Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

குவியமுடன் ஒரு காதல் 18 2

Advertisement

Admin

Admin
Member

இது ஒரு புறம் இருக்க, மறுபுறம் மிஸ் பண்ணாமல் அவள் சென்ற கராத்தே வகுப்பு மாயாவுக்கு மிகுந்த தன்னம்பிக்கையும், துணிவையும் கொடுத்தது. இடையில் மாதம் ஒரு முறை அல்லது இரண்டு முறை ஊருக்கு போய் வருவாள். அவளுக்கு தைரியம் வர வேண்டும் என விநாயகம் அவளை தனியே தான் பயணம் செய்ய வைத்தான்.

இப்படியே சில மாதங்கள் உருண்டோட, அவளின் வாழ்க்கையில் சத்தமில்லாமல் மீண்டும் நுழைந்தான் அவளின் கணவன். கார்த்திக்கின் பெங்களூர் வேலை சில மாதங்களில் முடிவடைய அவன் மீண்டும் கோயம்பத்தூர் செல்லும் நிலை ஏற்பட்டது. கண்டிப்பாக சொந்த ஊரில் இருக்க முடியாது… எங்கே போவது?? சட்டென அவன் மனதில் பிளாஷ் அடித்த இடம் சிங்கார சென்னை!

இத்தனை நாள் மிகவும் கஷ்டப்பட்டு தான் மாயாவை பார்க்காமல் இருந்தான். மீண்டும் அப்படியே வாழ அவன் தயாராக இல்லை. ஒரு நாளைக்கு ஒரு முறையாவது அவளை தூரத்தில் இருந்தாவது பார்க்க வேண்டும் என்று எழுந்த பேராவலை அவனால் அடக்க முடியவில்லை.

ஆனால், சென்னைக்கு போவதிலும் ஒரு சிக்கல் வந்தது! அவன் வேலை செய்த கார் கம்பெனி சென்னையில் எந்த கிளையும் வைத்திருக்கவில்லை… சில நாட்கள் இதே சிந்தனையாக இருந்தவன் துணிந்து முடிவெடுத்தான். அந்த முடிவின் படி சென்னையில் இருந்த வேறு ஒரு நிறுவனத்திற்கு அவன் விண்ணப்பித்தான். விண்ணப்பம் தேர்வானதோடு, நேர்கானலிலும் அவன் செலக்ட் ஆனான். பதவி உயர்வுடன், சம்பள உயர்வும் கிடைத்தது!

வெகு மாதங்கள் கழித்து, சரியாக சொல்லப் போனால் கதிர் அவன் காதலை கூறியதிலிருந்து அவனை விட்டுச் சென்ற சந்தோஷம் அவனை ஆட்கொண்டது! இருந்த வேலையை ராஜீனாமா செய்துவிட்டு, சென்னைக்கு குடிப் போகும் திட்டத்தில் கவனம் செலுத்தினான் கார்த்திக்.

சென்னைக்கு செல்கிறோம்…. தினமும் ஒரு முறையாவது மாயாவை காண வேண்டும் என்றால், அவளின் வீட்டின் அருகில் தான் தானும் தங்க வேண்டும் என தீர்மானித்தான் கார்த்திக். காலேஜ் படிக்கும் போது விநாயகத்தோடு சென்னை சுற்றி பார்க்கவென ஒரு முறை மைதிலியின் வீட்டிற்கு சென்றுள்ளான் அவன். அதனால், மாயா தங்கிருந்த அடுக்குமாடி குடியிருப்பில் ஒரு பிளாட் வாடகை கிடைக்குமா என, வலைத்தளங்களில் வலை வீசி தேடினான்.

கடவுளே அவன் மேல பாவப்பட்டு அவனுக்கு உதவ நினைத்தார் போல!

கார்த்திக்கிற்கு அவர்கள் அடுக்குமாடி குடியிருப்பிலேயே ஒரு வீடு வாடகைக்கு கிடைத்தது. மைதிலியின் வீடு ‘சி’ பிளாக் என்றால், கார்த்திக்கின் வீடு ‘ஜே’ பிளாக். தொலைவில் இருந்தால் மாயாவுக்கும் தான் இருப்பது தெரிய வராது என நினைத்து நிம்மதியடைந்தான்.

அந்த சிறு நிம்மதியும் அவன் மனதை அவ்வளவு குளிர் வித்தது. அவனின் நிம்மதி சந்தோஷம் தான் அவனாலயே பறந்து போனதே?! சென்னையில் குடியேறும் முன் கோயம்பத்தூருக்கு ஒரு முறை சென்று தன் தந்தையை தூரத்தில் இருந்து பார்த்துவிட்டு தான் சென்றான். சென்னையில் குடியேறிய அன்று மாலை ஆகி இருந்தது.

