Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோகுலத்தில் ராமன்- Final Episode of the First Part

Advertisement

Thank you so much for your huge support and precious comments...!!! I will commence the second part in the middle of November. be patient and pursue your great support...!!

*21*

உன்னை தொலைக்கவில்லை


ஆனாலும் தேடுகிறேன்...

வந்துவிடு!!!

பச்சைமலை முருகரின் அடிவாரத்தில் அமைந்திருந்தது அந்த கல்யாண மண்டபம். ஒண்டிவீரர் குடும்பத்துக்கு சொந்தமான அந்த மண்டபத்தில் இரவு நேரத்திற்கு ஏற்றவாறு கண்ணை கவரும் வகையில் கலர் கலர் மின் விளக்குகள் அலங்கரிக்க, செயற்கை பூக்களால் அலங்கரிக்கப்பட்ட வளைவு, வாசலை அலங்கரித்திருந்தது. நுழைவின் இருபுறமும் இரண்டு மேசைகள். அதில் ஒரு மேசையின் முன்னே ஷங்கரும் செல்லமும் நின்று வருபவர்களை வரவேற்க, எதிர்புற மேசையில் பச்சைக்கிளியும் வெட்டுக்கிளியும் நின்றுக்கொண்டு “வாங்க வாங்க வாங்க” என கூவிக்கொண்டிருந்தனர்.



இன்பனின் ‘வரலாறில் பொறிக்கப்படவேண்டிய’ அந்த பேனரும் மண்டபத்தின் வாசலில் நின்று வேடிக்கைக்காட்டிக்கொண்டிருந்தது. காதல் பாடல்களாக தேர்ந்தெடுத்து ஸ்பீக்கரில் ஓடவிட்டுக்கொண்டிருந்தன இன்பனின் விழுதுகள். சொந்தபந்தங்கள் கூட்டம் மண்டபத்தையே நிறைத்திருந்தது. இன்பனுக்கும் கோகிலாவுக்கும் தான் திருமணம் என அரசல் புரசலாய் வெளிவந்த சேதி இன்பன் வைத்திருந்த கட் அவுட்டில் உறுதியாகிவிட, அங்கே புரளி பேசுவதற்கு எக்கச்சக்கமாய் விஷயங்கள் இருந்தன. முக்கியமாக சுசீலாவை பற்றி!!



அவளிடம் பந்தயம் கட்டி தோற்றுப் போய் காசை இழந்தவர்கள் எல்லாம் அவளது மூக்குடைக்க, அவள் வருகையை எதிர்ப்பார்த்து காத்திருந்தனர்.



மணமகள் அறையில் கண்ணாடியின் முன்னே அமர்ந்திருந்தாள் கோகிலா. மஞ்சள் நிற பட்டு அவள் நிறத்திற்கு எடுப்பாய் பொருந்த அதற்க்கு பொருத்தமான தங்க நகைகளும் மிதமான ஒப்பனையுடன், சிறப்பான சிகையலங்காரமும் சேர, அவள் ஒரு நிமிடம் அசையாமல் இருந்தால் கூட, நகைக்கடை வாசலில் இருக்கும் பொம்மையோ என சந்தேகிக்கக்கூடும்!!

முகத்தில் கீற்றாய் சிறு புன்னகை இருந்திருந்தால் அவள் அழகில் மெருகு கூடி ஜொலிஜொலித்திருப்பாள். ஆனால் அவள் முகம் முழுக்க சிறு கலக்கத்துடனே இருந்தது. இன்பன் அவளிடம் சில நொடிகள் வந்து பேசினால் கூட போதும் என தோன்ற, அவனை தான் கண்ணால் பார்க்க கூட முடியவில்லையே!! அவனது அணில்களுக்கு விருந்து வைக்கவும், வருபவர்களை கவனிக்கவும், பந்தி பார்க்கவுமே அவன் நேரம் சுழன்றது.



காண்டீபன் பெரிதாய் இந்த திருமணத்தில் ஆர்வம் இல்லாதது போல காட்டிக்கொண்டாலும் உள்ளூர, ‘இன்பனுக்கும் கோக்கிக்கும் எப்படியாவது கல்யாணம் ஆகிடனும்ப்பா!’ என வேண்டாது இல்லை. பொதுநலம் எல்லாம் இல்லை, அவன் ரூட் கிளியர் ஆக வேண்டுமே என்ற சுயநலம் தான்!!



