Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காற்றில் வரைந்த ஓவியம் ...3..

Advertisement

Srija Venkatesh

Well-known member
Member
அத்தியாயம் 3.

வெள்ளிக்கிழமையை எதிர்பார்த்துக் காத்திருந்தாள் கோமதி. அந்த வயதில் இருக்கும் அனைத்துப் பெண்களுக்கும் ஏற்படும் எதிர்பார்ப்பும், சிறு அச்சமும் அவளுக்கும் இருந்தது. வக்கீல் என்றால் பெரிய படிப்பு தான். என்னை சிறு குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பவள் தானே என்று அலட்சியமாக நினைப்பாரோ? அப்படி எதுவும் அவர் சொன்னால் கட்டாயம் நான் கல்யாணத்துக்கு ஒப்புக் கொள்ள மாட்டேன். என்றபடி சிந்தனை ஓடியது.



வெள்ளிக் கிழமை காலையிலேயே அவர்கள் தங்கள் உறவினர் வீட்டுக்கு வந்து விட்டதாக தகவல் சொன்னார் பரமு மாமா. அம்மாவுக்குக் கவலை பிடித்துக் கொண்டது. எல்லாம் நல்லபடியாக நடந்து முடிய வேண்டுமே? என பிள்ளையாருக்கு காசு முடிந்து வைத்தாள். மாலை சுமார் ஐந்து மணிக்கு அவர்கள் வருவதாகச் சொல்லி அனுப்பினர். அம்மா ஏதோ தன்னால் முடிந்த பலகாரங்கள் செய்தாள். சாதாரண சில்க் புடவை கட்டி சிம்பிளாகத் தன்னை அலங்கரித்துக் கொண்டாள் கோமதி. அம்மாவால் வாசலுக்குச் சென்று வரவேற்க முடியாது என்பதால் பரமு மாமாவின் மனைவி மீனா அத்தை முன்னரே வந்து கூட மாட ஒத்தசையாக இருந்தாள்.



சரியாக மாலை ஐந்து மணிக்கு வந்து விட்டார்கள். அன்றைக்குப் பார்த்த உறவினர், அவரது மனவி கூடவே தாயும் மகனும் நுழைந்தனர். வந்தவர்களை வரவேற்றுக் கூடத்தில் அமர வைத்தாள் மீனா அத்தை. அம்மாவும் வந்து அனைவரையும் வரவேற்றாள். கொஞ்ச நேரம் சம்பிரதாயமாகப் பேசிக்கொண்டிருந்தனர்.



"நல்ல நேரம் போகிறதுக்குள்ள பொண்ணை வரச் சொல்லுங்க! பார்த்துடறோம்" என்றாள் மரகதம்மாள் தோரணையாக. காப்பி பலகாரத் தட்டுக்களோடு நுழைந்த கோமதியை வைத்த கண் வாங்காமல் பார்த்தான் ராகவன்.



"வாம்மா வந்து இப்படி என் பக்கத்துல உக்காரு" என்று அழைத்தாள் மரகதம். தலையை உயர்த்தி அவர்களைப் பார்த்தாள். பார்த்த மாத்திரத்திலேயே ராகவனின் அழகு கம்பீரம் அவளை ஈர்த்தது. மரகதத்தின் முகமும் அவளை ஆவலோடு பார்த்தது.



"இல்லை நான் கீழேயே உக்காந்துக்கறேன்." என்று சொல்லி விட்டுத் தாயின் அருகில் அமர்ந்தாள் கோமதி.



"இதுக்குத்தான் அண்ணே நாங்க கிராமத்துப் பொண்ணு தான் வேணும்னு கேட்டோம்! என்ன அடக்கம்! என்ன பணிவு! ஹூம்! இந்தக் காலத்துல மத்த பொண்ணுங்க யாரையும் மதிக்க மாட்டாங்க" என்றாள் மரகதம்.



"நீ உள்ளே போம்மா!" என்றாள் அம்மா கல்யாணி.



