Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

காற்றில் வரைந்த ஓவியம் 8....

Advertisement

Srija Venkatesh

Well-known member
Member
அன்பு நண்பர்களே,

கடந்த சில நாட்களாக எனது வைஃபை இயங்காததால் என்னால் பதிவு போட முடியவில்லை. தாமதத்துக்கு வருந்துகிறேன்.

அத்தியாயம் 8.



கோமதிக்கு அழகான ஆண்குழந்தை பிறந்து ஐந்து மாதம் ஆகி விட்டது. மூன்றாம் மாதமே கல்யாணி மகளை அழைத்துக் கொண்டு சென்னை வந்து விட்டாள். அவர்கள் வீட்டுப் பக்கத்திலேயே ஒற்றை அறை ஒன்றை வாடகைக்கு எடுத்துக் கொண்டு தங்கி விட்டாள் கல்யாணி. மாலதியும் அவள் கணவனும் பெரிதும் உதவினார்கள். குழந்தைக்கு வசந்த் என்று பெயரிட்டாள் கோமதி.



அவளுக்கு பக்கத்திலேயே இருக்கும் ஒரு பெரிய பள்ளியில் வேலை கிடைத்து விட்டது. மாதம் 15,000 சம்பளம் என்று சொன்னதும் நிம்மதிப் பெருமூச்சு விட்டாள் கோமதி. பக்கத்திலேயே வீடு என்பதால் நடந்தே போய் விடுவாள். காலை எட்டு மணிக்குக் கிளம்பினாள் என்றால் மதியம் நான்கு மணிக்குத் திரும்புவாள். குழந்தையை கல்யாணி நன்றாகக் கவனித்துக் கொண்டாள்.



மாதாமாதம் 20,000 ரூபாய் ராகவன் கொடுக்க வேண்டும் என்று பேச்சு. ஆனால் ஒட்டு மொத்தமாகக் கொடுக்காமல் ஐந்தாயிம் இரண்டாயிரம் என்று கொடுப்பான். கொடுத்தவரை லாபம் என்று வாங்கிக் கொண்டு விடுவாள் கோமதி. வாழ்க்கை ஒருவாறு ஓடிக் கொண்டிருந்தது.



ராகவன் புதிதாக சிட்ஃபண்டு பிசினஸ் ஆரம்பித்தான்.



"கோம்ஸ்! நீ ஸ்கூல்ல வேலை பாக்கற டீச்சர்கள் கிட்ட சொல்லி எங்கிட்ட சீட்டு சேரச் சொல்லேன்! நமக்கு நல்லது தானே? பிசினஸ் நல்லா வளருமே?" என்றான்.



"சரிங்க சொல்றேன்!" என்று சொல்லிவிட்டாள்.



சொன்னது போலவே கலைவாணி டீச்சர், ஆறுமுகம் சார், மல்லிகா டீச்சர் என மாதா மாதம் 1500 ரூபாய்க்கு சீட்டு சேர்ந்துக் கொடுத்தாள்.



அப்போது தான் வீட்டுக்கு ராகவனைத் தேடி பலர் வந்தனர்.



"ராகவன் சார் இல்லீங்களே? அவரு வெளிய போயிருக்காரு" என்பாள். இப்போது வர வர அவர்களிடம் மரியாதையைப் பார்க்க முடியவில்லை. ஒரு ஞாயிற்றுக் கிழமை அவள் ஓய்வாக அமர்ந்து குழந்தைக்கு எண்ணெய் தேய்த்துக் கொண்டிருந்தாள். அப்போது பலத்த வாக்கு வாதம் கேட்டது. கெட்ட வார்த்தைகள் சரளமாகப் பரிமாறப்பட்டன. பெரிய கூட்டமே கூடி ராகவனை திட்டுவதாகப் பட்டது அவளுக்கு. குழந்தையையும் தூக்கிக் கொண்டு கீழே இறங்கினாள்.



