Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோகுலத்தில் ராமன்! 09

Advertisement

பிரியா மோகன்

Tamil Novel Writer
The Writers Crew
2000+WORDS இந்த எபி... இதையும் யாராது குட்டி எபின்னு சொன்னா டிஷூம் டிஷூம் தான்!!!!

அத்தியாயம் ஒன்பது:

“ரத்தினம்மா வந்தாச்சா?”

“வந்தாச்சுங்கையா...!!”

“முத்தம்மா?”

“இருக்கேனுங்க...”

காலை இளவெயில் தேகத்தில் பட்டு இதமான சூட்டை கிளப்ப, வரப்பில் துண்டை விரித்து அமர்ந்தபடி கேப்பை கூழை உள்ளே தள்ளிக்கொண்டிருந்த ஆட்களின் வருகையை நோட்டில் குறித்துக்கொண்டிருந்தார் சத்தியராஜன்.



“சுப்பையா எங்க?”



“சின்னையா, அவன் இன்பா தம்பி வயலுக்கு போயிருக்கானுங்க...!!”



“யாரை கேட்டு அங்க போனான்? இத்தனை நாளு வேலை பார்த்தது இங்க... இப்போ புதுசா ஒருத்தன் கூப்புடவும் காசு பார்க்க கிளம்புறீங்களோ? அதான் ஒரு வாரமா ஆளுங்க வரப்பு குறையுதா? இன்னும் எத்தனை பேரு இங்க வராம அங்க போயிருக்கீங்க?” சத்தியராஜன் கொதிப்புடன் குரல் உயர்த்த, பதில் சொல்ல பயந்து மௌனம் காத்தனர் ஆட்கள்.



“அங்க வேலைக்கு போன ஒருத்தனும் இனி இந்த வயல் பக்கமே வரக்கூடாது, சொல்லி வைங்க!! நீங்க யாராது போகணும்ன்னு நினைச்சாலும் கிளம்புங்க!! எனக்கு ஒருத்தனும் தேவையில்லை” அப்போதுதான் காரை நிறுத்திவிட்டு வயலை நோக்கி வந்துக்கொண்டிருந்த காண்டீபன், தந்தையின் சத்தத்தில் “என்னாச்சு ப்பா?” என்ற குரலோடு நின்றான்.



ஒன்றும் சொல்லாமல் புசுபுசுவென அவர் மூச்சுவிட, அவன் ஆட்களிடம் விவரம் கேட்டதும், சிறிது தயக்கத்துடன் விவரத்தை சொன்னனர்.

“இன்பன் தம்பி யாரையும் கூப்படலைப்பா! யாராது வேலைக்கு இருந்தா சொல்லுங்கன்னு தான் கேட்டுட்டு போச்சு! நாங்க கேட்காமையே எங்களுக்காக எத்தனை உதவி செஞ்சுருக்கும் அது? அதுக்கு ஒரு உதவி தேவைப்படுறப்போ நாங்க செய்யலன்னா எப்படி? அதான் கொஞ்ச ஆளுங்க அந்த பக்கம் வேலைக்கு போனாங்க! வெளில ஆள் சொல்லிவிட்டுருக்கு, அவங்க வந்ததும், நம்மாளுங்க இங்கயே வந்துடுவாங்க!!!” இருந்ததிலேயே மூத்த பெண்ணொருவர் தன்மையாய் அவர்கள் எண்ணத்தை சொல்ல,



“எல்லாருக்கும் ஆகாரம் முடிஞ்சுதா?” என்றான் காண்டீபன்.

“ஆகாரம் முடிஞ்சுதுன்னா போய் வேலையை பாருங்க...!! வெயில் மேல ஏறும்முன்னே வீட்டுக்கு கிளம்ப வேண்டாமா?” காண்டீபனின் சிறு அதட்டலில் இளைபாறிக்கொண்டிருந்தவர்கள் வேலையை தொடர நகர்ந்து சென்றனர்.



இலக்கின்றி வெறித்தபடி கடுகடுவென்ற முகத்துடன் நிற்கும் சத்தியராஜனிடம், “ப்பா, எதுக்கு கோவப்படுறீங்க?” என்றான் காண்டீபன். அவனை விநோதமாய் பார்த்தவர், “எதுக்கு கோவம்ன்னு தெரியாதா? ஏன் உனக்கு கோவம் வரலையா?” என்றார் அதே கடுப்புடன்.



அவனுக்கு உண்மையிலேயே கோபம் வரவில்லை. தந்தைக்காக முகத்தை கசப்பை தின்றவன் போல வைத்துக்கொண்டவன், “ப்பா, என்னதான் நம்ம அவனை வேறாளா பார்த்தாலும், ஊரு கண்ணுக்கு அவனும் நம்ம வீட்டு பிள்ளை தானே? அவன் வயலுக்கு வேலைக்கு போனதுல என்ன தப்பு இருக்கு? அதுவும் கொஞ்ச நாளுக்கு தான்!! கேட்டீங்கள்ள...? வெளியாள் வந்ததும், போனவங்க திரும்பி நம்மக்கிட்டயே வந்துடுவாங்களாம்!! விடுங்கப்பா” என்றான் அவர் தோள் தொட்டு...!



