Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோகுலத்தில் ராமன் -19

Advertisement

பிரியா மோகன்

Tamil Novel Writer
The Writers Crew
எனக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன எல்லோருக்கும் ரொம்ப ரொம்ப தேங்க்ஸ்!!!! அடுத்த அப்டேட் எப்போன்னு கேட்ட உங்களுக்காக பர்த்டேக்கு லீவு கூட போடாம UD போட்டுருக்கேன்!!! ஹாஹா....

*19*

வரதட்சணையெல்லாம் கேட்டு கொடுமைப்படுத்திவிட மாட்டேன்!

ஆனால், அதைவிட கொடுமையாய் இருக்கும் என் காதல்!!!

“ண்ணே... நிசமாவா சொல்ற?” கன்னத்தில் கை வைத்து கதை கேட்கும் தோரணையில் அமர்ந்திருந்தான் பச்சைக்கிளி.



“பின்ன, நான் கதையா சொல்லப் போறேன்? நான்தான் வேணும்ன்னு அத்தனை பேரு முன்னுக்கவும் தில்லா சொன்னாடா என் மூக்கி!” என்றான் பேரின்பன்.



“ப்ச்! அண்ணிய பாருங்க! உங்களுக்காக ஒத்தையாளா நின்னு அத்தனை பேரு வாயையும் அடைச்சுருக்காங்க, ஆனா நீங்க? போங்கண்ணே!” வெட்டுக்கிளி இன்பனை குறைப்படிக்கவே,

“எனக்கு மட்டும் என்ன ஆசையாடா அவளை விட்டுக்கொடுக்கனும்ன்னு!? என்னவோ மனசு உருத்தலாவே இருந்துச்சு! அந்த புள்ள நமக்கெல்லாம் ஒத்து வருமான்னு! சிட்டில ஜாலியா இருந்தவ, இந்த ஊருல வந்து ஒட்டுவாளான்னு நினைச்சேன்! அதையும் தாண்டி நிறைய குழப்பம்! நான் நானாவே இல்லடா இந்த பத்து நாளா?” என்றான் இன்பன்.



“போன கழுதையை விடுண்ணே, இனி ஆகப்போறதல்ல நம்ம கவனிக்கணும்!” என்றான் பச்சைக்கிளி. “ஆமாண்ணே! அவன் சொல்றதும் சரிதான், இனி செய்யப் போறதை செம்மையா செய்யணும் அண்ணே!!” வெட்டுக்கிளியும் பச்சைக்கிளியோடு சேர்ந்துக்கொண்டு பேச கேட்க வேண்டியவனோ விரிந்த இதழ் குன்றாமல் எங்கோ பார்த்து சிரித்துக்கொண்டிருந்தான். அவன் அமர்ந்திருந்த கோலமே சொன்னது, அவன் மனம் எங்கோ லயித்திருக்கிறது என்று!!!



“அண்ணே, அண்ணிக்கூட டூயட்டாட போயிருச்சு போலடா” கிளிகள் சொன்னது போலவே அவன் கனவுலகில் தான் இருந்தான். அவனுக்காக கோகிலா வீட்டின் அத்தனை பேரிடமும் மல்லுக்கு நின்ற அந்த காட்சி தான் அவனுக்குள் ஸ்லோ மோஷனில் ஓடிக்கொண்டிருந்தது.



“எனக்கு இன்பா மாமாவை தான் கட்டிக்கணும், எங்களுக்கு கல்யாணம் செஞ்சு வைங்க!!” கோகிலா தடாலடியாய் போட்டு உடைத்ததில் யாருக்கு அங்கே பேரதிர்ச்சி என பிரித்து சொல்ல முடியாவண்ணம் அத்தனை பேரும் ஆடிப்போயிருந்தனர்.



“என்னடி சொல்ற?” என கேட்ட செல்லத்தின் குரல் நடுங்கிப்போயிருந்தது.



“நான் இன்பா மாமாவை விரும்புறேன்! அவரை தவிர வேற யாரையும் என்னால கல்யாணம் செஞ்சுக்க முடியாது” அந்நேரத்தில் அவளுக்கு எங்கிருந்து இத்தனை தைரியம் வந்ததென அவளுக்கே தெரியாது. மூன்று நாள் மனஉளைச்சல், கிஷோரின் நடவடிக்கை, இன்பனின் புறக்கணிப்பு, துரிதகதியில் நடக்கவிருக்கும் திருமணம் இதெல்லாம் சேர்ந்து அவளை இந்நிலைக்கு நிறுத்திவிட்டது.



‘மிஞ்சிப்போனா என்ன நடக்கும்? தற்கொலை மிரட்டல், ஒப்பாரி, அதிகபட்சமா அடி! இதைக்கூட என் மாமாவுக்காக என்னால சமாளிக்க முடியாதா?’ எந்த எண்ணம் மட்டுமே அவளிடம் இருந்தது.



