Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

குவியமுடன் ஒரு காதல் 1

Advertisement

Admin

Admin
Member
அத்தியாயம் – 1

தமிழ்நாட்டின் முக்கிய வணிக நகரமான கோயம்பத்தூரின், பிரதான சாலையில் மாலை நேரத்து வெயிலும் இதமாக ஊடுறுவியது… அச்சாலையின் டிராபிக் சிக்னல் மஞ்சள் நிறத்திலிருந்து சிவப்பு நிறமாக மாற, வாகனங்கள் ஊர்ந்து வந்து நிற்கத் துவங்கியது. டிராபிக் சிக்னலில், தன்னுடைய ஸ்கூட்டியில் நின்று, சுற்றும் முற்றும் வேடிக்கை பார்க்கத் துவங்கினாள் மாயசித்ரா.

அப்போது தான் ஒரு ட்யூக் 390 சிசி வண்டி அவளின் பக்கத்தில் வேகமாக வந்து சடன் பிரேக் போட்டது. அந்த பைக்கின் பின் அமர்ந்திருந்த இரு சிறுவர்கள், படபடவென சீட்டுக்கட்டு போல் கீழே சரிந்தனர்! சட்டென்று தன் வண்டியை நிற்க வைத்துவிட்டு, அக்குழந்தைகளை எழுப்பி நிறுத்தினாள், மாயசித்ரா.

பார்த்தவுடனே தெரிந்தது அவர்கள் பக்கத்தில் இருக்கும் அரசு பள்ளியில் பயிலுபவர்கள் என. லிப்பிட்டிற்காக இந்த வண்டியில் ஏறி இருக்க வேண்டும். குழந்தைகளை வைத்துக் கொண்டு இப்படி வண்டி ஓட்டுகிறார்களே என எரிச்சலாக வந்தது மாயசித்ராவுக்கு.

யார் அது இப்படி பண்ணியது என்ற எண்ணத்துடன், மாயா கோபமாக பார்வையை மேலே எழுப்ப முதலில் அவள் கண்ணில் தென்பட்டது அந்த விலை உயர்ந்த பைக் தான்… ‘ட்யூக் பைக்கா… அதான் இப்படி ஓடுது!’

மனதில் கரித்துக் கொட்டிக் கொண்டே, குழந்தைகளை தூக்க வந்த இன்னொருவனை உறுத்து விழித்தாள். அவன் தான் வண்டியை ஓட்டி வந்தவன்! பார்ப்பதற்கு வாட்ட சாட்டமாக இருந்தாலும் மேல் மாடி காலி போல, என நினைத்துக் கொண்டாள்.

அதற்குள் அந்த இரு சிறுவர்களிடமும் மன்னிப்பு படலத்தை ஏற்றினான், அந்த நெடியவன். “சாரிபா… சடன் பிரேக் போட வேண்டியதா போயிடுச்சு. நீங்களும் என்னை கெட்டியா பிடிச்சிருக்கலாம்ல?”

“நீங்க ஒழுங்கா வண்டிய ஓட்டாம, எதுக்கு அந்த பசங்கள திட்டுறீங்க??”

மாயாவின் கோபமான குரலில், அவளை திரும்பி நெருடிய புருவங்களுடன் பார்த்தான் கார்த்திக். பைக் ஓட்டி வந்தது அவனே! இவன் திருப்பி பேசுவதற்குள், மாயா கூறியதை கேட்டு கூடி இருந்த மக்களும் சேர்ந்து, கார்த்திக்கை திட்ட ஆரம்பித்திருந்தனர்.

“இந்த காலத்து பசங்களுக்கு வண்டிய ஓட்ட தெரியல… அதுல பறக்க தான் தெரியுது.”

“பார்த்து ஓட்டுபா தம்பி… நல்லகாலம் யாருக்கும் அடிபடல…”

“நிறைய காசு குடுத்து பெரிய பெரிய பைக் வாங்க வேண்டியது. அப்புறம் இந்த மாதிரி, எங்கயாவது முட்டிட்டு ஆக்சிடன்ட் பண்றதே வேலையா போச்சு இவங்களுக்கு.”

திட்டிவிட்டு அங்கேயே நிற்பார்களா என்ன? அவர்கள் நகர்ந்து சென்றுவிட, நம் ஹீரோயின் தான் பொறுப்பாக தன் வண்டியையும் ஓரமாக நிறுத்தி, பசங்களிடம் பார்த்துப் போகச் சொன்னாள்.

