Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

குவியமுடன் ஒரு காதல் 2

Advertisement

Admin

Admin
Member


அத்தியாயம் – 2

அவினாசி சாலை….. பலதரப்பட்ட வாகனங்களை தினமும் பார்க்கும் இச்சாலை, கோயம்பத்தூரின் பிரதான சாலை மட்டுமல்ல, ஒரு தேசிய நெடுஞ்சாலையும் கூட! தினமும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்களை காணும் சாலையின் ஒரு பகுதில், இரு விசையுந்துகள் சீரிப்பாய்ந்துக் கொண்டிருந்தன!

பாய்ச்சல் என்றால் பாய்ச்சல், அப்படி ஒரு பாய்ச்சல்…. எதிர்வரும் காற்றை கிழித்துக் கொண்டு ஓடும் இயந்திர குதிரைகளாய், மாறிப் போனது அந்த இரு பைக்குகளும். ஒன்றை கார்த்திக் ஓட்ட, அவன் பின் விநாயகம், கார்த்திக்கின் நண்பன் அமர்ந்திருந்தான்! தப்பு தப்பு… கார்த்திக்கின் மேல் பாதி ஏறியவாரு சவாரி செய்தான்!

மற்றொன்றில் கார்த்திக்கின் இன்னொரு நண்பன் கதிர் பயணித்தான். இருவரும் ஒருவருக்கொருவர் போட்டிப் போட்டு வண்டியை செலுத்தினர். கார்த்திக்கா கதிரா, யார் வெல்லுவார் என விநாயகமே குழம்பிப் போகவே இல்லை! ஏன்னென்றால் கண்டிப்பாக கதிர் தான் ஜெயிப்பான் என அவன் நன்கு அறிவான்.

விநாயகம் எண்ணியது போலவே இறுதியில் கதிரே வென்றான். சந்தோஷமாக ஹெல்மெட்டை கழட்டி, கார்த்திக்கிடம் வந்தான் கதிர். முழு பெயர் கதிர்வேலன். ‘புன்னகை மன்னன்’ என கார்த்திக்கால் அடிக்கடி கிண்டல் அடிக்கப் படுகிறவன்.

ஐந்தரை அடி உயரத்தில், மாநிறத்தில் பார்ப்பதற்கு நன்றாகவே இருப்பான். இப்போதும், புன்னகை பூசிய முகமாக தன் தோழனின் தோளில் கைப்போட்டு, “சூப்பர் ரைட் மச்சான். செமையா இருந்துச்சு!” என்றான் களிப்புடன்.

கார்த்திக்கும் பதிலுக்கு புன்னகை அணிந்துக் கொண்டு, “ஆமாடா… இன்னிக்கும் நீ தான் ஜெயிச்ச…. சரி வாங்க ரகுண்ணா பேக்கரிக்கு போலாம்” என்றான். “எப்போவுமே அவன் தானடா ஜெயிக்கறான். இதென்ன புதுசா சொல்லிகிட்டு??”

விநாயகத்தின் நக்கலான பதிலில் கதிரின் முகத்தில் பெருமிதம் மிளிர்ந்ததென்றால், கார்த்திக்கின் முகத்தில் ஒரு விருப்பமான சந்தோஷம் மிதந்தது.

மூவரும் இருநூறு அடி தூரத்தில் இருக்கும், அந்த ‘ரகுண்ணா’ பேக்கரிக்கு சென்றனர்.

அந்த கடையில் ஸ்நாக்ஸ் என்று சாப்பிட கிடைக்காததே இல்லை எனலாம். அதனால், எப்போதும் அலை மோதும் கூட்டம் தான். இவர்கள் அங்கு போய் சேர்ந்ததும், கதிர் தான் ஆர்டர் செய்து வாங்கி வருவதாக கூற, கார்த்திக்கும் விநாயகமும் மேசையில் காத்திருந்தனர் அவனுக்காக.

“ஏன் மச்சான் இப்படி ஒவ்வொரு வாட்டியும் அவனுக்காக நீ விட்டுக் கொடுக்கறியே… உனக்கு ஒரு தடவ கூட ஜெயிக்கனும்னு தோணலயாடா??”