கிஞ்சித்தும் இன்பனிடம் இருந்து பதில்வினையை அவள் எதிர்நோக்கவில்லை. ‘அவள் வேண்டும்’ என அவன் சொல்லாவிடினும், ‘அவள் வேண்டாம்’ என அவன் ஒருபோதும் சொல்லமாட்டான் என அறுதியிட்டு சொல்லமுடியும் அவளால்.



வீட்டின் பணியாட்கள் அப்புறப்படுத்தப்பட்டிருந்தனர். காலை வேளையானதால் விடுப்பின்றி வீட்டாட்கள் அத்தனை பேரும் கூடத்தில் இருந்தனர்.



இன்பனுக்கு அவள் தைரியத்தை கண்டு வியக்காமல் இருக்க முடியவில்லை. இத்தனை உறுதியாய் நிற்க வேண்டுமானால் அவள் தன் மீது கொண்ட நேசம் எத்தகையது? எந்நாளும் அவளை தவிக்க விடக்கூடாது என அந்த ஷணமே அவன் மனம் முடிவு செய்துவிட்டது. இருப்பினும், நடப்பதை வேடிக்கை பார்க்கத்தொடங்கினான்.



ஷங்கர் அவஸ்தையாய் கிஷோரை ஏறிட்டார். ‘மாப்பிள்ளையை இங்கேயே வைத்துக்கொண்டு இவள் இப்படி பேசுவது முறையா?’ என்ற படபடப்பு முதலில். அவனை சமாதானம் செய்யவே விழைந்தார்.

“கிஷோர், இவ ஏதோ விளையாடிட்டு இருக்கா! நீங்க எதுவும் தப்பா நினைக்க வேண்டாம்! வாங்களேன், நம்ம வாக்கிங் போலாம்!!” என்று இலகுவாய் அழைக்க முயல, வார்த்தையின்றி ஒரு கையசைப்பில் அவரை நிறுத்தினான் கிஷோர். அவன் முகம் அப்படியே மாறியிருந்தது.



“ப்பா, நான் ஒன்னும் விளையாடிட்டு இல்ல! உண்மையை தான் சொல்றேன்!! எனக்கு நீங்க நிச்சயம் செஞ்ச கல்யாணம் வேண்டாம்” கோகிலாவின் குரல் இன்னும் உயர, இதற்குமேல் சமாளிக்க முடியாது என எண்ணிய ஷங்கர், “உன்னை கேட்டு தானே எல்லாம் செஞ்சோம்?” என்றார் காட்டமாய்.



“இப்பவும் என்னை கேட்டே பண்ணுங்க, இந்த கல்யாணத்துல எனக்கு இஷ்டம் இல்லை”



“இதை உனக்கு நிச்சயம் பண்ணப்போவே சொல்றதுக்கென்னடி?” செல்லம் கத்தினார்.



“அப்போ நான் இன்பனை பார்க்கலையே? இவர்கிட்ட என் மனசை தொலைப்பேன்னு எனக்கு தெரியாம போச்சே!!” குரல் கமற கோகிலா சொல்லும்போது இன்பனுக்குள்ளே பலவித ரசாயன மாற்றங்கள்.



காண்டீபனோ, ‘இவளுக்கு மட்டும் எப்படி லவ்வு சொல்ல ஈசியா வருது? நான் வருஷகணக்கா திணறிட்டு இருக்கேன்?’ என மனதுக்குள் அலுத்துக்கொண்டான்.



“நிச்சயம் முடிஞ்சாலே பாதி கல்யாணம் முடிஞ்சமாறி! இப்படி கடைசி நிமிசத்துல வந்து வேற ஒருத்தனை கை காட்டுனா என்னடி அர்த்தம்?” செல்லம் ஆக்ரோஷமாய் கேட்கும்போது, “அப்படி பார்த்தா சிலருக்கெல்லாம் கல்யாணமே நடந்துருக்காது...” என்று காண்டீபன் சொல்ல, அவன் தன்னை தான் சொல்கிறான் என புரிந்துக்கொள்ள முடியாத அளவுக்கு செல்லம் விவரம் இல்லாதவர் அல்லவே...!



கோகிலா, “என்கேஜ்மென்ட் தானே முடிஞ்சுருக்கு, இன்னும் கல்யாணம் நடக்கலையே!?”



“கொஞ்சமாவது அறிவோட பேசுடி!!” அதற்குமேல் என்ன சொல்வதென செல்லத்திற்கு தெரியவில்லை.



“எனக்கு இன்பனை கட்டி வைக்க உங்களுக்கு விருப்பம் இல்லன்னா, ஓகே, நோ ப்ரோப்ளம்! பட் இந்த ஆளை என்னால கல்யாணம் செஞ்சுக்கவே முடியாது!!” இப்போது வெளிப்படையாய் கிஷோரை பிடிக்கவில்லை என அத்தனை பேர் முன்னும் சொல்லியிருந்தாள் கோகிலா. கிஷோரின் முகம் அவமானத்திலும் ஆத்திரத்திலும் தீயிலிட்ட இரும்பை போல ஜொலித்தது.



