Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோகுலத்தில் ராமன் -14 (1)

Advertisement

பிரியா மோகன்

Tamil Novel Writer
The Writers Crew
அத்தியாயம் 14 (1)

முந்தைய இரவு மனதில் அடைத்து வைத்திருந்த விஷயங்களை எல்லாம் புலம்பி தீர்த்த இன்பனை சமன் செய்து வெகு முயற்சிக்கு பின் கண்ணயர வைத்திருந்தாள் கோகிலா. அவன் கரத்தை பற்றிக்கொண்டு அவன் முகம் பார்த்தே படுத்திருந்தவளுக்கு உறக்கம் தூரப்போனது.



அவன் கஷ்டப்பட்ட பிராயங்களில், தன்னை எந்த அளவுக்கு சொகுசாக தன் பெற்றோர் வைத்திருந்தனர் என்பதை ஒப்பிட்டு பார்த்து, மாய்ந்து போனாள். உணவில் இருந்து படிப்பு வரை அத்தனையும் அவள் ‘ம்ம்ம்’ என்றால் மட்டுமே! இயல்பாய் உடுத்தும் சாதாரண உடை கூட அவள் விருப்பத்தை தாண்டி அமைந்ததில்லை. அதனாலேயே விருப்பமற்ற திருமணத்தை கூட எளிதில் உதறி தள்ளிவிட்டாள். ஆனால், இன்பனுக்கோ, அவன் விருப்பம் என்ற ஒன்று இருந்தது போலவே தெரியவில்லையே!!



இவ்வாறாய் அதையும் இதையும் யோசித்துக்கொண்டே நேரம் ஓடியதில் விடியல் பொழுதில் தான் தன்னை மீறி கண்ணயர்ந்தாள் கோகிலா. நேரம் தாண்டி வந்த உறக்கம், விரைவில் போகாது சதி செய்ய, மணி எட்டை தாண்டி சிறிது நேரம் கடந்த பின்னரே விழிப்பு தட்டியது அவளுக்கு.



இத்தனை நேரத்திற்கு கணவன் அசந்திருக்க மாட்டான் என நன்கு அறிந்ததால், இன்பன் அவள் அருகில் இல்லாததை பொருட்படுத்தாது, தன்னை சீர்ப்படுத்திக்கொண்டு வீட்டின் வெளியே குளியலறை தேடி நேரே சென்றாள் கோகிலா.



அடுத்த இருபது நிமிடங்களில் புதுமலராய் வெளியே வந்தவளின் கண்கள் சுற்றுச்சுவரை தாண்டி வெளியே போக, தன் கணவனை காணாததால் அங்கேயே சுற்றி வந்தது.



‘வெளில எங்கயும் போயிட்டாங்களா?’ என ஐயம் எழ, தூரத்தில் கறவை பசுக்களிடம் பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டு நின்ற கிளிகளை சத்தம் போட்டு அழைத்தாள் கோகிலா.



விரைந்து வந்தவர்களிடம், “ஏன் வேலைக்கு ஒருத்தரும் வரலை?” என்றாள் முதலில். பேச்சும் கலகலப்புமாய் இருக்கும் இடம் வெறிச்சோடி கிடந்ததில் அவள் ஆச்சர்யம் கொண்டு கேட்க, “பெரும்வாரி வேலை எல்லாம் எப்பவோ முடிஞ்சுதுங்க அண்ணி! இனி சாகுபடி பண்றப்போ ஆளுங்க வந்தா போதும்ன்னு அண்ணன் தான் சொல்லுச்சு!!” என்றான் பச்சைக்கிளி.



“ஹோ? அது எப்போ பண்ணுவீங்க?”



“சாகுபடிங்களா அண்ணி? சோளமும், வாழையும் இந்த மாச கடைசில பண்ணிடலாம்! கரும்புக்கு இன்னும் ஒரு மாசம் பிடிக்கும்” என்றான் வெட்டுக்கிளி.



