்டவளின் கரங்களை வாஞ்சையாய் பற்றி முத்தமிட்டார் அம்முதிய பெண்மணி.

"சாப்பிடீங்களா ஆத்தா " என்றவள் குரலிலே உற்சாகம் தெறிக்க "என்ன இன்னிக்கு என் கன்னுக்குட்டி ரெம்ப சந்தோசமா இருக்க போலவே " இவளின் உற்சாகம் அவரிடமும் பிரதிபலித்தது.

தன் தலையில் மானசீகமாக குட்டிக் கொண்டவள் 'ஏய் கண்மணி ..கொஞ்சம் அடங்கு! ஏற்கனவே தன்னு நீ எதோ ஒரு மாதிரி இருக்கேன்னு சொல்றா. இவங்க வேற நீ ரொம்ப சந்தோசமா இருக்கன்னு கரெக்டா சொல்றாங்க. கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணுடி தாயே 'என்று தனக்கு தானே சொல்லிக் கொண்டாள்.

" ரொம்ப நாள் கழிச்சி ஊருக்கு வந்திருக்கேனில்ல ..அதான்" என்றவளுக்கு கதிர் பற்றி யாரிடமாவது பகிர்ந்து கொள்ள தோன்றவும் தன் ரகசியத்தை.தன் முதிய தோழியிடம் பகிர்ந்தாள்.

"இன்னிக்கு நம்ம தாமரை அத்தை வீட்டுக்கு போனேன் ஆத்தா. அங்கே என் காலேஜுல வேலை பாக்குற சார் ஒருத்தரு வந்திருந்தார். யாருன்னு கேட்டேன் அவங்க அக்கா மகனாம் "

"அவ அக்கா மகனா? ஆமாம் ஒன்னு விட்ட அக்கா ஒருத்தி .. அவ கல்யாணத்தோட பாத்தது அவ மகன்னா ..அப்போ உனக்கு மாமன் முறை தான்." என்று முறை சொல்ல இவளுக்குள் சந்தோச மத்தாப்பு !

"அவன் பேரென்ன ?"
"கதிர் " இதை சொல்லுகையிலேயே பாவையவளின் குரல் குழைந்து தழைந்தது.
"சரி ..அவனுக்கென்ன? அவனை பாத்ததுக்கா இப்படி துள்ளுற ?" பாட்டியம்மாள் சரியாக நாடி பிடித்துவிட திக்கென்றானது கண்மணிக்கு.
"சே சே ..அதெல்லாம் ஒன்னும் இல்ல ஆத்தா ..ஒங்களுக்கு தெரியாதுல்ல ..அதான் சொன்னேன்".
"ஓஹோ அப்படியா " என்று வெளியே சொன்னாலும் அந்த அனுபவசாலியின் மனம் ஏதோ இருக்கிறது என்று கணக்கிட்டது.
எதுவாகினும் தன் செல்ல பேத்தியின் மனம் வருந்த கூடாது என்பதில் மட்டும் உறுதியாக இருந்தது அந்த பாசமான பாட்டியின் உள்ளம் .

மனமெங்கும் ஒரு இனமறியா குறுகுறுப்பு வியாபித்திருக்க அதே மனநிலையில் தூங்க போனாள் கண்மணி.
படுக்கையில் சாய்ந்தவளுக்கு அன்று மாலை நடந்தவை மீண்டும் மனதில் வந்து போனது!
எவ்வளவு தைரியமாக வந்து காதல் சொல்லிவிட்டான்?


பெண்கள் அனைவரும் அரட்டை அடித்தபடி கோயிலை அடைய ..மாலை மட்டும் வாங்க வேண்டியிருந்தது சாமிக்கு ..மற்ற அர்ச்சனை பொருள் வீட்டில் இருந்தே கொண்டு வந்திருந்தனர்.
பரிமளா சித்தியின் மாமியார் வசந்தாவும் உடன் வந்திருந்தார் .
பரிமளாவும் சங்கீதாவின் அன்னை சாவித்திரியும் மாலைகளை ஆராய்ந்து கொண்டிருக்க பிள்ளைகள் வழக்கம் போல் அரட்டை கச்சேரியில் !
அதில் தான் அவர்களுக்கு நேரம் போவதும் தெரியாது ..சுற்றுப்புறமும் உறைக்காதே!

