Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோகுலத்தில் ராமன் -15

Advertisement

குண்டேரிப்பள்ளத்தில் இருந்து கிளம்பிய காண்டீபனும் கோகிலாவும் நேரே அவர்களின் தென்னந்தோப்பிற்கு செல்ல, “இங்கதான் உன் மாமன் நிக்குறான்! போய் ப்ளேடு போடு” என்றான் காண்டீபன். கோகிலாவிடம் அரைமணி நேரம் பேசியதிலேயே அவள் போக்கிற்கு இறங்கி வந்துவிட்டிருந்தான் அவன். இதில் நண்பர்கள் வேறு ஆனதில் அவளிடம் இயல்பாக பேச வந்தது அவனுக்கு.



காருக்குள்ளிருந்தே எட்டிப்பார்த்தாள் கோகிலா. கண்ணுக்கெட்டிய தொலைவில் இன்பன் தென்படுகிறானா என அவள் தேட, “இறங்கி போய்தான் பாக்குறது?” என்றான் காண்டீபன்.

“நான் இறங்கி போற கேப்ல நீ வண்டியை எடுத்துட்டு ஓடிட்டன்னா? மாமா இங்க தான் இருக்காங்கன்னு தெரியாமா நான் எப்படி உன்னை விடுறது?” என்றாள் அவள்.

‘விவரம் தான்’ என முனுமுனுக்கொண்ட காண்டீபன், “அவனோட அல்லக்கைங்க நிக்குது பாரு!!” என்றான் தூரத்தில் தெரிந்த பச்சைக்கிளி வெட்டுக்கிளியை காட்டி.



உடனே பிரகாசமான அவள் முகம், “சூப்பர், அப்போ மாமா இங்க தான் இருக்கணும்!! எஸ்ஸ்ஸ்” என சிறுபிள்ளையாய் சிரித்தாள். அவளை விநோதமாய் பார்த்த காண்டீபன், “அவன் மேல என்ன உனக்கு அவ்வளவு பிரியம்? சிட்டில நீ பார்க்காத பசங்களா? இவன்கிட்ட அப்படி என்ன இருக்கு? கருகருன்னு ஆறடிக்கு மேல நிக்குறான், உருப்படியா ஒரு வேலை இல்லை, எல்லாத்துக்கும் மேல அவன் உன்னை வேண்டாம்ன்னு சொல்றான்! போடான்னு தூக்கி போட்டுட்டு போகாம...?” என்றவனின் முகத்தில் வெறுப்பு ரேகைகள் ஓட, அதை உணர்ந்துக்கொண்டாள் கோகிலா.



“நீக்கூட தான் ஹிந்திக்காரன் மாறி இருக்க! ஆனா சுசீலாவை விரும்பலையா?” என்றதும், ரோஷமாய், “ஹான், சுசீலாவுக்கு என்ன கொறச்சல்? அவ கொஞ்சம் நிறம் மட்டா இருந்தாலும் அதுதான் அவளோட அழகே!!” என்றான்.



“ம்ம்ம்... உன் ஆள சொன்னதும் சுருக்குன்னு வருதோ? அதேதான் எல்லோருக்கும்!! என் ஆளு என் கண்ணுக்கு அழகன் தான்! அழகன் இல்ல, பேரழகன்!!!” என்றாள் கண்சிமிட்டி!!!

பின்னே, “அதுமில்லாம, பொண்ணுங்க அழகை பார்த்து எப்பவும் மனசை தொலைக்கமாட்டாங்க காட்ஜில்லா! உன்கிட்ட எல்லாம் இருந்தும், மத்தவங்க மனசை புரிஞ்சுகிட்டு, தழைஞ்சு போற குணம் இல்லை! ஆனா இன்பா மாமா? மத்தவங்க ஆசைக்கு மதிப்பு குடுக்குறாரு! அதுக்காக தன்னோட ஆசையை கூட தியாகம் பண்றது கோமாளித்தனமா தெரியலாம்! பட் எல்லார் வீட்லயும் ‘அம்மா’ அப்படிதானே இருப்பாங்க? என் கண்ணுக்கு இன்பா மாமா ரொம்ப பெரிய மனுஷனா தெரியுறாரு” என்றாள் கண்களில் கனவு தேக்கி!!



