Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோகுலத்தில் ராமன் -09

Advertisement

பிரியா மோகன்

Tamil Novel Writer
The Writers Crew
*9*

உன் பார்வையை கடன் வாங்கினேன்!

வட்டியென வாங்கிக்கொண்டாய் என் இதயத்தை!!!

வழிநெடுகிலும் காண்பதையெல்லாம் காட்டி காட்டி கோகிலா என்னென்னவோ கேட்க, அதற்கு இன்பன் பதில் சொல்லிக்கொண்டிருந்தாலும், அவன் மூளை முழுக்க, ‘எனக்கு உங்ககூட இருக்க தானே பிடிச்சுருக்கு!’ என்ற அவள் கூற்றே சுற்றி சுற்றி வந்து ரீங்காரமிட்டது. பெண்கள் யாருடனும் பழகாதவன் அல்ல இன்பன், அவனை விட்டு தள்ளி நிறுத்தியே பழகியவன். இன்றோ தனக்கு பிடிக்காத தன் அத்தையின் மகளை என்ன முயன்றும் அவனை விட்டு நகர்த்த இயலவில்லை. அவளை கண்டு இரு நாட்கள் தான் ஆனதா என வியக்கும் அளவு அவனை படுத்திக்கொண்டிருந்தாள் கோகிலா.



மில்லின் உள்ளே சென்று வண்டியை நிறுத்தியதும் இறங்கிக்கொண்டவள் கண்களை சுழல விட்டு, “வாவ் மாமா! நான் கூட சின்னதா இருக்கும்ன்னு நினச்சேன்! இவ்ளோ பெரிய பேக்டரியை நான் எதிர்ப்பார்க்கல!!” என்றாள் மெய்யான வியப்போடு!



அவன் வந்ததும் அங்கே ஓடி வந்த அவனது கிளிகள் புதிதாய் நிற்பவளை கண்டு சற்று தயங்கி நிற்க, இன்பனே, “அவனுங்க ரெண்டு பேரும் என் கூட்டாளிங்க!” என்று கோகிலாவிற்கு அறிமுகம் செய்தான். கோகிலாவும் “ஹெலோ நான் கோகிலா, இவரோட அத்தை பொண்ணு!” என சொல்ல, வாயை பிளந்தனர் இருவரும்.



அவர்கள் அதிர்வை உணர்ந்தவன் போல, “வாயை பொலக்காதீங்க! தாத்தா அவங்களை சேர்த்துகிட்டாங்க!” கசப்பை தின்றவன் போல இன்பனின் முகம் கோணிக்கொள்ள, அவன் சொன்னதை நம்பவே முடியாமல் நின்றனர். எத்தனை வருட கோவம் என்று தான் ஊருக்கே தெரியுமே!!



“எப்படிண்ணே?” வெட்டுக்கிளி திறந்த வாய் மூடாமல் கேட்க, “அவங்களே சேர்த்துகிட்டா கூட நீங்க விடமாட்டீங்க போலயே!” என்ற கோகிலாவின் குற்றம் சாட்டும் பார்வையில் ‘ஹிஹி’ என சிரித்து சமாளித்தனர் இருவரும்.



“நான் என் பேர் சொன்னேன்! நீங்க உங்க பேரு சொல்லலியே?”

“நான் வெட்டுக்கிளி, இவன் பச்சக்கிளி”

கிண்டலடிக்கிறார்களோ என்றெண்ணிய கோகிலா, “ஆமா ஆமா, என் பேரு கூட பஞ்சவர்ணக்கிளி” என்று சிரிக்க, “அது அவனுங்களுக்கு நான் வச்ச பேரு, நிஜபேரை வெளில சொல்றதே இல்ல, ஆதார் கார்ட் எடுக்கையில கூட இதே பேர சொல்லி அசிங்கப்பட்டும் அடங்கமாட்டுறானுங்க!” வென்சட்டையில் இருந்து கலர் சட்டைக்கு மாறிக்கொண்டே அவன் சொல்ல, கிளிகளின் பேச்சை விட்டவள், “ஏன் மாமா சட்டை மாத்துறீங்க?” என்றாள் புருவம் சுருக்கி.