ஒரு வழியாக சாமிக்கு மாலை வாங்கியவர்கள் உள்ளே செல்ல கோயில் வாசலில் காலணிகளை கழட்டி விட போனவளுக்கு திக்கென்றது.
அவளை பார்த்து சிரித்து கொண்டிருந்தன அவனது ஷூக்கள்!
அவனா கோவிலுக்கு வந்திருக்கிறான் ? இப்போது தானே வீட்டின் முன் பார்த்தோம்?
இவர்கள் நடந்து வந்த வேகத்திற்கு நத்தை கூட இவர்களை ஓவர்டேக் பண்ணியிருக்கும் .. அவனது ஆறடி உயரத்திற்கும் வேக நடைக்கும் இது ஒரு விஷயமா ?
ஆனால் அவன் பின்னால் வருவதை எப்படி கவனிக்காமல் போனோம் ?வேறு வழியில் வந்திருப்பானோ?
வேறு யாரவது ஷூவாக இருக்குமோ என்றும் தோன்றியது.
'ஆமாம் இந்த ஊரில் யார் ஷூ அணிந்து சுற்ற போகிறார்கள்? அவனாகத்தான் இருக்கும்'.ஒரு வழியாக இவள் ஆராய்ச்சியை முடிக்க "அடியே " என்று இவளை உலுக்கினாள் தன்யஸ்ரீ.

அப்போது தான் கனவில் இருந்து விழித்தவள் போல் பேந்த பேந்த முழித்தவளை வினோதமான பார்வையுடன் "என்னத்துக்கு பேய் அறைஞ்சவ மாதிரி இருக்க ..உள்ள வா உனக்கு வேப்பிலை அடிக்க சொல்றேன் .."என்றவள் "என்னமோ இவ சரியில்லக்கா" என்று புகார் வாசித்தாள் சந்தியாவிடம்.
அதற்குள் தன் செல்ல அக்காவை வேப்பிலை அடிப்பதா என்று பொங்கி எழுந்த சோபிதா"அதுதான் தலைவலின்னு மத்தியானமே அக்கா சொன்னாள்ல "என்று இவள் உதவிக்கு வர ..
சோபிதாதான் தன்யஸ்ரீயின் உடன் பிறந்த தங்கை!

அதனால் எப்போதுமே அடித்து கொள்வர் ..அதுவும் கண்மணிக்கு சோபிதா ரொம்ப செல்லம் ..அதனால் உடனே அவளுக்கு வரிந்து கொண்டு வந்தாள்.
எப்படியோ எல்லோரும் பேசிக்கொண்டே கோவிலுனுள் நுழைய எதேச்சையாக செய்வது போல் அவனது காலணிகளுக்கு அருகில் தன் காலணியை கழட்டி விட மனதிற்குள் ஒரு ரகசிய குதூகலம்!

காதல் வந்துவிட்டாலே இப்படிப்பட்ட சிறுபிள்ளைத்தனங்களும் கிறுக்குத்தனங்களும் வந்து விடுகின்றனவே!



அது சற்றே பெரிய கோயில் தான் .. துடியான சாமி !
அதற்கேற்றாற்போல் திருவிழாவோடு கூட்டமும் வரும்.. இன்று தான் காப்பு கட்டியிருந்தனர் .அதனால் வெகுவாக கூட்டமில்லை .
கோவிலை சுற்றி நிறைய நிழல் தரும் தெய்வீக மரங்கள் ..பொங்கல் வைக்க தனி இடம் ..மொட்டை போடும் இடம் என்று தனித்தனியாக இருக்கும்.
உள்ளே சென்று சாமியை தரிசித்து முடிக்கும் வரை அவன் கண்ணில் தென்படவில்லை..பின் பிரகாரம் சுற்ற செல்லவும் இவள் கால்கள் தன்னிச்சையாய் தேங்கின.
அவன் அருகில் தான் இருக்கிறான் என்று பெண்மையின் உள்ளுணர்வு கூற ..உறவினர் அனைவரும் முன் செல்ல மெல்ல பின்னால் நடந்தாள் கண்மணி.
"ஏய் கண்மணி .. என்ன மெல்ல வர ? "என்று பரிமளா திரும்பி பார்த்து குரல் குடுக்க ..