“கிஷோரை வேண்டாம்ன்னு சொல்ற உனக்கு பைத்தியம் தான் பிடிச்சுருக்கு. எந்த விதத்துல இந்த இன்பன், நான் உனக்கு பார்த்த கிஷோரை விட மேலா போய்ட்டான்?” இது ஷங்கர் கேட்டது.

இன்பன் இந்த கேள்வியை வெகுவாக எதிர்ப்பார்த்திருந்தான். கோகிலாவின் பதிலை அறிந்துக்கொள்ள அவனிடம் பெரும் ஆவா!



“எல்லா விதத்துலையும்!!! எல்லா விதத்துலையும் என் மாமா எல்லாரை விடவும் மேல் தான்!” அழுத்தந்திருத்தமாய் வந்தது கோகிலாவின் ஒவ்வொரு வார்த்தையும்.



இணைத்திருந்த கோகிலாவின் கரத்தில் அழுத்தம் கூடியது. இன்பனின் கரம் அவள் கரத்தை அழுத்திய உணர்வு கூட அவளை அசைக்கவில்லை.



“சொசைட்டில நமக்குன்னு ஒரு ஸ்டேடஸ் இருக்கு கோகிலா, அதுக்கு ஏத்த மாறி தான் நம்ம போகணும்... கிஷோர் பாரின்ல வளர்ந்த பையன், நம்ம கம்பனி ஷேர்ல இருந்து அவங்க ப்ரோபர்டி முழுக்க அவன் பேருல தான் இருக்கு... நீ காட்டுற இன்பனுக்கு என்ன இருக்குன்னு சொல்லு? லோடு மேன் வேலை பார்க்குறான்! இவனை மாதிரி ஒருத்தனுக்கு உன்னை கட்டிகுடுக்கத்தான் இத்தனை வருஷம் உன்னை அருமை பெருமையா வளர்த்தோமா? இந்த ஊருல உனக்கு என்ன எக்ஸ்போர்ஷர் இருக்கு?” என்று ஆவேசமாய் கேட்டார் ஷங்கர்.



“அப்போ காசு தானா எல்லாம்?” என்ற கோகிலாவை தாண்டி, “என் பேரனுக்கு என்ன கொறச்சல் தம்பி? எங்க எல்லா சொத்துக்கும் அவனும் தானே வாரிசு?” என்று வாயை திறந்தார் சிவகாமி. ஷங்கரும் செல்லமும் மட்டுமே பேசிக்கொண்டிருக்க, அதிர்ச்சியில் இருந்தவர்களில் சிவகாமி முதலில் பேசியிருந்தார்.



“வாரிசுன்னு சொன்னா மட்டும் போதுமா? அவனுக்குன்னு என்ன மரியாதை இருக்கு இங்க? படிச்ச படிப்புக்கு உருப்படியா ஒரு வேலைக்கு போகல! சொந்தமா நாலு காசு சம்பாதிக்க துப்பில்லை. அவன் கூட பொறந்தவன் ஊருக்கே வேலை குடுத்துட்டு இருக்கான், இவனோ அவன்கிட்டேயே கூலி வாங்கி வாழ்க்கையை ஓட்டுறான்! ஆனா என் மக, சென்னைல எங்க கம்பெனியவே ஒத்த ஆளா நிர்வகிக்குறவ! இவனுக்கு என் பொண்ணு கேட்குதா?” இன்னும் இன்னும் காரம் ஏறியது ஷங்கரின் குரலில்.



இன்பனுக்கு பதில் பேச நா பரபரத்தாலும், இந்த நேரம் அதுக்கானது அல்ல என்றுணர்ந்து மௌனித்திருக்க முயன்றான்.



ஒண்டிவீரரால் இப்போது அமைதியாய் இருக்க இயலவில்லை. “படிக்கிறது அறிவை வளர்த்துக்கத்தான்! அதைவச்சு காசு பார்க்கனும்ன்னு எந்த அவசியமும் இல்ல! சொந்த இடத்துல மத்தவங்களை வேலை வாங்குறது ஒரு வகைன்னா, அவங்கக்கூடவே நின்னு உழைச்சு, லாபத்தை எடுக்குறது இன்னொரு ரகம்! செய்யுற வேலைக்கு அவன் என்னைக்கும் காசு கேட்டதில்லை! கை செலவுக்காக நாங்களா பார்த்து கொடுத்தது தான்! காண்டீபனும் சரி, இன்பனும் சரி சின்ன வயசுல இருந்தே வேலை செஞ்சு தான் காசு வாங்கிப்பாங்க! வளர்ந்ததும் காண்டீபன் நிர்வாகம் பார்க்க பிரியப்பட்டான், இன்பனுக்கு சொகுசா உட்காந்து பொழுதை போக்க பிடிக்காது! அதனால இறங்கி வேலை செய்யுறான்!” என்றார் ஷங்கரிடம்!



ஷங்கருக்கு ஒண்டிவீரர் மீது இன்னமும் சிறிது மரியாதையும் பக்தியும் ஒட்டியிருப்பதால் உடனே அவரை எதிர்த்து வாயிட அப்போது வரவில்லை.