“அண்ணன், பாக்குற வேலைக்கு ஏத்த மாறி அப்படியே மாறிடுவாப்புள! கீ கீ” பச்சைக்கிளி வாயை மூடி சிரித்ததும், “அடக்கி வாசிடா கிளி, அப்புறம் ரெக்கையை காணோம், ரவிக்கையை காணோம்ன்னு வந்து நிப்ப!!” அவன் முறைப்பில் சத்தம் அடங்க, “நாங்க போய் வேலையை பார்க்குறோமுன்னே, நீயும் வந்துடு!” என்று நைசாக எஸ்ஸாகினர்.



வேடிக்கை பார்த்துக்கொண்டு நின்ற கோகிலாவிடம், “நேரா தெரியுது பாரு! அதான் ஆபிஸ், அங்க போய் உட்காரு! காண்டீபன் இருப்பான்! நான் வேலையை பார்க்குறேன்!!” என்று நகர்ந்தான் இன்பன்.



“எங்க போறீங்க மாமா?”

“வேலை பார்க்க தான்!!” நடையை அவன் நிறுத்தவில்லை. அவன் பின்னோடு ஓடியவள், “நீங்களும் வாங்க மாமா என்கூட, நான் மட்டும் எப்படி தனியா போறது? யாரையுமே தெரியாது எனக்கு!!”

“காண்டீபன் இருப்பான், உள்ள போ”

“மாமாஆஆஆ!!!” நட்டநடுவே காலை உதைத்துக்கொண்டு நின்றுவிட்டாள். அவன் வந்தது முதலே இருவரையும் நோட்டமிட்டு கிசுகிசுத்துக்கொண்டிருந்த கூட்டம், அவர்கள் சம்பாஷனை கண்டு ஏதோ பிணக்கு என எண்ணி சமாதானம் பேச அருகே வந்தனர்.



“நீ தான் செல்லத்தோட மவளா?”

“இன்பன் தம்பிகிட்ட போய் என்ன கண்ணு சண்ட?”

“வெயில்ல நிக்கனுமா இப்படி? உள்ளார வரலாமுள்ள?”

“நீ பேன்டு சட்டை தான் போடுவியா?” பலவித குரல்களில் பலவித கேள்விகள் வெளிவந்தது.

ஆனால் எந்த கேள்விக்கும் அவளை பதில் சொல்ல விடவில்லை. சூழ்ந்திருந்த கூட்டம் அவளை கேள்விக்கணைகளால் படுத்தி எடுக்க, நமட்டு சிரிப்போடு இரவு வந்திறங்கியிருந்த மூட்டைகளை சரிபார்த்து குடோனில் அடுக்க ஆரம்பித்தான் இன்பன். அவன் சுமை சுமந்து செல்வதை கண்டவளுக்கு அதிர்ச்சி எல்லை மீறியது.

‘இதென்ன, முதலாளி மூட்டை தூக்குறதா?’ இந்த எண்ணத்தை அவனிடம் கேட்டே ஆக வேண்டுமென மனம் பிரான்ட, “அங்க என்ன கும்பல்?” என்ற காண்டீபனின் கர்ஜனை குரலில் கூட்டம், ‘ஐயோ, வாங்கடி வேலையை பாப்போம்!’ என ஓடிவிட்டனர்.

தனித்து நின்றிருந்த கோகிலாவை காட்சிபொருளாக்க விடாமல், “ஏய், உள்ள வந்து உட்காரு” என்றான் காண்டீபன் கடுமைக்கு கடமைப்பட்டவன் போல.



“டோன்ட் சே ‘ஏய்’ ஓகே?” கோவமாய் அவள் கத்தியதில் ‘இத பாருடி’ அதிசயத்தை காண்பதை போல எல்லோரும் வேடிக்கை பார்க்க, காண்டீபனுக்கு முகம் கருத்தது. கோவத்தை கட்டுப்படுத்தியபடி, “உள்ளே வாங்க மேடம்” என்றான் பல்லை கடித்துக்கொண்டு.



