Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

குவியமுடன் ஒரு காதல் 13 1

Advertisement

Admin

Admin
Member


அத்தியாயம் – 13

போறவர்கள் போய் சேர்ந்தாலும், அவர்கள் கூட இருந்தவர்களுக்கு தான் வாழ்க்கை நரகமாகிறது! அப்படியே தான் ஆகியது கதிரை சார்ந்தவர்களுக்கு. மிகவும் உடைந்து போனது கதிரின் பெற்றோர்களே! சோகத்திலே பெரும் சோகம் புத்திர சோகம்… அதை அனுபவத்திததால் பதினாறாம் நாள் காரியம் எல்லாம் முடிந்தவுடன் அவர்களின் சொந்தங்கள் இருவரையும் தனியே விடாமல், தங்களுடன் சிறிது காலம் இருக்கும்படி கூட்டிக் கொண்டு சென்றனர்.

கார்த்திக்கிற்கு தான் மிகுந்த மன ஊளைச்சலாக போனது. தன்னால் தான் அனைத்தும் நிகழ்ந்தது என வருத்திக் கொண்டான் அவனையே! சரியாக சாப்பிடாமல், தூங்காமல் வெளியே அலுவகத்தை தவிர எங்கேயும் செல்வதில்லை… அவனை பார்த்தே சுப்பிரமணியம் ஆழ்ந்த கவலைக் கொண்டார். அவரும் முதலில் அவனை குறை கூறியவர் தான். ஆனால், நாளாக நாளாக கார்த்திக் தேறாமல் இருப்பதால் விநாயகத்தை அடிக்கடி வீட்டு பக்கம் வந்து போக சொன்னார்.

விநாயகத்தின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. ஒரு நண்பன் கண் முன்னால் இவ்வுலகை விட்டு பிரிந்தது, இன்னொரு நண்பன் ஒடிங்கிப் போய் தன்னையே வெறுத்து வாழ்வது, இதெல்லாம் போதாது என்று தங்கையின் பாவப்பட்ட நிலைமை! யாரை என்று கவனிப்பது?? இரண்டு பேரையுமே கவனித்துக்கு கொண்டிருந்தான் மாற்றி மாற்றி!

விநாயகமும் அலுவகத்தில் மனம் விட்டு பேச முடியாத காரணத்தினால் கார்த்திக்கின் வீட்டில் தான் வார விடுமுறை தினங்களில் குடியிருப்பது. கதிர் இறந்து ஒன்றரை மாதம் கழித்து ஒரு சனிக்கிழமை கார்த்திக்கின் வீட்டிற்கு சென்றான் விநாயகம். சிறிது நேரம் பேசியிருந்து விட்டு, “மச்சி வா மருதமலை வரைக்கும் போயிட்டு வரலாம். ஒரு சேன்ஜா இருக்கும்!” என நண்பனையும் தன்னையுமே மனதில் நிறுத்திக் கூறினான்.

விநாயகம் கூறியது கேட்ட சுப்பிரமணியமும் கார்த்திக்கை போய் வர சொல்ல, கார்த்திக்கும் தலையசைத்து கிளம்பினான். அவன் குளித்து ரெடியாக வந்ததும், தன் பைக்கின் சாவியை எடுத்துக் கொண்டு, “போலாமா மச்சான்? வரேன்பா.” என செருப்பை மாட்ட போனான் விநாயகம். “பைக்ல வேணாம் கார்ல போலாம்டா!” கார்த்திக்கின் இறுகிய குரலைக் கண்டு, விநாயகம் பெருமூச்சு விட்டான். கதிர் சாவுற்கு சென்று வந்ததில் இருந்து பைக்கையே கார்த்திக் தொடுவதில்லை என சுப்பிரமணியம் கூறிய போது காலப்போக்கில் மாறிவிடுவான் என நினைத்துக் கொண்டான்.

வீட்டில் இருந்த டிரைவரை நிறுத்திவிட்டு அவனே தந்தைக்கு காரோட்டி ஆனான். அலுவகத்துக்கு காரில் தான் சென்று வந்தான் கார்த்திக். அவன் தந்தையை அவர் அலுவகத்தில் விட்டு விட்டு இவன் அலுவகம் செல்வான். மாலையும் அவரை அழைத்துக் கொண்டு தான் வீட்டு வாசப்படியில் கால் வைப்பது. ஆனால் இப்படி இருசக்கர வாகனத்தின் பின் அமர்ந்து கூட வர மாட்டேன் என அவன் சொல்வது, இதுவே முதல் முறை!

