Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள், [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

கோபம் அதிகமானால் வெறுப்பு

Advertisement

Joyram

New member
Member
பக்குவமான பேச்சு மற்றும் அணுகு முறை இவை இரண்டும் பொதுவாக முதுமையின் அறிகுறிகள். மனிதர்கள் எல்லோரும் அவரவருக்கென்று சில பண்புகளையும் கொள்கைகளையும் கொண்டுள்ளனர். சிலருக்கு இயற்கையிலேயே பக்குவம் இருப்பதையும் காண்கிறோம். இத்தகைய மனிதர்களுக்கு லேசில் கோபம் வராது. கோபம் மிகவும் குறைவாக உள்ளவர்கள் வெறுப்பும் அதிகம் கொள்ள மாட்டார்கள். என்னுடைய தம்பி ஒருவர் இதற்கு உதாரணம். சின்ன வயதிலிருந்தே இவருக்கு கோபம் மிக குறைவு தான். பொதுவாக மிகப்பும் பயந்த சுபாவம் உள்ளவர். இவரின் குணங்களை கண்டு என் நண்பர் ஒருவர் இவரை ராமகிருஷ்ண பரமஹம்சர் என்று குறிப்பிடுவார். ராமகிருஷ்ணர் திருமணம் செய்த சந்நியாசியாக வாழ்ந்தார். என் தம்பியோ திருமணம் செய்யாத சந்நியாசி. எனவே கோபம் பட வாய்ப்புகளும் மிகவும் குறைவு. இங்கே நாம் பார்க்கப்போவது அதிகப்படியான மனிதர்களின் இயல்பான குணங்களைத்தான். அதாவது கோபத்தை பற்றியும் வெறுப்பை பற்றியும் தான். எதனால் ஒருவருக்கு கோபமும் வெறுப்பும் வருகிறது என்ற விஞ்ஞான மனோரீதியான காரணங்களை நான் அலசப்போவதில்லை.

கோபம் மற்றும் வெறுப்பு உள்ளவர்களை கவனிக்கையில், பொதுவாக இவர்கள் வாழ்க்கையில் ஏதாவது ஒன்றை சாதிப்பவர்களாக இருப்பார்கள். ஆனால் மிக பெரிய சாதனையாளர்களாக இவர்கள் இருக்க வாய்ப்புகள் குறைவு. பொது வாழ்க்கையில் கவனித்தால் அரசியல் , வணிகம், சினிமா மற்றும் விளையாட்டு துறையில் பிரபலமாக இருப்பவர்கள் கோபம் வெறுப்பு கொண்டவர்கள் தான். இந்த இரண்டுமே சராசரியான னிதர்களிடமும் உள்ள குணங்கள் தான். கோபத்திற்கு மூல காரணம் ஆசை என்பதை நாம் எல்லோரும் நன்றாகவே அறிவோம். ஆசை பட்டத்தை அடைய முற்படும்போது இடையில் வரும் பிரச்சினைகள் சில கோபத்தை கிளறி விடும். லட்சிய இலக்கை நிறைவேற்றி கொண்டிருக்கும் பொது எவரேனும் குறுக்கில் வந்தாலும் இவர்களுக்கு கோபம் வந்து விடும். கோபமானது வெகு ஆழமாக இருந்தால் அதுவே ஒரு தனிப்பட்ட மனிதரின் மீதோ அல்லது குறிப்பன சில மனிதர்களின் மீதோ அல்லது ஒரு செயலின் மீதோ வெறுப்பு கொள்ள காரணமாகி விடுகிறது .

