Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

குவியமுடன் ஒரு காதல் 14 1

Advertisement

Admin

Admin
Member
அத்தியாயம் – 14
கார்த்திக் அவன் தந்தையுடன் வந்து சென்றாலும் சென்றான், அன்றிலிருந்து மாயாவுக்கு ஏழரை ஆரம்பாகியது. இதில் கொடுமை என்னவென்றால் ரித்தியாவும் அவளுக்கு எதிராக அமைந்ததே! ‘என்னடி நீயுமா??’ என்ற பார்வையுடன் மூத்தவள் பார்க்க, இளயவளோ அவளின் வருங்கால அத்தானிற்கு ஆதராவாக பேசினாள்.

“அவரு பண்ணது தப்பு தான்… அப்போ அவரோட நிலைமை அப்படி! ஆனா, இப்போ அவரே வந்து சாரி கேட்டு, அம்மாவும் ஒத்துக்கிட்டு எல்லாம் கூடி வர நேரத்துல ஏன்டி இப்படி பிடிவாதம் பிடிக்கற??”

“ஆமா பிடிவாதம் தான். இந்த விஷயத்துல நான் கண்டிப்பா விட்டுக் கொடுக்கறதா இல்லை, சொல்லிட்டேன்….”

மாயாவின் உறுதியான குரலைக் கேட்டு, மனதிற்குள் பயந்தாள் ரித்தியா. ஒரு பக்கம் ரித்தியா இடிக்க, மறுபக்கம் அபிராமி இடிக்க, மத்தளம் போல் ஆனாள் மாயா! இதில் அபிராமி வேறு எப்போதும் இல்லாத வழக்கமாக மிகவும் பொறுமையாக சூழ்நிலையை எடுத்துரைக்க ஆரம்பித்தார்.

“மாயு முன்னயாவது கதிரை தான் நீ கல்யாணம் பண்ணிக்கனும்னு ரொம்ப வற்புறுத்தினேன். ஆனா இப்போ நீ விரும்பின பையனை தான பேசி முடிக்கறோம். அப்புறம் என்னடா??”

“இப்போ எனக்கு அவனை பிடிக்கலைமா. மேல எதுவும் கேக்காதீங்க! ப்ளீஸ் விட்டுங்கமா…”

“ஏன்டா பிடிக்கலை?? சட்டுனு முடிவு பண்ணாதமா. பொறுமையா யோசி….”

“அவனோட பிரெண்டுக்காக என்னை வேணாம்னு தூக்கிப் போட்டுட்டான். எப்படிமா நான் அவனை கல்யாணம் பண்ணிக்கறது??”

“மாயா அந்த பையனோட முடிவு பத்தி பேச வேணாம். அவங்கவுங்க இடத்துல இருந்து பார்த்தா தான், என்ன அனுபவிச்சாங்கனு புரியும். அதனால, அதை பத்தி மேல யோசனை செஞ்சு உன்னையே குழப்பிக்காத. உன்னை பத்தி தெரிஞ்சு தான் சொல்றேன். இவனை லவ் பண்றேன்னு சொல்லிட்டு வேற யாரையும் நீ கல்யாணம் பண்ணிக்கவும் மாட்ட.
நல்லாவே தெரியும் எனக்கு! அந்த தம்பியோட அப்பாவும் ரொம்ப நல்லவங்களா தெரியறாங்க. ப்ளீஸ் உன்னோட நல்லதுக்கு தான்டா சொல்றேன்….”

“ப்ச்ச்ச்ச்,… ஏன்மா நான் சொல்றதையே நீங்க புரிஞ்சிக்க மாட்டேங்கிறீங்க?? எனக்கு கல்யாணம் வேணாம்! என்னோட கேமரா மட்டும் போதும்….”

“கல்யாணம் பண்ணிட்டு கேமரா பத்தி படி… அந்த தம்பி தான் உன்னை என்கரேஜ் பண்ணானாமே காலேஜ்ல?? விநாயகம் சொன்னான். பாரு அம்மா, நீ படிக்கறதுக்கு ஓகே சொல்லிட்டேன்ல…. நீயும் கொஞ்சம் யோசிமா….”

