Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோகுலத்தில் ராமன் -13

Advertisement

பிரியா மோகன்

Tamil Novel Writer
The Writers Crew
அடுத்த UD எங்கன்னு சிலர் கேட்டுருந்தீங்க! நேத்தே லீவு, இன்னைக்கும் லீவு போட்டா சாமி கண்ணை குத்துமேன்னு (நீங்களும் தான்) துரிதமாய் டைபித்து போட்டிருக்கிறேன்!! எப்படி இருக்கோ தெரியாது! அட்ஜஸ்ட் ப்ளீஸ்!

கொஞ்சம் DULL MOODல இருக்கேன்!! நாளைக்கும் UD கொடுக்க முடியுமான்னு தெரியல! முடிந்தால் கண்டிப்பா போட்டுடுவேன்!

*13*

எத்தனை குதிரைசக்தி கொண்டதோ, என்னைச்சுற்றி சுழலடிக்கும் உன் குதிரைவால் கூந்தல்....!

மருத்துவமனை வாசத்திற்கு பின், வீடு வந்த ஒண்டிவீரரின் நடமாட்டம் முன்புபோலின்றி குறைந்துவிட்டது. பெரிதாய் யாரிடமும் பேச்சில்லை, வீட்டைத்தாண்டி வெளியே செல்வதுமில்லை. சிவகாமியின் ஊமைக்கண்ணீர் மட்டும் நிற்காமல் இருந்தது. தங்கமோ, அன்றைய வாக்குவாதத்தின் பின்னே, சமையலறை பக்கம் கூட செல்வதில்லை. அவரும் எல்லோரையும் போல உணவு நேரம் வருவதும், மீண்டும் அறைக்குள் புகுந்துக்கொள்வதும் என இருந்தார். அன்றைய வாரம் மௌனமாகவே ஓட, ஞாயிறன்று காலை தன் உடைமைகளோடு கிளம்பி வந்து நின்றனர் ஷங்கர் தம்பதியினர்.



தன் முன்னே நிழலாட கண் திறந்த ஒண்டிவீரர், பயணத்திற்கு தயாராய் கிளம்பி நிற்கும் மகளையும் மருமகனையும் கண்டு புருவம் சுருக்கினார். அவர் பேசும்முன்னே பேச்சைத்தொடங்கினார் ஷங்கர்.



“ஐயா, நாங்க ஊருக்கு கிளம்புறோம்!” ஷங்கரின் பணிவான செய்தியில் அவர் அதிரவும் இல்லை திகைக்கவும் இல்லை. இதை நான் எப்போதோ எதிர்ப்பார்த்தேன் என்பதை போல தலையசைத்தவர், மீண்டும் தன் கண்களை மூடிக்கொள்ள, “ப்பா!!” என்றார் செல்லம்.



கண்களை திறவாமலே, “ம்ம்ம்?” என்றார் ஒண்டிவீரர். சுவிட்ச் போட்டதை போல சட்டென செல்லத்தின் கண்களில் கண்ணீர் தடயங்கள் சூழ, “நாங்க போறோம்ன்னு சொல்றோம், எதுவுமே சொல்லாம இருக்கீங்க? நாங்க வேண்டாமாப்பா உங்களுக்கு?” விம்மலுடன் கேட்டதில் கண் திறந்தவர், “எப்பவும் நீ முடிவு பண்ணிட்டு தானேம்மா எங்ககிட்ட சொல்லுவ? அதுக்கு தலையாட்டியே பழகிட்டேனே!” என்றவரின் வார்த்தைகள் செல்லத்தின் கண்ணீரை அதிகரித்தன.



ஒண்டிவீரருக்கு மருந்து கொடுக்க வேண்டி, வந்த தங்கம், அங்கே நடக்கும் சம்பாஷனை கேட்டு, சிவகாமியை அழைத்து வந்தார்.



பதட்டமாய் உள்ளே வந்த சிவகாமி, கண்ணை கசக்கிக்கொண்டு பெட்டிப்படுக்கையோடு நிற்கும் மகளைக் கண்டு ஆத்திரம் கொண்டு, “போனும்ன்னு முடிவு செஞ்சவ போக வேண்டியது தானேடி, எதுக்கு இவர்கிட்ட வந்து நின்னு அழுது ஆர்ப்பாட்டம் பண்ற? ஒரு நாள் படுக்கையில கடந்தவர ஒரேயடியா அனுப்பிடலாம்ன்னு நினைக்குறியா?” கணவர் மீதுள்ள அக்கறையில் மகளை சற்று அதிகமாய் கடிந்துக்கொள்ள, அவரை தடுக்க ஒருவரும் முன்வரவில்லை.