"இல்லை போக வேண்டாம்னு சொல்லுங்க ஆண்ட்டி! அவங்க உள்ள போயிட்டா இங்க வெளிச்சம் குறைஞ்சி போயிடும்" என்றான் ராகவன் அழகான முறுவலுடன். அர்த்தம் புரியாத பெரியவர்கள் திரு திருவென விழித்தனர். தான் இங்கே இருப்பதால் தான் அந்த இடமே பிரகாசமாக இருக்கிறது என்று அவன் சொன்னது கோமதியின் மேல் பூக்களை வாரிச் சொறிந்தது போல இருந்தது. தனது வெட்கச் சிரிப்பை மறைத்துக் கொண்டாள்.



"ஏம்மா! என் மகனை நல்லாப் பார்த்துக்கோ! ஏதாவது கேக்கணும்னா கேளு! அப்புறம் என்னைப் பேசவே விடல்லன்னு சொல்லக் கூடாது" என்றாள் பெரிய மனித தோரணையுடன் ராகவனின் தாய்.



அவனது முகத்தைப் பார்த்து பார்த்து இன்புற வேண்டும் என்ற ஆவலை வெட்கமும் கூச்சமும் தடுத்தது. மனம் அவளது கட்டுப்பாட்டிலேயே இல்லை.



"ஏங்க! நீங்க வேலை பாக்கறீங்களா?" என்று அவனே ஆரம்பித்தான்.



தலையை ஆட்டினாள் அவள்.



"நீங்க டீச்சர் டிரியிங்க் படிச்சிருக்கிறதா அம்மா சொன்னாங்க! உங்களுக்கு விருப்பம் இருந்தா நீங்க கல்யாணத்துக்கு அப்புறமும் வேலைக்குப் போகலாம். இஷ்டமில்லேன்னா வேண்டாம். ஏன்னா சின்னப் பிள்ளைங்களுக்கு சொல்லிக் குடுக்க ஆபாரத் திறமையும், நிறையப் பொறுமையும் வேணும். உங்களோட திறமையை நான் வீணாக்க விரும்பல" என்றான்.



மனதுள் மகிழ்ச்சி ஊற்றெடுத்தது.



"என்ன இருந்தாலும் நிறையப் படித்தவர் அல்லவா? அது தான் ஆசிரியப் பணியின் பெருமை இவருக்குத் தெரிந்திருக்கிறது. என் படிப்பை மதிக்கிறார். இதை விட எனக்கு என்ன வேண்டும்?" என்று களிப்பில் மூழ்கினாள்.



"என்னங்க உங்க மக ஒண்ணுமே பேச மாட்டேங்குறா? என் மகனைப் பிடிச்சிருக்கா இல்லையான்னு கேட்டு சொல்லுங்க! இவன் என்னடான்னா கல்யாணத்துக்கு அப்புறம்னு எங்கியோ போயிட்டான்" என்றாள் மரகதம்.



கல்யாணி மெதுவாக கோமதியின் அருகில் குனிந்து "என்னாம்மா சொல்ற?" என்றாள் தனது தலையை அசைத்தாள் கோமதி.



"வெறுமே தலையசைச்சாப் போதாது! எனக்கு இவனைப் பிடிச்சிருக்குன்னு சொல்லணும். அப்பத்தான் எனக்குத் திருப்தி" என்றான் ராகவன். நாணம் மேலிட அவனைப் பார்த்தாள். அவனது கண்கள் சொல்லேன் பிளீஸ் எனக் கெஞ்சின.



"எனக்கு இவரைப் பிடிச்சிருக்கு" என்றாள் மிக மெல்லிய குரலில். கைகளைத் தட்டினான் அவன்.



"உஷ்! சும்மா இருடா! பொண்ணு பயந்துக்கப் போகுது! சரி அப்ப முஹூர்த்தத்துக்கு தேதி குறிச்சிடலாமா?" என்றாள் மரகதம்.