கூறிவிட்டு அபிராமி எழுந்து வீட்டு வேலையை பார்க்கச் செல்ல, அவரையே எரிச்சலுடன் பார்த்தாள் மாயா. தன்னை தன் அன்னை எப்போதும் அடக்கி ஆளுவதாக ஒரு எண்ணம் அவளுக்குள். இப்போதும் தாய் தன்னை அடக்கி கல்யாணம் என்னும் சிறைக்குள் தள்ள பார்க்கிறார் என்ற பிரம்மை தோன்றியது மாயாவுக்கு.

மிகவும் கண்டிப்புடன் சிறு வயது முதல் தான் அன்னைக்கு பனிந்தது அனைத்தும் நினைவு வர, கண்களில் இருந்து கண்ணீர் வந்த அதே வேளை இதயத்தில் இந்த முறை கண்டிப்பாக பனியக் கூடாது என்றும் உறுதிமொழி பிறந்தது. எப்போதும் தாய் அவருக்கு பிடித்ததையே தன்னை செய்ய வைத்து சாதித்துக் கொள்கிறார் என்று மனது தப்பு கணக்கு போட்டு, இம்முறை நல்லது கூறும் போதும் அதை புறக்கனித்தது வெற்றிகரமாக.

அடுத்த நாளும் தாயவள் இதை பற்றியே கேட்க, மகளின் பழைய டேப் ரேக்காடரே ஓடியது. “பைத்தியமாடி நீ?? கல்யாணம் பண்ணிட்டு படினா கேக்க மாட்றா. கேமரா மட்டும் போதும்னா, கல்யாணம் பண்ணிக்க மாட்டியா?? கொஞ்சமாவது புத்தியோட பேசு!”

அபிராமியின் வசவுகளும், தன் கோதை அத்தையின் வற்புறுத்தல்களும், ரித்தியா மற்றும் விநாயகத்தின் அட்வைஸுமே மாயாவை விபரீதமான முடிவை எடுக்க வைக்க போதுமானதாக இருந்தது. ஒரு நிலை மேல் அபிராமி, “நீ இப்படியே சும்ம விட்டத்த பார்த்துட்டு உட்காந்துட்டு இரு. நான் சுப்பிரமணியம் அண்ணாகிட்ட சொல்லி, நிச்சயதார்த்த ஏற்பாடு பண்ண சொல்லப் போறேன். பார்த்துட்டே இரு!!” என்று நேரடியாகவே மிரட்டவும் மாயாவிற்கு திக்கென்றது!

தன் வாழ்க்கை இந்த முறை தன் கைகளில் இருந்து தப்பக் கூடாது என்ற வேண்டுதலுடன் மேலே என்ன செய்வது என்று யோசிக்கலானாள். அவள் மனக் கண்ணில் தோன்றிய முகம் அவளின் கல்லூரித் தோழி கனிமொழி. அவள் காலேஜ் முடிந்ததும் அவளின் தந்தைக்கு மாற்றல் ஆகியதால், ஈரோடு சென்றுவிட்டாள். அவளிடம் சென்று சிறிது நாட்கள் தங்கலாம் என முடிவு செய்தாள் மாயா.

தன்னை தேடி வீட்டினர் வந்ததும், அப்போது தன் முடிவில் ஆணித்தரமாக இருந்து காரியத்தை சாதிக்க வேண்டும் என நெஞ்சில் சூளுரைத்தாள்! இப்படி செய்தால் தான் தன் எண்ணத்தில் இருக்கும் தெளிவும் உறுதியும் தன் குடும்பத்தாருக்கும் புரியும்.

முடிவு செய்தவுடன் காலம் தாழ்த்தாமல் அடுத்த நாளே கிளம்புவது என முடிவு செய்தாள் மாயா. வாட்ஸ் ஆப்பில் கனிமொழியிடம் வேறு ஒரு மொக்கை காரணத்தை சொல்லி, வீட்டு முகவரியும் வாங்கியாயிற்று. அடுத்து கிளம்ப வேண்டியது தான் பாக்கி…. எப்போது கிளம்புவது என்னவென்று கூறி கிளம்புவது??

