Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோகுலத்தில் ராமன் - 06

Advertisement

பிரியா மோகன்

Tamil Novel Writer
The Writers Crew
*6*

என் மீதான காதலை உன்னில் எங்கு ஒளித்து வைத்திருக்கிறாய்?

தெரிந்துகொள்ள ஆசை!!!



தண்ணீரில் தொப்பலாய் நனைத்ததும் இல்லாமல், மனம் கோவிக்கும்படி "அங்கிள்" என அழைத்தால் கோவம் வராமல் இருக்குமா!?



வேட்டியை மடித்துகட்டிக்கொண்டு "யாருடி உனக்கு அங்கிளு? வந்தேன்னு வையு, மூக்கு உடைஞ்சுடும் பார்த்துக்க! என் வூட்ல நின்னுகிட்டு என்னையே அங்கிலுன்னு நக்கலடிக்குறியா!??" அவன் கத்த, அந்த சத்தத்தில் பின்வாசலுக்கு விரைந்து வந்துவிட்டனர் பெண்கள்.



முதலில் அவனை கண்ட சிவகாமி, "எடேய், என்னத்துக்குடா வந்ததும் வரததுமா கத்துரவன்!?" என அதட்டினார். அவன் நனைந்திருப்பதை கண்ட தங்கம் ஒரு துவாலையோடு வந்து, "குளிச்சுட்டா துவட்டிக்கணும்னு கூடவா தெரியாது!?" என கேட்க, "அத்தஏஏஏஏஏ!" என பல்லை கடித்தான் இன்பன்.



செல்லம் தயங்கி தயங்கி, "நல்லா இருக்கியா இன்பா?" என்றார். அவரை அவன் கண்டுக்கொள்ளவே இல்லை. மேலே நின்றிருந்த சுந்தரி இப்போது காணாமல் போயிருக்க "எங்க அவ?" என்றான் கண்களை வீட்டினுள் அலையவிட்டபடி.



"யாரடா கேட்க்குற!?" என்ற பாட்டியை தாண்டி பின்னால் பார்த்தவன் மாடிப்படி இடுக்கில் தலையை மட்டும் கொஞ்சமாய் நீட்டி தன்னை எட்டி பார்க்கும் அவளை கண்டுக்கொண்டு, "ஏய் வாடி வெளில!!!" விரல் நீட்டி அழைத்தான் கோபமாய்.



அவள் 'மாட்டேன்' என தலையசைத்து மறுக்க, "வந்தேன்னா முட்டிக்கிட்டி நிக்குற மூக்கை திருகிருவேன், ஒழுங்கா வந்துடு" அவளது எடுப்பான மூக்கு அவன் கண்ணை உறுத்தியது.



அவன் கோகிலாவை தான் அழைக்கிறான் என தெரிந்ததும், "கண்ணு, ஏன் அங்கனவே நிக்குற! உன் மாமன் தான் இவன்!! பயப்படாம வா" என்றார் சிவகாமி.



அப்போதும் அவள் இன்பன் நின்ற தோரணையை கண்டு தயக்கத்தோடவே வர கோகிலாவை பிடித்து அருகே நிற்க வைத்தார் சிவகாமி.

அவளை இன்பனுக்கு அறிமுகப்படுத்தும் முன்னே, "என்னைய பார்த்தா எப்டிடி இருக்கு உனக்கு!?" என கத்தினான் அவன்.

அவன் யாரிடமும் மரியாதை இன்றி இப்படி பேசி கண்டிராத தங்கம் அதிர்ந்து, "என்ன இன்பா? மரியாதையா பேசு" என்று அதட்டியதை அவன் கண்டுக்கொள்ளவில்லை.



"சொல்லுடி மூக்கி, நான் பாக்க அங்கிள் மாறியா இருக்கேன்!? மேடம் மட்டும் சிலுக்குக்கு சித்தி பொண்ணுன்னு நினைப்பு!" என பொரிய கோகிலாவுக்கு 'மூக்கி' என சொன்னதில் மூக்கின் மேல் கோவம் ஏறியது.



"ஹெலோ, சும்மா யாரும் எகிற வேணாம் என்கிட்ட! பாக்க அங்கிள் மாறி இருந்தா அங்கிள்ன்னு தான் சொல்ல முடியும், மைண்ட் இட்" மாடியில் இருந்து பார்க்கும்போது இருட்டில் வேட்டி கட்டிய உருவத்தை வேலையாள் என எண்ணி அவள் அங்கிள் என சொல்லிவிட்டாள். ஆனால் நேருக்கு நேர் பார்த்ததும் தான் அவன் கோவம் கொஞ்சம் அதிகமாய் இருந்தாலும் அதில் நியாயம் இருப்பதாய் தோன்ற அவள் அமைதி காக்க, அவன் எல்லை தாண்டி சென்றதும் இவளும் பொரிய தொடங்கினாள்.



