Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கீர்த்தனை... பிரார்த்தனை...-1

Advertisement

praveenraj

Well-known member
Member
ஜூஹூ, மும்பை, பிரபலமான ரெஸ்டாரெண்ட், இன்று மாலை 5 .55

ஏனோ நெஞ்சில் ஒரு இனம்புரியாத படபடப்பு, தவிப்பு. சந்தோசம் என்றும் சொல்லிவிட முடியாது. அதற்காக சோகம் என்றும் புறம் தள்ளி விட முடியாது. அப்போ பயம் என்று சொல்லலாமா என்றால் பாதி உண்மை. ஏனெனில் இது வெறும் பயம் மட்டுமல்ல. அதும் இப்படி எதற்கும் பயப்படும் அளவுக்கு அவள் அவ்வளவு கோழையுமில்லை. தைரியசாலி தான். சொல்லப்போனால் சந்திக்கப் போகிறவன் தான் பயப்படல் வேண்டும். ஆனால் சந்திக்கச் சொல்லிக் கேட்டவனே அவன் தான்.

ஏன் சந்திக்கச் சொல்லியிருப்பான். மணி பார்க்க அது அவன் சொல்லிய 5 .45 ஐ கடந்து 10 நிமிடங்கள் ஆகியிருந்தது. இவள் ஒரு பங்க்சுவல் பார்வதி என்று அவன் அறிந்திடாமலும் இல்லை. இவளை இப்படிக் காக்க வைத்து அதில் அர்ப்ப சுகம் காணுபவனும் அவன் இல்லை. என்னவாக இருக்கும்? கண்களை மூடி ஆழ்ந்து யோசித்தாள். மனக்கண்ணில் இதுவரை அவள் வாழ்வில் நடந்ததெல்லாம் நினைவுக்கு வந்து சென்றது. என்ன செய்ய மறதி ஒரு தேசிய நோய் என்றார் ஆண்டவர். மறதிப் போல் ஒரு மாமருந்து இல்லை என்கின்றனர் மற்றொரு சாரார். இதில் எது தான் உண்மையாய் இருக்கும்? எது உண்மையாக இருந்தால் என்ன? என்னால் எதையுமே மறக்கமுடியவில்லையே? இப்போது மட்டும் கடவுள் என்முன் தோன்றி, "மகளே உனக்கொரு வரம் தருகிறேன் கேள்!" என்றால் உடனே கேட்டுவிடுவேனே! என் மூளையை கம்ப்யூட்டர் போல் செய் கடவுளே. வேண்டியவற்றை மட்டும் ஸ்டோர் செய்து வேண்டாதவற்றை உடனே டெலீட் செய்யவும் வழி கொடு. இதில் கம்ப்யூட்டர் போலவே சிலவற்றை 'ஷிப்ட் டெலீட்' செய்து ரீசைக்கிள் பினில் கூடத் தாங்காத மாதிரியும் வேண்டியவற்றுக்கு மட்டும் ரீசைக்கிள் பினில் என்றும் ச்சே நான் என்ன முட்டாள் ஆகிட்டேனா? இப்படிக் கண்டதெல்லாம் யோசித்து பிதற்றுகிறேன் என்று யோசித்தாள்.

அப்போது தான் அவள் இருக்கும் ரெஸ்டாரெண்டை நன்கு உணருகிறாள். நம் வாழ்வில் சில இடங்கள் பொக்கிஷம் போன்றது. எத்தனை முறை சென்றாலும் நமக்கு முதன்முறை சென்றபோது ஏற்பட்ட அந்த அனுபவம் தான் தோன்றும். அதும் அந்தப் பசுமையான ரம்மியமான அழகான நினைவுகள். வாழ்க்கை இப்படியே போயிருக்க கூடாதா? மழை வரும் முன் வானம் இருட்டி மேகம் கறுத்து அதும் மஞ்சள் வெயில் மெல்ல மறைந்து (முழுவதும் மறையாமல்) மண்வாசம் நாசியைத் தீண்ட கூடவே நம் மனங்கவர்ந்தவருடன் அப்பப்பா... நினைக்கவே சிலிர்க்குதே! அதற்காக வெறும் மழை மட்டுமே பெய்ய முடியுமா? அப்படியே மழைமட்டுமே பெய்தால் தான் நம்மால் கடைசி வரை அனுபவித்து ரசிக்கத்தான் முடியுமா? அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு தானே! இருந்தும் இப்படி ஒரு நிலை திரும்ப வாழ்வில் வரவேயில்லையே! அதன் பின் சூறாவளி, புயல், கடுங்குளிர், கோடை என மாறிமாறி நிறைய நடந்துவிட்டதே? இதுதான் வாழ்க்கையா? லைப் இஸ் ஏர்னெஸ்ட். அடுத்த நிமிஷம் என்ன நடக்கும்னு தெரியாத புரியாத சுவாரசியம் தான் வாழ்க்கைன்னா எனக்கு தான் அந்தப் புதிர் தெரியுமே? எப்படியும் இது ஒர்க் அவுட் ஆகப் போறதில்லை. பின்ன எப்படி சுவாரசியம் இருக்கும்?

