Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோகுலத்தில் ராமன்! 04 (ஆ)

Advertisement

பிரியா மோகன்

Tamil Novel Writer
The Writers Crew
“பெரியய்யா...!?” ஒண்டிவீரரை ஒருவர் அழைக்க, “என்னப்பா? இத்தனை பேரு வந்துருக்கீங்க?” என்று கேட்டபடி முன் வாசலில் போடப்பட்டிருக்கும் நாற்காலியில் அமர்ந்தார் ஒண்டிவீரர்.



பின்னோடு வீட்டு ஆண்கள் மூவரும் வந்து நிற்க, வெளியே இருப்பவர்கள் எதற்கு வந்துள்ளனர் என்பதை நொடியில் அறிந்துக்கொண்டான் காண்டீபன். பின்னே அவன் இழுத்து வைத்த பிரச்சனைக்கு தானே பஞ்சாயத்து வந்துள்ளது.



கூட்டத்தில் ஜோதிலிங்கமும் நிற்க, “என்ன சோதி? மில்லுக்கு போகாம இவங்களோட வந்துருக்க? யாருக்கு என்ன பிரச்சனை?” என்றார் ஒண்டிவீரர்.



ஊருக்குள் ஏதேனும் சமரசமோ, சச்சரவோ போலிசுக்கு போவதற்கு முன் ஒன்டிவீரரிடமே பிராது வரும். பெரிய மனிதராய் அவரும் முடிந்தவரை சமரசம் செய்து வைப்பார். இன்று வந்திருப்பது தன் வீட்டின் பிராது என அறியாது அவர் கேட்க,

“என்னய்யா? விஷயம் தெரியாத மாறி பேசுறீங்க?” என்றான் அவன். காண்டீபனிடம் அடி வாங்கிய அந்த ஆதரவற்றோர் ஆசிரமத்தின் ஓனர்.



“என்னனு சொல்லாம எனக்கு எப்படி தம்பி தெரியும்?” ஒண்டிவீரர் கேட்க, “அதை உங்க பின்னாடி கமுக்கமா நின்னுட்டு இருக்கானே உங்க பேரன் அவன்கிட்ட கேளுங்க!” என்றவன் சொல்ல,



“ஏய்... மரியாதையா பேசு!!” என துடிப்பாய் முன்னே வந்தான் காண்டீபன்.



“ஷ்.. காண்டீபா!!” என்று அதட்டிய ஒண்டிவீரர், “இங்க பாருங்க, எனக்கு என்ன நடந்துச்சுன்னு தெரியாது! தெளிவா நடந்ததை சொன்னா மேற்கொண்டு பேசலாம்!” என்றுவிட்டார் ஒண்டிவீரர்.



“உங்க வீட்டு பையன் என் ஹோட்டல்க்கே வந்து அத்தனை பேரு முன்னுக்கவும் என் மேல கையை வச்சுட்டான்!!” அடிவாங்கியவன் கோவமாய் சொல்ல, “என்னடா காண்டீபா இது?” என அதிர்ந்தார் ஒண்டிவீரர்.



“ஆமா தாத்தா, இன்பனை இவங்க ஏதும் செஞ்சுருப்பாங்களோன்னு நினைச்சு விசாரிக்க போனேன்! இவங்க ரொம்ப மரியாதையில்லாம பேசவும், கோவம் வந்து அடிச்சுட்டேன்!!” என்றான் தணிவாய்.



இதைக்கேட்ட அவன் வீட்டாட்கள் அனைவருக்குமே அதிர்ச்சி தான்!! காண்டீபனுக்கு சொல்லுக்கு முன் கை நீளும் என்பது ஊரே அறிந்தது, ஆனால் இப்படி எந்த ஒரு பிரச்சனையையும் அவன் இதுவரை இழுத்து விட்டதில்லை.



“இன்பனுக்கும் இவங்களுக்கும் என்னடா தொடர்பு?” என்றவர், “இன்பா? இவங்களை உனக்கு தெரியுமா?” என்று கேட்டார் ஒண்டிவீரர்.