சத்தியராஜன் காலை நேர முகூர்த்ததுக்கு வரவதாய் சொல்லி நழுவப்பார்க்க, ஒண்டிவீரர் விடவில்லை. சமையல் வேலைகள் சரியாய் நடக்கிறதா என கண்காணிப்பதும், திருமணம் முடிந்ததும் கொடுக்கப்போகும் தாம்பூலப்பையும் அவர் பொறுப்பாய் மாறிட, மண்டபத்திலேயே பிசியாக சுற்றிக்கொண்டிருந்தார்.



வெகு வருடங்களுக்கு பிறகு நடக்கும், ஒண்டிவீரர் குடும்பத்தின் முதல் திருமணம்! எப்படி எப்படியோ ஊர் மெச்ச செய்ய வேண்டும் என கனவு கண்டிருந்தார். இரண்டே நாளில் அவசரகதியில் பேரனுக்கும் பேத்திக்கும் திருமணம் செய்ய நேரிடும் என கற்பனை கூட செய்திடவில்லை.



கோகிலாவுக்கு துணையாய் அவளுடன் இருந்தது தங்கம் மட்டுமே!! அலங்காரம் கூட அவர்தான் செய்துவிட்டிருந்தார். அவள் முகம் வாடி போயிருக்க, “கோக்கிமா? ஒவ்வொரு பொண்ணுக்கும் வாழ்க்கைல திரும்ப கிடைக்காத பொக்கிஷமான நாட்கள்ல இதுவும் ஒன்னு!! வாழ்க்கையை திரும்பி பார்க்கும்போது இதெல்லாம் நமக்கு சந்தோசமான நிகழ்வா இருக்கணும்! அதனால முகத்தை ‘உம்’ன்னு வச்சுக்காம நல்லா சிரிச்சமாறி இரு! அப்போதான் இன்பனுக்கும் சந்தோசமா இருக்கும்!!” என்றார்.



அவர் சொன்னதுக்காக முயன்று முகம் மலர்ந்தவளை கண்டு திருஷ்ட்டி கழித்தவர், “நீ இப்படியே இரு, நான் போய் உனக்கு சாப்பாடு கொண்டு வரேன்... சரியா?” என்று நகர்ந்தார் தங்கம்.



மணமகன் அறையில் சிவகுரு, “டேய் என்னடா சொல்ற?” என்று தலையில் கைவைத்து அமர்ந்துவிட்டார். லலிதா நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுக, “மாம், ஸ்டாப் க்ரையிங்! நீ அழுகுறதை யாரு பார்த்தாலும் டவுட் வரும்! ஐ வான்ட் டூ கெட் மேரீட் வித் கோகிலா” என்றிட, அவன் கன்னத்தில் ஓங்கி அறைந்தார் சிவகுரு.



“எவ்வளோ பெரிய காரியம் பண்ணிருக்க நாயே! கொஞ்சம் கூட அதை பத்தின பயம் இல்லாம ஒரு பொண்ணு வாழ்க்கையை கெடுத்தே ஆகணும்ன்னு நிக்குற? உன்னை பெத்த பாவத்தை இந்த கல்யாணத்தை நிறுத்தி நான் சரி செஞ்சுக்குறேன்டா” என்றவர் கதவை திறக்க நகர, மறுநொடி அவர் சட்டையை கொத்தாக பிடித்து தூக்கியிருந்தான் கிஷோர். சிவகுருவின் கால்கள் தரையை விட்டு அரையடி உயர்ந்திருந்தது.



