Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வண்ணங்கள் - 7

Advertisement

TNWContestWriter098

Well-known member
Member
அத்தியாயம் - 7

நெருங்கி நின்ற மனம் கவர்ந்தவனின் கம்பீரமும் வசீகரமும் பெண்ணவளை பித்து பிடிக்க வைத்தது.

"பொண்ணுங்கள வம்பு பண்ண கூடாதுன்னு சொன்னீங்களே ..இப்போ நீங்க மட்டும் ஒரு பொண்ண கைய பிடிச்சி இழுக்கலாமா?"
"பொண்ண தான கைய புடிச்சு இழுக்க கூடாது?" என்றவன் இவள் ஜெர்க்காக ..
"ஏய் நீ வேற .. யாரோ ஒரு பொண்ணைதான் வம்பு பண்ண கூடாதுன்னு சொல்ல வந்தேன். என் பொண்டாட்டியை நான் கைய புடிக்காம வேற யாரு புடிப்பா? நீ எனக்கே எனக்குன்னு பொறந்தவ ..உன்ன யாருக்கும் விட்டுகுடுக்க மாட்டேன் .”

'பொண்டாட்டியா ?' மனதிற்குள் ஒரு தேன் மழையே பொழிய ..அவனது துணிச்சலிலும் தைரியத்திலும் பெண்ணவளின் மனம் மயங்கியது.

"அதுசரி நேத்து வரைக்கும் அமைதிப்படையா இருந்தீங்க ..ரெண்டே நாள்ல அதிரடிப்படியா மாறிட்டிங்களே "
"வாழ்க்கைலயும் காதல்லயும் ஜெயிக்கணும்னா விவேகம் மட்டும் போதாது.. வேகமும் வேணும் "
"அப்படியா? புதுசா இருக்கே “
“எனக்கும் எல்லாம் புதுசாதான் இருக்கு .. உன்ன பார்த்த அந்த முதல் நிமிடம் ..முதல் நொடி புதுசா பிறந்த மாதிரி இருந்துச்சு. இன்னும் என் கண்ணுக்குள்ளேயே இருக்கு அந்த காட்சி ..உன் டிபாட்மென்டுக்கு அன்னிக்கு தான் முதல் நாள் வந்தேன் எல்லாரும் அவங்கவங்கள அறிமுகப்படுத்திக்கிட்டாங்க .. அப்போ நீ எழுந்து நின்னு உன் பேரச் சொன்னப்போ உன்ன முதல் முதல்ல பாக்கிறப்போ எனக்குள்ள ஒரு பரவசம் ..உன்ன பல காலமா பாத்து பழகின மாதிரி ..உன்ன தினம் தினம் பாத்த மாதிரி ஒரு உணர்வு .. “
“ ஐ லவ் யு டா.. இந்த கோயில்ல வச்சு சாமி சாட்சியா சொல்றேன் ..உன்ன கடைசி வரைக்கும் என் கண்ணுக்குள்ள என் கண்ணின் மணியா வச்சு பாத்துப்பேன் ..எனக்கு அம்மாங்கறது ஒரு ஞாபகம் மட்டும்தான் .. அவங்க ஒரு பிம்பம் .. அவ்வளவுதான் என்னோட கொடுப்பினை ..எனக்கு எல்லாமே எங்க அப்பாதான் .. என் வாழ்க்கையில வரபோற முதல் பெண் நீதான்.. உனக்கு என்னை பிடிச்சிருக்கா ?"

அவன் கேட்டதும் வழக்கம் போல் ' வெறும் காத்து தாங்க வருது ' என்பது போல் வாயடைத்து நின்றிருந்தாள் கண்மணி.
மனம் கவர்ந்த ஆண்மகன் காதல் சொன்ன தருணம் அவளது மனப்பெட்டகத்துக்குள் பொதிந்தது.
இந்த அன்பை எக்காரணம் கொண்டும் தவற விடக் கூடாது என்று தோன்றியது. இப்போது தன் வாழ்வின் பொன்னான தருணம் என்று உணர்ந்த அவளது பெண்மை விழித்துக் கொண்டது.