இதற்குமேல் அங்கே நிற்க முடியாது, நின்றாலும் இன்பன் கண்டுக்கொள்ள போவதில்லை என்பதை அறிந்துக்கொண்ட கோகிலா, சத்தம் கேட்கும்படி தன் ஹீல்ஸ் செருப்பை தரையில் அழுத்திக்கொண்டு உள்ளே செல்ல, கடைக்கண்ணால் அவள் உள்ளே சென்றுவிட்டதை உறுதிசெய்துகொண்டான் இன்பன்.



ஆபிஸ் ரூம் சென்றதும் காண்டீபனுக்கு எதிரே இருந்த கதிரையில் ‘பொத்’தென அமர்ந்தாள் அவள். கோப்புகளில் இருந்து தலையை மட்டும தூக்கி பார்த்த காண்டீபன் மீண்டும் குனிந்து பைலை புரட்ட, அந்த சிறு அறையை தன்னால் முடிந்தமட்டும் பொறுமையாய் வேடிக்கை பார்த்தாள். பேப்பர் வெயிட்டில் இருக்கும் டிசைனை கூட அவள் விடாமல் பார்த்து முடித்திருக்க, அதற்க்கு மேல் பார்க்க காண்டீபன் முகத்தை தாண்டி பெரிதாய் ஒன்றும் இல்லை. கதிரையில் சாய்ந்து சௌகர்யமாய் அமர்ந்துக்கொண்டு வலக்கன்னத்தில் கைகொண்டு ஊனியபடி, கடைசியாய் போனால் போகிறதென அவன் முகத்தை அவள் ஆராய, தன் முகத்தை ஊடுருவும் பார்வையில் பட்டென நிமிர்ந்தான் காண்டீபன்.



அவன் பார்த்ததும் முகத்தை திருப்பிகொள்வாள் என அவன் எதிர்ப்பார்க்க, அவள் கண்மணிகள் கூட அசையவில்லை அவனை விட்டு. இறுதியில் அவன் தான் பார்வையை தளைத்துக்கொள்ள வேண்டியதாய் போனது.

“இப்போ எதுக்கு என்னையே பார்க்குற?” கேட்டே விட்டான்.

அவளோ அசராமல், “டெய்லி சட்டையை அயர்ன் பண்ணும்போதே, உங்க மூஞ்சியும் சேர்த்து அயர்ன் பண்ணிடுவீங்கலோ?” காலையில் தடைபட்ட ஆராய்ச்சியை இப்போது தொடர்ந்ததன் விளைவாய் இந்த அறிய சந்தேகம் அவளுக்கு உதயமாகியிருக்க, “என்ன?” என்ற காண்டீபனிடம் வெளிப்படையாய் சினம் தெரிந்தது.



தன் போஸை கூட மாற்றாது அப்படியே இருந்த கோகிலா, “உங்களை பார்த்ததுல இருந்தே இந்த டவுட் எனக்கு இருக்கு!” தீவிரமாய் முகத்தை வைத்துக்கொண்டு கேட்க, அவன் பதில் சொல்ல முடியாமல் இருக்கையை விட்டு எழுந்துவிட்டான். அங்கும் இங்கும் அறைக்குள்ளே நடந்தவன் சினத்தை அடக்க பாடுபட, அதை பார்க்க பார்க்க கோகிலாவிற்கு ‘அமைதி... அமைதி...’ என வாத்து நடை நடக்கும் ஷிஞ்சான் போல அவன் காட்சியளித்தான். சிரிப்பை வாய்க்குள்ளே அடக்கிக்கொண்டு அவள் உடல் மட்டும் குலுங்குவதை கண்டவனுக்கு ஆத்திரம் மேலெழ, “ஏய், என்ன நினச்சுட்டு இருக்க நீ? ரொம்ப ஓவரா போற? சிரிக்குற அளவுக்கு என்ன நடந்துச்சு?” எகிறிக்கொண்டு வந்தான் காண்டீபன்.



கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாமல் எழுந்து நின்றவள், “நீங்க நடந்ததே சிரிப்பா தான் இருக்கு எனக்கு! மோர்ஓவர் சிரிச்சா தான் மனுஷன்! நீங்க அமேசான் காட்டுல தீப்பிடிச்சப்போ தப்பிச்சு வந்துட்டீங்கன்னு நினைக்குறேன்!!” மேலும் அவனை சீண்ட, “ஏய்ய்ய்...” என விரலை நீட்டியபடி அவள் அருகே கோவமாய் வந்தான் காண்டீபன். புயல் கரையை கடக்க காத்திருந்தது.



வேலையில் கவனம் இருந்தாலும், இன்பனின் ஒரு கண் கோகிலாவின் மீதே இருந்தது. கண்ணாடி கதவு வைத்த அறை தான் என்பதால் காட்சிகள் தெளிவாய் கண்ணில் பட, என்ன நடக்கிறது என புரியாவிடினும், தம்பியின் கோபமுகமும், கோகிலாவின் இடைவிடாத வாயசையும் அங்கே ஒரு போர்க்களம் உருவாக போவதை அவனுக்கு உணர்த்த வேலையை அப்படியே போட்டுவிட்டு அலுவலக அறைக்கு ஓடினான் இன்பன்.



கதவை கூட தட்டாமல் அவன் உள்ளே நுழைந்திருக்க, “உங்களுக்கு கிச்சு கிச்சு மூட்டுனாலாது சிரிப்பு வருமா? இல்ல அப்பவும் கரப்பான்பூச்சி காதுக்குள்ள போனமாறியே நிப்பீன்களா?” என்றாள்.



காண்டீபன், ‘ஏய்’ என்பதற்குள், “கோகிலா....??” என அழைத்த்திருந்தான் பேரின்பன். செய்த வேலையின் பயனாய் வியர்வை சொட்ட சொட்ட, அரக்கபறக்க ஓடி வந்தவனை கண்டு, “அட, மாமாவே வந்துட்டாரே! அவர்கிட்டே கேப்போம்!” என்றவள் அடுத்து பேசும்முன், “நீ ஒன்னும் கேட்க வேணாம்! முதல்ல இங்கருந்து வெளில போ!!” என்றான் இன்பன் உத்தரவாய்.



காண்டீபன் மூச்சுவாங்க அவளை முறைக்க, இன்பன் மீண்டும், “வெளில போ கோகிலா” என்றதும், அழுத்தமான அவன் சொல்லை மீற முடியாமல் ‘மறுபடியும் ஆராய்ச்சி தடைபட்டுடுசே!’ என்ற கவலையில் வெளியே சென்றாள். அவள் போனதும் ஒரு டம்ளர் தண்ணீரை ஒரே மூச்சில் வாயில் சரித்த காண்டீபன், மொபைலை எடுத்து அதில் தெரிந்த தன் முகத்தை அங்கும் இங்கும் திருப்பி பார்த்துக்கொண்டிருந்தான், கோவம் குறையாமலே!



கோகிலாவிற்கு முன்னே விறுவிறுவென நடந்து சென்றுக்கொண்டிருந்தான் இன்பன். “இதை முன்னாடியே செய்துருக்கலாமே மாமா?” அவள் சொல்ல, “எதை?” என்றான் இன்பன் புரியாமல்.



“என்னை உங்ககூட வச்சுக்குறதை!!?” சிரிப்ப்பை அடக்கி அவள் சொன்னதும், நடையை சட்டென நிறுத்தியவன், “அப்போ வேணுன்னே தான் இப்படி நடந்துகிட்டியா அவன்கிட்ட?” என்றான் கண்களில் கனல் தெறிக்க.