இதோ இப்ப எதற்கு வரவழைத்திருக்கிறான் என்றும் கூடத் தெரியவில்லை. ஆனால் நிச்சயம் நல்லதாய் இருக்காது அதுமட்டும் நிச்சயம். எப்படி சொல்லுகிறாள் என்று கேட்கறீர்களா? விதைத்ததை தானே அறுவடை செய்யமுடியும். நான் விதைத்ததெல்லாம் அறுவடை செய்யும் காலம் வந்துவிட்டதோ? இப்போது கூட மனம் இறங்க மாட்டேங்கிறது ஏன்? அப்படி என்ன தான் அவ்வளவு ஈகோ. அகம்பிடித்த கழுதை தான் நான். சில சமயங்களில் நாம் செய்வது தவறு என்று நமக்கே நன்றாகப் புரியும். தெரியும். இருந்தும் மனம் அதை ஏற்க மறுக்கும். நான் செய்வது தான் சரி என ஈகோ சொல்லும். மூளை பொறுமையாக யோசிக்க சொல்லும். விதியை மதியால் வென்றுவிடலாம் தான். ஆனால் மதியை எப்படிப் பெறுவது? இல்லை பெற்ற மதியை எப்படி சரியாக உபயோகப் படுத்துவது?

'இரண்டு மனம் வேண்டும்...'- கண்ணதாசன் பாடல் தான் என்று நினைக்கிறேன். தாத்தா சொன்னதாய் நினைவு. இருந்திருக்கிலாம். ஏன்டா என்னை இப்படிக் கொல்லாமல் கொல்லுற?

"மேடம் எனி திங் ப்ளீஸ்?"

'ஐயோ வந்து 20 நிமிடங்கள் ஆகிவிட்டதே? இந்த வெயிட்டர் வேற நம்மை வித்தியாசமாய்ப் பார்க்கிறானே?'

"ஒரு காபி. ஸ்டராங்கா வித் லெஸ் சுகர் ப்ளீஸ்"

அவன் சாதாரணமாய்ப் பார்த்தது கூட இவளுக்கு தவறாய்த் தெரிந்ததே. இவள் ஆர்டர் சொல்லி திரும்பவும் கதவு திறக்கப்பட்டு வெளிப்பட்டான் அவன். ஒரு நிமிடம் தூரம் வருபவனை ரசித்தாள். அவன் அருகில் வரவர மெல்ல அவன் மீதான நன் மதிப்புகள் மீது கோவம், ஈகோ, வெறுப்பு போன்ற போர்வை விழ முகம் கடுகடுவென மாறியது.

வந்தவனது முகத்தில் பெரிய டென்ஷன். மற்றவர்களுக்கு அவன் சாதாரணமாகத் தான் இருப்பதாய்த் தோன்றலாம். ஏனெனில் அவன் இயல்பிலே சாந்தமானவன். அவனின் உச்சபட்ச உணர்ச்சிகள் வெளிப்பாடே நம் சாதாரணமான வேலைநாட்களின் முகபாவத்துக்கு ஈடாகும். அப்போ சாதாரணமாய் அவன் எப்படி இருப்பான்? வைரமுத்து மீது எனக்கொரு வருத்தம். இல்லை கோபம். அதெப்படி 'மெல்லிய ஆண் மகனை பெண்ணுக்குப் பிடிக்காது, முரடா உன்னை ரசித்தேன்' என்று அவர் சொல்லலாம்? உன்னைப்போல் ஒருவனை எல்லோருக்கும் பிடிக்கும்டா. நானும் அந்த எல்லோரில் அடக்கம் தான். மீண்டும் அவனை ரசிக்க முயன்ற அந்த மனதை முயன்று கோபத்தை வரவழைத்து அவனை முறைத்தாள்.