செல்லத்தின் கேவல் கூடியதுமே, காலை வேளையில் வீட்டில் இருந்த எல்லோரும் ஒண்டிவீரரின் அறையில் ஆஜராகினர்.

“அம்மாயி...!? விடுங்க” பேரின்பன் முன்னால் வந்தான். செல்லத்தின் கண்ணீர் மட்டுமல்ல, சிவகாமியின் புலம்பல் கூட அவர் மனத்தை பாதிக்கும் என்பதை உணர்ந்து அவன் தடுக்க, “நல்லவனாட்டம் பேசியே, எல்லாரையும் எங்களுக்கு எதிரா தூண்டி விடுறல்ல நீ?” இன்பனை நேரிடையாய் சொற்களால் தாக்கினார் செல்லம்.



பெற்றோரின் முடிவு மகளுக்கே கூட சொல்லப்படாமல் இருக்க, ஏனிந்த திடீர் முடிவென்று கோகிலா மூன்றாம் நபராய் வேடிக்கைப்பார்க்க, இன்பனின் மீதான தன் அன்னையின் திடீர் குற்றச்சாட்டில், ‘இந்தம்மா ஏன் சும்மா இருக்க ஓணானை சுரண்டி பார்க்குது?’ என பதட்டமடைந்தாள்.



இன்பனிடம் இருந்து சூடான பதில் வார்த்தைகளை எதிர்ப்பார்த்தவரை பலமாய் ஏமாற்றியது அவனது மௌனவிரதம். கைகளை பின்னால் கட்டிக்கொண்டு, முகத்தில் எந்த உணர்ச்சியும் காட்டாது, வார்த்தைகள் இன்றி அவர்களை அவமதித்தான் இன்பன்.



ஒருவரையும் கண்டுக்கொள்ளாத ஷங்கர் மீண்டும் ஒண்டிவீரரிடம், “ஐயா, அவசரமா கிளம்பி வந்துட்டோம், வீடு, தொழிலு எல்லாமே அப்படியே கடக்கு! இதுல கோகிலா கல்யாண வேலை வேற பார்க்கணும், அதனால நாங்க கிளம்புறது தான் சரிப்படும்!” என்று எப்போதும் போல மிக மரியாதையாய் சொன்னார்.



அதை ஒப்புக்கொண்ட ஒண்டிவீரர், “சரிதான்! ஆனா என்னோட ஒரு விருப்பம் இருக்கு! அதை உங்களால ஏத்துக்க முடியுமா?” என்றார் சிறு எதிர்ப்பார்ப்புடன்!



உடனே, “கண்டிப்பா ஐயா! என்னனு சொல்லுங்க!” என்று ஷங்கர் கேட்க, “நிச்சயம் தான் சென்னைல வச்சுட்டீங்க! அதனால கல்யாணத்தை நம்ம ஊருல, இங்கேயே வச்சா என் மனசு கொஞ்சம் நிறையும்!” என்று சொல்ல, வெகுவாய் தயங்கினர் இருவரும்.



செல்லம், “மாப்பிளை சொந்தம், எங்க பிரண்ட்ஸ் எல்லாரும் அங்கதான் இருக்காங்கப்பா! இந்த ஊருல கல்யாணம் வச்சா யாரு வருவா?” என்றார், சிறிதும் யோசிக்காமல்!

‘கல்யாணத்தை இங்கே வைக்க வேண்டும்’ என்ற கோரிக்கையை கேட்டதும் உற்சாகமானது கோகிலா மட்டுமே! ‘இங்க கல்யாணம் வச்சா தானே மாமாக்கு அதை நிறுத்த வசதியா இருக்கும்!’ என்று எதிர்க்காலத்திற்கு யோசித்தாள். அன்னை அதற்கு மறுப்பு சொல்லவே தந்தையும் அதை ஆமோதிக்கும் முன், “ம்மா! தாத்தா எவ்வளோ ஆசையா கேட்குறாங்க, கொஞ்சம்க்கூட கன்சிடர் பண்ணாம மாட்டேன்னு சொல்றீங்க? நம்ம சென்னைல ரிசெப்ஷன் வச்சுக்கலாம்! கல்யாணம் இங்கதான் நடக்கணும்” என்று சொன்னதோடு ஒண்டிவீரரின் அருகே சென்று அமர்ந்துக்கொள்ள, ஆதூரமாய் பேத்தியின் சிகை வருடினார் அவர்.



