Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோகுலத்தில் ராமன் - 01

Advertisement

பிரியா மோகன்

Tamil Novel Writer
The Writers Crew
வணக்கம் டியர்ஸ்!! 'கோகுலத்தில் ராமன்' ஒரு கிராமம் சார்ந்த காதல் தொடர். முதல் அத்தியாயம் பதிந்துருக்கேன்! படிச்சுட்டு கருத்துக்களை பகிர்ந்துக்கோங்க! அது மேற்கொண்டு எழுதவதற்கு என்னை ஊக்கப்படுத்தும்! சூப்பர், நைஸ் ன்னு மட்டும் சொல்லாம ஏதாவது நிறை குறைகளை பகிர்ந்துக்கிட்டா i would be so happy!

Let's get into the story!!!


அத்தியாயம் 01


“எடேய், கொண்டம் தொடங்கிடுச்சு! வெடியை போடுங்கடே!” வெள்ளை தலை பெருசு ஒன்று வயத்திற்கு மீறிய உற்சாகத்தில் குரல் எழுப்ப, அதன்பின்னே, சிறுசுகளின் அட்டகாசங்கள் அமர்களமாய் அரங்கேறியது. வருடத்தில் மூன்று நாட்கள் கிடைக்கும் பொன்னான வாய்ப்பு. ஊரே ஒன்று கூடி கொண்டாடும் மகாவிழா. ஒவ்வொரு வருட துவக்கத்திலும், இந்த நாட்களுக்காக காத்திருக்கும் இளசுகளும் பெருசுகளும் ஏராளம்.



சின்ன கோடம்பாக்கம் என அழைக்கப்படும் ‘கோபிசெட்டிபாளையம்’ நகராட்சியில் கோலாகலமாய் நடக்கும் ‘பாரியூர் கொண்டத்து காளியம்மன்’ தேர் திருவிழாவுக்கு தான் இத்தனை ஆரவாரம் அங்கே நிறைந்திருந்தது. முதல்நாள் கோவில் தேர்விழா ஊரையே ஒருங்கிணைத்து நடந்தேறியிருக்க, இரண்டாம் நாளான இன்று, ‘கொண்டம் மிதி வைபவம்’.



அகண்டு விரிந்த பெரும் இடத்தை ஆக்கிரமித்திருந்தார் அக்கினி பகவான். தீமூட்டப்பட்டு கொண்டம் நடக்க எல்லாம் தயாரானதும், முதல் ஆளாய் தலைமை பூசாரி கையில் பூசட்டியுடன் கொண்டத்தில் இறங்கியிருக்க, அவர் பின்னே, வரிசையாய் வந்தனர் மற்றவர். அலைமோதும் கூட்டத்தை சமாளிக்க சிறப்பு காவல்ப்படையினர் அங்கும் இங்கும் அலைந்துக்கொண்டிருந்தனர்.



‘ஆடிவெள்ளி கிழமையிலே

ஆத்தா உன் கோவிலுல,

பாட வந்த எந்தனுக்கு, பக்கத்துணை நீ இருப்பாய்’
எல்.ஆர். ஈஸ்வரியின் கணீர் குரலில் ஒலித்துக்கொண்டிருந்த பாடலுக்கு, துள்ளிகுதித்து ஆடிக்கொண்டிருந்தனர் பொடுசுகள். கலர் கலர் தாவணிகளில் உலா வந்த கன்னிகளை கண்ணெடுக்காமல் பார்க்கும் காளைகள், ராட்டினம், ஜவ்வுமிட்டாய், மரக்குதிரை, பஞ்சுமிட்டாய், அச்சு மருதாணி, விளையாட்டு சமான், மாங்காய் பத்தை என வியாபாரிகளிடம் குவிந்து நிற்கும் ஜனங்கள் என திருவிழா சூடு பறந்தது.



அவர்களை எல்லாம் வேடிக்கை பார்த்தபடி, வெள்ளை வேஷ்டி சட்டையில் சற்றே ஏறியிருந்த நெற்றியில் வேஷ்டியின் நிறத்திருக்கேற்ப முடிகள் எட்டி பார்க்க, கூட்டத்தில் சிக்காமல் நடந்த அவர், ஓரமாய் ஒரு திட்டில் வந்து அமர்ந்தார்.



‘ஷப்பா! என்னா வெயிலு!’ தோள் மீதிருந்த துண்டினால் முகத்தை ஒற்றியெடுத்துக்கொண்டார். சுற்றிலும் ஜகஜோதியாய் நிறைந்திருந்த மக்கள் வெள்ளத்தை காணும்போது, ‘ஒட்டுமொத்த கோபியும் இங்கதான் இருக்கும் போலியே? வீட்ல சோறு பொங்கி வைக்க கூட ஒருத்தனும் இருக்க மாட்டான்’ தன்போக்கில் மனதில் நினைத்ததை அவர் சத்தமாய் சொல்லிவிட, அதே திட்டில் அமர்ந்திருந்த அவர் வயதையொத்த ஒருவர் செவிகளை சேர்ந்தது அவர் வார்த்தைகள்.



“ஐயா ஊருக்கு புதுசுங்களா?” என்ற புதிய குரலில் திரும்பியவர், சமாளிப்பாய் சிரித்து, “ஆமாங்க, நான் ஈரோடு டவுனு! இங்க திருவிழா நல்லா இருக்கும்ன்னு சொன்னாங்களேன்னு ஒரு எட்டு பார்த்துட்டு போவ வந்தேன்” என பேச்சை துவங்கினார்.