“டேய் நான் தான்டா ஓட்டப் போறேன். நீ பின்னாடி உட்காரு போதும்.”

“வேணாம்டா கார்ல போலாம். இல்லனா எங்கையும் போக வேண்டாம்!”

தீவிரமான முகத்துடன் கார்த்திக் கூறியதை கண்டு விநாயகத்துக்கு ஆற்றாமை பொங்கியது. சுப்பிரமணியத்தை அவன் இயலாமையுடன் பார்க்க, கண்ணசைவில் மகனின் போக்கிலேயே செல்லும்மாறு அவர் அறிவுறித்தினார்.

வேறு வழியில்லாமல் கார்த்திக் காரை ஓட்ட அவனுடன் சென்றான் விநாயகம். மருதமலை கோவிலை அடைந்து, கோவிலை ஒரு முறை சுற்றி வந்தவுடன் ஒர் ஓரமாக அமர்ந்தனர். அப்போது அங்கு ஒரு வயதான பெரியவர் காவி உடையில் வந்தார். இவர்களின் அருகில் அமர்ந்து பேச்சுக் கொடுக்க தொடங்கினார்.

விநாயகம் அவருடன் சரளமாக பேச, கார்த்திக் அவரின் பேச்சுக்களை காதில் போட்டுக் கொள்ளவில்லை, முதலில். பெரியவர் வாழ்க்கை பற்றிய நெளிவு சுளிவுகளை சொல்லிக் கொண்டே போக, அவனையும் அறியாமல் அவரின் பேச்சில் ஈர்க்கப்பட்டான் கார்த்திக். எந்த அளவுக்கு ஈர்க்கப்பட்டான் என்றால், தன் மனதில் உள்ளவற்றை அப்படியே அவரிடம் கொட்டும் அளவுக்கு. விநாயகம் ஆச்சரிய பார்வையுடன் வேடிக்கை பார்த்ததுடன் சரி!

கார்த்திக்கிற்கு கண்டிப்பா பாரம் குறையும் என்பது அவன் எண்ணம். அதனால், குறுக்கிடாமல் இருந்தான் அவர்களின் உரையாடலில்.

கார்த்திக்கின் மன வேதனையை கேட்ட பெரியவர் சிறிய புன்னகையுடன் அதை போக்க வழிவகுத்தார். “இந்த மானிடப் பிறவிக்கே உரித்தானது இந்த குற்ற உணர்ச்சி. சில பேர் தப்பு செய்துவிட்டு இதை கொண்டார்கள் என்றால், சிலர் செய்யாத தவறுக்கும் இந்த உணர்ச்சியின் பிடியில் வேதனைப்படுவர். சிலர் சிறு தவறு செய்தாலும், அதை நினைத்தே பல நாட்கள் வாழ்க்கையை தொலைக்கிறார்கள்.

உங்களுக்கு வந்திருப்பது மூன்றாம் வகை. உங்களின் நண்பனின் வாழ்க்கையில் நீங்கள் செய்த தவறென்ன தெரியுமா? அவரை அந்த பொல்லாத போட்டிக்கு நீங்கள் அழைத்துச் சென்று பழக்கப் படுத்தியது. மற்றபடி நீங்கள் நினைப்பது போல் உங்களால் ஒன்றும் அவர் இறக்கவில்லை! அவரின் குணமே அதற்கு முதன்மையான காரணம். அதை முதலில் மனதில் ஏற்றுங்கள்….

ஒவ்வொரு மனிதனும் இவ்வுலகுக்கு வரும்போது அவனின் விதி எழுதப்பட்டு தான் வருகிறான். அவனின் கடைசி நாளும் அப்போதே கடவுளால் தீர்மானிக்கப் படுகிறது. அன்றைக்கு உங்கள் நண்பர் வாகனத்தில் செல்லாமல் இருந்தாலும் கூட, அவர் இறப்பது உறுதி! என்ன மரணம் வேறு ஒருவழியில் அவரை தழுவியிருக்கும்.

அதனால் உங்களின் இந்த மன ஊளைச்சல் தேவையற்றது. இதன் மேற்கொண்டு நீங்கள் அவர் செய்த தவறை செய்யாமல் இருந்தாலே போதும். அது தான் நீங்கள் அவரின் உறவுக்கு செலுத்தும் மிகப்பெரிய மரியாதை. சிந்தித்து பாருங்கள்! நான் வருகிறேன். வாழ்க வளமுடன்.”