அந்தி சாயும் வேலையில் பெட்டிகளுடன் வந்திறங்கிய கார்த்திக், வீட்டின் உள்ளே எல்லாவற்றையும் வைத்துவிட்டு சுத்தி பார்த்தான் அவ்வீட்டை. மாலை நேரத்து கடல் காற்றுடன் அவனை வரவேற்றது பால்கனி! அங்கே போய் பார்த்தவன் திகைத்து நின்றான். அங்கிருந்து பார்த்தால் கீழே மாயா லேகாவுடன் சிறுவர்கள் விளையாடும் இடத்தில் பந்து விளையாடிக் கொண்டிருந்தாள்.

ஒரு முறை அவன் கண்ணம்மாவை ஆழ்ந்து பார்த்தான். கல்யாணம் நடந்த போது இருந்த மாயா அல்ல இவள். அப்போது விரக்தியிலும், அழுகையிலும் பொலிவிழந்த முகத்துடன் காணப்பட்டவள், இப்போது பார்ப்பதற்கே கூடுதல் அழகுடன் மிளிர்ந்தாள். அவளின் கண்கள் சிறுமியுடன் விளையாடியதால் சுருங்கி விரிந்து, வேறோரு உலகத்தை காட்டியது கார்த்திக்கிற்கு. பிடித்த துறையில் தன் அறிவை மெருகேற்றிக் கொள்வதால், உண்டான தேஜஸ் ஒருப்புறம் காந்தமாக அவன் நெஞ்சை இழுத்தது. இதயம் தளும்ப, கண்களில் நீர் கசிய விழியெடுக்காமல் தன் மனைவியை நோக்கினான் அந்த கலாபக் காதலன்!

அவன் இருந்தது நான்காவது மாடி என்பதால், மேலே கூர்ந்து நோக்கினால் தான் கார்த்திக் நிற்பது தெரியும். அதனால், அடுத்தடுத்து வந்த நாட்களில் இதையே வழக்கமாக கொண்டான். பால்கனியின் கதவின் அருகில் சேர் போட்டு பொன்டாட்டியை வேடிக்கை பார்ப்பது அவனுக்கு வழக்கமாக போயிற்று.

இந்த வழக்கம் மாயாவுக்கு தெரிய வருவதற்குள் மாதங்கள் இரண்டு ஓடிற்று. முதன் முதலில் அவனை அப்பார்மென்டின் கேட் அருகில் கண்டதும் மாயாவுக்கு பேரதிர்ச்சி தான். நல்லவேளை இவள் பார்த்ததை அவன் கவனிக்கவில்லை….

விநாயகம் கார்த்திக் வேலை விட்டு சென்றுவிட்டதாக மட்டும் தெரிவித்தான் சில மாதங்கள் முன்னால். கார்த்திக்கை பற்றி நினைப்பது தேவையில்லாத மன உளைச்சலை கொடுப்பதால் மாயாவும் மேற்கொண்டு அவனை பற்றி நினைக்கவில்லை.

ஏற்கனவே கழுத்தில் தொங்கிய தாலியே அவன் நினைப்பை கொடுப்பதே போதுமானதாய் இருந்தது. இதில் புதிதாக வேறு இழுத்துக் கொள்ள வேண்டுமா?? இப்படியே சிந்தித்து அவள் அவன் நினைவலைகள் இடமிருந்து தப்பித்து ஓட கார்த்திக்கை கண்ணால் கண்டதும் ஒன்றும் ஓடவில்லை அவளுக்கு.

பேசாமல் வீட்டில் வந்து அமர்ந்துவிட்டாள்! மைதிலியும் ராம்பிரசாத்தும் ஒரு முறை கூட இவளின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி கேள்வி எழுப்பினதில்லை. அவர்கள் மேல் மிகுந்த மரியாதை கொண்டிருந்தாள் மாயா. ஆனால், இதை பற்றி வெளிப்படையாக அவர்களிடம் பேசவும் வாய் எழவில்லை! சில நாட்கள் பொறுத்திருந்து கவனித்தாள் கார்த்திக்கை. அவன் தன்னை எவ்வித தொந்தரவும் பண்ணவில்லை என்று உணர்ந்தவுடன் விநாயகத்தை அழைத்து விஷயத்தை கூறினாள்.

“அவன் எதுக்கு இப்போ அங்க வந்தான்?? நான் நாளைக்கே கிளம்பி அங்க வரேன்!”

