Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோகுலத்தில் ராமன் -16

Advertisement

பிரியா மோகன்

Tamil Novel Writer
The Writers Crew
*16*

முத்தம் கூட வேண்டாம்!

உன் அருகாமையில் கிடைக்கும் மூச்சுக்காற்றின் வெப்பம் போதும்!!!

ஷங்கரின் பேச்சுக்கு பின்னே, மொத்தமாய் ஒடுங்கி போய் தன் அறையோடு அடங்கியிருந்த தங்கத்தை கண்டு பேரின்பனுக்கு மனம் வலித்தது. அவன் சிறு வயதாய் இருக்கும்போது வெளியே அழைத்து செல்லும்படி தங்கத்தை அவன் வேண்டும்போதெல்லாம் சிறு விசும்பலோடு, ‘அத்தைக்கு கால் வலிடா கண்ணா! நீ நம்ம தோட்டக்கார அண்ணாக்கூட போறியா?’ என அவன் மனம் வருந்தக்கூடாது என கேட்பவரை கண்டு அப்போது அவனுக்கு என்ன புரிந்ததோ, ‘வேனாத்தே! நான் உனக்கு கால் அமுக்கி விடுறேன், அழாத! சரியாபோய்டும்’ என்று தன் பிஞ்சுக்கரங்களால் தங்கத்தின் கண்ணீர் துடைப்பவனை வாரி அணைத்துக்கொள்வார் அவர்.



வயது ஏறும்போது கண்ணில் கண்டிருந்த காட்சிக்கெல்லாம் அர்த்தம் புரிந்து, தவறு யார் மீது என அறிந்தவன், தங்கத்தை வீட்டோடு முடங்கி போக காரணமாயிருந்த செல்லம், ஷங்கரின் மீது கட்டுக்கடங்காத கோவம் பெருகியிருந்தது. இத்தனை வருடங்கழித்து வீட்டிருக்கு விஜயம் செய்தவர்கள், வீட்டிற்க்குள்ளேனும் சுதந்திரமாய் இருந்தவரை இப்போது அறையை விட்டுக்கூட வெளிவராமல் செய்துவிட, அவனுக்கு கோவத்தை யார் மீது காட்டுவது என்றே பிடிபடவில்லை.



அன்று அவன் கொண்டிருந்த சினத்திற்க்கு ஷங்கரை, எப்படி கை நீட்டி அடிக்காமல் விட்டான் என்றே இன்பன் இப்போது வரை சிந்தித்து அதிசயித்துக்கொண்டிருக்கிறான். மீண்டுமொருமுறை அவர் அப்படி பேசினால் கூட இன்பனின் கையால் அவர் கன்னம் பழுப்பது உறுதி!!



காரணமின்றி கோவம் கொள்வதும், அதை வேறோருவர் மீது காட்டுவதும் இன்பனுக்கு இயல்பிலேயே இல்லாத ஒன்றானதால் தான், ஷங்கர் செல்லத்தின் மீதான கோவம், கோகிலாவின் மீது இறங்காமல் இருக்கிறது. அதுவுமின்றி, இன்பன் கோகிலாவின் உறவே ‘உன் பெற்றோரை நமக்கிடையில் கொண்டு வரக்கூடாது’ என்ற ஒப்பந்தத்த்தோடு தானே முளைவிட்டது!? அதனால் ஷங்கரின் பேச்சுக்காக இன்பனிடம் வருத்தம் தெரிவிக்க முடியாத நிலையில் நின்றாள் கோகிலா. அப்படியே அவள் சென்று பேசினாலும், ‘உனக்கும் இதுக்கும் ஏதாது தொடர்பு இருக்கா? இல்ல தானே? அப்போ ப்ரீயா விடு’ என்பானே ஒழிய, ‘உன் தந்தை பேசியது கொஞ்சமும் சரியில்லை’ என உரிமையாய் அவளிடம் பொங்க மாட்டான்.



கோகிலாவிற்கு மனம் உறுத்தலாகவே இருந்தது. வீட்டில் உள்ள யாருமே அவளிடம் விகல்பம் காட்டாது நடந்துக்கொள்ள, தங்கத்திடம் மட்டுமாவது தன் தந்தையின் சார்பில் மன்னிப்பை வேண்ட வேண்டும் என எண்ணியவள், அவர் அறைக்கு சென்றாள்.

கையில் ஒரு நாவலை வைத்து வாசித்துகொண்டிருந்தவர், கோகிலா வந்ததை கண்டு, “வா கண்ணு!” என்றார் வாஞ்சையாய். அவளுக்கு இன்னுமே துன்பமாய் போனது. கபடம் இல்லா மனுஷியிடம் துவேஷம் காட்ட தன் தந்தைக்கு எப்படி மனம் வந்ததோ? என மருகிப்போனாள்.

“சாப்பிட்டியாடா?” என்ற அவர் கேள்விக்கு அவள் தலை ‘ஆம்’ என அசைந்தது.



“சித்தி....!!” மெல்ல தொடங்கியவள், “எனக்கு அந்த பட்டம்மா சமையல் பிடிக்கவே இல்லை சித்தி! உவேக்கா இருக்கு” என்றாள் முகத்தை அஷ்டகோணலாய் காட்டி.



புருவம் நெரித்து சன்னமாய் சிரித்தவர், “அப்படியா? அதான் காலைல ஐஞ்சு சப்பாத்தியோட எழுந்துட்டியோ?” என்று கேட்டிட, ஆடு திருடியவன் போல அகப்பட்டுவிட்டதில் முழித்தாள் கோகிலா.



“அது...அது... சரியா சாப்பிடலன்னா உடம்பு கெட்டுடும்ல? அதான் கஷ்டப்பட்டு சாப்பிட்டேன்!!” என்று சமாளித்ததோடு, “எனக்கு உங்க சமையல் தான் ரொம்ப பிடிச்சுருக்கு சித்தி” என்றாள்.