அவனை கூர்மையாய் பார்த்த சத்தியராஜன், “இப்போயெல்லாம் நீ வேற மாறி இருக்க காண்டீபா!! அப்பா ஒன்னு சொன்னா அதுதான் சரின்னு சொல்ற என் புள்ள கொஞ்சநாளா தொலைஞ்சு போய்ட்டான்! ஹும்ம்!! போதனை எங்கிருந்து வருதுன்னு தெரியல!!” என்றவர் அவனை விட்டு நடக்கத் தொடங்கினார்.



தனியே நின்ற காண்டீபனுக்கு அலுப்பாய் இருந்தது. அன்றோடு அவன் திருமணம் முடிந்து இரு வாரங்கள் கடந்திருந்தது. புது மாப்பிள்ளைக்கு உண்டான செழிசெழிப்போ, சந்தோஷமோ அவனிடம் இல்லை என்றாலும், முன்பிருந்த ‘நிம்மதி’ எங்கே போனதென்றே தெரியவில்லை.



சுசீலாவிடம் தன் காதலை வெளிப்படுத்தினால் அவள் தன்னை உணர்ந்துக்கொள்வாள் என அவன் நினைத்திருக்க, அவன் காதல் சொல்லிவிட்ட பின்னரும் கூட அதை உணராது, ‘இதேபோல தானே நான் என் இன்பா மாமாவை காதலிச்சேன்!’ என சொல்பவளிடம் அவன் மேற்கொண்டு என்ன பேசிவிட முடியும்...!!!



வீட்டிற்க்கு போகவே வெறுப்பாக இருந்தது அவனுக்கு. முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு அறைக்குள்ளேயே முடங்கிக்கிடக்கும் மனைவியை பார்க்கையில் ஆயாசமாய் வந்தது. இதுநாள் வரை பொறுமை, நிதானம் என்றால், ‘தூரப்போ’ என விரட்டியவன், இந்த பதினைந்து நாட்களில் அதற்க்கான முழு அர்த்தத்தை உணர்ந்திருந்தான்.



சுசீலா பேசும் அபத்தமான பேச்சுக்கெல்லாம் பதில் கொடுக்காது அமைதியாய் இருக்க கற்றுக்கொண்டான். அவன் அடங்கிபோனதாலோ என்னவோ சுசீலா ஏற ஆரம்பித்தாள். வாழ்கையின் ஆரம்பத்திலேயே மனக்கசப்பை ஏற்ப்படுத்திக்கொள்ள கூடாது என்பதில் மிக தெளிவாய் இருந்தான் காண்டீபன். அவனது ஒவ்வொரு செய்கையையும் இன்பனோடு ஒப்பிட்டு, இவனை தாழ்த்தி அவள் பேசுகையில் ‘எதுக்குடா கல்யாணம் பண்ணுனோம்?’ என்றுகூட தோன்ற ஆரம்பித்து விட்டது அவனுக்கு.



வீட்டில் இருப்பவர்களுக்கு இவர்கள் ஊடல் தெரியக்கூடாதேயென மிகப்பிரயத்தனப்பட்டு எப்போதும் போல நடமாடிக்கொண்டிருக்கிறான்.



அவன் இயல்பாய் ஏதேனும் பேசினால் கூட, “என் இன்பா மாமா, எப்படி சிரிச்சுக்கிட்டே பேசுவாங்க தெரியுமா? உனக்கெல்லாம் சுட்டுப்போட்டாலும் சிரிப்பு வராது” என்பாள்.

நியாயமாய் அவள் மீது வர வேண்டிய கோபத்தை கூட, ‘சிறு பெண், புரியாமல் பேசிகிறாள்’ என தனக்குத்தானே சொல்லிக்கொண்டு அமைதியாய் கடந்துப்போய்க்கொண்டிருக்கிறான். இந்த காண்டீபன் அவனுக்கே புதியவன்!!!



ங்கே சோளக்காட்டில் வேலை ஜரூராக நடந்துக்கொண்டிருக்கிறது. வங்கியில் விவசாயக்கடனுக்கு முறையிட்டபின், ஒண்டிவீரரிடம் அவனுக்கு தேவையான பணத்தை பெற்றுக்கொண்டு வேலையை தொடங்கிவிட்டான். சிறுவயது முதல் பார்த்து செய்து அத்துப்படியான வேலைதான் என்பதால் அவனுக்கு எந்தவொரு தயக்கமும் சுணக்கமும் இல்லை.



நடுவே ஓர்நாள் மருத்துவமனை சென்று தையல் பிரித்துவிட்டு வந்தான். முன்பைவிட காயம் இப்போது நன்றாகவே ஆறியிருந்தது.