“ஐயையோ, இல்ல மாமா! நிஜமாவே எனக்கு சந்தேகம் இருந்துச்சு, அதான் கேட்டுகிட்டு இருந்தேன்!! எனக்கென்னவோ அவருக்கு பிரஷர் இருக்கும்ன்னு தோணுது மாமா! ரொம்ப மூச்சு வாங்குது, வியர்த்து கொட்டுது, கண்ணுல்லாம் சிவ சிவன்னு ஆகுது! விரல் கூட நடுங்குச்சு! எதுக்கும் நம்ம டாக்டர்கிட்ட காட்ட சொல்லுவோமா?” கொஞ்சமும் சிரிப்பின்றி அவள் சொல்லிட, ‘ஆங்!!’ என மெலிதாய் வாய் பிளந்து அவள் முகத்தையே உற்று பார்த்தான் இன்பன்.

‘எந்த நேரத்துல இவளை பெத்துருப்பாங்க?’ என்ற கேள்வி மட்டுமே அப்போது அவன் மண்டைக்குள் அங்கும் இங்கும ஓடியது.



அவன் அசைவின்றி நின்றதை கண்டு, “மாமா, நீங்க பயப்படாதீங்க!! உங்க தம்பியை எப்படியும் காப்பாத்திடலாம்! அப்டி அவருக்கு சரியாச்சுன்னா, பழனிக்கு பதினேழு முறை மொட்டை போட்டு, முட்டி போட்டே காவட்டி எடுக்க வைப்போம்!!” என்று இன்னும் தீவரமாய் அவள் சொன்னதும், சிரிப்பில் உதடு துடித்தது இன்பனுக்கு.



“யாரு மொட்டை போட்டு காவட்டி எடுக்கணும்?”
“வேற யாரு? நம்ம மீசை வச்ச காட்ஸில்லா, காண்டு மச்சான் தான்!!” தோளை குலுக்கிக்கொண்டு அவள் சொன்ன தினுசில் அடக்கமாட்டாமல் வாய்விட்டே சிரித்தான் பேரின்பன்.



அறைக்குள் இருந்து இருவரையும் நோட்டமிட்ட காண்டீபன், வாய்விட்டு இன்பன் சிரிப்பதையும், அவன் சிரிப்பதை பார்த்து சுற்றி இருந்த ஆட்களும் குறிப்பாக பெண்கள் சிரிப்பதை கண்டு காண்டாகி, “அவனை பார்த்தா தான் எல்லோருக்கும் சிரிப்பு வருமா? என்னை பார்த்தா ஒருத்தருக்கும் சிரிக்கவே தோணாதா?” என மனசுக்குள் குமைந்துபோனான். ஆனால் அவனுக்கு தெரியாது, அந்த சிரிப்பே அவனை மையப்படுத்தி தான் என்று!



“உனக்கு வாய் மட்டும் ஆண்டவன் டபுள் எக்சல்லா குடுத்துட்டான்னு நினைக்குறேன்” சிரிப்பினூடே இன்பன் சொல்ல, “அதெல்லாம் எல்லாருக்கும் அமையாது மாமா!!” அவன் வஞ்சபுகழ்ச்சியை வஞ்சமே இன்றி ஏற்றுக்கொண்டாள் கோகிலா.



“நீ நல்லா பேசுனா, அவனும் நல்லா பேசுவான்!!!” என்று தம்பிக்கு அவன் ஆதரவாய் பேச, பதில் சொல்ல வந்தவள், சட்டென குரலை தாழ்த்தி, “மாமா, மாமா, சட்டுன்னு பார்த்துடாதீங்க, பின்னால ஒரு மஞ்ச புடவை உங்களையே குறுகுறுன்னு பார்க்குது” என்றாள்.



அவனும் குரலை தாழ்த்திக்கொண்டு, “அவளுக்கு எதிர்பக்கம் தலையில துண்டு கட்டுன பையன் அவளையே முறைச்சு பார்ப்பானே?” என்று ஆரூடம் சொல்ல, “ஆமா மாமா!!!! எப்படி திரும்பி பார்க்காமயே கரெக்ட்டா சொல்றீங்க?!!” என அதிசயித்தாள் கோகிலா.