“நல்லா இருக்குமா? அமோகமா இருக்குமுங்க! கொண்டத்து காளியம்மனை பார்க்குறதுக்கே பல ஊருல இருந்தும் வருவாங்க! ஐயா, இத்தனை வயசுக்கு இப்போதான் வரீரு” சிறு குற்றசாட்டோடு அவர் சொன்னதும், “ஆமா, கேள்விபட்டுருந்தாலும் வர தோது படல” என்றார் அவர்.



“இப்போ வந்ததுக்கு வேற காரணம் இருக்கோ?” எதார்த்தமாய் அவர் கேட்டாலும், “எப்டிங்க உங்களுக்கு தெரியும்?” அதிசயித்து போனார் அவர்.



சற்று சத்தமாய் சிரித்தவர், “அட, ஒரு பேச்சுக்கு கேட்டா, உண்மைக்குமே வேற காரணமா தான் வந்தீங்களா?” என்றார் அவர்.



அசட்டு சிரிப்போடு, “நான் ஒரு கல்யாண தரகர். இந்த மாறி திருவிழாக்கு போனா அங்க இருக்க புள்ளைங்க, பசங்க ஜாதகம் கிடைக்கும்ன்னு வந்தேன்” என்று மெய்க்காரனத்தை சொல்லிட, “அப்படியா சேதி” என கேட்டுக்கொண்டார் அவர்.



பகலென்றும் பாராது வானவேடிக்கைகளை இளசுகள் நடத்திக்கொண்டிருக்க கரகாட்டம் கரகோஷத்தோடு ஆரம்பமானது. புலியாட்டமும், மயிலாட்டமும் இடத்தை நிறைக்க, பொய்க்கால் குதிரையாட்டம் அனைவரையும் சுண்டி இழுத்தது.



நாட்டுபுற கலைகளில் சில நேரம் கவனம் வைத்திருந்த புதியவர், தான் வந்த வேலையை பார்க்க துவங்கினார். திருமண வயதில் இருக்கும் பெண் பிள்ளைகளை முக்கியமாக நோட்டமிட்டார். அவர்களுக்கு தானே இப்போது டிமேண்ட் அதிகம்!



வேலைக்கு நடுவே பசி வயிற்ரை கிள்ளி எடுக்க, அருகே பேச்சுக்கொடுத்தவரிடம், “ஏங்க, பக்கத்துல எதுனா நல்ல ஹோட்டல் இருக்குமா?” என்றார் அவர். அவரை விசித்திரமாய் பார்த்தவர், “திருவிழாக்கு வந்துபுட்டு ஹோட்டல்ல சாப்பிடுறேன்னு சொல்றவர நான் இன்னைக்கு தான் பாக்குறே! ஊரே இன்னைக்கு எங்க ஐயாவோட அன்னதானதுல தான் வயிறு நிறைக்க போவுது, எந்த ஓட்டல்லையும் அடுப்பு எரியாது” என்றுவிட்டார் பெருமையாய்.



“ஓ, அன்னதானம் போடுறாங்களா? எங்க?” பசியில் அவர் மற்றதை புறம் தள்ளி, ‘சோறு எங்கே?’ என்றிட, “அந்தா தெரியுதே! அந்த சத்திரம் முழுக்க நமக்கு தான் இன்னைக்கு” என்றதும் துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு எழுந்தார் தரகர்.



“அட இருங்க! இன்னும் எங்க ஐயா வரலையே! அவர் வந்து பூசை போட்டா தான் அன்னதானம் தொடங்கும்” என்றதும் வயிற்ரை கிள்ளிய பசி இப்போது கடிக்கவே ஆரம்பித்தது.



“ஐயா எதுக்குங்க வரனும்?” எரிச்சலாய் தரகர் கேட்க, “அவர் போடுற அன்னதானத்தை அவர் கையால ஆரம்பிச்சா தானே நல்லா இருக்கும்! வந்துடுவாரு இப்போ, சத்த இருங்க!” என்று அவர் சமாதானம் சொல்லும்போதே, வெள்ளி நிற கார் ஒன்று ரதமென அந்த இடத்தை அடைந்தது. விழாவின் அத்தனை களேபரத்திலும் அந்த காரை இனம் கண்டுக்கொண்டவர்கள், “ஐயா வந்தாச்சுஉஉஉஉ” என உரக்க குரல் கொடுக்க, உற்சவ அம்மன் சிலைக்கு அருகே இருந்த பூசாரி அவர்களை வரவேற்க ஆயத்தமானார்.



காரின் முன்கதவு திறக்க, பட்டு வேஷ்டி பளபளக்க முறுக்கிய மீசைக்கு கீழே வெண்மாதுளை பற்கள் எட்டிப்பார்க்க கம்பீரமாய் இறங்கினார் ஒண்டிவீரர்! எல்லோரும் பாசமாய் அழைக்கும் ‘ஐயா’.



இறங்கியதும், வானுயர நிற்கும் கோவில் கோபுரத்தை தலைக்குமேல் கையெடுத்து கும்பிட்டவர், பின்பக்க காரின் கதவை திறந்தார். அம்மன் விக்ரகமென மங்களகரமாய் இறங்கி நின்றார் ஒன்டிவீரரின் மறுபாதி சிவகாமி. கணவன் அருகே சென்று நின்றவர், அவர் முகம் கண்டு புன்னகிக்க, இளம் ஜோடிகளுக்கு கூட அந்த தலைநரைத்த தம்பதியை கண்டு பொறாமை எழும். அத்தனை அன்னியோன்யம் அந்த ஒற்றை சிரிப்பில். ஐம்பது ஆண்டு திருமண வாழ்வின் நிறைவுடன், தன் கணவனின் கம்பீரத்தை ரசித்தபடி அவருக்கு ஓரடி முன்னே நடந்தார் சிவகாமி.



