Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வண்ணங்கள் - 8

Advertisement

TNWContestWriter098

Well-known member
Member
அத்தியாயம் - 8


தோட்ட வீட்டிற்கு செல்ல வேலனிடமும் வடிவிடமும் அனுமதி வாங்கி, பின் ஒவ்வொருவராய் கிளம்பி காலை உணவுக்கு வர ..
இவர்கள் கிளம்புவதை பார்த்ததும் பெரியவர்களுக்கும் ஆசை வந்தது ..

"அக்கா நாமளும் போவோம்க்கா " என்று பரிமளா ஆரம்பிக்க ...சந்தியாவும் அவளுக்கு துணையாக வடிவும் வீட்டில் இருப்பதாகவும் ..மற்ற பேர் எல்லாம் கிளம்பவும் முடிவானது.
கூடவே வேலைக்கு இருக்கும் செல்வியும் பூமணியும் சமைக்க தேவையான பொருட்களோடு கிளம்பினர்.
கிளம்பும் நேரம் முகத்தை தூக்கி வைத்து இருந்தாள் சந்தியா.
தன் தாய் வள்ளியிடம் கெஞ்சிக் கொண்டிருந்தாள்.." நானும் வரேன்மா..ப்ளீஸ். நீங்க எல்லாம் இல்லாம ரொம்ப போரடிக்கும் "

"அக்காவும் வரட்டுமே சித்தி ..அவளை நடக்க உடாம பாத்துக்குறோம்" எல்லோரும் வித விதமாக கேட்டாலும் வள்ளி அசையவே இல்லை.
" நீயே மூணு வருஷம் கழிச்சு உண்டாயிருக்க... ஏதோ ஒன்னுன்னால் உன் மாமியாருக்கு பதில் சொல்ல முடியுமா ?"

சந்தியாவின் மாமியாருக்கே போனில் அழைத்து தன்யஸ்ரீ கேட்க ..அவர் வெகு தன்மையானவர் "சரி பார்த்து போய்ட்டு வரட்டும் "என்றுவிட்டார் . அதன் பின் தான் வள்ளி அவளை வீட்டை விட்டு அசைய விட்டார் . வடிவும் அனைவருடனும் கிளம்ப சந்தியா ,வள்ளி, வடிவு மட்டும் காரில் வர ..மற்றவர்கள் நடையாக கிளம்பினர்.
ஆண்மக்கள் அனைவரும் சிங்காரவேலனின் தம்பி ராஜதுரையின் வீட்டில் தங்கியிருக்க அவர்களுக்கும் அலைபேசியில் தன்யஸ்ரீ சொல்ல ..அவர்களும் வந்து விடுவதாக சொல்லியிருந்தனர்.

இவர்களது தோட்ட வீடு சிறிய வீடு தான் .
மஞ்சள் மணக்கும் வயல்களின் நடுவே அழகான ஒரு ஒட்டு வீடு ..பெரிய கூடமும் சமையலறையும் ஒரு சிறு தனியறை, பாத்ரூம் என்று பாந்தமாக இருக்கும் .
ஜன்னல்களை திறந்து வைத்தால் காற்றும் வெளிச்சமுமாய் இயற்கையோடு ஒன்றிய உணர்விருக்கும்.

வீட்டிற்கு முன்புறம் ஓலை பந்தல் போட்டிருக்க பாய் விரித்து அமர்ந்து பேச ஆரம்பித்தால் நேரம் போவதே தெரியாது. அரட்டை கச்சேரியில் வீட்டில் இருந்து கொண்டுவந்த நொறுக்கு தீனிகளோடு அங்கிருக்கும் மரங்களின் காய் கனிகளும் அரைபடும்.
வீட்டிலிருந்து சமையல் பொருட்கள் வந்துவிடும்.. வீட்டினுள் அமர்ந்து அம்மாக்கள் சமையலில் ஈடுபட ஊரில் உள்ள அனைவரும் அவர்கள் வாயில் விழுந்து எழுவர்.
இவர்கள் தோட்டத்தை அடுத்து தான் சொக்கலிங்கத்தின் மாந்தோப்பு .
இந்த கூட்டத்தை ஏமாற்றி இவர்கள் அறியாமல் மாமாவின் தோப்பிற்கு செல்ல வேண்டும் . அங்கும் தோட்டக்காரன் இருப்பான் ..அவன் கண்ணில் சிக்காமல் கதிரிடம் பேச வேண்டும் ..முடியுமா?