'அடடா இந்த சி ஐ டீ சங்கரு சும்மா இருக்காது போலவே ' என்று மனதினுள் நினைத்தவள் "ஹி ஹி அடிபிரதட்சணம் செய்றேன் சித்தி " என்று குழைய "இப்போ எதுக்குடி அடிபிரதட்சணம் ..என்னடி வேண்டுதலு ?" என்று மேலும் குடைய "ஏய் கோவிலுக்குள்ள என்ன நொய் நொய்ன்னு பேச்சு "என்று வசந்தா பாட்டி.. தன மருமகளை அடக்கவும் தான் பரிமளா விட்டாள்.

'அப்பாடி ..தேங்க்ஸ் பாட்டி 'என்று மனதுக்குள் மகிழ்ந்தவள் தலை குனிந்து நடக்க தொடங்க ..அங்குமிங்கும் அவனை விழிகள் தேட .. அவள் பார்வையின் வட்டத்தில் அவனில்லை !

மனம் ஏமாற்றத்தில் கூம்பிவிட ..மெல்ல அடிமேல் அடியெடுத்து வைத்தவள் உள்ளம் ..அவனது மனம் கவர்ந்தவளாக தான் இருக்கவேண்டும் ..அவன் வாழ்வை பகிரும் வாய்ப்பு வேண்டும் என்று தெய்வத்திடம் வேண்டுதல் வைத்தது.
அவளது இஷ்ட தெய்வம் ஆயிற்றே!
ஒரே நொடியில் வரம் தந்தேன் மகளே என்றருளியது போல் ஒரு பெரிய தூணுக்கு பின்னிருந்து ஒரு கரம் சட்டென இவளை பிடித்து இழுத்தது.

வேறு யார்? கதிர் தான் நின்றிருந்தான்.

தூணின் மறைவில் அரையிருட்டில் , நெருங்கி நின்றிருந்த அவனது கண்களின் பளபளப்பு என்னவோ செய்ய ..இனிய பதட்டம் ஒன்று ஆட்கொண்டது கண்மணியை .
"என்னை தானே தேடின ?"
ஆம் என்பது போலவும் இல்லை என்பது போலவும் அவள் தலை மேலும் கீழும் இடமும் வலமுமாக ஆட .. " இல்லைங்கறியா ?"
மறுபடியும் பாவையவள் பார்வையால் தந்தியடிக்க .. யாராவது பார்த்து விடுவார்களோ என்ற பயத்தில் கைகள் நடுங்கின .
நடுங்கிய கரங்களை பற்றியவன் .. "என்கிட்டே பேச மாட்டியா? " என்றவன் குரல் வெகுவாக கம்மியிருக்க "எல்லாரும் பேசி விரட்டறாங்க ..நீ பேசாம விரட்டுறியா ?"
அவனது கேள்வியில் பதறி அவன் முகம் பார்த்தவள் அவன் முகத்தில் வருத்தம் தெரிகிறதா என்று தேட ..ஒன்றும் கண்டறிய முடியவில்லை ..எப்போதும் போல் அதே பளிச் சிரிப்போடு நின்றிருந்தான்.

சுற்றும் முற்றும் நோக்கினாள் தன் வீட்டினர் எங்கும் தென்படுகின்றனரா என்று.

"கவலை படாத ..உங்க வீட்டு ஆளுங்க எல்லாம் கோயில் சுத்தி முன் பிரகாரத்தில உக்காந்துட்டாங்க " என்றான்.

அவள் தன் மௌனத்தை உடைத்தவளாய் " சாரி சார்.. மாமா உங்களை ரொம்ப கடுமையா பேசிட்டார் ,என்னன்னே தெரியல ... எப்பவும் அப்பிடியெல்லாம் பேச மாட்டாங்க .ஏதும் டென்ஷனா இருக்கும். " என்று
சமாதானமாய் பேச ..இப்போதுதான் அவன் முகம் சுருங்கியது அவளது சார் என்ற அழைப்பில்!
தன்னை பேர் சொல்லி அழைக்க மாட்டாளா என்று மனம் ஏங்கியது.