"அப்போ நான் உன்னை ஆன்ட்டின்னு சொல்லவா!? ஆனா நீ பாட்டி மாதிரில்ல இருக்க, ஹம்ம்ம்" விடாது எகிறினான்.

அவளும் மேற்கொண்டு பேச போக, சிவகாமி, "இன்பா, கொஞ்சம் கம்முன்னு இரு!! இவன் பேரின்பன், என்னோட மொதோ பேரன்!!" கோகிலாவிடம் சொன்னவர், "இது உன் சின்னத்தை மக கோகிலாடா, மதியம் போல வந்தாவ!" என்று இன்பனிடம் அறிமுகம் செய்ய, அதுவரை சிலிர்த்துக்கொண்டு நின்றவன், சட்டென அமைதியாகி ஒன்றும் பேசாமல் விறுவிறுவென தன்னறைக்குள் புகுந்துக்கொண்டான்.



தன்னை அவமதித்து செல்லும் இன்பனை முகத்தை சுளித்து பார்த்த கோகிலா, "மேனர்ஸ் தெரியாதவனா இருக்கான்... காட்டான்!!" என வாய்விட்டே கடுப்படிக்க, "அவன் ரொம்ப நல்லவன் கண்ணு! இன்னைக்கு எதோ கோவம் போல... விடு" என்று ஆறுதல் சொன்னார் சிவகாமி.



செல்லம் வருத்தமாய், “நீ கூட என்னை மன்னிச்சுட்டக்கா, ஆனா இன்னும் அவனுக்கு எம்மேல இருக்க கோவம் போகலல்ல?” என்றிட, “என்மேல இருக்க பாசத்துல இப்படி நடந்துக்குறான் செல்லம்! கொஞ்ச நாள் போயிட்டா சரியாகிடும்! நீ கண்டுக்காம விடு!!” என்ற தங்கம் தன் தங்கையோடு உள்ளே சென்றுவிட, உர்ரென நின்றிருந்த தன் பேத்தியிடம், “அவனுக்கு கோவம் தான் பொசுக்கு பொசுக்கு வரும்! அதுவும் உங்கம்மா செஞ்ச காரியத்துக்கு தான் மண்டைக்கு மேல கோவப்படுவான்! அதுதாண்டி அவன் சொக்க தங்கம்! தாயில்லாத பய! நீ கோவிக்காத அவன்கிட்ட! சுமூகமா பேசப்பாரு! ஆரம்பத்துல முரண்டு பிடிச்சாலும், சட்டுன்னு ஒட்டிக்குவான்!!” என்று மூத்த பேரனுக்கு ஆதரவாய் குரல் கொடுத்து நகர்ந்தார்.



‘ஹும்! இவன்கிட்ட நம்மபோய் பேசணுமா!?’ என வீம்பாய் நினைத்த கோகிலா, அடுத்த நிமிடமே, ‘நம்ம அங்கிள்ன்னு சொன்னதும் தப்பு தானே? இதே அவர் என்னை ஆன்ட்டின்னு சொல்லிருந்தா எவ்ளோ கடுப்பாகிருப்பேன்!?’ தனக்கு தானே கேட்டுக்கொண்டு இறுதியாய், ‘இன்பனிடம் பேசுவது’ என்ற முடிவுக்கு வந்தாள்.



மாடியேறி சென்றவள் அவன் அறை எது என தேடினாள். மொத்தம் இருந்த ஐந்து அறைகளில் இறந்து அறைகள் வெளிபக்கமாய் பூட்டியிருக்க, மீதமிருந்த மூன்றில் ஒன்று இவளுக்கென தரப்பட்டது.

‘அப்போ இந்த ரெண்டுல ஏதோ ஒரு ரூம் தான் அவருதா?’ என எண்ணிக்கொண்டே ‘இங்கி பிங்கி பாங்கி’ போட்டாள். அது இடபக்கமாய் இருந்த அறையை காட்டவும், அதன் அருகே சென்று, “ஹெலோ! எக்ஸ்யூஸ் மீ! மே ஐ கம்இன்” என கேட்க பதிலே இல்லை. லேசாக கதவை தட்டலாம் என கைவைத்தால், அது பிரியாணி குண்டான் போல அகல திறந்து அவளுக்கு வழியை விட்டது.



