Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காதல் வலம் வர 2

Advertisement

Admin

Admin
Member
அத்தியாயம் இரண்டு :

கோவிலின் பயணம் இனிதே துவங்க, அவர்களுடன் விகாஸும் இருந்தான். அவனுக்கு மாலை போடவில்லை, கீழே பம்பையில் குளித்த பின் அவனுக்கு போட்டுக் கொள்ளலாம் என்று மனோகணபதி அழைத்துக் கொண்டான். ஏனோ தனியாய் நிலையை எதிர்கொள்ள தைரியமில்லை. தங்கையின் வாழ்வு ஏதாவது முடிவு எடுத்தே ஆக வேண்டும். தங்கையினது மட்டுமல்ல, அம்மாவினதும் கூட. நினைத்தாலே நெஞ்சம் அப்படி ஒரு தொய்வை உணர்ந்தது. எப்படி இருந்த அவர்களின் வாழ்வு, எல்லாம் மாறிவிட்டது.

விகாஸிற்கு உடைகள் இல்லை, எதுவும் இல்லை, அவசரமாய் இரண்டு செட் உடைகள் கரிஷ்மா கொண்டு வந்து கொடுக்க, இதோ அப்பாவும் மகனும் பக்கத்தில் பக்கத்தில், இவர்களுக்கு எதிர்புறம் இரண்டு சீட் பின்னில் ராஜராஜனும் ஜகதீஷும் அமர்ந்திருந்தனர்.

ராஜராஜன் ஜன்னல் அருகில் கண்மூடி இருக்க.. அப்பாவின் அருகில் இருந்த விகாஸ் எட்டி எட்டி பார்க்க, ஜகதீஷிற்கு பயமாய் போய்விட்டது

“நண்பா” என்றான் ராஜராஜனின் கையை சுரண்டி, பதில் பேசாமல் ராஜராஜன் கண்ணை திறந்து தலையை திருப்பி பார்க்க,

திரும்பி திரும்பி பார்க்கறான்.

“யாரு?” என்று கண்களால் வினவ,

“கலக்டர் சர் பையன்”

“அப்படியா” என்ற பாவனையை கொடுத்து தலையை திருப்பி கண்களை மீண்டும் மூடிக் கொள்ள,

“அய்யனே இந்த பயணத்தை எந்த பிரச்சனையுமில்லாமல் முடித்து தாரும்” என்று ஜகதீஷும் கண்களை மூடி அவசர வேண்டுதலை வைத்து முடிக்க கூட இல்லை,

“ஹாய் அங்கிள்” என்று மழலையாய் ஒரு குரல் கேட்க,

அவசரமாய் கண்களை ஜகதீஷ் திறந்து அவன் முன் இருந்த விகாஸை பார்த்தவன் பின்பு ராஜராஜனை பார்க்க, அவனோ அசையக் கூட இல்லை.

“சொல்லுங்க சாமி” என்று பயபக்தியாய் விகாஸை பார்த்து பேச,

“நான் இங்க உட்காறுரேன், நீங்க வேற இடம் போங்க” என்றான் தெளிவாய், ஆனால் மழலை மாறாத குரல்.

“நண்பா” என்று மீண்டும் நண்பனை அழைக்க, அவனோ அசையவே இல்லை.

“சுவாமி சரணம்” என்று சொல்லி ஜகதீஷ் எழுந்து முன் சென்று விட,

விகாஸ் அவனின் சீட்டில் அமர முற்பட முடியாமல் “மாமா” என்று கை தொட்டு ராஜராஜனை அழைத்தான்.

அதற்கு மேல் கண்களை மூட முடியாமல் அவன் கண்ணை திறக்க, “என்னை இங்க உட்கார வைங்க” என்றது அந்த வாண்டு,

ஒரு பெருமூச்சை வெளியிட்ட ராஜராஜன் அவனை தூக்கி அமர வைக்க, “தேங்க்ஸ்” என்றவன் நன்றாக சாய்ந்து அமர்ந்து கொண்டான்.

பின்பு “பப்பா” என்று ஒரு குரல் கொடுக்க,

“என்ன விகாஸ்” என்று மனோ குரல் கொடுக்க,

“ஐ அம் ஹங்ரி”

டிஃப்ன் பாக்ஸ் எடுத்து சப்பாத்தி வைத்து கொடுத்தான் பொறுமையாய் ஜகதீஷ், மகனுக்கு வைத்து கொடுத்ததும் மனோ நிமிர்ந்து பார்க்க,

மனோ பார்த்ததும் விகாஸும் பார்த்து “மாமா, நீங்களும் சாப்பிடறீங்களா” என்று ராஜராஜனின் கை அசைத்து கேட்க, ராஜராஜனின் பொறுமை பறக்க துவங்க, ஒன்றும் பேசாமல் வேகமாய் எழுந்தவன், அந்த இடத்தை விட்டு நகர்ந்து முன் சென்று நின்று கொண்டான்.