ஷ் ..ஹப்பா.. இப்போவே கண்ண கட்டுதே ..என்று வடிவேலு மாடுலேஷனில் சொன்னவளுக்கு ..அவனை சந்திக்க வேண்டும் என்பதில் மட்டும் வேறெண்ணம் இல்லை...என்ன செய்ய காதல் படுத்தும் பாடு அப்படி !

இவர்கள் தோட்ட வீட்டிற்கு சென்று இறங்கவும் ஸ்வாதி, கண்மணியின் அத்தை மகள் .. மற்ற ஆண்மக்களுக்கு அழைப்பு விடுத்து விட்டாள். அவர்களும் கிளம்பி வந்துவிடவே களை கட்டியது.
ஹாய் ஹூய் என்று முகமன்களும் விசாரிப்புகளுமாய் இளைஞர் கூட்டம் குதூகலித்தது.
ராஜதுரையும் சங்கரியும் சிங்காரவேலனின் முதல் சித்தப்பா பிள்ளைகள்.
தனசேகர், இந்துமதி மற்றும் ராஜவள்ளி மூவரும் இரணடாவது சித்தப்பாவின் பிள்ளைகள்!
ராஜவள்ளி குடும்பத்தினர் மட்டும் எப்போதும் சற்று விலகியே இருப்பர். அவருக்கு தன் அண்ணன்களின் நடவடிக்கைகள் பிடித்தமில்லை. இப்போதும் அவர்கள் ஊருக்கு வந்து விட்ட போதும் இன்னும் இவர்கள் வீட்டிற்கும் வரவில்லை. இன்று தோட்ட வீட்டிற்கும் வரவில்லை !

ராஜதுரை சித்தப்பாவின் மகன் சுஜித்தும், சங்கரி அத்தை மகன் சூர்யாவும் அவர்கள் செட்டிலேயே வெகு கலகலப்பானவர்கள். அவர்கள் வந்தாலே குதூகலம் தான்.
சுஜித் கணினி பொறியியல் பயின்று பெங்களூருவில் உள்ள ஒரு மென்பொருள் கம்பெனியில் பணியாற்றி வருகிறான் . அவனது அறிவும் திறமையும் அவனை உயர்த்தியிருக்க லட்சங்களில் சம்பளம் வாங்குபவன் .அடிக்கடி ஆன்சைட்டும் போய் வந்து கொண்டிருந்தான். இப்போது தன் நண்பர்களோடு இணைந்து தனியாக ஒரு ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்கும் ஆரம்பகட்ட வேலைகளில் இருந்தான்.

வேலை என்று வந்துவிட்டால் கால நேரம் பார்க்க மாட்டான் .. ஆனாலும் ரொம்பவும் குதூகலமும் கலகலப்பும் நிரம்பியவன்.

சூர்யாவுக்கும் சுஜித்தின் வயது தான். இருவரும் பள்ளி முதல் கல்லூரி வரை ஒன்றாகவே பயின்றவர்கள் .. துறைகள் தான் வேறு. இவன் ஆட்டோமொபைல் பயின்றுவிட்டு சொந்தமாக இரு சக்கர வாகன ஷோரூம் ஒன்று திறந்திருந்தான் சங்ககிரியில். இருவரும் மாமன் மச்சான் என்று சொல்வதைவிட உயிர் நண்பர்கள் என்றே சொல்லலாம்.

சமையல் அறையை ஒட்டிய கூடத்தில் அன்னையர் அனைவரும் அமர்ந்து வழக்காடியபடி காய்கறிகளை அறிந்து கொண்டிருக்க ..பிள்ளைகள் வாசலுக்கு முன் இருந்த ஓலை கொட்டகையின் அடியில் வேப்ப மர காற்றில் அமர்ந்து அரட்டையடிக்க தொடங்கிவிட்டனர்.

