Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோகுலத்தில் ராமன் -10

Advertisement

பிரியா மோகன்

Tamil Novel Writer
The Writers Crew
*10*

ஒருமுறை பார்த்தேன்,

மறுமுறை மயங்கினேன்

சிலமுறை சிரித்தேன்

பலமுறை பேசினேன்

அதுவரை தெரியவில்லையடி!

நான் உன்னை காதலிக்கிறேன் என்று!!!

'மானம் போச்சே!!!' தன் அகண்ட வலக்கையால் முகத்தை மூடிக்கொண்டு நின்றுவிட்டான் பேரின்பன். காதுக்குள் புகுந்து கதறிக்கொண்டிருந்த அவள் பெருநகையொலி அவனை கண்களை இறுக்கி மூடிக்கொள்ள செய்ய, 'இந்த அவமானம் உனக்கு தேவையாடா?' என மனம் பட்ட அவமானத்தில் அழுதுக்கொண்டிருந்தது.

'இவ இதை காலத்துக்கும் விடவே மாட்டாளே!!' மூளை எதிர்க்காலத்தையும் யோசிக்க தொடங்க, 'கொஞ்சம் கம்முன்னு இருங்க' என இரண்டையும் அடக்க முயன்றான் இன்பன். சத்தம் பல நிமிடங்களுக்கு பின்னர் மெல்ல மெல்ல தேய்ந்து சிறிதாய் குறைந்து, அருகே கேட்பதை போல தோன்றவே 'போச்சு!! வந்துட்டா, வந்துட்டா!! கிட்ட வந்துட்டா!!” அப்படியே ஓடிடு டா இன்பா!' மூளை சொன்ன அறிவுரையை அவன் நிறைவேற்றும் முன்னே, “இன்பா, உன் கெத்துக்கு நீ ஓடி ஒளியலாமாடா?" என அதே மூளை மாற்றி பேச 'அவ்வ்வ்வ்' என கண்களை திறக்காமலே நின்றிருந்தான்.

சிரிப்பை சிரமப்பட்டு குறைத்த கோகிலா, முகத்தை மூடியிருந்த அவன் கையை விலக்கிவிட்டு, “கண்ணை திறங்க மாமா!””” என்றாள். கீழுதட்டை அழுந்த கடித்துக்கொண்டு நிற்பவனை காண காண அவள் உதடுகள் சிரிப்பில் துடித்தன. மீண்டும், “கண்ணை திறங்க மாமா!!” என்றதும் கண்ணை திறந்தவன் அரசமரத்தில் அத்திபழம் பழுத்திருக்கிறதா என அண்ணாந்து பார்க்க, அவனை இப்போதைக்கு சீண்ட வேண்டாமென முடிவு செய்தாள் கோகிலா.



“மாமா!! எனக்கு தூக்கம் வருது! என்னை வீட்ல கொண்டு போய் விட்டுடுறீங்களா?” உண்மையில் அவளுக்கு தூக்கம் ஒன்றும் வரவில்லை. அவன் இயல்புக்கு திரும்பும்வரை தான் அங்கே இருந்தால் சங்கோஜப்படுவானே என்று, அங்கிருந்து கிளம்ப எண்ணினாள். அதுவுமின்றி அவள் பார்க்க அங்கே ஒரு வேலையும் இல்லை!



அவளை நேர்கொண்டு பாராமலே, “ஹான்.. ஹான்..” என்ற ஒப்புதலோடு, ‘விட்டால் போதும்’ என்று முன்னே ஓடினான் இன்பன். சிறுபிள்ளையென செல்பவனை கண்டு புன்னகை மறையா முகத்துடனே அவன் பின்னே சென்றாள் கோகிலா.



பைக்கை உயிர்ப்பிக்க, கிக்கரை அவன் மாங்கு மாங்கென உதைக்க, நேரம் பார்த்து கிளம்புவேனா என சதி வேலை செய்தது அது. ‘நேரம்கெட்ட நேரத்துல சாவடிப்பியே நீ!!’ திட்டிக்கொண்டே மீண்டும் மீண்டும் அவன் உதைக்க, ‘ம்ஹும்’... ‘வாய்ப்பில்லை ராஜா’ என நமட்டு சிரிப்பு சிரித்தது அவன் சுசுக்கி.



‘கிளம்பிடு...

கிளம்பிடு...

கிளம்பிடு...’ உதைத்துக்கொண்டே அவன் ஜபம் போல உரைத்துக்கொண்டே இருக்க, வேடிக்கைபார்த்து கொண்டு நின்ற கோகிலா, அவன் முதுகில் ஒரு விரலால் சுரண்டினாள்.



அவளை பார்த்தும் பார்க்காதபடி, ‘என்ன?’ என தலைதூக்கினான் இன்பன்.