பதில் சொல்லாமல் புன்னகித்தவர், நாவலுக்குள் முகத்தை கொண்டு செல்ல, “சித்தி? இனி நீங்களே சமைங்களேன்!? ப்ளீஸ்!!!” என்றாள் முகம் சுருக்கி.



தலை நிமிர்த்தாமல் விரக்தியாய் சிரித்த தங்கம், “எனக்கு மனசு சரியானதும் நானே கிச்சனுக்கு வரேன், அதுவரைக்கும் பொறுத்துக்கோ ராஜாத்தி” என்றார் தன்மையாய்.



அவரே தொடங்கி வைத்ததும் வேகமாய், “சித்தி, சித்தி... அப்பா பேசுனதுக்காக நான் உங்ககிட்ட சாரி கேட்டுக்குறேன் சித்தி ப்ளீஸ்! அப்பா இப்படி பேசுற ஆளே இல்லை! எனக்கே ஷாக்கிங்கா இருந்துச்சு!!” என்றிட, அவரது விரக்தி புன்னகை தொடர்ந்தது.

“உங்களுக்கு அவர் செஞ்சது ரொம்ப பெரிய தப்பு சித்தி! இத்தனை நாளும் அதுக்காக வருத்தப்பட்டு தான் என்கிட்டே பேசிருக்கார். ஆனா அன்னைக்கு மட்டும் ஏன் அவர் அப்படி பேசினாருன்னே எனக்கு தெரியல!! ஐ பீல் ரியலி சாரி பார் யூ!!!!” என்றாள் தங்கத்தின் கரங்களை பற்றிக்கொண்டு.



“பூவோட சேர்ந்த நாரும் மணக்கும்ன்னு சொல்லுவாங்க! இங்க நாரோட சேர்ந்ததால பூவும் நாருது!!” என்ற தங்கத்தை புரியாது பார்த்தவள், “என்ன சொல்றீங்கன்னு புரியல சித்தி” என்றாள்.



கசப்பான முறுவலோடு, “எனக்கு உங்க அப்பா செஞ்சதை விட, என் கூடவே பொறந்த உங்க அம்மா செஞ்சது தான் மன்னிக்க முடியாத துரோகம்!! சின்ன வயசுல இருந்தே எல்லாத்துலையும் பயங்கர பிடிவாதம், நான் ஆசைப்படுற எல்லாத்துக்கும் பங்குக்கு வருவா! கல்யாண விஷயத்துலயும் இப்படி செய்வான்னு தெரிஞ்சுருந்தா கண்டிப்பா நானே விட்டுக்கொடுத்துருப்பேன்!” என்றார் தங்கம். அவர் கரத்தை ஆதரவாய் அழுத்திய கோகிலா வார்த்தைகளின்றி அமர்ந்திருந்தாள்.



“மேடை வரைக்கும் வந்து கல்யாணம் நிக்குறதை விட, எனக்கு பார்த்த மாப்பிள்ளையை என் தங்கச்சியே கட்டிக்கிட்டு வந்து நிக்குறது எத்தனை பெரிய அதிர்ச்சியா இருந்துருக்கும் எனக்கு? அந்த நிமிஷம் வாழ்க்கையே வெறுத்துடுச்சு!! மனசுல விழுந்த ரணம் போக முழுசா அழக்கூட விடாம என் அத்தை மகனுக்கு அப்போவே என்னை கட்டிவச்சாங்க! அவர் முகம் மனசுல பதியறதுக்குள்ள மகராசனா போய் சேர்ந்துட்டாரு!” என்றவர் அடக்கிய தேம்பலோடு, “அதுக்கு பின்னாடி ஊருல எல்லாருமே ‘ஐயோ பாவம்’ன்னு என்னை பரிதாபமா பார்க்குறதை என்னால தாங்கிக்கவே முடியல! என் மூஞ்சிக்கு நேரே என்னை அதிர்ஷ்டக்கட்டைன்னு சொல்லலன்னாலும் முதுகுக்கு பின்னாடி பேசுறது எனக்கு தெரியாமையா இருக்கும்?! பிடிமானம் இல்லாம இருந்தப்போ தான், இன்பன் கிடைச்சான், கெட்டியா பிடிச்சுக்கிட்டேன்! இன்னமும் அவனுக்காக தான் இருக்கேன்!!” என்றார் பெருமூச்சோடு.



“நீங்க இந்த வீட்டுக்கு வரவே கூடாதுன்னு இன்பனும் காண்டீபனும் என்ன ஆட்டம் கட்டுனானுங்க தெரியுமா? அத்தனையும் சமாளிச்சு உங்களை வரவைச்சோம்! எனக்காக கூட பார்க்க வேணாம்! எங்கம்மா அப்பாக்காக உங்கப்பா பொருத்து பேசிருக்கலாம்ல?” தங்கம் மனதில் இருந்த ஆதங்கத்தை எல்லாம் கொட்ட இடம் கிடைத்ததும் கொட்டிவிட, செய்வதறியாது இருந்தாள் கோகிலா. தங்கத்திடம் இப்படி ஒரு எதிர்வினையை அவள் எதிர்பார்க்கவில்லை. அவருக்கு இவ்வளவு கூட பேச வருமா? என வியந்தே போனாள்.



ஒருகட்டத்தில் தங்கம் பேச்சை நிறுத்தி அமைதியானதும், கோகிலா மெதுவாக, “நீங்க முன்னமாறி இருங்களேன் சித்தி! இப்படி ரூம்க்குள்ளவே இருக்குறது எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு!!!” என்றாள் கவலை தோய்ந்த குரலில்.