"அது வந்துங்க.. வந்து.. நாம மத்த விஷயத்தையெல்லாம் பேசவே இல்லையே? அதுக்குள்ள எப்படி முஹூர்த்தம் குறிக்க? அண்ணே சொல்லுங்களேன்" என்றாள் கல்யாணி கொஞ்சம் கவலையோடு.



"மத்த விஷயம்னா? சீர் செனத்தி இதைப் பத்தியா?"



"அதுவும் தான்! அப்புறம் வந்து நாங்க ஒரு தடவை சென்னை வந்து உங்க வீட்டையும் பாக்கணும். எங்க கிராமத்துல மாப்பிள்ளை வீடு பாக்கன்னு நிறைய சொந்த பந்தங்களைக் கூட்டிக்கிட்டு பொண்ணு வீட்டுக்காரங்க போவாங்க! அதே மாதிரி.." என்று இழுத்தார் பரமசிவம்.



தாயும் மகனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.



"ஓ! அதுக்கென்ன? தாராளமா வாங்களேன்!" என்றான் ராகவன்.



மரகதம் குறிக்கிட்டு "இப்ப சித்திரை மாசம் முடியப்போகுது. வைகாசியில கல்யாணத்தை வெச்சுக்கலாம்னு நெனச்சேன். ஏன்னா அதுக்கப்புறம் ஆனி, ஆடின்னு கல்யாணம் பண்ண முடியாது. ஆனா நீங்க சொல்றதும் நியாயம் தான்" என்றாள்.



"எங்களுக்கு கொஞ்சம் அவகாசம் குடுங்கம்மா! கல்யாணம்னா சும்மாவா? மண்டபம் பாக்கணும், நகை நட்டு வாங்கணும், சீர் செய்யணும். நினைச்சாலே கலக்கமா இருக்கே?" என்றாள் கல்யாணி கவலையோடு.



"கல்யாணம்னா சந்தோஷப்படணுமே தவிர கலங்கக் கூடாது! பொண்ணு வீட்டுக்காரங்களைக் கசக்கிப் பிழியற டைப்பு நாங்க கிடையாது. எனக்கு இருக்கிறது ரெண்டே பசங்க தான். மூத்தவன் பெங்களூர்ல நல்ல வேலையில இருக்கான். மருமக ரயில்வேல வேலை பாக்குறா. ராகவனைப் பத்தி நான் சொல்லவே வேண்டாம். கை நிறைய சம்பாதிக்கிறான். எங்களுக்கு சொந்த பந்தமும் நல்ல குடும்பமும் தான் முக்கியமே தவிர பணமோ நகையோ இல்ல" என்றாள் ராகவனின் அம்மா.



பதில் பேசாமல் அமர்ந்திருந்தனர் பெண் வீட்டார்.



"ஏனோ அவர்கள் அனாவசியமாக அவசரப்படுத்துவது போலப் பட்டது பரமசிவத்துக்கு.



"அம்மா கொஞ்சம் இங்க வெயிட் பண்ணுங்க! நாங்க கலந்து பேசிட்டு சொல்றோம்" என்று கூறி விட்டு கல்யாணியையும், கோமதியையும் உள்ளறைக்கு அழைத்துச் சென்றார் பரமசிவம். கூடவே மீனாவும் போனாள்.



"கல்யாணி! எனக்கென்னவோ இவங்க ரொம்ப அவசரப்படறாங்கன்னு தோணுது! நாம சென்னைக்குப் போயி விசாரிக்க வேண்டாமா? நீ என்ன சொல்ற?"



"எனக்கும் ஒண்ணும் புரியல்லண்ணே! இவங்க பேசுறதைப் பார்த்தா கையோட முஹூர்த்தம் குறிச்சிடுவாங்க போலிருக்கே? பணம் வேண்டாம், நகை வேண்டாம்னு வேற சொல்றாங்க! எனக்கு குழப்பமா இருக்கு! நீ என்ன சொல்ற கோமதி?"