“தெரியும் தாத்தா! இவங்க ஆசுரமத்துல லோட் இறக்க போறப்போ பார்த்துருக்கேன், மத்தபடி பேச்சுவார்த்தை எதுவும் வச்சுக்கிட்டதில்லை”



காண்டீபனை தனியாய் விசாரித்துக்கொள்ளலாம் என எண்ணியபடி, “சின்னப்பையன் தெரியாம பண்ணிட்டான்! பெருசுப்படுத்தாம சமாதானமா போய்டலாம் தம்பி! காண்டீபா!!! அவர்கிட்ட அடிச்சதுக்காக மன்னிப்பு கேளு” என்றார் ஒண்டிவீரர்.



“பாத்தியா? இதுக்குதான் கண்டவன் விஷயத்துல தலையிடக்கூடாதுன்னு சொல்றது! இப்போ எவன் எவன்கிட்டயோ மன்னிப்பு கேக்குற நிலைமைக்கு கொண்டு வந்து விட்டுருக்கு!” வெறுப்பான சத்தியராஜின் குரல் காண்டீபனிடம் செய்தி சொன்னாலும் அது அங்கிருந்த இன்பனுக்கு நன்றாய் கேட்டது.



தன்னால் தானே அவனுக்கு இந்த நிலைமை என்று நினைத்த இன்பன், “அண்ணே, ஏதோ ஒரு தடவை தெரியாம கையை ஓங்கிட்டான், உங்க தம்பியா நினைச்சு மன்னிச்சு விட்டுடுங்களேன்!! அவனுக்காக நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுக்குறேன்” கரம் கூப்பியபடி அடி வாங்கியவனிடம் சென்றான் இன்பன்.



“எது ஒரு தடவையா? இதோட ரெண்டாவது முறை!! ஒவ்வொரு வாட்டியும் அடியை வாங்கிட்டு கமுக்கமா போவ சொல்றீங்களா? இந்த தடவ நான் விடுறதா இல்லை! எனக்கு குடுத்ததை அவனுக்கே திருப்பி கொடுக்காம இங்கிருந்து நகருறதாவும் இல்லை” என்றான் அவன் ஆவேசமாய்.



‘ஏற்கனவே அடிச்சுருக்கானா?’ என்று யோசித்த இன்பனுக்கு, இந்த சண்டையின் சாராம்சம் விளங்காது போக, நேரிடையாகவே, “எதுக்கு முதல்முறை இவங்களை அடிச்ச?” என்றான் காண்டீபனிடம்!



அவனோ கோவமாய் முகத்தை திருப்ப, யோசனையாய் திரும்பியவனின் கண்ணில் பட்டார் ஜோதிலிங்கம். அவரது பதட்டமும், படபடப்பும் எதையோ புரிய வைக்க, “என்ன நடந்துச்சுன்னு உங்களுக்கு தெரியும் தானே?” என்றான் இன்பன், சரியாய்.



“அது... தம்பி...” என தயங்கியவர் காண்டீபனை பார்க்க, “என்ன நடந்துச்சுன்னு சொல்லு சோதி!” என்ற ஒண்டிவீரரின் அதட்டலில் அன்று இவர்கள் வந்தது, பேச்சு முற்றி நாற்காலியை தூக்கி காண்டீபன் வீசியது, பின்பு இது யாருக்கும் தெரியக்கூடாது என அவன் மிரட்டியது என்று அத்தனையும் சொல்லி முடித்தார்.



“இந்த விஷயம் இதோட போய்டும்ன்னு நினைச்சு உங்ககிட்ட சொல்லலிங்கய்யா, மன்னிச்சுடுங்க” என்றார் கசங்கிய முகமாய்.



“என்கிட்டே சொல்லிருக்க வேணாமா?” சாதாரணமாய் கேட்டதை போல தோன்றினாலும் இன்பனின் கண்களில் கோவம் தெறித்தது.