“சரி, உங்க அண்ணன் வந்தா வீட்டுக்கு வர சொல்லுங்க” என்ற கோகிலா உள்ளே திரும்பி போக, “அண்ணனா? அவர் இன்னும் வீட்டை விட்டே வெளிய வரலையே? கறந்த பாலை சொசைட்டிக்கு ஊத்திடலாமான்னு கேட்க, நாங்களே அவருக்காக தான் உட்காந்துருக்கோம்!” என கிளிகள் சொன்னதும்,



‘மாமா வீட்ல தான் இருக்காரா?’ என திகைத்துப்போனாள் கோகிலா. கண்ணில் படாமல் மறைந்து இருக்கும் அளவுக்கு அது ஒன்னும் மாட மாளிகை இல்லையே! ஒரு முற்றம், ஒரு அறை என மிக சிறிய அளவிலான வீட்டில் அவன் தன் கண்ணில் சிக்கவில்லை என்றால் எங்கே இருப்பான்? என யோசித்துக்கொண்டே வீட்டிற்குள் திரும்பியவளை, “அண்ணி நாங்க சாப்பிட்டுட்டு வரோம்! அண்ணன்கிட்ட பாலை என்ன செய்யுறதுன்னு கேட்டு வைங்க” என சொல்லிவிட்டு சென்றிருந்தனர் கிளிகள்.



தங்கள் அறைக்குள் சென்று ஒருமுறை பார்த்தாள். அங்கே அவன் இல்லை என்றதும் வெளியே வந்தவளுக்கு ஆளில்லா முற்றம் காட்சி தர, கண்களை சுழற்றும்போது தெரிந்தது ஓர் வித்தியாசம்!!!



எப்போதும் பெரிய மரக்கதவு கொண்டு சாற்றியே வைத்திருக்கும் பின்பக்க வாசல், கொஞ்சமாய் திறந்திருந்தது. அதன்வழி சூரிய வெளிச்சம் முற்றதை அடைய, தன்னைப்போல் அவ்விடம் நகர்ந்தாள் கோகிலா.



திறந்திருந்த கதவின் வழி எட்டிப்பார்த்தவளுக்கு மண்டிக்கிடந்த செடிகளும், சலவைக்கல்லும், துளசி மாடமுமே கண்ணில் பட, சிறிது ஊன்றி பார்த்தபோது முன்பொரு முறை சுற்றுசுவர் இல்லாத அந்த ஆழ்கிணறை பார்த்து தான் பயந்தது நினைவு வர, அதன் ஓர் மூலையில் கொஞ்சமாய் தன்னை காட்டிக்கொடுத்தது இன்பனின் சிரம்.



அன்று ஆழம் அறிய எட்டிப்பார்த்ததுக்கே அவளுக்கு தலை சுற்றிப்போனது நினைவு வந்தது. தன்னை அதன் அருகே கூட போகக்கூடாதென்று சொன்ன இன்பனோ, அதன் உள்ளேயே இறங்கி அமர்ந்திருக்கிறான் என்றால், அதுவும் இந்த காலை வேளையில்...!! அவளுக்கு அது நெருடலாக இருக்க, குரல் கொடுக்காது மெதுவாய் அருகே சென்றாள்.



கலைந்த சிகையும், கசங்கிய உடையுமாய் எங்கோ வெறித்த பார்வையுடன் கிணறின் உள்பக்க திட்டில் அமர்ந்திருந்த இன்பனை பார்க்க, ஆதரவின்றி தனித்து நிற்கும் குழந்தையாய் தெரிய, நொடியில் பாரம் கொண்டது அவள் மனது.



‘எப்படி மாமா, சிரிச்சுக்கிட்டே இருக்க எப்பவும்?’ எப்போதோ அவள் அவனிடம் கேட்டது நினைவு வர, அது அவன் அணிந்திருந்த முகமூடியோ என இந்த ஷணம் தோன்றியது அவளுக்கு.



“மாமா...!!” நெஞ்சில் ஏறிய பாரம் குரலை அடைக்க, முனகலாய் அவள் அழைத்தது அவனை அசைக்கவில்லை. ஆழ மூச்செடுத்து தன்னை சரி செய்தவள், சற்றே உரக்க, “மாமா....!!!” என்றதும், சட்டென கலைந்தான் இன்பன்.