விநாயகத்தின் முகத்தையே சிறிது நேரம் கூர்ந்துவிட்டு, பதிலளித்தான் கார்த்திக். “இதையும் நீ எத்தனை தடவ கேட்டுருக்க?? இருந்தாலும் ஆன்சர் பண்றேன் நல்லா கேட்டுக்கோ…

அவன் என்னோட பிரெண்டு மட்டும் இல்ல. அதுக்கும் மேல! அவனுக்காக ரேஸ்ல தோக்கறது எல்லாம் ஒரு விஷயமா? அவனுக்கு தான் தோத்துட்டா தாங்குதுன்னு தெரியும்ல? அப்புறம் என்ன கேள்வி கேக்கற?”

“அதான்டா எனக்கும் புரியவே மாட்டேங்குது. எப்படிடா வளர்ந்தான் இப்படி??”

“அது அவங்க அம்மாவால தான்டா எல்லாமே…. அவங்க சும்மா இருந்திருந்தாங்கனா இவன் இப்படி ஆகியிருக்க மாட்டான்.”

ஆம், கதிரின் இத்தகைய குணம் அவன் அன்னையால் தான் வந்தது. சிறு வயதிலிருந்து, “நீ தான்டா கண்ணா எப்போவும் ஃபரஸ்டா வரனும். என்னோட கதிர் தான் எல்லாத்துலயும் பெஸ்ட்டா இருக்கனும்.” என்று சொல்லி சொல்லி வளர்த்தார்.

படிப்பில் சுட்டியாக இருந்ததால் கதிருக்கு படிப்பை பொருத்தவரை பிரச்சனையாக இல்லை. அவனுடைய ஏழாவது வகுப்பில் தான் கார்த்திக் அவன் வகுப்பில் சேர்ந்தான்.

படிப்பில் கதிருக்கு அடுத்தே கார்த்திக் எப்போதும் வருவான். ஆனால் விளையாட்டு, மற்ற சிறப்பு பயிற்சிகள் என்று வந்த போது, கதிரால் எல்லாவற்றிலும் சிறப்பாக இருக்க முடியவில்லை. யாராலும் அப்படி இருக்க முடியாது என அவனுக்கு புரியவில்லை.

அவன் தாய் சிறு வயதில் கூறியதே அவன் காதில் எப்போதும் ஒலித்துக் கொண்டிருக்கும். நாட்கள் செல்ல செல்ல தான் முதலாவதாக வர வேண்டும் என்பது அவனுக்கு ஒரு வெறியாகவே மாறியது. அப்படித்தான், கார்த்திக் அவன் நண்பனாக ஆரம்பித்த காலத்தில், கார்த்திக்கும் அவனும் ஒரு முறை சதுரங்கம் விளையாடிய போது அவனால் ஜெயிக்க முடியவில்லை என்று, இடது கை கட்டை வெட்டிக் கொண்டான்.

அந்த ரத்தத்தை கண் கொண்டு பார்த்த கார்த்திக் அப்போதிலிருந்து எப்போதும் அவனுக்காக விட்டுக் கொடுக்க ஆரம்பித்தான். கதிர் கை கட்டை வெட்டிக் கொண்டதிலிருந்து, அவன் அன்னை கூட அவனை முதலாவதாக வர வேண்டும் என்று சொன்னதில்லை! ஆனால், கதிர் அதன்பின்னும் அப்படியே இருந்தான்.

ஒரே ஒரு விதி விலக்கு! நாளடைவில், கார்த்திக்கின் நட்பு இறுகிக் கொண்டே போனதில், அவனுடன் மட்டும் ஜெயிக்க வேண்டும் என எண்ண மாட்டான். ஆனால், நம் கர்ணபிரபு கொடுத்தே பழகிவிட்டதால், மாறும் நினைப்பே இன்றி இருந்தான். இது இப்போது வரை தொடர்கிறது.

இவர்கள் மூவரும் பி.இ.ஆட்டோமொபையில் முடித்துவிட்டு, எம்.பி.ஏ. இரண்டாம் ஆண்டு தற்போது பயில்கின்றனர். கார்த்திக்கும் கதிரும் பள்ளியில் இருந்து ஒட்டிப் பிறந்த ரெட்டை பிறவிகள் என்றால், கல்லூரியில் இருந்து விநாயகமும் இவர்களுடன் சேர்ந்ததில் இருந்து ‘முத்தேவர்கள்’ ஆயினர்.