"என்னம்மா! உன் புருஷனை என்ன பண்றோம்னு பாக்க வந்தியா? அவன் ஒரு ஃபிராடு, நீ ஒரு ஃபிராடு. ரெண்டு பேரும் சேர்ந்து எங்களை ஏமாத்தவா பாக்கறீங்க?" என்று வயதில் பெரியவர் போல இருந்தவர் கத்தினார். மற்றவர்கள் ராகவனை அடிக்கவும் சித்தமாயிருந்தனர்.



"சார்! அனாவசியமா வார்த்தையைக் கொட்டாதீங்க? என்ன நடந்தது? ஏன் இப்படிக் கத்தறீங்க?" என்றாள் கோமதி.



"ஒண்ணுமே தெரியாத மாதிரி கேக்காதம்மா! நீயும் உன் புருஷனும் சேர்ந்து தானே சிட்ஃபண்டு நடத்தறீங்க? ஆறு மாசத்துக்கு முந்தி நான் அதுல 50,000 ரூவா போட்டேன். இப்ப எனக்கு அவசரமாப் பணம் தேவைப்படுது. கொடுன்னு கேட்டா இன்னைக்குத் தரேன், நாளைக்குத்தரேன்னு இழுக்கறான் உன் புருஷன்" என்றார்.



துணுக்குற்ற நெஞ்சை சரிப்படுத்திக் கொண்டாள். மலங்க மலங்க விழித்த குழந்தையை அம்மா கல்யாணி வந்து தூக்கிப் போனாள். கூட்டத்தின் பக்கம் திரும்பினாள் கோமதி.



"சார்! சிட் ஃபண்டு பிசினசுன்னா ஏத்தம் எறக்கம் எல்லாமே தான் இருக்கும். இப்ப அவரால காசு பொரட்ட முடியலையோ என்னவோ? இன்னும் பத்து நாள்ல குடுத்திடுவாரு. என்னங்க சொல்லுங்களேன்" என்றாள் கணவனைப் பார்த்து.



பதிலே பேசாமல் மௌனமாக நின்றான். அவனது மௌனம் வயிற்றைக் கலக்கியது கோமதிக்கு.



"இதப்பாரும்மா! நீ பாக்க படிச்ச கௌரவமான பொம்பளை மாதிரி இருக்க! அதனால இவனை விட்டுட்டுப் போறேன். எண்ணி பத்தே நாள் தான். என் பணம் கைக்கு வரலைன்னா நான் போலீஸ்ல புகார் குடுக்க வேண்டியிருக்கும். சொல்லிட்டேன். பார்த்துக்கம்மா! இவன் உன்னையும் சேர்த்து இழுத்து விட்டுறப் போறான்" என்று சொல்லி விட்டுப் போய் விட்டனர்.



மெல்ல நகர முயன்ற ராகவனை கட்டாயப்படுத்தி வீட்டுக்குள் அழைத்து வந்தாள். மனைவியின் முகத்தையே கூடப் பார்க்காமல் நின்றிருந்தான்.



"நீங்க உங்க மனசுல என்ன நெனச்சுக்கிட்டு இருக்கீங்க? நல்லாப் பொய் சொல்லி என் வாழ்க்கையை அழிச்சீங்க! அதைக்கூட பார்க்காம நான் உங்களோட குடும்பம் நடத்தினேன். இப்பத்தான் கொஞ்ச நாளா நிம்மதியா இருக்க ஆரம்பிச்சேன். அது பொறுக்கலியா உங்களுக்கு?"



"என்ன சொல்ற கோம்ஸ்? நான் என்ன செஞ்சேன்?" என்று மெல்லக் கேட்டான்.



அவனை அப்படியே அறைந்து தள்ளலாமா என்று தோன்றிய ஆத்திரத்தைக் கட்டுப்படுத்திக் கொண்டாள்.



"சிட் ஃபண்டு பிசினஸ்ல என் பேரையும் சேர்த்துருக்கீங்கன்னு ஏன் எங்கிட்ட சொல்லல்ல?"



"அது..வந்து...வந்து.."



"என்னோட பொசிஷன் என்ன உங்க பிசினஸ்ல? அதைத் தெரிஞ்சிக்கலாமா?" என்றாள் கோபத்தை அடக்கிக் கொண்டு.