அவளை அங்கே கண்டதும் சிறு பரபரப்பு தோன்ற, “எதுக்கு இங்க வந்த?” என கேட்டபடி வேகமாய் எழுந்துக்கொள்ள போனவன் வேட்டி தடுக்கி ஒரு நொடி தடுமாற, விதிர்த்து போய் அலறிவிட்டாள் கோகிலா.



“மாமாஆஆஆ...”



சமாளித்துக்கொண்டு சுவரைப்பிடித்து நின்றவன், “ஒன்னும் இல்லடா!!” என்றபடி மறுபக்கம் தாவி குதித்த நொடியில்லாமல் ஓடி சென்று அணைத்துக்கொண்டாள் கோகிலா.



ஒரு வேளை தவறியிருந்தால் அவன் கதி?! அந்த கிணற்றின் ஆழமும், கரடுமுரடான ஒழுங்கற்ற அதன் உட்புற அமைப்பும் நினைக்கையிலேயே உடல் வெடவெடத்தது அவளுக்கு.



அவளை அணைத்தபடி பின் வாசல் படியில் அமர வைத்த இன்பன், அவள் முதுகை ஆதரவாய் வருடிக்கொடுத்தபடி, “ரிலாக்ஸ்டா” என்றான். சில நிமிடங்களில் தெளிந்தவள் நிமிர்ந்து அவன் முகம் காண, இப்போதும் அவன் பார்வை அந்த கிணற்றை நோக்கியே இருந்தது.



“அங்க எதுக்கு மாமா போறீங்க? ஒருவேளை தவறியிருந்தா என்ன ஆகிருக்கும்?” பதைபதைப்புடன் அவள் கேட்டதற்கு வெறுமையாய் இதழ் சுழித்தவன், “என்ன ஆகிருக்கும்? என் அம்மா மாதிரியே நானும் இதுல விழுந்து செத்துருப்பேன்!!” என்றான்.



“மாமா?” என்றவளுக்கு திகைப்பில் அதற்குமேல் கேட்க வார்த்தை எழவில்லை.



முதல் நாள் காலேஜ் போக முரண்டு பிடித்ததை போலன்றி இரண்டாம் நாள் யாரும் சொல்லாமலே தானாய் எழுந்து கிளம்பிக்கொண்டிருந்தாள் சுசீலா.



அறையில் இருந்து வெளியே வந்தவள், டைனிங் டேபிளில் காண்டீபன் ஏதோ யோசனையோடு அமர்ந்திருப்பதை கண்டு, “அத்தான்!! எப்போ வந்தீங்க நீங்க? நைட் ரொம்ப நேரம் முழிச்சுருந்தேன் உங்களுக்காக!” என்றாள்.



“வர லேட் ஆச்சு! இப்படியே தூங்கிட்டேன்!” என அவன் சொல்ல, அவன் குரல் பேதத்தை கூட அறியாதவள், “கூடத்துலேயேவா?” என்றாள் அவன் அருகே சென்று.



“ம்ம்ம்” என்றவன் அதற்க்கு மேல் பேசாமல் இருக்க, “சாப்பாடு வைக்கவா அத்தான்?” என்றாள். நேற்று அவன் வீசிய பார்வையும், சிரிப்பும் அவளிடம் மாற்றத்தை உண்டு பண்ண, தயக்கம் இன்றி நெருங்கி வந்தாள்.



அதை உணரும் நிலையில் கூட அவன் இல்லை! மனம் எங்கும் ‘அப்பா ஏன் பொய் சொல்லணும்?’ என்றதிலேயே உலண்டு தவிக்க, இரவெல்லாம் யோசித்ததில், ‘என்னிடமே மறைக்கிறார் என்றால், அவருக்கு ஏதாவது பிரச்சனையோ? நான் வருத்தப்படுவேன்னு என்னிடம் மறைக்கிறாரோ?’ என எண்ண ஆரம்பித்து விட்டான்.