அவள் பார்வையே அவனுக்கு அனைத்தையும் உணர்த்தியது.
"சத்தியமாச் சொல்றேன், கிளம்பும் போது ஒரு அவசர வேலை. தவிர்க்க முடியல..."

அவள் கண்ணைச் சிமிட்டாமலே இருக்க,

"எனக்குத் தெரியும் நான் சொன்ன நேரத்திற்கு வரமுடியாதுன்னு..."

அவள் பேசத் தொடங்க,

"சொல்லியிருக்கலாம் தான். ஆனால் சொன்னால் மட்டும் நீ நம்பியிருப்பையா என்ன?" வெறும் ஆற்றாமை தான் அவனின் பேச்சில் தென்பட்டது.

ஏனோ இது அவளை ப்ரவோக் செய்ய மீண்டும் தன் உச்சக்கட்ட கோபத்தைக் கொண்டு அவனை முறைத்தாள்.

'கோபம் கொள்ளும் போது நீ கொள்ளை அழகுடி. அதுக்குன்னு நீ சாதாரணமாய் அழகில்லைனு அர்த்தமில்ல. வானவில்லின் நிறம் போன்றவளடி நீ. "வானவில்லாய் ஆணும் வண்ணம் ஏழாய் பெண்ணும் இருந்தால் இன்னும் வானின் அழகு கூடும் ..." என்ற வரிகளைப் போல் என் வானத்தை அழகாக்க நீ இருடி ப்ளீஸ்...' என்று நினைத்ததை வெளியில் சொல்லும் நிலையில் அவனில்லை.

அவனின் மௌனத்தை நன்கு உணர்ந்தவள் ஏதேதோ யோசிக்க சரியாக அந்தப் பாடல் அவள் மனதில் தோன்றியது,

அவன் பேச தொடங்கும் முன் மீண்டுமதே பேரர் வந்தார் அவள் கேட்டிருந்த காபியோடு.

அதை அவளுக்கு முன்னே எடுத்தவன்,"அனடெர் ஒன் காபி. ஸ்டராங்கா சுகர் கம்மியா. ஒரு பிரௌனி ஒரு டவ்நட் ப்ளீஸ்"
நம்மை இந்த அளவிற்குப் புரிந்துவைத்துள்ளானே என்று ஏனோ அவள் உள்ளம் சிலிர்த்தது.

"சாரி ரொம்ப தலை வலிக்குது. அதான் உன் காபிய நான் எடுத்துக்கிட்டேன்"

மீண்டும் அவள் முகம் இறுகியது.

அவள் என்ன நினைக்கிறாள் என்று அவனால் எதுவும் புரிந்துகொள்ள முடியவில்லை.

'எவ்வளவோ போச்சு. காபி தானே?' என்று அவள் அலட்சியமாக இருந்தாள்.
'என்னையா புரிந்துவைத்துள்ளான்? உன்னைச் சந்தோசப் படுத்தவா? அதுவும் இல்லை. உன்னைச் சிறைப்பிடிக்க, அடிமையாக்க, அவன் வெஞ்சென்ஸை தீர்த்துக்கொள்ள போடும் வேஷமிது...' என்று நினைத்தாள்.

இதையெதையும் உணராதவன் காபியிலே கண்ணாய் இருந்தான்.

***************

ஜூஹூ,மும்பை , ரஸ்தம்ஜீ எலைட்டா 10 வது மாடி அன்று மாலை 6 மணி.