“ஹும்ம்!!” ஆழ மூச்செடுத்த தங்கம், “எனக்கு மனசு இன்னும் ஒப்பல கண்ணு, என்னை ஒரு வேலைக்காரின்னு சொல்லாம சொல்லிட்டாங்க உங்கப்பா!” அவர் சொல்ல, “அவர் சொன்னதுக்காக நீங்க இப்படி அடைஞ்சு கடக்கனுமா சித்தி? உங்களுக்கு சமைக்கிறதுன்னா ரொம்ப இஷ்டம் தானே? உங்களுக்கு பிடிச்சதை நீங்க செய்யுங்க!!” கோகிலா சொன்னதும், “கொஞ்ச நாள் போட்டும்!” என்று முடித்து விட்டார் தங்கம்.



‘ஓகே சித்தி’ என எழுந்து சென்றவளை, “கோக்கிமா?” என அழைத்த தங்கம், “நீ அடிக்கடி இன்பனை பார்க்க போற போலிருக்கே?” என்று நேரிடையாய் கேட்டுவிட சற்றும் எதிர்ப்பார்க்காத கேள்வியில் திடுக்கிட்டு திரும்பினாள் கோகிலா.



“நீ நிச்சயம் முடிஞ்சு கல்யாணத்துக்கு நிக்குற பொண்ணு! ஊர் வாயில விழாம நடந்துக்கோ!!” என்றவர் கண்களில் கனிவையும் தாண்டிய கண்டிப்பு தென்ப்பட்டதை போல தோன்ற, திகைத்து நின்றவள், ஒருவாறாய் சமாளித்து, “என் மனசு தப்புன்னு சொல்ற எதையும் நான் செய்யமாட்டேன் சித்தி! அப்படி என் மனசு சரின்னு சொல்றது ஊருக்கு தப்புன்னு பட்டா அதுக்காக நான் கவலைப்படவும் மாட்டேன்!!” திண்ணமாய் சொன்ன கோகிலா அங்கிருந்து சென்றுவிட்டாள்.

இதே வரிகளை அவள் மீண்டும் ஒருமுறை கண்ணீரோடு சொல்ல வேண்டிய நாள் விரைவில் வருமென்பதை அவள் அறிந்திருக்கவில்லை.



பேரின்பனுக்கு கோகிலாவின் திடீர் மனமாற்றத்தை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. ‘என்னைதான் கட்டிக்குவேன்னு’ சவால் விட்டவ, எப்படி உடனே மனசு மாறுனா? இனி என்னை கல்யாணம் பண்ணிக்கோங்கன்னு உங்ககிட்ட கேட்கவே மாட்டேன்னு சொன்னாளே? அதுக்கு என்ன அர்த்தமாம்?



‘குரங்கை நினைத்து மருந்தை குடிக்காதே’ என்ற கதையாய் அவளை நினைக்கக்கூடாது என்று முடிவு செய்தததும் தான் அவள் எண்ணங்கள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன இன்பனிடத்தில்.



அடுத்தவர் கை பொம்மையாகவே வாழும் தன் வாழ்க்கையை எண்ணி வெறுத்துப்போனான். கோகிலாவை கரம் பிடிக்க முடிவு செய்துவிட்டால், அதை நிகழ்த்த அவனுக்கு ஒரு நிமிடம் மிகையாகாது. இருப்பினும் அவன் மனம், தன் ஆசையை மட்டும் பாராது, உற்றார் உறவினர் என்றே யோசிக்கிறதே!?



சில நாட்கள் வீட்டில் தங்கியதற்கே கல்லென இருந்த தாத்தாவை ஆஸ்பத்திரியில் படுக்க வைத்துவிட்டனர் ஷங்கரும் செல்லமும். இதில் அவர்கள் பெண்ணையே மனம் முடித்தால், உதற முடியாமல் உறவு பிணைந்துவிடுமே!? பிற்க்காலத்தையும் சேர்த்து யோசித்தனான் இன்பன்.



‘ஒருவேளை நான்தான் அதிகம் யோசிக்குறேனோ? அதிகமாய் சிந்தித்து அவளை இழந்து விடுவேனோ?’ இப்படியும் தோன்றியது அவனுக்கு.



திக்கு தெரியா காட்டில் கண்ணை கட்டி விட்டதை போல ஆயாசமாய், கலக்கமாய், ஆவேசமாய் அவன் நொடிக்கு நொடி உணர்வு பிடியில் சிக்கித்தவிக்க, உடலை விட மனம் அதிகம் அசந்தது. ஒரு வார்த்தை பேசினால் கூட போதும், எதிரே இருப்பவரை கடித்து குதறிவிடும் கண்மண் தெரியாத உணர்வு!!

எங்கேனும் அமைதியான, தொந்தரவில்லாத இடத்திற்கு சென்றுவிடலாம் என்றே மனதில் உழன்றுக்கொண்டிருக்கிறது ஓர் எண்ணம்! அவன் இல்லாவிட்டாலும் நிச்சயிக்கப்பட்ட கோகிலாவின் திருமணம் நடைபெறும் தானே!? அவ்வெண்ணம் மேலும் பிரளயமெடுக்க, சரியாய் அந்நேரம் காதுக்குள் ஒலித்தது அந்த குரல்....!!



சொந்த வீட்டிலேயே ஒதுக்கப்பட்டு, அப்பா, தம்பியின் அவமதிப்புக்கு பழக்கப்பட்டு, தன் உணர்வுகளை வெளிப்படையாய் கொட்ட முடியாது அடங்கி, உரிமையான இடத்தில் முதலாளியாய் இல்லாது அடிபணிந்து அவன் நிற்க காரணமான குரல்...!!



“இன்பா கண்ணா!!! நீ தான் இனி உன் தம்பியை பார்த்துக்கனும்டா! அவனை விட்டு எங்கயும் போய்டாத! அவன் திட்டுனாலும் அடிச்சாலும், அவன் இனி உன்னோட பொறுப்பு!! அம்மாக்காக இதை செய்வியாடா? உன் தம்பிக்கு எப்பவும் நீ துணையா இருப்பியாடா?”