எப்போதும் சனிக்கிழமை கோவில் செல்வது அவளின் வழக்கம்… ஆனால் மாலை தான் செல்வாள். காலையில் இவள் செல்லும் கோவில் சீக்கிரமே மூடி விடுவார்கள். அதனால், கிளம்பினால் மாலை நான்கு மணியளவில் தான் கிளம்ப இயலும். என்ன செய்யலாம்???

யோசனை அன்று இரவு வரை தொடர்ந்தது. சனிக்கிழமை என்பதால் அம்மா வேறு வீட்டில் இருப்பார்! இறுதியில் மூன்றரைக்கு கோவில் போவதாக கூறி வீட்டை விட்டு கிளம்பலாம் என முடிவு செய்தாள். மறுநாள் காலை விடிந்ததிலிருந்து ஒருவித பதற்றம் அவளை தொற்றிக் கொண்டது.

வீட்டை விட்டு செல்வது என்றால் சாதாரண காரியமா?? மனம் தரையின் மேல் மீனாய் தத்தளித்தது! ஈரோடு சென்றதும் போன் செய்து தான் பாதுக்காப்பாக இருப்பதாகவும், தன்னை தேட வேண்டாம் என்றும் வீட்டிற்கு தெரியப்படுத்தலாம் எனவும் முடிவெடுத்தாள். ஒருவழியாக மணி மூன்றாகியது….

சாப்பிட்டவுடன் அபிராமி கண்ணசர, அது தான் சமயம் என தன்னுடைய காலேஜ் பேக்கில் தேவையானவற்றை எடுத்துவைத்து மணி மூன்றரை தொட்டவுடன் அவளின் அம்மாவை எழுப்பினாள். பேக் ஏற்கனவே வெளியே சென்றுவிட்டது இவளுக்கு முன்.

“அம்மா கோவிலுக்கு போயிட்டு வரேன்மா. பூட்டிக்கோங்க கதவை” என சொல்லிவிட்டு விடுவிடுவென்று நடந்தாள். அபிராமி தூக்கக் கலக்கத்தில் வாசல் கதவை அடையும் முன் மாயாவின் கால்கள் அவள் தெருமுனையை கடந்திருந்தது. படப்படக்கும் நெஞ்சோடு பேருந்து நிலையம் சென்று ஈரோடு செல்லும் பேருந்தில் ஏறி அமர்ந்துக் கொண்டாள்.

கை கடிகாரத்தை பார்த்தால் மணி நான்கு பதினைந்து என காட்டியது. பஸ்ஸும் ஈரோடு நோக்கி ஓட ஆரம்பிக்க, சிறிய நிம்மதி பெருமூச்சை விட்டாள் மாயா. இருந்தாலும் மனதிற்குள் என்னவோ செய்தது தான்!

இவளின் வீட்டில் இப்போது என்ன நடக்கும் என சிந்தித்தபடி பேருந்தின் சீட்டில் சாய்ந்தாள். அபிராமி இவள் சென்றதும் பாத்திரம் விளக்க ஆரம்பிக்க, பள்ளியில் இருந்து நாலரைக்கு வீடு திரும்பிய ரித்தியா முதலில் கேட்டது அவளின் அக்காவை தான்.

“அவ கோவிலுக்கு போயிருக்கா… ஏதோ அந்த கடவுள் இவளுக்கு நல்ல புத்தி கொடுத்தா பரவாயில்லை.” என்று வந்த பதிலில், வீட்டு மொபைலை எடுத்து மாயாவை அழைத்தாள். மாயா எடுக்கவில்லை! சரி சாமி கும்பிட்டுவிட்டு அவளாகவே அழைப்பாள் என ரித்தியாவும் காபி அருந்தி டிவியின் கவனம் செல்லுத்தினாள்.