கேலண்டரில் தேதியைப் பார்த்தவன் மனமானது சொல்லமுடியாத ஒரு உணர்வில் துடித்தது. ஏன் இப்படி? மனமெல்லாம் பதபதவென இருக்க வழக்கமாய் அவன் கேட்கும் யுவன் ஷங்கர் ராஜா பிலேலிஸ்ட் ஓடிக்கொண்டிருந்தும் மனம் அதில் லயிக்கவில்லை. காரணம் ஏனோ? நாளை இந்நேரம் அவளை இன்னொருத்தன் அருகில் பார்க்க வேண்டுமென நினைக்கையிலே நெஞ்சில் நெருஞ்சி முள் குத்தியது. கோவமானவன் அவன் அறையிலிருந்த ஆளுயர கண்ணாடியைப் பார்த்தவன் அதில் தெரிந்த அவன் பிம்பமே அவனுக்கு எரிச்சலூட்டியது. எதையாவது கொண்டு அதை உடைத்துவிடலாம் என்று கூடத் தோன்ற அருகிலிருந்த ரிமோட்டேய் எடுத்தவன் அப்போது தான் இது அவன் அறையில்லை, அவன் கம்பெனி அல்லாட் செய்த அறை (பிளாட் ) என்று உணர்ந்து சாந்தமானான். இருந்தும் அவன் கண்கள் அந்தக் கண்ணாடியில் போக அதில் அவனின் பிம்பத்துக்குப் பதிலாக அவளின் பிம்பம் தோன்ற அனிச்சையாய் அவன் முகம் புன்னகையைத் தழுவ மறுநொடி இது கானலே நிஜமன்று என்று உணர்ந்ததும் உதிர்த்த புன்னகை மறைந்து முகம் கடுமையானது.

'இது எப்படி சாத்தியம்? எப்போதிலிருந்து அவளை என் மனம் விரும்புகிறது. எப்படி வந்தாள் மனதிற்குள்? இத்தனைக்கு இவ்வுலகில் அவன் அதிகம் வெறுத்த ஒரு நபரென்றால் அது அவள் தானே. சஹானா! அவன் மனதிற்கும் உடலிற்கும் சப்தநாடிக்கும் குளுர்ச்சியூட்டும் ஒரு பெயர . சிறுவயது முதலே சஹானா ராகத்தில் ஏற்பட்ட பிடித்தமும் பிரமிப்புமா? இல்லை அப்பெயரின் மீது கொண்ட பேராவலா? இல்லை இப்பெயரைக் கொண்டவளைத் தான் வாழ்நாளில் பின்னால் சந்தித்து அதிகம் வெறுத்தும் அவள் பின்னாலே பித்தாய் சுற்றப் போகிறோம் என்ற ஆரூடத்திதிலா? இல்லை கே .பி மீது ஏற்பட்ட சிலாகிப்பால் சஹானா பிடித்ததா? பதில் தெரியவில்லை. சஹானாவைப் பிடிக்க அவனுக்குக் காரணம் தேவையில்லை!

சஹானா ராகம் கேட்க மட்டும் ரம்மியம் இல்லை. சஹானா பார்க்கவும் அழகு தான். அதிலும் அவளின் செல்லக் குறும்பும் எதற்கெடுத்தாலும் வீம்புக்கு முன்வரும் குணமும் நாள் முழுவதும் ரசிக்கலாம். வாயாடி. ஆமாம். என்னிடம் மட்டும் தான் வாயாடுவாள். இல்லை இல்லை அவள் இயற்கையிலே அடாவடி குணம் கொண்டவள் என்று அண்ணி சொல்லிக் கேட்டிருக்கிறேனே. ஒரு சோர்ந்த பெருமூச்சினை இழுத்தவன், எனக்கில்லை எனக்கில்லை என்றதும் மனம் திருவிளையாடல் நாகேஷை நாடியது. எனக்கில்லை எனக்கில்லை என்ற தருமி நாகாஷுக்கு ஒரு சிவபெருமானோ இல்லை சிவாஜி கணேஷனோ கிடைத்ததுபோல எனக்கு யாரேனும் கிடைப்பார்களா?அதீத கற்பனை தான் போலும். அதும் நிறைய தமிழ் சினிமா குறிப்பாக cliche சினிமா சீரியலில் நடப்பது போல் கடைசியாக திருமணம் நின்று விடுமோ? ஒருகணம் தான் நினைத்தான். உடனே அவள் அழுதது அவன் மனதில் தோன்ற, இல்லை அப்படி எதுவும் நடக்க கூடாது. சஹானா நீ சந்தோசமா இருக்கணும் டி. அந்த டியில் ஒரு அழுத்தம்.ஒரு உரிமை. பின்னே எல்லோரிடமும் மென்மையாகப் பழகுபவன் உரிமையாய் வன்மையாய்ப் பழகிய ஒரே ஆள் அவள் தானே. இந்த 'மென்மொழியான்' பெயரை எனக்கு வைத்தது சரியான்னு நான் உன்கிட்டப் பேசும்போது கேட்டிருந்தா எனக்கு இந்தப் பெயரே வைத்திருக்க மாட்டாங்க டி. எல்லோருக்கும் 'மென்மொழியான்' உனக்கு மட்டும் 'வன்மொழியான்'. ராட்சஷி. அழகான அடங்காப் பிடாரி. அவன் புன்முறுவலிட அவன் செல் சிணுங்கியது.

