Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோகுலத்தில் ராமன் -08

Advertisement

பிரியா மோகன்

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம் எட்டு:

அதிகாலை முகூர்த்தத்தில் சொந்தபந்தம் முன்னிலையில் சுசீலாவின் கழுத்தில் மங்கலநாணை பூட்டி தன் மனைவியாக்கியிருந்தான் காண்டீபன். அன்று இறுதியாய் இருவரும் வாக்குவாதம் செய்ததோடு சரி, அதன் பின்னே இருவரும் பேசிக்கொள்ள முயற்சிக்கூட எடுக்கவில்லை.



தான் இறங்கி சென்று பேசுவதா என்ற வீம்பு அவனுக்கு...! இவனிடம் எல்லாம் பேச வேண்டுமா? என்ற சலிப்பு அவளுக்கு...! நாட்கள் இப்படியே ஓடி முகூர்த்த நாளும் வந்து, திருமணமும் இதோ முடிந்தே விட்டது.



ஷங்கர் செல்லத்தை அழைக்க வேண்டுமா என ஒண்டிவீரர் கோகிலாவிடம் ஒப்புதல் கேட்க, ‘அழைப்பதில் எங்களுக்கு விருப்பம் இல்லை’ என்ற அவரின் மறைபொருளை உணர்ந்தவள், “அவங்களை அழைக்கலைன்னாலும் எனக்கு எந்த வருத்தமும் இருக்காது” என்று அவர் வேண்டிய பதிலை கொடுத்திருந்தாள்.



வீட்டோடு நடந்த பேரின்பன் கோகிலாவின் திருமணமும் இவர்கள் விழாவில் வெளிப்படுத்தப்பட, வைத்த விருந்தோ இரண்டு திருமணங்களுக்கும் பொதுவாய் அமைந்து போனது. கோவிலில் திருமணம் முடிந்ததும் வீட்டிற்க்கு அழைத்துவரப்பட்டனர் தம்பதியர். தங்கம் வீட்டோடு அடைந்துக்கொள்ள, சிவகாமி அனைத்திற்கும் கோகிலாவையே முன்னிறுத்தினார்.



ஆரத்தி எடுக்க, பால்பழம் கொடுக்க, வந்தவர்களை கவனிக்க என அனைத்திற்கும் ‘கோக்கிமா! கோக்கிமா’ என ஏலம் போட, சுசீலாவுக்கு அவளை பார்க்கக்கூட பிரியமில்லை. தான் இருந்திருக்க வேண்டிய இடம் என்ற எண்ணமே அவள் முகத்தை கடுமையாய் காட்டியது. புது பெண்ணுக்குரிய நாணமோ, அசதியோ மிகாது கடுமையும் வெறுப்பும் முகத்தில் தெரிய, “எதுக்கு மூஞ்சியை இப்படி வச்சுருக்க?” என கேட்டே விட்டான் காண்டீபன்.



இன்பனுக்கு கால் தரையில் படவில்லை. ஒரே தம்பியின் திருமணத்தில் துள்ளி ஆடிக்கொண்டிருந்தான். யாரும் சொல்லாமலே வேலைகளை இழுத்துப்போட்டுக்கொண்டு செய்ய ஒண்டிவீரர் கூட, “ரொம்ப ஆடாத! மறுபடி தையல் போடுறாப்பல ஆகிடும்!!” என்றார் கிண்டலாய்.



இன்பனுக்கு அடிப்பட்டது தெரிந்து வந்த விருந்தில் ஏறக்குறைய அனைவரும் அவனிடம் சென்று குசலம் விசாரிக்க, சிரித்தமுகமாய் பதில் சொல்லிக்கொண்டிருந்தான் பேரின்பன். சத்தியராஜனுக்கு தான் மனது சமன்ப்படவில்லை. காண்டீபனுக்கு அவசர திருமணம் செய்யும் நிலை இன்பனால் தானே வந்தது? என அதற்கும் அவனையே குற்றவாளியாக்கி குமைந்துக்கொண்டிருந்தார்.



மாலை சாய, மறுவீடு சம்பிரதாயமும் முடிய, விருந்தினர்கள் கிளம்பியதும், தலைராத்திரிக்கான முகூர்த்த நேரம் விசாரிக்கப்பட்டது.