எதிரில் இருந்த மனோவை நகரு என்று கூட சொல்லவில்லை, அவனை இடித்துக் கொண்டு நகர்ந்து சென்றான். அதை பார்த்து விகாஸ் என்னவோ ஏதோ வென்று பார்க்க, “இட்ஸ் அ ப்ளே” என்றான் மனோ அவனை சமாளிக்கும் விதமாய்.

மனோவின் பதவிக்கும் அவனுடைய பின் புலத்திற்கும் ராஜராஜன் என்ற ஒருவன் ஒன்றுமே இல்லாதவன். அவன் இடித்த நேரம் அவன் நினைத்திருந்தால் இந்த வேனில் இருந்து தூக்கி கூட வீசி அடித்திருப்பான், அவ்வளவு தேர்ச்சி தற்காப்பு கலைகளில், பின்னே அவன் கலக்டர் என்பது இரண்டாம் பட்சம் அவன் ஒரு ராணுவ வீரனின் மகன், அதுவும் அப்பா மிக உயர்ந்த பதவி கூட, இப்போது மேஜர் ஜெனரல் ஆக இருப்பவர், இன்னும் சில வருடங்களில் ஜெனரலாக கூட பதவி உயர்வு பெரும் நிலையில் இருப்பவர்.

விகாஸ் பார்த்துக் கொண்டே இருப்பதினால் பொறுமை பொறுமை என்று சொல்லிக் கொண்டவன், “ஜஸ்ட் மாமாவும், நானும் ப்ளே பண்றோம்” என்று இன்முகமாக மீண்டும் சொல்லி, அவன் உண்டு முடிக்கும் வரை பொறுமையாய் இருக்க,

வழியில் எதோ கலவரம், வண்டிகள் நிறுத்தப் பட்டு சோதனைகள் மேற்கொள்ளப் பட்டு இருக்க, “மாட்டிக் கிட்டோம்டா, எப்போ இதை சரி பண்ணுவாங்க தெரியலையே” என்று ஆளாளுக்கு சலிக்க, அமைதியாய் இறங்கிய மனோ அவனின் பதவியை சொல்லி, அவர்களின் வாகனத்தை எல்லோருக்கும் முன் சோதனையிட சொல்லி, ஐந்தே நிமிடத்தில் அந்த இடத்தினில் இருந்து, அவர்கள் வாகனம் முன் செல்ல வழி விடப் பட...

“நண்பா உன் மச்சான் பெரிய ஆள் போல” என்று ஜகதீஷ் ராஜராஜனிடம் சொல்ல,

“அதை எதுக்கு நண்பா நீ என்கிட்டே சொல்ற, நீ சொல்லி தெரிஞ்சிக்கற அளவுக்கு நான் இருக்கனா, இல்லை அவன் இருக்கானா” என்று பதில் சொல்ல,

அப்போது வாயை பூட்டிக் கொண்டவன் தான் ஜகதீஸ் வாயே திறக்க வில்லை, மதிய உணவு வேளை வரையிலும்.

மதியம் ஒரு மத்தியதர ஹோட்டல் பார்த்து நிறுத்தப் பட, அப்படி ஒரு யோசனை மனோ கணபதிக்கு, அங்கே உண்ண, அங்கே வேறு ஹோட்டல்களும் இல்லை,

ஜகதீஷ் அவனாகவே வந்து “இங்க நல்லா இருக்கும் சர், நீங்க சாப்பிடலாம், ரொம்ப சுத்தமா கூட பண்ணுவாங்க, நாங்க கோவிலுக்கு போகும்போது இங்க தான் பலவருஷமா சாப்பிடறோம். இங்க எங்க சொந்தக் காரங்க இருக்காங்க, அவங்க கூட சொல்லுவாங்க” என்று சொல்ல,

அதன் பிறகே உள் நுழைந்தான்.

விகாஸ் நேராக ராஜராஜன் அமர்ந்திருக்கும் டேபிள் சென்று அமர்ந்து கொள்ள, ராஜராஜன் எழப் போக, இந்த முறை மனோ அவனிடம் “உட்காருங்க” என்றான் உடனே சிறு வற்புறுத்தலோடு.