“ஏர்லாக் ஆன பைக்கை ஸ்டார்ட் பண்ண ஐஞ்சு நிமிஷம்,

ஸ்பார்க்ப்ளக் போன பைக்கை ஸ்டார்ட் பண்ண ஒரு மணி நேரம்,

ஆனா, சாவியே போடாத பைக்கை ஸ்டார்ட் பண்ண, ஒரு யுகமே ஆனாலும் முடியாது மாமா!! முடியாது!!!”



அவள் சொன்னதும் தான் கவனித்தான், சாவியே போடாமல் இத்தனை நேரம் தான் மாங்கு மாங்கென உதைத்துக்கொண்டிருப்பதை. மனது சிறுகுழந்தையென ‘இதுக்குமேல தாங்க முடியாது குருநாதா!!!” என்று ஓலமிட்டது.



கெத்தை விடாமல், “எங்களுக்கு தெரியும்!! சாவி இல்லன்னாலும் ஸ்டார்ட் ஆகுறமாறி ஒரு புது ரிசர்ச்ல இருக்கேன், அதை டெஸ்ட் பண்ணும்போது நீ வந்துட்ட!!” என்று சொல்லிக்கொண்டே சாவி போட்டு வண்டியை அவன் இயக்கிட, பின்னே ஏறி அமர்ந்தவள், “இவ்ளோ மொக்கையா சமாளிச்சுருக்க வேணாம்!!” என்றதும், ‘ஐயோகோ!!’ என்று வாயை ஜிப் போட்டு மூடிக்கொண்டு சாலையில் சென்றான் இன்பன்.



சிறிது தூரம் சென்றதும், “மாமா, உங்களுக்கு எந்த பாட்டு ரொம்ப பிடிக்கும்!?” கொஞ்சமும் சம்பந்தமே இல்லாது அவள் கேட்க, “ஊரோரம் புளியமரம், உசுப்பிவிட்டா சலசலக்கும்!!” அவன் கத்தி பாட, “ப்ச்!! போங்க மாமா!!” அவன் முதுகிலேயே ஓங்கி அடித்தாள் கோகிலா. எதிர்பாராத அடியில் தடுமாறியவன், அவளை திருப்பி அடிக்க, இடக்கையை பின்னுக்கு கொண்டு செல்ல, சுதாரித்து நகர்ந்திருந்தாள் கோகிலா. இயல்புக்கு திரும்பிவிட்டிருந்த இன்பன், “என்மேல கையை வைக்க, குஸ்தி ஆளுங்களே நடுங்குவானுங்க! நீ அசால்ட்டா அடிக்குறியா?” என கேட்டுக்கொண்டே அமர்ந்திருந்த அவள் தொடையில் இருவிரலால் ‘நறுக்’கென கிள்ள, வலியில் அவள் ஆடியபோது பேலன்ஸ் இன்றி ஆடும் பைக்கை சமன் செய்ய இருகைகளையும் உபயோகித்தான் இன்பன். அவளோ பதிலுக்கு அவன் இடையில் கை வைத்து குறுகுறுப்பு செய்ய, கூச்சத்தில் துள்ளி ஆடினான் அவன்.



“ஏய்.. எவ்ளோ வேணாலும் அடி, ‘புருபுரு’ மட்டும் பண்ணாத!!” வண்டி ஓட்டிக்கொண்டே கூச்சத்தில் நெளிந்தபடி அவன் கத்த, சாலையில் அவர்கள் விளையாட்டை கண்டவர்கள், வாயை பிளந்தனர்.

“ஏய் எல்லாரும் பாக்குறாங்கடி, விடு என்னை!” அதட்டலாக சொன்னவன், அவளது விடாத தொல்லையில், “கெஞ்சி கேக்குறேன் விட்டுடு” என க்ரவுண்ட் ப்ளோர் வரை இறங்கி கெஞ்சினான்.



ஊர்க்காரர்களின் வேடிக்கையை கண்டவளும், போனால் போகிறதென, “இனி என்கிட்டே வம்பு வச்சுக்காத மாமா, தாங்கமாட்ட!!” என்றதும், மின்னல் வேகத்தில் அவள் இருகைகளையும் தன் முன்னே இழுத்து வயிற்ரோடு ஒட்டி ஒரு கையால் இறுக பிடித்துக்கொண்டவன், மறுக்கையால் பைக்கை செலுத்திக்கொண்டே, “வீட்டுக்கு வாடி கொக்கிமூக்கி, மூக்கை அறிஞ்சு முறுக்கு பிழியுறேன்!” என்றான் அலட்டலாய்.