தன்னால், தனக்காக உயிர் விட்ட அன்னையின் குரல்!!! இப்போதும் அவன் செவிகளில் ரீங்காரமிட்டது. ஊமையாய், ‘அம்மா!!!! நான் சாய்ந்துக்கொள்ள உன் தோள் வேணும்மா! என்னால இங்க முடியல!!’ கண்மூடி மானசீகமாய் அழைத்தான் அவன் அன்னை வைதேகியை.



வெள்ளாமைக்காக வயலை உழுது தயார்ப்படுத்த வேண்டி கடந்த பத்து நாட்களாய் மில்லுக்கு செல்லாமல் இருந்தவன், இன்று வயல் வேலை முடிந்ததும், மில்லை பார்க்க சென்றான். அங்கே போகாமல் இருந்தாலும் மில்லிற்கு வந்த சரக்குகள், ஏற்றுமதிகள் சார்ந்த விவரங்கள் அனைத்தும் அவன் செவிகளில் ஏற தவறவில்லை.



தன் வேலையை எப்போதும் போல இன்பன் தொடங்க, அவன் உடன் இருந்த கிளிகளை நோக்கி வந்தார் அவர்களின் ஆஸ்த்தான கணக்கர் ஜோதிலிங்கம்.



“என்ன தம்பிங்களா? இன்னைக்கு தான் மில்லுக்கு வழி தெரிஞ்சுதா?” சூடாக அவர் கேட்க, இன்பன் குறுக்கே வரவில்லை. தன் வேலையை தான் தொடர்ந்தான்.



கிளிகளோ, “இன்பா அண்ணே வயலுக்கு வேலைக்கு போனாரு, அதான் நாங்களும் போயிருந்தோம்!” என சொல்ல, “இதெல்லாம் அவரோட சொத்து, ஒரு நாளைக்கு ஒரு இடம்ன்னு அவர் போகலாம்! சம்பளம் எதிர்ப்பார்க்க மாட்டாரு! உங்களுக்கு எப்படி வசதி?” என கேட்க, அதற்கு மேல் பேச்சை வளர்க்காமல், “இனி ஒழுங்கா வரோமுங்க!” என்று முடித்துக்கொண்டனர்.



அவர் அந்த பக்கம் சென்றதுமே, “ஏன்னே? எங்கள அந்த நாளு நிக்க வச்சு கேள்வி கேக்கான், நீ ஒரு வார்த்தை கூட பேசாம நிக்குற?” உரிமையாய் கேட்டான் பச்சைக்கிளி.



உணவு விடுதி ஒன்றுக்கு அனுப்ப வேண்டிய அரிசி மூட்டைகளை சரி பார்த்தபடியே, “உங்களை தானே கேள்வி கேட்டாரு!? இதுல நான் என்னத்துக்கு குறுக்க வரணும்?” என்றான் அசட்டையாய்.



“உனக்காக தானே வந்தோம்?” இது வெட்டுக்கிளி.



அவன் அப்படி சொன்னதும் அவர்களை நோக்கி திரும்பிய பேரின்பன், கண்களில் கனல் கக்க, “நான் கேட்டேனா? என்கூட வாங்கன்னு நான் கூப்பிட்டேனா? கொஞ்சம் இடம் குடுக்கவும் உரிமை எடுத்துக்கிட்டீங்க? தொலைச்சுடுவேன் பாரு!!” ஆள்காட்டி விரல் சுழற்றி அவன் மிரட்ட, அரண்டு போன கிளிகள், “என்னானே ஆச்சு உனக்கு? இப்படியெல்லாம் மூஞ்சி காட்ட மாட்டியே?” என்றான் பச்சைக்கிளி அழும்குரலில்.



இன்பன் மீண்டும் திரும்பிக்கொண்டான். அவன் இடக்கை சுளீரென அவன் நெற்றியில் அடித்துக்கொண்டது. தலையை இடவலமாக ஆட்டினான். மனதின் அழுத்ததை காற்றாய் மாற்றி அவன் ஊதித்தள்ளிவிட்டு, வேலையில் கவனம் வைக்க முயல, “உன் அத்தை மவ வந்ததுல இருந்தே நீ ஒரு மார்க்கமா தான் இருக்கன்னே?” என்றான் வெட்டுக்கிளி. ‘உண்மை சுடும்’ என கேள்விப்பட்டிருக்கிறான் இன்பன். ஆனால் முதல்முறை சூடு வாங்கியதில் மனம் வலியை காட்ட, “வாயை மூடுங்கடா” என உறுமினான்.



“இல்லண்ணே, அந்த புள்ள உன்கிட்ட ஒருமாறி பேசுது, எங்கனகிட்ட ஒருமாறி பேசுது!!” பச்சைக்கிளி அவள் பொய் சத்தியத்தை பற்றி சொல்ல வர, “நீங்க போறீங்களா? இல்ல நான் போகவா?” என பெரும்குரலில் கத்தினான் இன்பன்.

சுற்றி இருந்த ஆட்கள் கூட வேலையை விட்டுவிட்டு இன்பனை அதிசயம் போல பார்த்தனர். கண்ணாடி அறைக்குள் இருந்த காண்டீபனும் இன்பனின் முகமும் உடலும் காட்டும் கோவத்தின் சாயலில் அதிசயித்து வெளியே வந்தான்.



“ஏன் அண்ணே கோவமா இருக்கீங்க? ஏதாது மேலுக்கு நோகுதா?” இன்பனின் மீதுள்ள பிரியத்தில், வெட்டுக்கிளி அப்போதும் நகராது கேட்க, சூழ்நிலை உரைக்க அங்கிருந்து விறுவிறுவென நகர்ந்து சென்றான் பேரின்பன்.



அவனை பின்தொடர போன கிளிகளிடம், “ஏய்!! அவனை தனியா விடுங்க!!” என்ற காண்டீபனின் கணீர் குரல் ஆணை பிறப்பிக்க, ‘அண்ணே, கோவப்பட்டப்போ இந்த ‘காண்ட’ பார்த்த மாறியே இருந்துச்சுடா!!’ என்று முணுமுணுத்த பச்சைக்கிளிக்கு,

‘சேர்வாரோட சேர்ந்தா சினைக்கழுதையும் பரதேசம் போகும்’ன்னு எங்கம்மா அடிக்கடி சொல்லும்! காண்டீபன் அண்ணன் கூட பேசாதன்னா கேக்குதா நம்மண்ணே!?” என புலம்பினான் வெட்டுக்கிளி.