இளமையில் கோபம் தான் துடிவுக்கும் ரத்தத்தின் பிரதிபலிப்பாக இருக்கிறது. வயது ஏற ஏற ஒருவருக்கு அனுபவங்கள் கூட கூட, கோபத்தின் தீய விளைவுகள் புரிய ஆரம்பிக்கிறது. எனவே ஐம்பது வயதை கடந்த ஒருவருக்கு பொதுவாக கோபம் குறைவாக இருக்கும். கோபப்பட்டு, சத்தம் இட்டு, ஒருவரை கடிந்து கொண்டும் நடப்பது தான் நடக்கும் என்ற நினைப்பு ஒரு காரணம். நம்மையும் ஒருவர் இப்படி கடிந்து கொண்டால் நமக்கு எப்படி இருக்கும் என்பது போன்ற நினைப்புகளும் ஒருவரின் கோபம் குறைய காரணங்களாகும். சரி, கோபம் குறைந்து விட்டது, வெறுப்பும் குறைந்ததா என்றால் அது ஒரு சந்தேக குறியாக இருக்கிறது. கோபம் ஏணிப்படியின் கீழ் படி என்றால் வெறுப்பு ஏணியின் மேல் படி ஆகும். கோபம் வந்து போனால் அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை. அனால் அதுவே வெறுப்பாக வடிவெடுக்கையில் அதன் விளைவு வெகு காலம் வரை நீடிக்கும், ஏன், வாழ் நாள் முழுதும் தொடரவும் வாய்ப்பு இருக்கிறது. கோபத்தால் மன அமைதி ஓரிரு நாட்கள் பாதிக்கபடலம். ஆனால் வெறுப்பு மனதின் உள்ளே சென்று அமர்ந்து விடுகிறது. எப்படி சில வாடகை காரர்களை வீட்டிலிருந்து காலி செய்ய வைப்பது பெரும்பாடோ, இந்த வெறுப்பும் அது மாதிரி தான். கோபம் பலரிடத்தில் வரும் ஆனால் வெறுப்பு சிலரிடம் தான் வரும். இதை காழ்ப்புணர்ச்சி என்றும் கூறுகிறோம்.

அறுவது வயதை கடந்து இப்போதும் என் மனதில் நான் சில பேரை வெறுத்து கொண்டு தான் இருக்கிறேன். நான் பொதுவாக கோபக்காரன் தான் அனால் குணம் உள்ள கோபக்காரன். வாழ்க்கையின் பல கட்டங்களை கடந்த பல மனிதர்களை போல் நானும் மனபக்குவம் நிறைய அடைந்திருக்கிறேன். முன் போல கோபப்படுவது இல்லை. அதனால் அதிகம் வெறுப்பும் இல்லை. ஆனாலும் கோபம் அவ்வப்போது என்னை வந்து சாடிக்கொண்டு தான் இருக்கிறது. வெறுப்பும் எப்போதேனும் என்னுள் எட்டி பார்த்துக்கொண்டு தான் இருக்கிறது. இப்போது நான் கற்ற பாடம் என்னவெனில், நமக்கு ஒருவரிடம் ஒத்து போகவில்லை என்றால் அவர்களிடமிருந்து விலகி விட வேண்டும். அவர்களை நாம் விரும்ப வேண்டாம் ஆனால் வெறுக்கவும் வேண்டாம். இந்த மன பக்குவம் அடைய எனக்கு பல ஆண்டுகள் ஆயிற்று. பல மனிதர்களை என் மனதின் வெறுக்கப்படுபவர்கள் வரிசையிலிருந்து அகற்றி விரும்பாதவர்கள் வரிசையில் சேர்த்து விட்டேன்.
வாசகர்களுக்கு நான் சொல்ல விழைவது இதுதான், " கோபம் இல்லாமல் இருப்பின் அது தெய்வீகம். கோபம் வந்து சென்று விட்டதால் அது மனித நேயம். ஆனால் ஒருவரின் மீது வெறுப்பு என்றால் அது உங்கள் மனதையும் உடல் ஆரோக்கியத்தையும் பாதிக்கும். எனவே கவனமாக இருங்கள்."

தினமும் கொஞ்ச நேரம் தனிமையில் அமைதியான சூழலில் சிறிது நேரம் இருங்கள். மனதில் எழும் ஓடும் அலை பாயும் எண்ணங்களை ஒரு பார்வையாளராக கவனியுங்கள். அதாவது நீங்கள் அந்த எண்ணங்களால் தாக்கப்படாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இப்படி செய்து வர படி படியாக உங்கள் கோபமும் வெறுக்கும் தன்மையும் மாறுவதை நீங்கள் உணரலாம். கோபம் வெறுப்பு இல்லாத இடத்தில தான் அமைதியும் மகிழ்ச்சியும் குடி கொள்ளும்.

Joyram
 
Top