உள்ளே நுழைந்ததும் அவள் கண்ணில் விசித்திரமாய் பட்டது அந்த வெற்று அறை. கட்டில் மெத்தை கூட இல்லாது காலியாக இருக்க, மூலையில் ஒரு பாய் மட்டும் நிறுத்திவைக்கப்பட்டிருந்தது. அதன் அருகே இருந்த திறந்த அலமாரியில் ஒரு தலையணையும் போர்வையும் இருக்க, அதைதாண்டி ஒரே ஒரு மர நாற்காலி அதன் மீது மண்பானை, அவ்வளவே அவன் அறையில் இருந்த பொருட்கள். சுற்றிலும் வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தவள் புழுக்கமாய் இருக்க, மின்விசிறியை இயக்கினாள். அது எங்கே கழண்டு விழுந்துவிடுமோ என அஞ்சுமளவு பெரும்சத்ததோடு சுற்ற தொடங்கியது. வினோத உலகுக்குள் வந்ததை போல அந்த சிறு அறையை சுற்றிலும் நோட்டமிட்டுக்கொண்டிருந்தாள்.



திடீரென அறையோடு இருந்த பாத்ரூம் கதவு திறக்கப்பட, கோகிலா சுதாரித்து திரும்பும்முன் வெளியே வந்திருந்தான் பேரின்பன். இடையில் ஒரு துண்டை மட்டுமே கட்டி ஈரம் பதிந்த வெற்றுடலோடு நிற்பவனை கண்டதும், “சாரி...சாரி...சாரி...சாரி” என முகத்தை மூடிக்கொண்டாள் அவள். முதல்முறையாய் அந்நிய ஆடவன் ஒருவனை இந்நிலையில் காண்பது அவளுக்கு சங்கோஜமாய் இருக்க, அவனுக்கு அதெல்லாம் இல்லை போலும்.



கைலியை எடுத்து தலைவலி மாட்டியவன், கைவைத்த பனியன் ஒன்றை அணிந்துக்கொண்டு, “கண்ணை திற! எல்லாம் போட்டாச்சு!” என்றான் சாதாரணமாய்.



ஒரு கண்ணால் அதை உறுதிசெய்த பின்னே, முகத்தில் இருந்து கையை விலக்கினாள் கோகிலா. தரையில் கால் நீட்டி சுவரில் சாய்ந்து அமர்ந்திருந்தவன் அவளை தான் பார்த்துக்கொண்டிருந்தான். அவன் பார்வையில் கொஞ்சம் நெளிந்த கோகிலா, “எதுக்கு இப்படி பார்க்குறீங்க?” என்றாள்.



“நான் பார்க்கனும்ன்னு தானே இங்க வந்து நிக்குற? வேற என்ன செய்யணும் நான்?” அவன் பேசும் பார்வையும் அவளுக்கு கோவத்தை தூண்ட, “நீங்க பாக்கணும்ன்னு ஒன்னும் நான் வந்து நிக்கல! அங்கிள்ன்னு சரியா பார்க்காம சொல்லிட்டேன்! அதான் சாரி கேட்க வந்தேன்” என சொல்ல, “மன்னிச்சுட்டேன்” என் பட்டென சொன்னான் இன்பன்.



வெளியே அவன் குதித்ததென்ன! இப்போது வாயில் லெக்பீஸ் வைத்தால் கூட கடிக்க தெரியாது என்ற ரேஞ்சுக்கு சாந்த ஸ்வரூபி கெட்அப் போடுவதென்ன என விழிவிரித்தாள் கோகிலா. இப்போதும் அவன் விழியகற்றாது அவளையே தான் பார்த்துக்கொண்டிருந்தான்.

முதல் நாள் தன்னருகே நின்று ஆளையே விழுங்கும்படி பார்த்த கிஷோரின் நினைவு அவளை கேட்காமலே மனதில் தோன்றியது. அந்த பார்வைக்கும் இதற்கும் தான் எத்தனை வித்தியாசம் என நினைத்தாள். அவன் மீது ஏனோ ஒரு நல்லெண்ணம் உருவாக, “நிக்குறேனே, உட்கார சொல்ல கூடாதா?” என்றாள் பேச்சை தொடர.



அவனும் மறுக்கவில்லை. “அந்த பானையை இறக்கி வச்சுட்டு சேர்ல உட்காரு” என்றான். அவன் சொன்னதை செய்யாது, “நான் தரையிலேயே உட்காந்துக்குறேன்” என்று அவள் அமர போக, ஒருக்களித்து இருந்த அறையின் கதவை காட்டி, “கதவை நல்லா திறந்துவச்சுட்டு வந்து உட்காரு!” என்றான்.

“ஏன்?” என கேட்டாலும் அவன் சொன்னதை செய்தாள். அவன் பதில் சொல்லவில்லை.