எல்லோர் முன்னும் மகள் சொன்ன விருப்பிற்க்கு எதிர்த்து பேசினால் தவறாய் போகுமென எண்ணிய ஷங்கர், “நாங்க மட்டும் முடிவு பண்ண முடியாது! மாப்ளை வீட்டுல ஒப்புதல் கேட்கணும்” என்றார்.



செல்லம், “ஆமா ஆமா”

ஒண்டிவீரர், “தாராளமா கேட்டுட்டே சொல்லுங்க” என்றிட அடுத்து பேச அவ்விடத்தில் எதுவும் இல்லை. அமைதியை கலைக்கவென, “அப்புறம் என்ன? கிளம்புறது தானே? ட்ரெயினா பஸ்ஸா?” என்றான் காண்டீபன். செல்லம் உள்ளுக்குள் புகைந்து போனார்.

‘அண்ணனும் தம்பியும் எங்களை துரத்துறதுல மட்டும் ஒத்துமையா இருங்கடா’ என காந்திக்கொள்ள, காண்டீபனின் கேள்வியில் சிரமப்பட்டு சிரிப்பை அடக்கினான் இன்பன்.



பத்து நாட்களாய் யாரும் சரிவர முகம் கொடுத்து அவர்களிடம் பேசாததால் ‘வீட்டை விட்டு போகிறோம்’ என பந்தாக்காட்ட முயன்றார் செல்லம். ஆனால் காண்டீபன், இதையே சாக்காய் வைத்து அவர்களை மூட்டைக் கட்டிவிட எண்ணிவிட்டான்.

செல்லம் என்ன சொல்லலாம் என யோசிப்பதற்குள், “சரி, நானே பஸ் ஸ்டேன்ட்ல டிராப் பண்ணுறேன், இப்போ சென்னைக்கு ஒரு பஸ்சு இருக்கு, வாங்க வாங்க” என்றவன் வாசலுக்கு சென்றுவிட, சிரிப்பை என்ன முயன்றும் இன்பனால் அடக்க முடியவில்லை. அதிலும் செல்லத்தின் முகம் போன போக்கை கண்டு அவன் உதடுகள் சிரிப்பில் விரிய, ஷங்கரின் கண்கள் அவன்மேல் வெறுப்பை உமிழ்ந்தன.



கோவத்துடன், “கிளம்பு கோகிலா போலாம்” என்ற ஷங்கரிடம், “நீங்க போங்கப்பா, நான் வரலை” என குண்டைத் தூக்கி போட்டாள் கோகிலா.



‘நீ போக மாட்டன்னு தெரியும்டி மூக்கி’ என வெளிக்காட்டாமல் சிரித்துக்கொண்டான் இன்பன்.



செல்லம், “நாங்களே கிளம்புறோம், நீ ஏன்டி இங்க இருக்குறேன்னு சொல்ற?” என்று அதட்ட, “நீங்க போறதை என்கிட்டே ஏன் முன்னாடியே சொல்லல? நானும் உங்கக்கூட வரணும்ன்னா நீங்க கிளம்பும்போதே என்கிட்டயும் சொல்லிருக்கனும்ல?” வீட்டார் மத்தியில் சட்டம் பேசி மானத்தை வாங்கும் மகளை ‘எனக்குன்னு வந்து பொறந்துருக்கு பாரு’ என மானசீகமாய் தலையில் அடித்துக்கொண்டார் அவர்.



இன்பன் குறுநகை பெருநகையாய் மாற, இதற்குமேல் அங்கே வேலையில்லை என நகர்ந்துவிட்டான். “வரியா இல்லையா?” கோவமாய் அன்னை கேட்கவும், “இத்தனை வருஷம் தாத்தா பாட்டி வீடுன்னு ஒன்னு இல்லாம இருந்துட்டேன், இப்போ கிடைச்சுருக்கு! நான் அதை என்ஜாய் பண்ணனும்!” மகளின் பிடிவாதம் புரிந்தவர், கணவரிடம் ‘போகலாம்’ என கண்ஜாடை காட்ட, சரியாய் அதே நேரம் வாசலில் இருந்து காரின் ஹாரன் ஒலி விடாமல் கேட்டது.