மூன்று ஏக்கர் இடத்தில் செவ்வாழை, மக்காசோளம், கரும்பு பயிரடப்படும் வேலைகள் அதன்போக்கில் நடக்க, இன்பனுக்கு சோளக்காட்டிலேயே பொழுது ஓடியது. அதிகாலையில் எழுபவன், நேரே காட்டை பார்க்க சென்றால், இரவு வீடு திரும்புகையில் தெருநாய் கூட உறங்கியிருக்கும். அத்தனை நேரம் கடந்தே வருவான்.



வயல் வேலை மாலை ஆரோடு முடிந்துவிட்டாலும், மேல்வேலைகள் அடுத்த ஒரு மணி நேரத்தை பிடித்துக்கொண்டாலும், அதற்கு மேல் மில்லுக்கு செல்பவன் இதற்க்கு முன் அவன் பொறுப்பில் இருந்த வேலைகளை (அனுப்பவேண்டிய ஆர்டர்களையும், வந்திறங்கியிருக்கும் லோட் கணக்கையும்) சரிப்பார்த்துவிட்டு வீடு திரும்ப நடுசாமம் தாண்டிவிடும்.



மில்லுக்கு வேறாள் போட்டுக்கொள்வதாக ஒண்டிவீரர் சொல்லியும் அவன் கேட்கவில்லை.

அவன் மூன்று வேளை உணவும் கிளிகள் மூலம் வயலுக்கே கொண்டு செல்லப்பட்டுக்கொண்டிருந்தது.



யலில் இருந்து வீட்டிற்கு வந்த சத்தியராஜன், முகத்தில் இன்னமும் கடுமை குறையாது நடமாட, நடைபயிற்சி முடிந்து வீட்டிற்கு வந்த ஒண்டிவீரர், “சத்தியா?” என்றார்.



தந்தையின் குரலில் நின்றவரை, “எதுக்கு அடிக்கடி பள்ளிப்பாளையம் பக்கம் போறியாம்? என்ன வேலை அங்க?” என்றார் ஒண்டிவீரர்.



இத்தனை நாட்களுக்கு பின், திடுமென அவரது நேரடி தாக்குதலை எதிர்ப்பாராதவர், “அப்பா, அது...! கொஞ்சம் வேலை... அதான்” என்று தயக்கத்துடனே தடுமாறியபடி சொல்ல, புருவம் சுருக்கினார் பெரியவர்.



“என்ன வேலை?”

சத்தியராஜனின் தடுமாற்றம் ஒண்டிவீரரை மேற்கொண்டு பேசவைத்தது.



“அது... கொஞ்சம் வேலைப்பா!”



“அதான் என்ன வேலை?”



என்ன வேலையென்று சட்டென சொல்ல அவருக்கு எதுவும் கிடைக்காததால், “வயலுக்கு ஆள் போதலப்பா! அதான் அந்த பக்கம் போய் சொல்லிவச்சேன்!” என்றார் காலையில் கிடைத்த காரணத்தை சொல்லி!!



ஒண்டிவீரரின் புருவ சுருக்கம் கூடியது. “ஆள் சொல்லிவிட நீயே போனியா? நம்ம பசங்க யார்க்கிட்டயாவது சொன்னா அனுப்பி வைக்க போறாங்க!!” என்றவர், “அதுமில்லாம, இங்கிருந்து, ஈரோடுல போய் ஆள் கூப்பிட்டியா?” என்றார், ‘என்ன அபத்தம் இது?’ என்பதை போல. ஒருமணி நேர பயணத்தொலைவில் வயல் வேலைக்கு ஆள் அழைப்பார்களா? என்ற கேள்வி அவரிடம்!



சத்தியராஜன், “இனி நம்ம பசங்கக்கிட்டயே சொல்லிவிடுறேன் அப்பா” என்று நகர்ந்துவிட்டார்.



‘சத்தியா நடவடிக்கை ஒன்னும் பிடிப்படலையே!’ என யோசித்தபடியே நின்றுவிட்டார் ஒண்டிவீரர்.



“அண்ணி.... சோறு ரெடியா...???” வாசலில் நின்றே ஏலம் போட்டனர் கிளிகள்.



அவர்கள் குரலில் வெளியே வந்த கோகிலா, “உள்ள தான் வாங்களேன்!!” என்றாள் தினம் சொல்வதை போல.



அவர்களும் தினம் படிக்கும் அதே பாட்டாய், “பரவாலண்ணி, சாப்பாடு குடுங்க... வேலைக்கு நேரமாச்சு!!” என்றனர்.



“துரை, வீட்டுப்பக்கம் வரமாட்டாரோ?” என்றாள் கோகிலா.



“வேலை இருக்குதுங்க அண்ணி...! அதான்!!” பச்சைக்கிளி ராகம் பாட, “அங்கேயே இருந்துக்க சொல்லுங்க உங்க நொண்ணனை” என்றவள் வீட்டுக்குள் சென்றுவிட்டாள்.