தன்னை அடக்கியபடி மீண்டும் அடிப்பட்டவனிடம் சென்றவன், “அண்ணே, ஊருல நீங்களும் பெரியாளு! நமக்குள்ள எதுக்கு பிரச்சனை, சொல்லுங்க? சமாதானமா போய்க்குவோம்! என்ன சொல்றீங்க?” என்றான் தணிவாய்.



“ஊருக்கே பஞ்சாயத்து சொல்றவரு, தான் பேரன் மேல தப்புன்னதும் அதை பெருசுப்படுத்தாம இருக்காரோ!? ஊருக்கு ஒரு நியாயம், அவிங்க வீட்டுக்கு ஒரு நியாயம் போல!” அவனோடு வந்திருந்த ஆட்களில் ஒருவன் சத்தம் இட, “அண்ணே, நான் தான் பேசுறேன்ல? அப்புறம் எதுக்கு தேவையில்லாம உங்காளுங்க சத்தம் போடுறாங்க!! நம்மக்குள்ள பேசிப்போமுண்ணே...” தயவாய் பேசினான் இன்பன்.



“நமக்குள்ள பேசிக்கவா நான் ஊராளுங்களை கூட்டிட்டு வந்து நிக்குறேன்?” அவன் கெத்து காட்ட, “சரிண்ணே, இப்போ என்ன செய்யலாம்ன்னு சொல்லுங்க” என்றான் பேரின்பன்.



“அவன் அடிச்ச அடியை நான் திருப்பி குடுக்காம போக மாட்டேன்” என்றிட, “அது நான் இருக்குற வரைக்கும் நடக்காது, வேற ஏதாவது சொல்லுங்க” என்றான் இன்பன், உறுதியான குரலில்.



தணிவாய் பேசிக்கொண்டிருந்தவன் குரலில் மாறுபாடு தெரிய, சில நொடிகள் தடுமாறியவன், “அப்போ நான் மட்டும் அடி வாங்கிட்டே இருக்கனுமா அவன்கிட்ட? ஒரு தடவ விட்டதே பெருசு! என்னை தேடி வந்து அடிச்சும் நான் சும்மா இருந்தா எல்லாரும் என்னை பத்தி என்ன நினைப்பாங்க?” என்று அவன் ஆவேசமாய் பேச,



“அதான் கேட்குறேன், இப்போ என்ன செய்யலாம்?” என்றான் இன்பன்.



“ஒரு அடியாவது அவனை நான் அடிச்சே ஆகணும்!”



இன்பன், “அது என்னைக்கும் முடியாது! அந்த எண்ணத்துல இங்க நிக்குறதா இருந்தா, சரிப்படாது, கிளம்புங்க” என்றான் முடிவாய்.



“அப்போ போட்டுருந்த காண்ட்ராக்ட்ல இருக்கமாறி அரிசி சப்ளே பண்ணுங்க!!” என்றான் அவன் தடாலடியாய் தன் முடிவை மாற்றி. ஏனோ இன்பனை தாண்டி காண்டீபனை தொட முடியும் என அவனுக்கு தோணவில்லை. உடனே வந்தவரை லாபம் என ஒப்பந்தத்தை புதுப்பிக்க பார்த்தான்.



இன்பன் ஒண்டிவீரரை ‘என்ன செய்யலாம்?’ என்ற கேள்வியுடன் நோக்க, “காண்ட்ராக்ட் இன்னும் எத்தனை மாசம் மிச்சம் இருக்கு?” என கேட்டு, தன் மறைமுக சம்மதத்தை தெரிவித்தார் அவர்.



“தாத்தா...!! இவன் ஒரு பிராடு! ஆசுரமத்துக்காக நம்ம குறைஞ்ச லாபத்துல குடுக்குற அரிசியை இவன் இவனோட ஹோட்டல்க்கு எடுத்துக்கிட்டு, பிள்ளைகளுக்கு வெறும் ரேசன் அரிசில சாப்பாடு போடுறான்” என்றான் கோவமாய்.