கீழே உள்ள அறையில் சுசீலாவுக்கு மிதமான அலங்காரங்கள் நடைபெற, கைநிறைய மல்லிகையோடு வந்தாள் கோகிலா.

“சுசீ, இதை வச்சுக்கோ!!” என்ற கோகிலா, “நானே வச்சுவிடவா?” என்றாள் ஆசையாய். கொழுந்தன் என்ற உறவைத்தாண்டி தன் நண்பனுக்கு அவனுக்கு பிடித்த வாழ்க்கை கிடைத்துவிட்ட உவகை அவள் வதனத்தில் சோபையை கூட்டிட, வெறுப்புமிழும் நயனங்களில் அவளை நோக்கினாள் சுசீலா.



பதில் வராததால் தானே சுசியின் சிகையில் மலர் வைக்கப்போக, வெடுக்கென தட்டிவிட்டாள் அவள் கரத்தை. அதிர்ந்த கோகிலா, “பிடிக்கலையா?” என்றாள்.



அறையில் இருவர் மட்டுமே இருக்க, ஒட்டுமொத்த கோவத்தையும் அவள் மீது கொட்ட தயாரானாள் சுசீலா.



“உன்னைத்தான் கேக்குறேன், மல்லிப்பூ பிடிக்கலையா? வேறக் கொண்டு வரவா?”



அவள் கரிசனத்தில் இளப்பமாய் உதடு வளைத்த சுசீலா, “புருஷனையே எனக்கு பிடிச்சமாறி குடுக்கல! இப்போ இந்த பூ ஒண்ணுதான் கேடா?” என்றாள் வெடுக்கென!!



அவள் பேச்சில் திகைத்த கோகிலா அறைவாயிலை தான் நோட்டமிட்டாள். நிஜம்புரியா இவள் பேச்சு ஒருவர் செவியையும் எட்டிவிடக்கூடாதே என்ற பதைப்பு.



“காண்டீபன் ரொம்ப நல்லவன் சுசீ! அவனைவிட உனக்கு நல்ல கணவன் கிடைக்க முடியாது” நண்பனுக்காக கோகிலா பேச, “அப்போ நீயே அந்த காண்டாமிருகத்தை கட்டிருக்க வேண்டியது தானே? எனக்கு இன்பா மாமா கிடைச்சுருப்பாருல?” என்ற அவளது அடுத்த கேள்வியில் விக்கித்து போனாள் கோகிலா.



ஆத்திரத்தில் அறிவிழந்து பேசும் சிறுபெண்ணிடம் நானும் சரிக்குசரி வாய்க்கொடுக்கக்கூடாது என தன்னையே சமன் செய்தவள், “உனக்கு எது சரி, எது நல்லதுன்னு கொஞ்ச நாள்ல புரியும் சுசீ! இப்போ பூவை வச்சுக்கிட்டு தயாராகு” மேற்கொண்டு தான் அங்கே நின்றால் பேச்சு வளரும் என உணர்ந்தவள் அறையை விட்டு வெளியேறி விட்டாள்.



ஏதேதோ பேசிவிட வேண்டும் என கொதிநிலையில் நின்றவளுக்கு, பிடிக்கொடுக்காது அவள் நழுவியதும், “ச்சை!!” என தலையில் அடித்துக்கொண்டாள். மொட்டு மலர்ந்த மல்லிகை அவளை கண்டு எகத்தாளமாய் சிரிப்பது போல தோன்றியது.



மிதமான பூஅலங்காரத்தோடு பளிச்சென இருந்தது காண்டீபனின் பள்ளியறை. மனதுக்குள் ஆயிரமாயிரம் பட்டாம்பூச்சிகள் பறக்க வேண்டும்!! அவனுக்குள்ளோ ‘அவக்கிட்ட எப்படி நம்ம லவ்வ சொல்றது?’ என குழப்பமே குடைந்துக்கொண்டிருந்தது.



நேரம் மிதந்து போக, சன்னமாக கேட்டது கதவு திறக்கப்படும் சத்தம். திரும்பிப்பார்க்காமலே சுசீலாவின் வருகையை உணர்ந்தவன், முகத்தில் தன் பதட்டத்தை காட்டாது, எப்போதும் போல ‘உர்ர்ர்’ரென வைத்துக்கொண்டான்.