தயக்கமும் மயக்கமும் பெண்மையின் குணமன்று ..நேர்மையும் துணிவுமே பெண்மையின் பண்புகள்!
அந்த நேர்மை அவனது காதலின் எதிரொலி தன் மனதிலும் இருப்பதை உணர்த்தியது.
“பிடிச்சிருக்கா?" அவன் மறுமுறை கேட்க ..
பெண்மையின் துணிவும் நேர்மையும் கைகொடுக்க .. தன் மொத்த அன்பையும் கண்களில் சேர்த்து அவனை நேருக்கு நேர் நோக்கி "பிடிச்சிருக்கு " என்றாள் கண்மணி.
அதற்குமேல் வார்த்தைகளுக்கு பஞ்சமாகிவிட நான்கு விழிகளும் , இரு இதயங்களும் மௌனமாய் பேசிக்கொள்ள .. பரிமளாவின் குரல் சற்று தூரத்தில் ஒலித்தது .
நேரமாவது உணர்ந்து “சார்... ப்ளீஸ் ..போய்டுங்க ..யாரவது பாத்திட போறாங்க " என்று பதட்டத்துடன் கூற .."சரி இப்போ போறேன் .பட் நாளைக்கு மீட் பண்றோம் .ஓகேவா " என்று அவள் சரியென்ற பிறகே அங்கிருந்து அகன்றான்.

பின்பு பிரகாரம் சுற்றி எல்லோரோடும் சென்று அமர .. சற்று நேரத்தில் அனைவரும் கிளம்ப ஆயத்தமாகினர். பரிமளாவும் அவள் மாமியார் வசந்தாவும் தங்கள் வீட்டிற்கு சென்றுவிட மற்ற அனைவரும் இவர்கள் வீட்டிற்கு திரும்பினர்.

வீட்டிற்கு வரும் வழியெல்லாம் சோபிதா தொணதொணத்துக் கொண்டே வர அது எதுவுமே இவள் மனதில் ஏறவில்லை.


இரவு முழுதும் நன்றாக தூங்கி எழுந்த கண்மணிக்கு காலை எழும்போதும் மனம் பறப்பது போலவே இருக்க .. யார் பேசுவதும் காதில் விழவில்லை.
ஒரே லாலா லா லாலாலா தான் காதுகளில் ஒலித்துக் கொண்டிருந்தது.

இவளது அறை பெரிது என்பதால் பெண்கள் கூட்டம் முழுக்க இவளது அறையில் தான் முகாமிட்டிருந்தது. சந்தியாவும் சங்கீதாவும் மட்டும் தனி அறையில் தங்கள் பிள்ளைகளோடு படுத்திருந்தனர்.
அவர்களும் எப்போது விடியும் என்று பார்த்திருந்து தங்கள் தாய்மார்களிடம் பிள்ளைகளை விட்டு விட்டு வந்து விடுவர்.
இளம் பெண்கள் சேர்ந்தாலே பேச்சுக்கும் கலகலப்புக்கும் குறைவேது!
ஒருவரை ஒருவர் கலாய்ப்பதென்றால் அல்வா சாப்பிடுவது போல் தான்.
அனைவருக்கும் காபி அறைக்கே வந்துவிட அனைவரும் ஆளுக்கொன்றாக எடுத்துபருக.. கண்மணி மட்டும் தன் கோப்பையை எடுத்துக் கொண்டு பால்கனிக்கு சென்றாள்.
இவர்கள் வீடு ஊரிலேயே பெரியது.. அதிலும் இரண்டாம் மாடியில் இவள் நின்றிருந்தாள்.
பார்வையை சுழட்டியவளின் விழி வீச்சில் தாமரையின் வீட்டின் மேல் கூரை தெரிய ..உள்ளுக்குள் சிலிர்த்தது. அந்த கூரையின் அடியில் தானே அவன் துயில் கொண்டிருப்பான்.

காலை ஏழு மணி ..கதிரவனின் இளம் கிரணங்கள் மேனி மேல் இளஞ்சூடாக விழுந்து வெம்மை பரப்ப தன் கதிரின் கரங்களே தழுவியது போன்ற உணர்வு பரவ ..

இதென்ன பைத்தியக்காரத்தனம் ...
தான் இப்படியெல்லாம் எப்போது யோசிக்க தொடங்கினோம்?
மனம் அவனை குறித்து நினைத்ததும் இன்று கட்டாயம் சந்திக்க வேண்டும் என்று அவன் சொன்னதும் நினைவில் எழ ..எப்படி அவனை சந்திப்பதென்று வெகுவாக யோசிக்க தொடங்கினாள்.

