Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோகுலத்தில் ராமன் -17

Advertisement

பிரியா மோகன்

Tamil Novel Writer
The Writers Crew
*17*

பொம்மையை நீ கொஞ்சாதே!


அதற்க்கு உயிர் வந்துவிட்டால், யார் வளர்ப்பது?!

“எங்க வீட்டு பொண்ணு சுசிலாவை உங்க வீட்டு மருமகளா அனுப்பிவைக்க எங்களுக்கு பரிபூரண சம்மதம்! கூடிய சீக்கிரம் ஒரு நல்ல நாளா பார்த்து பந்தக்கால் நட்டு, கல்யாண வேலையை ஆரம்பிச்சுடலாம்!!!” உளமார்ந்த மகிழ்ச்சியோடு மாணிக்கம் தம்பதி பாரியூர் அம்மன் சன்னதியில் வைத்து வெற்றிலைபாக்கு மாற்ற, “உங்க வீட்டு பொண்ணை, எங்க வீட்டு மருமகளா ஆக்கிக்க எங்களுக்கும் சம்மதம்!!” என்ற மொழியோடு ஒண்டிவீரரும் சிவகாமியும் தம்பதி சமேதராய் நின்று அதை பெற்றுக்கொண்டனர்.



சுசீலாவின் முகத்தில் அந்த ஷணம் வந்த போன உணர்ச்சிப்பெருக்கை கண்டு பேரின்பனுக்கு உள்ளம் குறுகுறுத்தது. தவறு செய்கிறோம் என அவன் மனம் அடித்துக்கொண்டது. திரும்பி காண்டீபனை பார்த்தான். அவனும் சுசீலாவின் தான் பார்த்துக்கொண்டு நின்றான். இருவருக்குமிடையே நின்ற கோகிலா, அத்தனை பற்களையும் காட்டி சிரித்துக்கொண்டிருக்க, இன்பனுக்கு ஆத்திரமாய் வந்தது.



குரங்காட்டி போல அவனையும் காண்டீபனையும் ஆட்டுவித்துக்கொண்டு எந்த கவலையும் இன்றி அவள் சிரித்துக்கொண்டு நிற்ப்பதை கண்டு அவனுக்கு மண்டை சூடேறியது.



கடிகாரத்தை பலமுறை பார்த்துக்கொண்டே நின்ற சத்தியராஜன், “அப்பா, வேலை முடிஞ்சுது தானே? நான் கிளம்பவா? கடை திறக்கனும்!” என்றார் அவசரகதியில்.



மகனுக்கு நடக்கும் நற்க்காரியத்துக்கே பலமுறை சிவகாமி வருந்தி அழைத்து, இறுதியாய் ஒண்டிவீரர் சத்தம் போட்டதும் தான் கிளம்பி வந்திருந்தார். வந்ததில் இருந்து கடிகாரத்தை நிமிடத்திருக்கு ஒரு முறை வெறித்துக்கொண்டே இருக்க, ஒப்பு தாம்பூலம் கை மாறியதும், ‘கடைக்கு போக வேண்டும்’ என்ற பழைய பல்லவியை தொடங்கிவிட்டிருந்தார்.



ஒருமுறை அவரை முறைத்துப்பார்த்த ஒண்டிவீரர், “நீ கடைக்கு போய் வெட்டி முறிக்க போற சமாச்சாரம் ஒன்னும் காத்துக்கிட்டு இல்ல, அமைதியா நில்லு!!” என்றுவிட்டார். சத்தியராஜனுக்கு மூக்கு விடைத்தது. இதுவரை தந்தை அயலார் முன் ஒரு சொல் கூட கடிந்து சொன்னதே இல்லையே! வருங்கால சம்மந்திகள் முன் இப்படி சொன்னதில் வருத்தம் உண்டானது அவருக்கு.



கோகிலா இன்பனின் காதருகே எட்டி, “மாமா, சுசீலா உன்னையே பார்க்குறா பாரு மாமா! கொஞ்சம் சிரியேன்!!” எங்கோ வெறித்துக்கொண்டு நின்ற இன்பனை அவள் சீண்டிவிட, “உன்மேல கொலை காண்டுல இருக்கேன், வாயை மூடிடு!!” என்றான் உக்கிரமாய்.



‘ப்ச்!’ முகம் சுருக்கிய கோகிலா, அவளுக்கு மறுப்பக்கம் நின்ற காண்டீபனின் காதை எட்டி, “ஏய் காட்ஜில்லா, உன் ஆளுக்கு என்கேஜ்மென்ட் ஆகிருக்கு! வாழ்த்துக்கள் சொல்லி கையை பிடிக்கலாமுள்ள?” என்றிட, இன்பனாவது வார்த்தையில் கோவத்தை கொட்டினான், காண்டீபனோ, ‘என் விழி வீச்சிலேயே உன்னை எரிக்கிறேன் பார்’ என அனல் கக்க, கமுக்கமாய் நின்றுக்கொண்டாள் கோகிலா.