காண்டீபனின் முகம் மேலும் இறுக, அவன் கோவத்தை தடுப்பது ஸ்டியரிங்கை இறுக்கி பற்றியிருக்கும் அவன் கைகளில் தெரிந்தது.

அது புரிந்தாலும், “உனக்கு ஏன் இன்பா மாமாவை பிடிக்கலன்னு எனக்கு சரியா தெரியாது! ஆனா, ஒன்னு மட்டும் நிச்சயம்! மாமா அவர் மனசறிஞ்சு யாரையும் காயப்படுத்த மாட்டாரு! எல்லாம் இருந்தும் எதுவும் வேண்டாம்ன்னு ஒதுங்கி நின்னு, உன்னை உசரத்துல வச்சு பார்க்குறாருன்னா அவர் மனசு எத்தனை ப்யூர்ன்னு நீ புரிஞ்சுக்கணும்!! இதை நான் அவரோட காதலியா இல்லன்னாலும் சொல்லிருப்பேன்!!” என்ற கோகிலா கதவை திறந்துக்கொண்டு இறங்கி, இரண்டடிகள் சென்றவள், மீண்டும் ஓடிவந்து, “நீயும் நானும் ஒரே டீமா ஜாயின் பண்ணிட்டோம்ன்னு யாருக்கும் தெரியக்கூடாது! முக்கியமா பேரின்பன் மாமாக்கு! ஓகே வா காட்ஜில்லா?” என்றவள் பதிலை எதிர்பாராது, தோப்பை நோக்கி நடந்தாள். காண்டீபனின் கார் அவளை கடந்துச் செல்லும் சப்தம் மட்டும் கேட்டது.



தோப்பிற்குள் நுழைய, மரங்கள் சூழ்ந்த அந்த இடத்தில் ஐம்பதுக்கும் மேலே ஆட்கள் வேளையில் இருந்தனர். அதில் பாதி பேர் தென்னை மரத்தின் மீது அமர்ந்து காய்களை பறித்துப்போட்டுக்கொண்டிருக்க, அவளை அடையாளம் கண்டுக்கொண்ட ஒருவர், “பார்த்துப் போங்க அம்மணி, காய் பறிச்சு போட்டுட்டு இருக்காவோ!” என எச்சரிக்கை குரல் கொடுத்தார்.



அவர் குரலில் கிளிகள் இவளை கண்டுக்கொண்டு ஓடி வர, “அக்கா என்ன இம்புட்டு தூரம்?” என்றான் வெட்டுக்கிளி. அடுத்ததாய் பச்சைகிளி, “அண்ணன பார்க்க வந்துருப்பாங்கடா!” என்றான் வெட்டுக்கிளிக்கு பதிலாய்.



கோகிலா தோப்பினுள் நடப்பதை நிறுத்தவேயில்லை. அவள் கண்கள் இன்பனை தான் தேடிக்கொண்டிருந்தன. அருகே பேசிக்கொண்டே கிளிகள் வர காதில் விழுந்தாலும் பதில் சொல்லவில்லை அவள்.



“அண்ணனை எதுக்குடா பாக்கணும்? ஒரே வீட்ல தானே இருக்காங்க?” வெட்டுக்கிளி வேண்டுமென்றே கேட்க, “அட, என்னடா கேள்வி இது? பார்த்துக்கிட்டே இருக்கணும் போல இருந்துருக்கும்?” பதில் சொன்ன பச்சைக்கிளி ஓரக்கண்ணால் கோகிலாவை நோட்டமிட, அவளிடம் இன்பனின் தேடுதலை தாண்டி எந்த பாதிப்பும் இல்லை.