கதிரும் ஒருவழியாக அவர்கள் கொரிக்க வேண்டியவற்றை வாங்கி வந்திருக்க, பேசிக் கொண்டே சாப்பிட்டனர். “மச்சான் நேத்து ஒரு சின்ன பையன் கடைக்கு போகும் போது, லிப்ட்டு கேட்டான்டா. சரின்னு ஏத்திட்டு பஸ் ஸ்டாப்புல இறக்கிவிட்டா, “தாங்க்ஸ் அங்கிள்”ன்னு அசிங்கப்படுத்திட்டான். சேச்சே ஒரே ஷேம் ஷேம்மா போச்சு.”

விநாயகம் கூறியதை கேட்டு கதிர் சிரிக்க, கார்த்திக்கோ எரிச்சல்பட்டான். மாயசித்ராவின் நினைப்பே அவன் எரிச்சலுக்கு காரணம். அதே மனநிலையுடன், முன்தினம் நடந்ததை தன் நண்பர்களிடம் கூறி பொருமினான்.

முடிக்கும் தருவாயில், “எப்படிடா அவ என்னை பார்த்து பைக் ஓட்ட தெரியாதுன்னு சொல்லலாம்?? சின்ன வயசுலந்து பைக்னா அவ்வளவு பிடிக்கும் எனக்கு! எவ்வளோ ஆசைப்பட்டு ஓட்டுறேன் ஒவ்வொரு தடவையும். என்னை பார்த்து… சே, சரியான லூசுடா அவ… நேத்து அவளால பயங்கற மூட் அவுட்!!” என்று கோபமுடனே கூறினான்.

கார்த்திக் கூறியது போல் அவனுக்கு சிறு வயதிலிருந்து, வாகனங்கள் முக்கியமாக பைக் மற்றும் கார் மேலே மிகுந்த ஈடுப்பாடு! அதுவே அவனை ஆட்டோமொபையில் எடுத்து படிக்க வைத்தது.

கார்த்திக் கூறியதை கேட்டு விநாயகத்துக்கு வேறு ஒரு சந்தேகம் எழுந்தது. “அவ திட்டுனதெல்லாம் இருக்கட்டும். பொண்ணு எப்படி இருந்தா?? நீ கண்டிப்பா நோட் பண்ணிருப்பியே??”

“பச் இல்லடா பார்க்கல…”

“ஏன்டா நல்லா இல்லையா??”

“அதான் பார்க்கலன்னு சொல்றேன்ல?? சும்மா கேட்டுட்டே இருக்க… அவ சரியான திமிர்பிடிச்சவ! இதுல பார்க்கலயா நோக்கலயான்னு…”

“என்னடா இது விசித்திரமா இருக்கு. ஒண்ணு நீ அந்த பொண்ணை சைட் அடிச்சிருக்கனும். இல்ல, அந்த பொண்ணு உன்னை சைட் அடிச்சிருக்கனும். இல்ல, ரெண்டுமே சேர்ந்து நடந்திருக்கனும்!!! எதுவுமே நடக்கலைன்னு சொல்ற… நம்ப முடியலையே!!”

விநாயகம் கிண்டலடிப்பதை அதன் மேலும் தாங்க இயலாமல், அவனை முதுகிலேயே வெலுக்க ஆரம்பித்தான் கார்த்திக். அவர்கள் சண்டை போடுவதை பார்த்து, சிந்தும் பழச்சாரு பற்றிய நினைவு கூட இன்றி சிரித்தான் கதிர்.

அவன் எப்போதும் சிறிது அமைதி தான்…. தேவைப்பட்டால் ஒழிய பேச மாட்டான்! மற்ற இருவர் தான் அமளிதுமளி பண்ணுவர். ஆனால், விநாயகம் கூறியதில் ஒன்று மட்டும் உண்மை. கார்த்திக்கின் பால் ஒரு வசீகரம் எப்போதுமே உண்டு! அதைக் கண்டு மயங்கும் பெண்களும் உண்டு! அவனின் முகமே ஒரு ஆளுமைத் தனத்துடனும், ஆண்மையுடன் காட்சி அளிப்பதும் காரணமாக இருக்கலாம்….

எது எப்படியோ அடுத்த இரண்டு நாட்களில், செமஸ்டர் லீவ் முடிந்து கல்லூரி தொடங்குவதால் மூவரும் உற்சாகமாக அதற்காக காத்திருந்தனர்.