“அதான் அவ முறை பையன்” என்ற இன்பனின் பதிலில் “முறைபையனை வச்சுக்கிட்டே உங்களை சைட் அடிக்குறா பாரேன்!!” என்றவள் கலகலவென சிரிக்க, அனைவர் கவனமும் இவர்களிடத்தில் குவிவதை கண்டவன், “சரி சரி நீ போய் சுத்தி பாரு! மிஷின் எல்லாம் எப்படி ஓடுதுன்னு கண்டுபுடி!!” அவசரமாய் அவளை அப்புறப்படுத்த நினைத்தான்.



“இதென்ன தாஜ்மகாலா? போங்க மாமா!!” அவள் நகர்வது போலவே தெரியவில்லை.

இன்பன், ‘இவளை என்ன செய்ய?’ என்று இடுப்பில் கைவைத்து அவளை உறுத்து பார்க்க, “வாவ்வ்வ்வ் மாமா!!! நீ ஒரு கருப்பு கமலஹாசன்! எனக்கே உன்னை சைட் அடிக்கணும் போல இருக்கு!!” சிலாகித்து அவள் பேசியதில் விக்கித்து நின்றான் இன்பன். சுத்திமுத்தி ஆட்கள் கவனிக்கிறார்களா என பதைப்புடன் அவன் பார்க்க, ஒரிருவர் காதுகளில் அவள் சொன்னது சென்றடைந்துவிட்டது போலும். வாய் மேல் கைவைத்து கிளுக்கி சிரித்துக்கொண்டிருந்தனர்.



அவன் முகத்தை இன்னமும் ரசிப்புடன் அவள் பார்த்துக்கொண்டு நிற்க, அவனுக்கு தான் சங்கடமாய் போனது. பிடரி சிகையை அழுந்த கோதிக்கொண்டவன், குரலை மிகதாழ்த்தி, “ஏய்... உனக்கு ஏதாது கூறு இருக்காடி? இத்தனை பேரு இருக்க இடத்துல கொஞ்சம்கூட வெட்கமே இல்லாம பேசிகிட்டு இருக்க? பொண்ணா நீயெல்லாம்?” என்றுவிட்டான். முழு கடுமையும் காட்ட முடியாமல், மெலிதாய் வெட்கம் வேறு வந்து தொலைத்தது அவனுக்கு.



“ஏன் மாமா? உங்க கண்ணுல நான் பொண்ணா தெரியலையா?” அவனை விளையாட்டுக்கு சீன்டிக்கொண்டிருந்தாள் கோகிலா. ஆனால், அவன் கண்கள் தான் தன் கேள்விக்கு விடை தேடி அவன் தடுத்தும் கேட்காமல் அவள் மேனியில் ஊர்வலம் நடத்தியது. அதில் மூச்சுமுட்ட முன்நெற்றியில் இருகைகளையும் வைத்து அழுத்திக்கொண்டான்.



அவள் வருந்தும்படி பேசி அனுப்ப அவனுக்கு ஒரு நிமிடம் ஆகாது, அவனால் அதை செய்ய முடியாது போனதுதான் அவனை தொல்லை செய்ய, நின்றுவிட்டான் அப்படியே!! விளையாட்டு போதும் என எண்ணிய கோகிலா, “நான் மில்லை சுத்தி பார்க்குறேன், நீங்க உங்க வேலையை பாருங்க!!” என்று நகர்ந்துவிட, அவனறியாது, ‘ஹப்பாடா!’ பெருமூச்சு வெளிவந்தது.

‘ஆம்பளைங்களை நல்லவனாவே இருக்க விடமாட்டாளுங்க’ அவன் மனம் புலம்ப, தன் வேலையை பார்க்க சென்றான்.



மதிய உணவு நேரம் வந்ததும் ஒண்டிவீரர் தன் இருக்கையில் இருந்து எழுந்து மாடியில் இருக்கும் தங்களது ஓய்வு அறைக்கு சென்றார். எத்தனை கடைகள் வந்தாலும் கைராசி கடையென பெயர் வாங்கிய அவர்களின் ‘சுபிக்ஷம் ஜுவல்லர்ஸ்’க்கு தான் கோபியில் காலாகாலாமாய் மதிப்பு. எப்போதும் கூட்டம் இருந்துக்கொண்டே இருக்கும் தங்கள் கடையில், நகை வாங்குவோர் ஒன்டிவீரரின் கையால் அதை பெற்றுகொள்வதை ராசியென கருத அதற்காகவே முழுநேரமும் தங்கள் கடையில் இருந்துகொள்வார் அவர்.