“அண்ணனை எதுக்கு இவங்க பார்த்துக்கிட்டே இருக்கணும்? எங்கயோ இடிக்குதே?!” வெட்டுக்கிளி ராகம் போட்டு இழுக்க, பச்சைக்கிளி, “அண்ணன கட்டிக்க.....” என ஆரம்பித்தபோது கோகிலா வெடுக்கென திரும்ப பார்த்த ஒரு பார்வையில் அவன் வார்த்தை அப்படியே நின்றது.



திட்டுவாளோ? என அவர்கள் திருதிருவென விழிக்க, “இப்போ என்ன உங்களுக்கு? நான் ஏன் உங்க அண்ணனை தேடி தேடி வரேன்னு தெரிஞ்சுக்கனுமா?” என்று அவள் கேட்டதும், தலையை மேலும் கீழும், இடமும் வலமுமாய் மாற்றி மாற்றி ஆம், இல்லை என ஆட்டிக்கொண்டிருந்தனர் கிளிகள்.



“ஏன்னா? நான் உங்களுக்கு அண்ணி ஆக போறேன்.... அதான்!!!” என்றவள் தன் நடையை தொடர, “ஹான்...?” என வாயை பிளந்துக்கொண்டு நின்றனர் கிளிகள் இரண்டும்.



தோப்பின் ஒரு மூலையில் குவிந்து கிடந்த தேங்காய் மட்டைகளின் மறுபுறம், தேங்காய் உறிக்கும் இரும்பு கம்பியின் தலையில் தேங்காயை ஓங்கி அடுத்து சொருகியவன், வலுகொண்டு அவன், அதன் மட்டையை உரிக்க, இன்பனை கண்டுக்கொண்டவள் துள்ளலுடன் ஓடினாள்.



“மாம்மா...!!!” உற்சாகமான அவள் அழைப்பில், வேலையை நிறுத்திய இன்பன், மூக்கின் மேலிருந்து வழிந்து கொட்டிய வியர்வையை ‘உப்ப்’ என ஊதிவிட்டான்.

உழைப்பில் மெருகேறி நிற்கும் தன் மாமன் மீது உரிமையாய் ஆசையாய் விரவின கோகிலாவின் கண்கள். அவள் பார்வையில் இன்பனுக்கு அடிவயிற்றில் மெல்லிய சாரலாய் ஓர் உணர்வு பிரவாகமெடுக்க, அதை மறைத்தபடி, “குண்டேரிப்பள்ளம் எப்புடி இருந்துச்சு?” என்றான் அடுத்த தேங்காயை கையில் எடுத்தபடி.



“உங்களுக்கு எப்படி தெரியும்?” என்றவளுக்கு, “எனக்கு தெரியாம எதுவும் நடக்காது!!!” என்றவன் ‘எதுவும்’ என்பதை அழுத்தமாய் சொன்னான்.



அவன் சொன்ன இருபொருளை கண்டுக்கொல்லாதவள், “நான் உங்க தம்பிக்கூட போனேன் மாமா!” என்றாள். அவன் சன்னமாய் சிரித்து, “தெரியும்!!” என்றான்.



“என்ன பேசுனேன்னு தெரிய வேண்டாமா?” என்ற கோகிலா கள்ளச்சிரிப்பு சிரிக்க, “வேண்டாம்!!” என்றான் இன்பன் பேச்சை முடிக்கும் பொருட்டு!! அவனை அப்படியே விட்டுவிட்டால் எப்படி? கோகிலா அடுத்து தொடர்ந்தாள்.

“என்ன மாமா? கல்யாணம் ஆகபோற சந்தோசமே உங்க முகத்துல இல்லையே? இந்நேரம் சுசீலாக்கூட உட்காந்து பேசிக்கிட்டு இருப்பீங்கன்னு இல்ல நினைச்சேன்!” அவன் கலையிழந்த முகத்தை சுட்டிக்காட்டி அவள் கிண்டல் பேச, இழுத்துப்பிடித்து சிரித்தான் இன்பன்.