ஆன்மாவின் ராகம் நீதானா சஹானா ...

ஆதாரம் எதற்கும் நீதானா சஹானா ....

பாவையே ஒரு ராகமாய் ....

பார்வையே உந்தன் பாவமாய் ...

வந்தாய் எந்தன் கண்ணெதிரே ....

நீதான் என்றும் என் உயிரே ....


என்ற பாடல் ஒலிக்க அவளுக்காக இந்தப் பாடல் எழுதப்பட்டதா? இல்லை இந்தப் பாடலால் அவள் அவ்வாறு இருக்கிறாளா? புதிர் தான்.

சட்டெனெ நினைவுக்கு வந்தவன் கால் அட்டென்ட் செய்தான்.

"அம்மா"

"மொழி ரெடியா கிளம்பிட்டையா?"

"எங்கம்மா?"

"என்னடா கேள்வி இது? ஊருக்குத் தான்"

"நான் வரல..."

"ஏன்?"

...............

"அப்படி என்னடா கோவம் உனக்கு அந்தப் புள்ள மேல? அவ என்னடா பண்ணா உனக்கு? பாவம்டா அவ"

அவன் மனம் மேலும் குற்றயுணர்ச்சியில் தவிக்க ஏனோ கண்கள் கண்ணீர் முட்ட சமாளித்தவன்,

"வேணாம்மா அவளைக் கண்டாலே எனக்குப் பிடிக்கல (ஏனோ இந்த வார்த்தையைச் சொல்லும் போதே அவ நெஞ்சில் குருதி வழிந்தது)

"ஏன்டா இப்படி? அந்தப் பொண்ணு மேல அப்படி என்ன கோவம் டா உனக்கு?நல்ல பொண்ணு. என் மருமகளாய் வந்திருக்கனும்.சரி எனக்கில்லை அந்த பாக்கியம் ப்ராப்தம்" என்று அவர் சொன்னதில் ஒரு உண்மையான ஆற்றாமை மிதந்தது.

"அவளைப் பற்றியே பேசுவதா இருந்தா நான் போன் வெக்கிறேன். பை"

"டேய் மொழி சரிடா பேசல. நீ ஒரு எட்டு வந்து தலையைக் காட்டிட்டுப் போயிடு"

"புரிஞ்சிக்கோ மா. வேணாம். நான் வரல. வந்தா எல்லோருக்கும் தர்மசங்கடம். வேணாம் ப்ளீஸ்"

"அதெல்லாம் ஒண்ணுமில்லை"

"யாரு?"

"மொழிதான்"

"என்னவாம்?"

"அம்மா ஏதும் சொல்லாத ப்ளீஸ்"

அதற்குள்,"அவன் வரலையாம்" என்று சொல்லிவிட்டார் அவன் அன்னை.

"ஏன் இதுவரை என்ன அசிங்கப் படுத்தனது போதாதாமா? இனியும் அசிங்க படுத்தணுமாம்மா? குடு இங்க"

இங்கே இவன் முகம் அஷ்டகோணலாது.

"டேய்"

"ம்ம்ம்"

"எப்ப கிளம்பற?"

இதுவே நீ இங்க இருக்கணும் என்று சொல்லாமல் சொல்ல,

"நாளைக்கு"

"இப்பவே எதாவது பிலைட் இருந்தா கிளம்பு. நயிட்க்குள்ள கிளம்பு சரியா?"