“என்னோட பேரன் அவன்! இந்த சொத்து அத்தனைக்கும் உரிமைப்பட்டவன்! ஒன்னும் இல்லாதவன்னு இன்னும் ஒரு முறைக்கூட அவனை செல்லக்கூடாது!!” விரல் நீட்டி சொன்னவரின் வார்த்தைகள் ஷங்கரின் உலைகலனை மேலும் கொதிக்கச் செய்தது.



“சொத்து இருந்தா மட்டும் போதுமாங்கையா? இந்த வீட்ல அவனுக்குன்னு என்ன மரியாதை இருக்கு? பெத்த அப்பன் கூட அவனை தறுதலன்னு ஒதுக்கு தானே வச்சுருக்காரு?” குரலில் காட்டம் கலக்காமல் கசப்புடன் ஷங்கர் சொல்லிட, ‘என்னவோ அடிச்சுக்கோங்க’ என்றிருந்த சத்தியராஜன், இம்முறை வாய் திறந்தார்.



“இங்க பாருங்க ஷங்கர்? இப்போ பிரச்சனை இன்பனுக்கு சொத்து இருக்கா, மரியாதை இருக்காங்குறது இல்ல! உங்க பொண்ணுக்கு மாப்பிளை யாருங்குறது தான்! அதை மட்டும் பேசி முடிவு பண்ணுங்க!” என்று கடுமையாய் சொன்ன சத்தியராஜன், “அவனை எனக்கு பிடிக்காது, உருப்பட மாட்டான், தறுதலை, இன்னும் ஏன், அவன் என்னை பிடிச்ச தரித்துரம்ன்னு கூட சொல்லுவேன்! ஆனா அதை நான் மட்டும் தான் சொல்லுவேன்!!” என்றார். வார்த்தைகளில் அத்தனை அழுத்தம்.



‘என் பையனை பற்றி நீ சொல்லாதே!’ என்றுவிட்டார் சத்தியராஜன். என்னதான் பையனை வெறுக்கும் தகப்பனானாலும் ஷங்கரை ஒரு சொல் சொல்ல அவர் விடவில்லை. மில்லின் சாவியை இன்பன் வைத்திருந்ததற்காக ‘திருடன்’ என சொல்லி அவனை அடித்தவரா இவர் என வியப்பானது. அந்த நேரத்தில் அவர் அனைவர் மனதிலும் உயர்ந்து நின்றார்.



ஷங்கருக்கு தலை ‘விண் விண்’னென்று வலித்தது. மகளுக்கு திருமணம் என சந்தோசமாய் இருந்தவருக்கு எதிர்ப்பாராத அதிர்விது. தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்துவிட்டார். கனத்த அமைதி நிலவிய இடத்தில் செல்லத்தின் கேவல் மட்டுமே பேரொலியாய்!!



“பாட்டி வீட்டுல இருக்கேன்னு ஆசைப்பட்டு சொன்னளேன்னு உங்களையெல்லாம் நம்பி தான் விட்டுட்டு போனேன்! இப்படி அவ மனசை மயக்கி, எங்க நிம்மதியை கெடுத்துட்டீங்களே!!” செல்லம் முந்தானையில் முகம் மறைத்து தேம்பி அழ,

“இப்போவரைக்கும் எங்க வீட்டு பையன் வாயே திறக்காம தான் நிக்குறான், உங்க வீட்டு பொண்ணு தான் ‘அவனை கட்டிவையுங்க’ன்னு கூப்பாடு போடுது!!” என்றான் காண்டீபன் நக்கல் தொனியில்.



செல்லம் ஆத்திரத்துடன் தன் மகளை பார்த்து, “கேட்டியாடி? என்ன சொல்றாங்கன்னு? இதெல்லாம் நம்மளுக்கு தேவையா? எவனை காட்டுனாலும் கட்டுறேன்னு சொன்னியே, இப்போ கடைசி நிமிஷத்துல இப்படி வந்து நிக்குற?” என்றிட,



“இப்பவும் சொல்றேன், அப்பா கைக்காட்டுற பையனை தான் நான் கல்யாணம் பண்ணப் போறேன்” என்று கோகிலா சொன்னதும் ஒரு நொடி பிரகாசமானது செல்லத்தின் முகம்.

ஆனால் அடுத்த நொடியே, “ஆனா, அப்பா கைக்காட்டுறது இன்பா மாமாவையா தான் இருக்கணும்!” என்று கோகிலா சொல்லிவிட, மீண்டும் அவர் அழுகை தொடர்ந்தது.



செல்லம், “இங்க பாருடி, நாங்க நிச்சயம் பண்ணுன கல்யாணம் மட்டும் நடக்கலன்னா, என்னை நீ உயிரோடவே பார்க்க முடியாது”

கோகிலா இதோ இதோ என எதிர்ப்பார்த்த தருணம் வந்துவிட்டது. செல்லம் அவரது பிரமாஸ்த்திரத்தை கையில் எடுத்திருந்தார்.