எப்போதும் எதிலும் மனைவியே முன்னிலை என கருதும் பாசமிகு கணவனாய் தன் மனைவியின் பின்னே வேடிக்கைகளை ரசித்தபடி, எதிர்பட்ட பல வணக்கங்களோடு சென்றார் ஒன்டிவீரர்.



அதே காரில் இருந்து இறங்கிய, ஒன்டிவீரரை இளம்பருவத்தில் கண்டதை போன்ற உருவில் அவருக்கு குறையாத கம்பீரத்துடன் நடந்தவரை, “இவர் அந்த ஐயாவோட பையனா?” என சரியாய் கேட்டார் தரகர். ஒன்டிவீரனின் ஒரே மகன், சத்தியராஜன். தந்தை அளவுக்கு இல்லாமல் சிரிப்பில் கஞ்சத்தனம் பார்ப்பவர். மனைவியின் மறைவுக்கு பிறகோ, முகம் இன்னும் இறுகிக்கொண்டது.



பெற்றோரின் பின்னே, ஒற்றை ஆளாய், இழுத்து பிடித்த மலர்ச்சியோடு ஒற்றை ஆளாய் நடந்து சென்றவரை கண்டு, “அவருக்கு சம்சாரம்?” என இழுத்த தரகரிடம், “அந்த புண்ணியவதி பல வருஷம் முன்னயே போய் சேர்ந்துடுச்சு! அந்தம்மா மட்டும் இருந்துருந்தா இவரு இப்படியா இருந்துருப்பாரு? ஹும்ம்” உண்மையான வருத்ததோடு சொன்னவரை கண்டு, “இவருக்கு புள்ளைங்க?” என அடுத்த கேள்வியை தொடுத்தார் அவர். அவர் வேலையே அதானே!



“அதோ வராரு பாருங்க!” என அவர் காட்டிய திக்கில் பார்த்தவர் முகம் விகசித்தது. தந்தை, தாத்தனுக்கு நிகராய் அவர்களை போன்றே பாரம்பரிய வேஷ்டியில் வந்தவன், அதன் ஒரு ஓரத்தை நுனிவிரலால் தூக்கிபிடித்து, வேக எட்டுகள் போட, கன்னிகளின் கவனம் முழுக்க அந்த காளையின் மீது திரும்பியது.



கறந்த பாலில் சிறு மஞ்சள் கலந்தால், தோன்றுமே அந்த நிறம்தான் அவனது!! வெள்ளை தோளுக்கு சம்பந்தமில்லாத முறுக்கு மீசை. இடக்கையை அலங்கரிக்கும் குடும்பத்தின் வாரிசு காப்பு! ‘எப்போ சிரிப்பேன்னு எனக்கே தெரியாது!’ என அறிவிக்கை விடுத்து அமைதியாய் இருக்கும் நயனங்களும் அதரங்களும்!



அவன் நடந்து வரும் தோரணைக்கே ஆடவர்க்கூட அரைநொடியேனும் அசந்து நிற்பர் என்றால் அல்லிக்கொடிகளை கேட்கவா வேண்டும்!?



“ஹே மச்சான் வந்துட்டாருடி” ஒருத்தி சொன்னதும் போட்டுக்கொண்டிருந்த மருதாணியை பாதியிலேயே விட்டுவிட்டு பரபரப்பாய் எழுந்து வந்தனர் அவள் கூட்டாளிகள்.



“என்னா அழகா இருக்காரு பாரு!! ஹம்ம்ம்!!” ஏக்க பெருமூச்சோடு ஒருத்தி சொல்ல, “பாத்துடி! மூச்சுவிட்டே எரிச்சுடுவ போல” என காந்தினாள் இன்னொருத்தி.



“நம்ம பார்க்க தான் முடியும், ஜோடி போட்டு கூட போகவா முடியும்?” என கடுப்பாய் வேறொருத்தி சொல்லிட, “அதுக்கெல்லாம் ஒரு மச்சம் இருக்கணும்டி! நம்ம இருக்க கலருக்கு மச்சம் எங்கன இருக்குன்னு லைட் அடிச்சு பார்த்தாலும் தெரியாது” என்றாள் அவர் அருகில் நின்றவர்.



“சரியா சொன்னடி! அந்த மனுஷன் நிறம் என்ன, உசரம் என்ன? கட்டுமஸ்தான உடம்பென்ன!? ஹ்ம்ம்” இப்போது ஒரே சுருதியில் ஏக்கமாய் ஒலித்தது அந்த ‘ஹம்ம்ம்ம்’!



“நீங்க விடுற மூச்சுக்கு புயலே வரப்போது!!ஹாஹா... கிடைக்காதத இப்படி கண்ணுல பார்த்தாது மனச தேத்திகோங்க” கண்ணாடி வளையல்களின் சலசலப்புக்கு ஈடாய் பல்வரிசை தெரிய சிரித்தபடி மருதாணி இட்ட கரங்களோடு, கருமேகங்கள் இடையே தோன்றும் முழுமதியாய் அக்காரிகைகள் நடுவே வந்தாள் சுசீலா. பால்வண்ண மேனி இல்லையென்றாலும், மாசுமருவற்ற அம்சமான மாநிறம், திருத்தமான முகவடிவு என அங்கிருக்கும் பெண்கள் ‘வெள்ளச்சி’ என பொறாமையாய் அடைமொழி வைக்கும் அளவுக்கு அவ்வூரின் அழகியாய் இருந்தாள். அழகை விட, அவள் கண்களின் துறுதுறுப்பும், பளிசென்ற புன்னகையும் அவளை பார்த்ததும் பிடித்துவிட செய்துவிடும்.