தன்னால் முடிந்த மட்டும் கார்த்திக்கின் கவலையை போக்கிவிட்டு, அவர் கையெடுத்து கும்பிட்டு கிளம்பினார். மந்திரத்துக்கு கட்டுன்டது போல் கார்த்திக்கும் விநாயகமும் எழுந்து நிற்க, தானாக அவர்கள் கைகள் கும்பிட்டது…. உதடு அது பாட்டுக்கு “நன்றி சாமி” என உரைத்தது. அவரிடம் பேசியதிலிருந்து கார்த்திக்கின் மனம் பாதி தெளிந்தது.

மீதி பாதியும் காலப் போக்கில் மாறும் என விநாயகம் நிம்பினான். இவர்கள் நிலை இப்படி என்றால், மாயாவின் மனமோ முன்னைவிட அதிக திடமாக மாறியது. அதற்கு முக்கிய காரணம் ரித்தியாவும் விநாயகமும்… கதிரின் பதினாறாம் காரியம் முடிந்து வந்ததும் மாயாவும் அபிராமியும் பேசாமல் ஒவ்வொரு படுக்கையறையில் தஞ்சம் புகுந்து கொள்ள, இவர்களை எப்படி தேற்றுவது என குழம்பிப் குட்டையாக மாறினாள் ரித்தியா.

அப்போது தான் விநாயகம் அவர்கள் வீட்டின் கதவை தட்டினான். விநாயகம் மாயாவின் வீடு வருவது இதுவே முதல்முறை! ஆனால் அவனின் மொத்த கதையும் மாயாவின் வீட்டினற்கு அத்துபடி. அதனால் அவனை பார்த்ததும், “வாங்க வாங்கணா…. இப்போ தான் உங்களுக்கு வீட்டுக்கு வழி தெரிஞ்சா??’ என வரவேற்றாள் ரித்தியா.

“அப்படி எல்லாம் ஒண்ணுமில்லமா. எங்க அம்மா, மாயு காணோம்??”

ரித்தியா இரு அறைகளையும் காட்டிவிட்டு, தன் மனதின் புலம்பலை அவனிடம் பகிர்ந்தாள். “எனக்கு மாயுவ கூட எப்படியாவது தேத்திடலாம்னு தோணுதுனா…. அம்மாவ தான் என்ன சொல்லி, செஞ்சு மாத்துறதுனே தெரியலை… ரொம்ப கஷ்டமா இருக்கு இவங்க ரெண்டு பேரையும் பார்க்கும் போது.”

கண்கள் கண்ணீரில் பளபளக்க ரித்தியா கூறியவுடன் விநாயகம் பதறிப் போனான். “ஹே ரித்து எல்லாம் சரியாகிடும்! ஒண்ணும் பிரச்சனையில்லை. மாயாவ சரிகட்டினாலே அம்மா தானா சரியாகிடுவாங்க. அதுக்கு மட்டும் எதாவது செஞ்சா போதும். நானும் அடிக்கடி வரேன். பார்த்துக்கலாம்! கவலைப்படாதமா….”

“ஹ்ம்ம்ம் அத்தையும் மாமாவும் வந்துட்டு தான் போறாங்கனா. ஆனா அம்மா தான் அந்த ராசி விஷயத்தை கேள்விப்பட்டுதுலந்து அத்தை கிட்ட முதல் மாதிரி பழகறதில்ல! மாயா காலேஜ் முடிய இன்னும் ஒன்றை மாசம் இருக்கு. அதுக்கப்புறம் என்ன பண்றது தான் தெரியலை.”

“எதாவது பண்ணலாம்மா. நான் இன்னொரு நாள் வரேன்.”

விநாயகம் கிளம்பியவுடன் ரித்தியாவின் மூளை இதையோட்டியே சிந்தித்ததில் அவளுக்கு தோன்றிய வழி தான் புத்தகங்கள்! ஆம், ஒரு நல்ல புத்தகம் நம் வாழ்க்கையையே மாற்றும் சக்தியுடையது என நிரூபிக்கும் வண்ணம் மாயாவின் மனதிலும் பல மாற்றங்கள் நிகழ்ந்தன.

ரித்தியா அவளை அருகில் இருக்கும் நூலகத்தில் சேர்த்து விட்டு, மேலும் ஊக்கத்தன்மையும் பாசிட்டுவிட்டியும் கொடுக்கும் புத்தகங்களை வீட்டிற்கு எடுத்து வந்தாள். மாயாவுக்கு பெரிதாக படிக்கும் பழக்கம் இல்லை. ஆனால் ரித்தியா கொடுத்த புத்தகங்கள் எல்லாம் எதோ ஒரு வகையில் அவளை ஈர்த்தது. அதன் மேற்கொண்டு மாயாவே நூலகம் சென்று பல புத்தகங்களை வாசித்தாள்.