“உங்க பேத்தி கல்யாணம் முடிஞ்சதும் ஒரு நல்ல நாளா பார்த்து பேரன் கல்யாணத்தையும் முடிச்சீங்கன்னா ரொம்ப சந்தோசமா இருக்கும்!” சுசீலாவின் தந்தை மாணிக்கம் சொல்ல, “அப்படியே செஞ்சுடலாம் மாணிக்கம்!” என ஒப்புதல் சொன்னார் ஒண்டிவீரர்.



“ஊரை கூட்டி விருந்து போடலாம்ன்னு இருந்தேனுங்க!” அடுத்து அவர் சொல்ல, “அதுக்கென்ன, சேர்த்து வச்சு கல்யாணத்துக்கு பண்ணிடலாம்... கவலையை விடு!!” என்று தேற்றிய ஒண்டிவீரர் விடைபெற்று கிளம்ப, வந்த காரிலேயே எல்லோரும் ஏறிக்கொண்டனர். காண்டீபன் காரை செலுத்த, தன் சுசுக்கியை உதைத்துகொண்டிருந்த இன்பனிடம் வந்து, “நான் உங்கக்கூட வரேன் மாமா” என்ற கோகிலா, அவன் விருப்பம் சொல்லும் முன்னே பைக்கில் ஏறி அமர்ந்துக்கொண்டு, மற்றவருக்கு ‘டாட்டா’ காட்டிவிட்டாள்.



பெரியவர்கள் முன் எதையும் பேச முடியாமல் சுசீலா கீழுதட்டை கடித்துக்கொண்டு நின்றிருந்தாள். வந்தது முதல் இன்பன் ஒரு வார்த்தை அல்ல, ஒரு பார்வை கூட அவள் பக்கம் வீசவில்லை. கிளம்பும்போதாவது தன்னிடம் சொல்லிக்கொண்டு போவான் என எதிர்ப்பார்க்க, அதற்க்கும் வழியின்றி, கோகிலா அவனோடு தொத்திக்கொண்டு போவதை கண்டு எரிச்சலானது அவளுக்கு.



பைக்கை செலுத்திக்கொண்டிருந்த இன்பன் ‘உர்ரென்று’ வர, அவன் போக்கில் விட்டுவிட்டால் கோகிலா அல்லவே!

“மாமா!!! அப்புறம் எப்போ ட்ரீட்டு!!?” என கேட்க, பல்லை கடித்துக்கொண்டான் இன்பன். பக்கவாட்டு கண்ணாடியில் தெரியும் அவன் கோபமுகம் கூட அவளை வசியம் செய்ய, “நீ கோவப்பட்டாக்கூட அழகு மாமா!” என்றாள் உள்ளத்தை மறையாது. அவன் இறுக்கம் சற்றே தளர்ந்தது போல தோன்றியது.



நேரே மில்லுக்கு செல்வதாய் சொல்லியிருந்தவன், பாதை மாறி போவதை கண்டு, “எங்க போறீங்க மாமா? இது சரியான ரூட் இல்லையே!?” என்றாள்.



“ம்ம்!! உன்னை கடத்திட்டு போறேன்!!” அவன் பதிலில் இதழ்க்கடையில் புன்னகை பூக்க, “ஹைய்.... ஜாலி!!” என்றாள் சிரிப்பாய்.



இன்பன் தன் வண்டியை சோளக்காட்டின் மத்தியில் இருக்கும் அந்த சிறிய வீட்டிற்கு செலுத்தினான். கண்ணுக்கெட்டிய தொலைவு வரை பச்சை பசேல் என செடிகள் மண்டிக்கிடக்க, வண்டி வந்து செல்ல மட்டுமே ஒரு தடம் இருந்தது. அந்த சிறிய ஓட்டு கட்டிட வீட்டை பார்த்த கோகிலா, “யார் வீடு மாமா இது?” என்றாள்.



“நம்மளோடது தான்! புழக்கத்துல இல்ல இப்போ!!” என்றவன், “நான் சட்டை மாத்திக்கிட்டு வரேன், ஆளில்லாத வீடு! வீட்டுக்குள்ள வராத!” என்றான் அறிவிப்பாய். ‘சரி மாமா’ என்றவள், அவன் வீட்டுக்குள் செல்ல, அவன் பின்னோடே உள்ளே சென்றாள்.



“ஏய்!! வராதன்னு தானே சொன்னேன்?” இன்பன் கடிந்துக்கொண்டான்.

“ஹிஹி!! என் காதுல ‘வா.....’ன்னு விழுந்துச்சு!!” அதன் பின் தான் அணிந்திருந்த புது துணியை விடுத்து, எப்போதும் வேலைக்கு அணிந்து செல்லும் பழைய சட்டை வேட்டியை அங்கிருந்த சிறு அறைக்குள் சென்று உடுத்திக்கொண்டான் பேரின்பன். அவன் உடை மாற்றும் இடைவெளியில் அவ்வீட்டை சுற்றி வந்து விட்டாள் கோகிலா.