“டேய், அப்பாவை என்னடா பண்ற?” லலிதா பதறிக்கொண்டு ஓடிவர, கொலைவெறியோடு சிவகுருவை வெறித்த கிஷோர், “கல்யாணத்தை நிறுத்தனுன்னு மட்டும் நினைச்ச, அப்பன்னு கூட பார்க்க மாட்டேன்! நானே அடிச்சு கொன்னுட்டு கடன் தொல்லைல செத்துட்டன்னு ஊருக்கே சொல்லிடுவேன் பார்த்துக்க!!” என்றவனின் முதுகில் முழு வலுக்கொண்டு அடித்துக்கொண்டிருந்தார் லலிதா, “அப்பாவை விடுடா, பாவி! அவரை விடுடா” என்றார் அலறிக்கொண்டு.



சிவகுருவின் முகம் பயத்தில் வெளிறிப்போயிருந்தது. “அதையும் மீறி நீ கல்யாணத்தை நிறுத்துனா, உன்னோட சேர்த்து அந்த கோகிலாவும் பொணமா மேலோகம் வருவா! பார்க்குறியா?” என்று கேட்க, அவன் கண்களில் கண்ட வெறி, ‘கண்டிப்பாக செய்வான்’ என சிவகுருவை திகிலடைய செய்தது.



“கல்யாணத்துக்கு வந்தோமா, சாப்பிட்டுட்டு போட்டோக்கு போஸ் குடுத்தோமான்னு மட்டும் இருங்க! அதான் உங்களுக்கு நல்லது!!” அவன் சட்டையை விட்டதும் தடுமாறி விழப்போனவரை தாங்கிக்கொண்ட லலிதா, “நீயெல்லாம் புள்ளையாடா? அப்பாக்கிட்ட இப்படியெல்லாம் பேசுற?” என்றார் கண்ணீரோடு!! சிவகுரு திகைப்பில் இருந்து மீளவில்லை!



“அவர் எனக்கு டேட் மாறி நடந்துக்கிட்டா நான் என்ன செய்யப்போறேன்? பையன் மேரேஜ நிறுத்துறேன்னு சொல்றவருக்கு இதான் கதி!!” என்றான் அசட்டையாய்.



“லுக், எனக்கு கோகிலாவை ரொம்....ப பிடிச்சு போச்சு!! அவளுக்கு நான் குடுக்க வேண்டியது நிறைய இருக்கு” என்று சொன்னவன் முகம் வன்மத்தீயில் எரிந்தது. “அவளுக்கும் எனக்கும் மேரேஜ் முடியுறவரைக்கும் நீங்க ஒரு பொம்மை மாறி இங்க இருந்தா போதும்!!” என்றவன் “புரிஞ்சுதா?” என கத்த, சிவகுருவின் தலை தன்னால் அசைந்தது. அறைக்கதவு தட்டப்படவே, “மாம், பேஸ் துடைச்சுக்கோங்க” என்றவன், சிவகுருவ்ன் அருகே சென்று கசங்கியிருந்த அவர் சட்டையை நீவிவிட்டபடி, “வரவங்க கிட்ட எப்படி நடந்துக்கணும்ன்னு நான் சொல்ல தேவையில்லன்னு நினைக்குறேன்” என்றான்.



இருவரும் தங்களை சீர்ப்படுத்திக்கொண்டதும் கதவை திறந்தவன் ஷங்கரை கண்டு, “அங்கிள், வாங்க வாங்க!! மேரேஜ் வொர்க் எல்லாம் நீங்களே பார்க்குறீங்களே, அவருக்கு ஹெல்ப் பண்ணா என்னனு இப்போதான் அப்பாவை சத்தம் போட்டுக்கிட்டு இருந்தேன்!!” என்றான் நல்லப்பிள்ளையாய்.



“அட, யாரு பார்த்தா என்ன கிஷோர்? எல்லாத்துக்கும் ஆள் இருக்கு! அதும் இல்லாம என் மாமனார் குடும்பம் வேற ஆளுக்கு ஒரு வேலையா பார்க்குறாங்க! சோ ஐயம் ப்ரீ ஒன்லி... ஜஸ்ட் உங்களுக்கு ஏதாவது வேணுமான்னு கேட்டுட்டு போகதான் வந்தேன்!!” என்றிட, “தேங்க்ஸ் அங்கிள்! லாங் ட்ராவல் செஞ்சு வந்ததுல மாம் அண்ட் டேட் ரொம்ப டயர்ட்! சோ டின்னர் மட்டும் ரூம்க்கே குடுத்துட்டா ரொம்ப ஹெல்ப்புல்லா இருக்கும்!!” என்று கிஷோர் கேட்டதும், “இதோ பைவ் மினிட்ஸ்ல அனுப்பி வைக்குறேன்” என வெளியேறினார் ஷங்கர்.