“கொஞ்சம் வெளுத்த தோளா இருக்கோம்ன்னு ஆடாதடி! நீ அந்த வீட்டு மருமகளா போக முன்னாடியே உன் பேச்சும், வழக்கமும் ஓவரா தான் போவுது!” கடந்த ஒருமாதமாய் சுசீலாவின் பந்தாவில் மூச்சடைத்த ஒருத்தி வெளிப்படையாய் பொருமினாள்.



அதை ஆமோதித்த ஒருத்தியோ, “போன ‘கொண்டத்துக்கு’ நம்ம விளையாட்டா பேசிகிட்டோம், நம்மள்ள யாரு ‘ஐயா வீட்டு மருமகளாகுறாங்கன்னு’ பார்க்கலாம்ன்னு! அதையே மனசுல வச்சுக்கிட்டு இந்த ‘கொண்டதுக்கு’ நடத்தி காட்டிடாளே!” ஆங்காரமாய் அவள் சொல்வது கூட சுசீலாவுக்கு பெருமையை தான் கொடுத்தது. யாராலும் முடியாததை தான் சாதித்துவிட்டேன் என்ற பெருமிதம்!



அவள் பெருமையை உடைக்கவே, “என்ன பெருசா சாதனை பண்ணிட்டா? நம்ம சொன்னது இங்க ஹிந்தி ஹீரோவாட்டம் நிக்குற சின்னவர! இவ வளைச்சு போட்டது அந்த ஐயனார் சிலையை!” என்று நொடிக்க, அப்போதும் சுசீலாவின் முகம் சுருங்கவில்லை.



எதிரே வந்துக்கொண்டிருப்பவனை விழியெடுக்காது பார்த்த தரகர், “ஏன்ய்யா? இவருக்கு இன்னும் கல்யாணம் ஆகல தானே?” என்றார் எதிர்ப்பார்ப்பாய். அவரை ஏமாற்றாது சிறு சிரிப்போடு, “இன்னும் இல்ல, விழா முடிஞ்சதும் ஐயா கிட்ட கேளு, ஜாதகம் குடுப்பாவ” கூடுதல் தகவலோடு அவர் சொல்ல, “ரொம்ப சாந்தமான பையனா தெரியுது!!” என தரகர் சொல்லி வாய் மூடவில்லை. திருவிழா கூட்டமே திரும்பிபார்க்கும் அளவு ஒருவன் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தான் அவன்.



“கொண்டம் நடக்குது, அது பக்கத்துலையே வெடிய போடுற? அறிவில்ல!? தொலைச்சுடுவேன் பார்த்துக்க!” விரல் நீட்டி எச்சரித்தவனை கண்டு, அடிவாங்கியவன் அவன் உயரத்திற்கும் பாதியாய் குறுகிபோனான்.



அடிவாங்கியவனை விட அதை பார்த்திருந்தவர் தான் பதறிபோயினர். ஆனால் ஒருவரும் அவனிடம் ‘ஏன் அடித்தாய்?’ என கேட்கவில்லை.



அடித்த கையை முறுக்கிக்கொண்டு நிற்கும் அவனை கண்டு திகைத்து நின்ற தரகரின் தோளில் தட்டி, “இதான் எங்க காண்டீபன் தம்பி! பாக்க தான் சாது!” என சிரித்தார் அவர்.



அடுத்த நிமிடங்களில் திகைத்த முகங்கள் திருவிழாவில் தொலைந்தன. நடையை துரிதப்படுத்தி முன்னே சென்ற காண்டீபனை ஒரு வித பயம் கலந்த மரியாதையோடு பார்த்தனர் இளம்வயதினர். அவன் கண்கள் ஒரு கணம் கன்னிகள் இருந்த இடத்தை கண்டதோ? கண்டுபிடிப்பதற்குள் திரும்பிவிட்டான்!



காலாகாலமாய் பாரியூர் நோம்பியின் முதல் மரியாதையை ஒண்டிவீரின் குடும்பத்துக்கே அளிப்பது வழக்கம் என்பதால், உற்சவ அம்மனுக்கு சிறப்பு பூஜை வழிப்பாடுகளோடு, ஆண்மக்களுக்கு சிரத்தில் முடி சூட்டப்பட்டது.



முடிசூட்டி முடித்ததும் காண்டீபன், “அன்னதானத்தை ஆரம்பிங்க தாத்தா, எல்லாரும் பசியோட இருப்பாங்க” என்றான்.



ஒண்டிவீரர் மிக மெல்லிய தயக்கத்தோடு சிவகாமியை பார்க்க, அவரோ, “பொறுடா, அவன்...” என்று சொல்ல தொடங்கும்போதே, “இப்போ ஆரம்பிக்குறீன்களா இல்லையா?” என்றான் கணீரென்று! அவன் கேட்ட விதத்தில் பேச வந்த பூசாரியும் வாயடைத்துவிட, அன்னதான கூடத்தை நோக்கி நடந்தனர் அனைவரும்.



சிவகாமியின் கண்கள் நொடிக்கிருமுறை கடைக்கோடியை தவிப்பாய் தழுவியது. ‘வந்துவிடமாட்டானா?’ என்று!!