புழங்காத வீடெனினும், அத்தனை நேர்த்தியாய் சுத்தமாய் இருந்ததை கண்டு அவள் புருவங்கள் வியப்பில் உயர்ந்தன. ஒருவர் தங்கி, சமைத்து சாப்பிட தேவையான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் இருந்தன. அடுக்களை தாண்டி சென்றவள், சுவரில் வரிசையாய் மாட்டப்பட்டிருந்த கருப்பு வெள்ளை புகைப்படங்களை கண்டு நின்றுவிட்டாள்.



இருபத்தியைந்து வருடங்களுக்கு முன் ஒண்டிவீரரும் சிவகாமியும் அந்த புகைப்படத்தில் பார்க்க, அத்தனை வனப்பாய் இருந்தனர். அருகே நின்ற சத்தியராஜனை பார்க்க, அவர் அப்படியே பேரின்பனை போலவே இருந்தார். வாய்விட்டு, ‘வாவ்’ என்றாள்.



சத்தியாராஜன் அருகே ஆறுவயது பேரின்பனை இடுப்பில் தூக்கி வைத்துக்கொண்டு நின்ற பெண்ணை பார்த்து, “மாமா இதான் அத்தையா?” என்றாள்.



உடைமாற்றி வெளியே வந்தவன், “இப்போதான் பாக்குறியா? என் ரூம்ல கூட போட்டோ இருந்துச்சே?” என்று கேட்க, “ப்ச்! நீ இருக்கும்போது நான் வேற எதையாது பார்ப்பேனா மாமா?” என்றாள் கள்ள சிரிப்புடன்!



‘இவகிட்ட வாயை குடுப்பியா?’ என நொந்துக்கொண்டான் இன்பன்.



“மாமா, அத்தே ஹீரோயின் மாறி இருக்காங்க! என்னா கலரு! ப்ச்! இப்போதான் தெரியுது, காண்டு மட்டும் எப்படி ஹிந்தி சீரியல் வில்லன் மாறி இருக்கான்னு!” சிலாகித்து அவள் சொன்னதும், “சொல்றப்போ கூட என் தம்பியை ஹீரோ ஆக்க மாட்டியா நீ?” என்றான் விளையாட்டாய்.



“ம்ஹும்! எனக்கு எப்பவும் நீ மட்டும் தான் ஹீரோ!!” கோகிலா சொல்ல, “சரி போதும் கிளம்பு, வந்து கால் மணி நேரமாச்சு!!” என்றான் இன்பன்.



“ஜஸ்ட் கால்மணி நேரம் மாமா! பர்ஸ்ட் டைம் இங்க வந்துருக்கேன், அதுக்குள்ள கெளப்புற?” கோகிலா வேடிக்கை பார்ப்பதை தொடர, “லூசு! ஆளில்லாத வீட்ல நீயும் நானும் இருந்தா, பார்க்குறவங்க என்ன நினைப்பாங்க? சுத்தி முத்தி ஆளுங்க இல்லன்னாலும், நாம எப்போ இங்க வந்தோம், எப்போ திரும்பி போறோம்ன்னு கணக்கு பண்ணிட்டு தான் இருப்பாங்க!!” என்றான் விளக்கமாய்.



“அதைபத்தி எல்லாம் எனக்கு கவலை இல்லை!” என்ற கோகிலா அடுத்த புகைப்படத்திருக்கு சென்றிருந்தாள்.



“உனக்கு எதுவுமே இருக்காதுன்னு தான் எனக்கு தெரியுமே! ஆனா எனக்குன்னு ஒரு நல்ல பேரு இருக்கு! அதை கெடுத்துக்க நான் விரும்பல! மரியாதையா கிளம்பு!!” இம்முறை அதட்டலாகவே சொன்னான்.



“முதல்முறை இந்த வீட்டுக்கு வந்துருக்கேன்! எதாவது சாப்பிட குடுக்கலாம் தானே?” வேண்டுமென்றே நேரத்தை நீட்டித்தாள் கோகிலா. அவளிடம் தன் அதட்டல், உருட்டல் எல்லாம் ஒரு நாளும் பலிக்காமல் போவதை எண்ணி, சலித்துக்கொண்டவன் சமையல்கட்டு பக்கம் என்று, “கருப்பட்டி காபி தான் போட இருக்கு! குடிப்பியா நீ?” என்றான்.



“உன் கையால வெறும் தண்ணி குடுத்தா கூட எனக்கு தேவாமிர்தம் மாமா!!” கண்மூடி அந்த கால நடிகை போல அவள் அபிநயம் பிடிக்க, அவனுக்கு சிரிப்பு வந்தாலும், “நல்லதா போச்சு! அப்போ பச்சத்தண்ணீயே குடி!” என்றிட, “ஹான் மாமா! சும்மா கிண்டலுக்கு சொன்னேன், நீ காபி போடு” என்றாள் கோகிலா.