சந்தியாவுக்கு மட்டும் ஒரு கட்டில் போட்டு அதில் அமர்ந்திருக்க ..அவளுக்கு பக்கத்தில் சங்கீதாவின் இரு செல்வங்களும் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்தன.

அஜித் , சங்கீதா ,சுஜித் மூவரும் ராஜதுரை ,சாவித்ரியின் பிள்ளைகள்.
சுஜித்தின் அண்ணன் அஜித் அனைவரையும் விட மூத்தவன் என்பதால் எப்போதும் ஒரு கெத்துடனே சுற்றுவான்.
அதுவும் அடுத்த தலைமுறையில் ஊர்க்காரியங்களிலும் குடும்ப காரியங்களிலும் முதன்மையாய் இருக்க போவதால் இப்போதே ஆதிக்க மனப்பான்மை அவனுள் ஊறிக் கிடந்தது.
அவன் தாயும் மனைவியுமே அவனிடம் வார்த்தையாட தயங்குவார்கள். அவன் செவி சாய்ப்பது அப்பா பெரியப்பாவின் பேச்சுகளுக்கு மட்டும்தான்.
அவன் தன் மனைவி கஸ்தூரியையும் ஆறு மாத குழந்தை சைந்தவியையும் தன் காரில் கொண்டு வந்து விட ..எல்லோரிடமும் ஒரு அமைதி வந்துவிட்டது. கொஞ்சம் உற்சாகம் மட்டுப்பட்டது போல் இருந்தது.

கண்மணி " அண்ணா அண்ணி எப்படி இருக்கீங்க ?" என்று சம்பிரதாயமாய் விசாரிக்க "ம்ம் நல்லாருக்கேன் " என்று ஏனொ தானோ வென்று சொல்ல மற்றவர்களும் பேருக்கு விசாரித்து விட்டு நின்றனர்.

கஸ்தூரியை எல்லோருக்குமே ரொம்ப பிடிக்கும் .ரொம்ப அமைதியான பெண் அவள்.
அசலில் தான் அஜித்திற்கு பெண் எடுத்தார்கள் என்றாலும் அவனை விட கஸ்தூரி தான் ஒட்டுதலாக இருப்பாள். ஆனால் அவன் முன் மட்டும் எந்த ரியாக்க்ஷனும் இருக்காது !

சில நிமிடங்கள் அங்கிருந்த கட்டிலில் சந்தியாவின் அருகில் அமர்ந்தவன் ...எப்படி இருக்கிறாய் என்றெல்லாம் கேட்கவில்லை ."இந்த நிலைமையில இவங்க கூட சேர்ந்து கும்மாளம் போடணுமா ? ஒழுங்கா வீட்ல இருக்க வேண்டியது தானே?" என்றான் சிடுசிடுப்பாக.
"இல்லண்ணா.. வீட்டில தனியா இருக்க பயமா இருந்தது ..அதான் " என்றாள் உள்ளே போய்விட்ட குரலில்.
நல்ல வேலையாக அஜித்தின் அலைபேசி ஒலிக்க.. "அப்பா கூப்டுட்டாங்க. நான் போயிட்டு சாப்பாடு நேரத்துக்கு அப்பாவையும் பெரியப்பாவையும் கூட்டிட்டு வரேன் " அலைபேசியை ஆன் செய்து பேசியபடி கிளம்பிவிட்டான்.

அவன் கார் கிளம்பியது தான் தாமதம்.. ஆசிரியர் அந்த பக்கம் போனதும் வகுப்பு சந்தைக்கடை போல மாறிடுமே ..அப்படிதான் ஆனது.

"ஹாய் அண்ணி ..வாங்க வாங்க " எல்லோரும் ஆரவாரம் செய்ய.. கஸ்தூரி பெருமூச்சு விட்டாள்.
"அண்ணி உங்களுக்கு அமைதிக்கான நோபல் ப்ரைஸ் கொடுக்கணும் அண்ணி .எப்படிதான் சமாளிக்கிறீங்களோ " தன்யஸ்ரீ சொல்ல ..
"அவங்க எங்க பேசுறாங்க.. நித்யம் மௌன விரதம் " என்றாள் ஸ்வாதி.
"எங்கண்ணனுக்கு கொஞ்சம் சாப்பாட்டில உப்பு கம்மியா போடுங்கண்ணி..கோவம் குறையட்டும் " என்றாள் சந்தியா. அவன் திட்டியதில் அவளுக்கு மனம் தாங்கவேயில்லை.