வந்தவள் கதவோரமே நிற்க, “உள்ள வான்னு வெத்தலை பாக்கு வச்சு அழைச்சா தான் வருவியோ?” என்றான். என்ன முயன்றும் குரல் இளகவில்லை அவனுக்கு.



மௌனமாய் உள்ளே வந்தவள் கையில் இருந்த பால் குவளையை மேசையில் வைத்துவிட்டு நின்றாள். அவளையே பார்த்தவன், “ம்ம்ம்!!” என்றான்.



‘என்ன?’ என்பது போல அவள் நிமிர, தன் வேட்டியை மடித்து கட்டியவன், “ம்ம்ம்...ம்ம்ம்” என்றான் அவன் காலைக்காட்டி!!!



இப்போது “என்ன?” என்றாள் வாய்த்திறந்து.



“கால்ல விழுந்து கும்பிடனும்ன்னு யாரும் சொல்லித்தரலையா?” என்றான் வேண்டுமென்றே அவளை சீண்ட!!



சிலிர்த்துக்கொண்டவள், “சொல்லித்தரல” என்றாள் பல்லைக்கடித்தபடி!!



“நல்லது எதுவும் சொல்லித்தந்துருக்க மாட்டானுங்களே!!” என்ற காண்டீபன், “பரவால!! இப்போ என் கால்ல விழுந்து ஆசீர்வாதம் வாங்கிக்கோ” என்றான் விடாது.



சுசீலா வெளிப்படையாய் முறைக்க, “என்னடி முறைக்குற? காலைல ஊரே பாக்க நான் உன் கால்ல விழுந்தேன்ல? நாலு சுவத்துக்குள்ள என் கால்ல விழ சொன்னா முறைக்குற?” என்றான் சிரிப்பை அடக்கிக்கொண்டு!



மெட்டி அணிவித்ததை தான் சொல்கிறான் என புரிந்திட, “அப்போ நானும் உங்க கால்ல மெட்டி போட்டு விடுறேன்!! மாட்டிக்கிட்டு சுத்துறீங்களா?” என கேட்க, ‘அம்மாடியோ!’ என புருவம் உயர்த்தினான் காண்டீபன்.



“எனக்கு தூங்கனும்!” அறிவிப்பாய் சொன்னாள் சுசீலா.



“எது? தூங்குறியா?” அதிர்பவன் போல நடித்தவன், “நான் தூங்கனும்ன்னாலும் அதை நான்தான் முடிவு பண்ணனும்! நீ தூங்கனும்ன்னாலும் அதை நான்தான் முடிவு பண்ணனும்!! தெரியுமுல்ல?” என்றான் மிதப்பாய்.



“ப்ச்!” காண்டீபனை சிறிதும் பொருட்படுத்தாது சுசீலா நகர்ந்துப்போக அவள் காட்டிய அலட்சியத்தில் கோவம் சுர்ரென ஏற, தன்னைத்தாண்டி செல்பவளை ‘ஏய்...’ என கரம் பிடித்து நிறுத்தினான் காண்டீபன்.



அவனிடம் இருந்து கரத்தை விடுவிக்க அவள் திமிர, “நான் ரொம்ப சாப்ட்டா நடந்துக்கணும்ன்னு நினைக்குறேன்!! என்னை முரடனாக்கிடாத!!” என்றான் எச்சரிக்கை போல!!



காண்டீபனை கண்டால் சுசீலாவுக்கு எப்போதும் சிறு பயம் உண்டு! இப்போதும் அப்பயம் இருக்கத்தான் செய்கிறது. ஆனாலும் ஏதோ சிறு துணிச்சல். இவன் தன்னை ஒன்றும் செய்யமாட்டான் என்ற உள்ளுணர்வு, அவனிடம் முரண்டு பிடிக்க வைத்தது.



காண்டீபன் கண்ணை சுருக்கி எச்சரிக்க, இருந்த சிறு துணிச்சலும் ஓடிவிட்டது!!