மில்லின் வாயிலில் இரண்டு பெரிய கார்களின் வரவை கண்ட காண்டீபன் அதில் இருந்து இறங்கியவர்களை கண்டு புருவம் சுருக்கினான். வெள்ளை வேட்டி சட்டையில் பத்து பேருக்கு குறையாமல் ஆட்கள் வந்திறங்கினர். மில்லை ஒருமுறை கண்களாலேயே அளவெடுத்துவிட்டு இவனை நோக்கி அவர்கள் வர, அதில் அவனுக்கு பரிட்சயமான ஒருவர் முன்வந்து, “உங்ககிட்ட பேசணும்!” என்றார் சற்றே திமிராய்.



காண்டீபன் ஒருமுறை தன் கண்களை சுழல விட்டான். பார்வை வட்டத்திற்குள் இன்பன் தென்ப்படுகிறானா என தேடியவன், அவன் இல்லை என்றதும், சிறு தலையசைப்பை மட்டுமே அவர்களுக்கு வரவேற்ப்பாய் கொடுத்து முன்னே செல்ல, அவனை பின்தொடர்ந்தனர்.



தன் அறைக்கு சென்றவன் சுழலும் நாற்காலியில் சுவாதீனமாய் அமர, அங்கிருந்த மூன்றே நாற்காலிகளை கண்டு முகம் இடுகினர் வந்திருந்தோர். ஜோதிலிங்கம் வெளியில் இருந்தே சைகையில், ‘நாற்காலிகள் கொண்டு வரவா?’ என கேட்டிருக்க, “தேவையில்லை” என உரத்த குரலில் பதில் சொன்னான் காண்டீபன். அவர் கேட்டதும் இவன் மறுத்ததும் வந்தவர்களுக்கு தெரியாமல் இல்லை.



“உட்காருங்க” என அவன் வாய்நிறைய சொல்ல, முக்கியமான மூவர் மட்டும் அமர்ந்தனர். அறையின் கதவை சாற்ற முடியாத அளவுக்கு ஆட்கள் சூழ்ந்திருந்தனர் அவன் அறையை.



“சொல்லுங்க என்ன விஷயம்?” காண்டீபன் நிதானமாய் கேட்க, “தம்பி இனிமே எங்களுக்கு ஆர்டர் குடுக்க முடியாதுன்னு சொன்னீங்களாமே?” என்றார் நடுவே இருந்தவர்.



“நீங்க யாருன்னே சொல்லாம பேசுனா எப்படி?” அவனது கேள்வியில் வந்தவனின் பிபி ஏறியது. “எங்களை யாருன்னு தெரியாதோ?” என்று உறும, “சொன்னா தெரிஞ்சுக்குறேன்!” என்றான் கூலாய்.



“கர்ணன் ஆசுரமத்தோட நிர்வாகி நான்தான்!! எங்க ஆசுரமத்துக்கு இனிமே அரிசி மூட்டை லோட் அனுப்ப முடியாதுன்னு சொன்னியாமே?” கொஞ்சமும் மரியாதையின்றி ஒருமையில் அவன் பேச, காண்டீபனுக்கு ரத்த நாளங்கள் சூடேற தொடங்கியது.



“ஆமா சொன்னேன்!!” அசால்ட்டாய் தோள் குலுக்கியவன், “ஆதரவில்லாத குழந்தைங்களுக்கு செய்யுற சேவகமா நினைச்சு தான் கொள்முதல் விலைக்கே ஒரு பைசா லாபம் கூட இல்லாம அரிசி மூட்டை கொடுக்க சொல்லி என் அண்ணன் ஏற்ப்பாடு செஞ்சான்!!” அவனை மீறி பேச்சில் ‘என் அண்ணன்’ என வந்திருந்ததை அவன் அறிந்திருக்க வாய்ப்பே இல்லை.

“ஆனா நீங்க, குழந்தைகளுக்கு அரசாங்கம் இலவசமா கொடுக்குற அரிசில சாப்பாடு போட்டுட்டு, நாங்க கொடுக்குறதை நீங்க தனியா நடத்திட்டு இருக்க ஹோட்டலுக்கு உபயோகப்படுத்துறீங்க? உங்க லாபத்துக்கு நாங்க ஏன் எங்க லாபத்தை குறைச்சுக்கனும்? அதான் இனிமே லோட் வராதுன்னு சொல்லிவிட்டேன்!!” என்றான் திடமாய்.



“ஏய்... தேவையில்லாத விசயத்துல எல்லாம் நீ மூக்கை நுழைக்காத புரியுதா? காசு கொடுக்குறோம், அரிசி மூட்டை இறக்குற! உன் வேலையை அத்தோட நிறுத்திக்க! நாங்க அந்த அரிசிய பிரியாணி ஆக்குனா உனக்கென்ன, வாய்க்கரிசி ஆக்குனா உனக்கென்ன?” என்றான் நின்றுக்கொண்டிருந்த ஒருவன்.



ஐ விரல்கள் மூடி மூச்சை இழுத்து விட்டான் காண்டீபன். வெளியே நின்றாலும் பேச்சு தெள்ளத்தெளிவாய் ஜோதிலிங்கத்தின் காதில் விழுக, பதறிப்போனார் நடக்கப்போவதை எண்ணி!



அங்கிருந்து ஓடியவர், தேடியதோ பேரின்பனை!! அவர் கண்ணில் அவன் சிக்கினால் தானே!!
 