“பாடிக்கிட்டே வேலை பார்த்தா அலுப்பு தெரியாதே அப்பத்தா!! ஒரு பாட்டு தான் பாடேன்!!” வேலை செய்துக்கொண்டிருந்தவர்களுக்கு அவனே தயாரித்த கடுங்காப்பியை வழங்கிக்கொண்டே இன்பன் வம்பு வழக்க,



“காலம் போன கடைசில நான் என்னத்த பாட? நீதான் அருமையா பாடுவியே!? உன் பொண்டாட்டியை நினைச்சு ஒரு பாட்டை எடுத்து விடுறது? என்னாங்கடி சொல்றீய?” அப்பத்தா ஒன்று இன்பனை பாட சொல்லி சக ஆட்களிடம் ஓட்டுக்கேட்க,



“அதானே! நீ இருக்கக்கொள்ள நாங்க பாடுனா எடுப்படுமா? நீயே பாடுப்பு!!” என்றது வேறொரு வெள்ளைத்தலை.



பாட்டிகளோடு துணைக்கு வந்திருந்த குட்டி பேத்திகளை உட்கார வைத்து பலகாரம் கொடுத்தவன்,



“பாடுனா என்ன தருவீங்க?” என இன்பன் வியாபாரம் பேசினான் பாட்டிகளிடம்.



“எங்கக்கிட்ட என்னடே இருக்கு?”



“நான் கேக்குறதை குடுங்க!!” என கண்ணடித்தான் பேரின்பன்.



“சரி சொல்லு!!”



“இறுக்கி அணைச்சு ஒரு உம்மா குடுங்க!! நான் பாடுறேன்!!” பொங்கும் சிரிப்பை அடக்கிக்கொண்டு இன்பன் கேட்க, பேத்திகள் வாயை மூடி கிளுக்கி சிரிக்க, அவன் எதிர்ப்பார்த்ததை போலவே கையில் இருந்த வேலையை விட்டுவிட்டு இவனை திரும்பி முறைத்தனர் பெண்கள். (அப்பத்தாக்கள்)



“இவன் எவன்டா, பொண்டாட்டிக்கிட்ட கேட்க வேண்டியதெல்லாம் பல்லு போன கிழவிங்கக்கிட்ட கேட்டுட்டு இருக்கான்?” மோவாயில் கைவைத்து ஒருத்தர் நொடித்துக்கொள்ள, சத்தம் போட்டு சிரித்தான் பேரின்பன்.



“சிரிப்பை பாரு” என பாடச்சொல்லி முதலில் கேட்ட அப்பத்தா கொஞ்ச, “ஏடேய், பாடேன்! இத்தனை பேரு கேட்குறோம்ன்னு ரொம்ப கிராக்கி பண்ணிக்காத” என்றார் ஒருவர்.



“சேரி சேரி நான் பாடுறேன்! நீங்க வேலையை பாருங்க...” என்ற இன்பன் குரலை செருமிக்கொண்டான்.



எட்டுக்கட்டையில் எடுத்தவுடன் குரலை தூக்கியவன், ராகம் போட்டு இழுத்து “ஏஏஏஏ.... புள்ள கருப்பாயி.....” என ஆரம்பிக்க, “நல்லப்பாட்டு நல்லப்பாட்டு” என சிலாகித்துக்கொண்டனர்.



அடுத்த வரியாய், ‘உள்ள வந்து படு தாயி” வராது,

“பி.... புள்ள கருப்பாயி” என அவன் பாட, “ஹான்?” என முழித்தனர் அவர்கள்.



“சி.... புள்ள கருப்பாயி...”

“டி... புள்ள கருப்பாயி”

“ஈ.... புள்ள கருப்பாயி”

“எஃப்.... புள்ள கருப்பாயி”

“ஜி.... புள்ள கருப்பாயி”

“எச்... புள்ள கருப்பாயி” அவன் மேலும் பாடிக்கொண்டே போக,



“ஐயையோ, அம்மாயி, இந்த மாமா பாட்டு படிக்கல, பாடம் படிக்குது!!” பேத்தி ஒருத்தி சிரித்துக்கொண்டே அவனை போட்டுகொடுக்க, “அட, கோட்டிக்காரப்பயலே! எப்பப்பாரு விளையாட்டு!!” என செல்லமாய் அடிக்கவே வந்துவிட்டனர் அப்பத்தாக்கள்.



மனதில் இருந்து சந்தோசமாய் சிரித்துக்கொண்டிருந்தான் பேரின்பன். அவன் சிரிப்பை பார்த்தபடி வந்த கிளிகள் உணவை அவனிடம் கொடுக்க, “ஒத்த கூடையை வாங்கிட்டு வர இரண்டு பேராடா!!” என எப்போதும் போல கேட்டுவிட்டு வீட்டுக்குள் சென்றான்.