"நீயும் நானும் சம அளவு பாங்குதாரர்."



பேச்சிழந்து போனாள் கோமதி.



"ஏங்க அப்படி செஞ்சீங்க? நான் உங்களுக்கு என்ன தப்பு பண்ணினேன்?"



மனைவியின் கையைப் பிடித்துக் கொண்டான் ராகவன். அதைத் தட்டி விட்டாள் கோமதி.



"கண்ணம்மா! நீ தான் என் உசிரு! உன்னைச் சேர்த்தாதான் எனக்கு நல்ல லாபம் கிடைக்கும். எல்லாமே நல்லா நடக்கும். அதான் சேர்த்தேன் கோம்ஸ்!" என்றான்.



"அப்ப ஏன் அந்தப் பெரியவருக்குப் பணம் குடுக்க மாட்டேன்னு சொல்றீங்க?"



"கோம்ஸ்! அவரு 30,000 ரூவாதான் போட்டாரு. ஆனா 50,000 ரூவா போட்டேன்னு சொல்லித் திருப்பிக் கேக்குறாரு. எப்படி நான் குடுப்பேன்? நீயே சொல்லு?"



"அப்படீன்னா நீங்க அதை அவர்ட்ட சொல்ல வேண்டியது தானே? ஏன் மௌனமா நின்னீங்க?"



மீண்டும் அமைதியானான் அவன்.



"எனக்கென்னமோ சந்தேகமா இருக்கு! உங்க ஆபீஸ் கணக்கு புக்கைக் காட்டுங்க பார்த்தாத்தான் எனக்கு நிம்மதி! ஐயோ உங்களை நம்பி எங்க ஸ்கூல் டீச்சர்களையெல்லாம் மெம்பர் ஆக்கினேனே! என் மானம் போகுதே" என்று புலம்பினாள்.



அம்மாவிடம் விவரம் சொல்லி குழந்தைக்கு மட்டும் தேவையானதைக் கொடுத்து விட்டு கணவனோடு ஆபீஸ் கிளம்பினாள். கணக்குகளைப் பார்க்க பார்க்க தலை சுற்றியது அவளுக்கு. எல்லாமே குளறுபடியாக இருந்தன. அந்தப் பெரியவரின் கணக்கில் 50,000 ரூபாய் வரவு வைக்கப்பட்டிருந்தது. ஆனால் இன்னொரு இடத்தில் வெறும் 30,000 மட்டுமே காட்டப்பட்டிருந்தது. அதே போலத்தான் மற்றவர்களுக்கும். முதலில் ஒரு கணக்கு. பிறகு சில ஆயிரங்கள் குறைத்து வேறொரு இடத்தில் கள்ளக் கணக்கு என்று எழுதப்பட்டிருந்தது.



ராகவன் செய்யும் பிசினசின் லட்சணம் அவளுக்குப் புரிந்து விட்டது. தலையை முடிந்து கொண்டாள். கணவனைப் பார்த்து தெளிவாகப் பேசினாள்.



"நீங்க பண்றது முழுக்க முழுக்க தப்பு. கணக்கு எதுவுமே நேரா இல்லை! அதனால முதல்ல இந்த பிசினசை இழுத்து மூடுங்க! யார் யாருக்கு காசு கொடுக்கணுமோ அத்தனையும் ஒரு பைசா விடாம செட்டில் பண்ணுங்க! அப்புறம் பாத்துக்கலாம் வேற என்ன செய்யணும்கிறதை" என்றாள்.



இருவரும் மௌனமாக வீடு வந்தனர். அங்கே அம்மா குழந்தையை வைத்துக் கொண்டு பதட்டமாகக் காத்திருந்தாள். என்னவோ ஏதோ எனப் பதறினாள். நல்ல வேளை குழந்தைக்கு ஒன்றுமில்லை. மாலதியக்காவும் தயங்கி நின்றார்கள்.



"என்னம்மா? என்னக்கா? ஏன் இப்படிப் பதட்டமா இருக்கீங்க?" என்றாள்.