அவர் சென்றதும், “என்னை மீறி எதுவும் நடக்கக்கூடாது! டோன்ட் எவர் ட்ரை டு பீ ஓவர் ஸ்மார்ட்” என்று பல்லைக்கடித்தான் கிஷோர்.



கதவை திறந்துக்கொண்டு உள்ளே வந்தது உணவுத்தட்டு! ஜன்னல் ஓரம் நின்று வெளியே நடக்கும் வானவேடிக்கைகளையும், மண்டபத்திருக்கு வருபவர்களையும் வேடிக்கைப்பார்த்துக்கொண்டிருந்தாள் கோகிலா. உணவு வந்தது தெரிந்ததும், திரும்பியும் பாராது, “வச்சுடுங்க சித்தி, நான் சாப்பிட்டுக்குறேன்” என்று சொல்ல, பதில் வராது கதவு தாழிடும் சத்தம் கேட்டு வெடுக்கென அவள் திரும்ப, சாற்றிய கதவின் மீது சாய்ந்துக்கொண்டு மந்தகாசமாய் சிரித்தான் பேரின்பன்.



எப்போதும் போல அவன் சிரிப்பில் சொக்கிப்போனவள், “மாமா.....!!” என அவனிடம் ஓடிசெல்ல, “மூக்கி....!!!” என கட்டிக்கொண்டான் அவளை.



“காலைல இருந்து உன்னை பார்க்கவே இல்லை நான்!!” சலுகையாய் அவன் நெஞ்சில் மூக்கை தேய்த்தாள் கோகிலா.

அவள் ஏற்ப்படுத்தும் புது உணர்வில் அவளை மேலும் இறுக்கிக்கொண்டவன், “வேலைடா! எல்லாத்தையும் பசங்க பார்த்துக்குறாங்க! இருந்தாலும் நானும் எல்லாம் சரியா நடக்குதான்னு பார்க்க வேண்டியதா இருக்கு! ப்ளக்ஸ் வைங்கடான்னு ஒரு வேலையை விட்டதுக்கு அவனுங்களால என்ன பண்ண முடியுமோ பண்ணிட்டானுங்க” என்று அவன் சலித்துக்கொள்ள அந்த ‘பிலாப்பி’ நியாபகத்தில் குலுங்கி சிரித்தாள் கோகிலா.

அவள் சிரிப்பை பெரிதாக்கும்படி அமைந்தது இன்பன் காட்டிய ஒரு படம்!



“இங்க பாரு!! அதுக்குள்ள எவனோ ஒருத்தன் மீம் கிரியேட் பண்ணி உலவவிட்டுட்டான்! பார்வேர்ட் ஆகி, பார்வேர்ட் ஆகி கடைசில எனக்கே இது வருது!! இதை பார்க்கும்போது எனக்கு எப்படி இருக்கும் சொல்லு? செம்ம டென்ஷன்!!” என்று அவன் கூற, அந்த படத்தில் இன்பனின் பேனர் இருக்க, கேப்ஷனாக, “ஆக்ஸ்போர்ட் யூனிவர்சிட்டியின் அரியவகை படிப்பு!” என இருக்க, சத்தமாய் சிரித்தாள் கோகிலா.



“சிரி, சிரி! என் பொழப்பே இங்க சிரிப்பா சிரிச்சு தான் கடக்கு” என்று சொன்னவனின் முகமும் சிரிப்பில் விரிந்தது.



“இதெல்லாம் மறக்கவே முடியாதுல?” சிரித்துக்கொண்டே கோகிலா கேட்க, அவளை தன் மீது இழுத்து கட்டிக்கொண்டவன், “இதையும் தான்!!” என்றான்.



“மூக்கி குட்டி...!!!”

“சொல்லுங்க அங்கிள்” அவன் தோளில் சாய்ந்துக்கொண்டே சொன்னவளின் தலையில் நங் நங்கென கொட்டினான் இன்பன்.