“பேசுங்க மாமா? ஏன் அமைதியா இருக்கீங்க?” என்று கேட்டவளிடம் ஒரு செவ்வெளநீரை எடுத்து சீவி கையில் கொடுத்தான் இன்பன். மறுக்காமல் அவள் வாங்கி பருக, அதுவரை பொறுத்திருந்தவன், தேங்காயை இரண்டாய் வெட்டி உள்ளிருக்கும் பருப்பை அவள் சாப்பிட ஏதுவாய் எடுத்து கொடுத்துவிட்டு, “என்னால இயல்பா இருக்க முடியல கோகிலா” என்றான்.



அவள் முகம் கேள்வியை தாங்க, “என்கிட்டே எதுவும் கேட்காத! நீ என்னை ரொம்ப பாதிக்குற, அது மட்டும் தான் என்னால சொல்ல முடியும்!! முப்பத்தி ரெண்டு வருஷமா எனக்குன்னு எந்த ஆசையும் வச்சுக்காம வாழ்ந்துட்டேன்! இனிமேலும் எனக்கு என்னோட தனிப்பட்ட ஆசை முக்கியம் இல்லை! புரிஞ்சுக்கோ என்னை!!!” எங்கோ பார்த்துக்கொண்டே சொன்னான் பேரின்பன்.



“நம்ம பழைய மாறி இருக்கலாமே கோகிலா? வந்த புதுசல எந்த எண்ணமும் இல்லாம என்கிட்டே விளையாட்டுத்தனமா இருந்தியே? அப்படியே இரேன்!!?” இறைஞ்சினான். கோகிலாவை விலக்கி நிறுத்தவும் முடியாது, நெருங்கி வரவிடவும் முடியாது திண்டாடினான்.



காலையில் வீரமாய் பரிசம் போட ஒப்புதல் கொடுத்துவிட்டு வந்துவிட்டாலும் மனம் முழுக்க ரணமாய் மாறி அவனை வாட்டியது. சுசீலாவை அவனால் ஏற்றுக்கொள்ளவே முடியாது. அதேநேரம் கோகிலாவை விட்டுக்கொடுக்கவும் முடியாது என மனம் சொல்ல, நொந்தே போயிருந்தான். அந்த நேரம் அவன் முன்னே வந்து ரம்யமாய் புன்னகிப்பவளை அவனால் புறக்கணிக்கவோ, ஒதுக்கவோ முடியாது அவன் திணறிய நிலையின் வெளிப்பாடு தான் அவனது இறைஞ்சல்.



அவன் மனநிலை ஒருவாறாய் அவளுக்கு புரிய, இதமான குரலில், “இவ்வளோ நாள் எந்த ஆசையும் நீங்க வச்சுக்கலை! இனியாது, நீங்க ஆசைப்படுற என்னை உங்ககூடவே வச்சுக்கோங்களேன் மாமா?” என்றாள்.



“ப்ச்!! உனக்கு பொறுமையா சொன்னா புரியாதா? தினம் தினம் உன்னோட என்னால போராட முடியாது!! கொஞ்சமாவது திருந்து!! பைத்தியம் மாறி பண்ணாத!!” குரலுரத்தி முகத்தில் கடுமையுடன் அவன் சொன்னதும், ஒரு நீண்ட நொடி அவன் முகத்தை இமைக்காது பார்த்தவள், “திருந்திட்டேன் மாமா, இந்த நிமிஷத்துல இருந்து திருந்திட்டேன்!!” என சொல்ல, இன்பனால் நம்பமுடியவில்லை.



“இனி என்னை கல்யாணம் பண்ணிக்கோங்கன்னு உங்ககிட்ட வந்து நிக்க மாட்டேன்!! நீயே வந்து என்னை கல்யாணம் பண்ணிப்பன்னு சவால் விட மாட்டேன்!! நான் திருந்திட்டேன்!!” என்று திடமாய் அவள் சொல்ல, “ஏய்... பைத்தியம்!! எப்பவும் விளையாட்டு தானா?” என திட்டினான் இன்பன்.