இவளையே அறையின் உள்ளிருந்தபடி கவனித்துக் கொண்டிருந்த அத்தை மகள் ஸ்வாதி "ஏய் என்னப்பா ஆச்சு இந்த கண்மணிக்கு தனக்கு தானே சிரிச்சுக்கிட்டிருக்கா ? " என்றாள்.
சலித்துக் கொண்ட தன்யஸ்ரீ "அதையேன் கேக்குற ..நேத்துல இருந்தே இவ சரியில்ல ..பேயறைஞ்ச மாறியே இருக்கா ."
வழக்கம் போல் தன் செல்ல அக்காவை ஏதும் சொன்னால் சிலிர்த்து எழும் சோபிதா "ஆங் ..நீதான் அறஞ்சிருப்ப . வேறெந்த பேய் அறைய போகுது " என்று ஏட்டிக்கு போட்டியாய் சொல்ல .."இருடி நீ வீட்டுக்கு வந்து தான ஆகணும் .அப்போ கவனிச்சிக்கிறேன்” என்றாள் தன்யஸ்ரீ.

இவர்கள் சண்டையில் சுதாரித்துக் கொண்ட கண்மணி.. நல்ல வேளை டாபிக்கை விட்டு விட்டார்கள் என்று ஆசுவாசப்பட்டவாறு காபியை குடித்துக் கொண்டிருக்க ..
"ஏய் தன்னு ..நேத்து கோவில்ல பாத்தியா ..நம்ம ஊருக்கே சம்மந்தம் இல்லாத மாதிரி செம்ம ஸ்மார்ட்டா ஒருத்தன் நின்னுட்டிருந்தானே ..லைட் ப்ளூ ஷர்ட் ப்ளாக் பாண்ட்.." என்று கதிரை அடையாளம் சொல்ல புரையேறியது கண்மணிக்கு.
"பாத்து குடிடி " என்று சங்கீதா இவள் தலையில் தட்டி குடுக்க .. முகம் மாறாமல் காக்க வெகுவாக முயற்சி செய்தாள் கண்மணி.
இவங்களை விட்டால் இன்னைக்கு நம்மள ஒரு வழியாக்கிடுவாங்க என்றுணர்ந்தவள் "அதெல்லாம் விடுங்கப்பா .." இன்னிக்கு நம்ம தோட்ட வீட்டுக்கு போவோமா ?" என்று கேட்க உடனே ஒரு உற்சாக கூச்சல் எழுந்து பேசிக் கொண்டிருந்த விஷயத்தை அமுக்கி விட்டது.

அனைவரும் காபி குடித்து முடிக்க கோப்பைகளை எடுத்துக் கொண்டு கீழிறங்கியவள்..கோப்பைகளை செல்வியிடம் தந்தவள் மெல்ல நழுவி கொல்லைப்புறம் வந்தாள்.
கிணற்றடியில் இருந்த சிறு கல் மேடையில் அமர்ந்தவள் மெல்ல தன் அலைபேசி எடுத்து பார்த்தாள்.

கண்மணி இன்று அங்கு செல்ல விரும்பிய காரணம் ..இவர்கள் தோட்டத்தை அடுத்து தான் சொக்கலிங்கத்தின் மாந்தோப்பு ..எப்படியாவது கதிரை அங்கே வர சொல்ல வேண்டும் என்று தான் இந்த பிளானே!

அவனது எண் முன்பே சுபாஷுடன் பிரச்சனை ஆன போது தந்திருந்தான்.
அது இவளது அலைபேசியில் பத்திரமாக இருக்க .. வாட்சப் திறந்து பார்த்தாள் ..அவனது சாட்டில் ஆன்லைன் என்றது.

"ஹை "அனுப்பிவிட்டு காத்திருக்க.. நொடிகள் நிமிடங்களாக கடந்துதான் மிச்சம்..
பார்ப்பானா மாட்டானா ?
நீல நிற டிக் விழும் வரை நெஞ்சம் துடிப்பது அவளுக்கே கேட்டுவிடும் போல் இருந்தது.

ஒரு வழியாக நீல நிற டிக் குறியீடு வந்து விழ.. என்ன பதில் வருமோ என்று அடுத்த கவலை

"ட்ய்பிங் ..." என்றே சில பல நொடிகள் வந்து கொண்டிருக்க .." அடேய் ..இன்னும் எவ்வளோ நேரம்டா டைப் பண்ணுவே "என்று மரியாதையை கைவிட்டு மனம் மானசீகமாய் அவனுக்கு குட்டு வைக்க ..ஒரு வழியாக வந்து விழுந்தது பதில் "ஹை டியர் "
ஸ்க்ராலிங்கிலேயே மெசேஜை படித்துவிட உள்ளுக்குள் ஒரே நொடியில் பனிமழை!