உணவை சுவைத்துக்கொண்டே, “அண்ணி ஏதாவது சொன்னாளா?” என்றான் வழமைப் போல.



“சொன்னாங்க!! உங்களை வயல்லயே இருந்துக்க சொன்னாங்க” என்றான் வெட்டுக்கிளி.



“ஏண்டா? உங்க அண்ணிக்கு நான் ராத்திரி தூங்க வரதுகூட தொல்லையா இருக்காம்மா?” என்றான் உண்டபடியே!!



“அண்ணிக்கு உங்கமேல கோவமுண்ணே... அவங்கக்கிட்ட மட்டுமாவது என்ன நடந்துதுன்னு சொல்லி மன்னிப்பு கேட்கலாமுல?” பச்சைக்கிளி அன்றுபோல சொல்ல, ஒன்றும் பேசாமல் உண்டவன் கை கழுவிட்டு, “அவளுக்கு கோவம் இல்ல, வருத்தம்! தம்பிக்கு ஒன்னுன்னதும் அவளை விட்டுட்டு நான் போயிட்டேன்னு வருத்தம்!” என்றான் இன்பன்.



“நான் வார்த்தையால சொல்ற மன்னிப்போ ஆறுதலோ அவளை சமாதானப்படுத்தாது!! அவளே புரிஞ்சுக்கணும்! அவதான் எனக்கு முக்கியம்ன்னு அவளை நான் உணரவைக்கணும்!!” என்றான் தன்போக்கில், முன்பொருமுறை சொன்னதை போல.

அவன் சொன்னது மறுநாளே நிகழப்போகிறது என்பதை அறியாது!!!



ரவு வெகுநேரம் கடந்து தன் வேலையெல்லாம் முடிந்ததும் வீடு வந்து சேர்ந்தான் பேரின்பன். இரவு உணவையும் முடித்துக்கொண்டே வருவதால் நேரே அறைக்குள் சென்று பாயை விரித்து படுத்துவிடுவான். அவன் வரும் நேரம் கோகிலா கட்டிலில் உறங்கிக்கொண்டிருப்பாள் என்பதால் இன்றும் சத்தம் எழுப்பாமல் இருட்டிலேயே பாயை விரித்து அவன் படுக்க, கட்டிலில் கோகிலாவை காணவில்லை



“எங்க போயிருப்பா?” என யோசித்தவன் சில நேரம் பொருத்தும் அவள் அறைக்குள் வராததால் முதலில் பின்பக்கம் சென்று தேடினான். அங்கும் இல்லாததால் ஏதோ ஓர் உந்துதலில் மொட்டை மாடி செல்ல அவன் படியேற, ‘சுசீலா இருப்பாளே?’ என்ற எண்ணம் வந்தது.



அவள் இந்த வீட்டிற்கு வந்தது முதல் அவள் கண்களில் ஒருநாளும் இவன் சிக்கவில்லை. அவள் அறைக்குள்ளையே இருக்க, இவன் வீட்டிற்கே வராது இருக்க, நேர்க்கொண்டு பார்த்துக்கொள்ளும் சங்கடமான சூழல் இதுவரை உருவாகவில்லை.



இன்று மாடியேறி செல்கையில் அவளை பார்க்க நேரிடுமோ என்ற உறுத்தலுடனே சென்றான். அவன் பயந்தது நடக்கவில்லை.



மொட்டை மாடியில் இரவு நேர குளிர்காற்றுக்கும் ஆளை தூக்கும் கொசுவுக்கும் பயந்து முந்தானையால் மேலுடலை போர்த்திக்கொண்டு இவனுக்கு முதுகுக்காட்டி நின்றிருந்தாள் கோகிலா.



பார்த்தவனுக்கு சட்டென முந்தைய நினைவுகள். இதேபோல ஓர் இரவில் தானே இருவரும் மனம் விட்டு அவர்கள் விருப்பத்தை பகிர்ந்துக்கொண்டது!!!



வேகமாய் சென்றவன் அவளை பின்னோடு அணைத்துப்பிடித்துக்கொண்டான். திடுமென கிடைத்த அவன் தீண்டலில் சிறிது பயப்படுவாள் என அவன் எதிர்ப்பார்க்க, ‘ஹோ! வந்துட்டியா?’ என்றதொரு பாவனை தான் அவளிடம்.



அவள் கழுத்து வளைவில் முகம் பதித்தவன், “ஏய்... மூக்கி!!” என்றான் ரகசியமாய்.



உள்ளுக்குள் குழைந்தாலும் வெளியே விறைப்பாய் நின்றிருந்தாள் கோகிலா.



“பேசுடி தங்கமயிலு!! நீ பேசாம இருக்கிறது எவ்வளோ கஷ்டமா இருக்கு தெரியுமா?” என்றான் உணர்ந்து.



“காட்டு வேலை ஆரம்பிச்சதுல இருந்து உன்னை சரியா கூட பார்க்க முடியல என்னால...”