“வெளில அவ்ளோ பேசுனீங்க? இப்போ வார்த்தைய எண்ணி எண்ணி பேசுறீங்களே?” இயல்பாய் பேச நினைத்து ஆரம்பித்தாள்.



“யாரோன்னு நினச்சு பேசிட்டேன்!!”



“யாரோன்னு நினைச்சு பேசுவீங்க, ஆனா அத்தை பொண்ணா இருந்தா பேசமாட்டீங்க! அப்படியா?” அவனை சீண்ட முயன்றாள். அவன் மறுமொழி சொல்லாது இருக்கவே, “என் அம்மா மேல அவ்ளோ கோவமா?” என்றாள் கோகிலா. அவளது இக்கேள்வியை அவன் எதிர்ப்பார்க்கவில்லை என்பது முகத்திலேயே தெரிய, மௌனமாய் இருப்பவனை, “கோவம் பெரியவங்க மேல தானே? நான் என்ன செஞ்சேன்?” என்றாள் அடுத்ததாய்.



அதுவரை அவள் முகம் பார்த்திருந்தவன், இப்போது வேறெங்கோ முகத்தை திருப்பிக்கொள்ள, “லெட்ஸ் பி பிரண்ட்ஸ் மாமா! நீங்க அவங்க மேல கோவமா இருக்குறது நியாயம் தான்! அவங்களுக்காக என்னைக்கும் உங்ககிட்ட நான் சப்போர்ட்டுக்கு வர மாட்டேன்! பட், நான் என்ன செஞ்சேன்? என்கிட்ட நல்லா பேசலாமே?” என்றாள் வேண்டுதலாய்.

அவள் சொல்வது சரியாய் பட்டாலும் தயங்கினான் இன்பன்.



“நாங்க காலைல இங்க வந்தோம்! வந்ததுல இருந்தே எல்லாரும் ‘ஓஓஓ’ன்னு அழுது, பழங்கதையை பேசி பேசி, மன்னிப்பு படலம் நடத்தி ஒரு ப்ளாக் அண்ட் வொயிட் சினிமா பார்த்த மாறி போர் அடிச்சுட்டாங்க! எனக்குன்னு இங்க கம்பெனி யாருமே இல்ல!” என்றவளிடம், “காண்டீபன் இருப்பானே?” என்றான் இன்பன்.



அவன் சொன்னதும், “யார்ர்ர்ரு? அந்த பிடிச்சு வச்ச பிள்ளையாரா? அம்மாடியோ!! மூஞ்சியா அது? எப்படிதான் மனுஷன் சிரிக்காமையே இருக்காரோ, துணிக்கடைல நிக்குற பொம்மை மாறி?” என்று அங்கலாய்த்த கோகிலாவை கண்டு சிரிப்பை அவனால் கட்டுப்படுத்த முடியவில்லை.

அவன் சிரிக்கையில் கண்களும் சேர்ந்து சிரித்து அவன் வசீகரத்தை கூட்ட, தன்னை மறந்து சில நொடிகளை அவனை ரசித்தாள் கோகிலா.



“இப்போ என்கிட்ட பேசுரமாறியே அவன்கிட்டயும் பேசு! நல்லா பேசுவான்!!” என்ற இன்பனிடம், “அவர் பேசுறது இருக்கட்டும், நீங்க பேசுவீங்கலான்னு மட்டும் சொல்லுங்க!” என்றாள் விடாமல்.



சிறிது யோசித்தவன், “எனக்கு அத்தை பொண்ணா இல்லாம, என் வீட்டு விருந்தாளியா மட்டும் நடந்துக்கிட்டா நான் பேசுவேன்!!” என்றான். ‘உன் அம்மா அப்பாவை வைத்து என்னிடம் வராதே!’ என அவன் மறைமுகமாய் சொன்னது அவளுக்கும் புரியாமல் இல்லை.



“டன்! நவ் லெட்ஸ் பி பிரண்ட்ஸ்!!” என கோகிலா நட்பாய் கரம் நீட்ட, அவனும் அவள் கரம் பற்றி குலுக்கி, “வீட்ல ஒரு வேலையும் செய்ய மாட்டியா?” என்றான் பஞ்சுபொதி போல இருக்கும் அவள் உள்ளங்கையின் இதம் உணர்ந்து!!



“யார் சொன்னா? என் ட்ரெஸ்ஸ நானே வாஷிங் மெஷின்ல போடுவேன்! நான் சாப்பிட்ட பிளேட்ட நானே வாஷ் பண்ணிடுவேன்! எங்க வீட்டு பப்பிய நான் தான் வாக்கிங் கூட்டிட்டு போவேன்!!” அவள் செய்யும் மிகப்பெரும் வேலைகளை ஒன்று இரண்டு மூன்று என வரிசைப்படுத்தி பாடிவிட்டு, “நீங்க என்ன வேலை செய்யுறீங்க?” என்றாள் இன்பனிடம்.