ஒன்றும் பேசாமல் இருவரையும் அழைத்துக் கொண்டு வீட்டின் உள்ளே சென்றனர். மாலதியின் கணவன் முத்துசாமியும் சேர்ந்து கொண்டான்.



"சிஸ்டர்! என்னை மன்னிச்சிடுங்க! நான் எவ்வளவோ சொல்லிப் பார்த்தேன். ஆனா ஓனர் கேக்கவே இல்ல" என்றான் முத்துசாமி மொட்டையாக.



"நான் சொல்றேன் கோமதி! இன்னைக்குக் காலையில உங்க வீட்டுக்கு யார் யாரோ வந்து கத்திக் கூச்சல் போட்டுட்டுப் போனாங்க இல்ல? அது நம்ம ஓனர் காதுக்குப் போயிடிச்சு! கொஞ்ச நேரத்துக்கு முன்ன அவரு வந்தாரு."



கல்யாணி தொடர்ந்தாள்.



"ரொம்பக் கோவப்பட்டாரு கோமதி! உங்களை காலி பண்ணச் சொல்லிட்டாரு. இது கௌரவமானவங்க இருக்கிற எடம். இந்த மாதிரி ஏமாத்துப் பேர்வழிங்க இருக்கக் கூடாதுன்னு சொல்லிட்டுப் போயிட்டாருடி! மாலதி வீட்டுக்காரர் எவ்வளவோ சொல்லிப் பார்த்தாரு. ஆனா ஓனர் கேக்கவே இல்ல" என்றாள்.



துவண்டு போய் அப்படியே அமர்ந்தாள் கோமதி.



"அவரு என்ன பெரிய இவுரா? நாங்க தான் வாடகை கரெக்டா குடுக்கறோமே? அப்புறம் எப்படி அவரு எங்களைக் காலி பண்ணச் சொல்ல முடியும்? நீ கவலைப் படாத கோம்ஸ்! நான் பார்த்துக்கறேன். வரட்டும் அந்தக் கெளவன். நாலு தட்டு தட்டுனா தன்னால அடங்கிடுவான்." என்றான் ராகவன்.



கையை எடுத்துக் கும்பிட்டாள் கோமதி.



"தயவு செஞ்சி நீங்க வாயை மூடிக்கிட்டு இருங்க! நீங்க செஞ்ச உதவியெல்லாம் எனக்கு ஏழு ஜென்மத்துக்கும் போதும். நீங்க உங்க பிசினசை மூடி பணத்தைக் குடுக்கற வழியைப் பாருங்க! இதை நான் பாத்துக்கறேன்" என்றாள் பாதி கோபம் மீதி அழுகையாக.



விருட்டென வெளியேறினான் ராகவன்.



"என்னடி நடந்தது? நானே கேக்கணும்னு நெனச்சேன். எதுக்கு அவரைக் கூட்டிக்கிட்டு ஆபீஸ் போன?" என்றாள் அம்மா.



"என் தலை விதிம்மா! எனக்கு வாழ்க்கையில நிம்மதியே இருக்கக் கூடாதுன்னு கடவுள் எழுதிட்டானோ என்னவோ தெரியலையே?" என்று மௌனமாக அழுதாள். பெற்றவள் வயிறு கலங்கியது. மாலதி தான் தேற்றினாள்.



"இந்தா கோமதி! என்ன நடந்ததுன்னு சொல்லு! எதுவானாலும் நாங்க இருக்கோம் உன் கூட! சொல்லும்மா" என்றாள் பரிவாக.



"அக்கா! அவரு கணக்கு எல்லமே தப்புத்தப்பா எழுதியிருக்காருக்கா! 50,000 ரூவா போட்டவங்களுக்கு 30,000னு கணக்குக் காட்டியிருக்காரு. அதே மாதிரி தான் எல்லாமும். இதுல நானும் ஒரு பார்ட்னர்" என்றாள்.



மூவரும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.



"நீ என்ன சொன்ன?"



"எல்லாத்தையும் மூடிட்டு அவங்க அவங்க பணத்தைக் கொடுங்கன்னு சொன்னேன். வேற என்ன செய்ய முடியும்?"