****************************************************************************************************

கல்லூரி வாசல் எங்கும் வண்ண பட்டாம்பூச்சிகளாய் மாணவர்கள் சுற்றித்திரிந்தனர். முதல் நாளே லேட்டாக போக வேண்டாம் என மாயசித்ரா சீக்கிரமாகவே வந்திருந்தாள், கல்லூரிக்கு.

கார்த்திக் மற்றும் அவன் நண்பர்கள் படிக்கும் அதே கல்லூரி தான்!! போன முதல் நாளே செமையான வரவேற்பு அவளுக்கு. புதுவரவு என்பதால், அவள் வகுப்பில் இருந்த மாணவிகளும் மாணவர்களுடன் சேர்ந்து வறுத்தெடுத்தனர் அவளை.

எல்லாவற்றையும் தாங்கிக் கொண்டு நிமிர்ந்தால், நட்புக்கரம் யாசிக்க வேண்டிய நிலைமை ஆகிற்று. அனைவரும் அவரவர் குழுவுடன் பிரிந்து செல்ல, இவள் தனித்து விடப்பட்ட போது தான், கனிமொழியை பார்த்தாள்.

அவளும் இவள் போலவே புதிதாக சேர்ந்தவள் தான். அவளை மாலையில் வந்து பார்த்துக் கொள்வதாக இருந்தார்கள் சக மாணவர்கள். தங்களின் நிலையை எண்ணி பேச ஆரம்பித்தவர்கள், சீக்கிரமாகவே நண்பிகள் ஆகினர்.

அடுத்த ஒரு வாரம் அப்படியே செல்ல, கார்த்திக்கும் இவள் தன்னுடைய கல்லூரியில் தான் படிக்கிறாள் என தெரியவில்லை. அவர்களுடைய கேம்பஸ் பொறியியல் கல்லூரி மற்றும் கலைக் கல்லூரி இரண்டையும் உள்ளடக்கியது. ஆதலால், இருக்கும் கூட்டத்தில் ஒரு வாரம் இருவரும் சந்தித்துக் கொள்ளவில்லை.

ஆனால், ஒரு வாரம் கழித்து பார்த்த போது, இருவரும் திகைத்து விழித்தனர். அன்றைக்கு வகுப்புகள் முடிந்து தன்னுடைய வண்டியை எடுக்க பார்க்கிங் ஏரியாவிற்கு சென்ற மாயா, தனியாகவே இருந்தாள். கூட யாரும் இல்லை…. அப்போது தான், திடீரென்று தன் முன்னால் சடன் பிரேக் போட்ட ட்யூக் பைக்கையும், கெ.டி.எம். பைக்கையும் பார்த்தாள்.

ட்யூக் பைக் நின்றாதாலேயே கெ.டி.எம். பைக் நின்றது, என்பது குறிப்பிடத்தக்கது. ட்யூக்கின் மேல் கார்த்திக் உட்கார்ந்திருந்தான் என்றால், கெ.டி.எம். பைக்கின் மேல் கதிர் கெத்து காட்டினான்.

கார்த்திக்கும் மாயாசித்ராவும் ஒருவரை ஒருவர் முறைத்துக் கொண்டு நிற்க, மாயாவின் பின்னால் பலமான ஹாரன் ஒலி கேட்டது! யார் என திரும்பினாள் எரிச்சலுடன்… விநாயகம் தன் பல்ஸரின் ஆக்ஸிலரேட்டரை முறுக்கிவிட்டபடி இவளிடம், “என்னமா வழியை மறச்சிட்டு நடுவுல நின்னுட்டு இருக்க?? ஓரமா போய் நில்லு!” என்றான்.

விநாயகம் கோபமாக சொல்லாமல், சாதாரணமாக சொல்லவும் மாயசித்ராவும் தன்னுடைய தப்பை உணர்ந்து ஒதுங்கி நடந்து தன்னுடைய ஸ்கூட்டியை எடுக்கப் போனாள். போனாள் தான்… கார்த்திக்கின் வாய் அவளை மீண்டும் கண்ட பின்னும், சும்மா இருக்குமா என்ன?

“டே கதிர்… எனக்கு வண்டி ஓட்ட தெரியாதுன்னு ஒரு பொண்ணு சொல்லுச்சுல? அது இதோ நிக்கறாங்கள இந்த மேடம் தான். இவங்களுக்கு மட்டும் தான் இங்க வண்டி ஓட்ட தெரியும்… நமக்கு எல்லாம் ஓட்டவே தகுதியில்ல.”