“இதை நீ எங்கக்கிட்ட முன்னாடியே சொல்லிருக்கணும் காண்டீபா! பிரச்சனையை இழுத்துவிட்டுட்டு இப்போ நியாயம் பேசுறது பிரயோஜனம் இல்லை” ஒண்டிவீரரின் கண்டிப்பான குரல் அவனை அடக்கினாலும், காண்டீபனால் அமைதியாய் இருக்க இயலவில்லை.



“முடியாது தாத்தா! இதுக்கு நான் ஒத்துக்க மாட்டேன்! அவனுக்கென்ன என்னை அடிக்கணும் அவ்வளோதானே? ஒத்தைக்கு ஒத்த வர சொல்லுங்க, அவனா நானான்னு பாத்துடுறேன்” வேட்டியை மடித்துக்கட்டிக்கொண்டு காண்டீபன் எகிற, அடிபட்டவன் அழைத்து வந்த அவன் ஆட்களும் எகிற ஆரம்பித்தனர்.



சத்தியராஜன் காண்டீபனை இழுத்துபிடித்துக்கொண்டு, “அமைதியா இருடா! எவன் எப்படி போனா உனக்கென்ன?” என்றார்.



“விடுங்கப்பா, அடிச்சுவானான்னு பாத்துடுறேன்” காண்டீபன் துள்ள, “அடி.. அடிச்சு தான் பாரு...” என்றான் அடிப்பட்டவன் முன்னேற்ப்பாடாய் எடுத்து வந்திருந்த தென்னம்மட்டைகளையும், கட்டைகளையும் கையில் ஏந்தியபடி.



பிரச்சனை பெரிதாவதை உணர்ந்து ஒண்டிவீரரும், இவர்கள் உடன் வந்திருந்த ஊர் பெரியவர்களும் குரல் கொடுக்க அது சற்றும் வேலைக்காகவில்லை.



ஒருகட்டத்தில் வாய்வார்த்தைகள் வரம்புமீறி போக, ஓராள் இடைவெளியில் நின்று சண்டையிட்டுக்கொண்டிருந்தவர்களின் குறுக்கே புகுந்து மத்தியஸ்த்தம் செய்ய முயன்றுக்கொண்டிருந்தான் பேரின்பன்.



வீட்டினுள் நின்று நடப்பதை பார்த்துக்கொண்டிருந்த பெண்களுக்கு, பிரச்சனை முற்றுவதை போல தோன்ற, அடித்துக்கொள்ளும் மனதுடன் நின்றனர். அவர்கள் எதிர்ப்பார்த்ததை போலவே பிரச்சனை கைகலப்பாக மாறிய நேரம், காண்டீபனை நோக்கி வீசப்பட்ட அடியை அவனுக்கு முன்னே சென்று தனதாக்கி வாங்கிக்கொண்டான் பேரின்பன்.



ஒரு அடி பலமாய் அவன் மீது விழுந்துவிட்டதில் வெடவெடத்து போயினர் வந்திருந்தவர்கள். ஒண்டிவீரரும் சரி, காண்டீபனும் சரி, இதை சற்றும் எதிர்ப்பார்க்கவில்லை. இன்பன் மீது அடி விழுந்ததும் காண்டீபன், அடித்தவனை துவம்சம் செய்ய முன்னேற, இன்பன் கெட்டியாய் பிடித்துக்கொண்டான் அவன் கரத்தை.



அவன் அணிந்திருந்த வெளிர் நீலநிற சட்டையில் இடப்புற கீழ் ஓரம் மெல்ல மெல்ல சிகப்பு சாயம் பூசத்தொடங்கியது.