“இல்ல மாமா! நான் என் முழு சுயநினைவோட தான் சொல்றேன்! நான் சொல்வதெல்லாம் உண்மை, உண்மையை தவிர வேறெதுவுமில்லை” நெஞ்சின் மீது கைவைத்து அவன் உறுதிமொழி போல கூற, தலையில் அடித்துக்கொண்டு அங்கிருந்து சென்றான் இன்பன்.



அவன் பின்னாலே ஓடியவள், “இன்னும் என் மேல நம்பிக்கை இல்லையா மாமா? சத்தியமா நான் திருந்திட்டேன்!!” என்றவள் அப்போது எதிர்ப்பட்ட கிளிகளை காட்டி, “இதோ உன்னோட அல்லக்கை கிளிங்க மேல சத்தியமா சொல்றேன், இனி உன்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்க மாட்டேன்!! கேட்க மாட்டேன்!! கேட்க மாட்டேன்!!” என்றாள் சற்று சத்தமாகவே.



“உஸ்ஸ்....!!” தன் உதட்டின் மீது விரல் வைத்து அவளை அமைதி காக்க சொன்னவன், சற்றே தள்ளி இருந்த பம்ப்பு செட்டில் பொங்கிய வழிந்த நீரில் முகத்தை வேகமாய் அடித்து கழுவ, கோகிலா அவனையே பார்த்துக்கொண்டு நின்றாள்.



கிளிகளோ, ‘அஞ்சு நிமிஷம் முன்னாடி தான் நமக்கு அண்ணின்னு சொல்லுச்சு இந்தக்கா! இப்போ என்னன்னா நம்ம மேல சத்தியமா அண்ணனை கட்டிக்க கேட்க மாட்டேன்னு சொல்லுது?’ என விழி பிதுங்க புலம்பிக்கொண்டிருந்தனர்.



முகம் கழுவியதும் புது தெம்புடன் சிறு தெளிவும் பிறக்க, இடுப்பில் இருகைகளையும் வைத்துக்கொண்டு அவளையே பார்த்துக்கொண்டிருந்தான்.



“என்ன மாமா பார்க்குறீங்க?” கோகிலா கேட்க, “எப்படி கேட்டதுமே சரின்னு சொல்ற? சந்தேகமா இருக்கே?” என அவளை சரியாய் படித்தான் இன்பன்.



“பழகின ரெண்டே நாள்ல உங்களை பிடிச்சு போகலையா? அதே மாறிதான் நீங்க திட்டுனதும் திருந்திட்டேன்! அதான் சத்தியம் கூட செஞ்சேனே!!?” என்று தடுமாற்றமின்றி சொல்ல, இன்பன் ‘சரி’ என தலையசைக்க வேண்டியதாய் போயிற்று.



“மாமா, இனி நீங்களும் நானும் பெஸ்ட் பிரண்ட்ஸ்! ஓகே வா?” என புன்னகித்து கரம் கொடுப்பவளிடம் தன்னை மீறி தன் கரத்தை ஒப்படைத்திருந்தான் இன்பன்.



கிளிகளை விட்டு தூரமாய் அவனை அழைத்து சென்றவள், “மாமா முக்கியமான ஒரு விஷயம் சொல்றேன் உன்கிட்ட!! சீக்ரெட்டா வச்சுக்கோ!!” என்றாள்.



“ஒன்னு மரியாதை குடு, இல்லன்னா குடுக்காத!! அதென்ன அப்போ அப்போ ‘ங்க’ போடுற, அப்புறம் அத காத்துல விட்டுடுற?” அடிக்கடி அவன் மனதில் உதயமாகும் ஐயத்தை அவன் கேட்டுவிட, “மரியாதை வரப்போ வச்சுகோ மாமா! ரொம்ப முக்கியமா இது!!?” என அதட்டிய கோகிலா, “யூ க்நொவ் ஒன் திங், காட்ஜில்லா ஸ் இன் லவ்!!!!” என்றாள் ரகசியமாய்.