“சொல்லுவியா? சொல்லுவியா? அங்கிள்ன்னு சொல்லுவியா?” கேட்டுக்கொண்டே அவன் கொட்ட, “ஐயோ மாமா, சொல்ல மாட்டேன் சொல்ல மாட்டேன்!!!” என்று குதித்தாள் கோகிலா.



“உப்ப்... அது!!”

“ம்ஹும்! என் ஹேர்ஸ்டையிலே கலஞ்சு போச்சு போ!!!” கோகிலா முகத்தை தூக்கி வைத்துக்கொண்டு கண்ணாடியின் முன்னே சென்று அமர, சத்தமாய் சிரித்தவன், “நீ எப்படி இருந்தாலும் அழகுடி மூக்கி” என்றான் அவன் மூக்கை திருகிவிட்டு!



“உன்னால என் கழுத்துல தாலி கட்ட முடியாது தெரியுமா மாமா?” திடுமென கோகிலா சொல்ல, “ஏன்டி?” என மெலிதாய் பதறினான் இன்பன்.



“ஹாஹா டென்ஷன் ஆகாத! என் அப்பா தங்கத்துல தாலிசரடு செஞ்சுருக்காராம்! அதை கட்ட தேவையில்லை! ஜஸ்ட் எடுத்து மாட்டுனா போதும்!!”



‘உன் அப்பன் ஒரு கிறுக்கன்!’ என இன்பன் உதடுகள் முனுமுனுக்க, “என்ன மாமா?” என கோகிலா கேட்டதும்,



“சரி நீ சாப்பிட்டுட்டு நல்லா தூங்கு! காலைல நேரமே எழுந்துக்கணும்ல?” என்றவன் நகர, “அவன் கரத்தை கெட்டியாய் பிடித்துக்கொண்டாள் கோகிலா.

“என்னடா?”

“நாளைக்கு எல்லாம் நல்லதா நடக்கும் தானே மாமா?”

அமர்ந்திருந்தவளின் பின்னோடு வந்து அவள் தோளில் தன் கைகளை சுற்றிக்கொண்டவன், அவள் உச்சந்தலையில் தாடை பதித்து அவள் முகத்தை கண்ணாடி வழியே கண்டான்.



“நீ எப்பவும் போல சிரிச்சுக்கிட்டே சந்தோசமா இரு! எல்லாம் அதுப்படியே நடக்கும்... என்ன?” என்று இன்பன் கேட்க, அரைகுறையாய் தலையாட்டிவள் மனது அமைதிப்படவே இல்லை.



“இப்போவும் சொல்றேன் மாமா, ஒருவேளை ஏதாவது தப்பா நடந்துட்டா நான் எடுக்குற முடிவு எப்படி இருக்கும்ன்னு எனக்கே தெரியாது!” என்றாள் திண்ணமாய் தன் மெல்லிய குரலில்



“ம்ச்! லூசு! பாஸிடிவா மட்டும் யோசிடி!!” இன்பன் சொல்லும்போதே அறைக்கதவு தட்டப்பட, “கொஞ்ச நேரம் நிம்மதியா இருக்க விடுரானுன்களா பாரு!!” என அலுத்துக்கொண்டே கதவை திறந்தவன், கோபமாக தங்கம் நிற்ப்பதை கண்டு, “ஹிஹி! ஐஞ்சு நிமிஷம் ஆகிடுச்சோ?” என்றான்.



“அரைமணி நேரமாச்சு! தாழ்பாள் போடாதன்னு சொல்லிதானே அனுப்புனேன்? போடா ஒழுங்கா! இனி தாலி கட்டுன பிறகு தான் நீ அவளை பார்க்கணும்!!” என்று அதட்ட மழுப்பலாய் சிரித்துக்கொண்டே அங்கிருந்து ஓடினான் இன்பன்.



“காண்டீபா? சுசீலா வீட்டுக்கு பேச முடிஞ்சுதா?” ஒண்டிவீரர் இதே கேள்வியை அந்த இரு நாட்களில் எத்தனை முறை கேட்டிருப்பார் என கணக்கே இல்லை.