“ரத்தம்டா!!!” கூட்டத்தில் ஒருவன் சொன்னபிறகே இன்பனை கவனித்தான் காண்டீபன். அணிந்திருந்த சட்டையில் ரத்தம் மெல்ல மெல்ல பரவ, காண்டீபனுக்கு ரத்தம் சூடேறியது. இன்பனை தாக்கியவனை அடிக்க அவன் பாய, “முதல்ல ஹாஸ்பிடல் போலாம், காரை எடு” என்ற ஒண்டிவீரரின் வார்த்தைகள் அவனை தடுத்து நிறுத்தியது.



“சும்மா விட மாட்டேன்டா!! உங்களை வந்து கவனிச்சுக்குறேன்!” கருவியபடி காரை அவன் எடுக்க, இன்பன் மறுக்காமல் அதில் ஏறிக்கொண்டான். வீட்டு பெண்களும் அவர்களோடு மருத்துவமனை நோக்கி பயணித்தனர்.



பஞ்சாயத்து கூட்டி கொஞ்சம் பயம் காட்டிவிட்டு செல்லலாம் என்று எண்ணி வந்திருந்தவர்களுக்கு இன்பனை தாக்கி ரத்தகாயம் ஏற்ப்பட்டதில் கதி கலங்கி போனது.

‘எதுக்கும் கொஞ்சநாள் வெளியூர்ல இருப்போம்’ என பயத்துடனே அங்கிருந்து சிட்டாய் பறந்து விட்டனர்.



மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதும், இவர்களை வெளியே காத்திருக்க வைத்துவிட்டு இன்பனுக்கு சிகிச்சை நடந்தது.



தங்கமும் சிவகாமியும், ‘இந்த புள்ளைங்களுக்கு நேரம் சரியில்லையோ என்னவோ? புடிச்சு இந்த ஆட்டு ஆட்டுது!! முதல்ல ஜாதகம் பார்க்கணும்’ என புலம்பியபடி இருக்க, கோகிலா ஒன்றும் பேசவில்லை. காண்டீபன் தான் துள்ளிக்கொண்டிருந்தான்.



“ரத்தம் வர அளவுக்கு அடிச்சுருக்கானுங்க!! அவனுங்களை அப்படியே விட சொல்றீங்களா?”



ஒண்டிவீரர், “கொஞ்சம் அமைதியா இரு காண்டீபா! நீ செஞ்சதுக்கு தான் இப்போ அவன் படுத்துருக்கான்! இத இத்தோட முடிக்காம மேற்கொண்டு வளர்க்காத!! பெரியவங்க நாங்க பார்த்துக்குறோம்!!”



புசுபுசுவென மூச்சுவிட்டவன், ‘ஏதோ செஞ்சு தொலைங்க’ என முனகிக்கொண்டான்.



அரைமணி நேரம் தாண்டிய நிலையில் வெளியே வந்த மருத்துவரிடம், “எப்படி இருக்கான் தம்பி?” என்றார் சிவகாமி.



“பயப்பட ஒன்னும் இல்லம்மா! அடி பட்டதுல தையல் பிரிஞ்சுடுச்சு, அவ்வளோதான்!! திரும்ப தையல் போட்டுருக்கோம்! ஒரு மாசத்துக்காவது ரெஸ்ட்ல இருக்கட்டும், ஓவர் ஸ்ட்ரெயின் வேண்டாம்” அவர் பாட்டிற்கு பேசிக்கொண்டே போக இவர்களுக்கு தலையும் பிடிபடவில்லை, வாலும் சிக்கவில்லை.



“என்ன சொல்றீங்க டாக்டர்? என்ன தையல்?”



“அவருக்கு ரீசென்டா ஒரு ஆபரேஷன் நடந்துருக்கு! நான் அதுபத்தி கேட்டப்போ இன்பனே சொன்னரே! ஏதோ சம் ஆக்சிடென்ட், அதுல ஒரு இரும்பு ராட் அவர் அடிவயித்துல குத்திடுச்சுன்னு! உங்களுக்கு தெரியாதா?” என அவர்களிடமே திருப்பி கேட்டார் மருத்துவர்.