“மாமா.....!!!” என சினுங்கியவள் மீண்டும் அவனுக்கு கூச்சம் மூட்ட எண்ண, அவள் கை தான் சிறைபட்டிருக்கிறதே!! “விடுங்க மாமா!! ப்ளீஸ்.. ப்ளீஸ்!!” எத்தனை ப்ளீஸ் போட்டாலும் அவன் இறங்கி வரவே இல்லை. தன் இருகைகளையும் அவன் ஒரு கையால் இறுக பிடித்திருந்ததில் அவன் பலம் புரிய, அவன் முதுகோடு ஒட்டியிருக்கும் தன்னை கண்டு விதிர்த்து போனாள் கோகிலா.



தந்தையை தாண்டி யாருடனும் இதுவரை பைக்கில் சென்றிராதவள், பேரின்பனோட அடம்பிடித்து இன்று வெளியே வந்திருக்க, சட்டென அவனோடான இந்நெருக்கத்தில் புதுவித உணர்வில் காற்றிலாடும் நெற்பயிரென நெளிந்தாள் கோகிலா. அருகே உணரும் ஆண்மையின் வாசம், திரண்டு நிற்கும் வலுவான அவள் தோள்கள், சுற்றி வளைத்துக்கொள்ள சொல்லி தூண்டும் அவன் புஜங்கள், அவன் பரந்த முதுகின் பின்னே அடங்கியிருக்கும் அவள் மொத்த உருவமும், அப்படியே அவனோடு ஒட்டிக்கொள்ள சொன்னது.



இதெல்லாம் அவனுக்கு தோணவே இல்லை போலும். இறுக்கிய பிடியை விடாது, சாலையிலேயே கவனமாய் இருந்தான். ஏகாந்த நிலையில் அவன் முதுகில் முகம் சாய அவள் முனையும்போது, பிடித்திருந்த அவன் கைகளின் பிடி திடுமென விலக, சடன் ப்ரேக் அடித்து பைக் நிற்க, இன்பனோடு வேகமாய் மோதிக்கொண்டாள் கோகிலா. கைகள் அவளறியாது அவன் இடையை இறுகபற்றியிருந்தது.



ப்ரேக் அடித்த பைக்கின் முன், இடையில் அள்ளி சொருகிய பாவாடையும், தூக்கி கட்டிய கொண்டையுமென ஒரு மினி குழாயடி சண்டைக்கு தயாராய் இருப்பவள் போல வெறிக்கொண்டு நின்றிருந்தாள் சுசீலா.



திடீரென அவள் குறுக்கே வந்து நின்றதும், “வண்டி முன்ன வந்து இப்படிதான் நிப்பியா? அறிவில்ல” என எரிந்து விழுந்தான் பேரின்பன். இன்னமும் கோகிலா அவன் இடையில் இருக்கும் தன் கைகளை எடுத்தபாடில்லை.



இன்பனின் பேச்செல்லாம் சுசீலாவின் காதிற்குள் சென்றால் தானே! அவள் கண்கள் இரண்டும் இன்பனின் இடையை இறுகப்பற்றியிருந்த கோகிலாவின் கைகளிலேயே இருந்தது.



பதில் சொல்லாமல் வழி மறித்து நிற்ப்பவளை கண்டு இன்னும் அவன் எரிச்சல் அதிகமாக, “ம்ச்! இப்போ எதுக்கு குறுக்க வந்து நிக்குற?” அவன் வீட்டிற்கு செல்லும் ஒற்றையடி பாதையது! மெயின் ரோட்டில் போவதை விட, ஆள் நடமாட்டம் குறைந்து வாக்கால் ஓரமாய் இருக்கும் இந்த சிறு பாதையையே அவன் எப்போதும் விரும்புவான். இதை அறிந்து தான் அவனுக்காக காலை கல்லூரிக்கு செல்வதை விடுத்து இங்கே வந்து அமர்ந்திருக்கிறாள் சுசீலா.



முற்பொழுது கோகிலாவுடன் அவனை கண்டதும் உள்ளுக்குள் புகைந்த தீ, அவளை மேற்கொண்டு செல்ல விடாமல் தடுக்க, எந்நேரம் ஆனாலும் சரி, அவனோடு பேசி ஒரு முடிவுக்கு வந்தே ஆகவேண்டும் என்ற தீர்மானத்தோடு இந்த பாதையில் வந்து உட்காந்திருக்கிறாள், உணவின்றி நிழலின்றி காலை முதல்! அத்தனை ஆத்திரம் அவளுள்!



இப்போதோ காலையை காட்டிலும் கோகிலாவின் அதீத நெருக்கமும், அதற்க்கு மறுப்பு சொல்லாத இன்பன், தன்னை கண்டதும் எரிந்து விழுவதும் அவள் ஆத்திரத்திற்கு ஆரத்தி எடுத்தன.