புகைப்படங்கள் தாண்டி அவள் நகர, “மாமா, ஏன் இங்க யாருமே தங்குறது இல்லை” என்றாள்.



விறகை சொருகி நெருப்பு மூட்டியவன் தீ வேகமாய் பற்ற ஊதுகுழலால் ஊதிக்கொண்டே, “இது சின்ன வீடுல? அதான்! நான் மட்டும் அப்போ அப்போ வருவேன்” என்றான்.

“ஓஓஓ!! இதான் உன்னோட சி..ன்..ன வீடா?” ராகமாய் அவள் அழுத்தி கேட்க, அருகில் கிடந்த விறகை எடுத்து அடிக்க வருவது போல அவள் முன் நீட்டி, “எடுத்து அடிச்சேன்னு வை! பேச்சை பாரு! கொஞ்சம்கூட நாகரீகமே இல்லாம!!” என்றான் அதட்டலாய்.



“நான் என்ன அப்படி இப்படியா பேசுனேன்? இதான் உன் சின்ன வீடான்னு கேட்டதுல என்ன தப்பு?” என்றாள் அவனை விட்டு சற்று தள்ளி நின்றுக்கொண்டே...!



‘இவளிடம் பேசி வீண்’ என நினைத்தானோ இன்பன், சின்ன போசியை (பாத்திரம்) அடுப்பில் வைத்து ஒரு டம்ளர் தண்ணீரை ஊற்றி கொதிக்க விட்டான்.



வீட்டின் கடைசியில் ஒரு மரக்கதவு நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. அதன் அருகே அவள் செல்ல, “ஏய்.. அங்க போகாத!” என குரல் கொடுத்தான் இன்பன்.



அதுவரை அங்கே போகும் எண்ணம் இல்லை அவளுக்கு. அவன் சொன்னதற்காக வேண்டுமென்றே அந்த கதவை நகர்த்திக்கொண்டு வெளியே சென்றாள் கோகிலா. வீட்டின் பின்பக்க இடமாக இருந்தது. ஒரு சலவைக்கல், துளசி செடி வளர்த்தற்கான அடையாளமாய் துளசி மடம், ஓரமாய் அம்மிக்கல்லும் ஆட்டுக்கல்லும்! அவள் பார்த்துக்கொண்டே நிற்க, காபி டம்ப்ளரோடு ஓடி வந்தான் இன்பன்.



“குடிச்சுட்டு கிளம்பு!”

கொஞ்சமாய் ஊதி ஊதி ஒரு மிடறு பருகியவள், “நீங்க சின்ன வயசுல இருந்த வீடு இதானா?” என்றாள் சரியாக.



சற்றே திகைத்தவன், “உனக்கு யாரு சொன்னா?” என்றான்.



“தங்கம் சித்தி சொன்னாங்க, தாத்தா உங்க அப்பா அம்மாவை தனி குடித்தனம் அனுப்பி வச்சதா! அது இந்த வீடா இருக்குமோன்னு தோணுச்சு!” என்றவள், “ம்ம்ம்.. காபி சூப்பர் மாமா!” என்றாள்.



வெறும் தலையசைப்பு மட்டுமே அவனிடம் இருந்து வந்தது. அங்கும் இங்கும் நடந்துக்கொண்டிருந்தவள், ஓரிடம் அவள் கண்ணை உறுத்த, அங்கே நகர்ந்தாள். அவள் போகும் இடத்தை கண்டவனின் நெஞ்சுக்கூடு தாறுமாறாய் எகிறியது.



அந்த இடத்தை பார்க்கவே கூடாது என்றே தான் பின்வாசல் கதவை அவன் உபயோகிக்காமலே இருப்பது. இப்போதோ, அந்த இடத்திற்கு கோகிலா செல்ல, ‘நில்’ என சொல்லக்கூட இன்பனுக்கு இயவில்லை. மொத்தமாய் பாரம் வந்து மனதை அழுத்திக்கொண்டதை போல ஆனது அவனுக்கு.



அதன் அருகே சென்ற கோகிலா, மெல்ல எட்டிப்பார்க்க, ஒரு அமைப்பே இன்றி கரடும் முரடுமாய் இருந்த அந்த ஆழக்கிணறு, பார்த்தவுடன் தலைசுற்றலை ஏற்ப்படுத்த, பயந்து இரண்டடி பின்னே சென்றாள் கோகிலா.



நீர்மட்டம் எங்கே இருக்கிறதென தெரிந்துக்கொள்ளும் ஆவலில், மீண்டும் அவள் உள்ளே எட்டிப்பார்க்க, அதன் அபரிவிதமான ஆழத்தில் கண்கள் சொருகியது அவளுக்கு.