“ஹலோ நான் வண்டியை ஒழுங்கா ஓட்ட மாட்டேன்னு உனக்கு எப்படி தெரியும்? ரொம்ப தெரிஞ்ச மாதிரி பேசாத!”

அப்போது தான் தன் வண்டியை எடுக்கலாம், என ஏறி உட்கார்ந்தாள் மாயா. இவன் இப்படி ஒருமையில் விளிக்கவும், ஸ்கூட்டியில் அமர்ந்த வாக்கிலேயே பதிலளித்தாள். “இந்த மாதிரி பிடிப்பு எதுவும் இல்லாத வண்டியில ரெண்டு பசங்கள ஏத்துனதே தப்பு… அது கூட தெரியல… இதுல ஸ்பீடா வந்து சடன் பிரேக் போட்டு பசங்கள தள்ளிவிட்டு…. இதுலயே தெரியலையா, எந்த அளவுக்கு நீங்க ஓட்டுவீங்கனு?”

மாயா பேசப் பேச அவளையே நோட்டம்விட்டான் கார்த்திக். பார்ப்பதற்கு சுடிதாரில் அழகாக இருந்தாலும் கார்த்திக்கின் கண்களுக்கு திமிர் பிடித்தவளாகவே பட்டாள். அவளுக்கு நன்றாக பதில் அளிக்க வேண்டும் என்றே அடுத்து கார்த்திக் பேசியது.

“ஓட்ட ஸ்கூட்டியை ஓட்டிட்டு, நான் பைக் ஓட்டறத பத்தி பேசற??”

“ஹலோ! என்னோட வண்டியும் சரி, உன்னோட வண்டியும் சரி பெட்ரோல்ல தான ஓடுது?? உன்னோட வண்டி மட்டும் என்ன தண்ணிலயா ஓடுது??”

அவன் எப்போது தன்னுடைய ஸ்கூட்டியை குறைவாக மதிப்பிட்டு பேசினானோ அப்போதே இவளும் ரூட்டை மாத்தினாள்.

நக்கலாக கார்த்திக்கை பார்த்து கூறிவிட்டு, “இனிமேலாவது ஒழுங்கா வண்டி ஓட்டு....” என கூடுதல் அறிவுறுத்தலுடன் ஸ்கூட்டியில் கிளம்பினாள் மாயசித்ரா. அவள் போகும் திசையையே கோபம் கொப்பளிக்கும் கண்களுடன் பார்த்திருந்தான், கார்த்திக்!

இங்கே கிளம்பிப் போன நம் நாயகியோ நேராக சென்று நின்ற இடம், அவளின் தெரு முனையில் இருந்த சிறிய பிள்ளையார் கோவிலில். கோயம்பத்தூர் வந்த ஒரு வாரத்தில், அவளுக்கு மிகவும் பிடித்த இடம் இக்கோவில்.

கோவில் என்றால், பெரியதாக அல்ல…. பிள்ளையாரை சுற்றுவதற்கு சிறிது இடம் விட்டு கட்டப்பட்டிருந்ததால், அதுவே அங்கு இருந்த மக்களுக்கு தெருமுனை கோவிலாக ஆனது.

ஸ்கூட்டியிலிருந்து இறங்கி, பிள்ளையாரின் முன் கை கூப்பி நின்று, “இந்த மாதிரி ஆளுங்கள எல்லாம் ஏன் கணேஷா, வண்டி ஓட்ட வைக்கற?? அப்படியே ஓட்ட வைச்சாலும், டிவிஸ் ஃபிப்டியை ஓட்ட வைக்க கூடாது???” என்று மனதினுள்ளே மானசீகமாக பேசினாள் மாயசித்ரா.

அவளுக்கு எப்போதுமே மனதில் தோன்றுவதை பிள்ளையாரிடம் கூறியே ஆக வேண்டும்! இல்லையென்றால், தூக்கமே வராது. இப்போதும் மனதில் இருந்ததை கொட்டிவிட்டு, வீட்டிற்கு வண்டியில் சென்றடைந்தாள்.

வாசலில் ஸ்கூட்டியை நிற்க வைத்து, ஹாலில் சென்று சோபாவில் தொப்பென அமர்ந்தாள். பக்கத்தில் அமர்ந்திருந்த அவளின் தங்கை ரித்தியா, “என்னடி கோவமா இருக்கியா?” என்று கேட்டு, மாயசித்ராவின் புலம்பலுக்கு தன்னை அறியாமலே திரிப் பத்த வைத்தாள்.