ராஜ் ராஜன் அப்போதும் எழுந்து நின்று விட...

“புரிஞ்சிக்கங்க, நம்ம பிரச்சனைகள் நம்மோட குழந்தைக்கு என்ன தெரியும்? பாட்டி எப்பவும் உங்களை பத்தி தான் விகாஸ் கிட்ட ஆஹா ஓஹோன்னு பேசறாங்க, அதனால குழந்தை உங்களை தேடி தேடி வர்றான். நீங்க ஏன் இப்படி எழுந்து போறீங்க, அவன் ஹர்ட் ஆகறான், போகாதீங்க” என்று பேசினான்.

இவர்கள் பேசியது விகாஸிற்கு கேட்காத மாதிரி மெதுவான குரலில் தான் பேசினான்.

விகாஸும் ராஜராஜனின் முகத்தை ஆர்வமாய் பார்த்து இருக்க, “எங்க கிழவி ஒரு பைத்தியம்” என்று ராஜராஜன் நிற்க,

“ப்ளீஸ் உட்காருங்க, உங்க கிட்ட பேசறதுக்காக மட்டும் தான் இந்த பயணமே, அதுக்காக தான் நான் கோவிலுக்கு மாலையே போட்டேன், நானும் பல முறை முயற்சி பண்ணிட்டேன், நீங்க மாலை போட்டா தான் கொஞ்சம் பொறுமையா இருப்பீங்க சொன்னாங்க” என்று மனோ உடைத்து பேச,

எதையும் காதில் வாங்கமால் ராஜராஜன் நகரப் போக, “பயமோ என்னை பார்த்து உங்களுக்கு” என்று மனோ அவனை சீண்ட,

“எனக்கு உன்னை பார்த்து பயமா?” என்றான் ராஜராஜன் சின்ன கிண்டல் சிரிப்போடு.

இதற்கு மனோ அவனை விட மூன்று வயது பெரியவன், அவன் ராஜராஜனை “வாங்க, போங்க” என்று பேச ராஜராஜன் அவனை “வா, போ” என்று பேசினான்.

பதவிக்கும் மரியாதை கொடுக்கவில்லை, வயதிற்கும் மரியாதை கொடுக்கவில்லை, உறவிற்கும் மரியாதை கொடுக்கவில்லை.

மனோவிற்கு அது புரிந்தாலும், கோபம் வந்தாலும், எதையும் காண்பித்து கொள்ளவில்லை.

மனோ சீண்டுகிறான் என்று புரிந்த போதும் அந்த சீண்டலுக்கு எல்லாம் மசிபவன் ராஜராஜன் இல்லை என்ற போதும், அமர்ந்தவன் “நான் தான் உன்னை மதிக்கறது இல்லை, பேச விருப்பமில்லைன்னு சொல்றேன், காமிச்சு கொடுக்கறேன், அப்புறம் நீ ஏன் என்கிட்டே பேசற” என

“எனக்கு உங்க கிட்ட பேச எதுவுமே கிடையாது. எனக்கு நல்ல அப்பா அம்மா இருக்காங்க, நல்ல மனைவி இருக்கா, அழகான அறிவான ரெண்டு குழந்தைங்க இருக்காங்க, பணம் இருக்கு, பதவி இருக்கு, ஆள் பலம் இருக்கு, எல்லாம் இருக்கு” என்று அவன் பேசிக் கொண்டு இருக்கும் போதே இடையிட்ட ராஜராஜன்.

“இப்போ என்ன இதெல்லாம் என்கிட்டே இல்லைன்னு சொல்றியா” என்றான் அலட்சியமாக.

“எனக்கு இதுக்கு தான் உங்களை பார்த்தாலே பயம், உங்ககிட்ட பேச பயம், நான் சொல்றதை நீங்க சரியா புரிஞ்சிக்கணும்னு” என்று நிறுத்தியவன்,

“நீங்களும் இப்படி ஒரு வாழ்க்கை வாழலாம்னு தான் சொல்றேன், நான் பேசறது அம்மாக்காகவும் என் தங்கைக்காகவும்” என்று முடித்தான்.

பொறுமையை தனக்குள் முயன்று கொண்டு வந்த ராஜராஜன், ஒரு பெரு மூச்சை வெளியிட்டான்.