மில்லுக்கு பின்பக்கம் ஆள் அரவமின்றி இருக்கும் அரசமரத்தின் வேரில் அமர்ந்து பளிச்சென்ற வானை வெறித்துக்கொண்டிருந்தான் பேரின்பன். அன்றொரு நாள் இதே இடத்தில் நின்றிருந்த போது அவள் வந்தாளே? (அவன் இங்குலீஷ் பாட்டு பாடிய அன்று) இப்போதும் வருவாளா? ஏனோ அவளை பார்த்தால் கூட போதும் மனம் தெளிந்துவிடும் என தோற்றியது அவனுக்கு.



அவன் மன சஞ்சலத்தின் வேரும் அவளே என்பதை மறந்து மருந்தாய் அவளையே வேண்டியது அவன் மனம்.



சிந்தனையோடு சிக்கித்தவித்தவனின் சிகையில் ஊர்ந்தது ஏதோ ஒன்று. குறுகுறுப்பில் பட்டென அவன் தட்டிவிட, கலகலவென கிளம்பிய நகையொளி, ‘நான் வந்துட்டேன்!!’ என அவள் வருகையை அவனுக்கு பதிவு செய்ய, திரும்பி அவள் முகம் காணும் முன்னே, மனதை அழுத்திய பாரமும், நெற்றி பொட்டில் விடாது தெறித்த வலியும், ஒருசேர அவளுக்கு பயந்து ஓடியிருந்தது.



வடிந்து போயிருந்த உற்சாகம் ஊற்றெடுக்க, அது தருவித்த புன்னகையுடன் திரும்பியவன் சிரித்துக்கொண்டிருக்கும் கோகிலாவை கண்டு பொய்யாய் முறைத்து, “அறிவிருக்கா உனக்கு?” என்றான்.



“ப்ச்!! வேற ஏதாவது புதுசா கேளுங்க மாமா!!” என்ற கோகிலா, அவன் அருகே வந்து அமர்ந்துக்கொள்ள, நகர தோன்றவில்லை அவனுக்கு. அந்நேரத்தில் அவள் அருகாமை அத்தியாவசியமாய் பட்டது.



“வேலை நேரத்துல ஏன் இங்க வந்து தனியா உட்காந்துருக்கீங்க? கிளியை கேட்டா, அண்ணன் பிராண்டிடுச்சுன்னு சொல்றாங்க” என்று சிரிக்க, அவள் முகத்தை விட்டு கண்ணெடுக்க முடியவில்லை அவனால்.



“உடம்பு ஏதும் சரியில்லையோ? ஆர் யூ ஆல்ரைட்?” அக்கறையான அவள் குரலில் ஏதோ இருப்பது போல தோன்றியது அவனுக்கு. அவன் நெற்றியிலும் தொண்டையிலும் புறங்கை வைத்து பார்த்தவள், “டெம்ப்பரேச்சர் நார்மலா தான் இருக்கு” என சொல்லிக்கொண்டாள்.

அவள் கரம் பதித்த இடம் மட்டும் சில்லென ஆனது அவனுக்கு.



“சாப்பிட்டீங்களா? அவளது அடுத்த கேள்வி. ‘இவளால் வாயே மூட முடியாதா?’ மனத்துள் செல்லமாய் அலுத்துக்கொண்டான் ‘ஒருமுறையேனும் வாயை திறந்து பேசேன்!!’ என ஓர்நாள் இவளிடம் அவன் கெஞ்சப்போவதை அறியாது!!



“சும்மா உங்களை பார்க்கலாம்ன்னு தான் வந்தேன் மாமா!! அதுக்காக நான் உங்களை கல்யாணம் பண்ணிக்க சொல்லி கேட்க தான் வந்தேன்னு ஒன்னும் நீங்க நினைக்க வேண்டாம்! சரியா?” வீராப்பான அவள் பேச்சில் அவன் புருவங்கள், ‘அப்படியா?’ என்ற கேள்வியோடு உயர்ந்து இறங்கியது.



“மாமா!! ஐ திங்க் யூ ஆர் நாட் ஆல்ரைட்!” என்று சொன்ன கோகிலாவை கண்டு ‘ஏன்?’ என புருவம் நெரித்தான் இன்பன்.



“நான் வந்து இவ்வளோ நேரமாச்சு! இந்நேரத்துக்கு நீங்க என்னை திட்டிருக்கணும், இல்லனா இங்கிருந்து ஓடிருக்கணும்! எதுவுமே பண்ணாம என் மூஞ்சியவே பார்த்துகிட்டு இருக்கீங்களே? சம்திங் பிஷ்ஷி” தீவிரமான அவள் பாவத்தில் அவன்தான் வாய்விட்டு நகைக்க வேண்டியதாய் போயிற்று!



“எப்படிதான் சிரிக்காம கிண்டலடிக்குறியோ?” சிரிப்பினூடே சொன்னவன் அவள் காதை பற்றி கிள்ள, “ஸ்ஸ்ஸ்ஆஆ” என போலியாய் கத்தினாள் கோகிலா.



“நான் இன்னைக்கு ரொம்ப அப்நார்மலா இருந்தேன்!! ரொம்ப டென்ஷனா!!” இன்பன் சொல்லும்போதே, “ஆமா வெட்டுக்கிளி கூட சொன்னான்!! இன்பன் கண்ணாடி முன்னாடி நின்னாரு, தன்னை காண்டீபனா நினைச்சுக்கிடாரு! கடைசில காண்டீபனாவே மாறிட்டாருன்னு!!” அவள் கைகளை ஆட்டி அபிநயம் பிடித்து சொல்ல,



“இது கிளி சொன்ன மாறி இல்லையே!! கிளி ‘மூக்கு’ சொன்ன மாறிதான் இருக்கு!!” என்ற இன்பன், அடுத்ததாய் அவள் மூக்கை பிடித்து திருக, “ஆஆஆ” என்றாள் கோகிலா. குறும்பாய் சிரித்த இன்பன், “மூக்க்க்கி....!!” என ரசனையாய் சொல்ல, வெகுநாட்களுக்கு பின்பான அவனது பிரத்யேக அழைப்பில், கோகிலாவின் கண்களில் மின்னல் வெட்டியது.