“கேக்குறேன்ல? மண்டைல நட்டு கிட்டு கழண்டு போச்சா?” இன்பனின் அதட்டலில் ஆங்காரமாக, “முதல்ல நான் கேக்குறதுக்கு பதில் சொல்லு மாமா! நான் இருக்க வேண்டிய இடத்துல ஒய்யாரமா உட்காந்துகிட்டு உன்கூட ஊரையே உலா வராளே யாரு இவ?” கேட்க, “தங்கத்தையோட தங்கச்சி பொண்ணு!!” என சுற்றுபதில் சொன்னான் இன்பன்.



சில நொடிகள் எடுத்து அவன் சொன்னதை உள்வாங்கிகொண்டவளுக்கு மனத்துக்குள் ‘திக்’கென்ற உணர்வு பரவியது. என்னதான் அவள் இன்பனுக்கு அக்கா மகள் முறையென்றாலும், அது ஒன்றுவிட்ட சொந்தமே! இப்போது இருப்பவளோ அவனுக்கு நேரடி முறையானவள்! அவளுக்கே அவனிடம் உரிமை அதிகம்! இன்னும் பல பல விடயங்கள் அவள் மூளைக்குள் குவிந்து விழ, விசும்ப தொடங்கிவிட்டாள் அங்கேயே!! முதிர்ச்சி பெறாத சிறு வயது அன்றோ!



அவள் கண்ணை கசக்கவும் “அட, என்னனு தான் சொல்லி தொலையேன்!” இன்னமும் இன்பனுக்கு புரியவில்லை. ஆனால் கோகிலாவுக்கு சுசியின் மனம் விளங்க, அவள் மனம் வெறுமை பூசியது. சுசியின் ‘மாமா’ என்ற அழைப்பே கோகிலாவுக்கு உவப்பாக இல்லை எனும்போது, ‘நான் இருக்க வேண்டிய இடம்’ என அவள் சொன்னது தட்டில் இட்ட தந்தூரியை யாரோ தட்டிவிட்டதை போல ஆனது அவளுக்கு.



“கேக்குறேன்ல?” இன்பன் குரலுயர்த்தி அதட்டியது கோகிலாவை திடுக்கிட செய்ததே தவிர சுசியை அது அசைக்க கூட இல்லை. எப்போதும் சிரித்து, கேலி பேசி, சிலமுறை கோவம் போல பேசி என அவள் பார்த்திருந்த இன்பன், சுசியிடம் அதட்டுவது அவளுக்கு ஏக்கத்தை கொடுத்தது. ‘ஒருமுறை கூட என்கிட்டே இப்படி மாமா அதட்டுனதே இல்லையே!’ என்ற எண்ணம் வர, மிட்டாயை மண்ணில் தவறவிட்ட பிள்ளையென வாடி போனாள்.



சுசீ விசும்பலோடே, “என்னை வண்டில ஏத்துனா மட்டும் தள்ளி உட்காரு, உரசாத, கையை வைக்காதன்னு ஆயிரத்தெட்டு கண்டிசன் போடுவ! இப்போ அவ மட்டும் உன்னை கட்ட்ட்டிபிடிச்சுகிட்டு உட்காந்துருக்கா, அதை நீ எதுவும் சொல்லாம, இருக்கன்னா என்ன அர்த்தம்!?” விட்டால் பார்வையாலேயே எரித்துவிடுவேன் என்பதை போல அக்கினி குழம்பை ஐந்து கரண்டி எடுத்து அவர்கள் மீது ஊற்றினாள். அவள் குற்றசாட்டை முன்வைத்த பிறகே தன்னை குனிந்து பார்த்தான் இன்பன்.



கை விரல்களை கோர்த்து பிடித்து தன் வயிற்ரோடு அணைத்தவாக்கில் கோகிலா வைத்திருப்பதை கண்டு, துணுக்குற்றவன், ‘அவள் தொடுகையை என் மனம் வேறுபடுத்தாமல் ஏற்றுக்கொண்டதா?’ என மனதோடு கேள்வி எழுப்பினான். அவன் முதுகோடு உரசிய அவள் தேகம் மெல்ல நகர்ந்தது. அவள் விலகல் அவனுள் ‘ஏன்...ஏன்...ஏன்... போற?’ என கேட்க, சுசீலா, “சொல்லு மாமா? என்னை விட்டுட்டு அவளை சேர்த்துக்கலாம்ன்னு குடும்பமா பேசி முடிச்சுட்டீங்களா? அதான் எங்கப்பார பரிசம் போட வரவிடாம செய்யுறியா?” என்றாள்.



‘அடிப்பாவி! அதுக்குள்ள எங்க எங்கயோ போறியே!’ என அதிர்ந்தவன், மறுத்து பேசும்முன், “யாரு மாமா இது?” சுண்டி போன முகத்துடன் தெம்பேயின்றி வினவினாள் கோகிலா.