கண்கள் கரித்துக்க்கொண்டு வர, எதிரில் நிற்கும் காண்டீபன் மங்கலாய் தெரிந்தான். கண்ணீர் குளமாய் நிறைய துவங்கியது.



அவள் கண்கள் கலங்குவதை கண்டதுமே காண்டீபனின் பிடி இளகிவிட்டது.



மேற்கொண்டு ஏதும் பேசாது, “போய் தூங்கு!!” என்றான். அதற்காகவே காத்திருந்தவள் போல ஓடிசென்று கட்டிலின் ஒரு மூலையில் சுருண்டுக்கொண்டாள்.



அவனுக்கு முதுகு காட்டி அவள் படுத்திருக்க, “ஹும்ம்!! இவக்கிட்ட நான் எப்போ என் லவ்வ சொல்லி.... எப்போ எல்லாம் நடந்து....!!!” மலைப்பான பெருமூச்சோடு விடிவிளக்கை வெறித்தபடி இரவை கடத்த ஆயத்தமானான் காண்டீபன்.



மாடியில் இவர்கள் ஆளுக்கு ஒரு மூலையில் உறங்குவது தெரியாது, “சின்னவனுக்கு முகூர்த்தம் பார்த்து நல்லது வச்சமாறி இந்த பெரியவனுக்கும் சீக்கிரமா பார்க்கனுங்க!” என்று ஒண்டிவீரர் காதுகடித்தார் சிவகாமி.



“மொதோ அவன் உடம்பு சுகமாகட்டும் சிவா!” என்றுவிட்டார் ஒண்டிவீரர்.



அயர்ந்து ஓய்ந்து அனைவரும் கூடத்தில் ஒன்றாய் அமர்ந்திருந்தனர். தங்கம் எல்லோருக்கும் சுக்கு தட்டி பனகற்க்கண்டு பால் கொண்டு வர, இன்பன் மட்டும் வேண்டாம் என்றுவிட்டான்.



“அப்பறம்? புது தொழில் எல்லாம் எப்படி போகுது?” என்றார் ஒண்டிவீரர்.



“தாத்தா!! உங்களுக்கு தெரியாத மாறியே கேட்குறீங்களே?!” இன்பன் சிரிக்க, “தெரிஞ்சாலும் பேரன் வாயால சொன்னா சந்தோஷம் தானேடா!!” என்றார் அவர்.



“மண்ணோட தரம் இத்தனை வருஷத்துக்கும் மோசமாகாம நல்லாதான் இருக்கான் தாத்தா! ஆனாலும், நெல்லு விளையுறதுக்கு போதிய திடம் இப்போதைக்கு இல்லாததால வாழை, கரும்பு, சோளம், கடலை இதெல்லாம் போட்டா நல்லா வரும்ன்னு சொன்னாங்க தாத்தா!!” என்றான் பூரிப்பாய்.



கேட்ட அனைவர் முகமும் மலர, “நல்லா விளைஞ்ச நிலத்தை ஒரே ராத்திரில சாம்பலா பொசுக்கி போட்ட ராசி! இவன் தொட்டு எங்க உருப்படப்போவுது!?” என கேட்கும்படி முணுமுணுத்தார் சத்தியராஜன்.



நொடியில் சுருங்கிப்போனது பூரித்திருந்த இன்பனின் முகம்!



“ஏண்டா இப்படி அபசகுனமா பேசுவ நீ?” சிவகாமி தான் பெற்றதை திட்ட, “ஆமா இல்லன்னா மட்டும் கொலைகொலையா காய்ச்சு குலுங்கிடும்!!” மேலும் சத்தியராஜன் நொடிக்க, “சத்தியா...!!” என அதட்டினார் ஒண்டிவீரர்.



அன்னையின் திட்டை விட தந்தையின் அதட்டல் வேலை செய்ய, அமைதியானார் சத்தியராஜன். பேச்சை நன்விதமாய் கொண்டு செல்லும் பொருட்டு, “எப்போப்பா எல்லாம் ஆரம்பிக்கலாம்ன்னு இருக்க?” என்றார் ஒண்டிவீரர்.