"எதுக்கு ..வீட்ல தட்டு பறக்கவா? கஸ்தூரி அக்காவை டேமேஜ் பண்ண வழி சொல்ற மாதிரி இருக்கே. இவங்க சொல்றதெல்லாம் கேட்டு ஏதாவது பண்ணி மாட்டிக்காதீங்க ." என்றாள் தன்யஸ்ரீ .
எல்லாவற்றிற்கும் பதில் ஒரு புன்னகை மட்டுமே கஸ்தூரியிடம் !
"சும்மா இருங்கப்பா..கோவம் கொஞ்சம் வரும்..மத்தபடி நல்ல மாதிரி உங்கண்ணன் " என்றாள் விட்டு கொடுக்காமல் !

" எப்படி…? கொஞ்..ஜமா கோவம் வருமா? அண்ணி ..அன்னை கஸ்தூரி பாய்க்கே போட்டியா வருவீங்க போலவே " என்று தன்யஸ்ரீ கலாய்க்க ..மறுபடி அரட்டை தொடர்ந்தது.
"அதுசரி சுஜித்து ..உனக்கெப்போ கல்யாணம் ?" என்றாள் சந்தியா .
"எனக்கென்னக்கா அவசரம் ? நம்ம கண்மணி தன்னு ஸ்வாதி எல்லாம் இருக்காங்களே ..அவர்களுக்கெல்லாம் முடிச்சிட்டு ஒரு ரெண்டரை வருஷம் கழிச்சு பண்ணிக்கலாம் அக்கா " என்றான் பணிவாக.

அவன் பதவிசாக பதிலளித்ததிலேயே அவனை சந்தேகமாய் பார்த்தாள் சந்தியா "இதென்னடா ரெண்டரை வருஷ கணக்கு ?"
"ஹா ஹா ..அப்போதானேக்கா காலேஜ் முடியும் ?" என்றான் சூர்யா .
"இவன் காலேஜ் முடிச்சு பல வருஷம் ஆச்சேடா ! அரியர் எதுவும் வச்சிருக்கியாடா ?" என்று சந்தியா அப்பாவியாய் கேட்க ..

"காலேஜ் முடிக்க வேண்டியது அவன் இல்ல .. அவன் லவ்வர் " என சூர்யா ராகமாய் கூறவும் "யாருடா அது?"அனைவரும் வாயை பிளந்து சுஜித்தை பார்க்க அவனோ தோளை குலுக்கியபடி அசட்டு சிரிப்பு சிரிக்க ..முகம் சிவந்து வெட்க புன்னகையோடு நின்ற தன் தங்கை ஸ்வரூபாவை பார்த்ததும் விஷயம் விளங்கியது ஸ்வாதிக்கு.

"அடிப்பாவி உடன்பிறப்பே ..எத்தனை நாளா நடக்குது இந்த கூத்து ?" தன் தங்கையின் முகவாயை நிமிர்த்தி பிடித்து கேட்க "இப்போ கொஞ்ச நாளா தான்கா" என்றாள் மெல்லிய குரலில் .
சற்று நேரம் ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி ஓட்டி கொண்டிருக்க செல்வியும் பூமணியும் இவர்கள் அருகே வருவதை கண்டு பேச்சை நிறுத்தினர்.

பூமணி "ஏங்கண்ணு கண்மணி ? இன்னிக்கும் சமைக்கோணுமா ? பேசாம இந்த சோமேட்டோவோ டொமெட்டோவோ சொல்றாங்களே..அதுல சாப்பாடு கொண்டு வர சொல்லலாமுல்ல? நாங்களும் ரெஸ்ட் எடுப்போம். உங்க அம்மாக்களும் ரெஸ்ட் எடுக்கலாம்.." எனவும் இடையிட்டாள் செல்வி "என்னடி சொல்ற?"
"ஆமாம் செல்வி.. போன வாரம் எங்க அண்ணன் ஊட்டுக்கு போனெனில்ல..அங்க என்ற அண்ணன் மவ இப்படித்தான் போன எடுத்து என்னத்தையோ அமுக்குனா ..சோறு வந்து எறங்குது"
"அப்படியா? " முகவாயை கைவைத்து செல்வி அதிசயிக்க ..கண்மணிக்கு சிரிப்பு தான் வந்தது.