‘போதும்’ என எட்டி வந்துவிட்டாள்.



“ரொம்ப பயங்கரமா இருக்கு மாமா கிணறு! ரொம்ப ஆழம் போல...!!”

“.....”

“தப்பித்தவறி விழுந்தோம்ன்னா, சங்கு தான்!! இல்ல?” எதார்த்தமாய் அவள் கேட்டதில் இன்பனின் கண்கள் இரண்டும் சிவக்க, அவன் கீழ்தாடை இறுகி, அவன் நின்ற கோலம், ‘அவன் மனதின் ரணத்தை கீறி விட்டுவிட்டோம்’ என அவன் சொல்லாமலே புரிந்தது.



“மாமா, கிளம்பலாம்! ரொம்ப நேரமாச்சு!! வா வா!!” அவன் கைபிடித்து இழுத்துக்கொண்டு, மறவாமல் பின்வாசல் கதவை மூடிவிட்டு அங்கிருந்து வெளியே வந்தனர் இருவரும்.



அவன் மனநிலையை மாற்றும் பொருட்டு, “ஏன் மாமா, கண்ணுக்கெட்டுன தூரம் வர, செடிகொடின்னு குப்பையா கிடக்கே? இது பர்ட்டைல் லேண்ட் இல்லையா?” என்றாள்.



வெளியே வந்ததிலேயே சற்று தெளிந்திருந்தவன், அவள் கேள்வியில் முழுதும் தெளிந்து, “இது நஞ்சை நிலம் தான்!” என்றான்.



“அப்போ இதையும் சீர்ப்படுத்தி விவசாயம் பண்ணலாம் தானே?” என்றாள்.



“ப்ச்! சரிவராது!!” என்றதோடு நிறுத்திக்கொண்டான் இன்பன்.



“ஏன் சரிவராது? நல்லா இருக்க நிலத்தை நம்மளே இப்படி பாழ் பண்ணலாமா?” அவள் நியாயம் கேட்க, “நீ வண்டில ஏறு!!” என்றான் இன்பன்.



“யாரும் செய்யலன்னா என்ன? நீ செய்யேன் மாமா?”

“நானா....?” திகைத்தான் இன்பன்.



“ஆமா மாமா! நம்ம வீட்டு ஆம்பளைங்க மேற்ப்பார்வை தான் பார்க்குறாங்க! ஆனா நீதான் எந்த வேலையா இருந்தாலும் இறங்கி செய்யுற!! வேலை தெரிஞ்ச உன்னால இந்த நிலத்தை சரிப்பண்ண முடியாதா?” என்றாள்.



இன்பன் யோசித்தது ஒரே நொடிதான்! மறுநொடி, “வண்டில ஏறு! இல்லன்னா இங்கயே உட்காந்து விவசாயம் பாரு!” என்றான்.



“எனக்கென்ன! நான் இங்கயே இருப்பேன்! அப்புறம் பேரின்பன் தான் அவரோட சின்ன வீட்டுல ஒரு பொண்ணை வச்சுக்கிட்டு இருக்காருன்னு ஊரு பேசும்! பரவாலையா?” என்று மிதப்பாய் அவள் சொன்ன தோரணையில் வாய் மேல் கைவைத்து சமைந்து விட்டான் பேரின்பன்.



“ஆனாலும் இந்த ஆண்டவன் உனக்கு வாயை மட்டும் வஞ்சனை இல்லாம குடுத்துட்டான்டி!” என்ற இன்பன், தன் தலைக்கு மேல் கும்பிடு போட்டு, “தாயே, பரதேவதை என் வண்டில இப்போ ஏறுனிங்கன்னா, உங்களுக்கு புண்ணியமா போகும்!” என்று சொல்ல, உரக்க நகைத்தவள் அவன் பின்னே அமர்ந்துக்கொண்டாள்.



வண்டி சோளக்காட்டை கடக்கையில், “இந்த இடத்துக்கு ஏன் சோளக்காடுன்னு பேர் வந்துச்சு மாமா?” என்றாள் சந்தேகமாய்.



“நான் சிறுசா இருக்கும்போது இந்த நிலத்துல சோளம் எக்கசக்கமாய் அறுவடை ஆகிட்டு இருந்துச்சாம்! அதனால இந்த இடத்துக்கே ‘சோளக்காடு’ன்னு பேரு வச்சுட்டாங்க!!” என்றான். கோகிலாவின் மனது ‘டூ இஸ்டு டூ, டுட்டூடூ’ என கணக்க்கிட்டுக்கொண்டிருந்தது.



வீட்டிற்குள் நுழைந்தவர்களை ஆவலாக எதிர்க்கொண்டார் தங்கம். “என்னமா? எல்லாம் நல்லபடியா முடிஞ்சுதா?” என்றார் தன் அன்னையிடம்.