கண்மூடி ஒரு நிமிடம் நின்றாள் கோகிலா. ஆழ மூச்செடுத்தாள். பின், “எனக்கு இன்பாவை தவிர வேற யாரை கட்டிவைக்க முயற்சி பண்ணாலும் நான் உயிரை விட்டுடுவேன்!” என்றவள், நொடிப்பொழுதில் அருகே பழக்கிண்ணத்தில் இருந்த கத்தியை எடுத்து இன்பனோடு பிணைத்திருந்த தன் இடக்கையில் கீறிவிட்டிருந்தாள்.

‘தாய் எட்டடி பாய்ந்தால், பிள்ளை பதினாறு அடி பாயும்’ என்ற கூற்றை கண நேரத்தில் மெய்ப்பித்திருந்தாள் கோகிலா.

“அய்யோ...!!!” என்ற அலறல் மட்டுமே அங்கே!

கீறிய கையில் இருந்து மெலிதாய் வெளிப்பட்டது ரத்த கோடுகள். மெதுமெதுவாய் ரத்தம் வெளியேற காட்சிப்பொருளாய் நின்றிருந்த இன்பனுக்கு, ‘எனக்காகவா? எனக்காக எதுக்குடி இவ்வளோ போராடுற?’ என மனம் அனத்தியது. அந்த நேரம் கூட கோர்த்திருந்த இன்பனின் கரத்தை அவள் விடவே இல்லை.



“ஏய் லூசு!!” கத்திக்கொண்டே ஓடிவந்த காண்டீபன் தான் அவள் காயத்திற்கு துரிதமாய் முதலுதவி செய்தான்.

கோகிலா அனைத்திற்க்கும் தயாராய் இருந்துருக்க வேண்டும், இல்லையேல் பட்டும் படாமல், அதேநேரம் ரத்தமும் எட்டிப்பார்க்கும் அளவு சரியாய் தன் கையில் கீறியிருக்க முடியாது.



மகளின் இந்த செயலில் வெலவெலத்து போய் நின்றனர் ஷங்கரும் செல்லமும்.



நடப்பதையெல்லாம் பார்த்துக்கொண்டிருந்த ஒண்டிவீரர், சூழலின் கனம் சற்று குறைந்ததும், “இன்பா இங்க வா!!” என்றார்.

இன்பன் கோகிலாவை திரும்பி பார்த்தான். அந்த பார்வை கேட்டதும், ‘இப்போ நான் உன் கையை விட்டா நீ என்னை தப்பா நினைச்சுடுவியா?’ என்று!



‘இந்த பார்வைக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை’ என அலுத்துக்கொண்ட கோகிலா, “போ” என்று அவன் கரத்தை விடுவித்தாள்.



ஒண்டிவீரரிடம் சென்ற இன்பன் அவர் முன் மண்டியிட்டு, “சொல்லுங்க தாத்தா” என்றான்.

“நீ நம்ம கோகிலாவை விரும்புறியாப்பா?”

சற்றும் யோசிக்காது, “ஆமா தாத்தா” என்றுவிட்டான் இன்பன். கோகிலாவுக்கு அவன் மீதிருந்த தாங்கள் கொஞ்சமே கொஞ்சம் குறைந்தது.



ஒண்டிவீரர் கண்மூடி சாய்வு நாற்காலியில் தலை சாய்த்தார். அவர் புருவங்கள் முடிச்சிட்டன.

“அப்போ சுசீலாவை என்ன செய்யலாம்ன்னு இருக்க?” அவரது கேள்வியில் இன்பனும் கோகிலாவும் காண்டீபனையே கண்டனர்.



அவனோ, ‘இப்போவே என் விஷயமும் பேசணுமா? ஐயோ’ என்று எச்சில் கூட்டி முழுங்க, தம்பியின் மனவோட்டத்தை அறிந்தவன் போல, “நான் அவங்கக்கிட்ட பேசிக்குறேன் தாத்தா” என்றான் இன்பன்.



“அப்போ கோகிலா தான் வேணும்ன்னு முடிவோட இருக்கியா?”



“ஆமா தாத்தா, அவளை தான் கல்யாணம் கட்டுவேன்”



“இதை ஏன்ப்பா முன்னாடியே சொல்லல?” தாத்தனின் இந்த கேள்விக்கு என்னவென்று சொல்வான் அவன்! கோகிலா இன்று இழுத்துக்கொண்டு வந்து உண்மையை போட்டு உடைக்கவில்லை என்றால் அவன் மனம் எப்போது திறந்திருக்கும் என அவனுக்கே தெரியாதே!



“அது.... தாத்தா....!!”



“சுசீலா வீட்டாட்களை வர சொல்லு, இன்னைக்கே பேசிடுவோம்!!” ஒண்டிவீரர் சொல்ல, “தாத்தா அவங்க நேத்தே டூருக்கு கிளம்பி போய்ட்டாங்க தாத்தா! இன்னும் பத்து நாள் ஆகும் வர” என்றிருந்தான் காண்டீபன்.