“உன் அம்மாவை பத்தி எனக்கு ஆகவேண்டியது ஒண்ணுமில்லை, உன் தங்கையை பத்தி எனக்கு சொல்றதுக்கு ஒண்ணுமில்லை, சேர்ந்து வாழறது சாத்தியமில்லை, எனக்கு மட்டுமில்லை அவளுக்கும். எங்களுக்குள்ள எங்கயும் பொருத்தம் கிடையாது, அவளை கூட்டிட்டு போங்க, எங்கன்னாலும் நான் கையெழுத்து போடறேன்”

“இதுக்கு ரெண்டு வருஷம் காத்திருக்க வேண்டாமே, கல்யாணமாகி ரெண்டு வருஷம் ஆச்சு, இதுக்கு பிறகு இப்படி ஒரு முடிவு ஏன் எடுக்கணும், முன்னமே எடுத்திருக்கலாமே” என்றான் மனோ.

“எனக்கு புரியலை என்னை சுத்தி என்ன நடந்ததுன்னே? இப்படி ஒரு கல்யாணம் நடந்தது ஏன்னு கூட தெரியலை, சரி சரியாக்கிகுவோம்னு நினைச்சா, பெரியப்பாக்கு இஷ்டமில்லை, இப்போ வரைக்கும் அவர் பேச்சை வீட்ல யாரும் மீற மாட்டாங்க”

“இந்த கல்யாணம் தாத்தா நடத்தி வெச்சதால பாட்டி இதை சரி பண்ணனும் நினைக்கிறாங்க”

“ஆனா எனக்கு புரிஞ்ச வரை அங்கை பிறந்து வளர்ந்த விதமே வேற, அவ படிப்பும் வேற , எங்களுக்குள்ள சரி வராது”

“ஏன்னா எங்க குடும்பம் இப்படி ஆனதுக்கு காரணம் உங்க அம்மா, இன்னைக்கும் எங்களுக்குன்னு இருக்குற மரியாதை இருக்கு இல்லைன்னு சொல்லலை, ஆனா வசதி ஒன்னுமே இல்லாம போயிட்டோம், எங்களால எங்களை சேர்ந்தவங்க நிறைய பேர் கஷ்டப் பட்டு இருக்காங்க”

“என்ன அப்படி பாழாப் போன காதல். எங்க இத்தனை பேரோட வாழ்க்கையை மாத்திடிச்சு, அப்படி இருக்கிறவங்க பொண்ணோட நான் எப்படி வாழ முடியும், சாத்தியமில்லை”

“அப்போ எதுக்கு உங்க தாத்தா இந்த கல்யாணத்தை நடத்தி வெச்சார்” என்றவனிடம்,

“பார்த்தியா உன்னோட தாத்தா சொல்ற. அப்போ உனக்கு யாரு அவர், இது தான் வித்தியாசம், இது சரி வராது”

“ஆனா உன் தங்கை ஏன் இங்க இந்த ஊர்ல இருக்கா எனக்கு புரியலை, எங்க கிழவி சொல்றதை கேட்டுட்டு இருந்தா அவளை விட முட்டாள் கிடையாது”

“அவளை கூட்டிட்டு கிளம்பிட்டே இருங்க” என்று இத்தனையும் பேசி முடித்த போது, அவர்கள் உண்டிருந்தனர்.

விகாஸ் மனோவின் மீது உறங்கியிருக்க, அவர்கள் பயணமும் துவங்கி இருக்க, மனோவிடம் இவ்வளவு நேரம் பேசி இருந்தவன், எழுந்து அவனின் இருக்கையில் சென்று அமர்ந்து கொண்டான்.

“உங்களுக்கு நடந்துதுக்கு எங்கம்மா என்ன பண்ணுவாங்க?” என்று மனோ அவன் எழும்போது ஒரு கேள்வி கேட்க,

அதற்கு பதிலே சொல்லவில்லை ராஜராஜன்.

நடந்தவைக்கும் நடப்பவைக்கும் யாரும் பொறுப்பாக முடியாது எனும் போதும், நடந்தவை இல்லையென்று ஆகி விடாது!

காதல் எந்த மொழியிழும் ராஜராஜனுக்கு பிடிக்காத வார்த்தை!