“ம்ம்! கோகிலா கல்யாணம் முடிஞ்சதும், நல்ல நாளா பார்க்கலாம்ன்னு பேசிருக்கோம்!” என்றார் சிவகாமி சுரத்தேயில்லாமல்.

“ஏன்மா? ஏதோ மாறி சொல்றீங்க?” என்றிட, “அவளுக்கு என்ன? ஏதாவது கவலை இருந்துட்டே இருக்கும்! நீ குடிக்க கொஞ்சம் தண்ணீ கொண்டு வாம்மா!” என்றார் ஒண்டிவீரர்.

சத்தியராஜன் வரும் வழியிலேயே தங்கள் கடையில் இறங்கிக்கொள்ள, இவர்களை இறக்கி விட்டதுமே காண்டீபன் வாசலோடு விடைபெற்று மில்லுக்கு சென்றிருந்தான்.



மின்னல் வேகத்தில் தண்ணீர் கொண்டு வந்த தங்கம், தந்தையிடம் கொடுத்துவிட்டு, “என்னம்மா ஆச்சு?” என்றார் சிவகாமி அருகே அமர்ந்தபடி.

“ஒன்னும் ஆகல தங்கம்! எனக்கு தான் என்னவோ மனசு ஒட்டாமையே இருக்கு! என்னவோ தப்பா நடக்க போகுதோன்னு மனசு அடிச்சுக்குது!!” என்றிட, ‘திக்’கென்றானது தங்கத்திற்கு. பெரும்பாலும் சிவகாமி அபஸ்வரமாய் எதையும் பேசிவிட மாட்டார். அப்படி சொன்னாரானால் ஏதோ ஒன்று நிச்சயமாய் நடக்கும் என்பதை இத்தனை வருடத்தில் கண் கூட பார்த்தவரென்பதால் சிவகாமி பேச்சை அசட்டை செய்ய முடியாது போனது.



“உன் கல்யாணத்துக்கு முன்னையும் இப்படிதான் இருந்தேன்! ஏதோ சரியில்லை சரியில்லைன்னு அடிச்சுக்கிட்டேன்! உங்கப்பா கேட்டா தானே?” தங்கத்தின் பயத்தை கூட்டுவதை போல சிவகாமி அடுத்து சொல்லிவிட, “ம்மா! பயமா இருக்குமா!” என்று அவர் கரம் பற்றினார் தங்கம்.



“ஒன்னுக்கு ரெண்டு கல்யாணம் அடுத்தடுத்து வருது! ஊருக்கண்ணா கூட இருக்கும்! பெருசுப்படுத்தாத... விடு!!” ஒண்டிவீரர் ‘விடு’ என வலுவாய் சொல்ல, சிவகாமியின் முகம் வாட்டத்தை காட்டியதென்றால், தங்கத்தின் முகம் அப்பட்டமான திகிலை கொண்டிருந்தது.



நாட்கள் எவ்வித மாற்றமுமின்றி அமைதியாய் நகர, ஓர்நாள் மில்லில் இருந்து வீட்டிற்கு வந்துக்கொண்டிருந்தான் பேரின்பன். அவன் பின்னே நிறுத்தாமல் பேசிக்கொண்டே அமர்ந்திருந்தாள் சுசீலா. பரிசம் போட்ட பின், அன்று தான் அவனை காண்கிறாள். எத்தனை தவிர்த்தும் கேளாமல் அவனோடு பைக்கில் ஏறிக்கொள்ள, வேறுவழியின்றி வண்டியை செலுத்திக்கொண்டிருந்தான் பேரின்பன். சுசீலா என்ன பேசினால் என கேட்டாள், ஒரு வார்த்தை கூட தெரியாது அவனுக்கு. மனம் முழுக்க கோகிலா...கோகிலா...கோகிலா....!!!



அவள் எதிரே சுசீலா உரிமையாய் பைக்கில் ஏறியபோது, அவள் பார்த்த பார்வையின் வீரியம்!!! அது மட்டுமே அவன் கண்களுக்குள் ஓடிக்கொண்டிருந்தது. செல்லும் பாதை எதை நோக்கி என்பது புரியாவிடினும், அதன் முடிவு அவளாகிட வேண்டுமென கெஞ்சியது அவன் மனம்.



“மாமா!! நான் பேசுறது கேக்குதா உங்களுக்கு?” சுசீலா காதோரம் கத்த, “ஹான்!! என்ன சொன்ன?” என்றான் தூக்கத்தில் இருந்து விழிப்பவன் போல!



“சரியா போச்சு போங்க! அப்போ இவ்வளோ நேரம் நான் பேசுனதெல்லாம் வேஸ்ட்டா?” அவள் தலையில் அடித்துக்கொள்ள, மௌனமாய் இருந்தான் இன்பன்.



“நாங்க குடும்பமா டூருக்கு போறோம்ன்னு சொன்னேன் மாமா!!” என்றாள் சுசீலா.



“டூரா? எங்க?”