"நீங்க சென்னைக்குப் போயி மாப்பிள்ளை வீட்டைப் பார்த்துட்டு அப்புறம் என்ன பண்ணுவீங்க? மிஞ்சிப்போனா அக்கம் பக்கத்துல விசாரிப்பீங்க! இவங்க கெட்டவங்களாவே இருந்தாக்கூட யாராவது இவங்க கெட்டவங்கன்னு வெளிப்படையாச் சொல்லுவாங்களா? அப்புறம் என்ன தெரிஞ்சிப்பீங்க?" என்றாள்.



பரமசிவம் சிரித்து விட்டார்.



"கல்யாணி! இனி பேசி பிரயோஜனம் இல்லை. இவ முடிவு பண்ணிட்டா. இவ ஆசைப்படியே கல்யாணத்தை முடிச்சிடுவோம். " என்றார். கல்யாணியும் சிரித்துத் தலை அசைத்தாள்.



"அம்மா! நீங்க ஆசைப்பட்டபடியே கல்யாணத்தை முடிச்சிடலாம். " என்றார்.



வந்தவர்களுக்கு மிகுந்த சந்தோஷம். "அப்ப கல்யாணத் தேதியையும் இன்னைக்கே குறிச்சிடலாமே! எதுக்கு நாள் கடத்துவானேன்?" என்றாள் அந்த அம்மாள்.



"எங்க தெருவுல கோயில் குருக்கள் ஒருத்தர் இருக்காரு. அவரைக் கூப்பிட்டு கல்யாணத்துக்கு முஹூர்த்தம் பாக்கச் சொன்னா அழகாப் பார்த்துக் குடுத்துடுவாரு. இருங்க அவரைக் கூப்பிடுறேன்" என்றவர் செல்ஃபோனை எடுத்துக் கொண்டு வெளியில் சென்றார்.



பத்து நிமிடத்தில் இடுப்பில் தொங்கும் சாவியோடு வந்து விட்டார் சுப்பிரமணிய குருக்கள். பஞ்சாங்கத்தை எடுத்துப் பார்த்தார். மணமகனின் நட்சத்திரம், ராசியைக் கேட்டு மணமகளுக்கும் அதே போலக் கேட்டார். கொஞ்ச நேரம் அவரது கண்கள் பஞ்சாங்கத்தை மேய்ந்தன.



"அடடே! இன்னும் பத்தே நாள்ல நல்ல முஹூர்த்தம் இருக்கே? இவா ரெண்டு பேர் நட்சத்திரத்துக்கும் ரொம்ப நல்ல நாளா வேற இருக்கு. அன்னிக்கே கல்யாணத்தை வெச்சிண்டுடுங்கோ" என்றார் வெற்றிலை வாயுடன்.



"பத்தே நாளா? அதுக்குள்ள அத்தனை ஏற்பாடும் பண்ண முடியுமா? கொஞ்சம் தள்ளி நாள் பாருங்க குருக்கள் ஐயா" என்றாள் கல்யாணி.



"கொஞ்சம் தள்ளின்னா..." என்று இழுத்தவர் "இவா ரெண்டு பேர் நட்சத்திரத்துக்கும் பொருந்தினாப்போல நாள் இதுக்கப்புறம் ஆவணி மாசம் தான் வருது.! அது ஓகேயா உங்களுக்கு?" என்றார்.



"ரெண்டு மாசம் ரொம்ப டூ மச்! அத்தை நீங்க முத முஹூர்த்ததுலயே கல்யாணத்தை நடத்திடுங்க! அதான் நல்லது" என்றான் ராகவன் அவசரமாக. அனைவரும் சிரித்தனர்.



"இல்லை வந்து.. மண்டபம் புக் பண்ணனும், அப்புறம்.." என்று இழுத்தாள் கல்யாணி.