“அது..... நம்ம சொந்தம் தான்!! உனக்கு தங்கச்சி முறை!!” பொறுமையாய் அவன் பதிலளித்ததில் பொறுமையிழந்த சுசீ, “ஆங்! ஏன் தங்கச்சின்னு சொல்ற, அவ சக்காளத்தின்னு வெட்டவெளிச்சமா தான் சொல்லேன்!!” என கத்த, மேலும் முகம் வாடிய கோகிலாவின் கன்னங்கள் சிவந்து போய்விட்டது அழுகை எட்டிப்பார்க்கும் சாயலில்.



பைக்கை சைட் ஸ்டேன்ட் போட்டவன், முன்பக்கம் காலை நீட்டி இறங்கி, “சுசீலா....!!! என்ன பேசுறோம்ன்னு யோசிச்சு தான் பேசுறியா?” கண்கள் சிவக்க ருத்ரமூர்த்தியாய் நின்றான் அவள் முன். அவன் ரௌத்திரம் கண்டவள் சற்றே நடுங்க, பைக்கில் இருந்து இறங்கிய கோகிலா, அவன் புஜம் பற்றி, “பயப்படுறா பாருங்க! திட்டாதீங்க” என்றாள்.



அந்நேரத்திலும் கோகிலாவின் பஞ்சுக்கரங்கள் அவனை தீண்டியதில் கோவ நரம்புகள் தன் சீற்றம் குறைப்பதை விந்தையென உணர்ந்தான் இன்பன்.



“இந்தாபாரு! நீ ஒன்னும் எனக்கும் என் மாமனுக்கு நடுவால வரத்தேவையில்லை. கட்டிக்க போறவங்கக்குள்ள ஆயிரம் இருக்கும்! இப்பைக்கு திட்டிக்குவோம், ரவைக்கு கொஞ்சிக்குவோம்! நீ மூக்க நுழைக்காத!” நேரிடையாய் கோகிலாவிடம் இன்பனுடனான தன் உரிமையை வெளிச்சம் போட்டு காட்டிவிட்டாள் சுசீலா.



அவன் புஜம் பற்றியிருந்த தன் கைகளை உடனே விலக்கிகொண்ட கோகிலா இனியும் அங்கே நின்றால் எங்கே தனது நயங்களில் இருந்து நயாகரா வெளிபட்டுவிடுவோமோ என்ற ஐயத்தில் “நீங்க பேசிட்டு வாங்க மாமா, நான் முன்னால போறேன்! வீடு பக்கம் தானே!” என்றவள் அவன் பதிலுக்கு கூட காத்திராமல் நடையை எட்டிப்போட தொடங்கினாள்.



தன்னிடம் இருந்து கோகிலா விலகிய கணம், தன்னை விட்டு எதுவோ ஒன்று பிரிந்து செல்வதை போல அவதியடைந்தான் இன்பன். கண்முன்னே நிற்ப்பவள் கருத்தில் இல்லை அவனுக்கு. கண்ணை விட்டு செல்பவளே அவன் கண்களை கொள்ளை கொள்ள, அவளை அப்படியே விட முடியாதவன், தவிப்போடு “கோஹிமா நில்லுடா!!” தன்னை மீறி அழைத்துவிட்டான்.



“அவ போட்டும் மாமா! நம்ம பரிசத்தை பத்தி எப்போ வீட்ல பேசபோற? இல்ல நானே பேசவா?” நகர போனவனை கை நீட்டி தடுத்த சுசீ தனக்கு வேண்டியதை பிரதானமாய் கேட்க, வெளிப்படையாக எரிச்சல் காட்டினான் இன்பன்.



“உனக்கு அறிவுங்குறதே கிடையாதா? கேனத்தனமா பண்ணிட்டு இருக்க? சும்மா பரிசம் கிரிசம்ன்னு கடுப்பை கிளப்பிகிட்டு! முதல்ல வழியை விட்டுதொலை” தயவு பார்க்காமல் எரிச்சலை கொட்டியவன், தன் பைக்கில் ஏறி கிளம்பிவிட, விக்கித்து நின்றாள் சுசீலா. அவளுக்குள் தூங்கிக்கொண்டிருந்த மிருகத்தை தொந்தரவு செய்துவிட்டான் பேரின்பன்.



விறுவிறுவென நீண்ட தூரம் கால் போன போக்கில் போய்க்கொண்டிருந்த கோகிலாவை நெருங்கியவன், “ஏய் கொக்கி, வண்டில ஏறு” அருகே நிறுத்தினான். பைக்கை விட்டு தள்ளி சென்றவள் பதிலின்றி அவனை தாண்டி செல்ல, ‘பாரேன்!!’ என வாய்விட்டே சொன்னவன், “வண்டில ஏற மாட்டீங்களோ?” என வம்பாய் கேட்டான்.