“இல்ல தாத்தா! இன்னும் லைன் கிடைக்கல!!” அவர் எதிர்ப்பார்க்கும் பதிலை கொடுக்க முடியாது அயர்ந்துப்போயிருந்தான் காண்டீபன்.

சுசீலா வீட்டிற்கு சொல்லாமல் இங்கே திருமணம் நடத்துவது பெரும் தவறென அவர் மனம் அடித்துக்கொள்ளவே, ஒரு முறையேனும் பேசிவிட முடியாதா என எதிர்ப்பார்த்துக்கொண்டிருந்தார்.



நேரம் பதினொன்றை தாண்டிட, மண்டபத்தில் இருந்த கூட்டமெல்லாம் கொஞ்சம் கொஞ்சமாய் வடிய, உள்ளூரிலேயே திருமணம் என்பதால் சொந்தங்கள் கூட வெள்ளன வருவதாய் சொல்லி கிளம்ப, இன்பனது விழுதுகளின் கூட்டம் தாண்டி பெரிதாய் ஆட்கள் இல்லை. காலை சமையலுக்கு வேண்டிய வேலைகள் தடல்புடலாய் நடந்துக்கொண்டிருந்தது. வருபவர்களுக்கு வெள்ளித்தட்டோடு பழம் இனிப்பு வைத்து வழங்க ஏற்ப்பாடாகிக்கொண்டிருந்தது.



சலசலப்பும் கூச்சலும் அடங்கி பாடலின் மெல்லிசை மட்டுமே அவ்விடத்தை நிறைக்க, வாசலில் போடப்பட்டிருந்த மடக்கு சேர்களில் சாய்ந்து உறங்கிக்கொண்டிருந்தனர் பலர். கோகிலாவின் அறையில் தங்கம் உறங்கிவிட, அவளுக்கென இருந்த கட்டிலில் சொகுசாய் உறங்கிக்கொண்டிருந்தார் செல்லம். ஜன்னலோரம் குளிர்க்காற்றில் கம்பிகளோடு கம்மியாய் நின்று வெளியே வெறித்திருந்தாள் கோகிலா.



“ண்ணே... வந்து படுங்கண்ணே...!! காலைல பிரெஷா இருக்க வேணாமா?”



“தேங்கா பத்து காயு கூட தேவைப்படும் போல இருக்குன்னு சொல்றாங்க, அதான் ஒரெட்டு போய் எடுத்துட்டு வரேன்!!” இன்பன் தன் பைக்கை நோக்கி போக, “அட!! நம்ம ஒட்டகம் பய தோப்புக்கு தான் போயிருக்கான்! ஒரு போன் போட்டா கொண்டாரா போறான்! நீயே போணுமா? சித்த படுண்ணே!!” கிளிகளின் உபசரிப்பில், “சரிடா சரிடா!!” என்ற பேரின்பன், இரண்டு மடக்கு ஷேர்களை எடுத்து போட்டு கால் நீட்டி சாய்ந்தான்.

கைகளை தலைக்கு பின்னே கொடுத்து அவன் உடலை தளர்த்த கண் மூடிய மாத்திரத்தில் ஆழ்ந்த நித்திரைக்கு சென்றுவிட்டான் போலும். ஓடி ஓடி உழைப்பதும், ஓய்ந்து அமரும்போது கண்ணை சுழற்றிக்கொண்டு சுகமாய் வரும் தூக்கமும் எல்லோருக்கும் வாய்ப்பதில்லை.



ஸ்பீக்கரின் ஒலியளவு மிக மெலிதாய் குறைப்பட்டிருக்க, பாடல்கள் தாலாட்டுவது போல இசைத்துக்கொண்டிருந்தது. ஜன்னல்வழி தன்னவனை கண்ட கோகிலாவுக்கு மனம் லேசாக, அப்படியே சேரில் அமர்ந்து கால்களை கட்டிக்கொண்டாள்.


‘மண்ணை வேர்கள் பிரிந்தாலும்

விண்ணை நீலம் பிரிந்தாலும்

கண்ணை மணிகள் பிரிந்தாலும்

உனை நான் பிரியேன்...!