“ஜே.சி.பி வச்சு முதல்ல நிலத்தை கிளியர் பண்ணனும் தாத்தா! அதுக்கு பிறகு நல்லா உழனும்! விவசாய ஆபிஸ்ல இருந்து ஆளுங்க வந்து பார்க்குறதா சொல்லிருக்காங்க! அவங்க சொல்றாப்புல செஞ்சா விளைச்சல் எடுக்கலாம்ன்னு நம்பிக்கை இருக்கு!!” என்றான் இன்பன்.



“நல்லதுப்பா! நீ எது செஞ்சாலும் அது நல்ல விதமாவே அமையும்!! என்ன செலவானாலும் சொல்லு, நான் குடுக்குறேன்!!” ஒண்டிவீரர் சொல்ல, “வேண்டாம் தாத்தா” என உடனே அதை மறுத்தாள் கோகிலா.



“ஏன்ம்மா?”



“நிலம் அவர் பேருல தானே இருக்கு? நிலத்தை வச்சு பேங்க்ல விவாசய லோன் எடுக்கலாம்! அதை வச்சு தொழில் பார்க்கட்டும்!!” என்றவள் இன்பனை பார்க்க, ‘நான் சொல்வதை செய்’ என சொல்லியது அவள் பார்வை.



“ஆமா தாத்தா!! நான்கூட லோன் எடுக்கணும்ன்னு தான் நினைச்சுட்டு இருந்தேன்” என இன்பன் மனைவிக்கு ஒத்தூத,



“நம்மக்கிட்ட காசு கிடக்கப்போ எதுக்கு எவன்கிட்டயோ கடனாளி ஆகணும்?” என்றார் சிவகாமி கண்டிப்பாய்.



“அதானே? உனக்கு இல்லாம இதெல்லாம் வேற யாருக்கு இன்பா” தங்கமும் சொல்ல, மனைவி பேச்சை மீற முடியாது சங்கோஜமாய் நெளிந்தான் பேரின்பன்.



ஒண்டிவீரர் என்ன நினைத்தாரோ, “விடுமா! சொந்த முயற்சில வரணும்ன்னு பிரியப்படுறான்! அதுவும் நல்லது தானே? இதுக்குமேல லோன் கேட்டு அதை அவங்க குடுக்க தாமதம் பண்ணுவாங்க!! இப்போ என்கிட்டே தேவையான காசை வாங்கிக்கோ! உங்க லோன் கிடைச்சதும் என் கடனை அடைச்சுடு... என்ன?” என்றிட, இன்பன் ‘சம்மதமா?’ என கோகிலாவை பார்த்தான்.



“அட, உன் பொண்டாட்டிக்கு சம்மதம் தாண்டா! எல்லாத்துக்கும் அங்கேயே பார்க்காத!!” என்று மகிழ்வாய் சடைத்துக்கொண்டார் சிவகாமி. சத்தியராஜை தவிர மற்றவர்கள் வாய்விட்டு சிரிக்க, இன்பன் தலையை குனிந்துக்கொண்டான்.



“பாலு வேண்டானுட்டியேடா! மசாலா பால் குடிக்குறியா? மஞ்சள் மிளகு பூண்டு தட்டிப்போட்டு தரேன்!” என்றார் தங்கம்.



இன்பன், சரியென்றதும் தங்கம் எழுந்து அடுக்களை போக முனைய, “நீ உட்காரு தங்கம்! அவனுக்கு வேண்டியத செய்யத்தான் இப்போ பொண்டாட்டி இருக்கே! இன்னும் நீ எதுக்கு அவனை இடுப்புல சுமந்துட்டு திரியுற?” என்ற சிவகாமி அதட்டலுக்கு தங்கம் அமர்ந்துவிட, இப்போது கோகிலா எழுந்து செல்ல வேண்டிய சூழல்.



அவள் மௌனமாய் அடுக்களைக்குள் சென்றுவிட, பேச்சு இங்கே வெவ்வேறு இடங்களுக்கு பயணித்தது. இரண்டு நிமிடங்கள் முழுதாய் பொறுத்த இன்பனுக்கு கண்களும் மனதும் அடுக்களையை வட்டமடிக்க, “க்கும்...க்கும்...” என இருமினான்.