"அப்புறம் நகை வாங்கணும்..இதையே எத்தனை தடவை தான் சொல்லுவீங்க? இப்ப எல்லாமே ரெடிமேட் நகைகள் தான். ஆசாரிய விட்டா செய்யச் சொல்லப் போறீங்க? புடவையும் நகையும் ஒரே நாள்ல வாங்கிடலாம் என்ன சொல்றீங்க?" என்றான் ராகவன்.



"அப்புறம் மண்டபம் எதுக்கு? இது சொந்த வீடுன்னு சொன்னாங்க! அப்புறம் என்ன கவலை? வீட்டு வாசல்ல ஒரு பந்தல் போட்டு கல்யாணத்தை முடிச்சிட்டாப் போகுது! கல்யாண மண்டபத்துக்குக் குடுக்குற காசை பொண்ணு பேர்ல பேங்குல போட்டா அவங்களுக்கு உதவியா இருக்கும். அதை விட்டுட்டு மண்டபம் அது இதுன்னு ஏன் இப்படி கவலைப் படுறீங்க?" என்றாள் மரகதம்.



"கல்யாணி இவங்க சொல்றதும் எனக்கு சரின்னு தான் படுது! இந்த வீட்டுல வெச்சு கல்யாணத்தை நடத்திட்டு நம்ம சரசு அக்கா வீட்டுல பந்தி போட்டுறலாம். பெரிய வீடு. அங்க அக்காவைத் தவிர யாரும் இல்லை. அவங்க ஒண்ணும் சொல்ல மாட்டாங்க. நீ என்ன நினைக்கிற?" என்றார் பரமசிவம்.



சரியெனத் தலையாட்டினாள் கல்யாணி. கோமதியின் முகத்தில் மகிழ்ச்சி கொப்பளித்தது.



பிறகு எல்லாமே கனவில் நடப்பது போல இருந்தது. அன்றே பாக்கு வெற்றிலை மாற்றிக் கொண்டார்கள். பெண்ணுக்கு 20 பவுன் நகையும், பண்ட பாத்திரங்களும் கொடுப்பதாகச் சொன்னாள் கல்யாணி. அவ்வாறே ஒப்புக் கொண்டனர் மாப்பிள்ளை வீட்டார்.



சனிக்கிழமையும், ஞாயிற்றுக் கிழமையும் போனதே தெரியவில்லை. இன்னும் பத்தே நாட்கள் தான் கல்யாணத்துக்கு என்பதால் ராகவனும் மரகதமும் தன் அண்ணன் வீட்டில் தங்கியிருந்து கல்யாணத்தை முடித்துக் கொண்டு பெண்ணை அழைத்துக் கொண்டு போய் விடுவது என தீர்மானித்தனர். இது தான் சாக்கென்று தினமும் கோமதியைப் பார்க்க வந்துவிடுவான் ராகவன். வெட்கத்தில் கூசிப் போவாள் கோமதி.



"இப்படி என்னைப் பாக்க வாராதீங்க! இது உங்க சென்னை இல்ல! இங்க எல்லாரும் ஒரு மாதிரிப் பேசுவாங்க" என்றாள் கோமதி.



"என்ன பேசுவாங்க? எனக்கு நிச்சயம் பண்ணின பொண்ணைத்தானே நான் பாக்க வரேன். நீ கவலையை விடு கோம்ஸ்! எனக்கு உங்க கிராமத்தைச் சுத்திக் காட்டு" என்றான் சிரிப்புடன்.



"கிராமத்துல சுத்திப்பாக்க என்ன இருக்கு?"



"என்ன இப்படிச் சொல்லிட்ட? நான் இது வரைக்கும் கிராமமே பார்த்ததில்ல! வயல் வெளி, அழகான ஆறு இதெல்லாம் ரொம்ப நல்லா இருக்கு! நீ சென்னை பார்த்துருக்கியா?"