"செல்வியக்கா..இங்கல்லாம் அது இன்னும் வரல ..சென்னை மாதிரி ஊருல எல்லாம் எல்லா பொண்ணுங்களும் வேலைக்கு போறாங்க ..சமைக்க நேரம் இல்ல இல்லியா? அதான் அதில வாங்கி சாப்புடுறாங்க".

"ஏன் கண்மணி ?எங்களையெல்லாம் பாத்தா வேலைக்கு போறவுங்க மாதிரி தெரியலையா? நாங்கல்லாம் பிள்ளைகளுக்கு சமைச்சு வைக்காமையா வர்றோம் ?" என்று பாயிண்டை பிடித்தாள் செல்வி.

"அக்கா ..விட்டா யுவர் ஹானர்னு நியாயம் கேட்டுருவ போல ..அங்கேயும் எல்லாரும் சமைப்பாங்க ..சில நேரம் தான் இதுல வாங்கி சாப்புடுவாங்க .அதுக்கும் பணம் செலவழிக்கணும்ல?"
"அது மட்டும் இல்லக்கா. ஹாஸ்டல் சாப்பாடு சாப்பிட்டு வயிறு காஞ்சு வந்திருக்கேன். கரெக்ட்டா சொல்லனும்னா உன் சமையலையும் எங்க அம்மா சமையலையும் சாப்புட நாக்கை தொங்கப் போட்டுட்டு வந்திருக்கேன். என்ன ஏமாத்திடாதக்கா "

கண்மணி தன் சமையலை பற்றி பேசவும் மனம் குளிர்ந்து போன செல்வி " ஆமாம் கண்மணி . என்ன இருந்தாலும் வீட்டு சாப்பாடு மாறி வருமா .ஏய் பூவு சும்மா பேசிக்கிட்டே இருக்காம சமையல் பண்ண வா. கண்மணி புள்ளைக்கு பசிக்க போகுது." என்று பூமணியையும் அழைத்துக் கொண்டு சமையல் அறைக்கு சென்றாள்.

பிள்ளைகள் பேச்சும் கிண்டலுமாக அந்தாக்ஷரி, டாம்ஸராட்ஸ் என்று ஆண்டாண்டு காலமாக விளையாடப்படும் வீர விளையாட்டுகளை ஆடிக் கொண்டிருக்க சந்தியாவிற்கு நா வரட்டியது.
"கண்மணி கொஞ்சம் தண்ணி கொண்டு வாயேன்" என்று பணிக்க எழுந்து உள்ளே சென்றாள் கண்மணி.

வீட்டினுள் உள்ளே நுழைந்தவளின் செவிகளில் அன்னைமார்களின் பேச்சு விழுந்தது. அதில் தாமரையின் பெயர் கேட்கவும் சற்றே தாமதித்தாள்.

"இந்த தாமரை இருக்காளே ..சரியான கெரகம் புடிச்சவ “ என்ற பரிமளாவின் குரல் கேட்டது.
 
Last edited:
❤ ❤ ❤ பெரிய பாட்டாளம் ஒண்ணும் புரியல யாரு யாருனு.. ஆக மொத்தம் கண்மணி கதிரை மீட் பண்ணவே இல்ல இன்னும் அது மட்டும் புரிஞ்சது
 
Last edited:
இத்தனை பெரிய கூட்டத்தை கூட்டிட்டு வந்துருக்காளே எப்படி கதிரை சந்திக்க முடியும்.. ?
 
கதிரு ரொம்ப பாவமப்பா ...
இந்த கூட்டத்தில் இருந்து தப்பி எப்படி போறதாம்..??
சூப்பர் 😀
 
Top