“அன்னைக்கும் இப்படிதான் சொன்ன மாமா!!!” இதமான அவள் குரலில் முகத்தை சட்டென திருப்பிக்கொண்டான் பேரின்பன். அவன் முகமாற்றத்தை கண்டவள், “சரி சரி!! உடனே ‘வாழ்வே மாயம், இந்த வாழ்வே மாயம்’ன்னு தாடி வளர்க்காத!!” என்று திட்டிவிட்டு (!?) “உனக்கு கோவம் வந்ததை என்னவோ தமிழ்நாட்டுல தாமரை மலர்ந்த மாறி அதிசயமா எல்லாரும் பேசிக்கிட்டு இருக்காங்க!!?” என்றாள் கோகிலா.



“எனக்கு கோவம் அதிகமா வராது!! வந்தா சீக்கிரமா போகாது!! அதான் இப்படி!!” என்றான் இன்பன்.



“ஓஓ!!” என ராகம் போட்டு இழுத்தவள், “எனக்கு ரொம்ப நாள் சந்தேகம்! நீங்க ஏன் உங்க இடத்துலயே வேலைக்காரன் மாறி இருக்கீங்க?” என்றாள்.



“சொந்த இடத்துல வேலைப்பார்த்தா தப்பா?” அவன் கேள்வி சற்றே சூடாக வர, “வேலை பார்க்கிறது தப்பில்லை! எல்லாரை மாதிரி நீங்களும் லைன்ல நின்னு தினக்கூலி வாங்குறது தான் நெருடலா இருக்கு! ஏன் மாமா?” என்றாள்.



“செலவுக்கு காசு வேணாமா?” இம்முறை அவன் குரல் இறங்கி ஒலித்தது.



“எனக்கு சத்தியமா புரியல! எதுக்காக உங்க அப்பாவும் காட்ஜில்லாவும் உங்களை ஒதுக்கி வைக்குறாங்க! நீங்க அந்த அளவு தப்பு எதுவுமே செஞ்சுருக்க மாட்டீங்கன்னு என் மனசு சொல்லுது!!”



“........”



“என்கிட்டே சொல்ல விருப்பமில்லைன்னு நினைக்குறேன்!!” என்ற கோகிலா சில நொடிகள் பொறுக்க, அப்போதும் அவனிடம் பதில்லாததால், எழுந்துக்கொண்டாள்.



“வரேன் மாமா” என்றவள் அவனை விட்டு நகரப்போக, சட்டென அவள் கரம் பிடித்த இன்பன், அவளை பற்றிக்கொண்டே எழுந்து நின்று, “சில விஷயங்களை கேட்டு வாங்கக்கூடாது மூக்கி! தன்னால கிடைக்கும்போது வேணாம்ன்னு சொல்லவும் கூடாது!!” அவள் கண்களை பார்த்து இன்பன் நிதானமாய் சொல்ல, அவனையே சில நொடிகள் கூர்ந்து பார்த்தாள் கோகிலா.

பின், “இதுக்கு, ‘சொல்ல முடியாது போடி மூக்கி’ன்னு நேரடியாவே சொல்லிருக்கலாம்” என்று முறைக்க, உரக்க சிரித்தான் இன்பன்.



சிரிக்கும் இன்பனின் வதனத்தில் இருந்து கண்ணெடுக்க முடியாமல் சொக்கி போனாள் மூக்கி. சிறிது நேரத்திற்கு முன்புவரை இன்பன் இருந்த மனநிலைக்கு ‘சிரி’ என கெஞ்சிக்கேட்டிருந்தால் கூட அவனுக்கு சிரிப்பு வந்திருக்காது! இப்போதோ கோகிலாவை கண்டதுமே புயல் காற்றில் சிக்கிய அரிசி மாவென சஞ்சலங்கள் அனைத்தும் இடம் தெரியாது போயின.



பெரும்சிரிப்பு குறைந்து புன்னகையாய் மாறினாலும் அவள் மீதான அவன் பார்வை மட்டும் மாறவேயில்லை. அவன் லாவண்யத்தில் சிக்குண்டவள், “ஆர் யூ ஓகே மாமா? பீலிங் ரிலேக்ஸ்ட்?” என்றாள் இன்முகமாய்.



நெற்றி சுருக்கி, “ஏன்?” என்றிட, “நீ ஏதேதோ மனசுல போட்டு குழப்பிக்கிட்டு இருக்கன்னு தோணுச்சு! இப்போ ஓகே வா?” என்றாள் தெளிவாய்.



‘நான் சொல்லாமல் என் மனநிலையை அவள் எப்படி அறிந்தாள்!?’ என வியந்தவன், அடுத்து என்ன நடந்தது என உணர்வும் முன்னரே, அவன் நெஞ்சத்தில் சரண் புகுந்திருந்தாள் கோகிலா. இன்பன் நெஞ்சில் தலை சாய்த்து, தன் கைகளை அவன் முதுகில் கோர்த்து அணைத்திருந்தாள்.



அவன் இதயத்துடிப்பு தாறுமாறாய் எகிறியது. அன்றைய இரவு இருவர் மனமும் ஒன்றாய் இணைந்தபோது கிடைத்த அணைப்பு, ஒரு இன்ப படபடப்பில் சரியாய் உணர முடியாது போயிருக்க, இன்றைய அணைப்பு அதை ஈடுகட்டும் படி அமைந்தது.



அவளை தன்னோடு சேர்த்தணைக்க சொல்லி மனம் கூவினாலும், ‘இது சரியில்லையே’ என அவனுக்குள் இருந்த யோக்கியன் குரல் கொடுத்தான்.