சங்கம் தமிழை பிரிந்தாலும்

சத்தம் இசையை பிரிந்தாலும்

தாளம் ஸ்ருதியை பிரிந்தாலும்

உனை தான் பிரியேன்!!!”


யாருக்கு என்ன காத்திருக்குமோ?!

இரவு நகர்ந்து வெளிச்சத்திற்கு வழிவிட, கோகிலா மணமகளாய் சர்வ அலங்காரங்களுடன் தயாரானாள். கிஷோரை அழைத்து சாங்கியங்கள் செய்ததும், “ஒரு மணி நேரம் தான் முகூர்த்தம்!” என்றார் ஐயர் அறிவிப்பாய்.



கிஷோரின் முகத்தில் பெரும் பதட்டம். இன்பன் இன்னமும் அவன் கண் முன்னே நிற்கிறானே! இன்பன் மூகூர்த்த நேரம் துவங்கியது முதல் எங்கும் நகரவில்லை. ஒண்டிவீரரும் சிவகாமியும் முதல் வரிசையில் அமர்ந்திருந்தனர். சத்தியராஜன் வந்தவர்களை உபச்சாரம் செய்துக்கொண்டிருந்தார். காண்டீபனும் அவன் பங்கிற்கு வந்தவர்களை கவனிக்க, இன்பன் ஒரு வேலை கூட செய்யவில்லை. அவன் கவனம் முழுக்க கிஷோர் மீதே இருந்தது. அவன் முகத்தில் வந்து போகும் அலட்சியம், வன்மம், மிதப்பு இப்போதோ பதட்டம்!! எதுவும் இன்பனின் கண்களில் இருந்து தப்பவில்லை.



மணமகள் அறையில் இருந்து வெளிவந்தாள் கோகிலா. அவள் கண்கள் அவசரமாய் தேடியது இனியனை. அவளை கூட கவனிக்காது மேடையிலேயே கண்ணாய் முதல் வரிசையில் அமர்ந்திருப்பவனை கண்டதும் அவளுக்கு பெரும் நிம்மதி! தைரியமாக மேடையேறினாள். அவளுக்கான சாங்கியங்கள் நடைப்பெற்றுக்கொண்டிருந்தது.



பட்டு வேஷ்டி சட்டை மாற்றவென சென்றிருந்தான் கிஷோர். கோகிலாவுக்கு கண்களாலேயே ஆறுதல் சொல்லி கண் சிமிட்டி இன்பன் சிரிக்க, அவள் முகத்திலும் வெட்க முறுவல். தாய்மாமனாக சத்தியராஜன் கோகிலாவுக்கு மாலையிட்டு சடங்கு செல்ல, சில நொடிகள் கண்ணை சுழற்றிய இன்பன் இயல்பாக வந்திருப்பவர்களை கவனித்தான்.



பார்த்துக்கொண்டே இருந்தவனுக்கு, திடீரென ‘காண்டீபன் எங்க?’ என தோன்ற, எழுந்து செல்ல சொன்ன மனதை கோகிலாவின் முகத்தை பார்த்து அடக்கிக்கொண்ட இன்பன், தூரமாய் நின்ற கிளிகளை சைகையில் அழைத்து, “காண்டீபன் எங்க போனான்?!” என்றான்.

“இங்க தான் இருந்தாரு, எங்கன்னு தெரியலையே?”



“எங்க இருந்தாலும் வர சொல்லு!!” ஏனோ இன்பனுக்கு அங்கே காண்டீபன் இல்லாதது மனதுக்கு உறுத்தலாய் பட்டது.



கிளிகள் சென்று பத்து நிமிடங்கள் கடந்தது. கூரைப்பட்டு அணிந்து வர கோகிலா உள்ளே சென்றிருந்தாள். இப்போது சம்மங்கி மாலையோடு கையில் பூச்செண்டை தூக்கிப்போட்டு பிடித்தபடி அலட்சியமாய் மேடையேறினான் கிஷோர்.