வரிசைக்கு நூறுக்கு குறையாத ஆட்கள் ஐந்து வரிசையாய் அமர, தலைவாழை இலை வைக்கப்பட்டது. தரகரோ, “இப்போ சாப்பிடலாம் தானே?” என கேட்டுவிட்டு ஓரிடம் பிடித்து அமர்ந்தார்.



முதலில் இனிப்பை கையில் எடுத்த சிவகாமி, மீண்டும் கண்களை கூட்டத்தில் உலாவவிட, பார்த்துக்கொண்டிருந்த காண்டீபனுக்கு உஷ்ணம் ஏறியது.



“அம்மாயி!! பந்தி துடங்கிடுச்சு!” என்றான் அதட்டலாய். அவனை ஊரார் முன் முறைக்க முடியாமல், “ஒன்பது பத்தரை ராகுகாலம் முடிய இன்னும் பத்து நிமிஷம் இருக்கு, நல்ல நேரத்துல தான் பந்தி துடங்கனும்” என்று சொல்லிவிட்டு அங்கேயே அமர்ந்துவிட்டார்.



சோறு வைப்பார்கள் என காத்திருந்த தரகர் இனிப்பை கூட வைக்காமல் சிவகாமி அமர்ந்துவிட்டதை கண்டு பசி பொறுக்காமல் பக்கத்தில் இருந்த ஒருவரிடம், “இலையை இப்போ போட்டு, சோறை எப்போ போடுவாங்க?” என்றார் பசியால் எழுந்த வயிற்றெரிச்சலில்.



“ம்ம்ம்... எங்க பேரின்பன் தம்பி வந்ததும் போடுவாங்க” என்று அவர் சொல்ல, “அது யாரு?” என கதை கேட்டார் தரகர்.



“எங்க ஐயா குடும்பத்தோட மூத்த வாரிசு!” என சொன்னது மறுபக்கம் இருந்த பாதி பல் போன கிழவி.



“எல்லாரும் ஒன்னாவே வர வேண்டியது தானே, மனுஷன் பசி தெரியாம!!” ஏகத்துக்கும் குறைபட்டார் தரகர்.



இவருக்கு மேல் காண்டீபன் காந்திக்கொண்டிருந்தான். தன் தந்தையை அவன் பார்க்க, அவரும் பாறை போலதான் இறுகி போய் நின்றிருந்தார். தாத்தா அங்கே நில்லாமல், கோவில் காரியதரிசிகளுடன் முக்கிய விவரமாய் பேசிக்கொண்டிருக்க, சிவகாமி பந்தியில் அமர்ந்திருந்தோர் அருகே சென்று, “சத்த பொறுங்க, பத்தே நிமுசம்” என்று சொல்லிக்கொண்டிருந்தார்.



கொஞ்சமும் சுணக்கமின்றி அவர்களும், “இன்பா தம்பி வரட்டும், அவசரமே இல்ல” என சொல்ல, இன்னும் பற்றி எரிந்தது காண்டீபனுக்கு.



ஆட்டம் பாட்டம் என குஷியாய் இருந்த இளைஞர்களின் திடீர் கரகோஷமும் ஆரவாரமும் முன்பை விட சற்று மேலோங்கி இருக்க, திரும்பி பார்க்கும் அவசியமே இல்லாமல் காண்டீபனுக்கு புரிந்தது, அவன் வந்துவிட்டான் என்று!!

 
துண்டை காற்றில் உதறிக்கொண்டு ஓடிவந்த பச்சைக்கிளி, “அண்ணே வண்டி வருது, வழிய வுடே! அண்ணே வண்டி வருது, வழிய வுடே” என்று கூவிக்கொண்டே முன்னே வந்துக்கொண்டிருந்தான். அவனது வலக்கை.



கொழுத்த இரு மாடுகள் பூட்டிய வண்டி அங்கே சீறிப்பாய்ந்து வர, “அண்ணே வந்தாச்சேஏஏஏஏ” என உரக்க அறிவித்தான் வண்டியோட்டி வெட்டுக்கிளி..! அவனது இடக்கை. இரு ‘கை’களுக்கும் பெயர் உபயம், அண்ணன் பேரின்பன் எம்.ஏ. பில்லாசபி.



இடுப்பில் இருக்கைகளையும் வைத்து மக்களுக்கு முதுகு காட்டி, வானத்தை பார்த்து போஸ் கொடுத்து நின்றிருந்தான் அவன். ஆறடிக்கும் ஓரங்குலம் அதிகமே இருப்பான். அகண்ட புஜங்கள், கார்குழல் வண்ணம்! அதற்குமேல் சொல்ல, அவன் முகம் பார்க்க வேண்டுமே! பயபுள்ள திரும்பவே மாட்டேங்குறான்!



“அண்ணே, போஸ் குடுத்தது போதும் திரும்பு” வெட்டுக்கிளி அழைக்க, ஒரே தாவலில் வண்டி பக்கவாட்டியின் வழியே தரையிறங்கினான் பேரின்பன். அவனை சுற்றி நின்றிருந்த இளங்கன்றுகள், ‘ஹோஓஓ’ வென கோஷமேலுப்ப, “அண்ணன் என்ட்ரி எப்படிடா?” என்றான் பேரின்பன்.



‘சூப்பர்’ ‘மாஸுண்ணே’ ‘தெறிக்குதுண்ணே’ ‘லேட்டா வந்தாலும் லேட்டஸ்ட்டா வந்துடீயண்ணே’ இப்படி பல வித கமென்ட்டுகள் அவனை குஷியில் குளிப்பாட்டின. அந்த குஷியை குலைப்பது போல பச்சைக்கிளி வாயை வைத்துக்கொண்டு சும்மா இராமல், “மாட்டுவண்டில வரப்போ அப்படியே நம்ம சந்திரமுகி ஜோதிகா மாறியே இருந்தண்ணே” என்றிட, “டேய் ஜோதிகாவான்டா!!!” என கைகொட்டி சிரித்தது அந்த பட்டாளமே!