உடனே அவள் வெளியே போனது முதல், திரும்ப வீட்டுக்கு வந்தது வரை அனைத்தையும் ஒப்பிக்க ஆரம்பித்தாள் மாயா. இவர்கள் பேசிக் கொண்டிருப்பதை இன்னொருவரும் கேட்டபடி இருந்தார்.

அவர் தான் இவர்களின் தாய், அபிராமி… மாயா பேசி முடித்ததும், ரியாக்ஷன் ரித்தியாவிடமிருந்து வரவில்லை! மாறாக அவளின் அன்னையிடம் இருந்து வந்தது. “நீ எதுக்கு அந்த பையனை திட்டுன முதல்ல?? எல்லாரும் சும்மா இருக்குறப்போ நீ மட்டும் வாய் பேசாதன்னு உனக்கு எத்தனை வாட்டி சொல்றது??”

தாயின் குரலை கேட்டு, தலையில் அடித்துக் கொண்டாள் மாயா. “ஐய்யோ…. அம்மா, அந்த பையன் தான் ஒழுங்கா ஓட்டாம வந்தான். அதை, நான் கேட்டதுக்கு என்னையே திட்டுனான் தெரியுமா?? நம்மளோட ஸ்கூட்டியை பார்த்து ஓட்ட ஸ்கூட்டினு சொல்லிட்டான் பாவி!”

“அதான் ஏன்?? நீ பேசுனதுனால தான அவன்கிட்ட பேச்சு வாங்குன? நீ முதல்ல வாயை அடக்கு… அதுக்கப்புறம் மத்தவங்கள பேசலாம்.”

கூறிவிட்டு அவர் பாட்டுக்கு எழுந்து அடுத்த வேலையை பார்க்கச் சென்றார். மாயாவின் மனது தான் சோர்ந்து போனது… ஏன் தன் அன்னை மட்டும் இப்படி இருக்கிறார்? எப்போதும் உதிக்கும் அதே கேள்வி, வார்த்தை மாறாமல் உதித்தது! ஆனால், அபிராமி இப்படி தான்…

அவரை மாற்ற இயலாது என அனுபவப்பூர்வமாக உணர்ந்திருந்தாள் மாயசித்ரா. அரசு பள்ளியில் ஆசிரியராக பணிபுரியும் அவர், வீட்டிலும் பாதி நேரம் அப்படியே நடந்துக் கொள்வார். அதுவும் தன் கணவரை இழந்ததும், இரு பெண்களையும் ஒழுங்காக வளர்க்க வேண்டும் என்பது மட்டுமே வாழ்நாளின் குறிக்கோளாக கொண்டிருந்தார் அபிராமி.

இவரின் கண்டிப்பான மனப்போக்கை பார்த்து, பதினாறு வயதிலேயே சலித்துக் கொள்வாள் மாயா. “ஏன்மா நீங்க பிரெண்டு மாதிரி பழக மாட்டுறீங்க? என்னோட பிரெண்டோட அம்மாவேல்லாம் எவ்வளோ ஜாலியா பேசுவாங்க தெரியுமா?? நீங்க தான் மிரட்டிட்டே இருக்கீங்க!”

மாயசித்ராவின் கேள்விக்கு முறைப்பான பார்வையுடன் பதில் வரும்… “உனக்கு ஆயிரம் பிரெண்ட்ஸ் கிடைப்பாங்க. ஆனா, அம்மா நான் மட்டும் தான்! ஞாபகம் வைச்சுக்கோ!

எல்லாரும் பிரெண்ட்ஸா இருந்தா யாரு தான் அம்மாவா இருக்கறது? அதான், எனக்கும் சேர்த்து இவ இருக்காளே, போதாது??”

தன் சிறிய பெண்ணை சுட்டிக்காட்டி அபிராமி பதில் கூறவும், மேலே எப்படி பேசுவது என்று தெரியாமல் முழிப்பாள் மாயா. ஆனால், அவர் கூறியதில் ஒன்று மட்டும் உண்மை. ரித்தியா தான் மாயாவின் முதல் நெருங்கிய தோழி. இருவருக்கும் இருந்த மூன்று வயது வித்தியாசம் பெரிதும் உதவியது அதற்கு. அதனால், பெரிதாக பிரச்சனை பண்ணாமல் சென்றுக் கொண்டிருந்தார்கள் சகோதரிகள் இருவரும்.