"பார்க்கறேன்"

"என்ன?"

"சரிப்பா வரேன். அம்மாகிட்ட தாங்க"

"சொல்லு மொழி"

"பேசிட்டு இருக்கும் பொது போனை தராதன்னு எத்தனை வாட்டி சொல்லியிருக்கேன் உனக்கு?"

"பின்ன என்னவாம். எல்லாம் சொல்லுறவங்க சொன்னா தான் நடக்குது. மயிலே மயிலேனு சொன்னா இறகை போடுமா என்ன?"

"நிறுத்து. நான் மயிலுமில்ல குயிலுமில்ல..."

"நீ என் தங்கமயில் டி செல்லம்" என்று வாஞ்சையாகக் கொஞ்சினார் அவன் அன்னை.

"ஆமா இப்போ மட்டும் செல்லம் கொஞ்சு. வெய் மா"

"டேய்?"

"சொல்லுங்க?"

"நல்ல ட்ரெஸ்ஸா எடுத்துட்டு வா. இல்லைனா வா இங்கேயிருந்தே எடுத்துக்கலாம்"

"என்னவோ எனக்கே கல்யாணம் மாதிரி பேசுறீங்க? போங்க..." என்ற குரலில் உண்மையான ஆற்றாமை வெளிப்பட்டது.

"அப்பாகிட்ட தரட்டுமா?"

"எடுத்துட்டு வரேன். வைங்க. ஆமா அண்ணி எங்க?"

"அவ ஊருக்குப் போய் ஒரு வாரம் ஆகுது"

"சரி..."

இப்போதே சொல்லிட்டேன் லேட் ud தான் வரும். சாரி. நிறைய பேக்லாக்ஸ் இருக்கு. ஏற்கனவே போடுற கதையை முதல்ல முடின்னு நீங்க சொல்றது எனக்குப் புரியுது. கேட்குது ... இருந்தும் ஒரு நம்பிக்கை. இது கொஞ்சம் காம்ப்ளெக்ஸ் ரைட்டிங் ஸ்டோரி முழுசாவே நான் லீனியரா (விட்டு விட்டு தான் ) தான் வரும் படிக்க கொஞ்சம் சிரமமா இருக்கலாம்(நிச்சயம் சிரமமா தான் இருக்கும்), பார்த்து படிங்க. சந்திப்போம் பை. ( இசை ஒலிக்கும் ...)
 
All the best for this one, and title too favorites song???? and favorite line.


சஹானா சீரியலும் என் favorite சஹானா ராகமும் என் favorite? எஸ் இதோ இதோ என் பல்லவி என்னுடைய favorite song... இந்தக் கதையோட கருவே அந்த வரிகள் தான். நீ கீர்த்தனை நான் பிரார்த்தனை பொருந்தாமல் போகுமா? மிக்க நன்றி?
 
காலை, மாலை வந்த இருவரும் ஒருவரா...?


ஆமா. அது காலை மாலை இல்ல... இன்று அன்று. இன்று எல்லாமே நார்மல் font. அன்று எல்லாமே இட்டாலிக்ஸ். ரெண்டும் மென்மொழியான் சஹானா தான்... சொல்றேன்.
 
ஆமா. அது காலை மாலை இல்ல... இன்று அன்று. இன்று எல்லாமே நார்மல் font. அன்று எல்லாமே இட்டாலிக்ஸ். ரெண்டும் மென்மொழியான் சஹானா தான்... சொல்றேன்.
ஆமா. அது காலை மாலை இல்ல... இன்று அன்று. இன்று எல்லாமே நார்மல் font. அன்று எல்லாமே இட்டாலிக்ஸ். ரெண்டும் மென்மொழியான் சஹானா தான்... சொல்றேன்.

இந்த பேர் எங்க இருந்து பிடிச்சிங்க...? பேரைப்போலவே மென்மையானவனா இருப்பானா?
 
அருமையான ஆரம்பம் ப்ரோ ??

போன கதைக்கும் இப்புடித்தான் சொல்லிட்டு போனீங்க????ம்ம்ம்ம் பாப்போம் ????
 
Top