“அது யாரு காட்ஜில்லா?”



“ம்ச்.. உங்க தம்பி தான்!!!” என்ற கோகிலாவை அவன் முறைக்க, “அதை விடு மாமா!! காண்டு யாரை லவ்வுது தெரியுமா?” என்றாள் இன்னும் ரகசியமாய்.



சற்றும் யோசிக்காது, “சுசீலாவை தானே?” என கேட்ட இன்பனை மிகுந்த ஆச்சர்யத்துடன், “எப்புடி மாமா?” என்றாள்.



“அதான் சொன்னேனே! எனக்கு தெரியாம எதுவுமே நடக்காதுன்னு!!” என்ற இன்பன் சிரித்துக்கொண்டே திரும்பி நடக்க, “மாமா மாமா, நீ சுசியை கட்டிக்கிட்டா காண்டீபன் பாவமுள்ள?” என்றாள் முகத்தை பரிதாபமாய் வைத்துக்கொண்டு.



“அதுக்கு அவன் தான் ஏதாவது செய்யணும்! நான் ஒன்னும் பண்ண முடியாது” அவன் முன்பே எடுத்திருந்த முடிவை அவளிடம் சொல்லாது மறைத்தான். சொல்லியிருக்க வேண்டுமோ?!



“அப்போ உனக்கு சுசியை பிடிக்குமா?”



“ம்ம்.. பிடிக்கும்!!” தயங்காமல் வந்தது இன்பனின் பதில். அவன் மனதில் கோகிலா மேல் நம்பிக்கை இல்லை. அவள் எதற்கோ காய் நகர்த்துகிறாள் என அவன் உள்ளுணர்வு இடித்தது. சுசியை காண்டீபனுக்கு விட்டுத்தர ஒப்புக்கொண்டால், கோகிலா இன்னமும் தன் மீது ஆர்வத்துடனே இருப்பாள் என எண்ணி இப்படி சொல்லிவிட்டான்.



ஒண்டிவீரர் கேட்ட சத்தியம் ஒரு காரணமென்றால், ஷங்கரின் மனசாட்சியற்ற அன்றைய வாக்குவாதம் ஒரு காரணம். சேற்றில் மலர்ந்த செந்தாமரையாய் கோகிலா இருக்கலாம். ஆனால், பூவை பறிக்க சேற்றில் அல்லவா இறங்க வேண்டும்? பூவே வேண்டாம் என்ற நிலை தான் இன்பனுடையது. அதையும் தாண்டி அவள் வேறு ஒருவனுக்கு நிட்சயமானவள் என்பதை சொல்லாமல் விட்டது கொசுறு கணக்கில் அவன் மனதில் தேங்கி நிற்கிறது.



“நிஜமாவா மாமா?” மீண்டும் கேட்டாள்.



“பிடிக்காமையா கல்யாணத்துக்கு ஓகே சொல்லிருக்கேன்!! என்னையே சுத்தி சுத்தி வரா! வேற என்ன வேணும்?” என்றிட, ‘நான் கூட தான் மான ரோஷம் பாக்காம உன்னையே சுத்தி சுத்தி வரேன், ஹும்ம்!’ என மனதுக்குள் நொடித்துக்கொண்டாள் கோகிலா.



“ஒருவேளை காண்டீபன் மாமா சுசியை கரெக்ட் பண்ணிட்டா?” கிடுக்குப்பிடியாய் அடுத்த கேள்வி அவளிடமிருந்து.



அதற்கும் தாமதிக்காது, “சுசீலா ஒத்துக்கிட்டா எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை! விட்டு கொடுக்க தயார்” என சொல்லிட, “இது போதுமே!!” என சிரித்தாள் கோகிலா.