தன் மக்களை கண்டித்து வளர்த்தல் ஒருபுறம் இருந்தாலும், அவர்களை தைரியமாக வளர்க்க தவறவில்லை அபிராமி. அந்த தைரியம் எல்லை மீறும் சமயம், இன்று நடந்த நிகழ்வுகள் போல் ஏதாவது பின் விளைவுகளை வாங்கிக் கொடுப்பதும் நடப்பது தான், அவர்கள் வீட்டில்….

‘புது ஊர் வந்து முழுசா ஒரு வாரம் ஆகியிருக்குது. அதுக்குள்ள வம்பை கிலோ கணக்குல விலை பேசி, வீட்டுக்கு கூட்டிட்டு வந்துருவா… பொல்லாதவ!”

தன் கணவர் இறந்து ஏழு ஆண்டுகள் கழிந்த நிலையில், சேலத்தில் இருந்து கோயம்பத்தூருக்கு மாற்றல் வாங்கிக் கொண்டு வந்திருந்தார் அபிராமி. தன்னுடைய நெருங்கிய சொந்தங்களும், கணவரின் நெருங்கிய சொந்தங்களும் இங்கு இருந்ததே மூற்றும் முதலுமான காரணம்.

பெண்கள் இருவரும் வளர்ந்த நிலையில், கல்யாணம் காட்சி என வருகின்ற போது சொந்தங்கள் அருகில் இருப்பது தான் சிறந்தது என்று ரொம்ப நாட்களாக காத்திருந்து மாற்றல் வாங்கினார். அவரின் அண்ணனும், நாத்தனாரும் துணையாக இருந்து ஒரு வாடகை வீட்டை அமைத்துக் கொடுத்தனர்.

கடந்த ஒரு மாதமாக சேலத்துக்கும் கோயம்பத்தூருக்கும் அலையாய் அலைந்து, மாயசித்ராவை ஒரு பிரபல கல்லூரியில் அவளின் பி.எஸ்.சி - மேக்ஸ் படிப்பு தொடர வழியமைத்துக் கொடுத்தார்.

இப்போது அவள் இங்கேயே தன்னுடைய இரண்டாம் ஆண்டை தொடரலாம். ரித்தியாவையும் பக்கத்தில் இருந்த ஒரு பள்ளியில் சேர்த்தாயிற்று. நாளை மறுநாளில் இருந்து மூவரும் தத்தம் பணிகளுக்கு ஓட வேண்டும்.

நினைக்கும் போதே பெருமூச்சு எழுந்தது. எப்போது இவர்களை திருமணம் செய்து கொடுத்து, அவர்கள் சந்தோஷமாக வாழ்வதை பார்பாரோ அப்போது தான் இவரின் மனது லேசாகும்! அந்த வரத்தை வேண்டியே அவர் ஊர் மாறியது.

அதுவும் தன் பெண்களின் அழகு நாளுக்கு நாள் கூடிக் கொண்டே போவதை பார்த்து, அவருக்கு ஒரு நிமிடம் பெருமையில் நெஞ்சம் பனித்தாலும், மறுநிமிடமே பயம் தொண்டையை அடைத்தது.

அதுவும், மாயசித்ரா நிஜமாக சித்திரம் போல காட்சி அளிப்பவள்! மாநிறத்தில் சராசரி உயரமும், இடுப்பை தொடும் அளவு குழலும், சுற்றும் முற்றும் நர்த்தனமாடும் கண்களும், தின்னென்ற கன்னமும், எப்போதும் சிரித்த முகமுமாக வளைய வரும் பெண்ணை பார்க்கும் போது, இவளுக்கு ஏற்றார் போல் நல்லவனை கண்டெடுக்க வேண்டுமே என்று மற்றுமொரு பெருமூச்சை எரிந்தார்.

ஆனால், அவ்வூரில் நடைபெற இருக்கும் சம்பவங்களால் அவர் எண்ணாதது எல்லாம் நடக்கவிருக்கிறது என்று அறியாமல் இருந்தார் அபிராமி.
 
உங்களுடைய "குவியமுடன்
ஒரு காதல்"-ங்கிற அழகான
அருமையான லவ்லி நாவலை
மீண்டும் படிக்க ரீரன் தந்ததற்கு
ரொம்பவே சந்தோஷம்,
சிந்துலக்ஷ்மி ஜெகன் டியர்
 
Last edited:
:love: :love: :love:

Duke bike :p அது பேரே 1st floor bike தான்......
Scooty பூச்சகுட்டியா தெரியுமே......
மாயசித்ராக்கு தான் அந்த இடம் போல......
 
Top