ஒவ்வொருவரும் ஒவ்வொரு எண்ணத்தில் இருக்க, அங்கிருந்த கிஷோரை ஒருவரும் கண்டுக்கொள்ளாது விட்டுவிட்டனர். அவன் கண்கள் கோகிலாவை தாண்டி வேறெங்குமே பயணிக்கவில்லை. அவள் இன்பன் தான் வேண்டும் என பேச பேச, அவளை குத்தி குதறும் வெறியுடன் வெறித்துக்கொண்டிருந்தன அவன் கண்கள்.



“ஷங்கர்? முடிவா என்ன சொல்ற இப்போ?” ஒண்டிவீரர் கேட்க, “நான் பார்த்து வைச்சுருக்க மாப்பிள்ளையை தான் அவ கட்டனும்!” ஏனோ அவருக்கு இன்பன் எதிரியாக தெரிந்தான்.



“விருப்பம் இல்லாத பிள்ளையை கட்டாயப்படுத்துறது தப்பு ஷங்கர்!”



“அப்போ கிஷோருக்கும் அவங்க வீட்டுக்கும் நாங்க குடுத்த வாக்கு? கடைசி நிமிஷத்துல கல்யாணத்தை நிறுத்துனா இனி நான் எப்படி அவங்க முகத்துல முழிப்பேன்? என் பிசினஸ் என்னாகும்?” ஷங்கர் சகலத்தையும் ஆராய்ந்தார்.



“என்னை விட பிசினஸ் தான் முக்கியமாப்பா?” கோகிலா கேட்க, “நீ பேசாத!” என்று கத்தினார் ஷங்கர்.



“இந்த ஊருக்கு திரும்ப வந்ததே தப்பு! நிம்மதியான வாழ்கையே மறந்து போச்சு! இப்போ என் பேச்சுக்கு மதிப்பு குடுத்துட்டு இருந்த ஒரே பொண்ணும் போய்ட்டா!” என்றார் அவர்.



“ப்பா... நான் மாமாவை கட்டிக்க கூடாதுன்னு சொல்லுங்க, நான் கேட்குறேன்! உங்க மனசு மாறும்வரை வெயிட் பண்றேன்! ஆனா கிஷோரை தான் கட்டிக்கனும்ன்னு சொல்றதை என்னால அக்சப்ட் பண்ணிக்க முடியாதுப்பா!” தீர்மானமாய் சொன்னாள் கோகிலா.



“ஷங்கர், யாருக்கு யாருன்னு மேல இருக்கவன் தான் முடிவு பண்ணுவான்! உன் பொண்ணோட விதி இன்பன் கூட தான்னு இருந்தா யார் தடுத்து என்ன நடக்கும் சொல்லு?” ஒண்டிவீரர் ஆறுதலாய் சொல்ல, அதுவரை பொறுத்திருந்த கிஷோர் பேசினான்.

“ரைட்! வெல் செட்! ஒருவேளை காட் கோகிலாவை எனக்குன்னு பிக்ஸ் பண்ணிருந்தா?” என்றான் கேள்வியாய்.



அவன் முகம் பாராது, “யாருக்குன்னு இருக்கோன்னு அவங்களுக்கு தான் அமையும்” என்றுவிட்டார் ஒண்டிவீரர்.



“குட்! அப்போ அந்த சோ கால்ட் ‘விதி’யோட நம்ம ஒரு கேம் விளையாண்டா என்ன?” என்றான். அவன் சொல்ல வருவது புரியாது போக, அவனே தொடர்ந்தான்.



“எனக்கும் கோக்கிக்குமான கல்யாண ஏற்ப்பாடு நிக்காம நடக்கட்டும்!” என்று அவன் சொன்னபோதே, “எனக்கு உங்களை பிடிக்கலன்னு சொல்லிட்டேன்ல” என்று எகிறினாள் கோகிலா.



எழுந்த ஆத்திரத்தை பல்லைக்கடித்து அடக்கிய கிஷோர், “வெயிட்! விதின்னு ஒன்னு இருக்கிறது உண்மைன்னா, அது உன்னை உன் மாமாக்கு தான் பிக்ஸ் பண்ணிருக்கு அப்படின்னா, என்னோட மணமேடை வரைக்கும் நீ வந்தாக்கூட நமக்கு கல்யாணம் ஆகாது தானே?” என்ற கிஷோர் எல்லோர் முகத்தையும் ஒருமுறை பார்த்துவிட்டு, “அப்புறம் என்ன? உன் லவ் அவ்வளோ ஸ்ட்ராங்குன்னா என்னோட கல்யாணம் நடக்காம இன்பனோட நடத்தி காட்டட்டுமே?” என்றான்.



‘இதென்ன முட்டாள்த்தனமான பேச்சு?’ என எண்ணி முகம் சுழித்தார் சிவகாமி.