“மாடு மேய்க்குறேன்ன்!!” என்றவனை, “வாட்...!!? ரியலி?” என்றாள் நம்பமாட்டாமல்.

“ஆமா! நீ நாய் மேய்க்குறமாறி நான் மாடு மேய்க்குறேன்” என்று சொல்லும்போதே இதழ்கடையில் தோன்றிய குறுநகையை உதடு கடித்து அவன் அடக்க பிரயத்தனப்படுவது அவள் பார்வையில் விழுந்துவிட, “யூ!! சீட்!!! நான் உண்மைன்னே நம்பிட்டேன்!!” என்று சிரித்தபடி, “உண்மைய சொல்லுங்க, என்ன வேலை பண்றீங்க?” என்றாள்.



“அரிசி மில்லுல மூட்டை தூக்குறேன்!!”

“உப்ப்!!! அப்போ உண்மைய சொல்ல மாட்டீங்க?” இதுவும் பொய்தான் என்று அவனை கேட்டாள் கோகிலா.

“அட, நிஜமா நான் மூட்டை தான் தூக்குறேன்!!”

கோகிலா, “சரி, என்ன படிச்சுருக்கீங்க?”

அவன், “எம்.ஏ பில்லோசபி” என்றதும் சத்தம் போட்டு சிரித்தவள், “எம்.ஏ எம்.ஏ பிலோசபி பிலோசபி” என்று கவுண்டமணி போல சொல்லி சிரித்தாள். இது படிக்கும் காலத்தில் இருந்தே எப்போதும் இவனுக்கு நடப்பது தான் என்பதால் அவனும் மென்னகையோடு அவள் பார்க்க,

“நம்பிட்டேன், நம்பிட்டேன்!! சரி நான் என்ன செய்யுறேன், என்ன படிச்சுருக்கேன்? இதெல்லாம் கேக்கலாம்ல?” அவளே எடுத்து கொடுத்தாள்.



“எதுக்கு கேட்டுகிட்டு, நீயே சொல்லிடு வரிசையா”



“ஹான்! நான் எம்.பி.ஏ முடிச்சுட்டு, எங்கப்பா கார்மெண்ட்ஸ் கம்பனில அச்சிஸ்டன்ட் மேனேஜரா இருக்கேன்! இப்போ என் பாட்டி வீட்டுக்கு லீவுக்கு வந்துருக்கேன்!!” என்று சிரித்தாள்.

“நல்லது!” என ஒரே வார்த்தையில் அவன் முடித்துக்கொள்ள, “உங்களுக்கு பேச்சே வராதா!?” என்றாள் சந்தேகமாய்.



“பேசுவேன்! கொஞ்சம் பழகனும்!” என்று அவன் குணத்தை மறையாமல் சொன்னான் இன்பன்.



“ஓகே மாம்ஸ்!! சாப்பிட வாங்க! சேர்ந்தே சாப்பிடுவோம்!!” என அவன் வீட்டில் அவன் உணவருந்த அவள் அழைப்பு விடுத்தாள்.



“நான் வரேன், நீ போ” அங்கே போனால் அந்த பிராடு தம்பதி இருக்குமே, நேருக்கு நேர் பார்க்க வேண்டுமே என்ற எரிச்சல் அவனுக்கு!



“நீங்க வந்தா தான் நான் சாப்புடுவேன்! சோ சீக்கிரமா வாங்க” என எழுந்து சென்றுவிட்டாள் கோகிலா. அவள் வாசல் தாண்டியதும் சத்தமாய், “ஏய் மூக்கி, கதவை சாத்திட்டு போ” என்றான் இன்பன்.



அதுவரை இருந்த இலகுத்தன்மை காற்றில் டாடா காட்ட, கோவமாய் உள்ளே வந்தவள், “டோன்ட் சே மூக்கி! ஐயம் கோகிலா! யூ கேன் கால் மீ கோக்கி! ஓகே?” அடக்கப்பட்ட கோவத்தோடு சொல்ல, ஆர்ப்பாட்டமாய் சிரித்தான் இன்பன்.

அவன் சிரிப்பை புரியாது பார்த்தவள், “ஓகே கொக்கி” என்று சொன்னதும், “ஆஆஆ” என காலை உதைத்துக்கொண்டு நிற்க அவன் சிரிப்பு அகல விரிந்தது.

கோவத்தை அறையின் கதவில் காட்டிவிட்டு ‘டங்கு டங்கு’கென படியிறங்கும் கோகிலாவை கண்டு இன்னமும் சிரித்தான் இன்பன்.