பேரின்பன், ‘கஷ்டப்பட்டு ஹை ஜம்ப் பண்ணதை எல்லாம் இப்படி ஒரே கமெண்ட்டுல கருக்கிட்டியேடா’ என்ற கொலைவெறியில் தன் வலக்கையை (பச்சைக்கிளி) வெறிக்க, “அண்ணே, என்னை காண்டீபன் அண்ணே அடிச்சுட்டாருண்ணே” என வந்ததும் வராததுமாய் புகார் படித்தான் முன், அடி வாங்கியவன்.



பேரின்பனோ, “நீ என்ன செஞ்சன்னு முதல்ல சொல்லு” என்றான்.



அவன் சற்றே தயங்கி தயங்கி பேச, அருகே இருந்தவன், “இவன் கொண்டத்துக்கு பக்கத்துல நின்னு பட்டாச தூக்கி போட்டு வெடிச்சுகிட்டு இருந்தாண்ணே!” என்றான்.



“ஹான்! அத சொல்லமாட்றியே! தப்பு பண்ணுனா அவன் அடிக்காம என்ன செய்வான்? இனி அப்படி செய்யாத!” என்றிட, உடனே அடிவாங்கியவனும், “சரிண்ணே” என்றுவிட்டான்.



வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு முன்னே செல்லும் பேரின்பனின் இருப்பக்கமும் அவனின் இரு கைகள் வர, “டேய் கொஞ்சம் தள்ளி வாங்கடா! எனக்கு வடிவேல் அண்ணே பீலிங் தான் வருது!!” மாஸ் என்ட்ரியை தமாசாக்கி விடுவார்களோ என்ற பதைப்பில் யாருக்கும் கேட்காமல் முணுமுணுத்தான் பேரின்பன்.

பசங்களோ, முதலில் யார் அவன் பின்னே செல்வது என ஒருவருக்கொருவர் அடித்துப்பிடித்துக்கொண்டு அட்டகாசம் செய்துக்கொண்டிருந்தனர்.

பேரின்பன் என்ன செய்தாலும் அது அவர்களுக்கு ‘மாஸ்’, என்ன பேசினாலும் அது அவர்களுக்கு ‘பஞ்ச’, அவிழ்ந்துவிடுமோ என்ற ஐயத்தில் வேட்டியை தூக்கி கட்டினால், அது ‘ஸ்டைல்’, எவன் தலையிலாவது சும்மா தட்டினாள் கூட அது ‘ஆக்ஷன்’. மொத்தத்தில் ‘கோபி’ வட்டாரத்தின் போஸ்டர் அடிக்காத இளம் ஹீரோ, பேரின்பன்!



சுசீலா, “இதோ வரான் பாரு, என் மாமன்! ஜீரால ஊருன ஜாமூன் மாறி!” ரசனையாய் அவனை அளவேடுத்துக்கொண்டே சொல்ல, காண்டீபனுக்கு ஏங்கிய நயங்களில், பேரின்பன் சற்றே குறைவாக தான் தெரிந்தான்.

காண்டீபன் பார்த்ததும் பிடித்து போகும் ரகம் என்றால், பேரின்பன் பழக பழக பிடித்துபோகும் ரகம்.

காண்டீபன் வெண்சக்கரையில் மூழ்கிய ரசகுல்லா என்றால், பேரின்பன் எண்ணையில் பொறித்த அதிரசம்.



பார்க்கும் கண்களுக்கு காண்டீபனை பிடித்தாலும், ‘திருமணம்’ என்ற பேச்சு வரும்போது, ‘பேரின்பன்’ மாறி மாப்பிளை வேணும் என சொல்லும் பெண்களே அலாதி. இதை சிறுவயது முதல் கேட்டே பழகியதாலோ என்னவோ, போன வருட கொண்ட விழாக்கு விளையாட்டாய் தோழிகள், ‘யாரு ஐயா வீட்டு மருமகளாகுறாங்கன்னு பார்ப்போமா?’ என சபதம் போட, அதன் பின்னே, பேரின்பனை திருமணம் செய்தே ஆக வேண்டும் என்ற எண்ணம் உருவெடுத்து வலுபெற்று, இப்போது விரைவில் பரிசம் போடும் நிலைக்கு வந்துவிட்டது.



“என்ன இருந்தாலும் காண்டீபன் கலரு தான் அசத்துது” என்று ஒருத்தி பேச, “தயிர்சாதம் கூட வெள்ளையா தான் இருக்கும். அதுக்காக பிரியாணி குடுத்தா வேணாம்ன்னு சொல்லிடுவியா?” என சுசீலா கேட்க, பதில் சொல்ல முடியாமல் உதட்டை சுளித்தனர் அவள் கூட்டாளிகள்.



“பாருடி அங்க, எவ்ளோ கெத்தா, ஸ்டைலா, சும்மா ராஜா மாறி நடந்து போறாரு! பாகுபலி எல்லாம் பக்கத்துலையே வர முடியாது, பார்த்துக்கோ” தன்னவன் என்ற கர்வத்தில் கொஞ்சம் ஓவராகவே பில்ட் அப் கொடுத்தாள் சுசீலா.



‘ம்கும்’ என அவர்கள் நொடித்துக்கொண்டது அவளை பாதிக்கவேயில்லை! பேரின்பனின் வருகைக்கு ஆர்ப்பரிக்கும் கூட்டத்தை பெருமை பொங்க பார்த்துக்கொண்டு நின்றாள்.