அவன் சமாதானமாக வில்லை என்று நினைத்து "நீங்க மனசுல எதுவும் வச்சுக்காதீங்க.." என்றாள். 'உன்னைத்தானே மனசுக்குள்ள வச்சிருக்கேன் ' என்று அவனது மைண்ட் வாய்ஸ் சொல்ல ..வாயோ
" அதெப்படி முடியும் ?" என்று அவளை வம்பிழுக்க ...
அவன் ரொம்ப கோபமாக இருக்கிறான் என்று நினைத்து மேலும் கெஞ்சுதலாய் "தாமரை அத்தைக்காகவாவது மறந்துடுங்க "
"ம்ஹூம் அப்படியெல்லாம் மறக்க முடியாது .." என்று குறும்பு சிரிப்போடு அவளை பார்த்தபடி கூற ..இப்போதுதான் அவனது குரலில் வித்தியாசத்தை உணர்ந்தவள் நிமிர்ந்து பார்க்க அவன் கண்கள் சொன்ன செய்தி உணர்ந்தும் உணராமலும் ஒரு நூதன உணர்வு அவளை ஆட்கொண்டது.

கதிர் சாரா இது ..இப்படியெல்லாம் பேசமாட்டாரே என்ற மலைப்பு தான் அவளுக்குள் !
அதை வாய் விட்டு சொல்லவும் செய்ய "அது காலேஜு ..இது வில்லேஜு" என்றான் ரைமிங்காய்!
"யாரோ பொண்ணுககிட்ட வம்பு பண்ண கூடாதுன்னு அட்வைசெல்லாம் பண்ணாங்க.." என்றால் இவள் பழைய கதையை நினைத்து ..

ஆம் ..இவர்கள் இருவரும் நேருக்கு நேராக பேசியது ஒரே முறை தான்.இவள் நெருங்கிய தோழி ஒருத்தி ..அவளை ஆசிரியர் ஒருவர் விடாமல் சீண்டி கொண்டே இருக்க ..ஒருநாள் லைப்ரரி சென்று தாமதமாக கிளம்பி கொண்டிருந்தனர் இருவரும். இவள் ரெஸ்ட்ரூமிற்குள் போயிருக்க தனியாக நின்றிருந்த இவள் தோழியிடம் அந்த லெக்ச்சரர் சுபாஷ் வம்பிழுக்க அந்த நேரத்தில் கதிர் கல்லூரியில் இருந்தது தெய்வ செயல்தான்.


இவளது தோழி பிரியா காரிடாரில் சுவரில் சாய்ந்து நின்றிருக்க அதை கவனித்த சுபாஷ் பின்புறமிருந்து வந்தவன் அவள் சுதாரிக்கும் முன் அவளது இருபுறம் கரம் பதித்து சுவரோடு நகராதபடி செய்துவிட .. பிரியா பயத்தில் வேர்த்து விறுவிறுத்து நிற்க ...அவளை முத்தமிட முயன்று கொண்டிருந்தான் சுபாஷ் ..
பயத்தில் கத்த கூட முடியாமல் பிரியா திகைத்து நிற்க .. ரெஸ்ட் ரூமில் இருந்து வெளியே வந்த கண்மணிக்கும் திக்கு முக்காடியது .
என்ன செய்வதென்று அறியாமல் சுற்றி பார்த்தவளுக்கு அருகில் இருந்த ஆசிரியர்கள் அறையில் கம்ப்யூட்டரின் வெளிச்சம் தெரிய வேகமாக அங்கே ஓடினாள்.

அங்கு கதிர் மட்டும் அமர்ந்து தன் ஆராய்ச்சி வேலைகளை பார்த்து கொண்டிருக்க, மூச்சிரைக்க அவன் முன் நின்றவள் வாயில் வார்த்தைகள் வர மறுத்தன.

"சார் சார் ..வாங்க ..வாங்க "என்று தடுமாறியவள்..அவனருகே வந்து அவன் கைபிடித்து இழுக்க ..
தன மனதை கவர்ந்தவள் திடீரென இந்நேரம் வந்து அவன் முன் தரிசனம் தந்ததும்..இவன் கரம் பற்றியதும் உள்ளுக்குக்குள் சில்லென்றிருந்தாலும்..அவளது வியர்த்து வடிந்த தோற்றமும்..முகத்தின் பதற்றமும் விழிகளில் தென்பட்ட கவலையும் பயமும் வேறு சிந்திக்க விடவில்லை.
வேகமாக அவளுடன்சென்றவன் கண்டது சுபாஷ் அந்த பெண்ணிடம் அத்துமீற முயன்றதுதான்.
அவன் இவனை விட சீனியர் என்றாலும் அந்த நேரத்தில் அவனுக்கு அதெல்லாம் தோன்றவில்லை!
அவனருகில் சென்று விட்டான் ஒரு அறை!
"ஏய் என்னையா அடிச்சே? உனக்கு எவ்வளவு தைரியம் ..நீ என்னை எதுத்துட்டு இங்க உன் phd முடிச்சிருவியா? பேசாம போயிரு " என்றான் ஆங்காரமாய்.
"நான் phd எப்படியோ முடிச்சுக்கிறேன் .அதப்பத்தி நீ கவலை பட வேணாம். ஒரு பொண்ணுகிட்ட அதுவும் உன் ஸ்டூடன்ட் கிட்ட தரக்குறைவா நடந்துக்குற ..நீயெல்லாம் ஒரு ப்ரோபாசர்.." என்று மேலும் ஒரு அறை வைக்க ..