எப்போதும் உதவியாள் வீட்டில் இருந்து சூடான உணவு கொண்டு வந்து கொடுப்பது வழக்கம் என்பதால், அவர் ஓய்வறையில் சென்று அமர்ந்திருக்க, அறையின் கதவை திறந்தார் சிவகாமி.

மனைவியை அங்கே எதிர்பார்த்திராத ஒண்டிவீரர், “சிவா, நீ என்ன இங்க?” என்றிட, “ஏன் உங்களை பார்க்க வரக்கூடாதா?” புது பெண் போல வெட்கத்தோடு கேட்ட சிவகாமியை அளவிடும்பார்வை பார்த்த வீரர், “அப்போ என்னால உனக்கொரு காரியம் ஆகணும், சரிதானே?” என்றார் சரியாக. மனைவியின் சூது இத்தனை வருட தாம்பத்தியத்தில் அவர் அறியாததா?!



‘க்கும்’ என நொடித்துக்கொன்டாலும், தன் கைகளாலேயே ஆசையாய் உணவை பரிமாறினார் சிவகாமி. ஆறேழு கவளங்கள் அவர் தொண்டை இறங்கியதும், மெல்ல பேச்சை தொடங்கினார் சிவகாமி.



“ஏங்க?”

“சொல்லுங்க!!!”

“ப்ச்! கிண்டலா?” குரல் மிரட்டலாய் மாறியது.

“ஹாஹா, சொல்லுமா”

“நம்ம பேரனுக்கு கல்யாண வயசு தாண்டுதே!!” இழுத்தார் சிவகாமி. அவர் இன்பனை தான் சொல்கிறார் என புரிந்துக்கொண்ட வீரரும், “அதான் மாணிக்கம் பொண்ணை பார்த்துருக்கோமே? பரிசத்துக்கு நாள் பார்த்துடலாமா?”



இலையில் தீர்ந்து போன பொரியலை அள்ளி வைத்தவர், “நம்ம வீட்லயே பொண்ணு இருக்கபோ எதுக்குங்க வெளியிடத்துல பார்க்கணும்?” என்றார் பீடிகையாய்.



வெடுக்கென நிமிர்ந்தவர், “என்ன சொல்ற?” என்றார்.

“நம்ம பேத்தியே வந்துட்டாலே? அவளையே நம்ம இன்பனுக்கு முடிச்சு வச்சா என்ன? சொந்தமும் விட்டு போகாம இருக்குமுல்ல?”

“இந்த எண்ணத்தை விட்டுடு சிவகாமி! ஒருத்தருக்கு வாக்கு கொடுத்துட்டு அதை மாத்தி பேசுறது தப்பு! அதுலயும் அந்த சுசீலா பொண்ணு இன்பன் மேல ஆசையா இருக்குறமாறி தெரியுது! கேள்விபட்டேன்! என்கிட்டே பேசுனமாறி வேற யார்ட்டையும் பேசாத” என்றவர் கைகழுவிவிட்டார், அந்த விஷயத்தையும் சேர்த்து.



“ண்ணே!! செம்ம சாப்பாடுன்னே இன்னைக்கு!!” காரகுழம்பும் கருவாட்டு தொக்கும் பச்சைக்கிளியின் வயிறை நிறைக்க, மதிய உணவு இடைவேளையில் அந்த பெரிய அரசமரத்தின் நிழலில் சாய்ந்து படுத்திருந்தனர் மூவரும்.



“உண்ட மயக்கத்துல உறங்கி புடாதடே, இன்னும் வேலை கடக்கு!” அடுத்து அவன் செய்யபோவதை இப்போதே கண்டுக்கொண்டு அறிவுறுத்தினான் பேரின்பன்.