“ஓகே மாமா!! காண்டீபன் சுசீலாவை விரும்புறது நமக்குள்ளயே இருக்கட்டும்! நம்ம ரெண்டு பேரும் ஒரே டீமுன்னு யாருக்கும் தெரியக்கூடாது! முக்கியமா சுசீலாவுக்கு!! ஓகே வா?” என்று கேட்டு அவனிடம் ஒப்புதல் வாங்கிய பின்னரே அவனை நகரவிட்டாள் கோகிலா.



மார்கெட்டிங் மூளை பக்காவாக வேலை செய்தது அவளுக்கு. காண்டீபனிடம் போட்ட அதே டீலை கொஞ்சமாய் பெயின்டிங் டிங்கரிங் பார்த்து இன்பனிடம் டீல் பேசிவிட்டாள்.



இன்பன் சென்றதும் அவளிடம் ஓடி வந்த கிளிகள், “யக்கா? என்னக்கா இப்படி பொசுக்குன்னு சத்தியம் பண்ணிபுட்ட? அப்போ எங்க அண்ணனை நீ கட்டிக்க மாட்டியா?” என்று கேட்டதும், கிளுக்கி சிரித்தவள், “என்னை தவற வேற எவளாது கட்டிடுவாளா என் மாமன?” என்றாள் மிதப்பாய்.



“அப்போ அந்த சத்தியம்!?”

“சும்ம்ம்ம்ம்ம்மா.....”



“அய்யோ எங்க உசுரு போச்சே!! செஞ்ச சத்தியத்தை மீறிட்டா, பொங்கசோறு தொண்டையில சிக்கி செத்துருவோம்ன்னு எங்காயா சொல்லுமே!! போச்சேஏஏ....!!!” என தலையில் அடித்துக்கொண்டு அவர்கள் அழ,



“மூச்!!!!!! இந்த விஷயம் வெளில போனா தான் உங்க உசுரு போகும், அதுவும் என் கையால!!!” கோகிலா மிரட்டிய தொனியில் வாயை மூடிக்கொண்ட கிளிகள், மிரண்டு போய் பார்க்க, “ரெண்டு அடிமைங்க சிக்கிருச்சு டோய்!!!” என்றெண்ணி கலகலத்து சிரித்தாள் கோகிலா.



இந்த சிரிப்பு மறையும் நாள் வெகு தொலைவில் இல்லை என அசரீரி கேட்டதோ!?



-தொடரும்....
super sis
 
விஜய தசமி வாழ்த்துக்கள் pa... Super Super Super pa.. Semma semma episode... இந்த kishore semma semma cunning fellow avan kita romba உஷாரா இருக்கனும்... Enna vennalum பண்ணுவான் enna vennum நாளும் செய்வான் polaye... கல்யாணம் அங்க kiramathula veikka vendaam nu solraan enna aaga pooguthoo... இங்க kaantiban kuda உடன்படிக்கை potukitu... Inban kita vanthutaan... Inban aala இந்த பக்கமும் போக முடியல அந்த பக்கமும் போக முடியல... மேடம் பெருசா promise எல்லாம் panni இருக்காங்க... இனிமேல் naa unna கல்யாணம் பண்ணிக்க கேக்க maaten... கல்யாணம் நீக்க solla maatenu but avanuku santhegam thaan... Athunaala தான் susi ah கல்யானம் panna சம்மந்தம் nu solli vechi இருக்கான்... Kaantiban correct பண்ணினாலும் no problem nu. Sollitaan.. Enna aaga pooguthoo... Super Super Super pa.. Eagerly waiting for next episode
 
First thank u sis for long epi..... super koki.. her deeling also super....Inbha, godjilla ok.... but kishore ullaha maha nadipuda sami...
 
இவ்வளவு நல்லா சிரிப்போட இருக்கிற பிள்ளைக்கு
அந்த போதையில் மிதக்கறவனா
 
Top