“அண்ணா நான் தான் அவன் என்னை கண்டுக்க கூடயில்லைன்னு சொல்றேன்ல… அப்புறம் என்ன?? அப்படியே அவன் பிரச்சனை பண்ணாலும், இனிமே இதை எல்லாம் நானே ஹேண்டில் பண்ணிக்கறேன்.”

ஒரு கணம் அவளை எண்ணி பெருமை கொண்டான் அவள் அண்ணன். “எப்போலந்து இப்படி எல்லாத்தையும் ஃபேஸ் பண்ண கத்துக்கிட்ட??”

“ஹும்… லைப் எனக்கு நிறைய கத்து குடுத்துருச்சு, எல்லா கஷ்டத்தையும் குடுத்து. இப்போ எல்லாம் எவ்வளவோ கஷ்டத்தை பார்த்துட்டோம், இதேல்லாம் பெரிய விஷயமான்னு தான் தோணுதுனா….”

அவளின் நகைச்சுவையின் பின் இருக்கும் வலியில், அவளின் அண்ணன் மௌனமானான். கார்த்திக்கும் மாயாவை எந்தவித தொந்தரவும் செய்யக் கூடாது என்பதில் குறியாக இருந்தான். அவள் படித்து முடித்து பெரிதாக சாதிக்க வேண்டும் என்பதே அவனின் வேண்டுதலாக இருந்தது ஆண்டவனிடம்!

நாட்களும் மாதங்களாக தெளிவான நீரோடையாக ஓடிச் செல்ல, கார்த்திக் மாயாவை ஒளிந்திருந்து பார்ப்பது மட்டும் தொடர்ந்தது தினமும். மாயா தன் மூன்று வருட படிப்பில் ஒரு வருடத்தை முடித்திருந்தாள். இந்த ஒரு வருடம் அவளுக்கு மிகவும் நன்றாக சென்றது என்றே கூற வேண்டும். ஒளிப்பதிவை பற்றி அவள் அறிந்த விஷயங்கள் பல….

பழைய நினைவுகளிலிருந்து அவளை அவளே மீட்டுக் கொண்டு வந்திருந்தாள் ஓரளவுக்கு! எல்லாம் நன்றாக சென்றுக் கொண்டிருந்தது. மைதிலியின் குடும்பமும், மாயாவும் லேகாவின் பிறந்தநாள் கொண்டாட தங்கள் சொந்த ஊருக்கு பயணப்படும் வரை!

மாயாவும் தேர்வு முடிந்து லீவ்வில் இருந்தாள். எனவே ராம்பிரசாத்தும் ஆபீஸ்ஸில் விடுமுறை எடுத்துக் கொண்டு பத்து நாட்கள் ஊருக்கு சென்றனர். நிறைய நாள் வீட்டில் தங்கலாம் என சந்தோஷமாக கிளம்பினாள் மாயா. அவள் வீடு சென்ற நாள் சுப்பிரமணியம் அவளை பார்க்க வந்திருந்தார்.

கொஞ்சம் ஓய்ந்து போய் இருந்தவராக தோன்றவும், மாயா வாய்விட்டே கூறினாள்.

“உடம்மை பார்த்துக்கோங்க…. ரொம்ப வேலை இழுத்துக்காதீங்க.”

ஒரு கசப்பான புன்னகையுடன் தன் வருத்தத்தை மறைத்துக் கொண்டு, “வேலை இருக்கறதுனால தான் எதை பத்தியும் யோசிக்காம இருக்க முடியுதுமா. இல்லனா நாள் தள்றதே பெரும் பாடா இருக்கு….” என்றார் அவளின் மாமனார்.

அவரை மேலும் என்ன கூறி தேற்றுவது என தெரியாமல் முழித்தாள் மாயா. சிறிது நேரத்திலேயே அவர் கிளம்பவும், மறுநாள் லேகாவின் பிறந்தநாள் என்பதால், அதற்காக ஏற்பாடுகளை செய்யவென விநாயகத்தின் வீட்டிற்கு சென்றுவிட்டாள்.

மறுநாள் அழகான அணிச்சலை லேகா ஸ்ரீ வெட்ட, கொண்டாட்டமாக அவளின் ஐந்தாம் பிறந்த நாள் கழிந்தது. மறுநாள் இன்னும் ஒரு வாரம் இங்கே தங்கும் வரை அம்மாவின் கையால் நன்றாக சாப்பிட எண்ணி, விதவிதமான மெனுவை அவளின் அன்னையிடம் சமர்பித்தாள் மாயா. அபிராமி ஒரே வார்த்தையாக, “எல்லாம் செஞ்சு தரேன்… ஆனா, இதெல்லாம் செய்ய வீட்டுல எந்த பொருளும் இல்ல… கடைக்கு போய் எல்லாத்தையும் வாங்கிட்டு வா… செஞ்சு தரேன்.” என்று கூறினார்.