அவள் காதுமடலை மூக்கின் நுனியால் உரசி குறுகுறுப்பு மூட்டியவன், அவள் நெளிவதை கண்டு சிரித்தபடி இன்னும் தன்னோடு இறுக்கிக்கொண்டான்.



“உன் வருத்தம் எப்போ போகுதோ அப்போ என்னோட சகஜமா இரு! அதுவரை உன்கிட்ட அத்துமீற மாட்டேன்! வம்பு பண்ணமாட்டேன்! ஆனா நீ என்கிட்டே பேசணும்!! பேசுவியா?” என்றான் மிகக்குழைவாய். அவன் பேச பேச, அவனுதடுகள் அவள் செவிமடலை உரச, சில்லிட்டு எழும்பும் மயிர்க்கால்களை மறைப்பதிலேயே குறியாய் இருந்தாள் அவள்.



அவள் போராட்டங்கள் அவனுக்கு குஷியை கிளப்ப மேலும் முன்னேற பார்த்தவனை தடுத்தது கீழே கேட்ட வண்டி சத்தம்.



எட்டிப்பார்த்தால், காரில் இருந்து இறங்கி வீட்டிற்குள் வந்துக்கொண்டிருந்தான் காண்டீபன்.



“இவன் ஏன் இவ்ளோ லேட்டா வரான்?” என இன்பன் கேட்க, ‘தம்பியை கூட இந்த பத்து நாள்ல கவனிக்கலையா?’ என்ற ஆச்சர்யம் கோகிலாவுக்கு.



காண்டீபனின் நடை தடுமாற்றத்துடன் இருக்க, அதுவே காட்டிக்கொடுத்தது அவன் குடித்துவிட்டு வந்திருப்பதை.



“கல்யாணத்துக்கு முன்னாடி குடிச்சான் சரி, இப்போ என்னவாம் இந்த பயலுக்கு?” சந்தேகத்தை வாய்விட்டே அவன் கேட்க, அவனை வெறும்ப்பார்வை பார்த்தாள் கோகிலா.



தட்டுத்தடுமாறி அவன் வீட்டுக்குள் செல்ல, “தினம் இப்படிதானோ?” என்ற அவன் கேள்விக்கு ‘ஆம்’ என தலையசைத்தாள் கோகிலா. இன்பனுக்காக காத்திருக்கும் நேரங்களில் காண்டீபனின் போக்கை தினம் கவனித்துக்கொண்டிருக்கிறாள்.



“வீட்ல யாருக்கும் தெரியுமா? இவன் குடிக்கிறது?” மறுப்பாய் அசைந்தது அவள் சிரம்.



இலகுவாய் தோள் குலுக்கியவன், “இனி அவனாச்சு, அவன் பொண்டாட்டியாச்சு” என அசால்ட்டாய் சொல்லிவிட்டு, மீண்டும் அவளை இறுக்கிக்கொண்டவன், “மூக்கிக்குட்டி, பேசுடா மாமாக்கிட்ட” என்றான் ஆசையாய்.



கோகிலாவுக்கு ஆச்சர்யம், வியப்பு, திகைப்பு என அத்தனையும் ஒன்றுகூடிவிட்டது. ‘இன்பன் தன் தம்பியை கண்டுக்கொள்ளாமல் இருக்கிறானா?’ என்ற உண்மையை அவளால் நம்பவே முடியவில்லை.



“ப்ச்... போடி!! பிடிவாதம் ரொம்ப உனக்கு!!” என்றவன், “வா, கீழ போலாம்!!” என்று அழைத்து சென்றான் கைபிடித்து.



முதல் மாடியை கடக்கையில் காண்டீபன் அறையில் இருந்து சத்தமாய் கேட்டது சுசீலாவின் பேச்சு...

“என்னை காதலிக்குறவன் தான் இப்படி தினம் குடிச்சுட்டு குடிச்சுட்டு வருவானா?”



கோகிலா அவ்விடமே தேங்க, அவள் கரம் பற்றி இழுத்தவன், “நீ வா, நமக்கெதுக்கு” என அழைத்து சென்றுவிட்டான்.



என்றும் இல்லாததாய் அன்றைய இரவு கோகிலாவுக்கு நிம்மதியான உறக்கம் வர, காலையில் சற்று நேரம் சென்றே கண்விழித்தாள். இன்பனை போலவே வைதேகி முகத்தில் இன்முகத்துடன் விழிப்பதை பழகியிருந்தவள், இன்றும் அதேபோல கண்திறக்க, அவள் மாமியாருக்கு பதில் அவர் மகனே நின்றிருந்தான் அவள் முன்னே.



“என்ன மேடம்? எழுந்துக்க மனசே இல்லையா?” என்ற கேள்வியோடு இன்பன் தலை துவட்டிக்கொண்டிருக்க, ‘இவன் வயலுக்கு போலையா?’ என்ற எண்ணத்துடனே எழுந்தாள் கோகிலா. அவள் எண்ணம் புரிந்தவனும், “வெளில மழை தூரிட்டு இருக்கு! அதான் நான் போகல” என்றான்.