கீழே சென்ற கோகிலா தன் பாட்டியின் மடியில் படுத்துக்கொள்ள, செல்லம், “என்னடி செஞ்ச இவ்ளோ நேரம்?” என்றார் தன் மகளை.

“இன்பா மாமா கூட பேசிட்டு இருந்தேன்”



“ரொம்ப திட்டிட்டானா?” செல்லம் பதற, சன்னமாய் சிரித்த அவர் மகள், “திட்டுனாராவா? ஹி இஸ் சோ ஸ்வீட் ரியலி!! நல்லா பேசுனாங்க!! இங்கிருந்து போறதுக்குள்ள அவரை என் பெஸ்ட் பிரண்ட் ஆக்கிக்காட்டுறேன் பாருங்கம்மா!” தன் மகளிடம் பேசிக்கொண்டிருக்கும் பேத்தியின் நாடி பிடித்து முத்தம் வைத்தார் சிவகாமி.



தங்கம் வந்து எல்லோரையும் சாப்பிட அழைக்க, “செல்லம் நீ உன் புருஷனை கூட்டிட்டு சாப்பிட வா! வந்ததுல இருந்து ரூம்குள்ளேயே இருக்காரு” என்றார் சிவகாமி.



“அவருக்கு எல்லார் முகத்தையும் பார்க்க சங்கடமா இருக்கும்மா, அதான்!!” செல்லம் வருந்தவே, “எத்தன நாளைக்கு சங்கடப்பட முடியும்! வர சொல்லு!!” என்றுவிட்டார் சிவகாமி முடிவாய்.



தங்கள் துணிக்கடையில் இருந்து வேலை முடிந்து கடையடைத்து விட்டு வீடு திரும்பினர் ஒன்டிவீரரும் சத்தியராஜும். காலையிலேயே செல்லம் குடும்பத்தை பார்த்துவிட்டதால் இப்போது சிறு சிரிப்பு மட்டுமே ஒன்டிவீரரிடம், அதுவும் கோகிலாவை கண்டு மட்டுமே. சத்தியராஜ் கையில் ஒரு கவரை கொண்டு வந்தவர், “புது மாடல் சுடிதார், உனக்கு நல்லா இருக்கும்!!” என்று கோகிலாவிடம் நீட்ட, ஆசையாய் அதை வாங்கியவள், “ரொம்ப தேங்க்ஸ் மாமா” என்றாள்.



“நாளைக்கு நம்ம கடைக்கெல்லாம் வந்து பாரு! எது பிடிச்சுருக்கோ நீயே எடுத்துக்கோ!!” என தங்கை மகளின் மேல பாசம் வைத்து சொல்லியவர் தன்னறைக்குள் சென்றுவிட்டார். ஒன்டிவீரரும் அவர் அறைக்கு செல்ல, “அப்பாவாது ரெண்டு வார்த்தை பேசுனாரு காலைல! அண்ணன் எதுவுமே பேசலம்மா!” என்று குறைபடிக்க, “ஒரே நாள்ல எல்லாம் நடக்கணும்ன்னு பிடிவாதம் பிடிக்காத செல்லம்! சின்னதுலையே உன்னை திருத்திருக்கணும்” என்று காலம் கடந்து வருந்தினார் சிவகாமி.



“நீங்க பண்ணுன வேலைக்கு எல்லாரும் என்கிட்ட நல்லமாறி பேசுறதே பெருசு!!” புது உடையை தன் மேல் வைத்து பார்த்தபடி சொன்னாள் கோகிலா.



தங்கம், “பேசுனதெல்லாம் போதும், சாப்பாடு ஆறுது! வந்து சாப்பிடுங்க” என்று மீண்டும் அழைக்கவே, உணவறையில் ஆஜராகினர் அனைவரும். ஷங்கர் தன் தட்டை தாண்டி ஒருவர் முகத்தையும் பார்க்கவில்லை. பார்க்கவே அவருக்கு கூச்சமாய் இருந்தது.



சத்தியராஜ் யாரிடமும் பேசவில்லை என்றாலும், யாரையும் ஒதுக்கவில்லை. காண்டீபன் காலையில் வந்தவர்களை கண்டு தலையசைத்ததோடு சரி, நிற்காமல் வெளியேறிவிட்டான். இரவு நேரமாகியும் இன்னமும் வீடு வந்தபாடியில்லை.



ஒன்டிவீரர், “காண்டீபன் என்ன செய்யுறான் இன்னமும்? ஆளே காணோம்!?” என கேட்க, சத்தியராஜும் அதே யோசனையில் இருந்ததால், “தெரியலப்பா! போன் போட்டா எடுக்கல” என்றார் மீண்டும் அவனுக்கு முயன்றபடி.