மெசேஜை ஓபன் செய்யவா வேண்டாமா என்று மனதிற்குள்ளேயே இவள் பட்டிமன்றம் நடத்த அந்த
புறம் கதிரின் மனமோ குதியாட்டம் போட்டது. இவ்வளவு காலையிலேயே அதுவும் அவனது பிரியமானவளே தனக்கு மெசேஜ் செய்வாள் என்று அவன் எதிர்பார்க்கவேயில்லை .. அவனது பதிலை கண்டு அவள் எப்படி ரியாக்ட் செய்திருப்பாள்? என்றறிய அவனது மனம் துடித்தது.
மெல்ல மெசேஜை திறந்த கண்மணிக்கு அவ்வார்த்தைகளையே பார்த்துக் கொண்டிருக்க வேண்டும் போல் இருந்தது.
வார்த்தைகளிலேயே அவன் முகம் காண்பதைப்போல் ஒரு வினோத உணர்வு தாக்க .."தூக்கமா?”
விழிக்காமலா ஒருவன் போனில் கதைப்பான் ?
காதலிப்பவர்களின் முட்டாள்தனமான கேள்விகளுக்கு முடிவுண்டா?
" தூங்கி விழித்து காபிகுடித்து காலை நடை பயிற்சியும் முடிச்சாச்சு “
‘பல்லு விளக்குனது, பாத்ரூம் போனதெல்லாம் விட்டுட்டியேடா ..’ மனம் கவுண்டர் கொடுக்க..
சற்று நேரம் என்ன பேசுவது என்று தெரியாமல் அவள் தயங்கி நிற்க ..
ஸ்மைலிகளாக வந்து விழுந்தன அவன் புறமிருந்து ..முதலில் சிரிக்கும் ஸ்மைலி..பின் இதய ஸ்மைலி ..காதல் கண்களுடன் என்று வரிசையாக வர.
அவள் மனமோ அவனை சந்திக்க அழைப்பது எப்படி என்று தீவிர சிந்தனையில் ஆழ்ந்தது.
சந்திக்க வா என்று அழைத்தால் ரொம்ப அலைவதாக நினைத்துவிடுவானோ ?


அவளிடம் பதிலில்லாதலால் அவனே கேட்டான் "இன்று தரிசனம் கிடைக்குமா?”
உடனே மனம் துள்ளி குதித்தது. 'இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரி ..'என்று பாட்டு வேறு ஓடியது உள்ளுக்குள் !

"இன்று மதியம் 2 மணிக்கு மாமாவின் மாந்தோப்பிற்கு வாங்க ..முடிந்தால் சந்திக்கலாம் " நொடி தாமதிக்காமல் வந்து விழுந்த பதிலில் உள்ளுக்குள் சிலிர்த்தான் ..தன்னை காண அவளும் தான் தவிக்கிறாள் என்ற எண்ணமே அவனுக்குள் இனித்தது ..
" கால் பண்ணட்டுமா ?"
"ஐயோ வேண்டாம் ..வீட்டில் எல்லாரும் இருக்காங்க ..அப்புறம் முடிந்தால் வாட்சப் பண்றேன் " என்றவள் போனை மறைத்து வைத்துக் கொண்டு வீட்டினுள் சென்றாள்.
அவளுக்கே ஆச்சரியம் தான் ! இத்தனை நாட்கள் அவனை தூர இருந்து பார்த்ததுதான்.அன்றொருநாள் அவனோடு பேசியதோடு சரி !
தன் வகுப்பு தோழிகளை போல் அவன் மீது ஒரு ஈர்ப்பு தான் தனக்கும் என்று இத்தனை நாள் நினைத்தவள் நேற்று பொழுதில் இருந்து தனக்குள் ஏற்பட்ட மாற்றத்தை ஆச்சரியத்துடன் உணர்ந்தாள்.
இந்த பொல்லாத காதல் எந்த கணத்தில் எங்கு எப்படி நுழைந்து விடுகிறது என்பது புரியாத புதிர் தான்.

காற்றை போல் தானே காதலும் ..எங்கும் எதிலும் நிறைந்து ..எவருள்ளும் புகுந்து கொள்ள கூடியது.
காற்றில்லாத வெற்றிடம் இருக்க கூடும் .காதலில்லா மனம் இருக்க கூடுமா ?




 
அருமை... கண்மணிக்கு அப்பா மேல் உள்ள கோவம் என்ன ஆச்சு...
 
Top