“கண்ணை சுழட்டிக்கிட்டு வருதுன்னே! கொஞ்ச நேரம் தூங்கிட்டு தான் போவோமே!!” என்ற வெட்டுகிளியிடம், “ஏற்கனவே மணி மூணாச்சு! இன்னும் பத்து நிமுஷம் தான், அடுத்து வேலையை பார்க்க போனும்!!” முடிவாய் சொல்லிவிட்டான் இன்பன்.



சலித்துகொன்டாலும், “அப்போ நீ பாட்டு பாடுன்னே! தூக்கம் போயி சுறுசுறுப்பாகிடுவோம்! என்னாங்குற?”

“ஆமா ஆமா, நீ பாட்டு பாடி எம்புட்டு நாளாச்சு? எதுனா இங்குலீஷு பாட்டு பாடு, சூப்பரா இருக்கும்!!!” இருகிளிகளும் அவனை விடாது தொந்தரவு செய்தது. முடிந்தவரை பிகு செய்து பார்த்த இன்பன், போனால் போகிறதென, “சரி பாடுறேன், எவனாது சுத்திலும் இருக்கானுங்களான்னு பாரு” என்றான் எப்பொழும் போல.



“ஏன்னே எப்பவும் இப்படியே சொல்ற?”

“அடேய், பொதி தூக்குற பயலுக்கு இம்புட்டு அறிவான்னு கண்ணு வச்சுடுவானுங்கடா!!” என்று சொல்ல, “சரிதான் சரிதான்” என தலையை உருட்டிக்கொண்டு சுற்றிலும் தேடினர் கண்களால். ஒருவரும் இல்லை என தெரிந்ததும், “பாடுண்ணே” என்றனர் ஆவலாய்.

தொண்டையை செருமி குரலை சரி செய்ய முயன்றான். பின் தண்ணீரை குடித்து ‘கர்ர்ர்... கர்ர்ர்ர்...’ என புதுவித சாதகம் செய்தவன், “ஆரம்பிக்கலாமா?” என கேட்க, கரகோஷத்தில் காதை பிளக்க செய்தன கிளிகள்.



“ஆஆஆஆ........ அடி வாட்டுடி ராக்மம்மி, ப..லன்கின் (palanquin) நெளிப்பு, மை ஹார்ட்டு ஷேக்குதடி! சிறு கிளாஸு நோஸ்குத்தி, மாணிக்க ரெட்டு, மச்சானை புல்லிங்குடி!!!!” கேப்டன் போல ஆடிக்கொண்டே, இன்பன் பாட, அவன் குரலை தாண்டி பெருத்த சத்தத்தோடு கேட்டது, ஒருத்தியின் சிரிப்பொலி. ஆட்டம் பாட்டத்தை திடுக்கிட்டு நிறுத்தியவன் சத்தம் கேட்ட வழி பார்க்க, மரத்தின் பின்னிருந்து வயிற்ரை பிடித்துக்கொண்டு சிரிப்பை அடக்கமுடியாமல் கண்ணில் நீர் வர பெருநகையோடு எட்டிப்பார்த்தாள் கோகிலா.

சிரிப்பை நிறுத்தமுடியாமல் பாடுபட்டபடி, “இ...இதான் இங்கிலி..ஷ் சாங்கா? நீங்க கூட எம்.ஏ பிலோஸோபின்னு ஊர ஏமாத்துறீங்கன்னு நினைச்சேன், பட் ஆஸம் மாமா!!” என்றாள் வஞ்சபுகழ்ச்சியாய். கையும் களவுமாய் மாட்டிவிட்ட அவமானத்தில் தன் அல்லக்கை கிளிகளை அவன் கொடூரமாய் முறைக்க, “எல்லா இடமும் பாத்தோம், ஆனா மரத்துக்கு பின்னாடி மட்டும் பாக்கலண்ணே!!” என்று பல்லை காட்டிவிட்டு பஞ்சாய் பறந்து சென்றன.

-தொடரும்...
 
Top