அவன் இருமல் அங்கே எடுப்படவில்லை. விடாமுயற்சியாய், “க்க்க்க்கும்... க்க்க்க்கும்...” என்றான். என்ன ஒரு அவமானம்!? அவன் இருப்பதை கூட யாரும் பொருட்படுத்தவில்லை.



மூச்சை இழுத்துப்பிடித்து, “க்க்க்க்க்க்க்க்க்க்க்கும்.... க்க்க்க்க்க்க்க்க்க்கும்” என அவன் உறும,



“அட ச்ச! கிச்சனுக்கு போனும்ன்னா போடா!” என வெளிப்படையாய் திட்டியே விட்டார் சிவகாமி. விட்டால் போதுமென ஓடினான் அவன் அடுக்களைக்குள்...



தங்கமும் ஒண்டிவீரரும் மலர்ந்து சிரித்தார்கள் என்றால், சத்தியராஜன் கூட எழுந்த சிரிப்பை அடக்கினார்.



அடுப்பில் இருந்த பாலை வேடிக்கைப்பார்த்தபடி நின்றிருந்த கோகிலாவை உரசியபடி சமையல் மேடையில் ஏறி அமர்ந்தான் இன்பன்.



“மூக்கி கண்ணு...” உல்லாசமாய் அவன் அழைக்க, அவளுக்கு காது கேட்கவில்லை!!!



ஏதாவது பேச வேண்டுமே! என எண்ணியபடி, “பாலு நல்லா வெள்ளையா இருக்குல!!!” என்றான் ‘ஈஈ’யென்ற வாயோடு!!



அந்நேரம் பார்த்து பால் பொங்க, அடுப்பில் இருந்து பாத்திரத்தை எடுத்து இருமுறை சுழற்றி மீண்டும் அடுப்பில் வைத்தாள் கோகிலா.



“நல்லா புசுபுசுன்னு பொங்குதுல...!! அப்படியே உன் கன்னம் மாறி!!” கடைக்கண்ணில் அவளை நோட்டமிட்டபடி அவன் சொல்ல, அதற்க்கும் அவளிடம் பிரதிபலிப்பிலை.



“பாலு நம்ம வீட்டுதா??” அடுத்து வந்தது அவன் கேள்வி!!



“ஒட்டகப்பால்ல டீ போட்டா ருசியா இருக்குமாமே!! குடிச்சுருக்கியா நீ?” அடுத்த கேள்வியில் மெலிதாய் அவள் முறைத்ததை போல தோன்றியது அவனுக்கு!!



‘என்னடா இது? இன்னும் பயிற்சி வேண்டுமோ?’ என யோசித்தவன், “இது எருமைப்பாலா, பசும்பாலா?” என கேட்க,



“ஹான்!! கள்ளிப்பாலு!! குடிக்குறியா?” என்றாள் கோகிலா ஏகக்கடுப்புடன்.



“கள்...ளி...ப்பா...லா...!!!” மெதுவாய் மேடையை விட்டு இறங்கியவன், “இல்ல... நான் அப்பறமா?...” என இழுக்க, கொதிக்கும் பாலோடு அவள் அவனை நோக்கி திரும்பியதும், “எனக்கு பாலு வேணாம்!!” என ஓடினான் அங்கிருந்து...!!!


அங்கிருந்து சென்ற சில நிமிடங்கள் பின்பே அவன் மனம் கண்டுக்கொண்டது... ‘உன் பொண்டாட்டி உங்ககிட்ட பேசிட்டாடா!!!!!!!’ என...!!! குத்தாட்டம் போடாத குறையாய் குதித்தான் இன்பன்.



ஓடிய தன் கணவனை கண்டு ரகசியமாய் கோகிலா சிரித்துக்கொண்டது இன்பன் கண்களில் சிக்கியிருந்தால் அவன் இன்பம், பேரின்பமாகியிருக்கும்!!!!



-வருவான்...
 
???

M.A.பிளோஸப்பி கண்டுபிடிப்பு பால் நல்லா வெள்ளையா இருக்கு....

பசும்பாலு நீ குடிக்க தலையெழுத்து இல்லையடா
கள்ளிப்பாலு நீ குடிச்சு கண்ணுறங்கு நல்லபடி
 
Last edited:
Top