அவனுக்கு சற்றும் குறையாத காரத்தோடு அங்கையற்கண்ணி அவளின் அம்மா ராஜலக்ஷ்மியோடு பேசிக் கொண்டிருந்தாள் கை பேசியில்.. “சும்மா அழாதம்மா, எனக்கு கோபம் வரும்” என்று

அந்த புறம் ராஜலக்ஷ்மியின் கேவல் தான் கேட்டது, “மா, எதுக்கு அழற? அப்பா உன்னோட பேசலைன்னு எந்த நிமிஷமும் ஃபீல் செஞ்சு அழற, அப்படி என்ன அவர் பேசலைன்னா, போடான்னு சொல்லிட்டு விட மாட்டியா?

அப்படி என்ன அப்பா மேல காதல் உனக்கு, அதையும் விட நம்ம மரியாதை நமக்கு முக்கியம் மா. அது கணவர் கிட்டன்னாலும்” என்று அவள் சொல்ல,

“உனக்கு இன்னும் காதல் வரலை அங்கை, அதான் நீ இப்படி பேசற” என்று ராஜலக்ஷ்மி சொல்ல,

“யக், ஐ ஹேட் திஸ் லவ், இப்படி ஒரு விஷயம் எனக்கு தேவையேயில்லை”

“நீ அப்பாவோட பேசறியா”

“பேசமாட்டேன், கண்டிப்பா பேச மாட்டேன், இந்த கல்யாணம் நடந்ததுக்கு நீ பொருப்பில்லைன்னு தெரிஞ்சும் உன்னை தள்ளி வெச்சு டார்ச்சர் பண்றார், அப்படி என்ன அவருக்கு?”

“நான் இங்க உங்களால தான் இங்க உட்கார்ந்து இருக்கேன்”

“அப்பா கிட்ட பேசுடா, இங்க வந்திடு, அங்க உன்னால இருக்க முடியாது. அங்க வீடும் உனக்கு சரி வராது, அங்க எல்லோரும் என்னை சொல்லி சொல்லியே உன்னை ஒரு வழியாக்கிடுவாங்க”

“ஆக்கட்டுமே மா, அதனால என்ன, நீ காதலிச்ச, நீ கல்யாணம் பண்ணிக்கிட்டு போயிட்ட, ஆனா அதனால இங்க இவங்க மொத்த பேரும் பாதிக்கப் பட்டு இருக்காங்க”

“அவங்க தொழில் எல்லாம் போச்சு, சொத்து எல்லாம் போச்சு, இன்னைக்கு பிள்ளைங்க தலையெடுத்து கொஞ்சம் சுமாரா இருக்காங்க, இதுக்கு காரணம் யாரு, நீங்க தானே! அப்போ உங்களை கொஞ்சுவாங்களா? நீங்க இதை எப்படி எதிர்பார்க்கறீங்கன்னு புரியலை” என்று அவரை வார்த்தைகளால் விளாசினாள்.

“எங்கம்மா உன்னை அதையும் இதையும் பேசி திசை திருப்பி இருக்காங்க”

“மா, நான் சின்ன பொண்ணு கிடையாது, எனக்கு இருபத்தி நாலு வயசாகுது, நல்லது கெட்டது எனக்கு தெரியும், தெரியலைன்னாலும் கத்துக்குவேன், புரியுதா?”

“நீங்க மிஸ்டர் அன்பழகனை பாருங்க, எனக்கு என்னை பார்த்துக்க தெரியும்” என்று காய,

“உங்கப்பா டா அவர், உன்னை பார்த்து பார்த்து அவ்வளவு அருமை பெருமையா வளர்த்தார்”

“அப்படி தானே உங்கப்பா உங்களை வளர்த்தார், உங்களை கூட்டிட்டு ஊரை விட்டு ஓடிப் போகும் போது அது அவருக்கு தெரியலையா?” என்று பேச,

ராஜலக்ஷ்மியிடம் ஒரு கேவல் வெடிக்க, கைபேசியை கரிஷ்மாவிடம் கொடுத்தவள், அவள் கையிலிருந்த ஸ்ருஷ்டியை வாங்கி கொண்டு அந்த இடத்தை விட்டு அகல,

வெளிவாயில் திண்ணையில் நாச்சி உட்கார்ந்து இருக்க,

“உங்க பொண்ணு அங்க அழுது ஆர்ப்பாட்டம் பண்ணுது, என்ன தான் பொண்ணு வளர்த்து வெச்சிருக்கீங்களோ” என்று பேச,

அங்கையர்கண்ணியை வியந்து தான் பார்த்திருந்தார் நாச்சியம்மாள், என்னவோ அவர் தான் சொல்லிக் கொடுத்து கெடுப்பது போல, அந்த ஊரில் அவளை கட்டாயமாய் இருக்க வைத்திருப்பது போல ஒரு தோற்றம் இருக்கும்.