முத்துசாமி மனைவியைக் கை காட்டி அழைத்தான்.



"மாலு! இவங்க பாவம்! மனசு கலங்கிப் போயி இருக்காங்க! நீ பக்கத்துல இருந்து பார்த்துக்க! நான் போயி சாப்பிட ஏதாச்சும் வாங்கிட்டு வந்துடறேன். பிறகு நீ அவங்களைக் கூட்டிக்கிட்டு ஹவுஸ் ஓனர் வீட்டுக்குப் போ! அவரைப் பார்த்துப் பேசி இனி அப்படி நடக்காதுன்னு சொல்லு! கைக்குழந்தையை வெக்சுக்கிட்டு இவங்க என்ன செய்வாங்க" என்றான்.



மாலதியும் கல்யாணியும் தேற்றினார்கள். கட்டாயப்படுத்தி இரண்டு இட்லி சாப்பிட வைத்தார்கள். பிறகு பெண்கள் இருவரும் குழந்தையை கல்யாணியிடம் விட்டு விட்டு ஹவுஸ் ஓனரைப் பார்க்கக் கிளம்பினார்கள். வாசலில் ஊஞ்சலில் அமர்ந்திருந்தார் அவர். கோமதியைப் பார்த்ததும் முகம் கடுகடுவென ஆனது.



"இந்தாம்மா! கிராமத்துக்காரங்கன்னு நம்பித்தான் நான் வீடு குடுத்தேன். குருவி மாதிரி சேர்த்து கட்டுன வீடு. காவாலிப் பசங்க குடியிருக்க விட முடியாது. நீ காலி பண்ணிரு. நீ குடுத்த அட்வான்சை நாளைக்கே திருப்பிக் குடுத்துடறேன்." என்றார். அவர்களை உட்காரக் கூடச் சொல்லவில்லை.



அவமானத்தால் கண்ணீர் வந்தது கோமதிக்கு.



"சார்! நாங்க கௌரவமான குடும்பம் தான் சார்! ஏதோ இப்ப கொஞ்சம் போதாத காலம். என் புருஷன் யாரையும் ஏமாத்த மாட்டாரு. எல்லாப் பணத்தையும் திருப்பிக் குடுக்கறேன்னு சொல்லிட்டாரு. இனிமே யாரும் வந்து கத்த மாட்டாங்க சார்! எங்களுக்கு ஒரு சந்தர்ப்பம் குடுங்க சார்" என்று கெஞ்சினாள்.



மாலதியும் தன் பங்குக்கு எடுத்துச் சொல்லவே கொஞ்சம் இரக்கம் காண்பித்தார் அவர்.



"நீ இவ்வளவு தூரம் சொல்றதால இன்னும் மூணு மாசம் பாப்பேன். அதுக்குள்ள மறுபடி உன் புருஷனைத் தேடிக்கிட்டு யாராவது வந்து கத்தி கலக்கி ஆர்ப்பட்டம் செஞ்சாங்கன்னா அடுத்த நாளே காலி பண்ணணும். புரியுதா? அப்புறமும் என்னை மன்னிச்சிடுங்கன்னு கேட்டுக்கிட்டு நிக்கக் கூடாது! என்ன? போ! போயி! வேலையைப் பாரு" என்று அவர்களை அனுப்பி வைத்தார்.



ஒரு பிரச்சனையைத் தீர்த்த மகிழ்ச்சியோடு மறு நாள் பள்ளிக்குச் சென்றாள். அங்கும் அவளுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.



"கோமதி டீச்சர்! உங்க கணவர் பிசினசை மூடிட்டாராமே? எங்க பணத்தை எப்பக் குடுப்பாரு? வெறும் அசல் மட்டுமா இல்லை வட்டியும் குடுப்பாரா?" என்று கேட்டனர் பணம் போட்ட இரண்டு மூன்று டீச்சர்கள்.



"கவலைப் படவேண்டாம் சார்! யாரோட காசும் எங்களுக்குத் தேவையில்ல! நிச்சயமா வட்டியோட திருப்பிக் குடுத்துடுவாரு என் புருஷன். எப்படியும் ஒரு மாசமாவது ஆகும். ஏன்னா பணம் புரட்டணும் இல்ல?" என்றாள்.