அவளிடம் கொஞ்சமும் எதிர்வினை இல்லை. நடை தொடர்ந்துக்கொண்டே இருக்க, அவள் வேகத்திற்கு ஈடு கொடுத்து ஸ்லோ ரேசில் செல்பவன் போல வண்டியை செலுத்திக்கொண்டிருந்தான் இன்பன்.



“வண்டில ஏறுங்க மேடம்!!”

“ஹலோ... காது கேக்காதா?”

“கொக்கிமூக்கி....!!!” எதற்கும் அவளிடம் மறுமொழியில்லை.



குரலை செருமி, “ஜிங்கு ஜிங்குன்னு நடக்குற நடையில,

நூலு விட்டுபோச்சு ஆயா சுட்ட வடையில,

ஜெட்ட போல நான் புஸ்ஸுன்னு பாயுறேன்,

பின்னால வந்து நானும் ஸ்லிப்பராட்டம் தேயுறேன்!

குடுகுடுன்னு ஓடி வாடி, நீதான் எனக்கு வேணும்”
அதுவரை நன்றாய் பாடியவன் இறுதி வரியில் ‘அச்சோ’ என நாக்கை கடிக்க, அதே வரிக்கு கோவமாய் நின்றவள் அவனை திரும்பி ரணகொடூரமாய் முறைத்தாள்.



‘சமாதானம் பண்றேன்னு சொதப்புறியேடா’ அவனே அவனை திட்டிக்கொள்ள, மீண்டும் தன் வீரநடையை தொடர்ந்தாள் கோகிலா. தன் ஸ்லொவ் ரேசை இன்பனும் தொடர, “கொக்கிமூக்கி வீட்டுக்கு போலாம், வாடி” என்றான் வாஞ்சை பொங்க.



இன்னும் வேகமாய் அவள் நடக்க, “வீடு தெக்க இருக்கு, நீ வடக்க போய்கிட்டு இருக்க!! இதுக்குமேல போனா சுடுகாடு தான் வரும்! நான் கிளம்புறேன்ப்பா!!” சொன்னதோடு அவன் பைக்கை யூ-டர்ன் அடிக்க, குடுகுடுவென ஓடி வந்து பைக்கில் ஏறிக்கொண்டாள் கோகிலா.



‘அட, இவ்ளோதானா நீ!’ நமட்டு சிரிப்போடு வீட்டிற்கு சென்றான் பேரின்பன். வாசலோடு சிவகாமி அவர்களை எதிர்க்கொள்ள, இருவரின் ஜோடி பொருத்தமும் அவர் கண்ணை உறுத்தி, ‘அது நடவாதே’ என்ற நிதர்சனத்தில் ஏக்கப்பெருமூச்சாய் வெளிவந்தது.



“என்ன அம்மாயி! பெருமூச்செல்லாம் பெருசா இருக்கு” இன்பன் எப்போதும் போல அவரிடம் பேச அமர்ந்துவிட, ஒப்புக்காக கூட நிற்காமல் உள்ளே சென்றுவிட்டாள் கோகிலா.



வாட்டமாய் செல்லும் பேத்தியை கண்ட சிவகாமி, “என்னடா ஆச்சு புள்ளைக்கு? முகம் சுரத்தே இல்லாம கடக்கு!?” என்றார் பதைப்புடன்.



“அதுக்கு ஏன் அம்மாயி, என்னை கொலகாரனாட்டம் பாக்குறீங்க! உம்ம பேத்தியை நான் எதுவும் செஞ்சுபுடல! சிட்டில ஜாலியா இருந்துட்டு இங்க கிராமத்துல இருக்க சௌகர்யகுறைவா இருக்கோ என்னவோ!” வழியில் நடந்ததை சொல்லாமல் மறைத்தான் இன்பன்.



இரவு உணவுண்ண மட்டுமே அறைவிட்டு வந்த கோகிலா இரண்டு வாழைப்பழங்கள் போதும் என சொல்லிவிட்டு மீண்டும் அறைக்குள் புகுந்துக்கொள்ள, இன்பனுக்கு உணவு தொண்டை தாண்டி இறங்க மறுத்தது. அவனும் சரியாய் உண்ணாமல் எழுந்துவிட, யாருக்கும் இது பெரிதாய் தோன்றவில்லை. அவரவர் வேலையை முடித்துக்கொண்டு படுக்க சென்றனர். தன் அறைக்குள் நுழைய போன இன்பனின் கண்கள் எதிரே தாழ்போட்டிருந்த கோகிலாவின் அறையை ஆர்வமாய் நோட்டமிட்டன. ஜன்னலருகேனும் அவள் தென்பட மாட்டாளா என தோன்ற, அவனை ஏமாற்றினாள் கோகிலா.