வெவ்வேறு துறையில் சாதித்தவர்களின் சுயசரிதங்கள் எல்லாம் படிக்க, வெற்றியும் புகழும் அவ்வளவு எளிதாக யாருக்கும் கிடைப்பதில்லை என புரிந்தது. மேலும், அவளின் கனவை அடைய வேண்டும் என்ற எண்ணம் இப்போது மனதில் வேராக ஊன்றியது. வாழ்க்கை பற்றிய அவளின் கண்ணோட்டமே சற்று மாறுப்பட்டது எனவும் சொல்ல வேண்டும். மற்றவர்கள் தன் மேல் சுமத்தும் தேவையற்றை பழி சொற்களை தூக்கி எறியவும் அதுவே அவளுக்கு கற்றுக் கொடுத்தது.

காலேஜின் இறுதி தேர்வுகள் நடைப்பெற்ற நேரம்! இதன் மேலும் தன் வாழ்க்கையை மற்றவர்களின் கைகளில் விட்டுவிட மாயா விரும்பவில்லை. எப்படியும் உடனே அவளின் கல்யாண பேச்சை யாரும் எடுக்கப் போவதில்லை. அதனால் தனக்கென ஒரு வேலையை தேடிக் கொண்டு பெங்களூர், இல்லை சென்னை சென்று கூடவே தன் பகுதி நேர ஒளிப்பதிவு வகுப்பையும் படிக்கலாம் என்று திட்டம் வகுத்தாள்.

அவளின் இறுதித் தேர்வை வெற்றிகரமாக முடித்துவிட்டு, வேலை தேடும் வளைதளங்களில் பதிவு செய்தாள். ஆனால், அபிராமி தான் விநாயகம் நினைத்தது போல தேறவில்லை. தன் மகளின் மேல் விழுந்த களங்கத்தில், அபிராமியின் மனதில் நாளுக்கு நாள் கலக்கம் அதிகமாகியதே ஒழிய குறைந்தபாடில்லை. இவரை நினைத்தே அவரின் மக்கள் இருவரும் வருந்தினர். தன் தாயை மனதில் வைத்து வேலை தேடுவதை சில மாதங்கள் தள்ளிப் போட்டாள் மாயா.

தன் கனவு முக்கியம் தான்… ஆனால், தாயும் தங்கையும் அதைவிட முக்கியம் அவளுக்கு!

அபிராமியின் நிலைமையை கண்டு வேதனைக் கொண்ட ஜீவன்கள் இருவர். ஒன்று மாயாவின் அத்தை கோதை, இன்னொன்று விநாயகம். கோதைக்கு கதிரின் வீட்டில் நடந்தததே நெஞ்சு அடைத்தது. தன் தம்பி குடும்பத்தை கண்ணும் கருத்துமாக பார்த்துக் கொள்ள வேண்டும் என ஆசைப்பட்டவருக்கு, அபிராமியின் இந்த கலக்கம் அவரையும் கவலைக் கடலில் தள்ளியது. ஆனால், முன் போல் ஒட்டாத நாத்தனாரை எப்படி தேற்றுவது என தெரியாமல் முழித்தார்.

விநாயகத்துக்கு என்ன சொல்லி செய்து அபிராமியை தேற்றுவது என தெரியவில்லை…. இளையவர்கள் இதே சிந்தனையாக இருந்தனர். அன்று சனிக்கிழமை. மாயாவின் வீட்டிற்கு சென்றுவிட்டு, நேராக கார்த்திக்கின் வீட்டிற்குள் நுழைந்த விநாயகத்தை சுப்பிரமணியம் தான் வரவேற்றார். “என்னடா முகம் ஒரு மாதிரி இருக்கு… என்ன ஆச்சு??”

விநாயகம் ஒன்றும் சரியாக சொல்லாமல், உச்சு கொட்டினான். “ப்ச்ச்ச் ஒண்ணுமில்லபா. எல்லாம் அபிராமி அம்மாவ நினைச்சு தான்.”

“அவங்களுக்கு என்னடா?? மாயாவ நினைச்சு ஃபீல் பண்றாங்களா??”

“ஆமா, கொஞ்சம் கூட நாங்க சொல்றத எதுவும் காதுல போட்டுக்கறதே இல்ல. ரொம்ப ஓஞ்சு போயிருக்காங்க. மாயா இவங்கள பார்த்தே வேலை தேடுறதை விட்டுட்டா. என்னவோ மனசே சரியில்லைபா!”
 
Top