“காயம் ரொம்ப ஆழமா இறங்கிருக்கு, இன்னும் ரெண்டு இன்ச் உள்ளே போயிருந்தா கூட அவர் உயிருக்கே ஆபத்தா போயிருக்கும், பட் காட்ஸ் கிரேஸ், ஹீ இஸ் சேஃப் நவ்! ஆல்ரெடி டேப்லட்ஸ் எடுத்துட்டு இருக்குறதா சொன்னாரு, இருந்தாலும் நானும் குடுக்குறேன்! சீக்கிரமே காயம் ஆறிடும்! அண்ட் இன்னைக்கு ஒரு நைட் இங்க இருக்கட்டும், மார்னிங் டிஸ்சார்ஜ் பண்ணிக்கலாம்!!”



மருத்துவர் நகர்ந்து செல்லும் வரை ஒருவரும் நிதானத்துக்கு வரவில்லை. ‘என்ன நடந்துது அவனுக்கு? டாக்டர் என்னென்னவோ சொல்றாரு?’ என குழம்ப, கோகிலாவுக்கு மட்டும் அந்த விபத்து என்று நடந்திருக்கும் என தெளிவாய் புரிந்தது. அவன் பட்டு வேட்டி சட்டையில் இருந்த ரத்தக்கறை அதை அவளுக்கு காட்டிக்கொடுத்தது. ஆனால், ‘எப்படி?’ என்பதற்கு தான் விடையில்லை.



சிறிது நேரத்திற்கு பின் அறைக்குள் சென்று அவனை பார்த்தால், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தான் பேரின்பன். அமைதியாய் உறங்கும் அவனை சுற்றி நின்று வேடிக்கை பார்க்க மட்டுமே முடிந்தது.



“என்ன என்னவோ நடந்துருக்கு, கல்லூளிமங்கன் வாயே தொறக்காம இருந்துருக்கானே? படுத்து கடக்குறதை பாரு, ஒன்னும் தெரியாதவனாட்டம்?” சிவகாமி தான் புலம்பிக்கொண்டிருந்தார்.



ஒண்டிவீரர் மனதுக்குள், ‘இவன்கிட்ட வந்ததுமே கேட்டுருக்கணும் என்ன ஆச்சுன்னு!!’ என்று வருந்தினார்.



தங்கத்துக்கு கண்ணீரே துணை...



சத்தியராஜன் பொறுப்பாய் நாளை காலைக்கும் சேர்த்து பில் செட்டில்மென்ட் செய்ய இப்போதே சென்றுவிட்டார்.



காண்டீபனுக்கு மனம் அடித்துக்கொண்டது. ‘அந்த கிஷோரை இன்னும் கூட அடிச்சு கேட்டுருக்கனுமோ? போலிஸ் புல்லா கேட்டு பார்த்துட்டோம்ன்னு தானே சொன்னாங்க? அவனைத்தாண்டி யார் என்ன செஞ்சுருப்பா?’ என்று உள்ளுக்குள் ஓடிக்கொண்டே இருந்தது.

‘இவங்கிட்டயே கேட்டுடுவோமா? இப்போவே எழுப்பலாமா?’ என கேட்ட மனதை, ‘நாளை வீடு வரட்டும், பொறு மனமே’ என அடக்கிவிட்டிருந்தான்.



கேட்டாலும் அவன் சொல்லப்போவதில்லை என காண்டீபனுக்கு தெரியாது போனது.



“இந்த பய எப்போமா கண்ணை திறப்பான்?” அங்கே வந்த நர்சிடம் சிவகாமி அதட்டலோடு கேள்வி கேட்க, அவரோ தடுமாற்றத்துடன், “இப்ப முழிச்சுடுவாரும்மா” என்றுவிட்டு விட்டால் போதுமென வெளியே ஓடிவிட்டார்.