கார்த்திக் கூறுவதை கேட்டு மாயாவிடம் எந்த ஒரு ரியாக்ஷனும் காணோம். என்னடா ஆச்சு என கார்த்திக்கே யோசிக்கையில், அவள் தன்னுடைய ஸ்கூட்டியையும் பார்க்கிங்கில் இருந்து எடுத்திருந்தாள்.

அதில் அமர்ந்து வண்டியின் வலப்பக்க ஸ்டார்ட் பட்டனை அழுத்தி, பொறுமையாக கார்த்திக்கின் முகம் பார்த்து சொன்னாள். “நான் எனக்கு மட்டும் தான் நல்லா ஓட்ட தெரியும்னு எப்போ சொன்னேன்? அதே மாதிரி, உனக்கு தான் வண்டி ஒழுங்கா ஓட்ட தெரியாதுன்னு சொன்னேன். உன்னோட பிரெண்ட்ஸ் எல்லாம் சொல்லலையே?? காது சரியா கேக்கலைனா ஈ.என்.டீ. டாக்டரை போய் பாருப்பா….”

சொன்ன ஒவ்வொரு வார்த்தைக்கும் நக்கலும் நையாண்டியும் அள்ளித் தெளித்தபடி பதிலளித்துவிட்டு, வண்டியை கிளப்பி சென்று விட்டாள் மாயா. அடக்க மாட்டாமல் சிரிக்கும் தன் இரு நண்பர்களையும் முறைத்துவிட்டு, கார்த்திக்கும் கிளம்பினான். பின்னேயே கதிரும் விநாயகமும் துரத்தி சென்று பிடித்தனர். “எதுக்குடா இப்போ இவ்வளோ ஸ்பீடா ஓட்டற??”

விநாயகத்தின் கேள்விக்கு பதில் அளிக்காமல், அமைதி காத்தான் கார்த்திக். “ஹே கார்த்திக் இங்க பாருடா… நான் சொல்றதை கேளு.” கதிர், கார்த்திக்கின் மோவாயை பிடித்து கண்களுக்குள் ஊடுறுவி சொல்லவும், கார்த்திக்கும் அவனின் முகத்தை பார்த்தான்.

“என்ன தான் அந்த பொண்ணு சொல்லி இருந்தாலும், நீ அவளோட ஸ்கூட்டியை ஓட்ட ஸ்கூட்டின்னு சொன்னது தப்பு தான்டா! யாரா இருந்தாலும் கோவம் வரத் தான செய்யும்? நீ தான் வாங்கி குடுத்த இந்த கே.டி.எம். பைக்க… இல்லனா நானும் எதோ சாதாரண பைக் தான் வைச்சுருப்பேன்.

இப்படி என்னை யாராவது சொன்னா சும்மா இருப்பியா? இப்போ நீ சொன்னதுக்கு கூட, அவ திமிரா பதில் சொல்ல இது தான் காரணம். நீயே யோசி… புரியும்!” கதிரின் தெளிவான பேச்சில் நிஜமாகவே சிந்திக்கலளானான் கார்த்திக். விநாயகமும் கதிரும் அவனிடம் கூறிக் கொண்டு கிளம்ப, கொஞ்சம் மூளையை உபயோகித்ததால் அவன் புறம் இருந்த தவறும் புரிந்தது.

என்றைக்காவது அவளிடம் சுமுகமாக பேசினால், மன்னிப்பு கேட்க வேண்டும் என மனதில் குறித்துக் கொண்டான். ஆனால், கோபம் முழுதாக போகவில்லை! அதன்பின், அவன் அந்த விஷயத்தை மறந்துவிட்டான்.

ஆனால், மாயசித்ரா மறக்காமல் அவ்விஷயத்தை ரித்தியாவிடம் வழக்கம் போல் ஒப்பித்தாள். அபிராமியிடம் அதை பற்றி ‘அ,ஆ,இ,ஈ’ கூட சொல்லவில்லை…. பின்னே யார் அவரிடம் கூறிவிட்டு, ஆறு மாதம் திட்டு வாங்குவது??

ஒரு பத்து நாட்கள் இப்படியே செல்ல, அடுத்து மாயாவை சந்தித்த வேளையில் மூவரும் அவளின் செயலை பார்த்து ஒரு நிமிடம் ஆடிப் போயினர்!!

 
Top