தந்தையை தவறாய் யோசிக்க கூட வரவில்லை அவனுக்கு!!! அவன் நம்பிக்கை எல்லாம் ஒடிந்து மொத்தமாய் ஏமாந்து நிற்கபோகும் நாளில் இன்பனை விடவும் அதிகமாய் மனமொடிந்து போவான் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.



“அத்தான், சாப்பாடு வைக்கவா?” அவன் தோள் தொட்டு சுசீ மெலிதாய் உலுக்க, அவள் முதல் தொடுகை கூட அவன் மனதில் பதியாது, “நீ காலேஜ் கிளம்பு, முத்துவை வண்டி ஓட்ட சொல்லு” என்றான் கண்ணை மூடி அமர்ந்துக்கொண்டு.



அவள் முகம் ஏமாற்றத்தை வெளிப்படையாக காட்டியது அவனுக்கு தெரியாமல் போனது.

“நீங்க வரலையா மாமா?” டிரைவருடன் போக சொல்கிறானே என முகம் சுண்டி அவள் கேட்க, “எதுக்கு இப்படி தொல்லை பண்ற நீ? அதான் போன்னு சொல்றேன்ல?” என கத்தி விட்டான்.



அவன் கத்துவான் என எதிர்ப்பாராதவள், பயந்து இரண்டடி பின்னே போக, அடுக்களையில் இருந்த தங்கம், பதறி வந்துவிட்டார்.



“முத்து?” என உரக்க கத்த, ஓடி வந்த டிரைவரிடம், “இவளை காலேஜ்ல விட்டுடு” என்றான். அதற்குமேல் அங்கே நிற்க முடியாது, ‘காண்டாமிருகம், காண்டாமிருகம் தான்!’ என முனகிக்கொண்டே சென்றுவிட்டாள் சுசீலா.



தேங்கி நின்ற தங்கத்திடம், “அத்தே, அம்மாயி எங்க?” என்றான் காண்டீபன். ஒப்புக்காக கூட அவன் முகம் பாராதவர், வெடுக்கென அடுக்களைக்குள் புகுந்துக்கொள்ள, மறுப்பக்கம் வந்தார் சிவகாமி. அவரை கண்ணால் கண்டே பல நாட்கள் ஆகிறதே என எண்ணியபடி, “அம்மாயி?” என அழைத்தான்.



சட்டென நின்றவர், “வள்ளி....!!!” என்றார் சத்தமாய். பின்கட்டில் இருந்த பெண்ணொருத்தி ஓடி வர, “ஐயா இன்னைக்கு சத்தியமங்கலம் வர விருந்துக்கு போறாங்க! அதனால நான் நகைக்கடைக்கு கிளம்புறேன்! நீ சாப்பாட்டை எனக்கு அங்க குடுத்து விடு!” என சொல்லியவர் நிற்காமல் சென்றுவிட்டார்.



காண்டீபனுக்கு மனம் கசந்தது. சொந்தவீட்டிலேயே தீண்டத்தகாதவன் போல தான் நடத்தப்படுவது மனதை அறுக்க, ‘அன்று தான் பேசியது அதிகம் தான்! அதற்காக மன்னிக்கக் கூடாதா? நானும் இந்த வீட்டு பையன் தானே?’ என உரிமையாய் சுணக்கம் கொண்டது அவன் உள்ளம்.



சத்தியராஜன் அறையில் இருந்து வந்தவர், காண்டீபன் அமர்ந்திருப்பதை கண்டதும், “என்னடா காலைல வயல் பக்கமும் வரல, இன்னும் மில்லுக்கும் கிளம்பாம இருக்க?” என்றார் உணவை தனக்குத்தானே பரிமாறிக்கொண்டு.



‘எப்படி இவரால் பிரச்சனையை சுமந்துக்கொண்டு இயல்பாய் பேச முடிகிறது?’ என வியந்தவன், “கிளம்பனும்ப்பா” என்றான்.