வீட்டு மொபைல் நம்பர் தன் கைப்பேசியின் திரையில் மின்னவும் மாயாவுக்கு என்ன செய்வது என்றே தெரியவில்லை…. ஆனால், ஒரு முறை முழுதாக அடித்து ஓயவும் தான் மாயாவின் நெஞ்சம் அமைதியுற்றது.

இருந்தாலும் சில மணி நேரங்களில் மீண்டும் அழைப்பு வரும் அப்போது சொல்லித் தானே ஆக வேண்டும்! தலையில் கைவைத்தபடி மாயா நேரத்தை கழிக்க, அவள் பேருந்தி ஏறி சரியாக ஒரு மணி நேரம் கழித்து, மீண்டும் வீட்டு நம்பரில் இருந்து அழைப்பு வந்தது.

மாயா இம்முறையும் எடுக்காமல் விடவும், திரும்பத் திரும்ப அழைத்தாள் ரித்தியா! இப்போது ரித்தியாவின் மனதினுள் பயப்பந்து அழையா விருந்தாளியாக குடிவந்தது. ‘போய் ஒரு மணி நேரம் எல்லாம் ஆக்க மாட்டாளே! ஏன் இன்னும் வரலை?? போனும் எடுக்க மாட்றா??’ ரித்தியாவுற்கு அவள் எப்போதும் உபயோகிக்கும் பேனா வேண்டும். அது கோவிலின் அருகில் இருக்கும் கடையில் கிடைக்கும் என்பதால் தான் அவள் அழைத்தாள்.

ஆனால், இப்போது மாயா போன் எடுக்காமல் போனதால் பயந்து போய் அப்படியே நின்றுக் கொண்டிருந்தாள். கைகள் அது பாட்டிற்கு மாயாவின் நம்பரை அழைத்துக் கொண்டிருந்தது. மாயாவிற்கு இங்கே நிலைகொள்ளாமல் தவித்தது மனது. வேறு வழி தெரியாமல், நடுங்கும் கைகளுடன் அழைப்பை எடுத்தாள்.

ரித்தியா பதட்டத்துடன் “ஹலோ… ஹே எங்கடி இருக்க?? எத்தனை தடவை கூப்பிடுறது!” என பொறியவும், மாயாவுக்கு நாக்கு பற்களுக்கு இடையில் அடைப்பட்டுக் கொண்டது. அவள் அமைதியாக இருந்த நேரத்தில், பேருந்தின் சத்தம் மிக தெளிவாக ரித்தியாவுக்கு கேட்டது, மாயாவின் துரதிஷ்டம்!

“ஹே என்ன பஸ்லயா இருக்க?? எங்க இருக்கன்னு சொல்லு முதல்ல…”

“ரித்து நான் வீட்டுக்கு வந்திடறேன் கொஞ்ச நாள்ல. அதுவரைக்கும் என்னை தனியா விடுங்க. கண்டிப்பா நானே வருவேன். என்னை தேடாதீங்க. பை”

தான் சொல்ல வேண்டியதை சொல்லிவிட்டு, அலைப்பேசியை அணைத்துவிட்டு தன் கைப்பையில் போட்டுக் கொண்டாள் மாயா. எப்படியோ விஷயம் சொல்லியாகிற்று. மேலே கடவுள் விட்ட வழி என மீதி பயணத்தை கனக்கும் நெஞ்சத்தோடு கடந்தாள்.

இங்கே ரித்தியாவிற்கு கை கால்கள் ஏன் உடம்பே நடுங்கியது. திரும்ப அவள் மாயாவை அழைக்க, போன் அதற்குள் அணைக்கப் பட்டு விட்டதை கண்டு திகைத்தாள். ஓடி போய் அவள் நின்ற இடம் மாயாவின் அலமாரி. அதில் காணாமல் போன மாயாவின் காலேஜ் பேக், அவளின் பர்ஸ் எல்லாம் வைத்து உண்மையாகவே மாயா வீட்டை விட்டு வெளியேறிவிட்டாள் என உறுதிப் படுத்தினாள்.

 
Top