வேலை முடிந்து வீட்டுக்கு வந்ததும் உண்டுவிட்டு படுத்தானானால், உறக்கம் உடனே வந்து அவனை தழுவிக்கொள்ளும். இன்றோ, வேலை குறைவின் காரணமோ, இல்லை மனதில் புதியதாய் ஏறிக்கொண்டுள்ள சுகசுமையின் கனமோ அவனை தூங்கவிடாமல் இடர் செய்தது. உருண்டு பிரண்டு ஒருமணி நேரம் ஓட்டியவனால் அதற்க்கு மேல் அந்த அறையில் இருக்க முடியவில்லை. எழுந்து வெளியே வந்தவன் கண்கள் அவள் அறையை தான் தழுவியது.



அறை கதவு கொஞ்சமாய் திறந்திருக்க, ‘உள்ளே போலாமா?’ என ஒரு நொடி தோன்றியது.



‘சாத்தியிருந்த கதவு இப்போ திறந்துருக்குன்னா அவ வெளில தான் வந்துருப்பா!’ என்ற எண்ணம் வந்ததுமே, அவன் கால்கள் நிற்காமல் ஓடியது மொட்டைமாடிக்கு!!



குளிரில் கையை கட்டிக்கொண்டு இவன் வருகைக்கெனவே காத்திருந்தவள் போல மாடி வளைவை பார்த்திருந்தவள், இவன் முகம் கண்டதும், சட்டென திரும்பிக்கொண்டாள் எங்கோ பார்த்து.



அவள் பொய்கோவத்தை அறிந்ததும் மனதுக்குள், ‘அடி மூக்கி!! கொழுப்ப பாரு!!!’ திட்டுவதை கூட கொஞ்சலாய் தான் செய்ய முடிந்தது அவனால். ஒன்றும் பேசாமல் அவள் அருகே சென்று நின்றுகொண்டான். அவளை போலவே கைகட்டி எங்கோ வேடிக்கை பார்க்க தொடங்க, ஓரக்கண்ணால் அவனை நோட்டமிட்டவள், அவன் பேச்சை ஆரம்பிப்பது போலவே தெரியாமல் போக, முறுக்கிக்கொண்டு அங்கருந்து நகர, அவள் தளிர்கரம் அவன் கரத்தினில் அகப்பட்டிருந்தது.



ஒப்புக்காககூட, ‘கையை விடுங்க’ என அவள் சொல்லாமல் அவன் பிடியில் சுணக்கமின்றி சிலையென நிற்க, பிடியை தன்னை நோக்கி இழுத்தான் இன்பன். அவன் இழுத்த வேகத்தில் அவன் அருகே தடுமாறி வந்தவள், அதீத நெருக்கத்தில் நிற்க, அவளது பளபளக்கும் விழிகளும், மெலிதாய் திறந்திருந்த சொப்புவாயையும் குத்தீட்டியாய் குறிவைக்கும் மூக்கையும் தனித்தனியாய் பார்த்தவன் (ரசித்தவன்), அவள் நுனிமூக்கை பிடித்து இன்னும் அவன் அருகே இழுத்து, “மூக்கிக்கு என்ன கோவம்?” என்றான் இதுவரை அவனே அறிந்திராத ஒரு குரலில்.



அவன் நெருக்கத்தில், தன் மீது பட்டும் பாடாமல் உரசி நிற்கும் அவன் கட்டுடலில், முன்நெற்றியை நிறைக்கும் அவன் சூடான மூச்சில், அத்தனைக்கும் மேலாய், நிலவுமகள் காவல் காக்கும் ஏகாந்த நேரத்தில் தன்னை மறந்து இன்னும் அவனோடு ஒண்டினாள் கோகிலா. அவள் கை மெல்ல மேலெழுந்து அவன் மீசையை வருடி, “இது இன்னும் கொஞ்சம் பெருசா இருந்தா, நீ ரொம்ப அழகா இருப்ப மாமா!” என்றாள் ரசனையாய்.



அவள் நெருக்கம் கொடுத்த புதுவித உணர்வில், பெண்மையின் மென்மையில், அவன் கரங்கள் அவள் கரத்தை விடுத்து இடையை சுற்றி வளைத்தது. பார்வை மட்டும் அவள் முகத்தை விட்டு நகரவில்லை.

இன்பன், “மீசை தானே! வச்சுட்டா போச்சு!!” என்றிட, அவனையே விழிகளால் விழுங்கிக்கொண்டிருந்தவள், “நீ ரொம்ப அழகு” என்றாள் ஆத்மாத்தமாய்.



புருவம் உயர்த்திய இன்பன், தன் நெற்றியை அவள் முன்நெற்றியில் ஊன்றி, “பொய் சொல்லாத” என்றான் ஹஸ்க்கி வாய்சில்.