"இல்லை"



"சென்னையில நம்ம வீடு நகரத்தோட மையத்துல இருக்கு. எந்நேரமும் காரும், பைக்கும் போய் வந்தபடியே தான் இருக்கும். இந்த மாதிரி அமைதியை எதிர்பார்க்க முடியாது"



"உங்க வீடு பெருசா இருக்குமா?"



"நம்ம வீடுன்னு சொல்லு! உம் பெருசு தான்."



"ஏங்க! உங்க ஃபிரெண்ட்சுங்க, மத்த உறவுக்காரங்க எல்லாருக்கும் கல்யாணப் பத்திரிகை குடுத்தாச்சா? அவங்க எல்லாரும் எப்ப வருவாங்க? எத்தனை பேருக்கு சமையல் சொல்லணும்னு எங்க அம்மா கேட்டுட்டு வரச் சொன்னாங்க"



"எங்களுக்கு சொந்தக்காரங்கன்னு யாரும் சென்னையில இல்ல! அப்படியே இருக்கறவங்களும் ரொம்ப பிசி! லீவு போட்டுட்டு கல்யாணத்துக்கு வர மாட்டாங்க! அதனால நான் சென்னையில வெச்சு பெரிய ரிசப்ஷன் ஏற்பாடு பண்ணியிருக்கேன். அதுக்கு கூட்டம் வரும் பாரு! ஹை கோர்ட் ஜட்ஜஸ், லாயர்ஸ், அரசு அதிகாரிங்கன்னு எல்லாருமே பெரிய மனுஷங்களா வருவாங்க"



தன் வருங்காலக் கணவன் எத்தனை செல்வாக்கு உள்ளவன் என்று மனம் மகிழ்ந்தாள் கோமதி.



"நாங்க நாலே பேரு தான் வருவோம். பெங்களூர்லருந்து அண்ணனும் அண்ணியும் வந்தாலும் வருவாங்க! எங்க சைடுலருந்து அவ்வளவு தான்."



"அப்ப எங்க சைடு உறவுக்காரங்களால தான் பந்தல் நிறையப் போகுதுன்னு நினைக்கிறேன். ஏங்க நான் ஒண்ணு கேட்டா நீங்க கோவிச்சுக்க மாட்டீங்களே?"



"கேளு கோம்ஸ்"



"எனக்கு பீச் பாக்கணும்னு ரொம்ப ஆசை! சின்ன வயசுல எப்பவோ அப்பாவோட திருச்செந்தூர் போன போது பார்த்தது. சரியா நினைவு கூட இல்ல! அப்புறம் சினிமால பார்த்தது தான். என்னை பீச்சுக்குக் கூட்டிக்கிட்டுப் போவீங்களா?"



கடகடவென நகைத்தான் அவன்.



"நம்ம வீட்டுலருந்து பீச் ரொம்ப பக்கம் தான். தினமும் வேணும்னாலும் கூட்டிக்கிட்டுப் போறேன். இப்ப கொஞ்ச கிட்ட வாயேன்" என்றான்.



"ம்ஹூம்! எல்லாமே கல்யாணத்துக்கு அப்புறம் தான்" என்றவள் மானாக ஓடி மறைந்தாள்.



நல்லதொரு முஹூர்த்த நாளில் அனைவரும் வாழ்த்த கோமதியின் மணிக்கழுத்தில் தாலி கட்டினான் ராகவன். கடமை முடிந்ததென்று கண்களைத் துடைத்துக் கொண்டாள் கல்யாணி.
 
அண்ட புளுகு, ஆகாச புளுகு....கல்யாணத்தை
நடத்தி விட்டதுங்க.
கோம்ஸ் என்ன ஆவாளோ....????
 
அடக்கடவுளே இப்படி
மொள்ளமாரி குடும்பத்துல
பொண்ணு குடுத்துட்டாங்க
 
அடக்கடவுளே இப்படி
மொள்ளமாரி குடும்பத்துல
பொண்ணு குடுத்துட்டாங்க
இப்படித்தாங்க சில அப்பாவிங்க அவசரப்பட்டுடறாங்க!
 
Top