வேகமாய் தன்னை சுத்தப்படுத்திக்கொண்டு அடுக்களைக்குள் போக தங்கம் ஒற்றையாளாய் போராடிக்கொண்டிருந்தார்.



“மழை தூறுறதால ஆளுங்க இன்னும் வந்து சேரல! அதான் நானே எல்லாம் செய்றேன்!! நீங்க காபி குடி கோகிமா” தங்கம் பேசினாலும் கை வேலைகளை செய்துக்கொண்டே இருந்தது.



“அம்மாயி, எங்க சித்தி?”



“அவங்க கோவிலுக்கு போறாங்கடா! இன்னைக்கு பூஜைக்கு குடுத்துருக்கு!! நீயும் குளிச்சுட்டு போயிட்டு வாயேன்”



“பரவால்ல சித்தி! நகருங்க, நான் காய் நறுக்குறேன்”



“வேண்டாம் கண்ணு! நீ இட்லி வெந்துருச்சான்னு மட்டும் பாரு” தங்கம் சொன்ன வேலையை அவள் செய்தபோது, “அம்மா...” என சற்றே சத்தமாய் வந்தது தங்கத்தின் குரல்.



“என்னாச்சு சித்தி?”

காயுடன் சேர்ந்து அவர் கையும் நறுக்கியிருக்க ரத்தம் அவர் அழுத்தி பிடித்திருந்த புடவையையும் தாண்டி வெளியே தெரிந்தது.



“அச்சோ, பொறுமையா செஞ்சுருக்கலாமே சித்தி!!” பதறிய கோகிலாவிடம் மஞ்சள் எடுத்து தரசொல்லி அவர் காயத்தில் போட்டுக்கொள்ள, “சின்ன காயம் தான் கண்ணு” என்றார் அவர் வலியை மறைத்தபடி.



“பாத்தாலே தெரியுது! நீங்க முதல்ல போங்க! மீதி வேலையை நான் பாத்துக்குறேன்” என்றாள்.



“நீ எப்டிம்மா ஒத்தையாளா செய்வ? இப்போதான் ஓரளவு சமையலே கத்துக்கிட்டு இருக்க” என்ற தங்கம் “இந்த சுசீலா எங்க? ரூமுக்குள்ளையே உட்காந்து அடைக்காக்குறாளா?” என பொய்யாய் அலுத்துக்கொண்டவர், “நான் சின்ன கழுதையை அனுப்பி வைக்குறேன், ரெண்டு பேருமா பண்ணுங்க... சாம்பார்ல காயை போட்டு வெந்ததும் இறக்கணும், தேங்கா சட்னி அரைக்கணும்... அவ்ளோதான்” என்றார்.



கோகிலா தெரிந்தவரையில் மீதம் இருந்த காய்களை நறுக்கிக்கொண்டிருக்க, ‘தொம் தொம்’ என்ற காலடி சத்தங்களோடு அடுக்களைக்குள் வந்தாள் சுசீலா.



அவள் முகத்தில் கடுகும் கொஞ்சம் கறிவேற்ப்பிலையும் எடுத்து போட்டால் சாம்பாருக்கு தாளிப்பு முடித்துவிடலாம். அத்தனை கடுகடுப்பாய் இருந்தது.



அவளாய் பேசபோவதில்லை என தெரிந்து, “இந்த உருளைகிழங்கை வெட்டித் தரியா? நான் தேங்காய சில்லுப் போடுறேன்” என்றாள் கோகிலா.



அவள் நீட்டிய கிழங்கை பிடுங்கியவள், கடமைக்காய் வேலை செய்ய, கோகிலாவால் சும்மா இருக்க முடியவில்லை. காண்டீபன் தினமும் குடித்துவிட்டு வருவது வீட்டினருக்கு தெரிந்தால் எத்தனை துயரப்படுவர் என மருகியவள், “சுசீ!! உன்கிட்ட ஒன்னு சொன்னா தப்பா நினைக்கக் கூடாது” என்றாள்.



முறைப்புடனே நின்றவளை சட்டை செய்யாது, “காண்டீபனை கொஞ்சம் கவனிக்கக்கூடாதா? அவன் தினமும் குடிச்சுட்டு வரது தெரிஞ்சா எல்லாரும் வருத்தப்படுவாங்கம்மா” என்றாள்.



சுசீலா, “நான் வருத்தப்படுரத யாராது கண்டுக்குறீங்களா? என் மனசை மதிக்காம ஒரு குடிகாரனுக்கு கட்டி வச்சுட்டு என்னவோ அவன் பாவங்குற மாறி பேசுற?” அவள் பேச்சு விசாலமான அடுக்களையை தாண்டி வெளியே போகும் அளவு இருக்க, “ஷ்!! மெதுவா பேசு” என்றாள் கோகிலா.