காண்டீபனை மனதோடு வைதவர், “வரேன்ப்பா வரேன்ம்மா” என்று சொல்ல, சிவகாமி முகத்தை திருப்பிக்கொண்டாரானால், ஒண்டிவீரர் ஒப்புக்காக கூட ‘இங்கயே இரு’ என சொல்லாமல் ‘போ’ என தலையசைத்து வழியனுப்பி வைத்தார்.



பாசாங்கு செய்ய நினைத்து, உண்மையிலேயே சென்னை நோக்கி கிளம்பிவிட்டனர் ஷங்கரும் செல்லமும். இருட்டு படிந்ததை போல இருந்த வீடு, மீண்டும் தன் பழைய கலையை பெற தொடங்கியது.



காரில் இளையராஜாவின் ஆதிக்கமே மேலோங்கி இருந்தது. பத்து நிமிட தூரத்தை க்கொடியமட்டும் விரைவாக அடைந்த காண்டீபன், அவனே சென்று சென்னைக்கு இரண்டு டிக்கெட்டோடு வந்து ஷங்கரிடம் நீட்ட, அதை பெற்றுக்கொள்ளாமல் அவனையே வெறித்தார்.



“பஸ்க்கு இன்னும் அஞ்சு நிமிஷம் தான் இருக்கு” அறிவிப்பு போல சொன்ன காண்டீபனிடம், “ரொம்ப அவமானப்படுத்துறீங்க!? நான் திருப்பி கொடுத்தா உங்களால தாங்க முடியாது!!” ரௌத்திரம் மேலெழ சொன்னவரை அலட்சியமாய் பார்த்தவன், “நீங்க கொடுத்ததுக்கு நாங்க வட்டி தான் கட்டுறோம்! அசலோட நாங்க குடுக்க ஆரம்பிச்சா....” என்ற காண்டீபன் வாக்கியத்தை முடிக்காமலே கண்களால் அவன் சொல்ல வந்ததன் பொருளை உரைத்துவிட்டு நகர்ந்தான்.



அவன் தீப்பார்வையில் கிலி கொண்டு, கணவரின் கரத்தை இறுக பற்றிக்கொண்ட செல்லம், “வாங்க போலாம்!” என்றுவிட்டார்.



காரை கிளப்பிக்கொண்டு அங்கிருந்து சென்ற காண்டீபனுக்கு உள்ளுக்குள் பலவித யோசனைகள். எப்போதும் அவன் மூளையை சிந்தனையால் கட்டிப்போடும் தொழிலை தாண்டி, குடும்பம் அவன் சிந்தையை ஆக்கிரமித்தது. அதே யோசனையிலேயே பலவருடமாய் பழகிய கிளை சாலையில் அவன் சென்றுக்கொண்டிருக்க, திடீரென அவன் முன்னே பாய்ந்து வந்த மிதிவண்டி ஒன்று அவனை பதட்டமடைய செய்தது. “ஏய்...ஏய்...ஏய்...” துரிதமாய் ப்ரேக் போட்டு வண்டியை நிறுத்த முயன்றுக்கொண்டு, அவன் கத்த ஆரம்பிக்கும்போதே, கார் பம்ப்பரில், மிதிவண்டியின் பின்வீல் மோதி சைக்கிலோட்டி நடு சாலையில் சரிந்து, விழுந்துவாரினார்.



கார் நின்ற வேகத்தில் அதன் கதவை திறந்துக்கொண்டு வெளியே வந்த காண்டீபன் அடிப்பட்டு விழுந்திருப்பது பெண் என்றதும், மேலும் அருகே செல்லாமல் தயங்கி நின்றான். அங்கேயிருந்த ஓரிரண்டு ஆட்கள் வேகமாய் ஓடிவர, அதற்குள் அந்த அடிப்பட்டவள் முழங்கை முழங்காலை தேய்த்துக்கொண்டே எழுந்து நிற்க, நொடிப்பொழுதில் சிலையானான் காண்டீபன்.



“என்னம்மா? அடி பலமா?”