“அது நிறைய இடம் சுத்தி காட்டுவாங்களாம் மாமா! ஏஜென்சில புக் பண்ணிருக்கோம்! பத்து நாளு... ஜாலியா இருக்கும்!” அவள் சந்தோசமாய் சொல்ல, “என்ன திடீர்ன்னு?” என்றான்.



“சும்மாதான் மாமா, இந்த ஊரை தாண்டி நாங்க எங்கயும் போனதில்லையே, அதான் என் கல்யாணத்துக்கு முன்ன போயிட்டு வரலாம்ன்னு!!”

“அது சரி!! அதுக்கு காசு அதிகம் ஆகுமே! என்ன பண்ணீங்க?” எதார்த்தமாய் அவன் கேட்க, “அதான் பந்தய காசு சுளையா பான்ஜாயிரம்(15k) வந்துருக்கே!” என பெருமைப்பீத்தியவளை, “என்ன பந்தயம்?” என்றான் இன்பன்.



“போன வருஷம், என் கூட்டாளிங்க எல்லாம் என்கிட்டே பந்தயம் கட்டுனாளுங்க, பெரிய வீட்டு மருமகளா ஆகி காட்ட முடியுமான்னு!! என்னால செய்ய முடியாதுன்னு நினைச்சு தகுரியமா ஆளுக்கு ஆயிரம்ன்னு பெட்டு கட்டிடுச்சுங்க லூசுங்க!! இப்போ நான்தானே ஜெயிச்சேன்? அதான் பரிசம் போட்ட அன்னைக்கே, ஒரூவா விடாம கட் அண்ட் ரைட்டா எல்லார்க்கிட்டையும் கரந்துபுட்டேன்ல!?” பெருமிதமாய் அவள் சொன்ன, பைக் ‘க்ரீச்’ என சத்தமிட்டு நின்றது.



“என்னாச்சு மாமா!!”

“இறங்கு...!!” இன்பனின் குரல் கடுமையாக இருக்க, பயத்துடனே இறங்கினாள் சுசீலா.

“அப்போ பந்தயத்துல ஜெயிக்க தான் என்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி உசுரெடுத்தியா?” இன்பனின் வார்த்தைகளில் இருந்த கடினம், குரலில் தொனிக்காமல் போக கடினப்பட்டு கொண்டு வந்தான்.



“சொல்லு!!!” அவன் அதட்டவே, “இல்ல மாமா, உங்களை எனக்கு பிடிக்கும்! அதனால தான்!!” தயங்கி தயங்கி அவள் சொல்லி முடிக்கக்கூட இல்லை. பக்கவாட்டு கண்ணாடியில் காண்டீபனின் கார் வருவது தெரிய, “நீ இப்படியே எங்கயாது போய்க்கோ! நான் கிளம்புறேன்!!” என வேகமாய் அங்கிருந்து சென்றுவிட்டான் இன்பன். மனதின் குறுகுறுப்பு சற்றே குறைந்ததை போலொரு உணர்வு.



இன்பனும் சுசீலாவும் பேசிக்கொண்டிருப்பதை தூரத்தில் வரும்போதே கண்டுக்கொண்டான் காண்டீபன். திடீரென சுசீலாவை விட்டுவிட்டு இன்பன் சென்றிருக்க, இவன் கார் தன்னாலே சுசீலாவின் அருகே சென்று நின்றது. கார் கண்ணாடியை இறக்கிவிட்டு, “சுசீ!!!” என அழைத்தான்.



இன்பன் சென்றதும் கையை பிசைந்துக்கொண்டு நின்றவள், காண்டீபனை கண்டதும் ஆவலாய் ஓடிவந்தாள்.



“அத்தான்....!!” அவள் ஆவலாய் அழைக்க, ‘இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே!’ என்ற ரேஞ்சுக்கு சொக்கிப்போனான் காண்டீபன்.



அவனிடம் இருந்து பதில் வராததால் மீண்டும், “அத்தான்....” என அழைக்க, “ஆங்!! ஏன்மா இங்க நிக்குற?” என்றான் சுதாரித்து.



“அது... அது..” என தயங்கியவள், பின்னே இன்பன் கோவித்துக்கொண்ட காரணத்தை கூற, காண்டீபனுக்குள் அடைமழை!! பந்தயம் தான் மூலக்காரணமா?!

சுசீலாவின் ஆசை ‘வேரை’ அறிந்துக்கொண்டதில் அளவில்லா நிம்மதி அவனுள். எப்படியேனும் அவள் மனதை தன் வசம் இழுத்து விடலாம் என்ற நம்பிக்கை பிறக்க, வெகு நாட்களுக்கு பின் அவளை ஆசையுடன் கண்டன அவன் விழிகள்.



இன்பன் ஏதோ ஒரு பாடலை முணுமுணுத்தபடியே வீட்டிற்குள் சென்றான். கை விரலில் சுழன்றுக்கொண்டிருந்தது வண்டி சாவி!!