அவன் ‘வந்துவிட்டான்!’ என தெரிந்ததுமே, எரிச்சலில் இருந்த காண்டீபன் அவனுக்கு கிடைத்த வரவேற்ப்பை கண்டு சினம் சீற அவன் கையில் இருந்த குடும்ப காப்பை முறுக்கினான்.



கொஞ்சமும் சுனக்கமேயின்றி விரிந்த புன்னகையில் பேரின்பன், உற்சவ அம்மனை நோக்கி செல்ல, அதற்கெனவே காத்திருந்ததை போல, பூசாரி தீப ஆராதனையை தொடங்கினார். இருகைகூப்பி அரைநிமிடம் வேண்டியவன் கண் திறக்க, அவன் நெற்றியில் திருநீரை வைத்துவிட்ட பூசாரி, “இந்த வருஷம் அமோகமா இருக்கும்! அடுத்த கொண்டத்துக்கு பொண்டாட்டியோட ஜோடியா வரணும்” என்று அருள்வாக்கு போல சிரித்தபடி சொல்லி, அம்மன் பாதத்தில் இருந்த பூச்சரத்தை எடுத்து அவன் கழுத்தில் மாலையாக்கினார்.



“ஹாஹா, நடக்கட்டும் நடக்கட்டும்!” என்று பேரின்பன் சிரிக்கவே, ஒண்டிவீரர் குடும்பத்திற்கு முடி சூட்டவேண்டி எடுத்து வைத்த முண்டாசுகளில் தனியாய், மீதம் இருந்த ஒன்றை எடுத்து, அவன் சிரசுக்கு கிரீடமாக்கினார்.



பின்னணியில் ஒலித்துக்கொண்டிருந்த எல்.ஆர்.ஈஸ்வரியின் பக்தி குரல் நிறுத்தப்பட்டு, பெரும் சத்தத்தோடு,

“முண்டாசு சூரியனே, முக்குலத்தில் மூத்தவனே!!

தேயாத சந்திரனே, தேர் போல நின்னவனே!”
என்று கார்த்திக்கின் குரலில் அந்த சமயத்திற்கு பொருத்தமான பாடல் ஓட, இனிமையாய் திடுக்கிட்ட பேரின்பன், “அட அட அட, நம்ம பசங்க தீயா வேலை செய்யுரானுன்களே!” என மெச்சிக்கொண்டு, “ராத்திரி விருந்துல இந்த பாட்டு போட்டவனுக்கு தனியா ரெண்டு குடுத்துடு” என்றான் வலக்கை பச்சைகிளியிடம்.

அவன் ‘எதை’ சொல்கிறான் என புரிந்த பச்சைக்கிளி, ‘கீ கீ’ என்றது சம்மதமாய்.



பூசாரி, “எம்பொண்ணுக்கு காலேஜுல சீட்டு கிடைச்சுருச்சு தம்பி, நீங்க சொன்னீங்கன்னு பீஸ்ல கூட குறைசுகிட்டாங்க, ரொம்ப நன்றி!” என்று கூற, “இதெல்லாம் ஒரு விசயமா? விடுங்க சாமி, பூசையை கவனிங்க” என்று நகர்ந்துவிட்டான் பேரின்பன்.



அன்னதான கூடத்திற்கு அவன் வருவதை கண்ட காண்டீபன், அங்கிருந்து கோவமாய் வெளியே செல்ல முயல, அது முடியாதபடி, அவன் கையை இறுக்கி பிடித்திருந்தார் அவன் தந்தை சத்தியராஜன்.

‘எவன கண்டும் நம்ம ஒதுங்க கூடாது!’ தீர்க்கமான அவர் குரலில் நின்றவன், தந்தையை ஒரு பார்வை பார்த்துவிட்டு பின்னே, முழு உயரத்திற்கும் கம்பீரமாய் நிமிர்ந்து நின்றான். ‘இவன் தான் என் மகன்’ என கர்வம் பொங்க அவனை பார்த்தார் சத்தியராஜன்.



தன்னை ஆவலாய் எதிர்பார்க்கும் சிவகாமியை மட்டுமே பார்த்து புன்னகித்துக்கொண்டு வந்த பேரின்பன், மருந்துக்கும் அருகே நிற்கும் அவன் தந்தையை பார்த்தானில்லை.



வெட்டுக்கிளி பேரின்பனின் உயரத்திருக்கு முடிந்தமட்டும் எம்பி, அவன் காதுகளில், “உங்க தம்பியை பாருங்களேன்” என்றான். ஒரு நொடி தன் சகோதரனின் முகத்தை கண்ட பேரின்பன், சன்ன சிரிப்போடு, “காண்டு, காண்டா இருக்கு டோய்” என்றான். அதை கேட்டு அவன் இரு கைகளும் சிரிக்க, என்ன சொன்னான் என புரியாவிடினும், அது தன்னை பற்றியே இருக்கும் என உணர்ந்த காண்டீபன், அவர்களை அடிக்க முன்னே சென்றான்.



அவன் நோக்கம் உணர்ந்த சத்தியராஜன், சுற்றிலும் இருக்கும் ஊருமக்களை ஜாடைகாட்டி அவனை தடுத்துவிட்டார். நேரிடையாய் பார்க்காவிடினும், இவையெல்லாம் பேரின்பனுக்கு தெரிந்தே இருந்தது. காண்டீபன் ஒருவேளை இவனை அடிக்க வந்தால், அவனை எதிர்த்து இவன் அடிப்பானா என்றால்...!? மாட்டான்! இதுவரை இருவருக்கும் கைகலப்பு ஆனதில்லை. பெரியவர்கள் ஆகவும் விட்டதில்லை. முதிர்வு வந்ததும், அவன் பாதையில் இருந்து முழுவதுமாய் விலகிவிட்டான் பேரின்பன்.