“பார்த்து வந்துருக்கலாமுள்ள?” கரிசனையாய் கேட்ட சிலரை பதில் சொல்லி அனுப்பி வைத்தவள், அசையாது நின்ற காண்டீபனிடம் திரும்பி, “பார்த்துக்கிட்டே நிக்குறீங்களே அத்தான்? என் சைக்கிளை தூக்கி கொடுக்கலாம் தானே?” என்று கேட்டுவிட, ‘ம்ம்ம் ம்ம்ம்’ என தலையாட்டியவன் அவள் சொன்னத்தை செய்தான்.

காண்டீபனை பொம்மையென மாற்ற சுசீலா அன்றி வேறொரு பெண்ணால் இயலாதே!!



சைக்கிளை எடுத்து கொடுக்க, அதை வாங்க ஓரடி எடுத்து வைத்தவள், ‘ம்மா!!’ என முழங்காலை பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டாள்.

அவளை விட வேதனையாய், “என்னாச்சு சுசீ?” என்று காண்டீபன் பதற, “எங்கயோ சுளுக்கிடுச்சு போல!!” என்றாள் வலியை மறைத்த பாவத்தில்.



அடுத்த என்ன செய்வதென தெரியாது விழித்தவன் அதை அவளிடமே கேட்க, “உங்களுக்கு ஒன்னும் சிரமம் இல்லன்னா என்னை வீட்ல விட முடியுமா அத்தான்?” தலைசரித்து அவள் வேண்டுதல் வைக்கையில் ‘கரும்பு தின்ன கூலியா?’ என உடனே ஒப்புக்கொண்டான் காண்டீபன்.

சைக்கிளை அங்கேயே விட்டுவிட்டு செல்லலாம் என அவள் எவ்வளவோ சொல்ல, அதை மறுத்தவன் தன் காரின் மீது அதை வைத்து கட்டிவிட்டு கைத்தாங்கலாக அவளை முன் சீட்டில் அமர்த்தினான். சுசியின் பரிசம் அவன் ரோமக்கால்களை சிலிர்த்து நிக்க செய்ய, அவளுக்கு தெரியாமல் சிரமப்பட்டு மறைத்தான்.



அவன் மனமோ, ‘எப்படியேனும் இன்று தன் மனதை அவளிடம் சொல்லியாக வேண்டும்! சுசிலாவின் மீதான தன் விருப்பம், எட்டி நின்று பார்க்கும் இன்பனுக்கே எப்படியோ தெரிந்திருக்கும் போது, இந்த மக்கு இன்னும் அதை உணராமல் இருக்கிறாளே!’ என யோசித்தபடி பேச்சை எப்படி தொடங்கலாம் என அவன் சமயம் பார்க்க, அவளே தொடங்கினாள்.



“என்னால உங்களுக்கு தான் சிரமம்! இல்லையா அத்தான்!?” என்றவளிடம், “இல்லவே இல்ல! என்னால தானே உனக்கு அடி பட்டுடுச்சு!” என்றான்.



“இல்ல அத்தான், நீங்க சரியா தான் வந்தீங்க! நான்தான் ஆட்டுக்குட்டி குறுக்க வரவும் உங்க வண்டி முன்ன வந்துட்டேன்!” என்றாள்.



“இருந்தாலும் அடி உனக்குதானே?” என்ற காண்டீபன் நேரே ஒரு கிளீனிக்கின் முன் வண்டியை நிறுத்தி அவளுக்கு முதலுதவி செய்துவிட்டே பயணத்தை தொடர்ந்தான்.



காண்டீபனின் மனம் படபடவென அடித்துக்கொண்டது. தன் விருப்பத்தை சொன்னால் சுசியின் பதில்வினை எவ்வாறாய் இருக்கும்? இன்பனின் மீது காதலை வளர்த்துகொண்டிருக்கிறாளோ? இப்போது நான் பேசினால் அது தவறாய் போய் விடுமோ?’ தயங்கிக்கொண்டே இருந்தானே தவிர துணிச்சலாய் நினைத்ததை அவளிடம் சொல்லிவிடவில்லை.



“சுசீ? ரொம்ப வலிக்குதா?” பேச்சை அக்கறையுடன் ஆரம்பிக்கலாம் என அவன் அடி போட, “இல்ல அத்தான்!” என்றவள் மீண்டும், “அத்தான்....!!” என இழுக்க, அவன் ஆர்வமாய் ‘சொல்லுமா’ என்றதும், “உங்க வீட்ல புதுசா ஒருத்தி இருக்காளே!? அவ யாரு?” என்றாள் மெதுவாய்.