தங்கம் மீண்டும், “கோக்கி கண்ணு, சாப்பிட வாம்மா!!” என்றார் கண்ணாடி முன் நின்றவளை.

“நான் மாமா கூட சாப்பிட்டுக்குறேன் சித்தி!!” என்றவளை, “காண்டீபன் வர லேட்டாகுமே ராஜாத்தி” என்றார் ஒண்டிவீரர்.



“அவர் வரப்போ வரட்டும், நான் இன்பா மாமாகூட சாப்பிட்டுக்குறேன்” என்ற கோகிலா மாடிப்படியருகே சென்று, “மாமாஆஆஆ, எனக்கு பசிக்குது, சாப்பிட வாங்க” என உரக்க கத்தினாள். தன் அறையில் படுத்திருந்தவன் விலுக்கென எழுந்தான்.

‘இவ சும்மா சொல்றான்னு பார்த்தா ஊரக்கூடி ஏலம் போடுறாளே!? அப்பாக்கு தெரிஞ்சா காதுல புகையே வந்துடும்’ என எண்ணியவன் அவள் மறுமுறை கத்தியபோது, “வந்துட்டேன்” என வாரிசுருட்டிக்கொண்டு அவசரமாய் கீழே சென்றான்.



அவன் எண்ணியதை போலவே சத்தியராஜன் உணவை அளந்தபடி உக்கிரமாய் இருந்தார். ‘போச்சுடா’ என நினைத்துக்கொண்டே ஒரு சேரை இழுத்து போட்டு அவன் அமர, அவன் அருகே இருந்த சேரில் அமர்ந்துக்கொண்டாள் கோகிலா.



கோகிலா, “சித்தி, ரவா கேசரி பண்ணிருக்காங்க! அங்கிளுக்கு சுகர் இல்லன்னா ஸ்வீட் வைக்கவா?” என்று இன்பனை அனைவர் முன்னும் உரிமையாய் கலாய்க்க, அவனும் அங்கிள் என்றவுடன், “ஏய், கொக்கிமூக்கி ஒழுங்கா திங்குற வேலையை மட்டும் பாரு!!” என்றுவிட்டான் எல்லோர்முன்னும். இவர்களின் ஒட்டுதலான விளையாட்டு பேச்சு எல்லோர் முகத்திலும் கீற்று புன்னகையை அரும்புவிக்க, சத்தியராஜ் மட்டும் பாதி சாப்பாட்டில் எழுந்துவிட்டார்.



காலையில் தங்கை மகளை பார்த்ததுமே அவர் மனதில் தன் மகனுக்கு பேசி முடிக்க வேண்டும் என்ற எண்ணம் உதித்திருந்தது. இப்போது அவள் காண்டீபனை தவிர்த்து இன்பனிடம் ஒட்டுதலாய் இருப்பதை கண்டு, இன்பன் மேல் ஆத்திரம் மூண்டது. செல்லம் இன்னும் தன் மகள் நிச்சயம் ஆனவள் என்பதை தெரிவிக்கவில்லை. சொல்லாமல் செய்துவிட்டதாக மனத்தாங்கல் வருமே என்ற பயம் அவருக்கு. உறவு சேரும்போது விரிசல் வேண்டாம் என்று எண்ணினார்.

தந்தையின் போக்கை கவனித்த இன்பன் அதற்க்கு மேல் கோகிலா வாயாடினாலும் பதில்வாய் கொடுக்காமல் அமைதியாக உண்டுக்கொண்டிருந்தான். அப்போது வேலையாள் ஒருவன், “ஐயா...!!” என அழைத்துக்கொண்டே உள்ளே வர, சத்தியராஜன், “என்ன மாயாண்டி, இந்நேரத்துல வந்துருக்க?” என்றார் கேள்வியாய். அவர்கள் அரிசி மில்லின் இரவுகாப்பாளன் அவன்.



“சின்னையா! இப்போதான் போனு வந்துச்சு! பெங்களூரு வண்டி வந்துகிட்டு இருக்காம்!! லோடு அவங்களே இறக்கி குடுக்குறாங்கலாம்!” என்று சொல்ல, “இந்நேரத்துல எதுக்கு வருது! அடுத்த முறை இதுமாறி நேரம் கெட்ட நேரத்துல வந்தா அவங்ககிட்ட தொழில் வச்சுக்க முடியாதுன்னு சொல்லிடனும்!” என்றவர், “சரிதானேப்பா?” என தன் தந்தையை கேட்டார்.