ஹாலில் இருந்த கோகிலா, “அட, என்ன மாமா குஷியா இருக்கீங்க?” என்றாள். அவன் உற்சாகம் அவளையும் தொத்திக்கொண்டதை கண்டு, “ஆமான்டி கொக்கிமூக்கி!! மாமனுக்கு ஒரு டீ போட்டு கொண்டு வா! போ போ!!” என்றான் சோபாவில் அமர்ந்துக்கொண்டு!!



“பார்ரா!!” என சிரித்தவள், தங்கத்திடம் சொல்லி அவனுக்கு பிடித்த மசாலா டீயுடன் வர, ரசித்து பருகியவன், சுசீலா பேசியதை அவளிடம் மறக்காது சொன்னான்.

“ஹுர்ரே!! காட்ஜில்லாக்கு நிம்மதியா இருக்குமே! “ என்று சிரிக்க, அவனும் சேர்ந்து சிரித்தான்.



“நீ எப்போ வீட்டுக்கு வந்த?”

“சத்தியா மாமா மில்லுக்கு வந்தாங்க! அவங்க கூடவே வந்துட்டேன்!” என்றாள் கோகிலா. நேரம் இனிமையாய் சென்றது. இன்பன் பேச்சில் ஒரு துள்ளல் தென்பட, அவனுக்கேற்றபடி அவளும் பேச்சு கொடுத்தாள். கேலியும் சிரிப்புமாய் நேரம் கடக்க,

“கோகிலா......!!!!” திடீரென வாசல் பக்கம் கேட்ட குரலில், “அப்பா....!!” என எழுந்து ஓடினாள் அவள்.



ஷங்கரும் செல்லமும் நின்றுக்கொண்டிருக்க, எதிர்ப்பாராத பெற்றோரின் வரவில், “ப்பா!! என்னப்பா வரேன்னு சொல்லக்கூட இல்ல!!” என்றாள் அன்னையை அணைத்துக்கொண்டபடி.



“எங்கம்மா? நீதான் போன்-னு ஒன்னு வச்சுருக்குறதையே மறந்துட்டியே!!” ஷங்கர் குற்றம் சாட்ட, “ஸ்ஸ்...சாரிப்பா! இங்க டவர் சரியா கிடைக்கிறது இல்ல, அதான் போன் யூஸ் பண்றதையே மறந்துட்டேன்!!” என்றாள்.



“விடும்மா! அதான் நல்ல விஷயம் சொல்ல நேருலையே வந்துட்டோமே!” ஷங்கர் சொன்னதும், கோகிலாவுக்கு சற்றே திகில் பிடித்தது.



“மாப்பிளை வீட்டில கல்யாணத்தை இந்த ஊருலயே வச்சுக்கலாம்ன்னு சொல்லிட்டாங்க! அதும் இல்லாம இன்னும் ரெண்டே வாரத்துல கல்யாணம் உனக்கு!! சந்தோஷம் தானே!!?” என்று செல்லம் அவள் தாடை பற்றி கொஞ்ச, ‘ரெண்டே வாரத்திலா?’ என விக்கித்து நின்றாள் கோகிலா.



பேச்சு காதில் விழுந்தாலும் இதுவரை எழுந்து சென்று அவர்களை வரவேற்கவில்லை இன்பன். அதுவரை கழிந்த இனிமையான நிமிடங்களின் இதம் கரைந்து போயின.



“ஏன்மா இவ்வளோ அவசரமா?” கோகிலா கேட்டிட, “அவசரம் எங்களுக்கில்லம்மா! மாப்பிளைக்கு தான்!! உன்னை பிரிஞ்சு இருக்கவே முடியலையாம்!!” செல்லத்திற்கு பெருமை தான்!



கோகிலா திரும்பி இன்பனை பார்க்க, அவனோ ‘எனக்கும் இதற்கும் எந்த தொடர்பும் இல்லை’ என அமர்ந்திருந்தான்.



செல்லம், “உனக்கொரு சர்ப்ரைஸ் கூட இருக்கு!!” என்றிட, அவள் மனமோ ‘நீங்க எது சொன்னாலும் அது எனக்கு சர்ப்ரைஸ் இல்ல, ஷாக்கு தான்!!’ என பொருமிக்கொண்டது.



செல்லமும் ஷங்கரும் அவள் கொஞ்சமும் யூகிக்காத, எதிர்ப்பார்த்திராத அதிர்ச்சியை தான் அவளுக்கு கொண்டு வந்திருந்தனர்.

அந்த அதிர்ச்சி, அழகாய் அவள் முன் வந்து, “ஹாய் பேபி...!!” என பல்லைக்காட்டி கண்ணடிக்க, இன்பனின் எதிரே இருந்த டீப்பாய் பறந்து விழுந்தது.



-தொடரும்....
 
Top