“என்ன எல்லாரும் பார்க்குறீங்க? அங்கிள்? உங்களுக்கு புரியுதா நான் சொல்றது?” என்றான் கிஷோர்.



யாரும் பேசாது போக, “இதுல யாருக்கு என்ன பாதிப்பு இருக்கு சொல்லுங்க? கோகிலா எனக்குன்னு விதில இருந்தா தாலியை நான் கட்டப்போறேன், இதே இன்பனுக்குன்னு இருந்தா அவர் கட்டட்டும்! எப்படி பார்த்தாலும் உன் வீட்டு பொண்ணோட லைஃப் சேஃப் தானே?” எதற்க்காக தூண்டில் போடுகிறான் என புரியாவிடினும், அதில் ஏதோ ஒரு குளறுபடி நடக்க போகிறது என தோன்றியது கோகிலாவுக்கு.



“என்ன அங்கிள், எனக்காக இதுக்கூட செய்யமாட்டீங்களா? உங்களுக்காக உங்க பொண்ணை மேரேஜ் பண்ணிக்க ஓகே சொன்னேன்! இப்போ லாஸ்ட் மினிட்ல மேரேஜ் நின்னு போனா எனக்கு தானே அசிங்கம்?” என ஷங்கரிடம் சொல்ல, “உங்களை மாறி ஒரு நல்லவனை கட்டிக்க என் பொண்ணுக்கு குடுத்து வைக்கல பாருங்க கிஷோர்” என்றார் ஷங்கர்.



“அங்கிள், கோகிலா எனக்கு தான்னு இருந்தா அவ என்கிட்டே தானே வருவா? டேட் கிட்ட நான் சொல்லிக்குறேன்! நீங்க கல்யாண வேலையை பாருங்க! அவ கழுத்துல யாரு தாலி கட்டுறான்னு பார்த்துடலாம்” என்று இன்பனிடம் சவால் விடுபவன் போல முறைத்தான் கிஷோர்.



“இதெல்லாம் என்ன பேச்சு? எதுல விளையாடுறது இல்லையா? பொண்ணு வாழ்க்கையில போய் ஒத்தையா ரெட்டையா போட்டுக்கிட்டு இருக்கீங்க?” சிவகாமி சாட, அது ஷங்கருக்கு ஒரு வேகத்தை கொடுத்தது.

“என் மாப்பிளை சொல்றதை தான் நான் கேட்டேன்!” என்றார் முட்டாள்த்தனமாய்.



“கொஞ்சம் யோசிச்சு முடிவெடு ஷங்கர்” ஒண்டிவீரர் அதட்டல் கூட வேலை செய்யவில்லை. கிஷோர் அப்போது தேவதூதனாக ஷங்கருக்கு காட்சி தந்தான். இத்தனை நடந்தும் அதை பெருதுப்படுத்தாத அவன் மனம் வேறு யாருக்கு இருக்கும் என எண்ணினாரே தவிர, அவன் இத்தனை இறங்கி வர என்ன காரணம் இருக்கும்ன்னு என அவர் யோசிக்க தவறினார்.



“வர வெள்ளிக்கிழமையே என் பொண்ணுக்கும் கிஷோருக்கும் கல்யாணம்! இது உறுதி!!” என்றுவிட்டார் ஷங்கர்.

“ஏங்க, இன்னும் ரெண்டே நாள்லயா?” செல்லம் தடுத்தும், “நான் சொல்றது தான் முடிவு!” என்றுவிட்டார்.



இம்முறை இன்பனிடம் நெருங்கி நேருக்கு நேர் நின்ற கிஷோர், “சரியா ஒரு மணி நேரம் உனக்கு டைம்! மூகூர்த்தம் முடியுறதுக்குள்ள என்னை மேடைல இருந்து இறக்கிவிட்டுட்டு நீ மாப்பிள்ளையா உட்காரு! அப்படி உன்னால முடியலன்னா கோகிலா கழுத்துல நான் கட்டுற தாலி இருக்கும்! என்ன ஓகே வா?” என்றான்.



“இதென்ன அபத்தமா? கோகிலாவும் இன்பனும் விரும்பும்போது இந்த கல்யாணம் நின்னு தானே போகும்?” என சத்தியராஜன் கேட்டதுக்கு, “கண்டிப்பா! ஆனா முகூர்த்தம் முடியுறதுக்குள்ள இன்பன் கல்யாணத்தை நிறுத்தலன்னா, கோகிலா எனக்கு தான்!! அதுதான் சவாலே!!” என்றவன், “என்ன இன்பன் சர்! ஓகே தானே?” என்றான்.



இன்பன் ஒருமுறை திரும்பி கோகிலாவை பார்த்தான். அவள் தலை சம்மதமாய் அசைந்ததும், “எங்க வீட்ல இருக்க யாருக்குமே இதுல விருப்பம் இல்லன்னு எனக்கு நல்லா தெரியும்! ஆனா என் கல்யாணம் இப்படிதான் நடக்கணும்ன்னு இருந்தா.....!!! ஹ்ம்ம்... நடக்கட்டும்!!” என்றுவிட்டான் பேரின்பன்.