“கோகிலாவை கேக்குறியா? எங்க சின்னத்தை பொண்ணு!” என்றான் காண்டீபன்.

“ஹோ....!!!” அவள் முகம் வாடுவதை கண்டவன், “என்னாச்சு?” என கேட்க, தன் மனதை மறையாது, “அவளை எனக்கு பிடிக்கல!” என்றுவிட்டாள் சுசீலா.



“எனக்கும்தான் பிடிக்கல! சரியான வாயாடியா இருக்கா! கட்டிக்க போறவனை பேசியே கொன்னுடுவா! ஹும்ம்... நல்ல நேரம், இன்னும் ஒரு மாசத்துல கல்யாணம் முடிச்சு சென்னைக்கே போய்டுவா!” சரளமாய் காண்டீபன் பேச அதில் தனக்கு வேண்டியதை கண்டுக்கொண்ட அவள் மனம் குதூகலமானது.



“நிஜமாவா மாமா? பையன் யாரு?” ஒருவேளை ‘இன்பனாய்’ இருந்துவிடுமோ என்ற பயத்தில் கேட்க, அதற்க்கு அவசியமே இல்லை எனும்படி, “அது எவனோ யாருக்கு தெரியும்? ஏற்கனவே நிச்சயம் முடிஞ்சு தான் இங்க வந்துருக்கா!” என்ற காண்டீபனுக்கு, ‘நம்ம விசயத்துக்கு எப்போம்மா வருவ?’ என்ற ஆயாசமே தோன்றியது.



வெளிப்படையாய் நெஞ்சில் கைவைத்து நிம்மதி பெருமூச்சொரிந்தவள், “எங்க, இன்பா மாமாவை கொத்திக்கிட்டு போய்டுவாளோன்னு பயந்துகிட்டு கிடந்தேன்! நல்லதா போச்சு அத்தான், தொல்லை ஒழிஞ்சுது!” என்ற சுசீ அதற்க்கு மேல் பேசியதெல்லாம் காண்டீபனின் செவிகளை அடையவில்லை.

‘ஒவ்வொரு முறையும் எதிர்பார்த்து ஏமாறுகிறோம்’ என்ற அவன் எண்ணமே அவனை மேலும் இறுகி போக செய்துவிட, “எங்க கல்யாண பேச்சை எடுக்க முடியாம ஐயா நோவு வந்து கடக்குறாரு! இந்நேரத்துல எதுவும் பேச முடியாது! இல்ல அத்தான்?” என அவனிடமே சுசீ கேட்க, “இந்த முறை கண்டிப்பா நடக்கும்! நான் பேசிடுறேன்!” என்றான்.



அவன் வாக்கில் தலைகால் புரியாது உவகை கொண்டாள் சுசீ. “தேங்க்ஸ் அத்தான், தேங்க்ஸ் அத்தான், தேங்க்ஸ் அத்தான்” என இடைவிடாது சொல்ல, காரை நிறுத்தினான் காண்டீபன். திரும்பிப்பார்த்தவள் தன் வீடு வந்துவிட்டதை உணர்ந்து தானே மெதுவாய் இறங்கிக்கொள்ள, அவள் மிதிவண்டியை இறக்கிக்கொடுத்தவன் சொல்லிக்கொள்ளாது கிளம்பிவிட்டான்.



செல்லமும் ஷங்கரும் சென்றதுமே கோகிலா தன் மாமாவை தான் தேடி ஓடினாள். தோட்டத்தில் இருக்கும் அவரைகொடியில் இருந்து காய்களை பறித்துக்கொண்டிருந்தவன், இவளை கண்டதும், “வாம்மா! மூக்கம்மா! அண்ணன் எப்போ கிளம்புவான், திண்ணை எப்போ காலியாகும்ன்னு இருந்த போல!” நக்கலாய் வரவேற்க, “எப்படி மாமா எதுவுமே நடக்காதமாறி இவ்வளோ இயல்பா என்கிட்டே உங்களால பேச முடியுது?” என்று கேள்வியானாள் கோகிலா.



சிரிப்போடு பதில் சொல்ல வந்தவனை, “வாயால தான்னு சொல்லிடாத” என்றாள் கோகிலா எச்சரிக்கையாய்.



“ஹாஹா! சரி.... பெத்தவங்க இப்படி அம்போன்னு உன்னை விட்டுடு போயிட்டாங்களே, கொஞ்சம்கூட வருத்தமில்லையா?” என்றான் இன்பன்.