முதல் முறையாக தான் செய்தது தவறு என்ற எண்ணம் ஏற்பட்டது கோமதிக்கு.



"ராகவனை நம்பி பள்ளியில் வேலை செய்யும் டீச்சர்களை சிட்ஃபண்டில் சேர்த்தது தப்பு! கடவுளே! அவர் எல்லாப் பணத்தையும் திருப்பிக் கொடுக்க வேண்டுமே! என் மானம் போய் விடுமே" என்று வேண்டினாள். கணவனிடமும் அது பற்றிப் பேசினாள். பட்டும் படாமலும் பதில் சொன்னான் அவன்.



"எப்படியாவது ஒரு மாசத்துக்குள்ள எல்லாருக்கும் பணத்தை பைசல் பண்ணிடுங்க" என்று கண்டித்துச் சொன்னாள்.



ஆனால் ராகவன் ஆபீசில் இருந்த எல்லாப் பணத்தையும் எடுத்துக் கொண்டு கோமதியும், குழந்தையும் பற்றிக் கவலைப் படாமல் பணத்தை எடுத்துக் கொண்டு ஓடி விட்டான்.



பணம் கொடுத்தவர்கள் அனைவரும் தன்னை வந்து கேட்பார்களே! என்ன செய்யப் போகிறோம்? இந்தக் குழந்தையை எப்படி வளர்க்கப் போகிறோம்? ஜெயிலுக்குப் போகும் நிலை கூட வருமோ?" என்று கவலைப் பட்டபடி இருந்தாள் கோமதி.
 
:love::love::love:

அடச்சே....... இவனெல்லாம் மனுஷனா???
ஆனால் இப்படியும் ஆளுங்க இருக்காங்க.....

கைல ஒரு குழந்தையோட என்ன பண்ணுவா னு கூட இல்லாமல் :mad: :mad: :mad:
 
Last edited:
Nice update ma. Gomathy ku ava hus patti nalla therinchu en ava school colleagues kitta chit fund sera sonna. Edu avaloda thappu. Andha thappu ku ava thaan anubhavikanum. Eppo enna Panna pora.
 
புருஷனைப்பத்தி தெரிஞ்சும் எதுக்கு தன்னுடன் வேலை செய்பவர்களை சீட்டுல சேர்த்துவிடணும்...... இந்த கோமதிக்கு பட்டும் புத்தி வரலையே.......
 
கோமதி சரியான முட்டாளா தான் இருக்கா...மனுஷங்கள எடை போடத் தெரியவேணாமா...இப்ப அனுபவிக்கிறது யாரு...இப்படி ஏமாத்துறவங்க கிட்ட இருந்து தப்பிக்க நாம தான் உஷாரா இருக்கனும்...இவனுக்கு கடைசி வரை அவன் செய்த தப்பும் ஒரு பொண்ணோட வாழ்க்கையை கெடுத்துட்டோமேன்ற குற்றவுணர்வும் இருக்கவே இருக்காது
 
கோமதி சரியான முட்டாளா தான் இருக்கா...மனுஷங்கள எடை போடத் தெரியவேணாமா...இப்ப அனுபவிக்கிறது யாரு...இப்படி ஏமாத்துறவங்க கிட்ட இருந்து தப்பிக்க நாம தான் உஷாரா இருக்கனும்...இவனுக்கு கடைசி வரை அவன் செய்த தப்பும் ஒரு பொண்ணோட வாழ்க்கையை கெடுத்துட்டோமேன்ற குற்றவுணர்வும் இருக்கவே இருக்காது
ஆமாங்க! கிராமத்து வளர்ந்த கோமதியால பாவம்! ராகவனை எடை போட முடியல்ல! ரொம்ப அப்பாவியா இருக்கா! இப்படி இருந்தா இந்த உஅலகம் நம்ம தலையில மிளாகாய் அரைச்சுட்டுப் போயிரும்.
 
Top