“அந்த பய வயல்ல வேலையெல்லாம் முடிஞ்சுடுசாம்! நம்மக்கிட்ட இருந்து அங்க வேலைக்கு போனதுங்க எல்லாம், திரும்ப இன்னைக்கு நம்ம வயலுக்கே வந்துச்சுங்க!!! இனி இந்த பக்கமே வரக்கூடாதுன்னு சொல்லி விரட்டி விட்டுட்டேன்” என்றார்.



“......”



“அவன்கிட்ட வேலை இல்லன்னா நம்மக்கிட்ட வருங்க! நம்ம உடனே சேர்த்துக்கனுமா என்ன?” என்றார் கோவமாய்.



பின்னே, “அந்த ராசிகெட்டவன் பேருல நிலம் பதிவானதுக்கே விளைஞ்சு நின்ன பயிரெல்லாம் ஒரே ராத்திரில கருகி போனுச்சு!! இப்போ அவனே இறங்கி வேலை செய்யுறான்... உருப்படனும்ன்னு நினைக்குற? அதேபோல கருகி தான் போகப்போகுது பாரு!!” என்றார் தன்போக்கில்.



அவர் வார்த்தைகள் காண்டீபனுக்கு சுருக்கென்று தைக்க, “ம்ச்! அப்பா!!! இதென்ன பேச்சு? அது அவனோட உழைப்பு! நல்லதோ கெட்டதோ அது அவனோட போகட்டும்! நம்ம எதுவும் அச்சானியமா பேச வேண்டாம்!!” என்றான் உறுதியாய்.



அவனை கேள்வியாய் பார்த்துக்கொண்டே தட்டில் கைகழுவியவர், “அவனை ஒன்னு சொன்னா பொறுக்க மாட்டேங்குதே உனக்கு? ஹும்ம்!!!” என்றார் அவனையே பார்த்தபடி.



காண்டீபன் ஒன்றும் சொல்லாமல் இருக்க, முறைப்புடனே, “நீ என் புள்ள!! எனக்கு மட்டும் புள்ளையா இரு போதும்!!” என்றார். அதில், ‘இன்பனின் தம்பியாய் மாறாதே!’ என்ற பொருள் இருப்பதை அறியாமலா இருப்பான் காண்டீபன்?!!



“நான் உங்க புள்ளை தான்ப்பா” என காண்டீபன் சொல்ல, அவன் சிகையை ஆதூரமாய் வருடியவர், ஒன்றும் சொல்லாமல் வெளியே சென்றார்.



சில நிமிடங்கள் அப்படியே அமர்ந்திருந்த காண்டீபனுக்கு, சட்டென ஓர் எண்ணம் தோன்ற, வீட்டின் அருகே இருக்கும் ‘செல்வம் மெக்கானிக் செட்டிற்கு’ சென்று அவனிடம் தன் காரை விட்டவன், “என் காரை புல் சர்வீஸ் பண்ணிடு! நான் அவசரமா வெளில போனும், உன்கிட்ட வேற ஏதாவது கார் இருந்தா குடு” என்றார்.



ஒன்றிருக்கு நான்கு கார்கள் வீட்டில் நிற்க, தன்னிடம் வந்து கார் கேட்கிறாரே என அவன் யோசித்தாலும், தயங்காமல் ஒரு காரின் சாவியை காண்டீபனிடம் நீட்ட, அதை பெற்றுக்கொண்டவன், வேகமாய் சென்றான் சாலையில்.



அவன் எண்ணம் தப்பவில்லை என்பதை போல, சத்தியராஜனின் கார் மிதமான வேகத்தில், ஈரோடு, பள்ளிப்பாளையம் சாலையில் சென்றுக்கொண்டிருந்தது.

இவனும் பின்னூடே பொறுமையாய் தொடர்ந்தான்!!!



-வருவான்...
 
Meee.. aathiiiii dei inbaa maattika poraaru un appan kandeepana kaapathuviyo ila avan kitta irunthu unga appava kaapathuviyo odu daa dei.. aluthu vadiyura nallave ila ???

Excuse mee.. next ud eppo yen kekuren naa 14 la 1 part nu iruku paarunga ???
 
Last edited:
Top