உண்மையில் அப்படி கிடையாது அங்கையின் இஷ்டம் தான் எல்லாம்!

அவள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறாள் என்று அவளுக்கே வெளிச்சம். ஆனால் நிச்சயம் ராஜராஜனை அல்ல!









ஆக்கமும் எழுத்தும்

மல்லிகா மணிவண்ணன்
 
:love: :love: :love:

திருப்பதி போனால் திருப்பம் சொல்வாங்க.......
இங்கே அண்ணன் பம்பைக்கு போறானே திருப்பதுக்காக...........

மாலை போட்டாதான் பொறுமையா இருப்பானாம் :D:D:D
இது பெரு பொறுமையாப்பா கலெக்டர்??? ஒரு சின்ன பையன் கிட்டவே அந்த மை இல்லை........ பொண்டாட்டி கிட்ட எப்படி இருந்திருக்கும்???

அச்சச்சோ........ என்னப்பா இது....... நீ வேணாம்னுற....... அவ உன்னை நினைக்கலையாம்......... அப்புறம் எதுக்கு ஒரு கல்யாணம்???
அதை எந்த காலத்திலோ காதல் கல்யாணம் பண்ணி உங்க வீட்டு problem எல்லாம் எப்போவோ நடந்தது....... அதுக்கு பிறகும் எப்படி கல்யாணம் மட்டும் நடந்துச்சு???
பொண்ணை சேர்த்து வைக்க தாத்தா பண்ணின ideaவா??? அவரோட பெண்ணுக்காக இப்போ ரெண்டு பெரும் தனியா நிக்குறீங்க....... எத்தனை பேருக்கு கஷ்டம்......
ராஜராஜா உங்க பெரியப்பா தான் உன்கூட கடைசி வரை வரப்போறாரா???
கல்யாணம் ஆனால் நம்மோட விருப்பு வெறுப்புகள் அதனால் வரும் வம்புகள் ஓகே........
அம்மாக்கு பிடிக்கலை பெரியப்பாக்கு பிடிக்கலை னு சொல்றதெல்லாம் ஓவர் இல்லை....... அப்புறம் ஏன் அந்த கல்யாணத்தை பண்ணனும்???
***************
@Admin பொறுமையாய் ஜெகதீஷ்....... அது ஜெகதீஸ் or மனோ???
 
Last edited:
என்ன சொல்லுவேன்
எப்படி சொல்லுவேன்

இப்படி ஒரு எபி கொடுத்தா.
அது படிச்சி வாயடைச்சு போச்சு

காதல் திருமணத்தின்
காயங்கள்
காலம் கடந்தும்
ஆறாத ரணமாய்
மாறாத மனங்களில் ‌...
 
Last edited:
மல்லி.. எங்களை நல்லா சுத்தல்ல விடறீங்க..

என்ன தான் நடந்துச்சி..

யாருக்குமே பிடிக்காத இந்த கல்யாணம் எப்படி தான் நடந்துச்சி..
 
Last edited:
அப்படித்தானே உங்கப்பா உங்களை வளர்த்தார்...... உங்களை கூட்டிட்டு ஊரை விட்டு ஓடி போகும் போது அது அவருக்கு தெரியலையா???

பொண்ணு நியாயமா பேசுறா??? அம்மாவும் அப்பாவும் செய்த தப்பினால் தன் வாழ்க்கை கேள்வி குறியாகுதுனு புரியுது.....
ராஜராஜனை நினைக்கலையாமே.......
பிறந்து வளர்ந்த விதம் படிப்பு........ சரி வராதாமே வீட்டுக்காரனுக்கு......... கல்யாணம் பண்ணும்போது படிக்கலையாப்பா???
mediator விகாஸ் :love::love::love: மாமாவை அசைக்க முடியலையே.........
 
Last edited:
Hi
அங்கை மனதில் ராஜராஜன் இல்ல...
அவனுக்கு காதல் பிடிக்கல
அத்தையை பிடிக்கல
அங்கை அவன் குடும்பத்தினருக்காக அவளோட அம்மா கிட்ட
செம்ம கேள்வி...
 
Last edited:
மல்லி.. எங்களை நல்லா சுத்தல்ல விடறீங்க..

என்ன தான் நடந்துச்சி..

யாருக்குமே பிடிக்காத இந்த கல்யாணம் எப்படி தான் நடந்துச்சி..
தாத்தாவோட கடைசி ஆசை போல...
 
Top