உண்டுக்கொண்டிருந்த ஒண்டிவீரரும், “சரிதான் சத்தியா!! இந்தமுறை விட்டு தள்ளு” என்றார்.



மாயாண்டி, “மில்லு சாவி குடுத்தீயன்னா, லோடு இறக்கிடலாம் சின்னையா”

சத்தியராஜன், “அது...!!” என சொல்ல வந்த நேரம், காண்டீபன் சற்றே தளர்ந்த நடையோடு வீட்டிற்க்குள் வர, “இதோ காண்டீபனே வந்துட்டான், அவன்கிட்ட தானே சாவி இருக்கும்!!” என்றவர், ஓய்ந்து போன அவன் தோற்றத்தை கவனியாது, “காண்டீபா, சாவி குடுடா!” என்றார்.



“எ...ன்ன.. சாவி?” வார்த்தை தடுமாறியது அவனுக்கு.



“நம்ம மில்லு சாவி?!” என சத்தியராஜன் அழுத்தி கேட்க, அதுவரை நடப்பதை கவனியாமல் இருந்த இன்பனுக்குள் சுருக்கென்றது. ‘ஸ்ஸ்ஸ்’ என அவன் முன்நெற்றியில் அடித்துக்கொள்ள, ‘சாவி சோளக்காட்டுல மறந்துட்டு வந்துட்டேனே!!’ என தவித்து போனான் இன்பன். அதற்கு மேல் உணவு அவன் தொண்டையை தாண்டவில்லை.



“சா...வி!! எங்க..?” தன் பாக்கெட்டை தொட்டு தடவி தேடிய காண்டீபன், “இல்..லியே” என்றான் வெறும்கையை விரித்துக்காட்டி. அப்போதுதான் மகனின் தடுமாற்றம் புரிய, “மாயாண்டி நீ மில்லுக்கு போ! லோடு வெளில இறக்கி வை! காலைல உள்ள வச்சுக்கலாம்” என்று சொல்லி அவனை அனுப்பிவிட்டார்.



அவன் சென்றதும், “என்ன காண்டீபா செய்யுது? ஏன் ஒருமாறி இருக்க?” என்றார் அருகே சென்று. கிட்ட சென்றதுமே அவன் மீது வந்த வாடை அவன் மது அருந்தியிருப்பதை உணர்ந்த, திகைத்து போனார் ஓர் தகப்பனாய். இன்று வரை தன் இளைய மகனுக்கு எந்தவித கெட்ட சகவாசமும் இல்லையென மார்தட்டிக்கொண்டிருந்தவருக்கு மகனை இந்நிலையில் காணும்போது கண்கள் விரிந்தது.

‘நீயாடா காண்டீபா?’ என்ற கேள்வி விழியில் தேங்க, “சாவி எங்க?” என்றார் மீண்டும். குடித்த இடத்தில் தவறவிட்டிருப்பானோ என்ற ஐயம்!!



“அ..து..! எங்க..யோ.. காணோம்!” அருகே நின்ற சத்தியராஜனை தவிர வேறு யாருக்கும் அவன் நிலை தெரியவில்லை.



“காண்டீபா!!!! சாவி எங்கடா!!?” இம்முறை அவனிரு தோள்களையும் பற்றி உலுக்கி அவர் கேட்க, அனைவர் கவனமும் வாசலுக்கு செல்ல, பொறுக்கமாட்டாமல் தன் இருக்கையில் இருந்து எழுந்துவிட்டான் பேரின்பன்.



“சாவி என்கிட்டே இருக்கு!!!” அவன் குரலில் திகைத்து திரும்பினர் எல்லோரும், புதுவரவுகளை தவிர!!

காண்டீபனை விட்டு இன்பனின் அருகே வேகவேகமாய் வந்த சத்தியராஜன், என்ன ஏதென்று கூட விசாரியாது, அவன் சட்டையை கொத்தாக பிடித்து வெளியே இழுத்தபடி, “எதுக்காகடா சாவியை திருடுன? திருட்டு நாயே! சொல்லு” என ஆக்ரோஷமாய் கத்த, இன்பனை அவரிடம் இருந்து பிரிக்க போராடினர் மற்றவர்.



“நான் திருடல!!” என்ற இன்பனின் குரல் அங்கே எடுபடவில்லை.



“அம்மாவாசை ராகுகாலதுல பொறந்த கழிசடை இன்னும் திருட்டு வேலை மட்டும் தான் செய்யலன்னு நினச்சேன்! இன்னைக்கு அதையும் செஞ்சுட்டல!” என்றவர் யாரும் சற்றும் எதிர்பார்க்காதபடி இன்பனின் கன்னத்தில் ஓங்கி அறைந்திருந்தார்.

-தொடரும்...
 
Top