“நிஜமா!! உன்னை பார்த்துட்டே இருக்கனும்ன்னு தோணுது மாமா!” அவள் கூற்றில் ரெக்கை இன்றி பறந்தான் என்றே சொல்லலாம்! முப்பது வயதில் முதன்முதலாய் ஏதோ ஓர் பரவச உணர்வு அவனுள் பிரவாகமெடுத்தது.



நிலவின் பூரணவொளியில் தன் முகத்தருகே நெருக்கமாய் தெரியும் அவள் முகத்தை காண காண தெவிட்டவில்லை அவனுக்கு. அதிலும் ஓர் ஆண்மகனை ‘அழகன்’ என கன்னிகை சொல்கையில் மயங்காதவன் இருக்க முடியுமா இப்புவியில்!?



அவன் மூக்கோடு தன் மூக்கை வைத்து உரசியவன், “மூக்கி.....” என்றான். இதுநாள் வரை கிண்டலாய் மட்டுமே அவன் சொன்னது, இப்போது வேறு வடிவம் பெற்றது.



அவனிடம் கிறங்கி நின்றவள், “அவளை தான் கட்டிக்க போறியா மாமா?” முகம் சுருங்க கேட்க, “நான் அப்படி சொன்னேனா?” மறுகேள்வி கேட்டான் இன்பன். அதில் அவள் முகம் சற்றே தெளிவாக, “அவ என்கிட்டே பேசுனா உனக்கு ஏன்டி கோவம் வருது?” என்றான் பதிலை அவள் வாய்மொழியாய் பெற வேண்டி!!

பேச்சின்றி தலைகுனிந்தவள் நிமிரவே இல்லை. சில்லென காற்று அவர்களை வருடி செல்ல, அதில் அவன் மேல்சட்டையை இறுக பற்றினாள் கோகிலா. இன்பனுக்கு கனவுலகில் மிதப்பது போன்றிருந்தது என்றால் மிகையல்ல!

காற்றில் கலந்து மெல்லிய குரல் வெளிவந்தது. “இரண்டு நாள் பழகுன எனக்கே உன்னை இவ்ளோ பிடிச்சுருக்கே, அப்போ இத்தனை வருசமா பார்த்து பழகிருக்க அவளுக்கு உன்னை எவ்ளோ பிடிச்சுருக்கும் மாமா?” மெல்லிய குரலில் அவள் சொன்னதில் பிற்பாதி வேண்டுமென்றே அவன் செவிகளை எட்டவில்லை.



“என்ன சொன்ன?” அவன் மீண்டும் கேட்க, “ஏன், உனக்கு கேட்கலயா?” என்றாள் மிடுக்காய்.

கள்ளசிரிப்பு சிரித்த இன்பன், “அப்போ கொக்கிமூக்கிக்கு என்னை பிடிச்சுருக்கு?” என்றான் கண்கள் மின்ன.

தன்னை மீறி வெளிப்படும் நாணசிரிப்பிற்கு கடிவாளமிட உதட்டை அழுந்த கடித்த கோகிலா, தன் முயற்சியில் படுதோல்வியடைய, “கண்டுகொண்டேன்... கண்டுகொண்டேன்... காதல் முகம் கண்டுகொண்டேன்....” சிரிப்போடு மிகரசனையாய் அவளுக்கு மட்டுமே கேட்கும் மெல்லிய குரலில் ஆசையாய் பாடிய இன்பனை அசந்த நேரம் பார்த்து தள்ளிவிட்டு கீழே ஓடினாள் கோகிலா, தன் வெட்கத்தை மறைக்கும் பொருட்டு!



இன்பனுக்கு அது ஓர் தூங்கா இரவாகி போனது. மனதுக்குள் லட்சம் கற்பனைகள்! குழந்தைகளை எந்த பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று கூட விடியற்காலையில் யோசிக்க தொடங்கிவிட்டான். எப்போது விடியல் வரும், தன் கொக்கிமூக்கியை பார்த்து மனதில் தோன்றுவதை பேசி உறுதி செய்துக்கொள்ளலாம் என அவன் அல்லாட, பேரின்பனின் இன்பம நீடிக்க ஒரு விடியல் அவகாசம் கூட இல்லை!



கோகிலா கிஷோரின் நிச்சயதார்த்த வீடியோ நடுஹாலில் இருந்த சுவரடைக்கும் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிக்கொண்டிருதது.



-தொடரும்...
 
இன்பனை இன்பத்தை அனுபவிக்கவே விடக்கூடாதுன்னு முடிவே பண்ணி வச்சாச்சா... டூ பேட்... இத்தனை வருஷத்துல பையன் இப்ப தான் அவனுக்காக ஒண்ணு மேல ஆசை வச்சிருக்கான்.. அதுக்கும் ஆப்பு வச்சாச்சு.. இப்ப சுசிய அவளோட அம்மா மாதிரி ன்னு தானே நினைப்பான்... என்ன ஆகுமோ....
 
Top