“இந்த வீட்ல மனசுல படுறதை பேசக்கூட உரிமை இல்லையோ?”



“உன்னை பேச வேண்டாம்ன்னு யாரும் சொல்லல, ஆனா கொஞ்சம் மெதுவா பேசு, யாரு காதுலயாவது விழுந்தா சங்கடப்படுவாங்க... ப்ளீஸ் ட்ரை டு அன்டர்ஸ்டேன்ட் மா”



சுசீலா, “இதான்... இப்படி தஸ்ஸு புஸ்ஸுன்னு பேசி, வெள்ளத்தோலை காட்டி தானே என் இன்பா மாமாவை சுருட்டிக்கிட்ட நீ!!”



“ச்ச ச்ச!! என்ன வார்த்தை பேசுற நீ?” அவ பேச்சில் முகம் சுளித்தாள் கோகிலா.



“ஆமா, உன் பக்கத்துல என்னை வச்சு பார்த்தா நான் மட்டமா தானே தெரிவேன்!! உங்க ஊருல ஒருத்தனுமா சிக்கல” என்றவள், “எங்க, நீதான் கட்டுன தாலியவே கலட்டி வீசுனவலாச்சே! உன் தைரியம் எனக்கிருந்தா இப்படி இந்த வீட்ல நின்னு மூக்க உறிஞ்சுட்டு இருப்பேனா?” சுசீலா வழியும் கண்ணீரை துடைத்துக்கொண்டே பேச, எரிச்சலானது கோகிலாவுக்கு.



“இங்கப்பாரு! என்னையும் யாரும் சம்மதம் கேட்கல! இன்பா மாமா வந்தாரு, என்னை கல்யாணம் செஞ்சுக்கிட்டாரு... அவ்வளோதான்!!” என்றாள், அவளுக்கு ஆதரவாய்.



“அவரு செஞ்சுக்கிட்டா? நீ வேண்டாம்ன்னு சொல்ல வேண்டியது தானே?” என்ற சுசீலா, அடுத்து வந்த வார்த்தைகளில் விஷத்தை தோய்த்தாள்.



“ஒரு வாட்டி தாலி அறுத்தவளுக்கு இன்னொரு முறையும் அதை அறுக்க எத்தனை நேரம் ஆகப்போவுது? கலட்டி வீசிட்டு போறது ஒன்னும் உனக்கு புதுசில்லையே....!!!”



உயிரோடு கொல்லும் உத்தேசத்துடன் சுசீலா பேச, கோகிலா கண்களில் இருந்து கண்ணீர் இறங்குவதற்குள், “சுசீலாஆஆஆ....” என வீடே அதிர கத்திய பேரின்பன், அவள் கன்னம் பழுக்க இறக்கியிருந்தான் அவன் இரும்புக்கரத்தை.



அவன் தாக்குதலை எதிர்ப்பாராதவள் அடித்த அடியில் துவண்டு கீழே விழ, முழு உயரத்திற்கும் நிமிர்ந்து ருத்ர மூர்த்தியாய் நின்றிருந்தான் பேரின்பன்.



கோகிலாவுக்கே அவனை காண திகிலாய் இருந்தது. சுசீலா அவன் ரூபம் கண்டு பயந்து பின்னால் நகர, எரிக்கும் பார்வையில் அவளை தொடர்ந்தவன், “இன்னும் ஒரு வார்த்தை என் பொண்டாட்டியை பேசுன......” என்றவன் வார்த்தையை முடிக்காது, ஒரு விரல் நீட்டி, ‘தொலைச்சுடுவேன்’ என்றான் பார்வையால்.



உயிர் தொண்டைகுழியில் சிக்கிக்கொண்டு நின்றது சுசீலாவுக்கு.

கடந்த இரு நிமிடங்களுக்கு முன்பு வரை சுசீலா மனதில் இருந்த ‘இன்பன்’ எனும் தங்கசிலை நொடிப்பொழுதில் உடைந்து சிதறி சின்னாபின்னமானது.



-வருவான்...

 
Nice update

இந்த சுசீலாவுக்கு வாய் கொஞ்சம் நீளம்... அதான் நல்லா வாங்கி கட்டிகிட்டா..

ஏ புள்ள கருப்பாயி
உள்ள வந்து படு தாயி
ஆடி மாசம் கொல்லுதடி
அம்மிகல்லும் ஆடுதடி
ஒத்த குடி வாசலிலே
ஊத காத்தும் வீசுதடி
பட்ட மரம் காய்க்குதடி
பாவி மனம் சொக்குதடி
ஏய் புள்ள கருப்பாயி
உள்ள வந்து படு தாயி
ஆடி மாசம் கொல்லுதடி
அம்மிகல்லும் ஆடுதடி
 
Last edited:
Nice update.சுசிலாவுக்கும் கோகிலாவுக்கும் ஒரே நேரத்தில் தன்னை புரிய வைத்து விட்டான்
 

Advertisement

Top