“முழிக்குற வரைக்கும் நான் இங்கேயே இருந்து ரெண்டுல ஒன்னு கேட்டுட்டு வந்துடுறேன், நீங்க எல்லாம் வீட்டுக்கு கிளம்புங்க” என்றார் சிவகாமி.



ஒண்டிவீரரோ, “ஆஸ்பத்திரில எதுவும் வேண்டாம் சிவா, வா எல்லாரும் வீட்டுக்கு போவோம், நைட் துணைக்கு கோகிலா இருப்பா” என்றுவிட, சிறிது யோசனைக்கு பின்னே, ‘அதுவும் சரிதான்’ என கிளம்பிவிட்டனர்.



பத்துக்கு பத்து அறையில் கண் மூடி படுத்திருக்கும் பேரின்பனை கண்ட கோகிலா, அருகே சென்று இடுப்பு வரை மூடியிருந்த போர்வையை அவன் மார்பு வரை இழுத்துவிட, “ஒய் மூக்கி” என்ற அதட்டலில் தன்னை போல இரண்டடி பயந்து விலகினாள் கோகிலா.



“ஹாஹா!! பயந்துட்டியா?” பற்வரிசை தெரிய சிரித்தான் அவன்.



இரண்டு நிமிடம் முன்பு வரை உறங்கிக்கொண்டிருந்தவனா? என்று தோன்றியது அவளுக்கு.



“நான் தூங்கல!! முழிச்சுருந்தா எல்லாரும் கேள்வி கேட்டு தொல்லை பண்ணுவீங்களேன்னு தூங்குற மாறி ஆக்ட்டு விட்டேன்!!” என்று அவன் கண்ணடிக்க, சிறு முறைப்போடு அங்கிருந்த விசிட்டர் பெட்டில் அமர்ந்துக்கொண்டு வார இதழ் ஒன்றில் பார்வை பதித்தாள் கோகிலா.



“க்கும்...” என அவன் தொண்டையை கனைக்க, நிமிர்ந்து அவள் பார்த்ததும், “இன்னைக்கு நம்ம கல்யாணம் ஆகுன்னும் நான் நினைக்கல, முதலிரவை இப்டி ஹாஸ்பிடல்ல கொண்டாடுவோம்ன்னு நான் நினைக்கல” ஏக்கமாக அவன் சொன்ன த்வனியில், கோகிலா வெளிப்படையாய் முறைக்கவே, “ஹிஹி! நைட்.. முதல் முதல், ஆப்டர் மேரேஜ், சோ பர்ஸ்ட் நைட்” என சிரித்தான் பேரின்பன்.



கோகிலாவிடம் பதிலின்றி போக, “நாளைக்கு நம்ம மேரேஜ் ரெஜிஸ்ட்ரேஷன் இருக்கு, காலைலேயே காண்டீபன் போய் டாக்குமென்ட் எல்லாம் குடுத்துட்டான், ரெஜிஸ்டரார் நம்ம ஆளு தான்!!” என்று சொல்ல, அவளிடம் பிரதிபலிப்பில்லை.



‘என்ன இவ வாயே தொறக்கல?’ என்று யோசித்தவனுக்கு அப்போதுதான் உரைத்தது கோகிலா அவன் வந்தது முதல் இக்கணம் வரை தேவைக்கு கூட ஒரு வார்த்தை பேசாதது.



தலையசைப்பும், பார்வையும் மட்டுமே அவளிடம் இருந்து வந்துக்கொண்டிருப்பதை உணர்ந்த பேரின்பன், ‘ஆத்தி...!! பொண்டாட்டி ஆட்டி வைக்க போறாளோ?’ என்று அவனுக்குள் உலக உருண்டையே உருண்டது.



இதற்கிடையே பத்து நாட்கள் வெளியூருக்கு இன்ப சுற்றுலா சென்றிருந்த சுசீலாவின் குடும்பம் மறுநாள் மாலையில் ஊர் வந்து சேர, காத்திருக்கிறது அடுத்த பஞ்சாயத்து!!!



-வருவான்...
 
Top