இன்பனால் நிர்மலமாய் அங்கே இருக்க முடியவில்லை. நொடிக்கொருதரம் வாசலைப்பார்த்தான். அழைத்து வரச்சொல்லி அனுப்பிய கிளிகளும் திரும்பி வராததால் அவனுக்குள் பதட்டம் இன்னும் கூடியது.



‘எழுந்து போ, எழுந்து போ’ என அலட்றியது மனது. உள்ளங்கை வியர்க்க பதைபதைப்புடன் அமர்ந்திருந்த இன்பனிடம் எங்கிருந்து வந்தானோ ஒருவன், அவனை இதற்குமுன் இன்பன் பார்த்திருக்க கூட வாய்ப்பில்லை. “அண்ணே, உங்க தம்பியை யாரோ அடிச்சு போட்டுருக்காங்கண்ணே...!!!” என்று சொன்னவன் காட்டிய பதட்டத்தில் எழுந்தே விட்டான் இன்பன்.

“என்ன சொல்ற? எங்க இருக்கான் காண்டீபன்?”

“நீங்க வாங்கண்ணே, நான் காட்டுறேன்!!!” என்ற அவசரப்பட்டவனை சிறிதும் சந்தேகிக்காது ‘தம்பிக்கு ஆபத்து’ என்றதும் கிளம்பினான் பேரின்பன். அப்போதும் அவன் கோகிலாவை எண்ணி தடுமாற, “முகூர்த்தம் முடிய இன்னும் அரைமணி நேரம் இருக்குண்ணே! வாங்க” என்று சொல்லி அழைத்து சென்றான் அந்த புதியவன்.



கூரைப்பட்டுடுத்தி பெண்ணவள் மேடையேற, திமிறேரிய முகத்துடன் அவள் வருகையைக்கண்டு இளக்காரமாய் சிரித்தான் கிஷோர்.

கோகிலாவுக்கு அடிமனம் துணுக்குற சட்டென திரும்பி முதல் வரிசை நாற்காலிகளை ஆராய்ந்தாள். இன்பனை காணவில்லை.

‘அய்யோ’ என்றிருந்தது அவளுக்கு. கைகால்கள் வலுவிழந்து நொடியில் துவள, அடுத்த அடி அவள் எடுத்த வைக்கக்கூட தெம்பின்றிப்போக இழுத்து வந்து அவளை மனையில் அமர்த்தினார் செல்லம்.



ஐயர் சொல்லும் மந்திரங்கள் எல்லாம் மரண ஓலமாக கோகிலாவை வட்டமடித்தது. ஒண்டிவீரர், சிவகாமி, காண்டீபன், சத்தியராஜன் ஒருத்தரும் அங்கில்லை. ‘எங்கே? எங்கே?’ என அவள் கண்கள் அலைப்புற்றது.

‘வந்துவிட மாட்டார்களா?’ என மனது ஏங்கி தவித்தது.

‘மாமா எங்க போன என்னை விட்டுட்டு?’ மனம் வெம்ப, கண்களில் இருந்து கண்ணீர் இறங்கியது.



‘மாமா, என்னை ஏமாத்திடாத மாமா!!’ இதை மட்டுமே அவள் மனம் சொல்லிக்கொண்டே இருக்க, “கெட்டிமேளம் கெட்டிமேளம்!!” என்ற ஐயரின் அபாயக்குரலை விட அவள் காதோரம், “உன் மாமன் செத்துட்டான்!” என்று கேட்ட கிஷோரின் வார்த்தைகள் அவளின் உயிர் உறையச் செய்ய, அவள் ஸ்தம்பித்து போன அந்த நொடியை தனக்கு சாதகமாக்கி அவள் கழுத்தில் தங்கத்தாலிச்சரடை அணிவித்திருந்தான் கிஷோர்.

இனி என்ன நடக்கும்? அடுத்த பாகத்தில் அறிந்துகொள்வோம்!!!
Mam I can't wait anymore
Please mam Enna achu sikiram vanka
 
சூப்பர் கதை. அந்த கேடுகெட்ட கிஷோர் தாலி கட்டிட்டானே. இனி மூக்கி என்ன பண்ணப் போறாள். இன்பனும் கூட. கூடிய சீக்கிரம் அடுத்த எபியைப் போடுங்கோ.
492493
 
Top