அவரின் கன்னத்தை கிள்ளி, “செல்ல மம்மி!!! இப்போவே போய் எல்லாத்தையும் வாங்கிட்டு வரேன். பிரைட் ரைஸ் நைட்டுக்கே பண்ணிடுங்கமா….” என கூறி சூப்பர் மார்க்கெட்டுக்கு தன் ஸ்கூட்டியை கிளப்பினாள் நம் நாயகி.

சூப்பர் மார்கெட்டில் ஒரே கூட்டம் நிரம்பி வழிந்தது. பில் போடும் இடத்தில் நின்றுக் கொண்டு கண்ணாடி தடுப்பின் வெளியே தெரியும் சாலையை நோட்டம் விட்டாள். அப்போது தான் அவள் கண்களில் கார்த்திக் தென்பட்டான். ‘இவன் இங்க என்ன பண்றான்??’ மாயா யோசிக்கும் போதே கார்த்திக் ஒருவிதமான பதட்டத்தில் இருப்பது புரிந்தது.

அவன் அங்கே கடைக்கு எதிர்தரப்பில் நின்றிருந்தான் ஒரு பையுடன். அந்த பையில் என்னவோ கணமான பொருள் இருப்பது போன்று மாயாவுக்கு தோன்ற, இவன் எதுவோ தப்பு செய்கிறான் என எண்ணினாள் மாயசித்ரா!

அப்போது ஒரு கார் அவன் அருகில் நின்றது. அதிலிருந்து இறங்கிய ஒருவன் கார்த்திக்கிடம் அவன் வந்த காரின் சாவியை கொடுத்துவிட்டு செல்லவும், கார்த்திக் யாரும் கவனிக்கிறார்களா என பார்த்தபடி காரை எடுத்தான்.

‘என்னவோ பண்றான்… என்னவா இருக்கும்??’ மூளை முழுதும் குழம்ப மேலும் அவளை தனியே குழப்பிக்காமல் கார்த்திக் சென்ற காரை பின் தொடர்ந்தாள் தன்னுடைய ஸ்கூட்டியில்! ஓர் துப்பரியும் ஆய்வாளரின் ஆராய்ச்சி மனப்பான்மையுடன் மாயா அவன் காரை கொஞ்சம் இடைவெளி விட்டு தொடர்ந்தாள்.

கார் கோயம்பத்தூரின் புறநகர் பகுதிக்குள் சென்றதும், கண்டிப்பாக அவன் என்னவோ செய்கிறான் என உறுதிப்படுத்திக் கொண்டாள் மாயா அவளுக்குள். திடீரென கார் ஒரு பழைய ஒதுக்குப்புறமான வீட்டின் முன்னால் நின்றதும், கார்த்திக் அதிலிருந்து இறங்கினான். அவன் நாலா பக்கமும் அலைப் பாய்ந்த கண்களில், ஒரு மரத்தின் பின் இருந்த மாயா தப்பியது அவன் துரதிஷ்டமே!

சிறிது இடைவெளிவிட்டு மாயாவும் ஸ்கூட்டியை நிறுத்திவிட்டு, அவனை தொடர்ந்து வீட்டின் ஜன்னல் பக்கமாக பார்த்தாள். பார்த்தவள் சிலையாக சமைந்தாள் எனவே கூற வேண்டும்!

யாரோ மூன்று ஆண்கள் கண், கை, கால்கள் எல்லாம் கட்டப்பட்டிருக்க அவர்களின் முன் கார்த்திக் ஐய்யனாராக மாறி பெரிய அருவாளுடன் நின்றிருந்தான். “உங்கள திட்டக் கூட வாய் கூசுதுடா, பாவிங்களா!! என்னை ஏதாவது பண்ணி இருந்தா கூட விட்டுருப்பேன்! என்னோட… என்னோட உயிர்டா அவ… அவளை போய்!! உங்களளளளள….”

கத்தியபடியே அரிவாளை ஓங்கியபடி கார்த்திக் ஒருவனை வெட்டப் போக, மாயா அதை தாங்க முடியாமல், “அம்மாமாமாமாமா!!!!” என கத்தினாள் தன்னை மறந்து!! கார்த்திக்கின் ஓங்கிய கை ஓங்கியபடியே நின்றது….
 
Top