சிவகாமி, “நல்ல நேரம் வந்தாச்சு, பந்தி தொடங்கலாம்” என்றார்.



‘நல்ல நேரம்’ என்று எதை சொல்கிறார் என அறிந்த சத்தியராஜன், சற்று சத்தமாகவே, “சனியன் வரதெல்லாம் நல்ல நேரமா மாத்திட்டாங்க போல” என்றார். விரிந்திருந்த பேரின்பனின் புன்னகை சற்றே குறைய, காண்டீபன் இளப்பமாய் அவனை கண்டு சிரித்தான். எப்போதும் போல கண்டுக்கொள்ளாது, வேட்டியை மடித்து கட்டிக்கொண்டு, உணவு பரிமாறும் வேலையை கையில் எடுத்தான். சிவகாமி இலையில் இனிப்பு வைக்க, வேண்டுமளவு சாதத்தை பரிமாறினான் பேரின்பன்.

ஒவ்வொருவரிடமும் கால் நிமிடமேனும் பேசாமல் அடுத்த இலைக்கு செல்லவில்லை அவன். அவன் பேச்சை குறைத்தாலும், அவர்கள் விடவில்லை. அவன் பரிமாறும்போது பேசும் சிறு கேலி பேச்சுக்காகவே அடித்துபிடித்துக்கொண்டு பந்தியில் இடம்பிடித்திருந்தனர் பல பெண்கள், அதில் சுசீலா கோஷ்டியும் அடக்கம். வெளிபூச்சாய் சுசீலாவிடம் வாயடித்த பெண்கள், பந்தியில் அவனை கண்டதும் முந்திக்கொண்டனர்.



“இன்ன கிழவி, ரேஷன் பொருள் கரெட்டா வருதா?” என்றான் தள்ளாத ஒரு பாட்டியிடம். அவர் முகத்தில் சுருக்கத்தையும் மீறிய புன்னகை பளிச்சென தெரிய, “நீ இருக்ககொல்ல என்ன ராசா? எல்லாம் சரியா வருது” என்றார்.

சிரிப்பை குத்தகைக்கு எடுத்தவன் போல எப்போதும் இருக்கும் பேரின்பனின் முகம் சிரிப்பை தொலைத்து ஒரு நொடி இறுகினாலும் திகில் அடையும் ஆட்கள், அவன் சுட்டிக்காட்டும் தவறை மறுமுறை கனவிலும் செய்யமாட்டார்கள். மூன்று மாதமாய் பொருட்கள் தராமல் பாட்டியை அலைக்கழித்துக்கொண்டிருந்த நியாய விலைக்கடை ஆட்களை அவன் ஒருமுறை தான் சந்தித்தான். அதன்பின் எல்லாம் சரியாய் நடக்கிறது.



காண்டீபனும் அவனிடம் உதவி என வரும் ஆட்களுக்கு மறுக்காமல் செய்வான் தான்! ஆனால் அதில் ஒரு ஒட்டாத தன்மை இருக்கும்! ஊரில் முக்கால்வாசி இவனுக்கு சொந்தபந்தமாய் இருந்தாலும், யாரிடமும் அதிகம் பேசி பழகாது, ‘நீ கேட்ட, நான் செஞ்சேன்’ என்ற நிலையில் இருப்பான். ஆனால் பேரின்பன், அப்படி அல்ல. யார் வந்து உதவி கேட்டாலும் யோசிக்காமல் செய்துகொடுப்பான்! தெரிந்தவர், தெரியாதவர் என்ற பாகுபாடின்றி ‘முறை’ வைத்தே அழைப்பான். அனைத்திலும் முக்கியமாய் ‘சிரித்து பேசுவான்’. அது காண்டீபனுக்கு கிச்சு கிச்சு மூட்டினாலும் வராது.



நடப்பதையெல்லாம் பசியோடு கவனித்துக்கொண்டிருந்த தரகர், “என்னங்க நடக்குது இங்க? ரெண்டு பசங்களும் அவரோட புள்ள தானே? மூத்தவர வில்லன் மாறி பார்க்குறாரு உங்க சின்னையா?” என்றிட, ‘இதெல்லாம் எங்களுக்கு ரொம்ப பழக்கம்’ என்றபடி அசட்டையாய் இருந்த பக்கத்து இலைக்காரர், “ஒரு வீட்ல அப்பாவும் சின்னவரும் ஒரு கட்சி, மூத்தவரு தனீனீனீ...கட்சி” என்றார்.



தரகர், “அது ஏங்க?”

அவர், “அதெல்லாம் அப்படிதான்” அதற்குமேல் பேசவோ கேட்கவோ இடமின்றி சிவகாமியால் ஆரம்பித்து வைக்கப்பட்ட விருந்து அனைவர் வாயையும் அடைத்தது.

-தொடரும்...
 
அட பேரின்பன், காண்டீபன் செம.... காண்டீபன் பார்க்க மட்டுமே சாதுன்னா இன்பன் எப்படியோ....
 
உங்களுடைய "கோகுலத்தில்
ராமன்"-ங்கிற அழகான
அருமையான புதிய லவ்லி
நாவலுக்கு என்னுடைய
மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்,
பிரியா மோகன் டியர்
 
Last edited:
Top