திருப்பி அடிக்க வந்தவன் அப்போது தான் கதிரின் பின் நின்றிருந்த கண்மணியை கவனித்தான்.அதுவரை ஏதாவது பிரச்சனை ஆனாலும் கதிர் தான் எல்லாவற்றையும் செய்ததாக திருப்பி விடலாம் என்று தைரியமாய் நின்றிந்தவனுக்கு ..ஒரு மாணவிக்கு இருவர் தன் மேல் புகார் கூறினால் தான் தப்பிக்க இயலாது என்று புரிந்துவிட .. அமைதியாக அங்கிருந்து சென்றுவிட்டான். அதுவும் கண்மணி வீட்டினர் ப்ரின்சிபாலுக்கு தெரிந்தவர்கள் வேறு..அதனால் தான் அவளை அந்த கல்லூரியில் சேர்க்கவே சிங்காரவேலன் ஒப்புக் கொண்டார்.

பிரியா அப்படி ஒரு அழுகை அழ "இதோ பார் ப்ரியா .. இப்படி உடைஞ்சு போய் அழக்கூடாது.. என்ன நடந்து போச்சு ? எதுவும் நடக்கல இல்ல ? மொதல்ல அவனை பார்த்து ஏன் பயப்படுற ? அவன் உன்கிட்ட வம்பு பண்ண முதல் நாளே நீ முன் வந்து பிரின்சிபால் கிட்ட கம்பிளைன் பண்ணிருக்கணும்.. அதை விட்டுட்டு அவன் இன்டெர்னல் மார்க் குறைச்சிருவானோனு பயந்த பார் .. அதை வச்சு தான் இவனை மாதிரி ஆளுங்க கேம் ஆடுறாங்க .. ஃபீமேல் ப்ரோபெஸ்ஸர்ஸ் எத்தனை பேர் இருக்காங்க ? அவங்க ஹெல்பாவது கேட்டிருக்கலாமில்ல .."


"மொதல்ல உன் மேல நீ நம்பிக்கை வை ..யாராலயும் என்ன எதுவும் பண்ண முடியாதுன்னு நம்பு . நீ எதுத்து ஒரு பார்வை பாத்திருந்தா கூட அவன் அடங்கியிருப்பான்.. எப்படி பாம்பை பாத்தா ஓடக்கூடாதுன்னு சொல்வாங்களோ ..அது மாதிரி தான் இவனுங்களும் ..இவங்கள பாத்து ஓட கூடாது . நீ நின்ன எடத்துல நிலையா நின்னா அவனால உன்ன அசைக்க முடியாது.நீ அவனை விட வீக்குன்னு ஏன் நெனக்குற ..பெண்களோட முக்கியமான சொத்தே மனதைரியம் தான்.. அத என்னைக்கும் விட்டுட கூடாது.” என்று அவளை தேற்றி, இவளுக்கும் தைரியமூட்டி அங்கிருந்து இவர்கள் விடுதி வரை துணை வந்தவனின் பிம்பம் கண்மணியின் உள்ளத்தில் அழுத்தமாக பதிந்திருந்தது.


இது நடந்து மூன்று மாதங்கள் இருக்கும் ..அதற்கு பிறகு அவன் அவளிடம் பேசவோ நெருங்கவோ முயலவில்லை என்பதே கதிரின் மீதான மதிப்பையும் அபிமானத்தையும் கூட்டியிருக்க ..அதன் பின்னர்
இன்று தான் அதே நெருக்கத்தில் அவனை சந்திக்கிறாள்.
 
Top