“மாமா!! ரொம்ப யோசிக்காத!! சில விஷயங்களை கேட்டு வாங்கக்கூடாது! தன்னால கிடைக்கும்போது வேண்டாம்ன்னு சொல்லவும் கூடாது!! இது ‘பேரின்பானந்தா’ எனக்கு சொன்னது!!” என அவனின் வார்த்தைகளை அவனுக்கே திருப்பி கொடுத்து சிரித்தாள் கோகிலா.

தோள் சாய அன்னைக்காக ஏங்கியவன், கோகிலாவின் தோளில் நிர்மலமான மனதுடன் சாய்ந்துக்கொண்டான்!



“உங்களுக்கு, எங்களால இனி எந்த சப்பளையும் பண்ண முடியாது!! நீங்க கிளம்பலாம்!!” தருவித்த பொறுமையுடன் பேசிக்கொண்டிருந்தான் காண்டீபன்.



“அதெப்படி போறது? அதான் இரண்டு வருஷத்துக்கு அரிசி அனுப்புறோம்ன்னு ஒப்பந்தம் போட்டுருக்கீங்களே!? அது முடிய இன்னும் ஆறு மாசம் இருக்கு! அதுவரைக்கும் நீங்க கொடுத்து தான் ஆகணும்!!” வந்தவன் சற்றே அதிகமாய் குரல் உயர்த்தினான்.



“உங்க யாருக்கும் காது கேட்காதா? இல்ல, ‘முடியாது’ங்குற வார்த்தைக்கு அர்த்தம் தெரியாதா?” காண்டீபனின் நக்கலான பதிலில், “உன்கிட்ட பொறுமையா பேசுறதெல்லாம் சரிப்படாது!! டேய்... காட்டுங்கடா நம்ம யாருன்னு!!” வந்தது முதல் சட்டம் பேசிக்கொண்டிருந்தவன் இப்போது வன்முறைக்கு அடிப்போட, கண்ணிமைக்கும் நேரத்தில் எழுந்த காண்டீபன், தான் அமர்ந்திருந்த நாற்காலியை ஒற்றைக்கையில் தூக்கி, அடிக்க சொன்னவன் மீதே ஆவேசத்துடன் வீச, எதிர்ப்பாராத அவன் அதிரடியில் ஸ்தம்பித்து போயினர்.



பூச்சாண்டி காட்டிவிட்டு வரலாம் என்றே இரண்டு கார்களில் கிளம்பி வந்திருந்தனர். பேச்சு வார்த்தை காரசாரமாய் போனால், எப்படியேனும், முடிந்து போன டீலிங் திரும்ப கிடைத்து லாபத்தில் குறையேதும் இல்லாமல் போகும் என அவர்கள் திட்டம் தீட்டியிருக்க, ‘நீ எள் என்றால், நான் எண்ணெயாய் காய்வேன்’ என அடித்தே விட்டிருந்தான் காண்டீபன்.



அடிவாங்கியவன் கபாலம் கீறிட்டு ரத்தம் மெல்ல எட்டிப்பார்க்க தொடங்க, ஜோதிலிங்கத்துக்கு, ‘எதிர்ப்பார்த்ததை விட சூழ்நிலை மோசமாய் மாறிவிட்டதே!’ என மனதில் பயரேகைகள் ஓடியது.



“சொல்லிக்கிட்டே இருக்கேன், சும்மா நொய்யு நொய்யுன்னு!! மரியாதையா போறீங்களா? இல்ல எல்லாரோட மண்ட ஓடையும் உடைச்சு அனுப்பவா?” காண்டீபனின் கதறலில், கண்களில் வன்மத்தீ பறக்க, அடிப்பட்டவனை அழைத்துக்கொண்டு அங்கிருந்து சென்ற அனைவரிடமும் பயத்தை தாண்டி காண்டீபனின் மீதான வக்கிரப்பார்வை நிலைத்திருந்தது.



ஒருசில வேலையாட்களை தவிர பெரிதாய் யாருக்கும் இங்கே நடந்த விஷயம் கண்ணில் படவில்லை.



கொஞ்சமும் கலங்காது நின்ற காண்டீபனை நெருங்கிய ஜோதிலிங்கம், “என்ன தம்பி நீங்க? கை நீட்டும் முன்ன யோசிக்கிறது இல்லையா? பேச்சுவார்த்தைல முடியவேண்டியத ஊர் பிரச்சனை ஆக்கிடுவீங்க போல? அடிபட்டவன் என்ன செய்ய காத்திருக்கானோ தெரியல! அவனுங்க பார்வையே சரியில்லை தம்பி!!! இதுக்குதான் இன்பன் தம்பியை கூப்பிடலாம்ன்னு போனேன்! அதுக்குள்ள எல்லாம் முடிஞ்சுடுச்சு!” அவர் புலம்பியதும்,



“இன்பன் வந்தா மட்டும் என்ன கிழிச்சுருப்பானா?” என்றான் காண்டீபன் சீற்றமாய்.



“அவர்கிட்ட ஒரு நிதானம் இருக்கும்! பேச்சுலையே அடிப்பாரு!! நீங்க அடிச்சுட்டு தான் பேசவே செய்வீங்க! உங்களுக்கு வியாபாரம் பார்க்க எல்லாம் பொறுமை பத்தாது தம்பி!” பலவருட பழக்கத்தில் மனம் சொல்வதை மறைக்காமல் வெளியிட்டிருந்தார் ஜோதிலிங்கம்.

“அவனுக்கு சாமரம் வீசுறதை நிறுத்திட்டு வாங்குற சம்பளத்துக்கு மட்டும் வேலை பாருங்க!! இந்த விஷயத்தை எப்படி கையாலனும்ன்னு எனக்கு தெரியும்!! என்னைத்தாண்டி அந்த இன்பன் காதுக்கு விஷயம் போச்சு!!! அன்னையோட உங்க வேலையும் போச்சு!!” என்றதோடு, “நான் சொன்னா செய்வேன்!!!” என அழுத்தமாய், அதிசீற்றமாய் உறுமிய காண்டீபன் அங்கிருந்து சென்றான்.

-தொடரும்...
 
Top