கிஷோரின் முகத்தில் விஷம புன்னகை!



“அங்கிள், கல்யாணம் செம்ம கிரேன்டா நடக்கணும்! ஊரையே கூப்புடுங்க! ரெண்டு நாள்ல என்ன என்ன செய்ய முடியுமோ எல்லாம் செய்யுங்க!!” என்று கிஷோர் சொல்ல, “ஆமா மாமா!! இப்படி ஒரு கல்யாணம் நடந்துச்சுன்னு இன்னும் ரெண்டு தலைமுறை கடந்தாலும் எல்லோரும் பேசனும்!! அப்படி நடத்துங்க!! என் கல்யாணத்துக்கு என்னால என்ன என்ன வேலை செய்யமுடியுமோ, அதெல்லாம் நான் பார்த்துக்குறேன்!! மாப்பிளைக்கு எப்படி வேலை குடுக்குறதுன்னு தயங்காம என்ன செய்யணுமோ சொல்லுங்க!!” நேரிடையாய் ஷங்கரிடம் பேசினான் இன்பன்.



இன்பனின் பேச்சில் கோகிலாவுக்கு முறுவல் பூக்க, உதட்டை கடித்துக்கொண்டாள்.

“யூ கான்ட் பீட் மீ!!!” கிஷோர் சவாலிட, “லெட்ஸ் ஸீ” என்றான் இன்பன்.



அங்கிருக்க பிடிக்காது ஒவ்வொருவராய் நகர்ந்து செல்ல, கோகிலா மாடியேறுவதை கண்ட இன்பன் அவள் பின்னே ஓடினான்.



“ஏய் மூக்கி!!”

“...”

“நில்லுடி”

“...”

“கொக்கிமூக்கி!!”

“...”

“ஏய் நில்லுங்குறேன்!!” அறை வாசலில் நின்றிருந்த அவளை பிடித்திருந்தான் இன்பன்.



“என்ன?” காட்டமாக கேட்டாள்.

“ஐ லவ் யூ டி!!”

“பட் ஐ ஹேட் யூ!!!” என்றவள் அறைக்குள் சென்று கதவடைத்துக்கொள்ள, வாய்விட்டே சிரித்தான் இன்பன்.

“ஹாஹா ஹாஹா”



“ண்ணே... ண்ணே... முழிச்சுக்கிட்டே தூங்குறியா?” பச்சைக்கிளி போட்டு உலுக்கிய உலுக்கில் காலையில் நடந்ததெல்லாம் நினைவில் இருந்து நகர்ந்து நிகழ்காலத்துக்கு வந்தான் இன்பன்.



“என்னடா?”

“செந்தில வர சொன்னியாமே! வந்துருக்கான்” என்றதும் எதிரே நிற்பவனை கண்டு, “அட வா வா செந்திலு!!” என்றான் இன்பன் உற்சாகமாய்.



“சொல்லுண்ணே! கல்யாணமாமே! ப்ளெக்ஸ் வச்சுடுவோமா?” பிரிண்டிங் ப்ரெஸோடு ப்ளெக்ஸ் அண்ட் பேனர்ஸ் வேலையும் சேர்த்து பார்க்கும் செந்தில் கேட்க,

“அதுக்குதான் உன்னை வர சொன்னேன்!! நாளை மறுநாள் கல்யாணம்,கோபில இருந்து ஈரோடு வரைக்கும் நம்ம ப்ளெக்ஸ் தான் பட்டைய கிளப்பணும், சொல்லிட்டேன்!!” என்றான் இன்பன்.



“கவலைய விடுண்ணே! கலக்கி புடுவோம்! ஏதாவது வாசகம் மட்டும் அதிகப்படியா போடணும்ன்னா சொல்லு! செஞ்சுடுவோம்” என்று அவன் கேட்க, சற்றே யோசித்தவன்,

“இந்த கல்யாணத்தை முன் நின்று எடுத்து நடத்தும் ஷங்கர் செல்லம் தம்பதின்னு போட்டோ போட்டுட்டு! முக்கிய விருந்தினர் திரு.கிஷோரை வருக வருக வென வரவேற்கிறோம்ன்னு போடு! ‘விருந்தினர்’ வார்த்தை நல்ல பெருசா இருக்கனும், சரிதானே?” என்றான்.

“அப்படியே ஆகட்டும்” என செந்தில் சொல்ல, “நேரம் கம்மிய இருக்கு, நீ இப்போவே வேலையை ஆரம்பிக்கணும்! பொழுது விடியும்போது ஊரு முழுக்க நம்ம பேனரா தான் இருக்கனும், பார்த்துக்க!!” என்று எதிர்ப்பார்ப்போடு சொல்லும் இன்பன், அந்த பேனரை கண்டதும், ‘எதுக்குடா பேனர் வச்சீங்க?’ என தலையில் அடித்துக்கொள்ள போவது உறுதி!!! ஹாஹா!!

-தொடரும்...
 
Top