“ஆமா நான் கைக்கொழந்தை பாருங்க!” என்று சலித்தவள், “மாமா, நம்ம எங்கயாது வெளில போலாமா?” என்றாள் கோகிலா.



“ம்ம்!! போலாமே!!” என்ற இன்பன், காய்களை கீழே வைத்துவிட்டு அவளோடு நடக்க, அவன் உடனே ஒப்புக்கொண்டதில் உற்சாகமானாள் கோகிலா. வீட்டை சுற்றிக்கொண்டு முன்வாசல் பக்கம் வந்தவன், ஒரு கிழிந்த துணியை அவள் கையில் தந்து, “பாலோ மீ” என்றான். துணியையும் அவனையும் பார்த்தவள், கேள்விகேட்காமல் அவன் பின்னே செல்ல, வெளிக்கதவை திறந்துகொண்டு சென்றவன், “உன் ஆசைப்படி வெளில வந்தாச்சு, சந்தோசமா?” என்றான்.



கோகிலா அவனை தீவிரமாய் முறைக்க, அதை கண்டுக்கொள்ளாது, “எவ்வளோ அழுக்கா கடக்கு பாரு கேட்டு! அந்த துணியை கைல வச்சுக்கிட்டே நிக்காம நல்ல தேச்சு துடை, கதவுல இருக்க அழுக்காவது போவும்” இன்பன் சொல்லிமுடிப்பதற்குள் அவன் முகத்திலேயே அந்த அழுக்கு துணியை வீசிவிட்டு உள்ளே சென்றுவிட்டாள் கோகிலா.



“இர்ரெஸ்பான்சிபில் பெலோ!” இன்பன் அவளை வேணுமென்றே சீண்ட, அந்நேரம் காண்டீபனின் கார் வீட்டிற்குள் நுழைந்தது.



‘என்ன மில்லுக்கு போகாம வீட்டுக்கு வரான்?’ என்று துணுக்குற்ற இன்பன், துடைக்கும் வேலையை விட்டு விட்டு உள்ளே செல்ல, உர்ரென்ற முகத்தோடு விறுவிறுவென வீட்டினுள் செல்லும் காண்டீபனின் முன் வழி மறித்து நின்ற கோகிலா, “நீங்க எப்பவும் காண்டாவே இருக்குறதால காண்டீபன்னு பேரு வச்சாங்களா? இல்ல, காண்டீபன்னு பேரு வச்சதால நீங்க எப்பவும் காண்டாவே இருக்கீங்களா?” என நேரம் தெரியாமல் அன்றொரு நாள் பாதியில் விட்ட ஆராய்ச்சியை மீண்டும் தொடர நினைக்க, மிககொடூரமாய் அவளை முறைத்தவன், அவளை தள்ளிவிட்டு உள்ளே சென்றான்.



அவன் தள்ளியதில் தடுமாறியவள் சுதாரித்து நிற்க, பின்னோடு வந்த இன்பன் அவள் தலையில் நறுக்கென கொட்டி, “எப்பபாரு அவனை வம்பிழுத்து கிட்டே....” என்றான் மீண்டும் ஒரு கொட்டு கொட்டி!!



உள்ளே சென்ற காண்டீபன் உணவுவேளை முடிந்து ஒன்றாய் அமர்ந்திருந்த தன் குடும்பத்திடம், “இன்பனுக்கும் சுசீலாவுக்கும் பரிசம் போட இதே வாரத்துல ஒரு நல்ல நாளா பாருங்க!” என்றான்.



அவர்களோ, ‘இப்போவேவா?’ என நினைக்க, இன்பனுக்கு, ‘அப்போ இவனுக்கு சுசீ மேல விருப்பம் இல்லையா?’ என சந்தேகம் தோன்ற, கோகிலா மட்டுமே அதிர்ந்து போய் தலையில் கைவைத்து நின்றாள்.

-தொடரும்...
 
Superb epi sis chellam onnu ninaikka kandipane ticket potu anupiachu .susee sariyana makka ,kandepan feela purinchuka matenkrale
 
காண்டு, ஏன்டா யாரோ மேல இருக்கற காண்ட, இப்படி இன்பனுக்கு வினையா காட்டுற... பாவம் அவனோட கோட்டையெல்லாம் போச்சு....
 
Top